• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பூக்களை விரும்பா வேர்களில்லை - 40

Active member
Messages
107
Reaction score
31
Points
28
அத்தியாயம் - 40


அன்று இரவு தான் வருவதற்கு தாமதமாகி விடும் என முன்பே தன் மனைவியிடம் தெரிவித்திருந்தான் அமிழ்தினியன். கல்லூரியில் அவனுடன் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதால் அவருக்கான பிரிவு உபசரிப்பு விழாவும், இரவு உணவு விருந்தும் நடப்பதாக அன்று ஏற்பாடாகி இருந்தன. அதை எல்லாம் முடித்துக் கொண்டு அவன் வீடு வந்து சேர்க்கையில் மணி இரவு பத்தைத் தொட்டு இருந்தது.


இரவு நேரம் சென்று வந்ததால் அனைவரும் அவரவரின் அறையில் முடங்கி இருக்க, அமிழ்தினியனும் நேராக தன்னுடைய அறைக்கு வந்தான். வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்த அறையை பார்த்தவாறே தங்களின் படுக்கை அறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வருகையில் மேலும் பத்து நிமிடங்கள் கடந்திருந்தன.


சற்றே இலகுவான இரவு உடையில் தன் தலையை துவட்டியபடியே வெளியே வந்தவனின் விழிகள் அலைந்து தன் மனைவியையும் குழந்தைகளையும் தேட, அறையின் வலதுபுறத்திலிருந்த அலங்கார மேஜைக்கு முன்பாக நின்றுக் கொண்டு கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை இடவலமாக திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மழைக்குழலி. அதுவும் அவனுடைய சட்டை ஒன்றினை அணிந்துக் கொண்டு முகத்தில் பொட்டு முதற்கொண்டு எவ்வித ஒப்பனையும் இல்லாமல் தன் சுருள் கேசத்தை வருடிக் கொண்டும் சட்டையினை பிடித்திழுத்து தன் சுற்றளவிற்கு ஏற்றவாறு இறுக்கிப் பிடித்துத் தன்னையே பார்த்திருந்தாள்.


இது அவ்வபோது நடப்பது தான். அவனுடைய பழைய சட்டைகளையும் அவன் முதல்நாள் அணிந்து கழற்றி வைத்திருந்த சட்டைகளையும் கூட தோன்றும் போது தானாகவே எடுத்து உடுத்திக் கொள்வது அவளது பழக்கம். அதிலும் இன்று, அவன் கழற்றிப் போட்டிருந்த உடையில் இருந்தவளை கண்ட கணவனின் நெஞ்சம் அவர்களின் கொடைக்கானல் நாட்களுக்கு சென்று திரும்பியது. அவளையே பார்த்தபடி அவளுக்கு பின்னால் வந்து நின்றவன், கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தில் தன் விழிகளை பதித்தபடியே தலையை துவட்ட, அவள் அவனை சிறிதும் கண்டுக் கொள்ளவே இல்லை.


‘ஃபங்ஷன் எப்படி போச்சு?’


‘என்ன சாப்ட்டிங்க?’


‘காஃபி எடுத்துட்டு வரவா?’ என இப்படியாக எதையாவது கேட்பாள் என அவன் எதிர்பார்க்க தன் பிம்பத்தில் பதிந்த தன் விழிகளை அசைக்கவே இல்லை அவள்.


“க்கும்…” என செறுமியவன், தன் துவாலையை ஐந்தடி உயரத்தில் அருகிலிருந்த துணிகளை உலர்த்தப் பயன்படுத்தப்படும் அடுக்கில் காய வைத்துவிட்டு தன் தலைமுடிகளை சிலுப்ப, அவனுடைய கேசத்தில் கோர்ந்திருந்த நீர்துளிகளில் சிலது அவள் முகத்தின் மீது வந்து மோதி தெறித்தது.


“பச்!” என சலித்துக் கொண்டாளே ஒழிய வேறெதுவும் பேசவில்லை.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் தனக்கு முதுகுக் காட்டி நின்றிருந்தவளின் இடையினை பின்னிருந்து இறுக்கமாக தன் இரு கைகளால் கோர்த்து தன் மார்பின் மீது மோதி நிற்கும் அளவிற்கு அவளை இழுத்து, “என்னடி ரொம்ப தான் சலிச்சுக்கிற?” என அவள் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்து இதழ் பதிக்கவும்,


“விடுங்க…” என்றவாறு அவனிடமிருந்து விலக பார்த்தவளை முன்பை விட இறுக்கமாக பிடித்து தன்னோடு நெருக்கமாக சேர்த்தணைத்த அமிழ்தினியன், “முடியாது ஜில்லு…” என மென்மையாக அவள் காதோரம் கிசுகிசுக்க, அவன் மீசைமுடிகள் உரசிய குறுகுறுப்பில் தன் முகத்தை வளைத்து சட்டென தன் கன்னங்களை விரல்களால் தொட்டு தழுவினாள்.


“எத்தனை தடவை தான் சொல்றது… என்னால உன்னை எப்பவும் விட முடியாதுனு… சொல்லி சொல்லியே எனக்கு வாய் வலிக்குது டி…” என்றவனின் இதழ்கள் தன்னை சூழ்ந்த உணர்வுகளிலிருந்து மீள முடியாமல் அவள் பளிங்கு பின்னங்கழுத்தில் தேங்கியது.


எதுவும் சொல்லாமல் அப்படியே அசையாமல் நின்றாள். இருவரின் பார்வையும் கண்ணாடியில் தெரிந்த மற்றவரின் பிம்பத்தை இம்சித்தது.


“பொழிலும் அவியும் எங்க? விளையாடிட்டு இருக்காங்களா? வெளிய காணோமே…” என கிசுகிசுப்பான குரலில் தன் மகள்கள் எங்கே என அவளிடம் வினவினான்.


“இன்னைக்கு ஃப்ரைடேல… பாவை அவங்கள கூட்டிட்டு போய் இருக்கா” இயல்பாக சொல்லிவிட்டு அவள் விலக முயல, அவளை தன் கைச்சிறைக்குள் கொணர்ந்தவன், “ஓ, மூவி நைட்டா!” என லேசாக முறுவலித்து, “இந்த ஷர்ட் உனக்கு பொருத்தமா இருக்கு ஜில்லு…” என அவள் இடையிலிருந்த கைகளை சட்டையை தாண்டிப் பதித்தான்.


“அத்தான்!” குரலே எழும்பவில்லை அவளுக்கு.


“இம்ம்!”


“என்ன இது விளையாட்டு?”


“என்ன என்ன விளையாட்டு? ஷர்ட்டும் என்னுது ஷர்ட் போட்டு இருக்கற பொண்ணும் என்னுது தானே… அப்பறம்?” குறும்பாக கேட்டான் அமிழ்தினியன்.


அமைதியாக நின்றிருந்தவளை ஒருமுறை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை சட்டென மாறவும் குழலியை வேகமாக தன்புறமாக திருப்பினான் அமிழ்தினியன்.


“என்னடா?” மெல்லிய குரலில் ஆதுரமாக அவன் கேட்க,


“ஒன்னுமில்லை அத்தான்…” என சமாளிப்பாகப் புன்னகைத்தாள்.


“ஜில்லு! இங்க என்னை பாரு…” அவளின் நாடி பிடித்து அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவனின் கண்களிலிருந்த ஏதோ ஒன்று அவளை அப்படியே அமிழ்த்தியது.


