• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
பொழுது – 23 💖
எப்போதும் போல அன்றைக்கும் நிவினுக்கு ஆறுமணிக்கு விழிப்பு தட்டியது. தன்னைக் குனிந்து பார்த்தவனின் முகத்தில் முறுவல் அரும்பிற்று. இரவு படுத்ததைப் போலவே அவன் மீது காலைத் தூக்கிப்போட்டு அணைத்தவாறு மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள்.
காலையில் விரைவாய் எழுப்ப வேண்டாம் என சுதி முறைத்ததும் உபரியாய் நினைவை நிறைக்க, முகம் மென்மையானது. சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன், பின் மெதுவாய் அவளிடமிருந்து எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து முடித்திருந்தான். வெளியே எந்த அரவமும் இல்லாதிருக்க, இவன் கதவைத் திறந்து கூடத்திற்குச் சென்றான்.
பாலுமகேந்திரா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
சந்திரா, சௌம்யா என இருவருமே எழுந்திருக்கவில்லை. நேற்றைக்கு திருமணத்தின் அலைச்சலில் உடல் இரண்டு பெண்களுக்கு அலண்டு போயிருந்தது. அதனாலே நேரம் காலம் தெரியாது உறங்கிக் கொண்டிருந்தனர். அதைவிட அவர்களுடைய பிரதான பொறுப்பொன்றை இறக்கி வைத்த நிம்மதியில் துயின்று கொண்டிருக்கின்றனர்‌ என்று கூறினால் தகும்.
நிவின் யாரையும் தொந்தரவு செய்யாது குளம்பியைக் கலக்கத் தொடங்கினான். அவனுக்குமே உடலில் சோர்வு அப்பியிருந்ததது. இருந்தாலும் நேற்றைய சுதியின் உடல்நிலையைப் பற்றிய சிந்தனைதான் மனம் முழுவதும் விரவியிருந்தது. ஓரிரு நாட்கள் சென்றதும் மறவாமல் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற யோசனையிலே குளம்பியைப் பருகினான்.
“ஐயோ...தம்பி, நீங்களே காபி போட்டுட்டீங்களா? கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் தம்பி. என்னை எழுப்பி இருக்கலாம்லபா!” சந்திரா ஏதோ தவறு செய்ததைப் போல அடுக்களைக்குள் விரைந்து நுழைந்தார். ஆண்கள் சமையலறைக்குள் செல்வதெல்லாம் அவர் வரையில் மகாதவறாகிற்றே.
“மன்னிச்சுக்கோங்க தம்பி, ரொம்ப சங்கடமா இருக்கு. எப்பவும் இப்படி தூங்க மாட்டேன். புது இடம் நைட்டு லேட்டாதான் தூங்குனேன்!” என அவர் காரணங்களைத் தயங்கியபடியே அடுக்க, அவரைப் பார்த்து முறுவலித்தவன், “நோ ப்ராப்ளம் ஆன்ட்டி. நீங்க எல்லாம் டயடர்டா தூங்கிட்டு இருந்தீங்க. அதான் எழுப்ப மனசு வரலை. நானா தான் எப்பவுமே காஃபி அண்ட் குக்கிங் பண்ணிப்பேன். சோ, நோ கில்ட் ஃபீலிங்க்ஸ்!” என்றான் புன்னகை வாடாமல்.
“இருந்தாலும் கல்யாணமான மறுநாளே நீங்க அடுப்படிக்குள்ள வரலாமா தம்பி. இந்த சுதி எழலையா? அவளும் உங்களுக்குத் துணைக்கு இல்லை பாருங்க!” அவர் கூறவும், “நோ ஆன்ட்டி... ஷி இஸ் ஸ்லீப்பிங். ரொம்ப டய்ரடா தெரியுறா. அவ தூங்கட்டும். எழுப்ப வேணாம்!” என்றான் மனைவிக்காகப் பார்த்து. அவனது பதிலில் சந்திராவின் முகத்தில் பூரண திருப்தி விரவியது.
“சரிங்க தம்பி... நீங்க போங்க. நான் சமைக்கிறேன். யார்‌ யாரெல்லாம் வருவாங்க தம்பி. எத்தனைப் பேருக்கு சமைக்கணும்?” என விவரம் கேட்டவர் சமையலில் இறங்கினார். சௌம்யாவும் எழுந்து வந்து அவருடன் இணைந்து கொண்டாள். பெண்கள் வேலை செய்யட்டும் என இவன் கூடத்திற்கு வர, பாலு மகேந்திராவைக் காணவில்லை.
குழந்தைகள் உறங்கும் அறையிலிருந்து வெளியே வந்தார். முகம் கழுவி வந்ததன் அடையாளமாய் முகத்தில் நீர் துளிகள் படர்ந்திருந்தன.
இவனிடம் பேசிக் கொண்டே அவர் குளம்பியைப் பருகினார். பெண்கள் சமைத்து முடித்து தாங்களும் தயாராகினர்.
