• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 12 💖
காலையில் எழுந்து வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் சுதிரமாலா. உடலும் மனதும் வெகுவாய் சோர்ந்திருக்க, ஒருநாள் விடுப்பு எடு என மூளை அனத்தியது. அதைப் புறந்தள்ளிவிட்டு கிளம்பினாள். படுத்தே கிடந்தால் இன்னுமே மனம் அதிகமாய் வலிக்கும். அதற்கு வேலைக்கு செல்வதே மேல் என சந்திரா கட்டிக் கொடுத்த உணவு டப்பாவை கைப்பையில் திணித்தாள்.
“ஏன் சுதி மூஞ்சியை இப்படி வச்சிருக்க. நைட்டெல்லாம் தூங்காம அழுதியா?” சௌம்யா அதட்டலாய்க் கேட்டாலும் குரலில் வேதனை ததும்பியிருந்தது. அவளைப் பார்த்து சிரிக்க முயன்று தோற்ற சுதி, “ப்ச்... நான் நல்லா இருக்கேன் அண்ணி. நீங்க என்னை நினைச்சு கவலைப்படாதீங்க!” என்றவாறு வெளியேறினாள்.
“ஒழுங்கா சாப்பிடு சுதி. கண்டதையும் நினைச்சு மனசைக் குழப்பிக்காத!” என சந்திரா கூற, தலையசைத்து விடைபெற்றாள் சுதிரமாலா.
இரவு முழுவதும் அழுததில் சிவந்திருந்தன விழிகள். முகம் கொஞ்சம் வீங்கியிருந்தது. பார்த்தவுடனே அழுததை அடையாளம் காணக் கூடியளவில் அவளது தோற்றமிருக்க, அமைதியாய் வேடிக்கைப் பார்த்தவாறே பயணம் செய்தாள். ரணப்பட்டிருந்த மனதை தேற்றுவார் யாருமின்றி வலித்ததுதான்.
‘ரெண்டு நாளில் சரியாகிவிடும். அனைத்தையும் மறந்து நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவேன்!’ என சுறத்தேற்றலில் தன்னை மீட்க முயன்றவாறே நிவினின் வீட்டிற்குச் சென்றாள். கதவு மூடியிருக்க, அழைப்பு மணியை அழுத்தினாள் . அவன்தான் வந்து கதவைத் திறந்து விட்டான். தடித்த இமைகளும் வீங்கிய முகமுமாய் உள்ளே நுழைந்தவளைக் ஒரு நொடி பார்த்தவன் பின்னே கதவைத் திறந்துவிட்டு அறைக்குள்ளே முடங்கினான். பாலுமகேந்திரா வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர் கிளம்பிவிட்டார் போல என்று எண்ணியவள், நிவினிடம் எதையும் கேட்கவில்லை.
நேற்றைக்கு அவன் சமைக்க சொல்லியவற்றை அமைதியாய் செய்தாள். இடையில் அவனது துணியை எந்திரத்தில் போட்டாள். வீட்டை சுத்தம் செய்துவிட்டு அவள் கிளம்ப ஆயத்தமாக, அப்போதுதான் பெரியவர் உள்ளே நுழைந்தார்.
“வாம்மா சுதி... வேலை முடிஞ்சதா?” எனக் கேட்டவரைப் பார்த்து இவள் ஆமாம் என்பது போல தலையை அசைத்தாள்.
“என் ப்ரெண்ட் ஒருத்தன் இங்க இருக்கான். அதான் பார்த்துட்டு வரலாம்னு போனேன் மா!” அவர் கூற, இவள் தலையசைத்துவிட்டு துணியைக் கம்பியில் காயப்போட்டாள்.
“டைமாகிடுச்சா மா? எனக்கு ஒரு காஃபி போட்டுத் தர்றீயா?” அவர் இருக்கையில் அமர்ந்தவாறு கேட்க, நேரம் கடந்தாலும் சுதி சரியென தலையசைத்து குளம்பியைத் தாயரித்து அவருக்குக் கொடுத்துவிட்டு கைப்பையை தோளில் எடுத்து மாட்டினாள்.
“ஏன் மா ஒரு மாதிரி இருக்க. உடம்பு எதுவும் சரியில்லையா?” அவர் கேட்டதும், சுதி முகம் மாறாதிருக்க வெகு சிரமப்பட்டாள். வீட்டில் யாரிடமும் கூறிக் கூட அவளால் அழ முடியவில்லை. விவேகாவிடம் தன் மனதிலிருப்பதை பகிர்ந்தால் பாரம் சற்று குறையுமென மனம் தோழியைச் சுற்றி வந்தது‌. சட்டென இவர் அக்கறையாய்க் கேட்கவும், மனமும் விழிகளும் கலங்கிப் போயின. வெகுபிரயத்தனப்பட்டு உதடுகளை விரித்துப் புன்னகைக்க முயன்றவள், “இல்ல சார்... லைட்டா தலைவலி. சரியா தூங்கலை, அதான். சாப்ட்டு மாத்திரை போட்டா சரியாகிடும்...” என்றவள் அவர் வேறு ஏதும் கேட்குமுன்னே விறுவிறுவென சென்றுவிட்டாள். பெரியவருக்கு அவள் அழுதிருக்கிறாள் எனப் புரிந்தது. அவரால் அதற்கு மேலும் உரிமை எடுத்துப் பேச முடியாது. இரண்டு நாட்கள் பழகியதும் இந்தளவிற்கு அவள் பேசியதே பெரிது என சுதியின் குணத்தை அவர் கணித்திருந்தார். குடும்ப பிரச்சனையாக இருக்கக் கூடுமென எண்ணி பெருமூச்சுவிட்டவர், அடுத்தடுத்த வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.