ஆழமாய் ஊடுருவிய விழிகளுடன் அவளை கூர்ந்தவன் திடீரென, “கவிதாகிட்ட ஏன் அப்படி கேட்ட ஜில்லு?” என்றதும் ஒன்றும் புரியாமல் அவளுடைய முகமும் விழிகளும் குழப்பத்தை தத்தெடுத்தன.


“நீ என்னை இன்னும் நம்பல இல்ல…”


“அத்தான்”


“நீ அவகிட்ட கேட்டதை பாத்தா அப்படி தான்டி இருக்கு…”


“...”


“மேடமுக்கு என்னை திருப்தி படுத்தனுமோ… அதுவும் எல்லா விதத்துலையும்… ஹ்ம்ம்?”


“...”


“எப்படிங்க மேடம் திருப்தி படுத்தலாம்னு இருக்கீங்க? இப்படியா…” அவளோடு தன் உடல் மொத்தத்தையும் ஒட்டிக் கொண்டு நின்றவனின் முகமும் பேச்சும் கரைக்காணாமல் இறுகிப் போய் இருந்தன.


நீர் திரையிட்ட விழிகளால் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மழைக்குழலி. அவனை அப்படியே பிடித்து தன் விழிகளுக்குள் ஆழமாய் புதைத்துக் கொள்ளும் அளவிற்கு வேகம் பிறந்தது அவனுடைய பேச்சில். அமிழின் கண்கள் இரண்டும் அன்று போலவே இன்றும் சிவந்துப் போனது. மழைக்குழலியின் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி,


“ஏன் ஜில்லு… உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்திக்குற… இவ்வளவு நாள்ல நீ மறந்தே இருப்பனு நினைச்சேன். ஆனா, நீ அதை இன்னும் விடல. என் காதல் உனக்கு அந்த நம்பிக்கைய குடுக்கல அப்படிதானே?” வேகமாய் அவன் இதழ்களை தன் விரல்களினால் அழுத்தமாக மூடினாள் மனைவி.


“ப்ளீஸ் அத்தான்…” கலங்கிய அவள் விழிகளையே பார்த்து நின்றவன் அவளையே பார்க்க, “இதுக்கு தான் நாம பிரிஞ்சிடலாம்னு நான் முடிவெடுத்திருந்தேன். உங்களுக்கு என்னை புரியல. ஒரு பெண்ணா என் மனசு இப்ப எப்படி தவிக்குதுனு உங்களுக்கு புரியல…” வருந்தியவளின் உள்ளம் சொல்ல முடியாத வலியில் துவண்டது.


“நீங்க மறுக்க மறுக்க எனக்கு வேணும்னு தோணுது. நீங்க என்னை மறுக்க காரணம் நான் தான்னு எனக்கு தெரியும். எனக்கு எதாவது ஆகிடும்னு தானே ஒவ்வொரு முறையும் நீங்க தயங்கறிங்க… அப்பயெல்லாம் எனக்கு எப்படியாவது நாம சேர்ந்திட மாட்டோமானு தான் மனசு தவிக்குது. என்னை உங்ககிட்ட கொடுக்கணும்னு ஆசையா இருக்கு. ஒரு பெண்ணா, ஒரு மனைவியா நான் நினைக்கறதுல என்ன தப்பிருக்கு அத்தான்…”


தவிப்பாய் தன் இதழ்களை இறுக்கியவன் அவள் விழிகளை நேரடியாக சந்திக்க மறுத்தான்.


“நாம ரெண்டு பேரும் நிச்சயமா சந்தோஷமா தான் இருக்கோம். மத்த கணவன் மனைவிங்க மாதிரி அன்பா, அனுசரணையா, அன்யோன்யமா தான் இருக்கோம். பாசமான குடும்பம், குழந்தைனு எல்லாமே நிறைவா இருக்கு. ஆனா, எங்கையோ கசங்கி, கருகி உருக்குலைஞ்சு நிக்க வேண்டிய ரோஜா செடிக்கு அதுக்கு தேவையான எல்லாமே கொடுத்து பத்திரமா பராமிரிச்சு, அது நல்லா வளந்ததும் அதுல இருக்கற பூவ மட்டும் தூக்கி எறியற மாதிரி இருக்கு உங்க பேச்சும் செயலும்…”


“உளராத ஜில்லு…” சட்டென அவளை வேகமாக அணைத்தவனின் மூச்சுக் காற்றின் வெப்பம் கூடிக் கொண்டே போனது.


“நீங்க மட்டும் யாருக்கிட்டையும் என்னை விட்டுக் குடுக்காம… யாருக்கும் இந்த விஷயம் தெரியாம மறைச்சு உங்க மேலையே பழியையும் போட்டுக்கிட்டு… உங்க பொண்டாட்டிக்காக எல்லாம் பண்ணுவிங்களாம். ஆனா, நான் மட்டும் உங்களுக்காக எதையும் யோசிக்க கூடாது இல்ல. அதுவும் நான் விரும்பின என் அத்தானுக்காக நான் எதையுமே செய்யக் கூடாது”


“...”


“எனக்கு சரியாகனும்னு நான் எவ்வளவு நினைச்சேன் தெரியுமா அத்தான். உங்களோட குழந்தைய சும்மக்கற பாக்கியம் தான் எனக்கு இல்ல. ஆனா, இதுல கூடவா… நான் இவ்வளவு பேசுறதே தப்பு அத்தான். இதெல்லாம் கெஞ்சிக் கேட்டு வாங்குற விஷயம் இல்ல. எல்லாம் தானாவே நடக்கணும். என் விஷயத்துல அப்படி நடக்க சான்ஸே இல்ல, ஏன்னா நான் அதுக்கு தகுதியானவளே இல்லல”


அவன் மார்பில் சாய்ந்திருந்தவளின் தோள்களை பிடித்து அவளை தள்ளி நிறுத்தியவன், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.


முகம் முழுவதும் ஜிவ்ஜிவ்வென்று சிவந்துப் போய்விட கோபத்தில் இதழ்களின் தசைகளை மென்றவனின் அழுத்தம் தாங்காமல் அவனுடைய கீழ் உதடு இரத்தத்தில் சூடாக நனைந்தது. தன் கன்னத்தை ஒரு கையால் தாங்கி நின்றிருந்தவளை உறுத்து விழித்தவன்,


“இன்னும் ரெண்டு வைக்கணும் இந்த வாய்க்கு? என்ன பேச்சு பேசுற… அறிவிருக்கா இல்லையாடி உனக்கு? உனக்கு ஒன்னுமே இல்ல. தகுதி அது இதுனு…” தவிப்பாய் உருகியவனின் கண்களில் மகரந்த ஈரத்தின் சாயல்.


“என்னை அப்படி மத்தவங்க சொல்லிட கூடாதுனு தானே இப்ப வரைக்கும் யாருக்கும் தெரியாம பார்த்துட்டு வரிங்க… ஆனா, நீங்க என்னை விட்டு தள்ளி இருந்து இப்படி நடந்துக்கறதுல எனக்கே அந்த டவுட் வருது…” அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச விடவில்லை அவன். அத்தனை ஆழமாய் அவளுள் இறங்கி இருந்தான். தன்னுடைய முழு கோபத்தையும் அவளிடம் காண்பித்திருந்தான்.


