• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,339
Reaction score
4,005
Points
113
நேரம் – 50 💜

“தம்பி, என்னப்பா நீங்க?” வாயிற்காவலாளி முதுகில் ஒரு பையும், வலகை விரல்களோடு பிணைந்த தள்ளும் பையோடு வந்து நின்ற பரிதியை சங்கடத்துடன் பார்த்து குடியிருப்பிற்குள்ளே விட மறுத்தார்.

‘சே... என் பொண்டாட்டியை கூட சமாதானம் பண்ணிடலாம் போல. இவர் ரொம்ப சின்சியரா இருக்காரு!’ என முனங்கியவன், அலைபேசியை எடுத்து வாணியின் இரண்டாம் எண்ணிற்கு அழைத்தான். இருமுறை அவள் அழைப்பைத் துண்டித்தாள்.

‘அர்ஜெண்ட் வாணி. பிக்கப்!’ ஒரு செய்தியை தட்டிவிட்டு மீண்டும் பரிதி அழைக்க, உடனே அதை ஏற்றவள், “ஹலோ...” என்றாள்.

“மேடம்... நான் வாட்ச்மேன் பேசுறேன். பரிதி தம்பி வந்திருக்காரு. ட்யூப்ளிகேட் சாவி கேட்குறாரு. உள்ளே விடவா மேடம்?” அவர் கேட்டதும், சில நொடிகள் யோசித்தவள், “சாவி கொடுங்கண்ணா!” என்றாள்.

அவரும் சரியென்றுவிட்டு பரிதியிடம் மாற்றுச் சாவியைக் கொடுக்க, அவன் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கிட்டத்தட்ட பத்துமணி நேரம் உட்கார்ந்தே பயணித்ததில் அவனுக்கு உடம்பு வலிக்க, முகப்பறையிலிருந்த பீன் பேக்கில் தலையை சாய்த்து உடலை வெளியே நீட்டினான். பின்னர் சோர்வுற்ற கண்கள் அதன் இமையுடன் இணைந்தன.

வாணி அருகேயிருந்த துர்க்கை அம்மன் கோவிலில் இருந்தாள். அவள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்தான் இவளை அழைத்து வந்தது. கர்நாடாகாவில் ஏதோ விசேஷ நாளென அரசு விடுமுறை அன்று. சரியென மாலை குளித்து கிளம்பி கோவிலுக்கு கிளம்பினாள்.

சுரிதார் அணிய சென்றவளை, “ரெட் சேரி கட்டிக்கோங்க வாணி!” என அந்தப் பெண் வற்புறுத்தி கூற, இவளும் சரியென சிகப்பு புடவையை அணிந்து சென்றாள். பூஜை முடிந்து வாணி வீடு திரும்ப ஒருமணி நேரமானது.

வீட்டிற்கு வந்ததும் கதவைத் திறந்தாள் அவள். வெறுமனே சாற்றி வைத்திருந்தான் பரிதி.
வீடு மொத்தமும் அடர் இருட்டில் மூழ்கியிருக்க, பொத்தானை சொடுக்கி மின்விளக்கை உயிர்ப்பித்தாள். யாரோ ஒரு நெடியவன் பாதி கூடத்தை அடைத்து படுத்திருக்க, அவள் திடுக்கிட்டுப் போனாள்.
ஒருநொடி மனம் பரிதியின் இருப்பை உள்வாங்காது அதிர, பின்னர் அவன்தான் என்பதை உணர்ந்து மூச்சை வெளியிட்டாள்.

பரிதி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்‌. கதவை மெதுவாய் சாற்றிவிட்டு வாணி அறையை நோக்கிச் செல்ல, இமையை உடுருவிய வெளிச்சத்தில் மெல்ல கண் விழித்தான் அவன்.

வெற்று அறையில் வாணியின் காலடி சப்தம் மட்டும் மெலிதாக தெளிவாகக் கேட்க, அவன் புலன்கள் கூர்மை பெற, அனிச்சையாய் அவளை நோக்கித் திரும்பினான். அடர் சிவப்பில் பச்சைக்கரை வைத்த புடவை உடுத்தி, தலைக்கு குளித்து முடியை விரித்துவிட்டு கதம்ப பூவை வைத்திருந்தாள். அவளை அப்படி‌பார்த்ததும் இவன் முகம் மலர, உதட்டில் புன்னகை பூத்தது. ஆர்வமாய் எழுந்தமர்ந்தான்.

வாணி உடை மாற்றிவிட்டு முடியைத் தூக்கிக் கொண்டையிட்டவாறே வந்தாள். இவனுக்கு எதிரே அமர்ந்தவள், “என்ன வேலை உனக்கு இங்க? எதுக்காக வந்த?” என நேரடியாக கேட்டாள்.

“சென்னைல ஃப்ளைட் கிடைக்கலை வாணி. பெங்களுர்லதான் கிடைச்சது. சரின்னு இங்க தங்கலாம்னு வந்தேன்!” என அவன் இழுத்துக் கூறிய பொய்யை அவள் நம்பவில்லை.

“நான் என்ன லாட்ஜா வச்சு நடத்துறேன்? போறவன், வர்றவன் எல்லாம் வந்து தங்கிட்டுப் போக?” என அவள் கேலியாக கேட்டாள்.

“ப்ம்ச்... நான் போறவன் வர்றவனா வாணி? ரொம்ப பண்ணாத. நான் இங்க வரக் கூடாதா?” என குரலை உயர்த்தினான் அவன்.

“வரக்கூடாது. நீ ஏன் இங்க வரணும். உனக்கு ஸ்டே பண்ணணும்னா ஏதாவது ஹோட்டலதான் பண்ணணும்.‌ தனியா இருக்கப் பொண்ணு வீட்ல உனக்கென்ன வேலை?” அவள் அழுத்தமாகக் கேட்டாள்.

“ச்சு... நான் ஒரு ப்ரெண்டா வந்திருக்கேன் வாணி. அபார்ட் ஃப்ரம் அவர் அக்ரீமெண்ட் மேரேஜ், நம்ப நல்ல ப்ரெண்ட்ஸா இருந்தோம்ன்றதை மறந்துடாத. நீ எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்!” என்றவனை எள்ளலாகப் பார்த்தாள் வாணி‌.

