• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,319
Reaction score
3,931
Points
113
நேரம் – 37 💜

அன்றைக்கு இரவு எட்டு மணிக்கு சரியாய் ஒரு குறிப்பிட்ட ஐந்து நட்சத்திர விடுதியில் இசைவாணிக்கு பிரிவு உபச்சார விழா ஏற்பாடாகியிருந்தது. அவளுக்கு இதிலெல்லாம் விருப்பமே இல்லை. வேண்டாமென அவள் மறுத்தும், உடன் வேலை பார்ப்பவர்கள் அன்புடன் கட்டாயப்படுத்தினர். அதற்கு மேலும் மறுத்தால் அது நாகரீகமாக இராது என இவளும் கிளம்பலாமென எண்ணினாலும், படுக்கையைவிட்டு எழவேயில்லை.

மதிய உணவை உண்டுவிட்டு குட்டித் தூக்கம் போட்டாள். நட்சத்திர விடுதி இங்கிருந்து பதினைந்து நிமிடத் தொலைவுதான் என்பதால் பொறுமையாக செல்லலாம் என மெத்தையில் புரண்டு கொண்டிருந்தாள். நேரம் சென்று கொண்டேயிருக்க, பெருமூச்சுடன் எழுந்தாள்.

சக பெண் தோழி ஒருத்தி பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்து வரவேண்டுமென கூறி, இவளுக்கும் புதிய ஆடை எடுத்துக் கொடுத்திருந்தாள். அதை எடுத்துப் பார்த்து சலித்தாள் வாணி.

காவி நிறத்தில் நீண்ட கால்சராயும், கையில்லா மேல் சண்டையும் அதற்கு மேலே வெள்ளை நிற அங்கியும் இருந்தது. உடை என்னவோ அழகாகத்தான் இருந்தது. என்ன அந்த மேல் சட்டையின் கழுத்துப் பகுதி சற்றே இறங்கியிருக்க, இவளுக்கு அதை அணிய சங்கடமாகயிருந்தது. என்னதான் இரண்டு வருட லண்டன் வாசம் என்றாலும் ஒருசில விஷயத்தில் வாணி மிகவும் சுயக்கட்டுப்பாடு கொண்டவள். உடை விஷயத்தில் வெகு கறார். அதுவும் சுந்தரி இருந்தவரை அடிக்கடி இதையேத்தான் கூறுவார்.

எல்லோருடனும் ஒத்துப் போக வேண்டுமே என்ற சலிப்புடன் குளித்து உடை மாற்றினாள். அவள் நினைத்ததை விட அந்த உடையின் கழுத்து நன்றாகவே இறங்கியிருந்தது. பேசாமல் கழுத்தைச் சுற்றி ஒரு துப்பட்டாவை போடலாம் என எண்ணி, காவி நிறத்திற்குப் பொருத்தமான துப்பட்டாவை தேடினாள்.

வெளியே ஏதா சப்தம் கேட்டது. வேறு எங்காவது இருக்குமென யோசனையுடன் தன் தேடலை அவள் தொடர, குரல் வெகு அருகில் பரிட்சயமாகக் கேட்க, யாரென்ற கேள்வியுடன் கூடத்திற்குச் சென்றாள். இளமதி தள்ளாட்டத்துடன் நின்றிருக்க, பரிதி அவளை அதட்டி அடக்கிக் கொண்டிருந்தான்.

இவளைப் பார்த்ததும் அவன் பிடியிலிருந்து திமிறி வெளியேறியவள், “வாடீ வாணி, அலப்பி... எங்க டீ மினுக்கிட்டு கிளம்பிட்ட?” என எள்ளலாகக் கேட்டாள். வாணியின் முகம் நொடியில் மாறிற்று. பரிதியைக் கண்டனத்துடன் பார்த்தாள் அவள்.

“மதி ப்ளீஸ்... எதுவா இருந்தாலும் நீ தெளிவா இருக்கும்போது பேசிக்கலாம். வா, இப்போ உன்னை வீட்ல விட்டுட்டு வரேன்!” பரிதி அவள் கையைப் பிடித்தான்.

அவனிடமிருந்து கையை உருவியவள், “ஏய்... என்ன டீ? என் முன்னாடியே அவனை எதுக்கு முறைக்கிற நீ? நடிக்க வந்தவ உண்மையான பொண்டாட்டியாவே மாறிட்டீயா என்ன?” என மதி தள்ளாட்டத்துடன் கோபமாக கேட்க, பரிதி வாணியைக் கெஞ்சலாகப் பார்த்தான். அவளுக்கு அப்போதுதான் மதியின் செயலுக்கான காரணம் புரிந்தது.

“இவளை இங்கருந்து கூட்டிட்டு போய்டு பரிதி. இல்லைன்னா அவ பேசுறதை என்னால பொறுத்துட்டு இருக்க முடியாது!” என்றாள் கண்டிப்பான குரலில்.

“ஏய்... என்னை வீட்டைவிட்டு வெளியப் போக சொல்ல நீ யாரு டீ? இது என் இளா வீடு. அவனும் ரென்டு தர்றான். ஹால்ல இருப்பேன். ரூம்ல கூடப் படுத்து உருளுவேன்!” என்றாள் பொத்தென இருக்கையில் விழுந்து.

இசைவாணி அவளைப் பொருட்படுத்தாமல் அகலப் பார்க்க, “ஏய்... எங்க டீ எஸ்கேப் ஆகப் பார்க்குற? உன்னை நறுக்குனு நாலு வார்த்தைக் கேட்லாம்னுதான் டீ நான் வந்ததே!” என ஓடிச் சென்று அவள் கையைப் பிடித்திழுத்தாள் மதி.