வார்த்தைகளை கொண்டு வடிக்க முடியாத மௌனம் அவனை முத்தத்தில் திறமாய் செதுக்கிவிட்டு அவளை நிலைகுலைய செய்திருந்தது. அவளின் முகம் முழுவதும் விரவிப் படர்ந்தவனின் இதழ்கள் சட்டையின் இடைவெளியில் கிடைத்த அவள் கழுத்தில் புதைய, தன் விரல்களை அவள் மீது வைத்து இறுக்கினான்.


“ஜில்லு… என்னை எப்பவுமே உன் வார்த்தையால சிதைச்சு சுக்கு நூறா உடைக்கவே பிறந்திருக்கியாடி… உன்கிட்ட இருக்கற என்னோட தயக்கமே வேற… ஆனா நீ பேசுறது… என்னால உன்னை காயப்படுத்த முடியாதுடி. ஆனா, நீ என்னை வார்த்தையாலே வதைக்குற. ஐ ஜஸ்ட் வான்ட் டூ லிவ் வித் யூ… அது போதும் எனக்கு”


“ஓ, அப்படியா? ரொம்பவே தேங்க்ஸ் அத்தான்… என்னை இவ்வளவு நாளும் நீங்க சகிச்சிக்கிட்டதுக்கு…” அன்றும் இதை தான் சொன்னாள் இன்றும் அதே வார்த்தையை தான் சொல்கிறாள். இத்தனை நாட்களில் அவளின் இந்த எண்ணத்தை மாற்ற முடியாத அளவிற்கா தன் காதல் இருந்திருக்கிறது என யோசித்தவனின் நெஞ்சம் அனலாய் கொதித்தது.


ஆழி பேராலையாய் தன்னை தாக்கிய உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு தவித்தவனுக்கு அவளின் வார்த்தைகள் அமிலமாய் எரிந்தது. அவளை பிடித்திழுத்து தன்புறமாக திருப்பியவனின் இதழ்கள் அவளுக்கான தண்டனையை வாரி வழங்கி துள்ளத் துள்ள அவளை வதைத்தது. கைகள் அவளின் மேனியில் ஊர்ந்து அவளை தன்னோடு இன்னும் இறுக்கமாய் இறுக்கியது.


அவன் நெருக்கத்தில், தான் உள்ளுக்குள்ளே மருகி மறைத்து புதைத்திருந்த உணர்வுகள் எல்லாம் பெறும் சுனாமியாய் தனக்குள் எழுந்ததை மறைக்க முடியாமல் அவன் முதுகினை தன் நகக்கண்களினால் அழுத்தினாள் மழைக்குழலி. தன் தொடுதலில் பார்வையில் துவண்டு சரிந்தவளை தன் கைகளுக்குள் சுழற்றியவன் அவள் காதருகே குனிந்து,


“சகிக்கிறேனா? உன்னையா?” என பல்லை கடித்துக் கொண்டாலும் அத்தனை சிரிப்புடன் கேட்டான்.


அவள் அமைதியாக இருக்கவும், “திமிர்… என் பொண்டாட்டிக்கு வாய் கொழுப்பும் திமிரும் ரொம்பவே அதிகம் தான்…” அவள் கன்னங்களுக்கு இடம்பெயர்ந்த இதழ்களில் கோபத்தோடு தாபத்தின் சுவடுகள். அவளின் மனதை திண்டாடி திகைக்க வைக்கும் அளவுக்கு அவளை தன்னோடு இறுக்கினான். இத்தனை நாளாய் சேர்த்து வைத்து இன்று அவளை மூர்ச்சையாக்கினான்.


“உனக்கான என் உணர்வுகள் ரொம்ப மோசமானது ஜில்லு. ஒரு முத்தத்துல, ஒரு அணைப்புல ஏன் நாம் கொண்ட உறவால கூட என்னால உன்னை நிச்சயமா கடந்து வர முடியாது. எனக்கு உன்மேல இருக்கற காதலுக்கும் காதலை தாண்டிய எல்லாத்துக்கும் முன்னாடி காலமே தோத்துப் போயிடும். ட்ரஸ்ட் மீ… உன்னை பத்தின அத்தனை சுகமான எண்ணங்களும் எனக்கு இருந்துச்சு டி… ஏன் இப்பவும் கூட என் ஆழ் மனசுல இருக்கு. நான் தான் அந்த பக்கங்களை எல்லாம் உன்கிட்ட காட்ட விரும்பல. அகுக்காக என் காதலை சந்தேகப்பட்டு பேசுவியா நீ?”


“சந்தேகமெல்லாம் இல்லத்தான்…” அவசரமாக மறுத்தவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் அவள் அணிந்திருந்த சட்டையை இறுக்கிப் பிடித்து தன் கோபத்தை அடக்கினான். தன் கோபத்தை கூட இவள் தாங்க மாட்டாளே என்று தான் தோன்றியது அவனுக்குள்.


“என் கண்ணை நிமிர்ந்து பாரு டி… உன்கிட்ட அதை காட்டாம இருக்க நான் எவ்வளவு பாடுபட்டு கடந்து வந்தேன்னு புரியும்… என்னை விட்டு தள்ளி தள்ளிப் போன என் பொண்டாட்டிக்கு, என் காதலை வாங்கிக்கிட்டு என்னை உயிரோட கொன்னுட்டு இருந்த என் பொண்டாட்டிக்கு, என்னை வேறொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ண என் பொண்டாட்டிக்கு… அதெல்லாம் என்னால எப்படி சொல்லிப் புரிய வைக்க முடியும். எல்லாத்தையும் எனக்குள்ள புதைச்சுக்கிட்டு இருந்தேன். அதையெல்லாம் உனக்கு தெரியப்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஏன்னா நான் அதெல்லாம் கடந்து வந்துட்டேன் ஜில்லு…”


“...”


“இப்பவும் கூட எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லனு தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா, இந்த ஒரு மாசமா என்னை நீ கொல்ற டி… உன் பார்வையால, பேச்சால என்னை எப்படி தவிக்க விடுற தெரியுமா… என்னால உன் கண்ணை பார்த்துப் பேச முடியலடி. ஒரு காலத்துல என் கற்பனையில நாம எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டேனோ அப்படியெல்லாம் மாறி என்னை வதைக்குற. ஏதோ டீன் ஏஜ் பையன் மாதிரி என்னை நினைக்க வைக்கற. இப்பல்லாம் நீ என்னை நெருங்கும்போது எனக்கு தான் படபடப்பா இருக்கு. எங்கையோ நான் புதைச்சு வச்ச உணர்வுகள் எல்லாம் வேகமாக நெஞ்சமெல்லாம் வந்து பாயுது. என் கண்கள் இரண்டும் காதல் பித்துப் பிடிச்சு திணறிப் போய் சிவந்துப் போகுது டி…”


“...”