“அது சரி...நான் உன்னை ப்ரெண்டா எல்லாம் பார்க்கலையே!” அவள் நிறுத்தவும், பரிதி அவள் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தான்‌.

“உன்னை ஒரு நல்ல தம்பியா பார்த்தேன். உனக்கு கூட என்னோட இருந்தா அக்கா ஃபீல்னுதானே சொல்லுவ?” நக்கலாக கேட்டாள் அவள்.

அதில் முகத்தைக் கோணியவன்,
“பினாயில் ஏதும் இருந்தா எடுத்துட்டு வா வானு. பேசாம அதை வச்சு வாயைக் கழுவிடுறேன். அப்போவாது நீ இதை விடுறீயான்னு பார்ப்போம்!” என்றான் கடுப்பான குரலில்.

“அதெத்துக்கு வாயைக் கழுவிட்டு. பேசாம ஒரு பாட்டில் பினாயில் வாங்கித் தரேன். குடிச்சிடு, நானாவது நிம்மதியா இருப்பேன்!” என கடிந்துவிட்டு அவள் எழுந்து செல்ல,

“கொலை பண்றளவுக்கு என் மேல உனக்கு வன்மமா? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். எவ்ளோ தூரத்துலருந்து உன்னைப் பார்க்கலாம்னு ஆசையா ஓடி வந்தா என்னைத் தொரத்துறதுலயே குறியா இருக்க நீ!” என அவன் முகத்தைச் சுருக்கி அவளைக் குற்றம் சாட்டினான்.

“நான் உன்னை வர சொன்னேனா? இல்ல தானே? அப்புறம் ஏன் வந்து தொணதொணக்குற. ஏதோ பெரிய உத்தமன் மாதிரி உனக்கு வேணாம்னா எனக்கும் வேணாம்னு சொன்ன?” அவனை முறைத்தாள் வாணி.

“வானு... சாப்பிட்டு தெம்பா சண்டை போடலாம். இப்போ எனக்கு செம்ம பசி. லஞ்ச்க்கு பஸ்ஸை நிறுத்தும்போது நான் தூங்கிட்டேன். அப்புறம் எங்க சாப்பிட. பட்டினியா கிடந்தேன். ஏதாவது செஞ்சு கொடு!” அவன் கேட்டதும், “முடியாது!” என ஒற்றை வார்த்தையில் மறுத்தாள் அவள்.

“ஐயோ... பசிக்கிதே. பசியில வயிறே வலிக்குது!” வயிற்றைப் பிடித்து உடலைக் குறுக்கிக் கொண்டு அவன் பொய்யாய் கூற,

“சீ... நடிக்காத. அப்பட்டமா தெரியுது!” அவள் எரிச்சலாக கூற, அதில் ரோஷம் வந்து நிமிர்ந்து நின்றான்‌ பரிதி.

“வானு.... நிஜமா பசிக்குது. ப்ளீஸ்!” முகத்தைச் சுருக்கி அவன் கெஞ்ச, தலையிலே அடித்தவள், “போய்த் தொலை. ஏதாவது குக் பண்றேன்!” என்றாள் கடுப்புடன்.

“ஒன்னும் அவசரம் இல்ல வானு. பொறுமையா செஞ்சா கூட டேஸ்டா பண்ணி எடுத்துட்டு வா!” என்றவன், கூடத்திற்குச் செல்ல, பத்து நிமிடத்தில் வாணி உணவை சமைத்து எடுத்து வந்தாள்.

“வாவ்! டென் மினிட்ஸ்ல குக் பண்ணிட்டீயா வாணி?” என்றவன் ஆர்வத்துடன் பாத்திரத்தை திறக்க, உள்ளே உப்மா அவனைப் பார்த்து சிரித்தது‌.

முகத்தை அஷ்டக் கோணலாக்கியவன், “இதுக்கு நீ என்னைப் பட்டினியா போட்டிருக்கலாம் வாணி!” என்றான் ஆதங்கத்துடன். ஆசையாக அவள் கைமணத்தில் சாப்பிட அமர்ந்தவனுக்கு உப்மாவைப் பார்த்துகீ கடுப்பானது.

“இஷ்டமிருந்தா சாப்பிடு. இல்லைன்னா பட்டினியா படு.‌ எனக்கொன்னும் பிரச்சனை இல்ல. எடுத்து வச்சுட்டு காலைல சூடு பண்ணித் தருவேன்!” அவள் அசட்டையாக கூற,

‘பாவி... சோத்துல கை வச்சுப் பழி வாங்குறா!’ என முனகிக் கொண்டே சாப்பிட்டான். மற்றொரு கிண்ணத்தில் என்னவோ இருந்தது. இவன் திறந்து பார்க்க, வேர்க்கடலை சட்னி செய்திருந்தாள். அதை கொஞ்சம் வைத்து உப்மாவில் தோய்த்து வாயிலிட்டான். முகம் நொடியில் மலர்ந்தது.

“என்ன இவ்ளோ டேஸ்டா இருக்கு உப்மா, உன் கையால செஞ்சதாஷ உப்மா கூட இவ்வளோ டேஸ்ட் தருதே வாணி. கடலை பருப்பு சட்னியா இது? செம்ம போ. நான் எத்தனையோ ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன். ஆனால், உன் கைமணம் மாதிரி வர மாட்டுவது வாணி!” சிலாகித்து உண்டவன், “இதுக்காவே காலம் முழுக்க உன் கூட இருந்துடலாம் போல!” என்றான்.

அவனை நக்கலாகப் பார்த்த வாணி, “அதானே... உனக்கு சமைச்சு போட, ஆயா வேலை பார்க்கத்தானே நானு? உன் ஆளு மதிகிட்டே கூட என்னை மெய்ட்னு தானே சொல்லி வச்ச?” என்றாள் எரிச்சலாக.