கீழே சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறே கடினப்பட்டு உணவை உண்டாள். எழில்மதி கூறியது போலதான், தான் இருக்கிறோம். இனிமேலாவது தன் உடல்நலனில் அக்கறைக் காட்ட வேண்டும் என்று நினைத்தவள், தினமும் சரியாய் உணவு உண்ண வேண்டும் என எண்ணிக் கொண்டாள். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். வீட்டில் இருப்பவர்களைப் பார்த்துக் கொள்ளவாது தான் நலனைப் பேண வேண்டும் என மூளை அறிவறுத்தியது. வருவோர் போவோரை இலக்கில்லாமல் பார்த்தாள். அந்த சூழ்நிலைக்கு மனம் கொஞ்சம் சமன்பட, நேரமானதை உணர்ந்து மெதுவாய் நடந்து வணிகவளாகத்தை அடைந்தாள்.
இவளுக்கு முன்பே விவேகா வந்துவிட்டாள் போல. அவள் வேலையிலிருக்க, சுதி கைரேகயைப் பதிந்துவிட்டு கைப்பையை அதனிடத்தில் வைத்தாள். “சுதி, ஃபர்ஸ்ட் ப்ளோர் போங்க!” என வைகுண்டம் வந்ததும் அவளை முதல் தளத்திற்கு அனுப்பிவிட்டார். இடைவேளை நேரத்திலும் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லை. விவேகா சுதியின் முகத்தைப் பார்த்திருந்தாள். என்னவாகிற்று இந்தப் பெண்ணிற்கு என அவள் மனம் முழுவதும் தோழியைச் சுற்றித்தான் நகர்ந்தது.
மதிய உணவு இடைவேளை விடவும், “சுதி... அழுதீயா? முகமெல்லாம் ஏன் வீங்கியிருக்கு?” எனக் கேட்டாள் விவேகா. அவள் கேட்டதும் கொட்ட வேண்டிய இடம் இதுதானோ என்பது போல சுதியின் விழிகளில் சரசரவென நீர் வழிந்தது.
“ஹே... சுதி, என்னாச்சு டி. ஏன் அழுற நீ?” என மற்றவள் தோழியைத் தேற்றி என்னவென விசாரித்தாள். தன்னை தேற்ற முயன்று கொண்டே கனத்த குரலும் ரணப்பட்ட மனதுமாய் சுதி நடந்ததைக் கூறி முடிக்கவும் விவேகா முகம் கோபத்தில் சிவந்தது.
“சைக்... கண்ட பொம்பளை பேசுறதுக்கெல்லாம் நீ அழுவியா டி. அந்தம்மா பெரிய கன்னகி. அது சொன்னதும் அப்படியே நடந்துடும் பாரு. அது மூஞ்சியும் ஆளும். என்னைக்காவது ஒருநாள் எனக்கு அதை நேர்ல பார்க்க சான்ஸ் கிடைச்சா போட்டுத் தாக்கிட்றேன் டி...” எனப் பல்லைக் கடித்தாள். சுதியிடம் மெல்லிய விசும்பல்.
“ப்ம்ச்... சுதி, என்ன டி நீ? அது ரொம்ப அழகு பாரு. போட்டோலயே அண்டா மாதிரி இருக்கு. அது உன்னைத் தேவாங்கு சொல்லுச்சுன்னு அழற நீ? இந்த காம்ப்ளக்ஸ்லயே நீதான் பார்க்க அழகா சிம்ரன் மாதிரி சிக்குன்னு இருக்க. என்னைப் பாரு அங்க இங்கன்னு வீங்கிப் போய் கிடக்குறேன். ஒல்லியா இருக்கது எல்லாம் குடுப்பினை டி. எவ்வளோ தின்னாலும் வெயிட் போடாது. அதை நினைச்சு சந்தோஷப்படணும்!” என்றவள் பேச்சில் சுதியின் அழுகை மெதுவாய் மட்டுப்பட்டது.