நிவின் அறைக்குள் நுழைய, சுதி இன்னுமே உறங்கிக் கொண்டிருந்தாள். இவன் அலைபேசியை மின்னூக்கியில் இணைத்துவிட்டு வெளியே வந்தான்.
“சௌமி...மாப்பிள்ளைக்கிட்டே சுதியை எழுப்ப சொல்லு போ. மணி எட்டாச்சு. எல்லாரும் வந்துடுவாங்க!” சந்திரா மருமகளை விரட்டினார்.
நிவினிடம் வந்தவள், “தம்பி... உங்கப் பொண்டாட்டியைப் போய் எழுப்பிவிடுங்க. நேரமாச்சு. எல்லாரும் வந்ததும் சாப்ட்டு, கோவிலுக்குப் போகணும்!” எனக் கூற, இவன் தலையை அசைத்து சுதியை எழுப்பச் சென்றான்.
“சுதி... டைமாச்சு. நாளைக்கு எவ்வளோ நேரம்னாலும் நீ தூங்கிக்கலாம். இப்போ எழுந்திரி!” என நிவின் அவளைத் தொட்டு உசுப்ப, கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்தமர்ந்தாள் பெண். கலைந்திருந்த கூந்தலைத் தூக்கிக் கொண்டையிட்டவள் அவனைப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள். அந்த சிரிப்பை பத்திரப்படுத்திக் கொண்டவன், “குட் மார்னிங் சுதி...” என்றான் மலர்ந்து.
“வெரி குட் மார்னிங்... எட்டு மணியாச்சா... ரொம்ப நாளுக்குப் பிறகு நிம்மதியா தூங்கி இருக்கேன். தேங்க் யூ!” என அவனைப் பார்த்து சிரித்தவளை வாஞ்சைமிகப் பார்த்தான் நிவின்.
“நாளைக்கு எல்லாம் உன் இஷ்டம்தான். எத்தனை மணிவரை வேணா தூங்கிக்கலாம்!” என நிவின் கூற, “ஓஹோ... செம்ம ஹஸ்பண்ட் மெட்டீரியல் நீங்க!” எனக் குறும்பாய் உரைத்தவள், “அம்மா காதுல விழற மாதிரி சொல்லிடாதீங்க. இப்பவே லேட்டா எழுந்ததுக்கு என்ன சொல்ல போறாங்களோ?” என அங்கலாய்த்துவிட்டு முகம் கழுவி வந்தாள் பெண்.
“இப்போ பேக் பெய்ன் பரவாயில்லையா சுதி? ஹோப் யூ வெல்!” என அக்கறையாய்க் கேட்டவனைப் பார்த்து இவளுக்கு மனம் நிறைந்து போனது.
“அது அப்பப்போ வரும், போகும். ரெஸ்ட் எடுத்தாச்சுல்ல. சரியாகிடுச்சுங்க. நீங்க அதையே நினைச்சிட்டு இருக்காதீங்க!" மென் அதட்டலுடன் பக்கத்து அறைக்குச் சென்றாள் பெண். ருத்ரா குளித்து முடித்து பட்டுப்பாவடைச் சட்டையை அணிந்து இரட்டைக் குடுமியோடு இவளைப் பார்த்து சிரித்தாள். தவாவும் குளித்து கிளம்பியிருந்தாலும் படுக்கையில் உருண்டு கொண்டே அலைபேசியில் விளையாடினான்.
“ரெண்டு நாளா கேட்க ஆள் இல்லைன்னு ஃபோனும் கையுமா இருக்க தவா நீ!” இவள் மெலிதாய் அதட்ட, “அத்தை... டூடே மட்டும்தான். நைட் வீட்டுக்குப் போய்ட்டா அப்புறம் அம்மா போன் தர மாட்டாங்க!” என்றான் அவன் கெஞ்சலாய்.
“அதுக்காக ஒரு அளவு இல்லையா டா... போ, வெளிய போய் எல்லாரோடவும் பேசிட்டு இரு. போ!” என அவன் கையிலிருந்த அலைபேசியை வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பினாள். ருத்ரா அங்கிருந்த பொருட்களை கீழே எடுத்து வைத்து அவளாக ஏதோ பேசிக் கொண்டே விளையாட, அதைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.
“ருத்ரா, என்ன விளையாட்ற?” என சுதி வினவ, “மிஸ் விளையாட்டு அத்த... நீயும் வர்றீயா?” என ஆவலாய்க் கேட்டாள் சின்னவள்.
“ஹம்ம்...அத்தைக் குளிச்சிட்டு வர்றேன். அப்புறம் விளையாடலாம்!” என உரைத்துவிட்டு தன்னுடைய துணிப்பையை நிவினின் அறைக்குள் எடுத்துச் சென்றாள்.