வாயில் உப்மாவோடு தலையை இடம் வலமாக அசைத்தவன், “அதான் அப்பவே நான் சாரி கேட்டேனே வாணி. மத்தபடி சாப்பாட்டுக்காகலாம் உன்னைத் தேடி வரலை. நிஜமா பிடிச்சுப் போய்தான் வந்தேன்!” என அவன் மேலும் விளக்கம் கொடுக்கும் முன்,

“உன் கம்பி கட்ற கதையெல்லாம் இங்க வேணாம். இதான் உனக்கு லாஸ்ட். இங்க வந்து தங்கலாம்னு எண்ணத்தோட இனிமே வரக் கூடாது நீ. இப்போ சாப்பிட்டு, பாத்திரத்தை எல்லாம் வாஷ் பண்ணிடு. ஹால்லதான் படுக்குற. ரூம்குள்ளே வரக் கூடாது!” என்றவாறே எழுந்தாள் அவள்.

“ஹே வாணி... என்னை சந்தேகப்படுறீயா நீ? ரெண்டு வருஷத்துல எத்தனை நாள் உன் கூட ஒரே ரூம்ல இருந்திருக்கேன். என்னைக்காவது நான் உன்னை தப்பா பார்த்திருக்கேனா?” அவன் குரலை உயர்த்த,

“என்கிட்ட வாய்ஸை ரெய்ஸ் பண்ற வேலை வச்சுக்காத!” எனக் கண்டித்தவள், “ஆமா. ஆமா நீ ரொம்ப கன்னியமனா பையனாச்சே. அக்காவைப் போய் யாராவது தப்பா பார்ப்பாங்களா? நீ என்னை அக்காவாதானே நினைச்சுக்கிட்டே?” என எள்ளலாகக் கேட்டாள். பரிதி அவளைப் பாவமாகப் பார்த்தான்.

“இந்த மாதிரி பாவமா பார்த்து காரியம் சாதிக்கலாம்னு நினைக்காம சாப்பிட்டு படு. ரூம்குள்ளே காலெடுத்து வச்ச தோளை உரிச்சுடுவேன்!” என்றாள் மிரட்டலாய்.

“ஏன் வாணி... போன வாரம் எவ்ளோ பாசமா பார்த்துக்கிட்டே என்னை? நான் கேட்டதெல்லாம் செஞ்சு கொடுத்த. கேர் பண்ணியே, அதெல்லாம் அப்போ பொய்யா?” மூக்கு விடைக்க கேட்டான்.

“அது பாசம் இல்ல, பரிதாபம். பாவம், என்னால நீ அடி வாங்கிட்டீயேன்னு பாவம் பார்த்து உன்னைக் கேர் பண்ணேன். மத்தபடி ஐ வாஸ் எமோஷ்னல் தட் டைம். உனக்காகன்னு நீயா நினைச்சுக்காத. உன் பேரண்ட்ஸ், என் அத்தை, மாமாவெல்லாம் ஏமாத்திட்டேனேன்னு ஒரு கில்ட். தப்பு பண்ணிட்டோம்னு தோணுனதால அழுதேன். மத்தபடி உனக்காக நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடலை. அதனால பொங்காத!” என்றாள் எரிச்சலாக.

“ஓஹோ... அடி வாங்குனாதான் உனக்கு என் மேல பாசம் வருமா? உனக்கொன்னு தெரியுமா வாணி? இன்னும் என் முதுகுல புண்ணு சரியாகலை. இன்னும் கொஞ்சம் காயம் இருக்கு!” என்றான் அவளைப் பிடித்து வைக்கும் நோக்கோடு. வாணி காதிலே வாங்காமல் நடந்தாள்.
 
Administrator
Staff member
Messages
1,339
Reaction score
4,005
Points
113
“வாணி... நீ சாப்பிடலையா?” படக்கென நினைவு வந்து அவன் கேட்டதும், நக்கலாக அவனைப் பார்த்தாள் வாணி. பேசிக் கொண்டே உப்மாவை அவன் காலி செய்திருந்தான்.

அவள் எள்ளலை உணர்ந்து அசடு வழிந்தவன், “நான் உனக்கு ஹோட்டல்லருந்து ஏதாவது வாங்கிட்டு வரவா?” எனக் கேட்டான்.

“வேணாம்... கோவில்ல பிரசாதம் சாப்பிட்டேன். அதுவே போதும்‌ எனக்கு...” என வாணி அறையின் கதவைத் தாழ் போட்டாள்.

‘ரொம்பத்தான்!’ என உதட்டைக் கோணியவன், பாத்திரங்களை கழுவி கவிழ்த்திவிட்டு வந்து படுத்தான். புதிதாய் மெத்தை வாங்கி வைத்திருப்பாள் என பரிதி எண்ண, பழைய போர்வையும் தலையணையும் அவனைப் பார்த்து சிரித்தன.

‘ரொம்ப அசிங்கப்படுத்துறாளே? இப்படிலாம் பண்ணா விட்டுடுவேன்னு நினைக்கிறாளோ?’ என யோசனையுடன் தூங்கிப் போனான்.

காலையில் வாணி விழித்துவிட்டாலும் படுக்கையில் வெறுமனே கண்ணை மூடிப் படுத்திருந்தாள். எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருப்பது என சலிப்புடன் எழுந்தாள். எந்த வேலையும் இல்லை. சமைத்து, சாப்பிட்டு உண்டு எழுவாள். இன்றைக்கு இலவச இணைப்பாக பரிதி.

உண்மையில் பரிதி தொணதொணத்துக் கொண்டே இருந்தான். ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தாலும், மறுபுறம் ஒருவன் தன்னோடு இருக்கிறான் என்ற உணர்வை மனம் அனுபவித்தது. தனிமையின் கொடுமை அவளை வதைத்தது‌. எழுந்து சென்று முகம் கழுவி வந்தவள், ஒரு கோப்பை தேநீரோடு தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்ந்தாள். ஏதோ செய்தி ஓடிக் கொண்டிருந்தது. சும்மாவேனும் பார்வையை அதில் பதித்திருந்தாள்.

