• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,319
Reaction score
3,929
Points
113
நேரம் – 38 💜

“லூசா டீ நீ? ஏன் இப்படி சீப்பா பேசுற?” பரிதி சீறினான்.

அவனை உறுத்துப் பார்த்தவள், “அப்படியா, அப்புறம் ஏன் டா அவ தனியா போறான்னு உனக்கு வலிக்குது. ப்ரெண்டு கூட இல்லை. ம்யூட்சுவல் ஹெல்ப்னு வாய் கிழியப் பேசுன. அப்போ அதெல்லாம் பொய்யா?” அவள் எள்ளலுடன் கேட்டாள்.

“மதி! மதி! மதி... எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புத்தியில ஏறாதா? அவ அப்படிப்பட்டவ இல்ல. நானும் ஒழுக்கமானவன். அவளைப் பேசுறேன்னு என்னையும்‌ சேர்த்து அசிங்கப்படுத்துற நீ.
உண்மையை சொன்னா, நீ இந்த வீட்ல வந்து தங்குறது கூட எனக்கு இஷ்டம் இல்ல!” என அவன் முழுதாய் பேசி முடிக்கும் முன்னே,

“எப்படி இஷ்டம் வரும்? அவ கூட ரெண்டு வருஷம் ரகசியமா இஷ்டத்தோட குடும்பம் நடத்திட்டு புதுசா என்னைப் பார்த்தா உனக்கு கசக்கத்தானே செய்யும்?” என்றாள் அவள் எரிச்சலுடன். இவன் அப்பேச்சில் முகத்தைச் சுளித்தான்.

“சீ போடீ.‌.. நான் உன்னை லவ் பண்றேன் தான். உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன். அதுக்காக நீ சொல்ற எல்லாத்தையும் கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது. இப்போ நான் போய் வாணியை செண்ட் ஆஃப் பண்ணிட்டுத்தான் வருவேன்!” என்றவன், தன்னறைக்குள் நுழைந்து கதவை கோபத்தோடு சாற்றினான். மதி அந்த நீள்விருக்கையில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தாள்.

அவன் உடைமாற்றி வெளியேற யத்தனிக்க, “நீ அவளைப் போய் செண்ட் ஆஃப் பண்ணிட்டு வந்தேன்னா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். உன் லைஃப்ல கூட இருக்க மாட்டேன். எனக்கு குட் பை சொல்லிட்டு போ!” என்றாள் அழுத்தமாய்.

அவளைத் திரும்பி இயலாமையுடன் பார்த்தவன், “அவ மேல ஏன் டீ உனக்கு இவ்ளோ வன்மம்? அவ உன்னை என்ன பண்ணா?” என ஆதங்கத்துடன் கேட்டான்.

“அவ நான் கல்யாணம் பண்ண போறவனோட தாலி கட்டி இதே வீட்ல ரெண்டு வருஷம் வெறும் ரூம் மேட்டா இருந்திருக்கால்ல. அதான் எனக்கு சந்தோஷத்துல நெஞ்சடைக்குது!” என்றாள் உச்சபட்ச வெறுப்புடன்.

“சைக்‌... அன்னையோட இந்தப் பேச்சை எடுக்க மாட்டேன்னு நீ சொன்னதாலதானே நான் அவ அழுதாலும் பரவாயில்லைன்னு தாலியை வாங்கி கொடுத்தேன். அப்புறமும் ஏன் டீ இப்படி பேசுற?” என்றான் தாள முடியாத வேதனையில். மனம் ஒருபக்கம் வாணியைச் சுற்றிவர, இவள் செல்லவிடாமல் தடுக்கிறாளே என கோபம், ஆதங்கம் பொங்கிற்று.

“அவ அழுதது உனக்குப் பெருசா தெரியுது‌. ஆனால், நான் மனசுக்குள்ளே எவ்வளோ அழுறேன் தெரியுமா இளா? உன்னை நம்பி என் வாழ்க்கையே கொடுக்க துணிஞ்சேன் நான். ஆனால், நீ எனக்கு என்ன பண்ணிருக்க? அந்தக் காயம் ஆறக் கூட இல்லை. அதுக்குள்ளேயும் அவ பின்னாடி நீ போற? அப்போ எனக்கு கோபம் வருமா? வராதா?” எனக் கேட்டவளுக்கு அழுகை வரப் பார்த்தது. மூக்கை உறுஞ்சினாள். அவள் கண் கவங்கியதும் இவனுக்கு என்னவோ போலானது.

இவன் அவளருகே சென்று, அவள் கையை அழுத்திப் பிடித்தான். “ட்ரஸ்ட் மீ மதி, நான் உன்னோட இளா. அவ பின்னாடி போய்றேன் அது, இதுன்னு பேசாத. உனக்காகத்தான் அவ மனசை உடைச்சு அனுப்பிருக்கேன். உனக்கு நான், உன் பேரண்ட்ஸ், அங்கிள், ஆன்ட்டி ஃப்ரெண்ட்ஸ்னு எவ்வளோ பேர் இருக்கோம். ஆனால் அவளுக்குன்னு யாருமே கிடையாது. அங்க இந்தியா போனா கூட தனியாதான் இருப்பா. அதனால அவ மேல எனக்கு அக்கறை இருக்கத்தான் செய்யும். அவளோட நான் பண்ண அக்ரீமெண்ட் மேரேஜை மறந்துடு. அவ என்னோட கொலிக்னு நினைச்சுக்கோ மதி. இனி லைஃப் டைம்ல அவளை நான் எப்போ மீட் பண்ணுவேன்னு கூடத் தெரியாது. இந்த ஒரு டைம் மட்டும் என்னைப் புரிஞ்சுக்கோ மதி!” என்றான் பொறுமையாக.