வாணி எரிச்சலோடு அவளைப் பார்க்க, “ஏன்டீ..‌ இசைவாணி. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா? உன்னைவிட சின்ன பையனை அக்ரீமெண்ட் மேரேஜ், விசா வாங்கித் தரேன்னு ஆசைக் காட்டி வளைச்சுப் போடப் பார்த்திருக்க? நீயெல்லாம் என்னப் பிறவி டீ. உன்னை உங்கம்மா இப்படித்தான் வயசுல சின்னவனா பார்த்து வளைச்சுப் போடுன்னு அவுத்து விட்டுட்டாங்ளா?” என அவள் கேட்டு முடியும் முன்னே இசைவாணி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையைக் கொடுத்திருந்தாள். மதி தாக்குப் பிடிக்க முடியாமல் அப்படியே பொத்தென தரையில் விழுந்திருக்க, இசைவாணியின் முகம் ரௌத்திரமாயிருந்தது.

“மதி...‌ அறிவுருக்கா உனக்கு? உன்கிட்டே படிச்சு படிச்சு என்ன சொன்னேன்? நாங்க ரெண்டு பேரும் மேரேஜை கேன்சல் பண்ணி‌ டைவர்ஸ் வாங்கிட்டோம்னு சொன்னேனா இல்லையா? இப்படித்தான் அவளைப் பத்தி தப்பா பேசுவீயா? உனக்கு யாரு அந்த ரைட்ஸைக் கொடுத்தது? முதல்ல அவகிட்டே சாரி கேளு!” என சீற்றத்துடன் பரிதி மதியை எழுப்பி நிற்க வைக்க, அவள் கண்களிலிருந்து பொலபொலவென நீர் வடிந்தது.

“எனக்குத் தெரியும் டா. இவளோட சேர்ந்து என்னை ஏமாத்துறதுதானே உன் ப்ளான். நீ என்ன சொன்னாலும் தலையாட்டி பூம் பூம் மாடு மாதிரி கேட்டேன் பாரு. என்னை செருப்பால அடிக்கணும். அக்ரீமெண்ட் அது இதுன்னு பொய் சொல்லி இரண்டு வருஷம் இவளோட லிவ்விங் இன்ல இருந்திருக்கல்ல நீ?” என ஆங்காரத்தோடு அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் மதி.

“லூசா டீ நீ... அவளோட ஒரே வீட்லருந்தா நாங்க ஒன்னா வாழ்ந்ததா அர்த்தமா? அப்படி அதான் உண்மைன்னா அதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்ல. நடக்காத விஷயத்தை நீயா கற்பனை பண்ணி என்னை டென்ஷன் பண்ணாத!” இவன் தலையைப் பிடித்தான். காலையில் அவள் நல்ல மனநிலையில் இருக்கவும், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்து விட்டான். அப்போது அவனிடம் சண்டையிட்டு குடித்து ஆர்ப்பாட்டம் செய்தவள், போதை இறங்கியதும் மீண்டும் குடித்துவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு வாணியோடு சண்டையிட வந்தாள்.

“பொய்! நீ ஒரு ஏமாத்துக்காரன். உன்னை நம்பி நான் ஏமாந்துதான் போகப் போறேன். உன்னை உண்மையா லவ் பண்ணேனேடா. உனக்காக எவ்ளோ செஞ்சிருக்கேன் நான். இப்படி அவளோட நீ அஃபேர்ல இருப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கலை. எனக்கு நீ உண்மையா இல்லை!” என்றவள் தன் தலையிலே அடித்துக்கொண்டு அழ, பரிதி அவளைத் தடுத்து நிறுத்தி தன் முகம் பார்க்க வைத்தான்.

“மதி... என்னை நம்புறேன், நம்புறேன்னு சொல்றல்ல. அப்போ இதையும் நம்பு. அவ மேல என் சுண்டு விரல் கூட பட்டதில்ல. நான் என் வருங்கால பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். அண்ட் வாணி நீ சொல்ற மாதிரி கெட்டவ இல்ல. இப்போ நான் இங்கே இருக்கேன்னா அதுகெல்லாம் அவ மட்டும்தான் காரணம். அவளைப் பத்தி தப்பா பேசாத. எனக்கு கோபம் வரும்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவன் முகத்தையே பார்த்திருந்த மதியின் கண்களில் நீர் நிரம்ப, அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள், தேம்பத் தொடங்கினாள். பரிதி அவள் அழுகையில் பரிதவித்து நானும் அமர்ந்தவன், “மதி... ஏன் டீ?” என ஆற்றாமையுடன் கேட்டான்.

அவன் சட்டையைப் பிடித்தவள், “உனக்கு எவ்வளோ தைரியம் டா. என் முன்னாடியே அவளைத் திட்டுனா உனக்கு கோபம் வரும்னு சொல்ற. அப்போ அவதான் உனக்கு முக்கியமா? அவ உனக்கு பொண்டாட்டியா நடிக்க வந்தவ. ஆனால் காலம் முழுக்க நான் உன்னோட வாழப் போறேன்டா. நீ எனக்குத்தானே ப்ரையாரிட்டி கொடுக்கணும். அவ என்ன அவ்ளோ முக்கியமா போய்ட்டா. நீதானே அவ வயசை மறைச்சு உன்னைக் கல்யாணம் பண்ணி ஏமாத்துனான்னு சொன்ன. அந்த ஏமாத்துக்காரிக்கு இப்போ நீ நல்லவ பட்டம் கொடுக்குற. ரெண்டு வருஷம் ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்திருக்கீங்க. அப்போ நான் என்னென்னு நினைக்கட்டும்?” எனக் கேட்டவள் கேவி அழுதாள்.

“மதி... உன்கிட்டே முன்னாடியே நான் சொல்லிருக்கணும். பட் நீ இதை பெருசா எடுத்துக்க மாட்டேன்னு நினைச்சுத்தான் நான் சொல்லலை!” அவன் தயங்கினான்.