பரிதி தொலைக்காட்சி சப்தத்திற்கும் அசராமல் உறங்கிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் ஏதொவொரு பாட்டை வைத்தாள்‌. வசீகரா என் நெஞ்சினிக்க என்ற பாடல் ஒலிபரப்பாகவும், சப்தத்தைக் கூட்டினாள். பரிதிக்கு உறக்கம் கலைந்தது.

‘காலங்காத்தால நம்ப வீட்ல இந்தப் பாட்டெல்லாம் ஓடாதே!’ என்ற நினைப்புடன் எழுந்தமர்ந்தவன், கண்ணைக் கசக்கினான். மங்கலாகத் தெரிந்தாள் வாணி. விழிகளை சிமிட்டி அவளைப் பார்த்தான். மெல்லிய குரலில் பாடலை மெதுவாகப் பாடிக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்திருந்தாள். சின்ன சிரிப்புடன் எழுந்து போர்வையும், தலைணையும் சுருட்டினான். விறுவிறுவென வாணியின் அறைக்குள்ளே நுழையச் சென்று, பின்னர் வாயிலிலே நின்றுவிட்டவன், கையிலிருந்ததை உள்ளே தூக்கியெறிந்தான்.

படக்கென அந்த சப்தத்தில் திரும்பிய வாணி, “ஒழுங்கா அதை மடிச்சு வைக்கிற!” என்றாள் அதட்டலாய்.

“நீதானே டீ ரூம்க்குள்ள வந்தா காலை வெட்டுவேன், தோளை உரிப்பேன்னு சொன்ன. இப்போ என்னடான்னா உள்ளே போன்னு சொல்ற. நைட்டு ஒரு ரூல்ஸ். டே டைம்ல ஒன்னா‌. தெளிவா சொன்னாதானே புரியும்...” என அவளை வம்பிழுத்துக் கொண்டே சென்று காலைக் கடன்களை முடித்து வந்தான். வயிறு கபகபவென பசித்தது.

வெறும் பால் மட்டுமே இருக்க, அதை சுட வைத்து தேநீர் தயாரித்தவன், அவளுக்கும் ஒரு கோப்பை எடுத்து வந்தான். வாணி அதை தொடவே இல்லை.

“கஷ்டப்பட்டு உனக்காகத்தான் டீ போட்டேன் வாணி. எடுத்து குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு!” இவன் கூறியதும்,

“இந்த ரெண்டு வருஷத்துல என்னைக்காவது எனக்கு டீ, காபி போட்டு கொடுத்துருக்கீயா பரிதி?” என அழுத்தமாகக் கேட்டாள் அவள். அவன் இல்லையெனத் தலையை அசைத்தான்.

“அதான் நீ... அதுதான் உன்னோட ஒரிஜினல் கேரக்டர். எனக்காக நீ நடிக்க வேணாம். எனக்கு அது சுத்தமா பிடிக்கலை!” என்றாள் முகத்தைச் சுளித்து.

“ஒரு டீ கொடுத்ததுக்கு இவ்ளோ பேச்சு!” என அவனுக்கு கடுப்பானது‌. சிந்தாமணி அழைக்கவும், வாணி அவரிடம் பேசினாள்.

“இல்லத்த... இனிமேல்தான் சமைக்கணும்!” என இவள் கூற்றிற்கு,

“உன் புருஷன் அங்கதானே இருக்கான். பேசாம அவனை ரெண்டு நாள் பட்டினி போடு வாணி. வாய்க்கு ருசியா ஆக்கிப் போட்டாதான் அவனுக்கு திமிர் அதிகமாகுது. உள்ளே விடாம பத்தி விட்டிருக்க வேண்டியதுதானே?” அவர் சின்ன குரலில் மருமகளிடம் மனைத் திட்டியவாறே அவள் மனத்தில் என்ன இருக்கிறது என அறிய முயன்றார்.

“எனக்கும் குக் பண்ண மூட் இல்லத்தை. ஏதாவது ஆர்டர் பண்ணித்தான் சாப்பிடணும்!” என்றவள், அவரின் பிற்பாதி பேச்சைத் தவிர்த்துவிட்டாள். அவர் நொடித்துக் கொண்டார். சிந்தாமணி பேசி முடித்ததும், இவளுக்குப் பசித்தது. அலைபேசியை எடுத்து என்ன உணவு இப்போது கிடைக்கும் எனப் பார்த்து, பூரி கிழங்கு, மசால் தோசை என இரண்டையும் தேர்வு செய்து பணத்தை செலுத்தினாள். இருபத்தைந்து நிமிடத்தில் உணவு வீட்டிற்கு வரும் என நேரம் காண்பித்தது.
பரிதி குளித்து வந்தான்.

“வாணி... எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியதிருக்கு. நீயும் வந்தா நல்லாருக்கும். போய் வாங்கிட்டு வருவோம். வர்றீயா?” தலையை துவட்டிக் கொண்டே கேட்டான். தனது வழலைக் கட்டியின் வாசனை அவனிடமிருந்து வந்து வாணியின் நாசியை நிரடியது.

அதில் எரிச்சலாக அவனைப் பார்த்தவள், “நான் எங்கேயும் வரலை!” என்றாள் சுள்ளென.

“ஏன்... இப்படி வீட்டுக்குள்ளே தனியா உக்கார்ந்து என்ன பண்ண போற. போ... போய் கிளம்பி வா. பர்சேஸ் பண்ணிட்டு லஞ்சையும் முடிச்சிட்டு வருவோம்!” என அவள் கையைப் பிடித்து எழுப்ப முயன்றவனை ஒற்றை விரலைக் காண்பித்து தடுத்துவிட்டாள்.

“உனக்கு திங்க்ஸ் வாங்கணும்னா நீ போ. நான் என்ன உனக்கு வேலைக்காரியா?” கடுப்புடன் அவள் கேட்க, இவன் பெருமூச்சை வெளியிட்டான்.

‘எதுக்கும் அசர மாட்றாளே. எப்படித்தான் ரெண்டு நாள்ல இவளை சமாதானம் பண்ணப்‌ போறேனோ?’ கவலை அரித்த மனத்துடன் பரிதி கிளம்பினான்.