மதி அவனை சில நொடிகள் வெறித்தவள், “போய்ட்டு ஒன் ஹவர்ல திரும்பி வர்ற!” என்றாள் கண்டிப்பான குரலில்.

அவள் கன்னத்தில் தட்டிப் புன்னகைத்தவன், “தேங்க்ஸ் மதி... தேங்க் யூ சோ மச்!” என ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை அடைந்தான். இன்னும் விமானம் கிளம்ப நேரமிருந்தாலும் இசைவாணி உள்ளே சென்றுவிட்டால், இவனால் நுழைய முடியாது. அவள் செல்கிறேன் என்றதும் இவனுக்கு என்னவோ ஒரு உணர்வு நெஞ்சைப் போட்டு அழுத்திற்று.

அரக்கப் பறக்க நுழைந்தவன், அவசர அவசரமாக கண்களை சுழற்றினான். இசைவாணி எங்கேயும் தென்படாது போனதில் உள்ளே ஏமாற்றம் நெஞ்சை கவ்விப் பிடித்தது. ஓடி வந்ததில் மூச்சை வேகமாக வெளியேற்றிவன், கண்கள் விக்னேஷிடம் நிலைத்தன. அவன் கையில் இரண்டு கோப்பை தேநீர் இருக்க, அப்படியென்றால் வாணி இன்னும் கிளம்பியிருக்க மாட்டாள் என மனம் ஆசுவாசம் கொள்ள, அவன் செல்லும் திசையைப் பார்த்தான். ஒரு ஓரத்தில் சுவர் மறைவில் இசைவாணி அமர்ந்திருந்தாள்.

யாருமற்றவள் போல அநாதரவாகத் தனியாய்
அமர்ந்திருந்தவளின் தோற்றம் கண்டு இவனுக்கு மனம் பிசைந்தது. விறுவிறுவென அவர்களிடம் விரைந்தான். விக்னேஷ் கொடுத்த தேநீரை சின்ன முறுவலுடன் பெற்றுக்கொண்டு பருகினாள் அவள். அவனும் ஏதோ பேசியபடியே சூடான பானத்தை உள்ளிறக்க, மூச்சு வாங்க அவள் முன்னே நின்றான் பரிதி.

நிமிர்ந்து பாராமல் அவன் கால்கள், உடை, காலணி என்ற இத்யாதிகளே அவனது வருகையை உரைக்க, அவள் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை. விக்னேஷ் இவனைக் கண்டதும் முகத்தைச் சுளித்தான்.

“இப்போ எதுக்கு வந்த பரிதி? யார் உன்னைக் கூப்பிட்டா?” அவன் கடுப்புடன் கேட்டதில் பரிதி எரிச்சலானான்.

“வாயை உடைச்சிடுவேன் விக்கி. அவ என் ப்ரெண்ட் முதல்ல. என் மூலமாதான் உனக்கு அறிமுகம். நீ எங்களுக்கு இடையில வராத!” என்றவன், “தயவு செஞ்சு ஐஞ்சு நிமிஷம் எங்கேயாவது போய்த் தொலை. அவகிட்டே நான் தனியா பேசணும்...” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.

“ஏன்... என்னை அனுப்பிட்டு நீயும் உன் ஆளு மதியும் பண்ண சில்லறைத் தனத்துக்கு மன்னிப்பு கேட்டு தியாகியா மாறப் போறீயா? ரூத்லெஸ் பீப்பிள்!” அவன் சீற, பரிதி வாணியைப் பார்த்தான்.

அவள் தனக்கு ஆதரவாகப் பேசுவாள் என எண்ணி ஏமாந்தவன், “விக்கி, உன்னைப் போக சொன்னேன் நான்!” என்றான் அழுத்தமாக.

விக்னேஷ் பதிலளிக்கும் முன்னே, “அவர் எங்கேயும் போக மாட்டாரு. இங்கதான் இருப்பாரு!” என வாணி அவனைப் பாராமலே பதிலளித்தாள்‌.

“ப்ம்ச்... வாணி, நமக்குள்ள ஆயிரம் இருக்கும். கண்டவனை எல்லாம் உள்ளே விடுவியா நீ?” அவளிடம் ஆதங்கப்பட்டான்.

அவனை நிதானமாக நிமிர்ந்து கண்களால் அளந்தவள், “உனக்கும் எனக்குமா? ஹம்ம்... உனக்கும் எனக்கும் என்ன இருக்கு? நீ யார் எனக்கு? ஹூ ஆர் யூ? உன் வருங்கால பொண்டாட்டிகிட்டே கெஞ்சி கூத்தாடி என்னைப் பார்க்க வந்தியா?” என்றாள் உதட்டை வளைத்து ஏளனமாக. அவள் கண்களில் வலியை மீறி கோபம், ஆதங்கம் நிரம்பி வழிந்தது.

“வாணி... இப்படி நீ யாரு யாருன்னு கேட்டா கஷ்டமா இருக்கு. இந்த மாதிரி பேசாத!” என்றான் வருத்தம் மேவிய குரலில்.

