• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,288
Reaction score
3,788
Points
113
நேரம் – 14 💜

“இங்கயே நிறுத்து. நான் இறங்கிக்கிறேன் இசைவாணி!” முதல்முறை பரிதி முணுமுணுத்தது அவளுக்கு கேட்கவில்லை போல.

“என்ன?” எனக் கேட்டு திரும்பியவள், பின்னர் அவசரமாய் பார்வையை முன்னே வைத்தாள் இசைவாணி.

“இங்கேயே நிறுத்து. எங்க கூட்டிட்டு போற நீ?” சற்றே குரலை உயர்த்தி அவள் செவியோரம் இவன் கத்தவும், அதில் திடுக்கிட்டவள்,

“காதுகிட்டே வந்து கத்தி தொலையாத!” என கடுகடுத்தவள், “ஆமா.. இவர் பெரிய ஆணழகன். கடத்திட்டுப் போறாங்க. அமைதியா வந்து தொலை. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி விட்றேன். இப்படியே போய் உங்க வீட்ல நின்னா எவன்கிட்டயோ செம்மத்தியா வாங்கி கட்டிக்கிட்டேன்னு பயந்துடப் போறாங்க!” என்றாள் கேலியாக.

அதில் சடைத்தவன், “ஒன்னும் வேணாம். நான் வீட்டுக்குப் போறேன்!” என அவன் கோபமாக கூற, அவன் பேச்சை காதிலே வாங்காதவள், தன் வீட்டிற்குள்ளே வாகனத்தைச் செலுத்தினாள். கடையில் ஆட்கள் இருந்ததால் மார்த்தாண்டம் மகனைக் கவனிக்கவில்லை.

“உள்ள வா...” என அவனைக் கையோடு அழைத்துச் சென்றாள் இசைவாணி. சிடுசிடுப்புடனே அவளுக்கு இயைந்தான் இவன்.

அப்போதுதான் சுந்தரி பசிக்கிறது எனத் தேநீரையும் சர்க்கரை இல்லாத ரொட்டியையும் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கினார். மகள் வரும் நேரமாதலால் அவளுக்காகவும் சேர்த்து தேநீர் தயாரித்து வைத்துக் காத்திருந்தார். ஆனால் அவளோடு பரிதியும் வந்தான்.

நெற்றியில் சிராய்ப்பு, கிழிந்த சட்டை, புழுதியில் புரண்ட உடலுமாக வாந்தவனைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றவர், “தம்பி... என்னாச்சு? ஏன் இப்படி?” எனப் பதறி அவனருகே வந்தார்.

“ம்ப்ச்... ம்மா... பதறாத. ஒன்னும் இல்ல. பைக் ஓட்டும்போது சாகசம் பண்ணி தம்பி புதையல் எடுத்துட்டாப்புல. நான்தான் அழுதுட்டு இருந்தவரை சமாதானம் பண்ணி ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண கூட்டிட்டு வந்தேன். நீ போய் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துட்டு வா!” என சுந்தரிக்கும் அவனுக்கும் இடையே நுழைந்தாள் அவள்.

“ஏன்டீ... அவர் கீழே விழுந்துட்டாரு. நீ நக்கல் பண்ற!” மகளை முறைத்தப் பெரியவர், “வந்து உட்காருப்பா...” என நீள்விருக்கையில் அவனை அமரப் பணித்துவிட்டு, உள்ளே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தார்.

அதை வாங்கிய இசைவாணி அவளே அவனது காயத்தை வெகுசிரத்தையாக துடைத்தாள். சுந்தரி அவனருகே வர முயல, “ம்மா... அவனுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா!” என அவரை அப்புறப்படுத்திவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.‌

“ஸ்ஸ்...” அவன் சட்டென கையை எடுத்துவிட்டு முனங்க, “ரோட்டைப் பார்த்து ஓட்டாம சாகசம் பண்ணா இப்படித்தான் வலிக்கும். கொஞ்சம் பொறுத்துக்கோ!” என்றுவிட்டு காயத்தை துடைத்து மருந்திட்டவளைப் பார்த்து முறைத்தவன் பெருமூச்சுடன், “சாரி இசைவாணி!” என்றான் சின்ன குரலில். அவளுடன் வரும்போது கிடைத்த பத்து நிமிடத்தில் நடந்த அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்த மனது ஒருவழியாய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டது. அதனாலே தன்முனைப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு மன்னிப்பைக் கேட்டான்.