உணவு வந்ததும், “சாப்பிட்டு போ. உனக்கும் சேர்த்துதான் ஆர்டர் போட்டேன்!” என வாணி அவனைத் தடுக்க, பேசாமல் சாப்பிட்டான். பின்னர் மீண்டும் அவளை ஒருமுறை அழைத்துப் பார்த்தான். வாணி அசையவேயில்லை. சரியென வெளியே கிளம்பினான் பரிதி.

பெரிதாய் ஒன்றுமில்லை. காதொலிப்பான், அலைபேசி திரையை மாற்ற, அதற்குப் புது உறை போட, சின்ன சின்ன பொருட்கள் வாங்க எனச் சுற்றினான். அப்படியே தனது தோழனையும் பார்த்துவிட்டு வந்தான். நேரம் மதியத்தை தொட்டிருந்தது‌.

அவன் வீட்டிற்குள் நுழைய, காலையில் எப்படி அமர்ந்திருந்தாளோ, அதே நீள்விருக்கையில் காலைக் கட்டிக்கொண்டு முகம் புதைத்து சுவரை பார்த்திருந்தாள் வாணி. அருகே ஒரு தமிழ் புத்தகம் பாதி படித்துவிட்டு, பின் அந்தப் பக்கத்தின் நுனியை மடித்து குப்புறக் கவிழ்த்தியிருந்தாள். இவன் வந்ததை உணர்ந்தாளா இல்லையா எனக் கூட அவனால் கண்டறிய முடியவில்லை. ஏதோ ஆழ்ந்து சிந்திக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

தான் வாங்கி வந்ததை கீழே வைத்தவன், “வாணி...” என்றான். அதில் சிந்தை கலைந்தவள், தலையை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

“ஏன் ஒருமாதிரி இருக்க நீ? என்ன யோசனை அப்படி?” அவன் கேட்டதும், “சமைச்சு வச்சுட்டேன். நீ போய் சாப்பிடு!” என்றாள்.

“ப்ம்ச்... இப்போ எனக்கு பசிக்கிதுன்னு நான் சொன்னேனா, நீ ஏன் இப்படி உக்கார்ந்திருக்க? அதுக்குப் பதில் சொல்லு!” என அவளருகே அமர்ந்தான். வாணி பதிலுரைக்கவில்லை.

“வானு... நமக்குள்ளே நடந்த பிரச்சனையை மறந்துடு. அதுக்கு முன்னாடி நம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தோம். அப்படி நினைச்சுட்டு என்கிட்டே நீ ஷேர் பண்ணு!” பரிதி மென்குரலில் கேட்டதும், அவனை ஒரு பார்வை பார்த்தாள் வாணி. அதில் என்ன இருந்ததென அவனுக்குத் தெரியவில்லை.

இவன் தோளோடு அவளை அணைக்கச் செல்ல, “தொடாத பரிதி.‌ தள்ளி உக்காரு. எனக்குப் பிடிக்கலை!” என்றாள் அழுத்தமாய்.

‘ச்சு...” என சலித்து தங்களிடையே இடைவெளியை அதிகப்படுத்தியவன், “நான் தொடலை. நீ என் கேள்விக்கு ஆன்சர் பண்ணு...” என அவள் முகம் பார்த்தான்‌.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “தனியா இருக்கது ரொம்ப கஷ்டமா இருக்கு பரிதி!” என்றாள் சுவரை பார்த்தவாறே. அந்தக் குரலிலிருந்த ஏக்கத்தில் இவனுக்கு மனம் பிசைந்தது.

“தனியா வாழ்றது ரொம்ப கொடுமையா இருக்கு. காலைல என் முகத்தை நானே பார்த்துக்கிட்டு, நானே சமைச்சு சாப்பிட்டு அரக்கப்பறக்க வேலைக்கு ஓடுறேன். ஈவ்னிங் வீட்டுக்குள்ள நுழைஞ்சா ஒரு காபி குடிக்கிறீயான்னு கேட்க கூட ஆள் இல்லை. ஏன்... எனக்கு பேசத் தெரியும்னறதே மறந்து போச்சு. யாருமே இல்லாத வீட்ல யார் கூட பேசுறது. டீவி அதுபாட்டக்கு ஓடுது. புக் படிச்சாலும் புடிக்க மாட்டுது. எனக்குன்னு யாராவது வேணும்னு தோணுது. நான் என்ன தப்பு பண்ணேன், தனியா வாழ? குழந்தை, குடும்பம் புருஷன்னு வாழலாம்னு முடிவு பண்ணிருக்கேன்!” என்றாள் உறுதியானக் குரலில். பரிதி அவளைப் பரிவுடன் பார்த்தான். அவளின் இறுதிக் கூற்றில் அவனுக்கு நிம்மதி அடர்ந்தது.

“அதான் வானு நானும் சொல்றேன். தனியா கிடந்து ஏன் கஷ்டப்படுற. வேலையை பொள்ளாச்சிக்கு மாத்திட்டு போ. அங்க அம்மா, அப்பா, கீர்த்தி, அஜித்னு அத்தனை பேர் இருக்காங்க. அவங்களோட இருந்தா நீ லோன்லியா ஃபீல் பண்ண மாட்ட. வீக்கெண்ட்ல அற்பி வீட்டுக்குப் போ. அப்போதான் உனக்கு ரிலாக்ஸாக இருக்கும்!” என்றான் கனிவுடன்.

அவனைப் புரியாது தலையைத் தூக்கிப் பார்த்தவள், “உன் வீட்டுக்கு நான் ஏன் போகணும்?” எனக் கேட்டாள். அவன் விழித்தான்.

“ஒரு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் பரிதி. குழந்தையோட சிங்கிள் பேரண்டா இருந்தா கூட எனக்கு ஓகேதான். எப்படியும் நானும் டிவோர்சி தானே? அற்புதா குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும்போது ஆசையா இருந்துச்சு எனக்கும். அதான் குழந்தையோட யாராவது தனியா இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கும் பார்ட்னர் கிடைச்ச மாதிரியும் ஆச்சு. வீட்டை கலகலன்னு வச்சுக்க குழந்தையும் வந்துடும். எனக்கு தனியா இருக்க ஃபீலே இருக்காது!” என்றாள் வெகுதீவிரக் குரலில்.