“வயசாகிடுச்சுடா உனக்குனு கன்னத்துல அறையனும் போல இருக்கு. உன்னை நான் எந்தவிதத்துலயும் காயப்படுத்தக் கூடாதுனு முடிவு எடுத்து எதுவும் வேண்டாம்னு உறுதியா இருந்தவன். இப்ப இப்படி எல்லாம் யோசிக்கறதுக்கு எனக்கே அசிங்கமா இருக்கு டி. என்னால உன்னை ஃபேஸ் பண்ணவே முடியல. அவ்வளவு தானாடா நீ? நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தானானு என்னை என் மனசாட்சி கேவலமாய் கேக்குது. இப்ப உனக்கு சரியானதுனால சரி, ஒருவேளை இல்லைனா அப்ப இது எவ்வளவுப் பெரிய அபத்தம். அப்ப இவ்வளவு நாளும் நான் காட்டின காதலுக்கு அர்த்தமே இல்லாத மாதிரி இருக்கு ஜில்லு…”


அவனை காயப்படுத்தி சென்ற அவளுடைய வார்த்தைகளின் மூலமாய் அவன் மனதிலிருந்த தவிப்புகள் எல்லாம் அவளுக்கு புரிய நீர் நிறைந்த கண்களுடன் உணர்ச்சி ததும்பிய முகமாக நின்றிருந்தாள் மழைக்குழலி.


“ஐ’யம் ஸாரி… என் லைஃப்ல நீ மட்டும் என்னோட எல்லா விஷயத்துலையும் விதிவிலக்கு தான். உன்கிட்ட எப்பவும் நான் தோத்து தான் போயிடுறேன் டி…” அவளை விட்டு விலகி நின்றவன் அவள் முகம் காண தயங்கி மறுபுறமாக திரும்பவும் பின்னாலிருந்து அவனுடைய சட்டையை பாய்ந்து இழுத்துக் கொண்டவள் அவனுடைய முதுகில் ஆழமாய் முகம் புதைத்து நின்றாள்.


சற்றே இறுகிய அவனுடைய உடல் மெல்ல தளர்ந்து, கை கால்கள் எல்லாம் நடுங்கியது. வெட்கம் கலந்த குறும்பு சிரிப்போடு அவன் முதுகில் தன் இதழ்களின் வரிகளை அழுத்தமாய் பதித்து அவனை தன்னை நோக்கி அவள் இழுக்க, உயிர் வதைப்படும் அவதியில் நின்றிருந்தான் அமிழ்தினியன்.


“ப்ளீஸ் ஜில்லு…” தன்னிலிருந்து அவள் கைகளை அவன் விடுவிக்க,


“என்ன ப்ளீஸ்?” என குறும்பாக வந்தது அவள் குரல்.


“விடுடா… ஐ கான்ட்…” விழிகளை மூடியவன் வாய்க்குள் வார்த்தை அரைகுறையாக நின்றுப்போக, அவன் கீழிதழில் பாதி அவன் பற்களுக்குள் பதட்டமாய் சிதையுண்டது.


அவன் முகம் பார்த்து முன்னால் வந்து நின்றவள் அவன் பற்களுக்கு இடையில் சிக்கியிருந்த இதழினை மெல்ல தன் விரல்களால் விடுவித்துவிட்டு வளைந்த முறுவலுடன், “தட்ஸ் மைன்…” என்றாள் அவன் இதழ்களை பார்வையால் வருடி கிசுகிசுப்பாக.


அவள் கையினை விலக்கிவிட்டு நகர முயன்றவனின் இடையினைப் பிடித்திழுத்து, “சொன்னேன் இல்ல என்னதுனு…” என்றதுடன் அவன் விழிகளை உறுத்து விழித்தவள் அவன் இதழ்களில் ஆழப் புதைந்து காணாமல் போனாள்.


மனைவியின் செய்கைக்கு உடன்பட முடியாமல் தவித்தவனின் இதயத்துடிப்பு நூறு மடங்காய் எகிற, சுகமாய் அவளுள் தொலைந்த தன் இதழ்களை ஏமாற்றத்தோடு அலைப்புற்றுத் தேடிக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்.


விலகிய நொடியில் அரை வினாடி பார்வை மனைவியை சுற்றி வந்தது. எண்ணவோட்டம் முழுக்க அவளை சுற்றியே இருக்க தன் மனதினை வஞ்சிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ஏனோ இன்று தன் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க முடியாமல் அனைத்தையும் கொட்டி விட்டான். அதன் பின்னர் தான் அவளை பற்றின யோசனைகள் எல்லாம் வலுத்துக் கொண்டிருக்கின்றன. ரணமாய் இருவருக்கும் இடையிலிருந்த இடைவெளி அவனை பெரிதும் வதைத்தாலும் அதற்கு மருந்தாய் அவள் தருவித்த முத்தச் சிதறல்களில் மொத்தமாய் தொலைந்து தான் போனான் அமிழ்தினியன்.


“அமிழா…” அவள் அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் கழுத்தினை சுற்றிலும் மாலையாக தன் கைகளை கோர்த்தவள்,


“நீ என்கிட்ட தோத்து தான் போகணும்டா…” என சொல்ல வெறுமையான பார்வையுடன் வேறெங்கோ பார்த்து அமைதியாக நின்றிருந்தான் அமிழ்தினியன்.


“இங்க என்னை பாருங்க…” என அவன் கன்னங்களை இழுத்துப் பிடித்து தன்னை விடாப்பிடியாக காண செய்தவளுக்கு சிறுபிள்ளையாக தன் முகத்தினை தூக்கி வைத்திருந்தவனுக்கும் தன் மகள்களுக்கும் பெரிதாய் எந்த வித்தியாசமும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை.


“உங்களால மட்டும் தான் அத்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்” என சிரிப்புடன் துவங்கியவள்,


“ஆறு மாசமா இந்த மனுஷன் நம்பலை திரும்பி கூட பார்க்கலையே ஒருவேள, இவருக்கு நம்ப மேல இருந்த ஈர்ப்பு குறைஞ்சிடுச்சோனு நான் கவலை பட்டுக்கிட்டு இருந்தா… நீங்க என்னடானா உங்க பொண்டாட்டிய அவளுக்கே தெரியாம சத்தமில்லாம சைட் அடிச்சிட்டு இருந்திருக்கீங்க… கல்யாணத்துக்கு முன்னாடி தான் அப்படி இருந்தீங்கனா இப்பவும் அப்படியேதானா அத்தான்…” அவள் பார்வைகள் எல்லாம் அவனிடம் அவனை நிதர்சனமாய் கேட்டு நின்றதை சொல்லவும் வேண்டுமா.


எதையோ சொல்ல வந்தவனை கைநீட்டி தடுத்தவள், “அத்தான், ஒருவேளை நான் உங்களை காதலிக்காம இருந்திருந்தா உங்களை பாக்காம இருந்திருந்தா என்னோட பிரச்சனைய நான் ஒரு விஷயமாவே நினைச்சிருக்க மாட்டேன். எத்தனையோ பேர் குழந்தை இல்லாம, கல்யாணம் பண்ணிக்காம வாழுறாங்கல… அது வலிச்சாலும் அதை ஏத்துக்கிட்டு அவங்களை மாதிரி நானும் வாழ்ந்துட்டு போயிருப்பேன். ஆனா, நான் உங்களை காதலிச்சுட்டேனே. என்னை விட உங்களை அதிகமா நேசிக்க ஆரம்பிச்சிட்டேனே. அதனால் தானே எனக்குள்ள இந்த போராட்டம். அந்த போராத்தோட முடிவே நீங்க தானே அத்தான்” பெருமூச்சுடன் தொடர்ந்தாள்,


“அப்போதைக்கு சரி தான். ஆனா, அடுத்தடுத்த விஷயங்கள்ல கண்டிப்பா சிக்கல் வரும்னு நான் எதிர்பார்த்தேன். குழந்தைங்களை எல்லாம் நான் நினைச்சுக் கூட பார்த்ததில்ல… ஆனா, எல்லாதையும் எவ்வளவு அழகா ஹாண்டல் பண்ணீங்க… இதுவரைக்கும் எங்கேயுமே என்னை ஒரு சின்ன குறையா கூட எதுவுமே சொன்னதில்லை நீங்க. அவ்வளவு காதலை என்மேல வச்சிக்கிட்டு இப்ப என்னை விட்டு இப்படி விலகி விலகிப் போனா நான் மட்டும் என்னதான் அத்தான் பண்றது” தன் நிலையை விளக்கி அவன் செய்கைகளுக்கு அவனிடம் கோபித்துக் கொண்டாள்.