“ஆனால்... அந்தம்மா சொன்னதுல ஒரு உண்மை இருக்கு டி. எப்போ உனக்கொரு கல்யாணம் பண்றதா உங்க வீட்ல நினைச்சிருக்காங்க? எனக்கே வயசாகிடுச்சு, சீக்கிரம் மாப்ளை அமையணும்னு எங்கம்மா புலம்புது. சீக்கிரம் உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, இந்தத் தொல்லையெல்லாம் விட்டுவிட்டு புருஷன் வீட்ல போய் நிம்மதியா கஞ்சியோ, கூழோ குடிச்சிட்டு இருக்கலாம் டி. வேலை வாங்கியே மண்ணுல பொதைச்சுடுவாங்க இவனுங்க!” என அவள் ஆற்றாமையில் பேச, சுதிக்கும் வருத்தமாயிருந்தது. சீக்கிரம் யாருமே தெரியாத ஓரிடத்திற்குச் சென்றுவிட வேண்டும். நிம்மதியாக வாழ வேண்டும். திருமண வாழ்க்கை பிராப்தம் இருந்தால் கிட்டட்டும். இல்லையென்றால் இப்படியே இருந்துவிட்டுப் போகலாம் என்று நேற்று இரவு முழுவதும் யோசித்து அழுது சோர்ந்த மனது அவளை சமாதானம் செய்தது‌. பெருமூச்சுவிட்டாலும் சுதி ஏற்றுக் கொண்டாள். யாரு யாருக்கு என்வென்று கடவுள் வைத்திருக்கிறாரோ அதுதானே கிடைக்கும். எனக்கொரு வாழ்க்கையை அவர் வைத்திருந்தால் சந்தோஷமாய் வாழ்ந்துவிட்டுப் போகிறேன். இல்லையென்றால் தனியாய் நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறேன் என நினைத்தவள் வேலையைக் கவனித்து கொண்டிருந்தாள்.
நாசி உணர்ந்த வாசனை திரவியம் நிவினை நொடியில் மனத்திரையில் நிறுத்த, எத்தனையோ பேர் அந்த வாசனைத் திரவியத்தைப் பயன்படுகிறார்கள். கண்டிப்பாய் அவனாக இருக்காது என யோசித்து அவள் திரும்ப, நிவின்தான் நின்று எதையோ தேடிக் கொண்டிருந்தான். நேற்றுதான் வீட்டில் பொருட்கள் தீர்ந்துவிட்டதென அவள் செய்தி அனுப்பியிருக்க, அவன் வாங்கி வைத்துவிடுவதாய் சொல்லியிருந்தான். அதற்காகத்தான் வந்திருக்கக் கூடுமென யோசித்தவள் அவனருகே சென்றாள்.
“என்னத் தேடுறீங்க சார்? நான் எடுத்து தரேன்!” என இவள் நிற்க, அப்போதுதான் இவளைப் பார்த்தான் நிவின்.
“வால்நட்ஸ் வேணும்!” என அவன் கூற, “ஒன் மினிட் சார்...” என சுதி நடக்க, நிவினும் தள்ளும் ட்ராலியை ஒருகையால் நகர்த்திக்கொண்டு அவள் பின்னே சென்றான்.
“டூ பிஃப்டி கிராம் போதுமா சார்? ஆர் பைவ் ஹண்ட்ரட் கிராம்?” என கேட்டவாறு இரண்டு கையிலும் அக்ரூட் பருப்பை கையில் வைத்திருந்தாள் சுதி. வேலையில் ஆழ்ந்து விட்டதால் மனம் தற்காலிகமாக அனைத்தையும் தூர எறிந்திருக்க, முகம் கொஞ்சம் சாதாரணமாகியிருந்தது சுதிக்கு.
“டூ பிஃப்டி இஸ் எனாஃப்...” என்றவன் கூற்றில் சிறியதை அவன் கூடையில் போட்டாள். அவன் மேலும் எதையோ கேட்க, ஐந்து நிமிடங்கள் அவனுடன் நடந்து அனைத்தையும் எடுத்துக் கொடுத்தாள்.
“தேங்க் யூ சுதிரமாலா!” என அவன் கூறுவதைக் கேட்க அவள் அங்கில்லை. வேறொரு வாடிக்கையாளர் அழைத்துவிட்டாரென சென்றுவிட இவன் தோள் குலுக்கலுடன் அகன்றான்.‌
இரவு வீட்டிற்குச் செல்லும்போது சுதி ஓரளவிற்கு தன்னை மீட்டிருந்தாள். நடந்த நிகழ்வின் கசப்பு மெதுமெதுவாய் மங்கத் தொடங்கியிருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் மொத்தமாய் மறந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தாள்.
உண்டு முடித்துப் படுக்கையில் விழுந்தவள் அலைபேசியில் கவனத்தைப் பதித்திருக்க, நிவின் எண்ணிலிருந்து அவளுக்கு குறுஞ்செய்தி வந்தது. “நோ நீட் டு குக் எனிதிங்க் டுமாரோ சுதிரமாலா. டூ ரெஸ்ட் ஆஃப் வொர்க்ஸ் ஒன்லி!” என அவன் அனுப்பியிருக்க, “ஓகே சார்...” என பதிலளித்தவள், தூங்கிப் போனாள்.
மறுநாள் எழுந்தவளுக்கு நேற்று அளவிற்கு சோர்வில்லை. முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது. தன்னைத் தேற்றிக் கொண்டேன் என முகத்தில் புன்னகையைப் பூசிக் கொண்டவள் வேலைக்கு கிளம்ப, “அத்தை...” எனக் கிசுகிசுப்பாய் அழைத்தவாறே அறைக் கதவை மெதுவாய் சாற்றியபடி அவளருகே வந்தான் தவச்செல்வன்.
“என்ன தவா?” இவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “அத்தை... அது... எனக்கு பிஃப்டி ரூபீஸ் வேணும்த்தை!” என்றான் தயக்கமாய்.