கட்டிலில் அமர்ந்தவள் சில பல சேலைகளை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அடியிலிருந்த கிளிச்சிறை வண்ணப் புடவை ஒன்றை எடுத்தாள். அதற்கு தேதாக அவள் மேல்சட்டையும் எடுக்க, “இது வேணாம்... இந்த சேரி கட்டு சுதி!” எனப் பின்னே கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தவள், “ஹம்ம்... இன்னொரு நாள் கட்டுறேங்க. இன்னைக்கு கோவிலுக்கு இந்த சேலைதான் கட்டணும்னு அம்மாவோட ஆர்டர். உங்களுக்கும் இதே கலர்லதானே வேட்டி சட்டை. ஜோடியா போகணுமாம்!” என சுதி உதட்டை வளைக்க, “ஓ...” என்றுவிட்டு அவன் அகன்றான். பாலாவும் ஆரோனும் வந்தனர்.
நந்தனா நிவினைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்ல, இவன் பெருமூச்சை வெளிவிட்டு இருக்கையில் அமர்ந்தான். பேச முயற்சிக்கவில்லை. அவனுக்குமே கொஞ்சம் மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது. அக்ஷாவிற்காகப் பார்த்து இந்தப் பெண் தன் பக்க நியாயங்களை யோசிக்காது இப்படி முகம் திருப்பி செல்வதில் எவ்வித அர்த்தமும் இல்லையென தோன்ற, அவளாக வரட்டும் என்றுவிட்டான்.
“மாமா... ஹட்டோரி வச்சு குடுங்க. நான் பார்க்கணும்!” தவா வந்து நிவின் அருகே உரிமையாய் அமர, இவன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அவன் கேட்ட ஒளியலை வரிசையைத் தேடினான். செய்தியைத் தவிர ஒன்றும் பார்த்திராதவனுக்கு அதைத் தேடுவதில் சற்றே தடுமாற்றம்தான்.
“ட்வென்டி எய்ட்ல இருக்கு மாமா... உங்களுக்குத் தெரியாதா?” பெரிய மனுஷனாய் அவன் தொலைவியக்கையை பிடுங்க, இவனுக்கு முறுவல் பிறந்தது.
“உங்க மாமா நியூஸ் சேனலைத் தவிர வேற எதையும் பார்த்திருந்தா தானே டா பொம்மை சேனல் எல்லாம் தெரியும்... அவனொரு நியூஸ் வைத்தியம்!” ஆரோன் கலாய்க்க, பாலா அதை ஆமோதித்தான். நிவின் எப்போதும் அன்றாடச் செய்திகளைப் பார்த்து அறிந்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காண்பிப்பான். அதனாலே இவர்களது கேலி கிண்டல்களை மென்முறைப்பில் தட்டிவிட்டான்.
சுதி குளித்து முடித்து பட்டுப்புடவையை உடுத்திவிட்டு தலையை உலர்த்தினாள். பின் மெதுவாய் சமையலறைக்குள் நுழைய, சமைத்த உணவுகளை மேஜைக்கு மாற்றிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
சந்திரா இவளைக் கண்டிப்புடன் பார்க்க, சுதியின் முகத்தில் அசட்டுச் சிரிப்பு.
“மாமியார் இல்லாத வீடா இருக்கவும் ஒரே குஷிதான் இல்ல சுதி உனக்கு?” சௌம்யா இவளது காதில் முணுமுணுக்க, “ஓஹோ... அப்படியாண்ணி. நான் வேணா அம்மாகிட்டே இதை சொல்லவா?” எனக் குறும்பாய் சின்னவள் புருவம் உயர்த்தினாள்.
“சொல்லுடி... எனக்கென்ன பயமா. எங்க அத்தை டி... போ!” அவள் அங்கலாய்த்துவிட்டு செல்ல, இவளுக்கு சிரிப்பு வந்தது.
“சுதி...வா, நீயும் மாப்பிள்ளையும் சாப்பிடுங்க!” என சிறுவர்கள் இருவரையும் இவர்களுடன் அமர்த்தி உணவுண்ண வைத்த சந்திரா பின் அனைவருக்கும் உணவைப் பரிமாறினார்.
எல்லோரும் உண்டு முடிய மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியிருக்கும் மதுரை வீரன் கோவிலுக்கு குடும்பமாய் புறப்பட்டனர். நிவினின் மகிழுந்தில் ஐந்து பேரும், முத்துப்பாண்டியின் மகிழுந்தில் சில பேர் எனப் பிரித்து அமர்ந்து கொண்டனர். ஆரோனும் பாலாஜியும் இருசக்கர வாகனத்தில் வர, கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து பூஜை முடிய மதிய நேரத்தைத் தாண்டியிருந்தது. அப்படியே அனைவரும் ஒரு உணவகத்தில் உண்டு வீடு நுழைய முன் மாலைப் பொழுது கவிழ்ந்திருந்தது.