அவன் கன்னத்திலே சப்பென ஒரு அறை கொடுத்தவள், “இதே மாதிரி நானும் காண்ட்ராக்ட் மேரேஜ்னு ஒருத்தன் கூட ரெண்டு வருஷம் வாழ்ந்துட்டு வரேன். உன்னை மாதிரியே ஒரே வீட்ல அவனைத் தொடாம இருந்துட்டு பத்தினின்னு சொல்றேன். நீ என்னை ஏத்துப்பீயா?” என அவள் சீற, இவன் முகம் அவமானத்தில் கன்றியது. முடியாது என தலையை அசைத்தான்.

“உன்னால முடியாது... ஆனால் நீ இவளோட ஒரே வீட்ல வாழ்ந்ததை நான் பெருசா எடுத்துக்க கூடாது. கல்யாணம்னா உனக்கு அவ்வளோ ஈஸியா போச்சாடா? ஊரறிய அவ கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டியாக்கியிருக்க. லீகலா ரெண்டு பேரும் பேப்பர்ல சைன் போட்டா எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா? அவ... அவளைப் பார்க்க பார்க்க எனக்கு கோபம் வருது டா. அவதானே முதல்ல வந்து இந்த ஐடியாவைக் கொடுத்தது!” எனக் கேட்ட மதி, தங்களையே உறுத்துப் பார்த்த வாணியைக் கண்களால் எரித்தாள்.

“வயசு ஏறிட்டே போகுது. பார்க்க ஆன்ட்டி மாதிரி இருக்கோம்னு உன்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிருக்கா அவ. ஆனால் நீ அவளுக்கு நல்லவ பட்டம் கொடுக்குற? நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாம்னு நான் எவ்ளோ ப்ளான் பண்ணிருந்தேன் தெரியுமா?” எனக் கேட்டு அவள் தேம்ப,
 
Administrator
Staff member
Messages
1,319
Reaction score
3,931
Points
113

பரிதி அவளை மார்போடு இழுத்தணைத்துக் கொண்டவன், அவள் முன்னுச்சியில் அழுத்தமாக முத்தமிட்டு, “சாரி டீ. தப்புதான். நான் செஞ்சது பெரிய தப்பு. என்னை மன்னிச்சு ஒரு வாய்ப்பு குடு மதி. உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன். கண்கலங்க விட மாட்டேன் டீ!” என்றான் இறைஞ்சலாக. இசைவாணி கையைக் கட்டிக்கொண்டு அவர்கள் இருவரையும் விழியகலாது பார்த்திருந்தாள். இமைத்தால் கண் கலங்கிவிடுவேன் என அவளை மிரட்டியது போல. உதட்டைக் கடித்து நிர்மலமான முகத்துடனும் உணர்ச்சியற்ற பார்வையுடனும் நின்றாள். ஆனால் உள்ளே வெடித்துச் சிதறக் காத்திருந்தன அவளது உணர்வுகள்.

“எனக்கு... என்னைத் தொட்டு நீ கட்ட வேண்டிய தாலி அவ கழுத்துல இருக்கு இளா. அதை அவகிட்டேருந்து வாங்கு டா. அந்த தாலியைப் பார்க்கும்போதுலாம் எனக்கு உன் மேலயும், அவ மேலயும் கோபமா வருது!” மதி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வாணியை நோக்கி கையைக் காண்பித்தாள்.

அவள் பேச்சில் திடுக்கிட்ட வாணி ஒரு நொடி தாலியை தன் நெஞ்சோடு அணைத்துப் பிடிக்கச் சென்று, பின்னர் விரல்களை இறுக்கித் தன்னைக் கட்டுப்படுத்தினாள். பரிதி மதியை எழுப்பி இருக்கையில் அமர வைத்தான்.

பின்னர் சங்கடத்துடன் வாணியைப் பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வில் இவனிடம் பெருந்தயக்கம். பின்னர் மதியைப் பார்த்தவன், “மதி ப்ளீஸ்... இப்போ வேணாம். அவளே ஊருக்குப் போகும்போது கழட்டித் தர்றேன்னு சொல்லிட்டா. நம்பளா வாங்குனா நல்லாருக்காது டீ!” என்றான் கெஞ்சலாக.

“முடியாது இளா... முடியவே முடியாது. அது எனக்கு சொந்தமான தாலி. நீ எனக்கு கட்ட வேண்டிய தாலி. இதென்ன ஒரிஜினல் மேரேஜா? டூப்ளிகேட் தானே? அதுல என்ன சென்ட்டிமெண்ட்? எனக்கு அது வேணும். போய் வாங்கிட்டு வா. இல்லைன்னா நான் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன். சாப்பிட மாட்டேன்!” என்றாள் கையைக் கட்டி அடத்துடன். இரண்டு வருடங்கள் அவளை அறிந்தவனுக்கு, அவள் பிடிவாதமும் வெகு பரிட்சயமாகிற்றே.

தயக்கத்துடன் எழுந்தவன், “வாணி ப்ளீஸ். தாலியைக் கழட்டி கொடுத்துடேன். அவ குடிச்சிருக்கா. ரொம்ப பிடிவாதமா இருக்கா. அவளை என்னால சமாளிக்க முடியாது!” என வாணியருகே சென்றான்.

“முடியாது பரிதி. என்னால தாலியைக் கழட்டி கொடுக்க முடியாது. ஊருக்குப் போகும்போது நானே தர்றேன்னு சொன்னேனே. அப்போ தர்றேன். இப்போ இவ கேட்டான்னுலாம் என்னால கழட்ட முடியாது!” இசைவாணி தீர்க்கமாக மறுத்தாள். பரிதியால் அவளைக் கட்டாயப்படுத்த முடியவில்லை. அவள் கடுமையாகப் பேசினாலும் கூட அவளின் கோதுமை நிற விழிகள் கலங்கி, இவனைக் குற்றம் சுமத்தின. அவளை நேர்கொண்டு பார்க்கவே கூசியது இவனுக்கு. என்னவோ அவளுக்கு அநியாயம் செய்கிறோம் எனத் தெரிந்தாலும் சூழ்நிலை கைதியாகி நின்றான்.