“என்ன திடீர் ஞானோதயம்? அவ்வளோ நல்லவன் இல்லையே நீ?” என்றவள் நெற்றியில் அவன் கோபமூச்சு படர்ந்தது போல. அதை உணர்ந்தவள், விரைந்து வேலையை முடித்து எழ முயன்றாள்.

அப்போதுதான் அவன் நெற்றி காயம் நினைவு வர, அதைப் பார்த்துவிட்டு துடைத்து மருந்திட்டாள். வெகு அருகில் தெரியும் அவள் முகம், மூக்குத்தியோடு மின்னிய மூக்கு, ரோஜாவுக்கும் சிவப்புக்கும் இடையே கோடு போட்டு பிரித்தது போலொரு நிறத்திலிருந்த உதடுகள், ஆங்காங்கே பரு வந்து வடுவாகிய தழும்புகள் என அவன் விழிகள் அவளை மெதுவாய் மேய்ந்தன.

பரிதியின் ஆராய்ச்சி பார்வை கொடுத்த அசௌகரியத்தில் அவனை முறைத்து எழ முயன்றாள் இசைவாணி.
அவள் கையைப் பிடித்தவன், “நிஜமா சாரி!” என்றான் அவள் முகம் பார்த்து தயங்கி.

அவனை சில நொடிகள் ஆழப் பார்த்தவள், “விடு...” எனத் தன் கையை உருவினாள். சுந்தரி குளிர்ந்த பானத்தை அவனிடம் கொடுத்தார். அவனருகே அவர் அமருமுன்னே இவள் உட்கார்ந்துவிட்டாள்‌. அவளது செய்கைகளை ஒருவித புருவச்சுழிப்புடன் பார்த்துவிட்டு பழச்சாற்றை அருந்தினான் பரிதி.

சுந்தரி அவனிடம் எப்படி விபத்து நிகழ்ந்தது என ஆராய்ச்சியைத் தொடங்க முயல, “ம்மா... அவனுக்கு டையர்டா இருக்கும். என்னாச்சுன்னு நானே சொல்றேன். அவன் போய் ரெஸ்ட் எடுக்கட்டும்!” என அவர்கள் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்னே அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தாள்.

“ஆமா தம்பி... நம்ப இன்னொரு நாள் பேசலாம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. உடம்பை பார்த்துக்கோங்க!” என அவர் கூற, “சரிங்க ஆன்ட்டி...” என அவன் வெளியே செல்ல, வாணியும் அவனோடு நகர்ந்தாள்.

காலணியை மாட்டிவிட்டு நிமிர்ந்தவன், “என்ன... உங்கம்மாகிட்டே பேச விடாம என்னைத் தொரத்தி விடுறதுலயே குறியா இருக்க? என் மேல அவ்ளோ பயமா போட்டு விட்டுடுவேன்னு?” என நக்கலாக கேட்டான்.

அவனை மேலிருந்து கீழாக கேலியாகப் பார்த்தவள், “உன்னைப் பார்த்து நான் ஏன் டா பயப்படணும்?” என அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்.

அதில் சீண்டப்பட்டவன், “இப்பவே போய் உங்கம்மாட்ட பத்தி வைக்கிறேன்!” என உள்ளே செல்ல முயன்றவனின் கால்சராயலிருந்த இடுப்பு பட்டையைப் பிடித்திழுத்து சுவரோடு சாய்த்தவள், “இப்போ மட்டும் நீ போய் என் அம்மாகிட்டே நீ பேசுன ஒன்னு இல்ல, நூறு அக்ரீமெண்ட் போட்டாலும் அவங்க பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணித் தர மாட்டாங்க!” என்றாள் உதட்டை வளைத்துக் கேலியாக.

பரிதிக்கு அவள் வார்த்தைகள் பாதிதான் புத்தியில் ஏறியது. அருகே தெரிந்த அந்த கோதுமை நிற விழிகள் அவனை சலனப்படுத்தின. படபடத்துப் போனவன், நொடியில் பார்வையை நகர்த்தி, “என்ன லூசு மாதிரி உளர்ற!” என்றவாறே அவள் கையைத் தன்னிடமிருந்து பிரித்து நகர்ந்து நின்றான். இன்னுமே அவள் விரல்கள் இடுப்பு பட்டையோடு ஒட்டிக் கொண்டதை போல உணர்ந்து அவ்விடத்தை அவளறியாமல் தட்டிவிட்டான்.
 