“ஆஹா... நீ செஞ்சதுக்கெல்லாம் வேற எப்படி பேசுறது? மடியில தூக்கி வச்சு வேணா கொஞ்ச சொல்லவா வாணியை?” விக்னேஷ் நக்கலாகக் கேட்க,
“விக்கி உன் வாயை மூடு நீ...” அவனிடம் சீறினான் மற்றவன்.

அவர்கள் இருவரும் மேலும் பேசும் முன்னே, “விக்னேஷ் ப்ளீஸ்... நீங்க இவனோட பேசி உங்க தரத்தைக் கொறைச்சுக்காதீங்க!” என்றாள் அவன் கையைப் பிடித்து. அதைப் பார்த்து பரிதிக்கு பற்றிக்கொண்டு வந்தது.

“அவன்கிட்டேருந்து கையை எடு வாணி!” என இவளிடம் காய்ந்தான் பரிதி. அவள் அவன் பேச்சை பொருட்படுத்தவேயில்லை. அவளுடைய விமான அறிவிப்பு வந்துவிட்டது.

எழுந்து நின்றவள், “ஓகே விக்னேஷ்... நான் போய்ட்டு வரேன்!” சின்னதாய் முறுவலித்து அவனிடம் விடை பெற்றாள்.

அவள் கையை அழுத்திய விக்னேஷ், “அங்கப் போய் யாரும் இல்லைன்னு நினைக்காதீங்க வாணி. நான் இங்க இருந்தாலும் என் மொத்தக் குடும்பமும் அங்கதான் இருக்கு. ஏதாவது ஒரு பிரச்சனை இல்ல ஹெல்ப் வேணும்னா தயங்காம கூப்பிடுங்க. ஒரு ப்ரெண்டா எப்பவும் நான் உங்களுக்காக
இருப்பேன்!” என்றான் அவன். இவள் சிரிப்புடன் தலையசைத்தாள்.
 
Administrator
Staff member
Messages
1,319
Reaction score
3,929
Points
113
சில நொடிகள் தயங்கிய விக்னேஷ், “மறுபடியும் டிஸ்டர்ப் பண்றதா நினைக்க வேணாம் வாணி. நீங்க என் ப்ரபோசலை ரீ-கன்சிடர் பண்ணலாமே!” என்றான் அவள் முகத்தைப் பார்த்து.

முறுவலித்தவள் அவன் தோளில் தட்டி, “உங்களுக்கு எல்லா வகையிலையும் பெஸ்டா ஒரு லைஃப் பாட்னர் அமைவாங்க விக்னேஷ்!” என்றவள், மீண்டும் தன்மையாக மறுதலித்தாள்.

அவன் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தாலும் அதை ஏற்றுக் கொண்டவன், “உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போற லக்கி பெர்சன் நான் இல்ல போல?” என்றான் உதட்டைப் பிதுக்கி.

அதில் இதழ் விரிய புன்னகைத்தவள், “லக்கி பெர்சன் எல்லாம் இல்ல விக்னேஷ். என்னைக் கல்யாணம் பண்ணா என்னென்ன கொடுமை பண்ணுவேன், கஷ்டப்படணும். சொசைட்டி எவ்ளோ அசிங்கமா பார்க்கும்னு இதோ... இவன் கிட்ட கேளுங்க. இன்பேஃக்ட் நான்லாம் ஒரு ஃபேமிலி மெட்டிரியலே கிடையாது விக்னேஷ்!” எனப் பரிதியைக் கேலியாகக் கை காண்பித்தாள். அவன் முகம் அவமானத்தில் கன்றியது.

“வாணி... சாரி!” என அவள் ஒற்றைக் கையைத் தவிப்புடன் பற்றினான் பரிதி. அவள் குரலிலே எத்தனை ஆழமாக காயம்பட்டிருக்கிறாள் என இவனுக்குப் புரிந்தது.

அவனிடமிருந்து கையை உருவப் போராடியவள், “பப்ளிக் ப்ளேஸ்ல சீன் கிரியேட் பண்ணாம கிளம்பு பரிதி. உன்னோட மதி நீ போய் எவ்ளோ நேரமாச்சுன்னு டைம் ஏதும் கால்குலேட் பண்ணிட்டிருக்கப் போற!” என்றாள் கேலியாக. அவளை அடிப்பட்ட பார்வை பார்த்த பரிதி, பற்றியிருந்த கையை இழுத்து அவளை இறுக அணைத்துக் கொண்டான். ஒரு நொடி இசைவாணியின் நெஞ்சம் திடுக்கிட்டுப் போனது‌.

“சாரி வாணி... நான் நிறைய தப்பு பண்ணிருக்கேன். உன்னைக் கஷ்டப்படுத்திருக்கேன். உன்னால மன்னிக்க முடியலைன்னா மறந்துடு. அதையே நினைச்சு நீ உன்னைக் கஷ்டப்படுத்திக்காத!” என்றவன், “உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்!” என்றான் கலங்கிய குரலை அவளிடம் மறைக்க விரும்பாதவனாக. அவன் குரலில் குற்றவுணர்ச்சி, ஆதங்கம், வருத்தம் எல்லாமே இருந்தது. அந்தக் குரலை இவளால் புறக்கணிக்க முடியவில்லை.