வீட்டிற்கு வந்ததும் ஆற அமர தேநீரை சுவைத்துக் கொண்டே பெரியவர்கள் தங்களுக்குள் சலசலக்க, சுதி ருத்ராவையும் தவச்செல்வனையும் அருகே அமர்த்திக் கொண்டாள். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பி விடுவார்கள் என நினைக்கும்போது மனதில் மெல்லிய வருத்தம் மேலெழுந்தது. பிறந்த முதல்நாள் தொட்டு இன்றுவரை அவர்களைக் கையில் தூக்கி வளர்த்தவளாகிற்றே. அதனாலே அவர்களின் பிரிவுத் துயரை மனம் மெல்ல உள்வாங்கியது.
“நல்லா படிக்கணும் தவா... மாமாவைப் பார்த்தல்ல. எப்படி பெரிய வேலைல இருக்காரு. நீயும் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்குப் போகணும். அம்மா, அப்பத்தா, பாப்பாவையும் பார்த்துக்கணும்!” என இவள் சிறியவனிடம் அறிவுரை கூற, அவன் சமத்தாய்க் கேட்டுக் கொண்டான்.
“ஓயாம காசு வேணும்னு கேட்க கூடாது. முக்கியமா ஃபோன் அதிகம் பார்க்க கூடாது டா. பாப்பாவை பத்திரமா ஸ்கூல் கூட்டீட்டுப் போய்ட்டு வரணும்!” என இவள் அவனுக்குப் புரியும்படி கூற, “அத்தை... நான் அம்மா, பாப்பா, அப்பத்தாவைப் பார்த்துப்பேன். நீ கவலைப்படாதே!” என்றான். அவன் கன்னம் கிள்ளி இவள் முத்தமிட, ருத்ரா அவளின் கால்களுக்குள் வந்து அமர்ந்தாள்.
“அம்மா சொல்லுச்சு அத்தை... இனிமே அங்க வர மாட்டீயா? இங்க மாமா கூடத்தான் இருப்பீயா?” அவள் ஏக்கமாய்க் கேட்க, சுதி அவளின் இரண்டு கன்னத்திலும் அழுத்தி முத்தமிட்டாள்.
 
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
“உங்கம்மாவுக்கு என்னைத் தொரத்தி விட்றதுல அவ்ளோ சந்தோஷம்!” வேண்டுமென்றே சுதி சத்தமாய்க் கூற, சௌம்யா அலட்டிக் கொள்ளவில்லை.
“ஆமா டி... எத்தனை நாள்தான் நாத்தனார்னு சொல்லி வீட்ல ராஜ்ஜியம் பண்ணுவ. அதான் உன்னைத் தொரத்திவிடக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்!” என அவள் வம்பளத்தாள்.
“பார்த்தீங்களா மா.. உங்க மருமக மனசுல இருக்கது எல்லாம் வெளிய வருது!” சுதி சந்திராவிடம் முறையிட, வாகீஸ்வரி இவர்களது பேச்சில் சிரித்துவிட்டார். அப்படியே பேச்சு சில நிமிடங்கள் சென்றது.
“சரி சௌமி...போ, எல்லாத்தையும் எடுத்து வை. பேசிட்டே இருந்தா நேரம் போறது தெரியாது. இருட்டுறதுக்குள்ள வீடு போய் சேரணும்!” எனப் பெரியவராய் சந்திரா அதட்ட, சௌம்யா எழுந்து சென்று சேலையை மாற்றி சுரிதாரை அணிந்துவிட்டு அறையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தப் பொருட்களையெல்லாம் அவர்களது பையில் அடுக்கினாள். கிளம்புவதற்காக நால்வரும் நிற்க, சுதி ருத்ராவைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு இறக்கிவிட்டாள்.
“சரிங்க தம்பி... நாங்க கிளம்புறோம். வீட்டுல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. போய் சுத்தம் பண்ணணும். பிள்ளைக நாளைக்கு ஸ்கூல் போகணும்!” என சந்திரா கூற, “சரிங்க ஆன்ட்டி... நானே உங்களை ட்ராப் பண்ணிட்றேன்...” என நிவின் எழுந்து நின்றான்.
“ஐயோ... வேணாம் தம்பி. நீங்க இருங்க... பஸ் புடிச்சா அரைமணி நேரத்துல போய்டலாம்...” அவர் மறுக்க,
“நோ ஆன்ட்டி.. யூ லுக் டயர்ட். வாங்க, டென் மினிட்ஸ்ல நானே ட்ராப் பண்றேன்...” என அவன் முன்னே நடந்தான். சிறியவர்கள் அவனுடன் செல்ல, சௌம்யா சுதியை அணைத்து
விடுவித்தாள்.
“சந்தோஷமா இரு டி... எதுனாலும் போன் பண்ணி சொல்லு!” எனக் கூற, சந்திரா மகளைப் பார்த்து தலையை அசைத்து விளையாட்டு நடந்தார். நிவின் அவர்களை வீடுவரை விட்டுவிட்டு வந்தான்.
முத்துப்பாண்டி வாகீஸ்வரியும் பிள்ளைகளோடு கிளம்பினர்.
“நந்து... போய்ட்டு வரேன்னு வாயைத் தொறந்து சொல்லு டி!” வாகீஸ்வரி மகளை அதட்ட, “மாமா... வரேன்!” என மகேந்திராவிடம் மட்டும் கூறிவிட்டு அவள் கோபத்தை நடையில் காட்டினாள்.