“இப்ப வரைக்கும் ஒருவாட்டி, ஒருவாட்டி கூட நீங்க என்னை அணுக நினைக்கலையே. அவ்வளவு கட்டுப்பாட்டோட இருக்கற என் அத்தானுக்கு நான் என்னையே கொடுக்கணும்னு நினைச்சது தப்பா? உங்களை கட்டிப் பிடிக்கும் போதும், முத்தம் கொடுக்கும் போதும் நானே சில சமயம் தடுமாறி இருக்கேன். ஆனா, அப்படி சின்னதா கூட நீங்க தடுமாறி நான் பாத்ததில்லையே… ஒருவேளை எனக்கான உங்களோட உணர்வுகளை நான் மொத்தமா பொசுக்கிட்டேனானு கூட நான் யோசிச்சு இருக்கேன். அப்ப கூட, அப்படி ஒருவேளை நீங்க என்னை நெருங்கிட்டா என்னால உங்களுக்கு என்ன பண்ணிட முடியும்னு அமைதியாகிடுவேன்…” அவள் விழிகளில் திரண்ட கண்ணீரை துடைத்து விட்டான் அமிழ்தினியன்.


‘இன்றோடு தங்களுடைய அத்தனை பாரங்களும் குறையட்டும்’ என நினைத்தவாறு அமைதியாக அவளை நோக்கினான் அவன்.
 
Active member
Messages
107
Reaction score
31
Points
28
"எனக்காக யோசிச்சு யோசிச்சு ஒவ்வொண்ணும் செய்யுற என் அமிழனுக்கு என்னால பெருசா என்ன பண்ணிட முடியும் என் பெண்மையை கொடுக்கறதை தவிர… அதனால் தான் நான் என்னென்ன ட்ரீட்மென்ட் எல்லாம் இருக்கோ எல்லாத்தையும் ட்ரை பண்ணி, ஆரோக்கியமான உணவு, மருந்து மாத்திரைகள்னு எல்லாத்தையும் பாத்து பாத்து எடுத்துக்கிட்டு, நமக்கு தடையா இருந்த அந்த விஷயத்தை நம்பல விட்டு விரட்டி அடிக்க நினைச்சா நீங்க என்னடான்னா என்னை இப்பயெல்லாம் திரும்பிக் கூட பாக்கறது இல்லை…”


“...”


“மனசுல பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசைய வச்சிக்கிட்டு என்னை நேரா பாத்து கூட பேசாத உங்களை என்ன பண்ணலாம். அதுவும் தப்பு தான்னு வேற சொல்றீங்க. ஏன் அத்தான் வாழ்க்கை முழுசும் எனக்காக தியாகம் பண்ணிட்டே இருக்க போறீங்களா… நம்ப சந்தோஷத்துக்காக தானே மத்த எல்லாத்தையும் விட்டிங்க, இப்ப நீங்க சொன்ன வார்த்தைய காப்பாத்தணும்னு நம்ப சந்தோஷத்தை விட்டுக் கொடுக்க தயார் ஆகிட்டிங்களா?”


“இல்..ல ஜில்..லு…” என திக்கித் திணறியவனை காதலாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவனை முன்னிலும் அதிகமாய் நெருங்கி,


“பொண்டாட்டிக்கு பிரச்சனை இருக்குனு தெரிஞ்சா அவளை பிரிஞ்சி வேற கல்யாணம் பண்ணிக்கறவங்க மத்தியில வாழ்க்கை முழுசும் எதையும் எதிர்பார்க்காம இருக்கற என் அத்தானோட காதலை நான் இன்னமும் புரிஞ்சிக்கலனா என்னை விட முட்டாள் இந்த உலகத்துல யாருமே கிடையாது… நான் இப்ப ஃபிட்டா தான் இருக்கேன். நீங்க பயப்பட வேண்டாம்…” என்றதை ஏற்க முடியாமல் கைமுஷ்ட்டிகள் இறுக கோபமாய் நின்றான்.


“அத்தான், இல்லாத போது சரி. இருக்கும் போதுமா…” அவன் கன்னங்களை கைகளில் தாங்கியவாறு அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.


“ஜில்லு! என்னால உன்ன ஹர்ட் பண்ண முடியாது. நோ… வேணாம்…”


“பம்ச்! என்ன வேணாம்?” என்றவள், “அமிழா… ஐ நீட் டூ ஃபீல் யூ… உனக்கு நான் என்னையே தரணும்டா…” இருவரின் இதழ்களுக்கு இடையிலிருந்த ஒரு சதமமீட்டர் இடைவெளியில் அவள் முனங்கவும் அவனோ கிறங்கிப் போய் மயங்கி நின்றான்.


“அத்தான்! ஏன் இந்த கலக்கம்? என்னை எப்படி அணுகனும்னு உங்களுக்கு தெரியாதா? ம்ம்?”


“...”


“இதெல்லாம் வேணாம். அப்ப என் காதலோட கோட்பாடு என்ன ஆகுறது? நீ என்னை புரிஞ்சுக்கலை என் காதலை புரிஞ்சுக்கலை? இதான் முக்கியமா படுதா உனக்கு? ஈர்ப்பு வேற காதல் வேற… இதெல்லாம் இல்லாமையே நம்பலால வாழ முடியும். உன்னை காயப்படுத்த என்னால முடியாதுனு ஆயிரம் காரணத்தை தூக்கிக்கிட்டு வந்துராதிங்க அத்தான்…” என சிரிப்புடன் அவன் விழிகளில் தன் விழிகளை உறவாட விட்டவள்,


“உங்க காதல் எனக்கு முழுசா வேணும். என் காதலோட ஆழத்தை நான் உங்களுக்கு காட்டணும். நான் உங்களுக்கு சளைச்சவ இல்லனு நீங்க தெரிஞ்சுக்கணும். யூ ஹாவ் டூ டேஸ்ட் மை லவ் அத்தான்…” என்றதுடன் அவன் விழிகளுக்கு தன்னில் தாராளமாய் வழிவிட்டு அவள் துவள, அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு நின்றவனை அவள் மொத்தமாய் தடுமாற வைத்து தடம்மாற வைத்திருந்தாள்.


அவளிடம் அதற்கு மேல் எதுவுமே பேச முடியாமல் ஏதோவொரு மாய உலகில் களிப்புடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் அமிழ்தினியன். அவள் காட்டிய அதீத நெருக்கமும் தீவிர காதலும் அவனை முழுதாய் அவள் மேல் பைத்தியமாக்கி இருந்தது.