அவள் கண்ணோரம் ஈரம் படரப் பார்த்தது. தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றவள், சில நொடிகள் அவன் பின்புற முதுகை அழுத்திவிட்டு பட்டென அவனிடமிருந்து விலகிவிட, பரிதிக்கு அந்நொடி என்ன உணர்வெனத் தெரியாமல் அடிவயிறு குழைந்தது... இல்லையில்லை, என்னவோ மனத்தில் பிசைந்தது.

அவன் தோளைத் ஒற்றைக் கையால் தட்டி தூர நிறுத்தியவள் “நல்லா இரு... என் கண்ணு முன்னாடி மட்டும் வந்துடாத...” எனக் குரலை முயன்று சரிசெய்து இருவரிடமும் தலையை அசைத்து, விடைபெற்று தன் பையோடு உள்ளே நுழைந்தாள் வாணி. பரிதி திடீரென பாரமேறிய மனத்திடம் பதிலுரைக்காமல் அவள் செல்லுவதையே பார்த்திருந்தான்.

“வாணி ஒரு ஜெம். ஷீ டிசர்ஸ் அ பெட்டர் லைஃப் பாட்னர். கண்டிப்பா அவங்க குணத்துக்கு ஒரு நல்ல பையனா அமைவான். இப்போ உனக்கு அந்தப் பொண்ணோட அருமை தெரியாது. காலம் போன பிறகு கண்டிப்பா வருத்தப்படுவடா. அதை நான் பார்ப்பேன்!” என்ற விக்னேஷ்,

“போயும் போயும் அந்தப் பொண்ணுக்கு இவனை ஏன் பிடிச்சதுன்னு தெரியலை. சரியான செல்பிஷ் ஜெய்ன்ட் இவன்!” என்றவன் கடுப்புடன் அகல, அவன் பேச்சு காதில் விழுந்தாலும் பரிதிக்கு சிந்தையில் பதியவில்லை. கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

மதி இவன் வந்ததும் பெரிதாய் எதுவும் கேள்வி கேட்கவில்லை. அமைதியாய் உண்டு உறங்கினர். மறுநாள் எழுந்தவனுக்கு இசைவாணி நல்லபடியாக சென்றுவிட்டாளா எனத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவளது எண்ணிற்கு அழைத்தான். அழைப்பு செல்லவில்லை. குறுஞ்செய்தி அனுப்பும்போது தான் அவள் இவன் எண்ணைக் கருப்பியிருப்பது தெரிய, வேறு வழியின்றி விக்னேஷிற்கு அழைத்தான்.

அவன், இவனை ஆங்கிலமும் தமிழும் கலந்த இரண்டு கெட்ட வார்த்தைகளால் அர்சித்துவிட்டு அவள் பத்திரமாய் சென்றதை உறுதி செய்ய, பரிதிக்கு அப்போதுதான் நிம்மதியானது. அடுத்த ஒரு வாரமும் மதியினுடைய பொருட்களை இங்கே அடுக்குவதிலே நேரம் போனது.

நூற்றுக் கணக்கில் உடைகள், காலணி, நகைகள், அழகு சாதனப் பொருட்கள் என அறையையே நிறைத்துவிட்டாள். எதையும் அவள் ஒழுங்காக அடுக்கவில்லை. நேர்த்தியற்று அப்படியே ஆங்காங்கே போட்டு வைத்திருந்தாள். பரிதிக்கு அதைப் பார்த்ததும் வாணி எப்படி அந்த அறையைப் பராமரித்தாள் என்ற நினைவு வந்தது. எடுத்தப் பொருளை எடுத்த இடத்தில் வைக்கும் நேர்த்தி உடையவள் அவள்.

அந்த ஒரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாக மதி பொருட்களை அடுக்க முயன்றாள். ஆனாலும் அவளால் சரிவர செய்ய முடியவில்லை. அடுக்குவதைக் கை காண்பித்து அந்த ஒரு வாரமும் வெளியே ஒரு உணவகத்தில் உணவை வரவழைத்து உண்டனர். பரிதிக்கு அந்த ஊர் உணவு ஒத்துக் கொள்ளாமல் இரண்டு நாட்கள் வயிற்று வலியால் அவதிப்பட்டுவிட்டான்.

“இனிமேல் வீட்லயே குக் பண்ணுவோம் இளா. டோன்ட் வொர்ரீ!” என அவனிடம் அக்கறையாக உரைத்த இளமதி பத்து மணி அலுவலகத்திற்கு ஒன்பது மணிக்கு எழுந்து அரக்கப் பறக்க கிளம்பி ஓடினாள். அவள் அலுவலகம் இங்கிருந்து நாற்பத்தந்து நிமிடங்கள் தொலைவிலிருக்க, அதைக் காரணம் வைத்து வார நாட்களில் காலை, மதிய உணவை சமைக்க முடியாது என்றுவிட்டாள்.

“விடு மதி... நைட் டின்னர் மட்டும் நீ பண்ணு. நான் ப்ரேக் பாஸ்ட் அண்ட் லஞ்ச் பார்த்துக்குறேன்!” என பரிதி கூறவும், “சூப்பர் ஐடியா. வேலையை ஷேர் பண்ணி செஞ்சாத்தான் நல்லது!” என்று அவளும் துள்ளலுடன் ஒப்புக் கொண்டாள். வாணி சென்ற பிறகு அவளைப் பற்றிய பேச்சை பெரிதாக மதி எடுக்கவில்லை எனினும், அவ்வப்போது ஏதாவது சுள்ளென்று பரிதியைக் காயப்படுத்தும்படி உரைத்திடுவாள். பின்னர் அதைப் பற்றி அலட்டிக்காமல் தானே வந்து அவனிடம் பேசிவிடுவாள்.