“வாணி ப்ளீஸ்... இது என் லைஃப் மேட்டர். நீ தாலியைக் கொடுத்தாதான் அவ சமாதானமாவா. எனக்கு மதி ரொம்ப முக்கியம். இதென்ன நிஜக் கல்யாணமா? உனக்கு இந்த சென்டிமெண்ட் எல்லாம் கிடையாதுன்னு எனக்குத் தெரியும்!” அவன் அருகே நெருங்க, இசைவாணி மறுப்பாகப் பார்த்தாள். மாட்டேன் என்பது போல அழுத்தமாக நின்றாள். கண்கள் கலங்கி கண்ணீர் கரையேரக் காத்திருந்தது.

“சபாஷ்... எனக்குத் தெரியும் டீ. சும்மா பேப்பர்ல சைன் போட்டு டைவர்ஸ் தர்ற மாதிரி ஏமாத்திட்டு இவனைக் கொத்திட்டுப் போறதுதானே உன் ப்ளான்?” என மதி கோபத்துடன் எழுந்தாள்.

“மதி... நான்தான் வாங்கித் தரேன்னு சொன்னேன்ல. போ... உக்காரு!” என இளமதியை உட்கார வைக்க முயன்றான் பரிதி.

“ஏய்...இன்னுமா டா உனக்குப் புரியலை. அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு!” என்றாள் இவனிடம் சீறலாக. இசைவாணி முகம் மாறாதிருக்க பிரயத்தனப்பட்டாள்.

“லூசு மாதிரி உளறாத மதி!” இவன் அதட்ட,

“நான் லூசாடா? நீதான் லூசு. அவ முகத்தைப் பாரு. அவ கண்ணைப் பாரு. நான் நிறைய தடவை நோட் பண்ணிருக்கேன்‌. அவளுக்கு நீயும் நானும் ஒன்னா இருந்தாலே பொறாமை பொங்கும். ஒரு பொண்ணா என்னால அதை ரியலைஸ் பண்ண முடியும். அவ உன்னை லவ் பண்றா டா!” என மதி கத்தினாள். பரிதி நெஞ்சம் திடுக்கிட வாணியைத் திரும்பி பார்த்தான். அவள் பார்வையில் தடுமாற்றமில்லை, தயக்கமில்லை. குறைந்தபட்ச அதிர்ச்சி கூட அவளிடமில்லை. உணர்வுகளற்று அவனை வெறித்தாள்.

“சாரி வாணி... அவ ஏதோ தெரியாம உளருறா. நீ தப்பா எடுத்துக்காத!” அவளிடம் மன்னிப்பைக் கேட்டான் பரிதி.

“இளா...” எனக் கத்திய மதி, “நான் உளறலைடா. உண்மையைத்தான் சொல்றேன். குடிச்சிருந்தா கூட நான் தெளிவா இருக்கேன்!” என அவள் கூற, இவன் இல்லையென்பது போல தலையசைத்தான்.

“சரி...நீ சொல்றது உண்மைன்னா அவ கையாலே தாலியைக் கழட்டி வாங்கிட்டு வா. இந்த நிமிஷத்தோட நான் அவளைப் பத்தியோ, உங்களோட அக்ரீமெண்ட் மேரேஜ் பத்தியோ பேசவே மாட்டேன். இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம். நீ தாலியை மட்டும் வாங்கிட்டு வா!” என்றாள் அழுத்தமாக.

இசைவாணியின் கண்களில் இப்போதுதான் ஈரப்பதம் வெகுவாக கோர்த்திருந்தது போல. இமையோரம் படரப் பார்த்த நீரோடு பரிதியைக் குற்றம் சுமத்தினாள். வேண்டாமென்ற பார்வை பார்த்தாள். உதட்டைக் கடித்து தொண்டைவரை வந்த வார்த்தையை வலிக்க வலிக்க விழுங்கினாள்.

“வாணி... இதுவரைக்கும் நீ எனக்கு எவ்ளவோ நல்லது செஞ்சிருக்க. அதோட இதையும் சேர்த்துக்கோ. நான் சந்தோஷமா வாழ்ந்தா உனக்குப் பிடிக்கும்னு சொன்னல்ல. நான் நிம்மதியா வாழணும்னா நீ அந்த தாலியைக் கழட்டி கொடுத்துடு வாணி. போகும்போது என் வாழ்க்கைல எந்தப் பிரச்சனையும் பண்ணிடாத வாணி. அவளோட நான் ரொம்ப வருஷம் நிம்மதியா வாழணும். கெஞ்சிக் கேட்குறேன்!” பரிதி இறைஞ்ச, வாணியின் இதழ்கள் கசப்பாய் முறுவலித்தன. இதொன்றும் எனக்குப் புதிதல்ல என காயம் கண்ட இதயம் குழந்தையாய் கேவி அழுதது.

முகத்தில் எதையும் காண்க்காதவள், “நல்லா இரு!” என்றுவிட்டு, கண்களை சிமிட்டி கண்ணீரை வெளியே விடாமல் வெகு கவனமாக அவனிடமிருந்து தன்னுணர்வை மறைத்து தாலியைக் கழற்ற முயன்றாள். அப்போதுதான் அவள் குளித்து வந்திருந்ததால் சுருட்டை முடியில் தாலி மாட்டிக்கொண்டு வர மாட்டேன் என சதி செய்ய, சில நொடிகள் அதோடு போராடினாள் வாணி.