“நீங்க விடுங்க அத்தை... அவ சரியாகிடுவா!” நிவின் தோழிக்கு ஆதரவாய்ப் பேச, “இவளுக்கு
ரொம்ப திமிர் கூடிப் போச்சு நிவினு. வீட்டுக்குப் போய் நான் பேசிக்கிறேன்...” என்றார் அவர்.
“சரி டா மச்சான்...நாங்க வரோம்!” பாலா கூற, நிவின் தலையை அசைத்தான்.
“வர்றோம் சிஸ்டர்...” என சுதியிடமும் அவன் புன்னகைத்து விடைபெற, “பார்த்து இருத்துக்கோமா சுதி... உனக்கு வேற எதுவும் ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளு. என் அண்ணன் மகனை நல்லா பார்த்துக்கோ...” என்ற கண்டிப்புடன் வாகீஸ்வரியும் கிளம்பினார். சுதி புன்னகை முகமாய் அனைவருக்கும் பதிலளித்தாள். அனைவரும் கிளம்பியதும் வீடே அமைதியானது. பின்னர் நேரத்தைப் பார்த்தாள்.
“நைட்க்கு என்ன குக் பண்ணட்டும் மாமா?” என இவள் கேட்க, “உன் இஷ்டம்மா... என்ன வேணுமோ சமை!” என அவர் கூற, இவள் சமையலறைக்குள் நுழைய, நிவின் அலங்கோலமாகக் கிடந்த சமையல் கூடத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் முகம் போன போக்கில் சுதிக்கு சிரிப்பு பொங்கியது.
அவன் பின்னே சென்று நின்றவள், “ச்ச... கிட்சன் என்ன கொஞ்சம்தான் நாஸ்தியாகி இருக்கு...” எனக் குறும்பாய்க் கூறவும், நிவின் மனைவியை முறைத்தான்.
“அப்புறம்ங்க நிவின் சார்... நைட்க்கு என்ன மெனு வேணும்னு சொன்னா, குக் பண்ணிடுவேன்!” எனப் பெண் இழுத்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நானே பார்த்துக்கிறேன்...” நிவின் வாய்க் கூற, கை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கியது.
“என்ன சார் இப்படி சொல்றீங்க. உங்களுக்கு மெனுவை மாத்தி சமைச்சா பிடிக்காது வேற. மூஞ்சியைத் தூக்கி வச்சு திட்டுவீங்களே!” அவள் பாவனையாய்க் கூற, “அதை விடவே மாட்டீயா டி நீ?” செய்யும் வேலையை விட்டுவிட்டு நிவின் சுதியை முறைத்தான்.
“அதெப்படி விடுறது. எப்போலாம் தோணுதோ, அப்பப்போ சொல்லிக் காட்டுவேன்!” சுதி முகத்தைத் திருப்பிக்கொண்டு சொல்ல, இவன் முறைத்து வைத்தான். பின்னர் இருவரும் சேர்ந்து சமையலறையை சுத்தம் செய்து இரவுக்கு எளிமையாக அனைவரின் ஆதர்ச உணவான உப்புமாவைச் செய்யலாம் என முடிவெடுத்து சமைத்து உண்டு முடித்திருந்தனர்.
“பாத்திரம் கிடக்கட்டும் விடுங்க. காலைல விலக்கிக்கலாம்!” சுதி கூற, “நோ...எனக்கு அப்பவே செஞ்சுத்தான் பழக்கம் சுதி. நீ போ, நான் க்ளீன் பண்ணிட்டு வரேன்!” என அவன் கூற, “சுத்தத்துக்குப் பொறந்த மனுஷன்...” என இவள் முணுமுணுத்துவிட்டு மாமனாருடன் சிறிது நேரம் அமர்ந்து பேசினாள். ஒன்பது மணியைத் தொட்டதும் அவர் உறங்கச் செல்ல, சுதி கூடத்திலிருந்த இரண்டு நாற்காலிகளை எடுத்து பால்கனிக்குச் சென்று அமர்ந்தாள். மற்றொரு நாற்காலியில் காலை வசதியாக நீட்டியவள், பால்கனி கம்பியில் நாடியைப் பதித்து மெதுவாய் பார்வையை சுழலவிட்டாள். அந்த இரவு நேரத்திலும் ஆட்கள் நடமாட்டம் இருந்தது‌. சாலையில் வாகனங்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர்.
மெல்ல குளிர் அடர்ந்தக் காற்று முகத்தை வாரியணைத்து செல்ல, சுதி கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எந்த பிரக்ஷயும் இன்றி இப்படியெல்லாம் தளர்வாய் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து எத்தனை நாட்கள் இருக்கும் என மனம் கணக்கிட்டது. வேலை செய்யாது சும்மா இருப்பதின் சுகத்தோடு சோம்போறித்தனத்தின் முதல் படியில் சுகமாய் கால் வைத்தாள் சுதி.