பரிதிக்கு காலையில் எழுந்து சமைப்பது அத்தனை அலுப்பாக இருந்தது. அவனுக்குப் பெரிதாய் சமையல் தெரியாது‌. அவனளவில் அரைகுறையாக சமைத்தாலும் வாயில் வைக்கவே முடியவில்லை. இரண்டு வருடங்கள் வகைவகையாக வாணி சமைத்துப் போட்டு ருசி கண்ட நாக்கு இவனது சமையலுக்கு அடிபணிய மறுத்தது. முதன்முதலாக இசைவாணியை அவன் மனதளவில் தேடினான். உண்மையில் அவளது இருப்பை உணவு மூலம் உணர்வாக அவள் கடத்தியிருக்கிறாள் என்ற நினைப்பு அப்போதுதான் அவனுக்கு வந்தது.

அவன் வேலை கிடைக்காத சமையத்தில் பகுதி நேரமாகப் பார்க்கும்போது அவன் அலுவல் சுழற்சி தெரிந்து கொண்டு அவள் எழுந்து சமைத்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்ற செயல் இப்போதுதான் அவனுக்குப் பெரிதாய் தெரிந்தது. காலையில் எழுந்ததும் எவ்வித வேலையும் இல்லாமல் கிளம்பி நேரே மேஜைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பிய நாட்களின் இனிமை இப்போது நினைவு வர, கடனே என்று சமைத்தான்.

“சைக்... என்ன இளா இது? சால்டியா இருக்கு ரைஸ்!” என ஒரே வாயில் துப்பிவிட்டு அவன் சமைத்ததைக் குறையாகக் கூறிய மதி, உணவை அப்படியே குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டாள். இவனுக்கு கோபம்தான். கொஞ்சமாக உப்பு கூடியதற்கு உணவை இவள் வீணடிக்கிறாளே என்ற கடுப்பிருந்தாலும், அதைக் காண்பித்துக் கொள்ளவில்லை.

மறுநாள் சற்றே சிரத்தையெடுத்து அவன் சமைக்க, “பைஸ்சியா இல்லை இளா. சப்புனு இருக்கு!” எனக் குறை கூறியவள், “ஆஃபிஸ் கேண்டீன்ல பார்த்துக்கிறேன்!” என்று கிளம்பிவிட்டாள். இப்படி தினமும் ஏதோவொரு வகையில் அவன் சமைத்த உணவை வீணடித்தாள். இரவு சமையல் அவளுடையது என்றாலும் வாரத்தில் மூன்று நாட்கள் பப்பிற்கு சென்று குடித்துவிட்டு இரவுணவை தவிர்த்துவிடுவாள். வேண்டாமென்று மறுத்தாலும் பரிதியையும் அழைத்துச் செல்வாள்.

திங்கட்கிழமை என்றால், “மண்டே... வொர்க் லோட் அதிகம் இளா. ஐ யம் சோ டையர்ட்!” என வெளி உணவகத்தில் உணவை வரவழைப்பாள். இப்படியாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சமையலறைக்குள் நடமாடுவாள். அதுவும் துரித உணவுகளான, மேகி, பர்கர், சாண்ட்விச், பாஸ்தா என மைதாவால் ஆன உணவை செய்து வைப்பாள். பரிதியால் இரண்டு வாரத்திற்கு மேல் அந்த உணவை உட்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து மைதா உண்டதால் அவனுக்கு உடல் உபாதை உருவானது.

வேறு வழியின்றி இரவு உணவையும் தானே சமைப்பதாய் அவன் ஒத்துக்கொள்ள, “சோ ஸ்வீட் ஆஃப் யூ இளா...” என அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அவள். முதலில் எல்லாம் அவளது முத்தம் இனித்தது, உடலில் கிளர்ச்சியை உண்டு செய்தது. ஆனால் இப்போது அவள் முத்தமிட வந்தாலே என்னவோ வாணி கண்முன்னே வந்து நிற்க, திடுக்கிட்டுப் போனான்.

‘சே... அவ கூட டூ இயர்ஸ் ஒரே வீட்ல இருந்ததால இப்படியிருக்கும்!’ எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். வீட்டை துடைத்து மூன்று வாரங்களாக, தூசியும் குப்பையுமாக கிடந்தது. உணவுதான் சமைக்க மாட்டேன் என்கிறாள். வீட்டையாவது சுத்தம் செய்யட்டும் என பரிதி அவளிடம் கூற, “சாரி இளா... க்ளீனிங் வொர்க்லாம் நான் பண்ணதில்ல. எனக்குத் தெரியாது. யாராவது ஆளைக் கூப்பிட்டு க்ளீன் பண்ண சொல்லிடலாம். வீ வில் பே ஃபார் தெம்!” என எளிதாய் அவள் முடித்துவிட்டாள்.

தினமும் வீட்டை கூட்டி, வாரத்திற்கு ஒருமுறை துடைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒரு ஆளை மதியே நியமித்தாள். அவருக்கு ஒருமணி நேரத்திற்கு இவ்வளவு பவுண்ட் என லண்டன் பணத்தில் கணக்கிடும்போது பரிதிக்கு நெஞ்சே வலித்தது. அந்த மாதம் அவன் சம்பளத்தில் பாதியைக் கூட வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை. வீட்டு வாடகை, வெளி உணவு, வாரம் மூன்று முறை உயர்தர பப், வாரயிறுதியில் ஷாப்பிங் என்ற பெயரில் இளமதி அவளுடைய சம்பளத்தோடு அவனுடையதையும் சேர்த்துக் கரைத்தாள்.