படக்கென அதிர்ந்து எழுந்த பரிதி, “அப்போ தாலி கட்டி கூட ஒருத்தன் புருஷன்னு இருக்கானே, அவனை என்னப் பண்ண போற?” என சீற்றத்துடன் கேட்டான்.

“லூசா நீ? நம்ப போட்டது அக்ரீமெண்ட் மட்டும்தான். அது மேரேஜே கிடையாது. மோர் ஓவர் தாலி... ஹம்ம், அதான் உன் அருமைக் காதலி அத்து எறிஞ்சுட்டாளே. அப்புறம் என்ன நீ சென்டிமெண்ட் பேசிட்டு இருக்க?” என கடிந்தவள்,

“நீ ஊருக்குப் போனதும் மதி வந்து சாரி கேட்டு ரெண்டு சொட்டுக் கண்ணீர் விட்டா போதும், நீ அவளோட பேட்சப் ஆகிடுவ பரிதி. உனக்கு நான்லாம் ஒரு ஆளாவே தெரிய மாட்டேன். நான் எனக்கு லைஃப் லாங்க் ட்ராவல் பண்ணத்தான் பார்ட்னர் தேடுறேன். அழகா ஒருத்தி வந்ததும் என்னை விட்டுட்டுப் போக இல்ல!” என்றாள் கண்டிப்பான குரலில். பரிதிக்கு முகம்‌ மாறியது.

“நான் உன்கிட்டே ஒன்னு கேட்கவா?” அவன் அமைதியாக கேட்க, வாணி என்னவென்பதாய் பார்த்தாள்‌.

“நான் உன்னைப் பொய் சொல்லி ஏமாத்துனேனா? வாழ்க்கை முழுசும் உன் கூட நான் வருவேன்னு ப்ராமிஸ் பண்ணினேனா? நம்ப ரெண்டு பேரும் நல்ல ஹஸ்ப்ண்ட் அண்ட் வொய்பா வாழ்ந்துட்டு இருக்கும்போது மதி பின்னாடி போனேனா?” அவன் அவளை உறுத்துப் பார்த்தபடி கேட்க, அவளிடம் சில நொடிகள் ஆழ்ந்த அமைதி. பின்னர் இல்லையென்பதாய் தலையை அசைத்தாள்.

“சரி... அக்ரீமெண்ட் போடும்போது நான் என்ன சொன்னேன் உன்கிட்டே? இந்த டூ இயர்ஸ்ல எனக்கு யாரையும் பிடிச்சு போச்சுன்னா லவ் பண்ணி மேரேஜ் பண்ணிப்பேன்னு சொன்னேனா? இல்லையா?” அவன் கேட்டதும், முகம் மாறாதிருக்க சிரமப்பட்டவள், ஆமாம் என்றாள்.

“ஓகே... அப்போ நான் இந்த அக்ரீமெண்ட் மேரேஜ்ல என்ன தப்பு பண்ணேன்? எமோஷ்னலா உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேனா? இல்ல... நான் பண்ண தப்பு உன்கிட்ட ஹார்ஸா நடந்துகிட்டது. உன் காசுல வாழ்ந்தது. இந்த ரெண்டைத் தவிர நான் எந்த தப்பும் பண்ணலை. மதியை லவ் பண்ணது தப்பு லிஸ்ட்ல வராது. நீயும் நானும் உண்மையான ஹஸ்பண்ட் அண்ட் வொய்பா இருந்து அவளை நான் லவ் பண்ணா அது அஃபேர். பட், அப்படியெதுவும் இல்லைல. இந்த டூ இயர்ஸ் வீ வேர் ஃப்ரெண்ட்ஸ். ரைட்... சோ, எனக்கு அப்போ மதியைப் பிடிச்சது, பழகுனேன், பேசுனேன் லவ் பண்ணேன். ஆனால் எனக்கும் அவளுக்கும் செட்டாகலைன்னு பிரிஞ்சுட்டேன். இதுல எங்கேயும் உன்னை நான் ஏமாத்துனதா எனக்குத் தெரியலை!” என்றான் கடுப்புடன். சற்று முன்னே அவள் பேசியது அவனைக் காயப்படுத்தியிருந்தது.

உதட்டைக் கடித்த வாணி, “நான்தான் பரிதி தப்பு பண்ணேன்!” என்றாள்.

“ம்ப்ச்... வாயை மூடு வாணி. நான் எப்போ இதைப் பத்தி பேச வந்ததாலும் நான்தான் தப்பு பண்ணேன்னு கண்ணுல தண்ணி வைக்கிற. இது தப்பை ஒத்துக்கிற மாதிரி தெரியல‌. சிம்பதியைக் கிரியேட் பண்ற ஃபீல் வருது எனக்கு!” என்றான் எரிச்சலாக.

“எனக்கு சிம்பதியைக் கிரியேட் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்ல பரிதி. நீ தேவையில்லாம பேசாத!” என்றாள் குரலை சரிசெய்து.