“அவ்வளோ காசு உனக்கெதுக்கு டா?” இவள் கேட்டாலும் தன் கைப்பையிலிருந்து ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தாள். பதில் சொன்னால்தான் தருவேன் என்பது போல சுதி நிற்க, “அத்த... என் ப்ரெண்ட்க்கு பெர்த் டே. எல்லாரும் சேர்ந்து அவனுக்கு கேக் வெட்டலாம்னு பிளான் பண்ணோம். அம்மாகிட்டே கேட்டா தர மாட்டாங்க...” என அவன் கூற, சுதி காசை அவன் கையில் திணித்தாள்.
“ப்ளீஸ் அத்தை, அம்மாகிட்டே சொல்லிடாத...” என அவன் நிற்க, இவளுக்கு மனம் வலித்தது. அவளும் பள்ளியில் படிக்கும்போது இது போல நண்பர்களுக்கு பிறந்தநாள் என்று பரிசு வழங்கியிருக்கிறாள். அப்போதெல்லாம் மாமாவிடம் உரிமையாய்க் காசு கேட்பாள். தவாவின் தயக்கம் அவனுக்கு குடும்ப சூழ்நிலை உறைத்திருக்கிறது எனப் புரிய அவன் தோளில் தட்டியவள், “நான் சொல்ல மாட்டேன் பெரிய‌ மனுஷா. நீ எங்கேயும் சுத்தாம, பத்திரமா வீடு வந்து சேரு!” என அவனை அனுப்பிவிட்டு வேலைக்கு கிளம்பினாள். இன்றைக்கு விரைவாய் சென்று என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் அவளை மந்தமாய் செயல்பட வைத்தது.
பொறுமையாய்க் கிளம்பி அரைமணி நேரம் தாமதமாகத்தான் சென்றாள். இவள் உள்ளே நுழைய, வீடே கலகலவென்றிருந்தது. ஆரோன், அகஷா, நந்தனா, பாலாஜி, அவர்களின் பெற்றவர்கள் என அனைவரும் நிவின் வீட்டில் குழுமியிருந்தனர்.
அவர்கள் இப்போதுதான் வந்திருக்கிறார்கள் என அவளால் ஊகிக்க முடிந்தது. மகேந்திரா பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவள் வரவை ஒருவரும் கவனிக்கவில்லை.
நிவின் குளித்து முடித்து பளிச்சென அறையிலிருந்து வந்தான். தாடியை முழுதாய் மழித்திருந்தான். முகம் வெள்ளை வெளீரென்றிருந்தது. விவேகா கூறியது போல இவன் அத்தனை வெண்மைதான் என மனதில் நினைத்த சுதி நொடிக்கும் அதிகமாய் அவனைப் பார்த்துவிட்டு திரும்ப, “ஹே சுதி... வாங்க, எப்படி இருக்கீங்க?” என நந்தனாதான் அவளை அழைத்தாள். நிவினுக்கும் அவள் பார்வை புரிந்திருந்தது.
இவள் புன்னகைத்து, “நல்லா இருக்கேன் மேடம். நீங்க?” எனக் கேட்டாள். நந்தனா பதிலளிக்க, “ஹேப்பி பெர்த் டே மச்சான். சக்ஸஸ் புல்லா ட்வென்ட்டி செவன் இயர்ஸை வேஸ்ட் பண்ணிட்ட...” என பாலாஜி நிவினைக் கட்டிக் கொள்ள, சுதிக்கு அப்போதுதான் இத்தனை பேரும் இங்கே வந்திருப்பதற்கான நோக்கம் புரிந்தது.
ஒவ்வொருவராய் அவனுக்கு வாழ்த்த, நந்தனா தோளணைத்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தாள். அக்ஷா அனைவரும் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞை இன்றி, சட்டென நிவினை இறுக்கி அணைத்து, “ஹேப்பி பெர்த் டே நிவின். பீ ஆல்வேய்ஸ் ஹேப்பி. ரெக்கவர் சூன்!” என்று அவன் கன்னத்தில் மெலிதாய் முத்தமிட்டுக் கூற, பெரியவர்கள் முகம் மாறிப்போனது. அவர்களது காலம் வேறு. சட்டென இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவர்களால். அதனாலே சங்கடப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.


(தொடர்ந்து கீழே படிக்கவும்)
 
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113

சுதியும் இதை எதிர்பார்க்கவில்லை போல. எல்லோருடைய கவனமும் நிவினிடம் இருக்க, அவனைத்தான் பார்த்திருந்தவள், அக்ஷாவின் செய்கையில் முகத்தை தழைத்துக் கொண்டாள். அப்படியே அவர்களிடமிருந்து பிரிந்து சென்று சமையலறைக்குள் நுழைந்தாள். மேல்தட்டு மக்களை பல வருடங்கள் கண்டு பழக்கப்பட்டிருந்தாலும், இத்தனை சகஜமான அணைப்பையும் முத்தத்தையும் பார்த்ததில்லை. இப்போதெல்லாம் இது போல அணைப்பு முத்தமெல்லாம் பொதுவுடைமையாக்கப் பட்டுவிட்டது போல. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அதனால் இதில் தவறொன்றும் இல்லை. இருந்தாலும் இத்தனை பேரின் முன்பு கொஞ்சம் அக்ஷாவின் செயல்கள் அதிப்படி என மூளை அவளைக் குற்றம் சாட்டியது. ‌ நொடியில் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சமையலறையை சுத்தம் செய்து பாத்திரங்களைத் துலக்கத் துவங்கினாள். அவளுக்கு இப்போது வேலைதானே முக்கியம்‌. அவர்களைப் பற்றி நினைப்பதோ, விமர்சிப்பதோ தவறு என நியாய மனம் கூற, மற்ற எண்ணங்களைக் கிடப்பிலிட்டாள்.