“ரொம்ப செலவு பண்ற மாதிரி தோணுது மதி. நம்ம ப்யூச்சர்க்காக சேவ் பண்ண வேணாமா?” என அவன் கண்டிப்புடன் கேட்க, “கமான் மேன்... நம்ம என்ன ஓல்ட் ஏஜ் பீப்பிள்ஸா? இப்பவே சேவ் பண்ணி என்ன பண்ணப் போறோம்? ஹம்ம்... நம்ப சம்பாரிக்கிறது நமக்கு செலவு பண்ணத்தான். தட்ஸ் இட்!” என தோளைக் குலுக்கியவள், சேமிப்பை பற்றி அவனை யோசிக்கவேவிடவில்லை.

பரிதி கல்விக்கடனை செலுத்தி முடித்துவிட்டான். அடுத்தாக தந்தைக்கு நகரத்தில் ஒரு இடம் வாங்கி மத்திய அளவில் ஒரு பல்பொருள் அங்காடி வைத்து தருவதற்காக பணம் சேர்க்க எண்ணினான். ஆனால், அவன் சம்பளம் மொத்தமும் கரைந்து போனது. இவன் பணத்தை மட்டும் அவள் செலவழிக்கவில்லை. அவளுடையதையும்தான் செலவு செய்தாள். அதற்கடுத்த மாதமும் அப்படித்தான் அவனால் குறைந்தளவு பணத்தை மட்டுமே வீட்டிற்கு அனுப்ப முடிந்தது.

“ஏன் டா பரிதி... முன்னலாம் நிறைய அனுப்புவ. இப்ப என்னடா வெறும் ஐம்பதாயிரம்தான் அனுப்புற? உன் தங்கச்சி கல்யாணத்துக்கு நகை சீட்டு போட்டுருக்கேன் டா!” என சிந்தாமணி கூற, இவனும் மீண்டுமொரு மதியிடம் அழுத்திக் கூறினான்.

“ப்ம்ச்... இப்போ எதுக்கு ஓவரா பண்ற பரிதி. இதுக்கு முன்னாடி உன்னை மயக்கி முந்தானையில வச்சிருந்தா அந்த லேடிகிட்டே‌ காசைக் கொட்டிக் கொடுத்த.
அவ நல்லா இளிச்சிட்டே செலவழிச்சிருப்பா. உனக்கு வேலை கிடைக்காதப்போ கணக்குப் பார்க்காம நான்தானே செலவு பண்ணேன். பட், ஒரு டூ மந்த்ஸ் கூட ஆகலை நம்ப ஒரு வீட்டுக்கு ஷிஃப்டாகி. நீ என்கிட்டே கணக்கு கேட்குற? வாட் ரப்பிஷ்!” என இவனிடமே கடித்து துப்பிவிட்டு போனாள். பரிதி தன்னையே நொந்து கொண்டான்‌.

இசைவாணி இருக்கும்போது முக்கால்வாசி சம்பளத்தை சேமித்து வீட்டிற்கு அனுப்பினான். அவளிருக்கும்போது அவள்தான் இவனுக்கும் சேர்த்து நிறைய செலவு செய்திருக்கிறாள். ஆனால் அவள் ஒருமுறை கூட அநாவசியமாக செலவு செய்ததில்லை. தேவையான பொருட்களை மட்டும்தான் வாங்குவாள். சமீபகாலமாக இசைவாணியின் நினைப்பு அவனுக்கு அதிகமாக வந்தது.

அவள் உடனிருக்கும்போது வீடு பளபளவென துடைத்து வைத்தக் கண்ணாடி போலிருக்கும். எங்கும் தூசி, துரும்பு இருக்காது. சமையல் பொருட்கள் அதனதன் இடத்தில் அழகாய் பொருத்தி வைத்திருப்பாள். சுத்தத்திற்கு மறுபெயர் வாணி என இவன் கேலி செய்ததை எண்ணி இப்போது வீட்டின் நிலையைப் பார்த்து நொந்தான். அந்த மாதமே வீட்டு வேலையாளை நிறுத்திவிட்டான். அவருக்கு கொடுக்கும் சம்பளமே பெரிய தொகையாய் தெரிந்தது.

“ஆர் யூ ஷ்யூர் இளா? குக்கிங் அண்ட் ஹவுஸ் ஹோல்ட் வொர்க்கையும் உன்னால மேனேஜ் பண்ண முடியுமா?” என அவள் சந்தேகத்துடன் கேட்க, இவன் தலையை மட்டும் அசைத்தான்.

முன்பும் இவன்தான் வீட்டை சுத்தம் செய்வான். ஆனால் சமையல் வேலையை வாணி பார்த்துக் கொள்வாள். இருவரும் பங்கிட்டு வேலையைப் பிரித்துக் கொண்டதில் பெரிதாய் பாரமாகத் தெரியவில்லை. ஆனாலும் அப்போது வாணியை ராட்சசி‌ போல பாவித்து, கரித்துக் கொட்டியிருக்கிறொம் என்பது உபரியாய் நினைவு வந்தது.
இப்போது இவன் ஒருவனே அத்தனை வேலையும் செய்ததால் சோர்ந்து போனான்.