Administrator
Staff member
Messages
1,288
Reaction score
3,788
Points
113
“ஆஹ்... நீ குடிச்ச சிகரெட் நாத்தம் இங்க வரைக்கும் அடிக்குது!” அவள் ஒருவித அசூயையுடன் கூறவும், படக்கென அவளைப் பார்த்து அதிர்ந்தவன், “இல்லையே... எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்ல!” என்றான் தீனமான குரலில்.

“சீ... நடிக்காத. நீ பேசும்போது இங்க வரை ஸ்மெல் வருது. உன் பக்கத்துலயே நிக்க முடியலை. இந்த லட்சணத்துல போய் என் அம்மாகிட்டே நீ எதுவும் பேசி வச்சா மொத்த ப்ளானும் சொதப்பிடும்!” என அவள் முகத்தைச் சுளித்து நகர்ந்ததில் ரோஷம் வரப் பெற்றவன்,

“நான் ஒன்னும் செயின் ஸ்மோக்கர் கிடையாது. ஜஸ்ட் எப்போவாது டென்ஷனானாதான் ஸ்மோக் பண்ணுவேன்!” என்றான் சீறலுடன்.

“ச்சு... நீ குடி, சிக்ரெட் பிடி. அல்ப ஆயுசுல போய் சேரு. உன் ஹெல்த்து, நீயே அக்கறைப்படாதப்போ எனக்கெதுக்கு தேவையில்லாத வேலை. முதல்ல இடத்தைக் காலி பண்ணு, எரிச்சலாகுது!” என்றவள், “குடிக்கிறது சிக்ரெட்டு. இதுல செயின் ஸ்மோக்கரில்ல... கிங் மேக்கரில்ல கதை விடுட்டுட்டு!” என கடுப்புடன் முணுமுணுத்தாள்.

அவளை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்தவன், “சீ... போடீ...” என்றுவிட்டு விறுவிறுவென நடக்க, இவளது அனல் பார்வை அவன் முதுகில் மோதிற்று. அதை உணர்ந்தாலும் அலட்சியத்தோடு கடந்தான் பரிதி.

எதிர்வீட்டிலிருந்து யாரோ ஒருவன் வருகிறான் எனப் பார்த்திருந்த மார்த்தாண்டத்திற்கு, அது மகன் என்றதும் பதறிப் போனது. “டேய் பரிதி... என்னடா கோலம் இது? என்னாச்சு?” என அவர் பயந்து போனார்.

“ப்பா... ஒன்னும் இல்ல. கீழ விழுந்துட்டேன். சின்னதா ஒரு அடி!” என்றவன் பேசுவதைக் காதிலே வாங்காதவர், “கண்ணை எங்கடா வச்சு வண்டி ஓட்டுன. கையைப் பாரு, எப்படி அடிப்பட்டிருக்கு!” எனக் கோபத்தோடு மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பத்து நிமிடங்கள் அவர் வசைபாடி முடிய, சிந்தாமணி தன் பங்கிற்கு அவனைத் திட்டிவிட்டு கண்ணீர் வடித்தார்.

தந்தை அகன்றதும் தாயை சமாதானம் செய்து மூச்சைவிட்டவன், “அடிப்பட்டதைவிட இவுங்க திட்டுறதுதான் கொடுமை!” என முணுமுணுத்துவிட்டு காயத்தில் தண்ணீர் படாமல் வெகுகவனமாக குளித்து வந்தான்.

“வாடா... வந்து சாப்பிட்டு படு. ரெண்டு நாளைக்கு நீ வேலைக்கு எதுவும் போக வேணாம்!” என சிந்தாமணி கலங்கிய குரலில் கூற,

“ம்மா... சின்ன அடிமா. அதுக்கு ரெண்டு நாள் ஆஃபிஸ்ல லீவ் தர மாட்டாங்க. நீ முதல்ல முகத்தை நார்மலா வை. நான் உன் முன்னாடி நல்லாத்தானே இருக்கேன்!” என தாயை அதட்டி அவர் கொடுத்த உணவை உண்டு வலி மாத்திரையை விழுங்கினான் பரிதி.