இதைக் காணப் பொறுக்காத மதி பாய்ந்து எழுந்து வந்து அவள் கழுத்திலிருந்த தாலியை கையோடு அறுத்திருந்தாள். தாலியில் கோர்த்திருந்த நான்கு சிவப்பு மணிகளும் ஆளுக்கொரு திசையில் சிதறிட, இதயம் அதிர்ந்து அடங்க, இசைவாணியின் கண்களில் மழுக்கென சூடான திரவம் நிரம்பி வழிந்தது. இமையை அசைக்காமல் அந்த நான்கு மணிகளையும் பார்த்தாள். நெஞ்சோடு இரண்டு வருடங்கள் உறவாடிக் கொண்டிருந்த உறவும் உணர்வும் மொத்தமாய் அறுந்து போனது. அவளது கண்ணீர் கூட தரையில் பட்டுத் தெறித்து மோட்மளித்துவிட்டது.

“மதி... என்ன பண்ற நீ? அவதான் அவுத்து தரேன்னு சொன்னால்ல. அப்புறம் ஏன் டீ நீ இப்படி பண்ண?” பரிதி மதியிடம் கத்த,

“ப்ம்ச்... ஏதோ சீரியல்ல வர்ற மாதிரி ஸ்லோமோஷன்ல கழட்டுறா, முடியில மாட்டிக்கிச்சுன்னு சீன் போட்றாடா அவ. நீயும் அந்த ஆக்டிங்கை நம்பிட்டு இருக்க!” என்றவள், அறுந்த தாலியைத் திருப்தியாகப் பார்த்தாள். பரிதி ஒரு இறைஞ்சுதலோடு வாணியை நோக்க, அவள் தலையை நிமிர்த்தாமல் விறுவிறுவென அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றி அதிலே சாய்ந்தமர்ந்து முட்டியில் முகம் புதைத்தாள்.

இவ்வளவு நேரம் அழக்கூடாது என்ற வைராக்கியம் உதிர, கண்ணீர் சுதந்திரமாய் கன்னத்தில் இறங்கிற்று. மெல்ல மெல்ல அவள் அழுகை உடைந்து விசும்பலாக மாற, தேம்பியழத் தொடங்கினாள். எதற்காக, யாருக்காக இந்த அழுகை என்றே தெரியாமல் எல்லாவற்றையும் இன்றோடு அழுது தீர்த்துடும் வேகம் அவளிடம். விசும்பல் வேறு பலமாய் வந்து தொண்டையை இறுக்கிப் பிடித்து வலிக்கச் செய்தது.

இரண்டு கரத்தையும் விரித்துப் பார்த்தாள். என்னவோ இதயம் ஒட்ட வைக்க முடியாத கண்ணாடி துண்டுகளாய் உடைந்து போய் கைகளில் குத்தியதைப் போலொரு வலி. வலி தீரத்தான் அழுதாள்.

“நவ் ஐ யம் ஹேப்பி இளா. அவ கழுத்துல போய் நீ கட்டுன தாலி இருக்குமா?” என்றவள், தான் கையில் வைத்திருந்த தாலியை ஒரு மூலைக்கு தூக்கியெறிந்தாள்.

“சீ... அவ போட்டிருந்த தாலியெல்லாம் நான் கட்டிக்க மாட்டேன். நம்பளோட கல்யாணத்துக்கு புதுசா தாலியைக் கஸ்டமைஸ் பண்ணுவோம். ஊரையே கூப்பிட்டு செம்ம கிராண்டா மேரேஜ் பண்ணணும் பரிதி!” என்றவள், அப்படியே சோபாவில் படுத்துவிட்டாள். பரிதி பிடரியைக் கோதியபடியே தாலியையும் மணியையும் தேடியெடுத்தான். மூன்று மணிகள் மட்டுமே கிடைக்க, அனைத்தையும் கைக்குட்டையில் எடுத்து சின்னதாய் முடிந்தவன், இசைவாணியின் கதவைத் தட்டினான்.

அவளது விசும்பல் சப்தம் கேட்கவும், இவனுக்கு குற்றவுணர்வாகிப் போனது. “வாணி ப்ளீஸ்... தப்பு என்னோடதுதான். என்னை வேணா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ. உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத வாணி. நீ அழுறது எனக்கு கஷ்டமா இருக்கு. கதவைத் திற!” என இவன் எவ்வளவு முயன்றும் அவளது அறைக் கதவை திறக்கப்படவேயில்லை. அதே போல அவளது அழுகை விசும்பல், தேம்பல் என எதுவுமே நிற்கவேயில்லை. இவனுக்கு நெருப்பு மேலே நிற்பது போலிருந்தது.

அந்தக் கைக்குட்டையை அறை வாயிலிலே வைத்துவிட்டு மதிக்கு அருகிலே அமர்ந்தான். அவள் இவன் மடி மீது தன் கால்களைத் தூக்கிப் போட்டாள். பின்னோடு தலையை சரித்து கண்களை மூடியவனுக்கு மதி தாலியை அறுத்தெறிந்ததும், தன்னை அதிர்ந்து பார்த்த வாணியின் முகம்தான் வந்து நின்றது. இன்னும் கடுமையுடன் மதி இங்கு வருவதைத் தடுத்திருக்க வேண்டுமென தன்னையே நிந்தித்தான்.

இரண்டு மணிநேரம் கடந்திருக்க, இசைவாணியின் அறைக் கதவு திறக்கப்பட்டது. உடை மாற்றி, முகம் கழுவி எங்கோ சொல்ல தயாரானாள்‌. பரிதி நேரத்தைப் பார்த்தான்.

“வாணி... இந்த நேரத்துல தனியா எங்கப் போற? நானும் வரேன்!” என விரைந்து அவள் கையைப் பிடித்தான். தீச்சுட்டாற் போல விலகியவள், அவனை தீர்க்கமாகப் பார்த்தாள்‌. அந்தப் பார்வையே அவனை விலகி நிற்க வைக்கப் போதுமானதாக‌
இருந்தது. அவள் அகன்றதும் பரிதி தன்னையே நொந்து கொண்டு அமர்ந்தான்.