வேலை, வீடு, மாதத்திற்கு ஒருநாள் விடுப்பு என காலில் சக்கரம் கட்டி சுழன்று கொண்டிருந்த நாட்கள் அனைத்திற்கும் சேர்த்து இப்போது ஓய்வில் இருப்பதை மனம் பரிபூரணமாக அனுபவித்து மகிழ்ந்தது. இந்நேரம் வேலையைத் தொடர்ந்திருந்தால் உழைத்துக் களைத்து வீட்டிற்கு சென்று சோர்வுடன் உண்டுவிட்டு படுக்கையில் விழுந்திருப்பாள். அதை நினைத்ததும் பெருமூச்சு எழுந்தது. இனிமேல் வேலைக்கு செல்லக் கூடாதென வைகுண்டத்திடம் வேலையை விட்டு நிற்கப் போவதாக உரைத்த கணத்திலே முடிவெடுத்திருந்தாள்.
மனம் இந்த இரண்டு நாட்களில் என்னென்ன நிழந்தன என மெதுவாய் அசை போட, அலைபேசியை எடுத்தாள். விவேகா இவளுக்கு ஏதோவொரு காணொளியைப் பகிர்ந்திருக்க, அதை தரவிறக்கம் செய்து பார்த்தாள் சுதி.
“உன் கனவுகள் நிஜமா எனையே தருவேன்!” என்ற பாடலை இவர்களது திருமண காணொளியுடன் இணைத்து அழகாய் வடிவமைத்திருந்தாள். அவளிடம் நன்றியை உரைத்த சுதி மீண்டும் ஆசையாய் அந்த காணொளியை ஒலிக்கவிட்டாள்.
அவள் முன்னிருந்த வெளிச்சம் மறைய, நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன பார்க்குற சுதி?” எனக் கேட்டுக் கொண்டே நிவின் நிற்க, “மேரேஜ் வீடியோ விவேகா எடிட் பண்ணி அனுப்பியிருந்தாங்க. நல்லா இருக்கு, பாருங்க!” என இவள் ஆர்வமாய்க் கூறி காலை மற்றொரு நாற்காலியிலிருந்து நகர்த்தினாள்.
“இதைக் குடி நீ..‌ நான் பார்க்குறேன்...” என்றவன் அவளுக்கு அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு கையிலிருந்த பாலை மெதுவாய் அருந்திக் கொண்டே அந்தக் காணொளியை ஒலிக்கவிட்டான்.
“என்ன இது... பால்ல என்ன மிக்ஸ் பண்ணி இருக்கீங்க. டேஸ்டா இருக்கே!” சுதி யோசனையாய்க் கேட்டாள்.
“நட்ஸ் அண்ட் டேட்ஸ் போட்டிருக்கேன். ஹெல்தி ஃபார் யூ!” அவன் பதிலளிக்க,
“ஓ... அப்போ உங்களுக்கு போடலையா?” என நிறம்மாறாதிருந்த அவனுடைய திரவத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“இல்லை... நைட் பால் மட்டும்தான் குடிப்பேன்!” கணவன் பதிலளித்தான். அவள் தலையை அசைத்து அந்தக் கோப்பையை முழுவதும் காலி செய்தப் பின்பே கீழே வைத்தாள். சுவை நாக்கோடு ஒட்டிக் கொண்டது. நிவின் விவேகா அனுப்பிய புகைப்படத்தை தள்ளிவிட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்த ஃபோட்டோ நல்லா இருக்குல்ல? இதுல உங்க ஃபேஸ் தெரியலை!” என சுதி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் எதாவது ஒன்றைக் கூற, கணவன் அமைதியாய் கேட்டான். நேரம் பத்தாக, “டென் ஓ க்ளாக் ஆச்சு சுதி... வா போய் படுக்கலாம்...” என அவன் எழ, “ப்பா... ரொம்பத்தான். நைட் பத்து மணிக்குப் படுத்து காலைல ஆறுமணிக்கு எழுந்துடுவாரு வெள்ளைக்கார துரை...” என மனைவி அங்கலாய்த்தாள்.

அவன் குவளையை கழுவச் செல்ல, பின்னூடே சென்ற சுதி நினைவு வந்தவளாக, “பெர்த் டேக்கு விஷ் பண்ணா ரிப்ளை பண்ணணும்ன்ற கர்ட்டசி கூட இல்லை உங்களுக்கு...” எனக் கணவனை முறைத்தாள். அவன் அவளைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாது குவளையைக் கழுவி கவிழ்த்தினான்.
“உங்ககிட்டே தான் கேட்குறேன் நான்!” இவளது முறைப்பு தொடர்ந்தது.