கீர்த்தனா வந்ததும் தமையனைப் பார்த்து பதறிவிட்டாள். தனக்கு ஒன்றும் இல்லயென அவளையும் இவன்தான் சமாதானம் செய்ய வேண்டியதாகப் போயிற்று. அவன் காயத்தைப் பார்த்து பயந்து தேம்பியழுதவளை என்னென்னவோ சொல்லி அழுகையை நிறுத்தினான். அஜித் வந்ததும் இவனை யோசனையுடன் பார்த்தான்.

“என்னடா பார்க்குற? உங்கண்ணன் அடிபட்டு கிடக்குறான். பைக்ல போகும்போது கீழ விழுந்துட்டானாம்!” என சிந்தாமணி அவன் பார்வையை உணர்ந்து கூற, “ஓ...” என்றவன் இவனைத் திரும்பி தலைமுதல் கால்வரை ஆராய்ந்தான்.

பெரிதாய் அடியில்லை என்பதை உணர்ந்தவன், “நல்லாதானே இருக்கான். அப்புறம் ஏன் நீ ஒப்பு வைக்கிற?” எனக் கேட்டு அறைக்குள் நுழைய, பரிதி அவனை முறைத்துப் பார்த்தான். அன்றைக்கு நடந்த சண்டையோடு அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே பேச்சு வார்த்தை முற்றிலும் குறைந்து சுழியமாகியிருந்தது.

“ஏன்... நான் நல்லா இருக்கது இவனுக்குப் பிடிக்கலையாம்மா? கைகால்ல கட்டுப் போட்டுட்டு படுத்துக் கிடந்தாதான் மகாராஜா நலம் விசாரிப்பாரோ?” எனக் கடுப்போடு குரலை உயர்த்தினான் பரிதி.

“டேய்... என்ன பேசுற நீ? அவன் அப்படியெல்லாம் நினைக்க மாட்டான்!” சிந்தாமணி மகனை அதட்டிவிட்டு அகல,

தலையை மட்டும் வெளியே நீட்டிய அஜித்,
“வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்திலும் உண்டாம். என்னை அடிச்சு அழ வச்சல்ல டா. அதான் அந்த ஆண்டவனே உன்னைப் போட்டுத் தாக்கிட்டாரு. இனியாவது அடக்க ஒடுக்கமா இரு!” என நாக்கை நீட்டி பழிப்புக் காட்டிவிட்டு படக்கென உள்ளே செல்ல, வாய்வரை வந்த கெட்ட வார்த்தையை தங்கையின் இருப்பை கருத்தில்கொண்டு விழுங்கித் தொலைத்தான் பரிதி.

“அண்ணா... அவன் சொல்றது உண்மையா? அதனாலதான் உனக்கு அடிபட்டுச்சா? சாரிண்ணா!” கீர்த்தனா மீண்டும் அழத் தொடங்க,

“ஐயோ... இம்சை, எதுக்கெடுத்தாலும் அழாத. அதுக்கு அவனே பரவாயில்லை போல. எழுந்து போ முதல்ல!” என எரிந்து விழுந்தான். அழுதக் கண்களோடு தமையனை முறைத்துவிட்டுப் போனாள் அவள்.

அடுத்த இரண்டு நாட்களும் சிந்தாமணியை மீறி அவன் வெளியே செல்ல முடியவில்லை. விபத்து நேர்ந்துவிட்டதெனக் கூறி அவன் மேலாளரிடம் விடுப்பு கேட்க, “உன்னை எப்படி நான் நம்புறது? என்ன ப்ரூஃப் உனக்கு ஆக்ஸிடென்டானதுக்கு?” என அவன் வேண்டுமென்ற கேட்க, இவனுக்கு கடுப்பானது.

அடிப்பட்ட கை, நெற்றியென சுயமியெடுத்து அவருக்கு அனுப்பி வைத்தான். அதைப் பார்த்து திருப்திப்பட்ட மேலாளர் அவனுக்கு விடுப்பளித்தார்.

‘நான் அடிப்பட்டு கிடந்தா அந்தக் கரடி சந்தோஷப்படுவான்!’ என முணுமுணுத்தவன், இரண்டு நாட்களும் சாப்பிட்டு தூங்கியெழுந்து ஓய்வெடுத்தான். ஆட்டுக்கறி சாறு, குழம்பு என சிந்தாமணி மகனைப் பார்த்து பார்த்து கவனித்ததில் நன்கு தேறிவிட்டான்.