அவளுக்கு அருகே அரவம் கேட்க, திரும்பினாள். நிவின்தான் நின்றான். “என்ன வேணும் சார்?” என இவள் வினவ, “பிரிட்ஜ்ல ஜூஸ் இருக்கு. எல்லாருக்கும் கொடுங்க, அண்ட் ஸ்நாக்ஸ் அங்க இருக்கு. அதையும் சர்வ் பண்ணிடுங்க!” என்றான். தலையை அசைத்தவள் கையில் சோப்பாய் இருந்ததால் கை கழுவி, துப்பட்டாவில் ஈரம் போகத் துடைத்துவிட்டு குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பழச்சாற்றை எடுத்து குவளைகளை நிரப்பினாள். அவன் அங்கே நிற்க, நிமிர்ந்து பார்த்தவள், “நான் எடுத்துட்டு வரேன் சார்...” எனக் கூற, நிவின் நகர்ந்தான்.
அவள் பழச்சாறை அனைவருக்கும் கொடுக்க, “சுதி, கம் அண்ட் ஜாய்ன் வித் அஸ். இன்னைக்கு நிவின் பெர்த் டேக்கு சின்ன கெட் டு கெதர் வச்சிருக்கோம். அன்னைக்குத்தான் வர மாட்டேன்னு சொல்லிட்டிங்க. இன்னைக்கு வரலாம் இல்ல?” என நந்தனா சுதியை அழைத்தாள்.
“இல்ல மேடம்... நீங்க ஃபேமிலியா போறீங்க. போய்ட்டு வாங்க!” என சுதியும் தன்மையாய் மறுத்தாள்.
“சுதி... நீயும் வாம்மா. ஒருநாள் போய்ட்டு வரலாம்!” என மகேந்திரா அழைக்க, “இல்ல சார். இன்பார்ம் பண்ணாம லீவ் போட்டா ஓனர் திட்டுவார்...” என சுதி வலுக்கட்டாயமாக புன்னகைத்து அவரது அழைப்பை துண்டித்தாள்.
“டெய்லியும்தான் வேலை பார்க்குறோம். ஒருநாள் லீவ் போட்டா என்ன சுதி? வாங்க!” நந்தனா வற்புறுத்த, “ஏன்டி... அந்தப் பொண்ணுதான் வரலைன்னு சொல்லுதுல்ல. எதுக்கு தேவையில்லாம வேலைக்காரப் பொண்ணெல்லாம் கூட கூட்டீட்டு அலையணும்? நம்மளோட அவ வந்தா நல்லா இருக்குமா? செலவைக் கூட்டாத நீ. அவ வர வேணாம். விடு!” என்று வாகீஸ்வரி சுள்ளென கூறவும், சுதியின் முகத்தில் இத்தனை நேரமிருந்த புன்னகை தொலைந்து போக, முகம் மாறிவிட்டது. அவரது பேச்சு ஒருவருக்கும் உவப்பாயில்லை.
“ம்மா... என்ன பேசுறீங்க?” பாலாஜி தாயை அதட்டினான்.
“சாரி சுதி... அம்மா தெரியாம பேசிட்டாங்க!” நந்தனா சுதியருகே வர, “பரவாயில்லை மேடம். அவங்க சரியாதானே சொல்றாங்க. வீட்ல வேலை செய்ற நான் உங்க கூட வர்றது சரியா இருக்காது. நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க!” என வலிய புன்னகைத்தவள், கடைசி குவளை பழச்சாறை நிவினிடம் கொடுத்தாள். அவன் எடுக்காது சுதியைப் பார்த்தான்.