“போனா போகுதுன்னு கடைசியா விஷ் பண்றவங்களுக்கு எல்லாம் ரிப்ளை கொடுக்கு முடியாது. போடி...” என அவன் நகர, “ஆமா, இவர் அப்படியே சிரிச்சு சிரிச்சு பேசுனாரு. இவர் பெர்த் டேன்னு சொன்னதும் முந்திக்கிட்டு விஷ் பண்ண. உர்ராங்கொட்டான் மாதிரி மூஞ்சியை வச்சுக்கிறது!” என சுதியின் பேச்சைக் காதில் வாங்கினாலும் நிவின் பதிலளிக்கவில்லை.
காலையில் வாங்கிய பூ மீதமிருக்க சில நொடிகள் தயங்கிய சுதி அதை எடுத்து தலையில் வைத்துக் கொண்டாள். தயங்கியபடியே அவள் உள்ளே நுழைய, முகத்தைக் கழுவிவிட்டு துண்டால் துடைத்துக் கொண்டிருந்தான். சுதி அவன் முகம் பார்க்கத் தடுமாறி விழிகளை சுவற்றில் படரவிட்டாள். அவளது பார்வையில் இவனது உதடுகளில் புன்னகை ஏறியது.
“ஏன் நிக்கிற சுதி...கோ அண்ட்
ஸ்லீப்!” அவன் கூறியதும் இவள் அதிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
“நான் போய் தூங்கவா?” அவள் சந்தேகமாகக் கேட்க, “யெஸ்...வேற என்ன பண்ண போற?” எனக் கேட்டவனை முறைத்தவள், “ஹம்ம்...மாவட்டப் போறேன். ஒத்தாசைக்கு வர்றீங்களா?” எனக் கேட்டுவிட்டு சுதி சென்று படுத்துவிட, இவன் சிரித்தான். பின்னர் விள்க்கணைத்துவிட்டு வந்து அவளருகே படுத்தான்.
சில நிமிடங்கள் கழிய, சுதி அவனை நிமிர்ந்து பார்த்தாள். தனக்காகத்தான் கணவன் பார்க்கிறான் என அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. மெதுவாய் அவனருகே சென்று படுத்தவள், “ப்ம்ச்... எனக்கு ஒன்னும் இல்லங்க. ஐ யம் ஓகே. இப்போ சுத்தமா வலி இல்ல!” என்றாள் சமாதானக் குரலில். அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “இட்ஸ் ஓகே சுதி. நீ தூங்கு...” என்றான் நிவின்.
“ஷ்யூரா?” அவள் கணவன் முகம் பார்க்க, “ஷ்யூர்தான்... வேற எதுவும் எதிர்பார்க்குறீயோ?” என அவன் குறும்பாய் கூற, “போயா...” என்றவள் அவன் மீது கையைக் காலையும் தூக்கிப் போட்டாள்.
“நேத்து மாதிரி இன்னைக்கும் தைலம் தேய்ச்சு தடவிக் கொடுங்க!” இவள் சலுகையாய்க் கேட்க, “பாம் வேணாம். நான் அமுக்கிவிட்றேன்...” என்றான் கணவன்.
“இல்ல... தைலம் தேய்க்காம தூக்கம் வராதுங்க!” மனைவி கூற, “நோ... இனிமே பாம் தேய்க்க வேணாம். இப்படியே தூங்கிப் பழகு!” என அவன் அதட்ட, “ஹம்ம்...” என்ற முனங்கலோடு ஒப்புக் கொண்டாள். அவன் மென்மையாய் அழுத்திக் கொடுக்க, சுதிக்கு சுகமாய் இருந்தது.
“நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்ங்க...” என்றவளை அவன் கேள்வியாகப் பார்த்தான்.
“காலைல எழுந்து அவதி அவதியா வேலைக்கு ஓடத் தேவையில்லை. அப்புறம் அந்தாளு சூப்பர்வைசர் கிட்டே திட்டு வாங்க தேவையில்லை. வீட்ல ஹவுஸ் ஓஃய்பா இருக்கது கூட நல்லா இருக்கும் போல. ரிலாஸ்டா இருக்கு. கொஞ்ச நாள்... ம்ஹூம்... இப்படியே நிம்மதியா இருக்கணும். மூனு புள்ளைங்களைப் பெத்துக்கிட்டு மிஸ்டர் இம்பெர்பெக்டா வளர்க்கணும்!” என்றாள் கணவனை ஆசையாய்ப் பார்த்து. அவளை வாஞ்சை மிகப் பார்த்திருந்த நிவின், அவள் முன்னுச்சியில் முத்தமிட்டான்.
“ப்ச்... இப்படி சைவ முத்தம் எல்லாம் கொடுத்தா குழந்தை பொறக்காதுங்க!” அவள் முறைக்க, நிவின் அகமும் முகமும் மலர சிரித்தான்.
“நாளைக்கு டாக்டர்கிட்டே உன்னை செக்கப் பண்ணிட்டு மத்தது எல்லாம் பார்த்துக்கலாம் சுதி” என்றவனை சில நொடிகள் பார்த்தவள், “ஹம்ம்...” என்றுவிட்டு அவன் வாசனையை நுகர்ந்தாள்.