நெற்றி காயம் செம்புண்பட்டு ஓரளவிற்கு ஆறியிருந்தது. ஆனால் கைக்காயம் இன்னும் குணமாகவில்லை. சனி ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் பெரிதாய் வேலையில்லாமல் வீட்டிலே பொழுதைக் கழித்தான்.

நேரம் நகர மாட்டேன் என சண்டித்தனம் செய்ய, “ம்மா... கடைக்காவது போய் உக்கார்றேன். வயசுக்கு வந்த புள்ளை மாதிரி என்னை வீட்டுக்குள்ளயே அடை காக்குற நீ!” என சிந்தாமணியை சமாளித்து கடைக்கு வந்தமர்ந்தான். மார்த்தாண்டம் மகன் கடையைப் பார்த்துக்கொள்ளட்டும் என தீர்ந்து போன பொருட்களை வாங்க மொத்தக் கடைக்குச் சென்றுவிட்டார்.

இவன் பொழுதைக் கடையிலே கழிக்க, வெளியே சென்று வந்த இசைவாணி இவனைப் பார்த்துவிட்டு கடையை நோக்கி வந்தாள். அவளது கண்கள் அவனது நெற்றி, கை என ஒரு முறைத் தொட்டு தடவி நலம் விசாரிக்க, “என்ன இப்போ பரவாயில்லையா?” எனக் கேட்டாள்.

“ஹம்ம்... பெட்டர்தான்!” அவன் கூற,

“நாலு நாள்ல கன்னமெல்லாம் உப்பி போச்சு. சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குற போற?” என கேலியுடன் நூறு ரூபாய் ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“லாங் சைஸ் ரூல்ட் நோட் ஒன்னும், பேனா ஒன்னும் எடு!” என்றாள். அவன் எடுத்து வைக்க, இதை இவள் தொடவில்லை.

மீதி சில்லறை வாங்கிப் பத்திரப்படுத்தியவள், “இந்த நோட்டும் பேனாவும் உனக்குத்தான். இனிமே யோசிக்காம ஹார்ஷா பேசி யாரையும் ஹேர்ட் பண்ண மாட்டேன்னு தௌசண்ட் டைம்ஸ் எழுதிக்கொண்டு வா‌. நான் அக்ரீமெண்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் யோசிச்சு வைக்கிறேன்!” என்றாள் இயல்பாக.

“முடியாது... அதெல்லாம் என்னால எழுத முடியாது!” கோபத்தோடு மறுத்தான் அவன்.

“சரி அப்போ அக்ரீமெண்ட் வேணாம். இப்பவே நான் சொல்றதைக் கேட்க மாட்ற. அப்புறம் கல்யாணத்துக்குப் பின்னாடி பேச்சு மாற மாட்டேன்னு என்ன நிச்சயம்?” எனத் தீர்க்கமாக கேட்டாள்.

“ஹே... அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இசைவாணி. கண்டிப்பா என்னால எழுத முடியாது. என்னை சின்ன பையன் மாதிரி ட்ரீட் பண்ணாத. ஐ யம் ட்வென்டி சிக்ஸ்!” சினந்தான் அவன்.

“எழுதணும் நீ!” அவள் அழுத்தமாய் கூற, இவன் மாட்டேன் எனத் தலையை அசைத்தான்.

“ரைட்... அப்போ அக்ரீமெண்ட் போட நான் வேற ஆளைப் பார்த்துக்கிறேன்... ஹம்ம்” எனத் தாடையைத் தடவியவள், “அப்புறம் நீ திருட்டு தம்மடிக்குறதையும் உங்கப்பாகிட்டே சொல்லித் தந்துடுவேன்!” என்றாள் வெகுதீவரமான குரலில்.

“ப்ம்ச்... சிக்ரெட் அடிக்கிறது என் பெர்சனல். அதைப் பத்தி நீ கேள்வி கேட்க கூடாது. தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்!” அவன் கடுப்புடன் கூறினான்.

“அப்போ அக்ரீமெண்ட்?” அவள் நிறுத்த, விழிகளால் அவளை எரிக்க முயன்றவன், “எழுதிட்டு வந்து தொலைக்கிறேன்...” என்றான் எரிச்சலாய் முணுமுணுத்து.

“தட்ஸ் குட் பாய். அப்புறம் மறக்காம வாய்விட்டு சொல்லிக்கிட்டே எழுது. அப்போதான் உன் மரமண்டையில ஏறும். யார்கிட்டேயும் இந்த மாதிரி சுள்ளுன்னு எரிஞ்சு விழமாட்ட!” என நகர்ந்தவளை உறுத்துப் பார்த்தான் பரிதி.