“நிவினுக்கு ஃப்ரெஷ் ஜூஸ்தான் பிடிக்கும் சுதி. இந்த மாதிரி ஜூஸ் குடிக்க மாட்டான்!” என அக்ஷா கூற, தலையை அசைத்தவள் விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்தாள். பொங்கிய அழுகையை உதட்டைக் கடித்து அடக்கியதும் முகம் சிவந்து போனது போல. ஏன் இவர்கள் தன்னைக் காயப்படுத்துகிறார்கள் என சுதிக்கு கோபம் வந்தது. அதை வெளிப்படுத்த முடியாத இடத்திலிருக்கிறோம் என ஆற்றாமையில் கண்ணீர் பொங்க, துடைத்துக் கொண்டாள். அவள் வருகிறேன் என்றோ, இல்லை அவர்களிடம் உரிமை எடுத்தோ ஒருநாள் கூடப் பழகியது இல்லையே. அவளுடைய தகுதி, எல்லை எதுவென தெரிந்து நின்று கொண்டாலும், தன்னைக் காயப்படுத்துகிறார்களே என மனம் வலித்தது. இப்போதுதான் எழிலமதி பேச்சில் மீண்டிருந்த இதயம் மீண்டும் கூண்டுக்குள் சென்று அடைந்தது. முகத்தை சில நொடிகளில் சரிசெய்து உதட்டில் செயற்கையாய்ப் புன்னகையை பூசியவள் யாரையும் பார்க்காது குனிந்தவாறே நொறுக்குத் தீனிகளை மேஜையில் வைத்துவிட்டு சமையலறைக்குள் அடைந்து கொண்டாள். அவர்கள் யாருடைய முகத்தையும் பார்க்க சுதிக்கு விருப்பமில்லை. பணம் படைத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் என பொதுப்புத்தி உடையவள் அல்ல சுதி. இருந்தும் வாகீஸ்வரியை, நிவினை, அகஷாவை என யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. வேலையை விட்டு நின்றுவிடலாமா எனக் கூட அவளுக்கு சமீபகாலமாக தோன்றிற்று. உடல் வலியைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடிந்தவளால் மனவலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யாரேனும் எங்காவது ஒரு நிமிடத்தில் அவளைக் காயப்படுத்தி விடுகின்றனர். வலித்தாலும் அதைக் கடந்து கொண்டுதான் இருந்தாள். வேறு வழியில்லையே. ரோஷம் மானமெல்லாம் மூன்று வேளை சோறு போடப் போகிறதா என்ன என நினைத்ததும் நெஞ்சம் கசந்து வழிந்தது.
பாத்திரம் இன்னும் மிச்சமிருந்தன. அமைதியாய் அழுகையை அடக்கிவிட்டு அவற்றைக் கழுவி கவிழ்த்தினாள். அவளுக்கு அருகே வந்து நின்ற அக்ஷா ஆரஞ்சு பழத்தை உரித்துக் கொண்டிருந்தாள்.
“குடுங்க மேடம்... நான் உரிச்சு தர்றேன்!” என இவள் குரலை சரிசெய்தவாறு கேட்க, “நோ நோ சுதி... நிவினுக்கு இது. அவனுக்கு ஜீஸ் நானே ப்ரிபேர் பண்றேன்..‌.” என அவள் கூறிவிட, சுதி மேலும் எதுவும் பேசாது தன் வேலையைக் கவனித்தாள். மனம் சில நொடிகளில் மட்டுப்பட்டது. இருந்தும் காயம் கண்ட இதயம் வலிக்காமல் இல்லை. வைகுண்டம் பேசினால் எப்படித் தன்னை மீட்டுக் கொள்வாளோ, அப்படியே இப்போதும் எல்லாவற்றையும் தூசியாய் எண்ணித் தட்டிவிட முயன்றாள். வலிக்கவில்லை என தன்னைத்தானே நம்ப வைத்தாள்.
நேற்றைக்கு காயப் போட்டிருந்த நிவினின் துணிகளை எடுத்து வந்து மடித்து நிலைப்பேழையில் அடுக்கிக் கொண்டிருந்தாள் சுதி. வெளியே அனைவரது சிரிப்பு சத்தமும் பேச்சும் கேட்க, இவளுக்கும் கொஞ்சம் ஏக்கமாய் இருந்தது. அவள் சிரித்து எத்தனை நாட்கள் இருக்குமென மூளை அலச, பதில் என்னவோ சுழியம்தான். நிம்மதியாய் சந்தோஷமாய் வாழ எல்லாம் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கண்டிப்பாக கடந்த ஜென்மத்தில் செய்த ஏதோ ஒரு பாவத்தின் கர்மவினை தான் தன்னை இப்படித் துரத்துகிறது என அர்த்தமற்று ஆருடம் சொல்லிக் கொண்டவளின் உதடுகளில் கேலிச் சிரிப்பு. எதை எதையோ கூறித் தன்னை தேற்ற முயன்றாள் பெண். மனதின் பாரத்தை எப்படியாவது கரைத்துவிடலாம் என மூளையின் முயற்சி கொஞ்சம் வேலை செய்தது போல. அவர்கள் பேசிய பேச்சு அவர்களோடு. தான் சரியாக என்னிடத்தில் இருக்கிறேன் என கொஞ்சம் தன்னம்பிக்கை மீண்டிருக்க, முகம் மெதுவாய் தெளிவை தன்னுள் புகுத்தியது. வீட்டை சுத்தம் செய்யலாம் என்றால் அத்தனை பேரும் கூடத்தில், அறையில் என இருக்க, இப்போதைக்கு வீட்டைக் கூட்ட முடியாது எனப் புரிந்தது.