அவனுடைய பரிதவிப்பு பார்வையில் சிரிப்பும் குறும்புமாய் அவனை பார்த்தவளை கண்டு, “நான் கேக்க வந்த விஷயம் என்ன இப்ப நீ பேசுறது என்னடி? நானாவது பேசித்தான் உன்னை மயக்குறேன். நீ பாத்தே ஆளை மொத்தமா மயக்குறடி…” என தன்னில் அவள் மோத வேகமாக இழுத்து இறுக்கினான்.


“ஹ்ம்ம், நான் என் ஆளை தானே மயக்குறேன். அதுல என்ன தப்பிருக்கு…” மினுமினுப்பாய் தன் கண்களை வேறு சிமிட்டினாள்.


“என்..என்னை பாத்தா ஜோக்கர் மாதிரி தெரியுதா ஜில்லு உனக்கு?” அவளின் அணுகுமுறையில் அவனுடைய குரலும் மெல்ல மெல்ல துள்ளலுக்கு மீண்டது.


“ச்ச ச்ச, இல்லத்தான்! சாமியார் மாதிரி தான் தெரியுது…” என சொன்னவள் அவன் பிடியிலிருந்து நழுவி அவன் கைகளுக்கு எட்டாதவாறு அந்த அறையை சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்தாள்.


அவளை துரத்திப் பிடிக்க முயன்றவாறே, “என்கிட்ட வந்துரு ஜில்லு… இல்லனா உனக்கு கிடைக்கப்போற சேதாரத்துக்கு நான் பொறுப்பாக முடியாத” என சத்தமாய் அவன் மிரட்ட,


“ஆமா, பெரிய சேதாரம் ஒன்பது வருஷமா பொண்டாட்டிய பாத்துட்டு மட்டும் தானே இருந்தீங்க. அதானே உங்க சேதாரம்” தான் சொல்ல வந்ததை அவள் முடிக்க கூடவில்லை அதற்குள் அவளை தன்னில் சுற்றி வளைத்திருந்தவன் மெல்லிய நாணம் கலந்து நகைப்புடன், “ம்ஹும், இனியும் உன்ன பேச விட்டா… நான் உன் அத்தான் இல்லடி…” என்றவாறு அவளோடு மெத்தையில் சரிந்தான்.


காத்திருந்த தவிப்பு பார்வைகளும் பகிர்வுகளும் இருவரையும் மொத்தமாய் மூர்ச்சையாக்கவும் காதலை கொண்டாடி இணைவாய் களவாடிய பொழுதுகளெல்லாம் அவர்களுக்குள் தித்திப்பை அமிழ்ந்து முகிழ்ந்தது.


இதழுடைத்த மழை தீற்றல்களுக்கு இடையே செவி நுழைந்த குறும்பு சீண்டல்களில் அந்திவானமாய் சிவந்துக் கிடந்தன இருவரின் முகமும் தேகமும். தன் விழிகளில் ஆழ்ந்து ஒவ்வொரு முறையும் தன் நலனை உறுதி செய்து தன்னை மயிலிறகாய் வருடியவனின் நிதானத்தில் திரண்ட மென்மையில் சொக்கிப் போனது பெண் மனம்.


தன்னை முழுவதுமாக களவு செய்தவளின் ஈர்க்கும் விழிகளை ஆதி அந்தமாய் ஆழமாய் ஊடுருவியவனின் விழிகளிலிருந்து வழிந்த உவர்நீர் அவளுடைய விழிகளில் இறங்கி மோட்சம் பெற்று செந்தேனாய் தித்திக்க, பொங்கி வந்த தன் தேம்பலை அவனுடைய இதழ்களுக்குள் புகுத்தினாள் குழலி. இருவரின் ஸ்வாசமும் மற்றவரோடு கலந்து அனலை சேர்பித்து அந்த இடத்தை மேலும் வெப்பமயமாக்கியது. மனதிற்குள் இருந்த புழுக்கங்கள் எல்லாம் அனலில் சரிந்த நீர்துளியாய் உருக, அவள் மூக்கோடு தன் மூக்கினை உரசியவன் அவள் நெற்றியில் ஆழமாய் இதழ்பதித்தான்.


இருவரிடமும் தேங்கி நின்ற விழிநீர், அவர்களின் அளப்பறியா காதலை பகிர்ந்து, முகர்ந்து, சுகித்து, உவந்து, சுவைத்த பேரூவகை களிப்பில் திண்டாடியவர்களின் அப்போதைய நிலையினை கண்ணாடியாய் உணர்த்த இருவரும் தவிப்பாக மற்றவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டனர். வியர்வை சிந்திய இமைகளின் ஓரங்களில் மிஞ்சிய கண்ணீர் நேசப்பூவாய் சுவைக்கூட்டி பனிக்கூழாய் இனித்தது.


பேசுவதற்கு வார்த்தை எதுவும் வரவில்லை இருவரிடமும். உதட்டை நனைத்து மூச்சினை ஆழயிழுத்து தங்களை நிலைப்படுத்தவே நெடு நேரம் தேவைப்பட்டது. “ஜி..ல்லு…” அவளுடைய கைகளுக்குள் அடங்கி அவள் மார்பில் சுருண்டிருந்தவன் மெதுவாய் தன் தலை உயர்த்தி முகம் நிமிர்ந்து,


“ஐ’யம் மெஸ்மெரைஸ்ட்…” கழுத்து வரை எழும்பிய உணர்வுகளால் கரகரத்த குரலில் கூறினான்.


“வலிக்குதா? வலிச்சுதா ஜில்லு?” மீண்டும் மீண்டுமாய் அவளிடம் உருகிய நொடிகளுக்குள் தன் மனம் கனிய அமிழ்தினியன் கேட்க,


அவனையே இடைவிடாது பார்த்திருந்தவளின் பார்வையில் அவளை விட்டு விலகி எழ முயன்றவனை இழுத்து தன்மேல் சரித்து, “இன்னும் எத்தனை தடவை தான்டா கேட்ப நீ?” என சிரிப்புடன் கேட்டாள் மழைக்குழலி.


“நீ பதில் சொல்ற வரைக்கும் கேட்பேன்…” தன் பிடியிலேயே விடாப்பிடியாக நின்றவனின் நாடியை பிடித்திழுத்து அவன் மீசைமுடிகளை தன் பற்களால் அழுத்தமாக கடித்த குழலி,


“எனக்கு வலிக்கற அளவுக்கு என் அத்தான் எப்பவும் நடந்துக்க மாட்டாங்க… என்னை அவரால காயப்படுத்த முடியுமா என்ன?” தன் புருவங்களை ஏற்றியிறக்கி இதழ்களை சுருக்கியவள்,


“சரியான பயந்தாங்கோலி அமிழா நீ… இதுக்கு போய்… என்னலாம்…” என்றாள் சிரிப்புப் பொங்க.


“ஹ்ம்ம், பயம் தான். என் உயிரோட உயிரா கலந்த என் பொண்டாட்டிய நினைச்சு என்னோட தவிப்புகள் நிறைந்த பயம் அது. அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது டி” தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் மென்மையாக வந்தது அவன் பதில்.