அடுத்த இரண்டு நாட்களும் வீட்டில் யார் கண்ணிலும் படாமல் ஆயிரம் முறை அவள் சொன்ன வாக்கியத்தை எழுதி முடிப்பதற்குள் மூச்சுமுட்டிப் போனான் பரிதி. இரவுகளில் கண்விழித்து எழுதினான்.

“எக்ஸாம் டைம்ல கூட நான் மிட் நைட்ல படிச்சது இல்ல. ரெக்கார்ட் நோட்டு கூட நானா எழுதுனது இல்ல. ஆனால் இவ என்னைப் பாடாப்படுத்துறா!” என எழுதி முடிக்கும்வரை அவளை அவலாக்கி மென்று செரித்திருந்தான்.

திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல கிளம்பி நின்ற மகனைப் பார்த்து சிந்தாமணி ஏதோ கூற வர, “ம்மா... ஆஃபிஸ் போக கூடாது அது இதுன்னு சொன்ன... நான் டென்ஷனாகிடுவேன்!” என்றான் முன்னெச்சரிக்கையாக.

அவனை முறைத்தவர், “யார் கண்ணுப்பட்டுச்சோ! என்னைக்கும் இல்லாத திருநாளா என் மகன் கீழே விழுந்து வாரிட்டான்!” எனப் புலம்பி கொண்டே உப்பையும் மிளகாயையும் வைத்து அவனுக்குச் சுற்றிப் போட்டவர், வேலைக்குச் செல்ல அனுமதித்தார்.‌

அவன் ஒருமுறைதான் விழுந்தான். ஆனால் சிந்தாமணி வாயால் நூறு முறை விழுந்தெழுந்திருந்தான். போதாத குறைக்கு அக்கம் பக்கமெல்லாம் இவன் விழுந்த கதையைச் சொல்லி, அவர்கள் எல்லாம் இவனை நலம் விசாரிக்க வந்தது இவனுக்கு வெட்கமாய் போய்விட்டது. அதனாலே திங்கட்கிழமை காலை வேலைக்கு ஓடிவிட்டான்.

அன்றைக்கு அலுவலகம் முடிந்ததும் அவர்கள் வீட்டிற்கு இரண்டு தெருவிற்கு முன்னே அமைந்திருக்கும் தேநீர் கடையில் அமர்ந்துவிட்டான் பரிதி. இந்த ஒருவழி மட்டுமே அவர்கள் தெருவிற்கு செல்லும் பாதை. எப்படியும் இசைவாணி இவ்வழியாகத்தான் வரக்கூடுமென்ற உறுதியுடன் அவளுக்காகக் காத்திருந்தான்.

சரியாய் பத்து நிமிடங்கள் கழித்து இசைவாணியின் மகிழுந்து வர, அதை மறித்து நின்றான். “என்ன? எதுக்கு பாதையை மறைக்குற?” எனக் கேட்டவளுக்குப் பதிலுரைக்காமல் மறுபக்கத்தில் ஏறி அமர்ந்தான்.

“என்ன?” அவள் மேலும் பேசும் முன்னே அந்த நோட்டை அவள் கையில் திணித்தான்‌.

அவனை மெச்சுதலாகப் பார்த்து, “வாய்விட்டு சொல்லிக்கிட்டே தானே எழுதுன?” எனக் கேட்டுக் கொண்டே பக்கங்களைப் புரட்டியவளை, முறைப்பாகப் பாரத்தான் பரிதி.

ஒரு பக்கத்தை கடக்க முனைந்தவள், பின்னே தேங்கி சற்றே உற்றுப் பார்த்து, “என்ன எய்ட் செவன்டிக்கும் நைன் ஹண்ட்ரட்க்கும் இடையில எதையும் காணோம். டின்னரோட சேர்த்து முழுங்கிட்டீயா?” என அவனைப் பார்த்தாள். அவள் கவனிக்க மாட்டாளென எண்ணி ஆங்காங்கே சின்ன சின்ன தில்லுமுல்லுகளைப் பண்ணியிருந்தான்.

‘கரெக்டா கண்டு பிடிச்சுட்டா எமகாதகி!’ என முனங்கியவன், வலித்தக் கையைப் பிடித்தபடியே, “அது... எனக்கு கைல அடிபட்டிருக்குல்ல. அதான் முழுசா எழுத முடியலை!” எனப் போலியாய் பரிதாபத்தை பெற முயன்றவனை அற்பமாய் பார்த்தாள்.