நேரம் இன்னும் அரைமணி மீதமிருக்க, என்ன செய்வதெனத் தெரியவில்லை. சற்று நேரம் அமரலாம் என நினைத்து அறையைச் சுற்றிப் பார்த்தாள். உள்ளே நாற்காலிகள் இல்லை. கட்டிலில் தான் அமர்ந்தால், ‘வீட்டு வேலைக்காரியை ரூம்ல கட்டில் வரைக்கும் வந்து உட்கார வைப்பீயா நீ’ என வாகீஸ்வரி கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை எனத் தோன்ற, அப்படியே நடந்து சமையலறைக்குள் சென்றாள். அங்கேயும் எவ்வித வேலையும் இல்லை. அவள் வந்த தினத்திலிருந்தே ஓரளவிற்கு எல்லாமே சுத்தமாகத்தான் இருந்தது‌. அதிலே நிவினின் பழக்க வழக்கங்களை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
வேலையே செய்யாமல் சும்மா இருக்கவும் கால் கடுகடுத்தது. அப்படியே குத்துக்காலிட்டு மெதுவாய் கீழே அவள் அமரவும், முதுகு வலி இப்போதுதான் தெரிந்தது. முன்பெல்லாம் கொஞ்சமாய் வலிக்கும். மாத்திரை உட்கொண்டால் பரவாயில்லை என்றளவிற்கு வலி குறையும். ஆனால் இப்போதெல்லாம் மாத்திரைக்குக் கூட வலி மட்டுப்படுவதில்லை.
‘காசு பணம்தான் கொடுக்கலை கடவுளே. சரின்னு அதைத் தேடி ஓடுனா, இப்படி வலியையும் வியாதியையும் கொடுக்குறீங்க. எவ்வளோ கொடுத்தாலும் ஸ்ட்ராங்கா இருக்கேன்னு நினைச்சு அடிச்சுட்டே இருக்கீங்களா? எனக்கும் வலிக்கும்னு கொஞ்சம் யோசிச்சு ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் குடுங்க ப்ளீஸ். முடியலை காட்!’ மனதிற்குள்ளே முணுமுணுத்தவளுக்கு மனவலியைவிட உடல்வலி இப்போது பிரதானமாகத் தெரிந்தது. வலித்தாலும் கூட யாரிடமும் சொல்லி அழக் கூட ஒரு தோள் இல்லை. விவேகாவிடம் கூறினால் வேலையை விட வற்புறுத்துவாள். வீட்டில் உரைத்தால், அவர்களுக்காகத்தான் நான் கஷ்டப்படுகிறேன் என அண்ணியும் தாயும் வருந்துவார்கள் என யாரிடமும் பகிர முடியாது உள்ளக் கிடங்கில் புதைத்திடுவாள்.

கடவுள் இந்நொடி தன் முன்னே வந்து எதாவது வரம் வேண்டுமென கேட்டால், ஒரு வாரம் எனக்கு முழு விடுப்பு வேண்டுமெனக் கேட்கலாம் என நினைத்ததும் சிரிப்பு வந்தது சுதிக்கு. இந்த அளவிற்கு அற்பமான ஆசை யாரும் கேட்க மாட்டார்கள் என நினைத்தவளுக்கு என்றோ பார்த்த நயன்தாரா படம் ஒன்று நினைவிற்கு வந்தது. எப்போது இந்த வலியெல்லாம் தீரும் என ஏக்கமாய்ப் பெருமூச்சு விட்டாள் பெண். யாரோ வரும் அரவம் கேட்க, சட்டென எழுந்து நின்றாள்.
நிவின்தான் வந்து நின்றான். அவனை சுதி கேள்வியாகப் பார்க்க, “நாளைக்கு வீட்டைக் க்ளீன் பண்ணிக்கலாம் சுதி. இப்போ கிளம்புங்க!” என அவன் கூறியதும் நன்றியாய் அவனை நோக்கியவள் கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென நடந்தாள். கூடத்தில் அனைவரும் பேசிக் கொண்டிருந்தாலும் இவள் மீது பார்வை படர்ந்து விலகியது‌. அதைக் கண்டு கொண்டாலும் யாரையும் நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க அவளுக்கு சர்வ நிச்சயமாய் மனதில்லை. உங்கள் எண்ணம் உங்களோடு இருந்துவிட்டுப் போகட்டும் என கசந்த எண்ணத்துடன் வெளியே சென்று நிமிராது காலணியை மாட்டினாள். முன்னே நிழல் தெரிய, நிமிர்ந்தாள். நிவின் தான் இவள் பின்னாடியே வந்திருந்தான்.