வாணி நேரே போய் நின்றது சிவன் கோவிலில்தான். இன்றைக்கு பிரதோஷம் என்பதால் நள்ளிரவு வரை பூஜை நடக்கும். கோவிலும் திறந்தே இருக்குமென்பதால் கிளம்பி வந்துவிட்டாள். இவ்வளவு நேரம் காய்ந்து போயிருந்த கண்ணீர் கரைகளும், வற்றிப் போயிருந்த கண்ணீர் சுரப்பியும் அவள் கோவிலுக்குள்ளே காலடி எடுத்து வைத்ததும் மீண்டும் உடைப்பெடுத்தது.

கற்சிலையாய் இருந்த கடவுளை நோக்கி கையைக் கூப்பி கண்ணை மூடியவளின் இமையை மீறி கண்ணீர் கடகடவென வழிந்தது. உதட்டைக் கடித்து யாருடைய கவனத்தையும் கவராமல் கூட்டத்தோடு சென்று அமர்ந்தாள். அவள் பார்வை சிவனையே வெறித்திருக்க, விழிகளின் ஈரம் காயவே இல்லை.

வெடித்தழுது எல்லாவற்றையும் கடவுளிடம் கூறிவிட வேண்டும் என்றுதான் வந்தாள். ஆனால் என்னவோ உள்ளே நுழைந்ததும் கண்ணீர் மட்டும்தான் வந்தது. வாயைத் திறந்து ஒரு வார்த்தைக் கூடப் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. முயன்று அழுகையை விழுங்கியவள், இரண்டு மணி நேரம் இமைக்காமல் சிவனைத்தான் பார்த்தாள்.

பூஜை முடிந்து அனைவரும் கிளம்பினர். இவள் மரத்தக் கால்களை கடினப்பட்டு நகர்த்தினாள். வீட்டிற்கு செல்லவோ, அவர்கள் இருவரின் முகத்தில் விழிக்கவோ இவளுக்கு சுத்தமாய் விருப்பமில்லை. ஆனாலும் எங்கும் செல்ல முடியாத தன்நிலையை எண்ணி கழிவிரக்கத்தில் மீண்டும் அழுகை பொங்கிற்று. யாரிடமும் சென்று நின்று அனுதாபம் தேட விரும்பாதவள், மீண்டுமொரு சிவனை தரிசித்தாள். விபூதியை எடுத்து நெற்றி நிறையப் பூசிக்கொண்டு வீடு நோக்கிச் சென்றாள். இடையில் தன் தோழிக்கு அழைத்து உடல்நிலை திடீரென சரியில்லாமல் மருத்துவரைப் பார்க்க சென்றுவிட்டதால் பிரிவு உபச்சார விழாவிற்குத் தன்னால் வர முடியவில்லை என மன்னிப்பு கேட்டாள்.

அவள் வீடு நுழையும்போது இருவரும் அப்படியேதான் இருந்தனர். பரிதி, நெடுநேரமாகியும் வாணி வரவில்லையே எனப் பயத்தோடு பார்த்திருந்தான். அவள் வந்ததும்தான் இவனுக்கு மூச்சே விட முடிந்தது.

அவள் வந்தக் கோலமே எங்கு சென்று வந்திருக்கிறாள் எனக் கூற, “இந்நேரத்துல கோவிலுக்குப் போனீயா வாணி. என்னையும் கூட்டிட்டுப் போக வேண்டியது தானே?” எனக் கடிந்தவன், வீங்கியிருந்த அவள் இமைகளையும், சிவந்திருந்த நாசியையும் பார்த்து தயங்கினான். நிறைய அழுதிருக்கிறாள் என அவனுக்கும் புரிந்தது.

“வாணி... சாரி. சாரி. நான் அவளைக் கூட்டுட்டே வந்திருக்க கூடாது!” என அவன் கூற வருவதைக் கூட அவள் கேட்காமல் கதவை அடித்துச் சாற்றியிருந்தாள். இவன் தொங்கிப் போன முகத்துடன் மதியருகே உட்கார்ந்தவாறே தூங்கிப் போனான்.

மறுநாள் காலை இளமதி எழுந்ததும் இவன் அவள் நடந்து கொண்ட விதத்தை வைத்து அவளைக் கடுமையாகத் திட்ட, “லவ்னு என் பின்னாடி சுத்தீட்டு அக்ரீமெண்ட் மேரேஜ்னு வீட்ல ஒரு பொண்டாட்டியோட இருந்த நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணாத இளா. லண்டன்ல பொறந்தா நான் ரொம்ப ஸ்போட்டீவா இருப்பேன்னு நினைச்சியா நீ? பதினேழு வருஷம் இந்தியால பொறந்து வாழ்ந்துட்டு ஏழெட்டு வருஷமாத்தான் இங்க இருக்கேன். என்கிட்டே நடந்ததை மறைசது ரொம்ப தப்பு. முன்னாடியே நீ சொல்லிருக்கணும். அதனாலே நீ யோக்கியம் மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணாத!” என அவளும் பதிலுக்கு காய்ந்துவிட்டுப் போனாள்.

பரிதி எதுவும் கூறாமல் தன்னறைக்குச் சென்று பாதியிலே விட்ட உறக்கத்தை தொடர்ந்தான். வேலைக்கு செல்ல வேண்டுமென அலைபேசியில் அலறியை வைத்துவிட்டுத்தான் படுத்தான். சரியாய் ஒருமணி நேரத்திற்கு முன்னே எழுந்து குளித்து தயாரானான். நேற்றிரவும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. வாணியின் அறைக்கதவு மூடியே கிடந்தது. அதனால் அவள் சமைத்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்தாலும் சென்று பார்த்து ஏமாந்தான்.