சரியாக உண்ணாமல் இரண்டு மாதத்திலே உடல் மெலிந்து போனது. உன்னால் முடியவில்லை என்றால் நான் உதவுகிறேன் என முதல்நாள் அவனுடன் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்தாள் மதி. அதற்குப் பின்னே ஏதாவது ஒரு காரணம் வைத்து வேலையைத் தட்டிக் கழித்தாள்.

அவன் கடினப்பட்டு அனைத்தையும் செய்து முடிக்க, “யூ ஆர் வெரி குட் ஹஸ்பண்ட் மெட்டிரியல் இளா. எவ்வளோ டெடிகேட்டடா இருக்க? ஸ்வீட் பாய். நமக்கு பேபி பொறந்தா அவங்களையும் நீயே கேர் பண்ணிப்பல்ல?” என கட்டியணைத்து முத்தமிடுவாள். அவன் வெறுமனே சிரித்து வைப்பான்.

ஒருநாள் ஞாயிறு, “இளா... வீக்லி சிக்ஸ் டேய்ஸ் நீ குக் பண்ற. சோ, சண்டே நான் பார்த்துக்கிறேன்!” என அசைவம் சமைத்தவள், “நானே ஊட்டி விடுறேன். எப்படி இருக்குன்னு சொல்லு?” என ஆர்வமாகக் கேட்டாள். அவள் ஊட்ட, ஒரு வாய் உண்டதும் பரிதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

“அச்சோ.‌‌.. டூ மச் ஸ்பைசியா இருக்கா இளா. ஐ வில் ஆட் ஆயில்!” என்றவள் எண்ணெய் போத்தலைக் கவிழ்த்தாள். எண்ணெய் அதிகமானதும் அவனுக்கு குமட்டியது. ஆனாலும் மதி அவனுக்காக ஆசையாக செய்ததால் மறுத்து உரைக்காது உண்டான்.

“ஏன் இளா... உன் எக்ஸ் வாணி எப்படி குக் பண்ணுவா? என்னை மாதிரியா? இல்லை மோசமாவா?” எனக் கேட்டவளைப் பார்த்தவன், “நல்லா பண்ணுவா!” என ஒற்றை வார்த்தையில் முடித்தான்.

“வெறுமனே நல்லா பண்ணுவான்னு சொன்னா எப்படி இளா? டேஸ்டா பண்ணுவாளா? இண்டியன் ரெசிபி எல்லாம் தெரியுமா அவளுக்கு?” என இவள் தோண்டித் துருவ, “ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப் அவகிட்டே தோத்துப் போய்டுவா. யூ க்நோ, நான் அவ ஃபுட்டை ரொம்ப மிஸ் பண்றேன்!” என இவன் கடகடவென உரைத்ததும், கேலியாக உதட்டை வளைத்தாள் மதி.

“நான் கூட எதை எதையோ காட்டி உன்னை மயக்கி வச்சிருந்தான்னு நினைச்சேன். சீ... கேவலம் விதவிதமா குக் பண்ணிப் போட்டு உன்னை ரெண்டு வருஷம் அடிமையா மயக்கி வச்சிருந்திருக்கா பாரேன்?” என அவன் தன்மானத்தை உடைத்து, இருவரையும் அசிங்கபடுத்தினாள். பரிதிக்கு கோபம் உச்சிக்கு ஏறிற்று. ஆனாலும் உண்மையை மதியிடம் மறைத்தது தன்னுடைய பெருந்தவறு என்றெண்ணி அவளுடைய சுடு சொற்களைப் பொறுத்துக் கொண்டான்.

பெரும்பாலும் அவளிடம் வாணியைப் பற்றி எதையுமே அவனாகப் பகிர மாட்டான். அவளாக அவனிடம் அழுத்திக் கேட்டு பேச வைத்து, இப்படி அசிங்கமாக அதற்கொரு அர்த்தம் கற்பித்து சுள்ளென திட்டிவிட்டுப் போவாள். பரிதி மனதளவில் அவளிடம் வெகுவாக காயம்பட்டான்.

மறுநாள் காலை வருபவள், “சாரி இளா... நேத்து நான் பேசுனது தப்புதான். பட், நீ அவளை என் முன்னாடி பெருமையா பேசாத. எனக்கு கடுப்பாகுது!” எனத் தானே சமாதானம் செய்து முத்தம் கொடுப்பாள். அந்த முத்தத்தை ஏற்கும்போது பரிதிக்குத் தன்னை நினைத்தே விரக்தியாக சிரிப்பு வரும்.

அடிப்படையில் இளமதி நல்ல குணமுடையவள். ஆனால் பெரும் சோம்பேறி. அவள் வாழ்ந்த தான்தோன்றித்தனமான வாழ்க்கையை விட்டொழிந்துவிட்டு அவனுக்காக மாற வேண்டும் என்று எந்த நினைப்பும் அவளிடம் இல்லை. மாறாக அவனையும் அவள் வாழும் சூழலுக்குள் இழுக்கத்தான் முயல்கிறாள். பரிதி அவளைத் தனக்கேற்றது போல வளைக்க பெரும் சிரமப்பட்டான். ஏதாவது ஒரு சில நேரம் அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வாள். மற்றபடி அவள் இஷ்டத்திற்குத்தான் இருப்பாள்.