“ம்பச், அமிழா… இப்ப தான் லாங் ஸ்பீச் எல்லாம் குடுத்து என் வீட்டுக்காரனை என் வழிக்கு கொண்டு வந்திருக்கேன். நீ மறுபடியும் தேரை இழுத்து தெருவில விட்டுராதப்பா” என்றவளின் அலறலில் வாய்விட்டு சிரித்தவன்,


“ஜில்லு… எதுக்கும் ஒரு வாட்டி நாளைக்கு போய் செக் பண்ணிட்டு வந்துறலமா…” தன் பேச்சோடு விழுங்கிய உமிழ்நீரில் பயத்தில் ஏறி இறங்கியது அவனுடைய தொண்டை குழி.


“என்ன செக் பண்ணனும்?”


“உன்ன தான்டி… ஆல் குட் தானே… ஒன்னும் பிரச்சனையில்லயே…” என அவளுடைய இரண்டு கன்னங்களையும் தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவனின் இதழ்களில் தன்னுடையதை அழுந்த இணைத்தவள் அவன் மீசை முடிகளை பற்களால் கடித்திழுத்தபடியே,


“அதுக்கு ஏன் ஹாஸ்பிடல் போகணும்? நீயே செக் பண்ணி சொல்லுடா அமிழா…” கிசுகிசுப்பாக அவன் கைகளில் தவழ்ந்தாள்.


“என்னடி ஜில்லு… அத்தான், அமிழானு மாத்தி மாத்தி கூப்ட்டு கலக்குற…” என அவன் கவனித்து கேட்க,


“அதையே இப்பதான் கண்டுப் பிடிச்சிங்களா அத்தான்… சூப்பர் இன்னும் நான் இந்த மக்குக்கு என்ன எல்லாம் சொல்லிக் குடுக்கணுமோ தெரியலையே!” என்று அலுத்துக் கொள்ள,


“என்னடி ரொம்பதான் அலுத்துக்குற?” அவள் கன்னம் கடித்து வினவினான் அமிழ்.


“பெரிய வாத்தியார்… சரியான மக்கு வாத்தியார்?”


“ஓய்! என்னடி வாய் நீளுது?”


“பின்ன, ஸ்கொயர் சர்கிள்னு இன்னுமே எல்.கே.ஜி பாடம் எடுக்க மட்டும் தான் தெரியும். வேற ஒன்னும் தெரியாது…”


தன்னை வேண்டுமென்றே கிண்டல் செய்கிறாள் என புரிந்தாலும் முறைப்பான பார்வையுடன், “மீ? எல்.கே.ஜி?” என கேட்டு பின் அவளை மயக்கும் மின்காந்தமான புன்சிரிப்புடன், “இனிமே தெரியும். நான் என்னென்ன பாடம் எல்லாம் எடுத்து இந்த மக்கு ஸ்டூடண்ட்டை புத்திசாலி ஆக்க போறேன்னு…” என குறும்பாக மொழிய, “அதெல்லாம் நாங்க புத்திசாலி தான்… நீங்க தான் பொண்டாட்டி மனசு கூட புரியாத மக்கு” என்றாள் இறுமாப்புடன்.


“மனசா? எங்க இருக்காம் அது? நான் பாக்கணும்…” மெழுகை உருக்கி விடும் மென்காந்த குரலில் அவளிடம் சரிந்து காதோரமாய் மயக்கத்துடன் முணுமுணுத்தவனின் வார்த்தையில் லஜையுற்று அவன் இதழ்களில் தன் விரல்களால் ஓங்கி பட்டென ஓரடி ஒன்றினை வைத்தாள்.


“ஒழுங்கா அடிக்க கூட தெரியல என் மக்கு ஸ்டூடண்ட்க்கு…” என அவளை வேண்டுமென்றே கேலி செய்து பின் நல்ல ஆசிரியராக அவனே அவளுக்கு பாடமெடுத்து குறிப்பு கொடுக்க, அவளும் நல்ல மனைவியாய் தன்னை மெருக்கேற்றிக் கொண்டு காதலுற தன்னவனை தித்திப்பாய் பின்பற்றினாள்.


மீளாத சூழலில் மாட்டிக் கொண்டு விடியும் வரையில் மீண்டும் மீண்டும் களைத்து, கலைந்து, தவித்து காதல் செய்தனர் அமிழ்தினியனும் அவனுடைய மழைக்குழலியும்!


“சரியான சாமியார் சாமியார்!” கிடைத்த இடைவெளியில் அவள் மெலிதாக அவன் காதுக்குள் முனங்க,


“ஏய், யாரை டி சாமியார்னு சொல்ற?” குனிந்து பார்த்தவனின் பார்வை இருவரின் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் அவளுக்கு சுட்டிக் காட்டியதில்,


“இதுக்கு அப்புறமும் நீ என்னை சாமியார்னு தான் சொல்லுவியா என்ன?” தன் கண்ணிமைகள் இரண்டையும் குறும்பாக சிமிட்டி கள்ளமாய் சிரித்தான்.


வெகு நாட்களுக்கு பிறகு கிட்டிய தனிமையில் இருவரும் மனம் விட்டு பேசிச் சிரித்தப்படியே பின்னரவு பொழுதில் தான் உறக்கத்தை தழுவி இருந்தனர். அடுத்த நாள் காலை, மணி ஏழை கடந்து விட்டதைக் கூட உணராமல் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்திலிருக்க,


அறைக்கதவு தட்டும் ஓசையில் தன் உறக்கத்திலிருந்து எழுந்தமர முயன்ற அமிழ்தினியன் தன் நெஞ்சில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கண்டு உற்சாகத்தோடு பொங்கி வழிந்த சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான்.


ஒரே நாளில் மாறியிருந்த இவர்களின் உறவின் பரிமாணம் அவனுக்கு பிடிக்க தான் செய்தது. பல நாட்களாய் மனதிற்குள் ஏங்கி ஏங்கி எழுப்பியிருந்த கனவுகளின் மிச்ச சொச்சமும் தன் கைகளில் வந்து தவழ்ந்த உவப்பில் முகமெல்லாம் மலர்ந்து விகசித்தது. மற்ற கணவன் மனைவியை போல அவர்கள் வாழ முடியாமல் போன ஏக்கம் இன்று தொலை தூரம் அவர்கள் இருவரையும் நகர்த்தி இருந்தது.


விடாது தட்டப்பட்ட கதவின் ஓசையில் தன் மகள்களின் நினைவு அவனை உசுப்ப, தன் மேலிருந்தவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு முகம் கழுவி வேறு உடையினை மாற்றி வந்தவனுக்கு இன்னமும் விழிக்காமல் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவளை கண்டு மனம் கனிந்துப் போனது.


படுக்கையறை கதவை சாற்றிவிட்டு வரவேற்பறை வந்து அவர்களின் அறை கதவினை திறந்தவன் அங்கே நின்றிருந்த தன் மகள்களை கண்டதும் சிரிப்புடன் தன் இரண்டு கைகளாலும் அவர்களை தூக்கிக் கொண்டான்.


“ஸாரிடா பொழில், அவி. அப்பா தூக்கத்துல இருந்து இப்ப தான் எழுந்தேன்” என சொன்னவன்,


“நீங்க ரெண்டு பேரும் நைட் நல்லா தூங்கனிங்களா?” என்று கேட்டு அவர்களின் பதிலினை பெற்றுக் கொண்டு, நேற்று சகோதரிகள் இருவரும் கண்டுக்களித்த அசைவூட்ட திரைப்படத்தினை பற்றி மழலை மொழியில் துள்ளலுடன் கூறிய ஸ்வாரசிய கதைகளை எல்லாம் இதழ் வளைத்த முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.