‘மதி பண்ண வேலைக்கு அவ எழுந்து உனக்கு குக் பண்ணி வைப்பான்னு நினைக்கிற பாரு. உன்னை செருப்பாலயே அடிச்சா கூடத் தகும்!’ என முனங்கிக் கொண்டே அலுவலகம் கிளம்பினான். அங்கு சென்றும் அவனால் வேலையே பார்க்க முடியவில்லை. நேற்றைக்கு அழுத முகத்தோடு கோவில் சென்று வந்த வாணி அவனை நிரம்ப இம்சித்தாள். அவளிடம் தானும் சரியாய் நடந்துக் கொள்ளவில்லை என வருந்தினான்.

மாலை அவன் வரும் நேரம் அவள் அறைக் கதவு லேசாய் திறந்திருக்க, ஆசுவாசத்தோடு உள்ளே நுழைந்தவன், கதவை நன்றாய் திறந்தான். “வாணி... காலைலருந்து ரூம்லயே இருக்கியா? எதுவும் சாப்டீயா நீ?” எனக் கேட்டான். அவள் பதிலே கூறவில்லை.

“ப்ம்ச்... சாரி வாணி. நீ... நீ இப்படி இருக்கதைப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு!” என்றான் தவிப்பான குரலில். அவள் பதிலளிக்கவில்லை என்றதும் உள்ளே நுழையச்‌ சென்றான் பரிதி. வாயிலில் நேற்று அவன் வைத்த கைக்குட்டையோடு தாலியும் அப்படியே இருந்தது.

“உள்ளே வராதே! நாளைக்கு நைட்டு வரை இந்த ரூம் என்னோடது. இந்த மந்த் எண்ட் வரைக்கும் நான் ரூம் ரென்ட் பே பண்ணிருக்கேன். உள்ள வர உனக்கு எந்த ரைட்ஸூம் கிடையாது!” என்றாள் நிதானமாக, அதே சமயம் அழுத்தத்துடன்.

முன்முடியை அழுந்தக் கோதியவன், “நீ கோபமா இருக்கன்னு தெரியும் வாணி. ஆனால் அந்தக் கோபத்தை எப்படி சரி பண்ணன்னு எனக்குத் தெரியலை. நாங்க ரெண்டு பேருமே உன்னை ஹர்ட் பண்ணிட்டோம்...” அவன் பேச, வாணி தன் துணிகளை எடுத்து பையில் அடுக்கினாள்.

“மந்த் எண்ட் தானே இந்தியா போறதா சொன்ன‌. நாளைக்கே கிளம்புறீயா வாணி? ஏன் இப்படி பண்ற நீ?” அவன் உள்ளே செல்லாமலே ஆதங்கத்துடன் அதட்டினான். அவள் தன் வேலையைப் பார்த்தாள்.

“உன்னைத்தான் கேட்குறேன் வாணி. இப்படி நீ விழுந்தடிச்சு ஓடுறளவுக்கு அங்க யார் இருக்கா உனக்கு?” அவன் எரிச்சலாக கேட்டதும், அவனைத் திரும்பிப் பார்த்த வாணியின் கண்கள் கலங்கின. அநாதை என்ற வார்த்தையை சூசகமாகச் சொல்லிவிட்டான்‌. உடைந்து விழத் தயாராகயிருந்தது அவள் கண்ணீர்.

அவள் முகத்தைப் பார்த்து தன் தலையிலே அடித்துக் கொண்ட பரிதி, “சாரி வாணி... நான் பேசுறது உனக்கு தப்பாவே கன்வே ஆகுது. அங்க போய் நீ தனியா கஷ்டப்படுவேன்னுதான் நான் வருத்தத்துல சொன்னேன்!” என்றான் தன்னையே நொந்துகொண்டு.

“நான் கேட்ட எதுக்குமே நீ பதில் சொல்லலைன்னா என்ன அர்த்தம் வாணி? ரெண்டு வருஷம் நம்ப ஒன்னா இருந்திருக்கோம். இப்படி நீ போகும்போது அழுதுட்டே மனசுக் கஷ்டத்தோட போனா நல்லாவா இருக்கும். ஒரு ஒன்வீக் கழிச்சுப் போகலாம் இல்ல வாணி. எனக்காக!” என அவன் இறைஞ்சினான். வாணி ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை.

“நீ இப்படி ஸ்டபானா இருக்க கூடாது வாணி. நான் காட்டுத் கத்து கத்திட்டு இருக்கேன். ஒரே ஒரு வார்த்தை ஏதாவது பேசித் தொலை. உன்னை இப்படி பார்த்துட்டுப் போய் என்னால வேலையே பார்க்க முடியலை வாணி!” என்றான் தவிப்புடன். அவனைத் திரும்பிப் பார்த்தாள் இசைவாணி‌.

அதில் நம்பிக்கை வரப் பெற்றவன், “நிஜமா நான் உன்னை ஹர்ட் பண்ணணும்னு நினைக்கலை. மதியை வர வேணாம்னு சொல்லியும் அடம்பிடிச்சு வந்துட்டா!” என அவன் மேற்கொண்டு பேசும் முன் கையைக் காட்டித் தடுத்துவிட்டாள்.

“எனக்கொரு ஹெல்ப் பண்றியா பரிதி?” எனக் கேட்டவளை ஆர்வத்துடன் பார்த்தவன், “சொல்லு வாணி!” என்றான்.

“நாளைக்கு நைட் எட்டு மணிக்கு எனக்கு ப்ளைட். ஈவ்னிங் வரை இங்கதான் இருப்பேன். சோ, அதுவரை என் கண்ல படாம மட்டும் இருக்கியா?” எனக் கேட்டவள், முயன்று குரலை சரி செய்தாள்.

அவளை அடிப்பட்ட பார்வை பார்த்தவன், “ச்சு... நான்தான் சொல்றேன்ல. வேணும்னு செய்யலை வாணி. சாரி!” என்றான் அவன்.