என்னவென அவனைக் கேள்வியாக நோக்கினாள் சுதி. “சாரி சுதிரமாலா. சாரி ஃபார் ஹெர்!” என அவன் கேட்கவும், இவளது முகத்தில் எந்த உணர்வுமின்றி, அவனை வெறுமையாய்ப் பார்த்தவள், “பரவாயில்லை சார், இதொன்னும் எனக்குப் புதுசு இல்ல. பழகுனதுதானே!” என்றவள், “உங்களுக்கு ஒரே ஒரு ரெக்வஸ்ட் சார். நந்தனா மேடம்கிட்டே இனிமே எங்கேயும் என்னைக் கூப்பிட வேணாம்னு சொல்லுங்க. உங்களோட வர்ற அளவுக்கு எனக்குத் தகுதியில்லைன்னு எனக்கே தெரியும். மோர் ஓவர் எனக்கு விருப்பமும் இல்லை. என்னோட எல்லை என்னென்னு எனக்குத் தெரியும். வேலைக்கு சேர்ந்த இத்தனை நாள்ல என்னைக்காவது நான் உங்ககிட்டே அட்வாண்டேஜ் எடுத்துப் பேசி இருக்கேனா? இல்லை வேலை செய்யாம தட்டிக் கழிச்சிருக்கேனா. தேவை இருக்கு வேற வழியில்லாம வேலைக்கு வந்தாலும் வாங்குற காசுக்கு நேர்மையா இருக்கணும்னு நினைச்சு என் வேலையை சரியா செஞ்சுட்றேன். அதிகமா உங்கிட்டே பேசுனது கூட இல்லை. எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா, நான் என்னளவுல சரியா இருக்கேன். நீங்க என்னை சகமனுஷியா நடத்துங்க போதும். பெருசா மதிக்க வேணாம். ஐ க்நோ மை லிமிட்ஸ். அதை தாண்ட மாட்டேன் நான். நீங்க எல்லாம் அதையே அடிக்கடி சொல்லிக் காட்டி என்னைக் கஷ்டப்படுத்த தேவையில்லை. என் வேலைல எதாவது குறை இருந்துச்சுன்னா அதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு. நான் திருத்திக்கிறேன். மத்தபடி என்னைப் பேசுறதுக்கு உங்க யாருக்கும் ரைட்ஸ் இல்லை. அண்ட், உங்ககிட்டே எந்தவிதமான சலுகையும் நான் எதிர்பார்க்கலை. சோ, இனிமே எங்கேயும் என்னை கூப்பிட வேண்டாம்னு மட்டும் நந்தனா மேடம்கிட்டே சொல்லுங்க, அண்ட் அவங்களோட நல்ல மனசு எனக்குப் புரியுது. எல்லாருக்கும் இன்க்ளூடிங் உங்களுக்கும் அப்படியொரு பிராட் மைண்ட் இருக்கணும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை. உங்களுக்கு உதவி செஞ்சேன்னு அவங்க எனக்குத் திருப்பி செய்ய நினைக்குறாங்க. அது தேவையில்லாதது. யாரா இருந்தாலும் நான் அன்னைக்கு அப்படித்தான் நடந்திருப்பேன்!"
என சில நொடிகள் நிதானித்தவள், “தேங்க்ஸ் சார். வேலை இல்லைன்னதும் நின்னுட்டே இருக்க விடாம போய்ட்டுவான்னு அனுப்புனதுக்கு. கொஞ்ச நேரம் உக்காந்துட்டு நான் கிளம்புவேன்!” என அன்னியமான புன்னகையுடன் அவள் வெளியேற, நிவின் அசையாது அவளையே பார்த்தான். தன்னையே தொடரும் பார்வையை அலட்சியம் செய்து நடந்தாள் சுதி.
அவனிடம் கூறியதில் சுதிக்கு இப்போது மனதிலிருந்த பாரம் விலகிய உணர்வு. ஏனோ இவர்களுக்கு எல்லாம் தன்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறதாம். வீட்டில் கஷ்டமென்று வேலைக்குத்தான் வந்திருக்கிறாள். அவர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கு இவள் வேலை பார்த்தால் போதும். அந்தளவில் அவள் சரியாய் இருக்கிறாள். மற்றபடி அவர்கள் பேசும் அனைத்தையும் பொறுத்துப் போக வேண்டிய அவசியம் இல்லையென அவனிடம் பேசிவிட்டாள். அவனுக்கும் தன் பேச்சு சுட்டிருக்க கூடுமென உணர்ந்தாலும் அதைப் பற்றி அவள் கருத்தில் கொள்ளவில்லை. சக மனிதர்களை மதிக்கத் தெரியாதவன் எல்லாம் எத்தனை பெரிய இடத்தில் இருந்தால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு. நிவின் மன்னிப்பை யாசித்ததை நினைத்து, ‘சாத்தான் வேதம் ஓதுது!’ என மனம் கூற, சிரிப்புடன் வணிக வளாகம் நோக்கி நடந்தாள். கொஞ்சம் மனம் லேசானதை உணர்ந்து தளர்வாய் நடந்தாள்.
தொடரும்...

Sorry makkale... Intha story uh jollllyyy uh ezhutha nenachu than start panne. But story drives me in another way. It's okay... Pogatum. Next jolly uh story panikalam 🤭🏃‍♀️


















 
Well-known member
Messages
881
Reaction score
652
Points
93
Naan thitturathukku munnadi neene sorry keakkuriye maa, paavam suthi
Avala romba azha vachitte irukka ma , ennayum serthu than🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Well-known member
Messages
430
Reaction score
319
Points
63
சபாஷ் சுதி இப்படி தான் நிமிர்ந்து நிற்கணும் 👌👌👌👌
 
Messages
55
Reaction score
36
Points
18
கண்ணியமாக நடந்தாலும்
கண்டதை பேசிட
கணக்கும் மனம்
கண்ணீர் தான் தீர்வோ...

சோகம் மனதில் இருந்தாலும்
சுயமரியாதை என வரும்போது
சீறிடும் புயலாக
சுதி சொல்லிய வார்த்தைகள் அனைத்தும்
சூப்பர்....
சற்று மனதுக்கு ஆறுதல்
சொன்னால் ஆவது புரியட்டும்

சிலருக்கு...
 
Active member
Messages
178
Reaction score
119
Points
43
Nice baby
Nalla kudutha suthi
 
Top