இவனால் அவளிடம் கடிந்து பேச முடியவில்லை. அப்படி ஏதேனும் பேசினால், வாணியையும் அவனையும் தகாத முறையில் இணைத்துப் பேசுவாள். அதில் வெறுத்துப் போனான் இவன்.

இளமதியின் புறத்தோற்றத்தில் அவனுக்கு இப்போதும் ஒரு மயக்கம் உண்டு. அவளும் அவனும் வெளியே செல்கையில் நிறைய பேர், “நைஸ் பேர்!” என பாராட்டிவிட்டு செல்கையில் மனம் உவகை கொள்ளும். ஆனால் அவளது செய்கைகள்தான் அவனை எரிச்சலடைய வைக்கின்றன. எப்படியாவது பேசி புரிய வைத்து அவளைத் தன்வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணினான்.

அன்றைக்கு அவன் வேலை பார்க்கும் திட்டத்தில் ஏதோ கோளாறு. இவர்கள் பக்கம் எல்லாம் சரியாக இருந்தப் போதும், “யூ இடியட்ஸ்... ரிவ்யூ பண்ணும்போது இவ்வளோ பெரிய மிஸ்டேக் உங்க கண்ல தெரியலையா?” என உயரதிகாரி அனைவரையும் திட்டி தீர்த்து, அந்த வாரம் முழுவதும் வாட்டி வதைத்தில் அவனுக்கு உடலே அலண்டு போயிருந்தது. சோர்ந்து வந்தவன், அப்படியே நீள்விருக்கையில் விழுந்தான்.

அவன் கைகள் வயிற்றைத் தடவின. நன்றாகப் பசித்தது. சூடாகத் தேநீரும் பஜ்ஜியும் வாணியின் கை மனத்தில் கிடைத்தால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, மெல்லிய திடுக்கிடல் அவனிடம். இது போல ஒருநாள் அவன் அலுவலகம் முடிந்து சோர்ந்திருந்த போது, “என்னாச்சு பரிதி... ஏன் ஒருமாதிரி இருக்க?” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் வாணி.

“செம டையர்ட் வாணி...” என்றவன் தயங்கிவிட்டு, “கொஞ்சமா பசிக்குது!” என்றான் பாவமான குரலில்.

“பசிக்கும்... பசிக்கும்!” கேலி செய்துவிட்டுப் போனவள், பத்து நிமிடத்தில் ஆவி பறக்க குளம்பியும் வாழைக்காய் பஜ்ஜியும் சுட்டு எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

அதன் சுவை நாசியில் ஏறியதும் படக்கென கண் விழித்தவன், “நூறாண்டு காலம் வாழ்க. வாணி நூறாண்டு காலம் வாழ்க!” என்றுவிட்டு கொதிக்க கொதிக்க குளம்பியைக் குடித்துவிட்டு பஜ்ஜியை மென்றான். பரம சுகமாய் இருந்தது அது. அவள் சிரித்துக்கொண்டே மற்றொரு கிண்ணத்தில் பஜ்ஜி எடுத்து வந்தாள்‌.

“எனக்கு போதும் வாணி. இதை நீயே சாப்பிடு!” என்றவனை முறைத்தவள், “உனக்குத்தான் பெரிய பவுல்ல கொடுத்தேனே. இது என்னோட பங்கு. ஆட்டைய போடலாம்னு பார்க்காத!” என கடிந்து அவள் சாப்பிட, இவனுக்கு அவள் ஓய்ந்த தோற்றம் இப்போது நினைவிற்கு வந்து உறுத்தியது. அவளும் அவனைப் போல உழைத்துக் களைத்துதான் வந்தாள்‌. ஆனாலும் தான் பசி என்ற போதும், தன் சோர்வை பொருட்படுத்தாமல், வயிற்றை நிரப்பினாள் என நினைத்து மூச்சை வெளியேற்றினான்.

அவளிருக்கும்போது வீட்டில் ஒருவிதமான அமைதியிருந்தது. எப்போதும் ஏதாவது இசையைக் கசியவிட்டுக் கொண்டே உலாத்துவாள். ஏதாவது புத்தக்ததோடு அமர்ந்திருப்பாள்‌. இவனது குடும்பத்தினரிடம் பேசுவாள். சமைப்பாள், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டுமென இவனைக் கண்டிப்பாள்‌. இப்படி ஏதோ ஒரு வகையில் அவளிருப்பை உணர்த்திக் கொண்டேயிருந்திருக்கிறாள் இசைவாணி.

அவளை இத்தனை தூரம் தான் கவனித்திருக்கிறோம் என அவனுக்குத் தன்னை நினைத்தே ஆச்சர்யமாகப் போயிற்று. இரண்டு மாதங்கள் அவளுடன் பேசாமல் கடத்திவிட்டான். ஒரு நல்ல தோழமையை இழந்த உணர்வு தோன்றியது நெஞ்சை வாட்டியது.

அவளிடம் பேசினால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, நூற்றில் ஒரு சதவீத நம்பிக்கையோடு அவள் எண்ணிற்கு அழைத்தான். இப்போதும் அழைப்பு செல்லவில்லை. அன்றைக்கு இவனது எண்ணைக் கருப்பியதோடு இவன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள
முடியாதபடி செய்துவிட்டாள்.

“ப்ம்ச்...” சலிப்புடன் கைப்பேசியைத் தூக்கிப் போட்டான் பரிதி.

தொடரும்...

 
Top