இவளது உதட்டில் கசப்பான முறுவல் படர்ந்தது. “நீ தெரியாம செய்றதுக்கு குழந்தை இல்ல பரிதி. எல்லாருக்கும் எல்லாம் தெரியும். என்னைக் கஷ்டப்படுத்துறது அவளோட இன்டென்ஷன். நீ அவளுக்குத் துணை போய்ருக்க. அவ்ளோதான். விடுங்க... நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க. உங்களை மாதிரியே நடந்து, நானும் தரம் தாழ்ந்து போக விரும்பலை. நீ எனக்கு செய்ற பெரிய உதவி என்ன தெரியுமா? எப்பவுமே என்னைத் தேடி வராத, காண்டாக்ட் பண்ணாத. நான் எங்கேயாவது கண்காணாத இடத்துல அட்லீஸ்ட் நிம்மதியா இருந்துட்டு போறேன். நீங்க ரெண்டு பேரும் என் கண்ணு முன்னாடி வராம இருந்தா நல்லது!” என்றுவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள். கண்ணீர் கன்னம் தொட்டுவிட்டது அவளுக்கு. இரவு முழுவதும் அழுததில் தொண்டை வலித்தது. பரிதி அவளையே பார்த்திருந்தான். அவனுக்கு என்னவோ சொல்ல முடியாத உணர்வொன்று நெஞ்சைப் போட்டு பிசைந்தது. அவள் அழுகையில் இவனுக்கும் கண் கலங்கின.

மாலையில் மதி இவனுக்கு அழைக்க, “ஒன் வீக் கழிச்சு இந்தியா போறேன்னு சொன்னவ, நாளைக்கே கிளம்புறா. எல்லாம் உன்னாலதான் மதி!” என அவளிடம் காய்ந்தான் பரிதி.

“ஏன்... ரெண்டை ஒரே நேரத்துல மெயின்டெய்ன் பண்ண முடியாம போச்சேன்னு ரொம்ப வருத்தமோ உனக்கு?” என நக்கலாக கேட்டவள், “நான் நாளைக்கு அங்க வரேன்!” என்றதோடு வைத்துவிட்டாள்.

நேற்றே தேவையான பொருட்களை இசைவாணி எடுத்து வைத்துவிட, சிலவற்றை அவளுக்குத் தெரிந்த அலுவலக நட்புகளை மறுநாள் அழைத்து எடுத்துப் போக அழைத்தாள். அவர்கள் வந்து இவளிடம் சிறிது நேரம் பேசி, உண்டுவிட்டு அகல, மாலை குளித்து தயாரானாள் வாணி. அவள் தன் பையைத் தள்ளிக்கொண்டு வெளியே வர, மதி அவளை இளக்காரமாக பார்த்துக்கொண்டே அவளது பை ஒன்றை எடுத்துச் சென்று வாணியின் அறையில் வைத்தாள்.

“என்ன பார்க்குற? அதான் கிளம்பிட்டேல்ல‌. இடத்தைக் காலி பண்ணு. தயவு செஞ்சு எங்க வாழ்க்கைல திரும்பி வந்துடாத!” என மதி சீற, வாணி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள்.

“வாணி... நான் ட்ராலியை இழுத்துட்டு வரேன். உன்னை சென்ட் ஆஃப் பண்ண மட்டும் பெர்மிஷன் கொடு!” என பரிதி கெஞ்ச, அவன் பேச்சைக் காதில் வாங்காமலே அவள் மகிழுந்தில் ஏறிச் சென்றுவிட, இவன் கோபத்தோடு காலைத் தரையில் உதைத்தான்.

“எதுக்கு இப்போ அவகிட்டே கெஞ்சிட்டு இருக்க. வா, வந்து அவளோட ரூமைக் க்ளீன் பண்ணு. நாளைக்கே நான் இங்க ஷிப்ட் ஆகுறேன். அவ இருந்த ரூம்க்குள்ள நுழையவே ஒருமாதிரி அருவருப்பா இருக்கு!” என்றாள் முகத்தைக் கோணியபடியே. பரிதி அவளை முறைத்தாலும் வாணியின் அறையை சுத்தம் செய்ய உதவினான். இல்லையில்லை இவன்தான் முழுதாக சுத்தம் செய்தான். மதி மேற்பார்வைப் பார்த்தாள். நேரம் செல்ல செல்ல பரிதிக்கு தவிப்பாய் இருந்தது. வாணி தனியாய் செல்கிறாள். அவளை வழியனுப்ப கூட தான் செல்லவில்லையே என்ற எண்ணம் அவனைப் போட்டு அழுத்திற்று.

அறையை சுத்தம் செய்து முடித்தவன், “இன்னும் ப்ளைட்டுக்கு டைமாகலை. நான் போய் வாணியை செண்ட் ஆஃப் பண்ணிட்டு வரேன் மதி!” என்றான். அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“அவளே வேண்டாம்னு சொல்லிட்டா. நீ போகணும்னு அவசியம் இல்ல. என்னை மீறி போகவும் கூடாது. அப்படி போனா, ரெண்டு வருஷமும் நீ அவளோட அஃபேர்ல இருந்தேன்னு
அக்செப்ட் பண்ணிட்டு கிளம்பு!” என அவனை அழுத்தமாகப் பார்த்துக் கேட்ட மதியை இவன் அதிர்ந்து பார்த்தான்.

தொடரும்...






 
Active member
Messages
254
Reaction score
205
Points
43
Perfect couple da neeyum unn madhiyum
Hurt pannavae porandha amsamana jodi rendu perum

Vani kelambitta ini yendha oru burdenum illama ava life ah lead pannuva
 
Well-known member
Messages
604
Reaction score
413
Points
63
இனிமே தான் வாணியோட அருமை உனக்கு தெரியும் புரியும்
 
Top