“ஆறாயிரத்துக்கு சென்ட் வாங்குனா காலைல போட்டது நைட்டு வர மணக்கத்தானே செய்யும்!” என்றவள், “இருந்தாலும் உங்களுக்கு மனசாட்சியே இல்லங்க. ஆறாயிரத்துக்கு சென்ட் தேவையா. லட்ச ரூபாய் சம்பாரிக்கிறேன்றதுக்காக பந்தா பண்ண இதெல்லாம் பண்றீங்களா?” எனக் கேட்டு அவன் முறைப்பை பரிசாகப் பெற்றுக் கொண்டாள்.
“சரி...‌ சரி. ஆமா, அன்னைக்கு ரெண்டு லட்சம் சம்பளம்னு சொன்னீங்களே. அது உண்மையா? இல்ல பொய்யா?” என்றவளை நிவின் முறைக்க, “ஹம்ம்... அப்போ உண்மைதான் போல. அவ்வளோ காசை என்ன பண்ணுவீங்க நீங்க. பீரோல பூட்டி வச்சிடுவீங்களா?” என ஆர்வமாய்க் கேட்டாள்.
“கொஞ்சம் சேவிங்க்ஸ்ல போட்டுட்டு மிச்சத்தை ஸ்பென்ட் பண்ணிடுவேன்!” என்ற அவன் பதிலில் சுதிக்கு லேசாய் நெஞ்சு வலித்தது.
“அவ்வளோ காசுக்கு என்ன செலவு உங்களுக்கு இருக்கப் போகுது!” அவள் அதிர்ந்து கேட்க, நிவின் கூறினான்.
“வீட்டுக்கு ஈ.எம்.ஐ ஒன் லேக் கட்டிடுவேன். என்னோட எக்ஸ்பென்ஸ் ஒரு பிப்டி தௌசண்ட் அண்ட் அப்பாவுக்கு ட்வென்ட்டி தௌசண்ட் அக்கவுண்ட்ல போட்டுட்டு ரெஸ்ட் அமௌவுண்டை சேவ் பண்ணுவேன்!” என்றான்.
“தனியொரு மனுஷனுக்கு ஐம்பதாயிரம் செலவா?” அவள் முறைக்க,
“அவங்கவங்க லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி செலவு வரத்தான் செய்யும் சுதி. நீ ட்வென்டி தௌசண்ட் எர்ன் பண்ணா அதை ஃபேஸ் பண்ணி உன்னோட நீட்ஸ் இருக்கும். டூ லேக் எர்ன் பண்ணா, அதை ஃபேஸ் பண்ணி இருக்கும். தட்ஸ் இட்!” அவன் முடித்துவிட, சுதி சமாதானமாகவில்லை.
“என்ன சொன்னாலும் நீங்க காசைத் தண்ணியா செலவழிக்கறீங்க. இனிமேல் என்கிட்டதான் சம்பளத்தைக் கொடுக்கணும். நான்தான் எல்லாத்தையும் பார்த்துப்பேன்!” என அவள் கூற, நிவின் அவள் பாவனையில் சிரிப்போடு தலையை அசைத்தான்.
“இன்னைக்கு எனக்குத் தூக்கமே வராது. அப்படியென்ன ஐம்பதாயிரத்துக்கு செலவோ போங்க!” என அவள் புலம்பியபடியே இருக்க, நிவின்தான் அவளது வலித்த இடையை அழுத்திக் கொடுத்து உறங்க வைத்து தானும் தூங்கிப் போனான்.

தொடரும்...


சாரி சாரி மக்களே... நேத்து அப்டேட்தான் இது. அப்டேட் எங்கன்னு கேட்ட அனைவருக்கும் நன்றி நமக்கம் 🙈 டைப் பண்ணீட்டு இருக்கும்போது திடீர்னு ப்யூச்சரைப் பத்தின பயம் வந்துடுச்சு. அதான் ரெஸ்யூமை எடுத்துட்டு போய் இன்டீட், நாகூரின்னு எல்லாத்தலும் அபலோட் பண்ணேன். இதுக்கெல்லாம் காரணம் என் ஃப்ரெண்ட் தான் 😆அவன் வேலைக்குப் போய்ட்டான். அதான் என்னை உசுப்பேத்தி விட்டுட்டான் 🙈


















































 
Well-known member
Messages
1,106
Reaction score
794
Points
113
All the very best maa🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉

Superrrrrrrrr ud ma, waiting for next ud

Suthi ku check up lam pannittu onnum illa normal thaan nu sollanum ok vaa, ethavathu aappu vachidatha maa
 
Messages
60
Reaction score
39
Points
18
உள்ளம் மட்டும் நீ அல்ல
உடலும் நலமாக இருக்க
உரிமையோடும்
உற்சாகமாய்

உடைமை பட்டவளை பார்த்துக் கொள்ளும் உன்னதமான நிவின்....
 
Top