“குழி… எங்கப்பா?” என அவிரா தன் அன்னையை பற்றி வினவ,


“அம்மா குளிச்சிட்டு வருவாடா… அதுக்குள்ள நம்ப பால் குடிச்சிட்டு வந்துரலமா… வாங்க வாங்க!” என இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி கீழ் தளத்திலிருந்த சமையல் அறைக்குள் அவர்களோடு நுழைந்தான்.


காலை உணவினை தயார் செய்துக் கொண்டிருந்த தாமரை அவர்களை தான் பார்த்துக் கொள்வதாய் சொன்னதும் சம்மதமாய் தலையாட்டிவிட்டு வேகமாக தன் அறைக்குள் நுழைந்த அமிழ்தினியன் தன் மனைவியை உறக்கத்திலிருந்து எழுப்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.


“ஜில்லு… எந்திரி டி… பாப்பாங்க வந்துட்டாங்க… எழுந்து போய் குளி…” என அவள் கையினை பிடித்து எழுப்ப முயல அவனை இழுத்து தன் மீது கிடத்தியவள் அவனை தன்னோடு இறுக்கமாக சுகமாய் கட்டிக் கொண்டாள்.


“ஜில்லு…” அவள் காதுகளில் முனங்கிய மனம் கவர்ந்தவனின் வாசம் பிடித்து புன்னகைத்து அவனில் தன்னை புதைத்துப் பொருத்திருந்தாள் மழைக்குழலி.


“எந்திரி டி… பொழிலும் அவியும் இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்க… அதுக்குள்ள ரெடி ஆகு” என சற்று சத்தமாக அழைத்ததில் சட்டென தன் விழிகளை திறந்தவள் அவனை கடுமையாக முறைக்க,


“ஸாரி ஜில்லு… இப்பவே ரொம்ப லேட். டைமாச்சுடா கெட் அப்…” என்றான் தான் வாத்தியார் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்னுமே பிடிவாதமாக.


“எப்பவும் பொண்ணுங்க தான் முக்கியம் பொண்டாட்டி இல்ல…” சத்தமில்லாமல் இதழ்களுக்குள் முனங்கியவளின் பாவனையில் வாய்மூடி தன் சிரிப்பினை அடக்கியவன் தன்னை விட்டு விலகி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருந்தவளை தன் இரு கைகளாலும் அப்படியே தூக்கி காற்றில் நிறுத்தி அவள் இதழ்களில் ஆழ்ந்த முத்தமிட்டான்.


“ஐ லவ் யூ ஜில்லு…” என்ற அமிழ்தினியன், “நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மட்டுமில்ல. அப்பா அம்மாவும் கூட. அதுக்கு ஏத்த மாதிரி தான் இரண்டு பேரும் நடந்துக்கணும்…” கனிவாய் இயம்பினான்.


“அதுக்குனு தனியா க்ளாஸ் போகணுமா என்ன?”


“ஹ்ம்ம், அகுக்கெதுக்கு தனியா க்ளாஸ் எல்லாம்? நானே இன்னைக்கு நைட் உங்களுக்கு சொல்லி தரேங்க ப்ரோஃபஸர் மேடம்”


“வாய்… வாய்…” என முறைத்துப் பார்த்தவள், “நாம எப்பவும் இப்படி தானே இருப்போம். அப்பறம் உங்க பொண்ணுங்க வந்தா என்ன? எதுக்கு இவ்வளவு ஆர்பாட்டம் பண்றீங்க அத்தான்…” என புரியாமல் கேட்டவளை குறும்புகள் பொங்க ஆக்கிரமித்தவன்,


“எப்படி, இப்படியே அவங்க முன்னாடி வர போறியா…” என்றதும் தான் தன் நிலையையே உணர்ந்தாள் மழைக்குழலி. திடீரென கன்னம் நுழைந்த வெட்கம் அவன் பார்வையில் அவளை மொத்தமாய் பிடுங்கித் தின்றது.


வேகமாய் அவனிடமிருந்து விலகியவள் தன்னை எதைக் கொண்டு அடிக்க என தெரியாமல் தவிக்கையில் அந்த அறையின் கோலம் கண்டு மேலும் அதிர்ந்தாள். விழிகள் விரிய தன்னை பார்த்து சிவந்த மனைவியின் பார்வையில் பித்தாகிப் போனவன்,


“எனக்கொண்ணும் அப்ஜெக்ட்ஷன் இல்ல ஜில்லு. நாள் முழுக்க கூட நீ இப்படியே இரு…” என்று சொல்லியதை கேட்க அவள் அங்கு நிற்கவில்லை. வேகமாக ஓய்வறைக்கு ஓடிச் சென்று கவனமாய் கதவடைத்துக் கொண்டாள்.


“மேடம் மறுபடியும் இங்க தான வந்தாகனும்…” என கத்தி சொன்னவன் அந்த அறையை ஒழுங்குப் படுத்தி முடிக்க, அடுத்து கிடைத்திருந்த அவனுடைய நேரங்களை மகள்களும் மனைவியும் சூறையாடல் செய்திருந்தார்கள்.


நீள்விருக்கையில் அமர்ந்திருந்த மனைவியின் கால்களில் தன்னை சாய்த்தவாறு கீழே அமர்ந்து குழலியின் வலது கால் பாதத்தினை இதமாய் தன் இரண்டு கைகளாலும் பிடித்துவிடப்படியே தன் இரண்டு பக்கங்களிலும் அமர்ந்துக் கொண்டு தங்களின் பள்ளி கதைகளை ஆர்வமாக பேசிக் கொண்டிருந்த தன் மகள்களான பொழில் மற்றும் அவிராவின் மேலேயே தன் கவனத்தை பதித்த அமிழ்தினியன் பூர்ண நிறைவோடு இதமாய் முறுவலிக்கவும் தன்னை கவர்ந்திழுத்து வசீகரிக்கும் கணவனின் புன்னகையில் காதல் மனம் சுருள, வாஞ்சையோடு அவனை புன்சிரிப்புடன் தன் விழிகளால் தொடர்ந்தாள் மழைக்குழலி.


‘சுபம்’
 
Active member
Messages
107
Reaction score
31
Points
28
வணக்கம் பூக்களே,


முதல்ல ஒரு பெரிய சாரி... கதையை அப்படியே ஆறு மாசமா கிடப்புல விட்டுட்டு போயிட்டேன். என்னையும் நம்ப கதையையும் தேடுனவங்களுக்கு ஒரு பெரிய சாரி அண்ட் ரொம்ப நன்றி!


பூக்களை விரும்பா வேர்களில்லை கதையை ஒருவழியா நல்லபடியா முடிச்சிட்டேன். கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூஸ்.


கதையோட நிறை குறைகளை மறக்காம இங்க வந்து சொல்லுங்க அப்பதான் அடுத்த கதை எழுதும் போது எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். தொடர்ந்து என்னோடு பயணித்து எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.


கதை 18.04.26 அன்று வரை தளத்தில் இருக்கும். அடுத்த கதையோடு சீக்கிரமே வருகிறேன். மிக்க நன்றி மக்களே!



- அபிராமி இளவரசன் ♥️
 
Top