“உன் மூஞ்சி ஏன் இப்போ மாறுது? யார்தான் இந்த உலகத்துல தப்பு பண்ணலை. நீ ஒருவகைல தப்புன்னா, நானும் ஒருவகைல தப்பு பண்ணிருக்கேன். இப்போ ரெண்டு பேருமே அதை ரியலைஸ் பண்ணிட்டோம். அழகான பொண்ணு அதுவா வந்து பேசும்போது அமைதியா போக நான் என்ன துர்வாச முனிவரா? நான் மனுஷன். எனக்கும் பீலிங்க்ஸ், ஆசை எல்லாம் இருக்கு. அதனால்தான் நான் மதியோட பழகுனேன். பட், அது ஊத்திக்கிச்சு. சரி, நம்ப லவ் பண்ண பொண்ணுதான் செட்டாகலை. நம்பளை மதிச்சு ஒருத்தி லவ் பண்ணிருக்கா. அவளோட வாழ்ந்தா நல்லாருக்கும்னுதான் இங்க வந்தேன். நான் பிராக்டிலா யோசிச்சேன் வாணி. அண்ட் ஒன் திங்க் உன்னை எனக்குப் பிடிச்சிருந்தது உண்மை. அதான் விட முடியாம இப்போ இவ்ளோ தூரம் செஞ்சிட்டு இருக்கேன். இது என்னோட கேரக்டர் இல்லன்னு உனக்கே தெரியுதுதானே?” எனக் கேட்டுப் பிடரியைக் கோதினான். அவன்‌ திட்டுவது போல பேசவும் தாய் அடித்த குழந்தை போல அவள் முகம் மாறிற்று.

கண்ணை சிமிட்டி கலங்க விடாமல் பார்த்துக் கொண்டவள், “எனக்கு உன்னைப் பிடிக்கும்னு நான் சொல்லவே இல்ல. நீயா இமாஜின் பண்ணாத!” என்றாள் ரோஷத்துடன்.

“ச்சு... குழந்தை கூட உன் பொய்யை நம்பாது வாணி.‌ என்னைப் பிடிக்காமதான் நான் எவ்வளோ பாடாப்படுத்துனாலும் என் கூடவே இருந்தியா? அன்பு, காதல், அக்கறை, சர்க்கரைன்னு என்ன பேர் வச்சாலும் உனக்கு என்னைப் பிடிச்சிருந்தது நூறு சதவீதம் உண்மை. நீயே உன்னை ஏமாத்திக்காத. நடந்த எல்லாத்தையும் விடு வாணி. இனிமே நம்ப ரெண்டு பேரும் நல்லா வாழ்றதைப் பத்தி யோசி!” என அவள் கையைப் பிடித்தான். வெடுக்கென கையை உதறி வாணி பின்னே சென்றாள்.

அவள் உதட்டில் விரக்தி சிரிப்பு. “நீ சொன்னது உண்மைதான். உன்னை எனக்குப் பிடிச்சிருந்துச்சு. ஆனால் இப்போ உன் மேல எனக்கு எந்த பீலிங்ஸும் இல்ல. என்னை மதிக்கிற, என் வாழ்க்கைக்கு ஒத்துப் போற ஒருத்தனைப் பார்த்துகிறதுதான் எனக்கு நல்லது பரிதி. நீயும் ஒரு நல்ல பொண்ணா பாரு. மதி இல்லைன்னா என்ன? உன்னோட அழகுக்கு எத்தனையோ பேர் வருவாங்க!” என்றாள் கண்ணை சிமிட்டி.
பரிதி அவளை ஆற்றாமையுடன் பார்த்தான்.

“மதி இல்ல... அந்த தேவலோக ரதியே வந்தாலும் எனக்கு யாரும் வேணாம் வானு. நீதான் வேணும். ஏன் உனக்கு அது புரிய மாட்டுது. என்ன செஞ்சா ஏத்துப்ப?” எனக் கேட்டவன்,

“எப்படியாவது உன்னை சமாதானம் பண்ணிட்டுத்தான் ஊர் போகணும்னு நினைச்சேன் வாணி. இதை லாஸ்ட் ஆப்ஷனா வச்சிருந்தேன். வாட் எவர், இதுக்கும் மேல எப்படி இறங்கி வர்றதுன்னு தெரியலை...” என்றவன், படக்கென அவள் காலில் விழுந்திருந்தான்.

வாணிக்கு இதயம் திடுக்கிட்டது.
சட்டென இரண்டடி பின்னே நகர்ந்தவள், “முதல்ல எழுந்திரி பரிதி!” என்றாள் அதட்டலுடன்.

“உன் கோபம் போய்டுச்சுன்னு சொல்லு வானு. அப்போதான் எழுவேன்!” அவன் அடமாகக் கூற,

“கால்ல விழுந்து கூட காரியம் சாதிக்க நினைக்கிறல்ல. சச் அ செலிபிஷ் கை. எழுந்திரி டா!” என அவள் கத்திவிட்டாள்.

பரிதி எழுந்தவன், “ஆமா நான் செல்பிஷ்தான். உன் விஷயத்துல அப்படியே இருந்துட்டு போறேன். பொண்டாட்டி கால்ல விழுறது எனக்கு அசிங்கமா தெரியலை. எனக்கு நீ வேணும் அட் எனி காஸ்ட். உன்னை நான் விட்டுத் தர மாட்டேன்.‌ எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு வாணி!” என்றான் தவிப்புடன். வாணி‌ அவனிடமிருந்து பார்வையை அகற்றியவள், அடைத்த தொண்டையை சரி செய்தாள்.

“இது ஒத்து வராது பரிதி... நீ கிளம்பி போய்டு. இந்த மாதிரி பேசுறதுன்னா என் முன்னாடியே வராத!” என்றாள் அழுத்தமாக.

“ம்ப்ச்... வாணி ப்ளீஸ்” அவள் கைகளைப் பற்ற முயன்றான் பரிதி.

படக்கென பின்னே நகர்ந்தவள்,
“என்னைத் தொடாத!” என்றாள் சீற்றத்துடன். பரிதிக்கு ஏதோ உறுத்தியது.

“ஏன்... இதுக்கு முன்னாடி நான் உன்னைத் தொட்டது இல்லையா வானு?” எனக் கேட்டவன் வலுக்கட்டாயமாக அவள் கையைப் பற்ற, சப்பென அவன் கன்னத்திலே அறைந்திருந்தாள் வாணி.

“என்னைத் தொடுற உரிமை உனக்கு கிடையாது!” என்றாள் ஒற்றை விரலை நீட்டி ஆங்காரத்துடன்.

“ஏன்?” அவன் ஆற்றாமையுடன் கேட்டான். அவள் பதில் பேசாமல் கண்ணோரம் வழிந்த நீரை புறங்கையால் துடைத்தாள். இன்னுமின்னும் அழுகை பொங்கியது அவளுக்கு.

“உன்கிட்டதான் கேட்குறேன் வாணி. உன் மனசுல ஏதோ இருக்கு. என்னென்னு சொல்லு!” அவள் தோளைப் பற்றி உலுக்கினான் பரிதி.

முழுபலம் கொண்டு அவனைத் தள்ளியவள், “நீ என் பக்கத்துல வந்தா அந்த மதிதான் ஞாபகம் வர்றா!” என்றாள் ஆத்திரத்துடன். பரதி அவளைப் புரியாது பார்த்தான்.

“நீ... நீயும் அவளும் அன்னைக்கு கிச்சன் வச்சு கிஸ் பண்ணதுதான் என் கண்ணு முன்னாடி வந்து நிக்குது. என்னை உன்னால ஏத்துக்க முடியாது. நீ என்னைத் தொட்டதும் அவளை அப்படித்தானே தொட்டன்னு என் மனசு சொல்லுது. நீ எனக்கு வேணாம் பரிதி!” என்றாள் ஆங்காரத்துடன்.

“வாணி... அது... அந்த சூழ்நிலையில நான் அவளைத்தான் கல்யாணம் பண்ண போற ஐடியால இருந்தேன். சோ, அது எனக்கு தப்பா தெரியலை. பட்... அது இல்லைன்னு ஆனப்புறம் இப்போ அது தப்பா தெரியுது. சாரியைத் தவறி என்கிட்ட எதுவும் இல்ல. நடந்ததை மாத்த முடியாது வாணி!” பரிதி தயக்கத்துடன் கூற, வாணியின் விழிகளில் நீர் நிரம்பிற்று.

“வேணாம் பரிதி... நீ உன் வாழ்க்கையைப் பார்த்திட்டு போ!” அவள் கூற்றிற்கு அவன் மறுப்பாய் தலையசைத்தான்.

“ப்ளீஸ் வானு!” இறைஞ்சலுடன் அவளைப் பார்த்தான். அந்தப்‌ பார்வையில் இளகிவிடுவோமோ என வாணிக்குப் பயமாய் இருந்தது.

கண்ணில் வழியும் நீரைத் துடைத்து நிமிர்ந்தவள், “நான் உன் நல்லதுக்கும் சேர்த்துதான் சொல்றேன் பரிதி. நான் உன்னோட நிம்மதியா வாழ மாட்டேன். நீ என் பக்கத்துல வந்தாலே மதிதான் ஞாபகம் வருவா. நீ அவளைக் கேர் பண்ணது, கிஸ் பண்ணது, ஹக் பண்ணது, ப்ரபோஸ் பண்ணது, என்னை என் பீலிங்க்ஸை மதிக்காம ஹேர்ட் பண்ணது மட்டும்தான் ஞாபகம் வரும். அவளுக்குப் பர்போஸ் பண்ண கிஃப்ட் வாங்க என்னைக் கூட்டிட்டுப் போனப்போ, உன் சட்டையைப் புடிச்சு உலுக்கணும் போல எனக்கு கோபம் வந்து. யெஸ், ஐ லவ் யூ மேட்லி. பட், நான் அப்படியெல்லாம் செய்யலை. உன்கிட்ட எனக்கு என்ன உரிமை இருக்கு. என்னை நீ மனுஷியாவே ட்ரீட் பண்ணது இல்ல. யார் வாழ்க்கைலயும் என்னால ப்ராப்ளம் வரக் கூடாதுன்னு ஜென்யூனா நான் விலகிப் போனேன். இப்பவும் உன்கிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்ல. பட், என் லைஃப்ல நீ தலையிடாதன்னு சொல்ற ரைட்ஸ் என்கிட்ட இருக்கு!” என்றவள்,

“இதோ... இதான் என் கலர். ஆமா நான் கருப்புதான். மதி அளவுக்கு நான் அழகா இல்லை. அட்ராக்டீவா இல்ல. அண்ட் மைண்ட் ஒன் திங்க், நான் இப்படித்தான் பொறக்கணும்னு சூஸ் பண்ற உரிமை என்கிட்ட கிடையாது. இதெல்லாம் என்னோட பிறப்பு. பட், யாரோட நான் வாழணும்னு சூஸ் பண்ற ரைட்ஸ் என்கிட்டேதான் இருக்கு. நான் கருப்பா, சிவப்பான்னு பார்க்காம என்னை நானா அக்செப்ட் பண்ற ஒருத்தனோட நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன்.”

"இப்போ ஏதோ மதியோட சண்டை போட்ட விரக்தியில என்கிட்டே வந்திருக்க நீ. கொஞ்ச நாள் போச்சுன்னா என் கலர், என் முகம் உனக்குப் பிடிக்காம போய்டும். அப்போ நீ என்னை‌ ஹர்ட் பண்ணுவ. நூத்துல ஒரு பங்கா வேற யாராவது அழகா வந்தா நீ அவங்க பின்னாடி போய்டுவீயோன்னு எனக்கு பயம் இருந்துட்டே இருக்கும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உன்கூட வாழ எனக்கு விருப்பம் இல்ல பரிதி. நீ எனக்கு வேணாம்... நான் ரொம்ப தெளிவா யோசிச்சுத்தான் சொல்றேன்!” என்றாள் அழுத்தமாக. பரிதியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவளை இயலாமையுடன் பார்த்து நின்றான். வாணிக்கும் நெஞ்சடைத்துதான். ஆனாலும் நிதர்சனத்தை ஏற்று தன்னை திடமாகக் காண்பிக்க முயன்று தோற்று, அழுகையை அடக்கினாள்‌.

“அப்போ நான் உனக்கு வேணாமா வானு?” என வேதனையுடன் கேட்டான் பரிதி. அவள் வாய்வார்த்தையாக இல்லாமல் கண்ணீரோடு வேண்டாமென்பதாய் தலையை அசைக்க, தன் விழிநீரை அவளிடம் காண்பிக்காமல் பரிதி விறுவிறுவென வெளியேறினான்.

தொடரும்...

 
Top