“சீ... நடிக்காத. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? சின்னப் புள்ளைங்க ஸ்கூல் மிஸ்கிட்டே எக்ஸ்யூக்ஸ் சொல்ற மாதிரி பொய் சொல்ற?” என்றாள் அதட்டலுடன்.

உடனே முக பாவனையை மாற்றியவன், “எனக்கு மேக்ஸ் வராது. நான் மேக்ஸ்ல வீக்கு... மக்கு!” என்றான் ரோஷமாய்.

“ச்ச... நீ மக்குன்னு சொல்லித்தான் தெரியணும்னு இல்ல!” என இடக்காகப் பேசியவள்,

“எப்போ எல்லாம் நீ இந்த மாதிரி கண்மண் தெரியாம பேசுறீயோ, அப்போலாம் கை வலிக்க வலிக்க தௌசண்ட் டைம்ஸ் எழுதிட்டு வரணும். சோ, உன் கோபத்தைக் கன்ட்ரோல் பண்றதுதான் ஒரே வழி!” என்றுவிட்டு பின்னிருக்கையிலிருந்த மடிக்கணினி பையை எடுத்தாள்.

அதிலிருந்து ஒரு கோப்பை உருவியவள், “இந்த பைல்ல அக்ரீமெண்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. நானே உன்கிட்ட பேசலாம்னு நினைச்சேன். நீயே வந்துட்ட!” என்றாள். பரிதி ஆச்சரியத்தோடு அந்த பத்திரத்தை வாசித்தான். ஒப்பந்தம் என்றதும் வெறும் காகிதம் அல்லது வாய் வார்த்தையாக இருக்குமென அவன் எண்ண, இசைவாணி அவன் கணிப்பிற்கு அப்பாற்ப்பட்டிருந்தாள்.

ஒவ்வொரு விதிகளையும் வாசித்தான். இருவீட்டுப் பெற்றவர்களுக்கும் மரியாதைக் கொடுக்க வேண்டும், முழுதாக இரண்டு வருடங்கள் இருவரும் இந்த திருமணத்திற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தங்கள் இருவரைத் தவிர யாரிடமும் ரகசியத்தைப் பகிரக் கூடாது என வரிசையாக ஒரு இருபது வரிகள் எழுதியிருந்தாள். இவனுக்கு அனைத்திலும் சம்மதமே.

வீட்டில் புகைபிடிக்கவோ, மது அருந்திவிட்டு வரவோ அனுமதி இல்லை. அப்படி மது அருந்தினால் தெருவிலே படுத்துக்கொள்ள வேண்டும் என்றதை வாசித்துவிட்டு அவளை நிமிர்ந்து முறைத்தான்.

“எனக்கு ஸ்மோக் அண்ட் ட்ரிங் பண்றவங்களைப் பார்த்தாலே அலர்ஜி. சோ, இந்த ரூலை நீ ஃபாலோ பண்ணணும்!” என்றாள் கண்டிப்பான குரலில்.

கடைசியாக விதிகளை மீறி இரண்டு வருட உறவை வேண்டாமென உதறிச் செல்லுபவர்கள், மற்றவருக்கு பத்து லட்சம் பணம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என எழுதியிருக்க, அவளை நிமிர்ந்து அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“பத்து லட்சமா?” என வாயைப் பிளந்தான்.

“ஆமா... பின்ன உன்னை நம்பி யார் ரிஸ்க் எடுக்குறது? ஹம்ம்... அக்ரீமெண்ட் வேணாம் அது இதுன்னு தாம்தூம்னு குதிச்சிட்டு ரெண்டு நாள்ல வந்து ஓகே சொன்னவன்தானே நீ? அப்போ மேரேஜ் முடிஞ்சு ரெண்டு மாசத்துல வேணாம்னு சொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம். இது சேஃப்டி பர்பஸ்க்குத்தான்!” என்றாள் உறுதியான குரலில்.

“ஆனால் பத்து லட்சம் ரொம்ப அதிகம் இசைவாணி!” அவன் மனக்குமுறலை வெளியிட்டான்.

“ஏன்... நீயென்ன இடையில இந்த ரிலேஷன்ஷிப்பை ப்ரேக் பண்ண போறீயா என்ன? அப்படி பண்றவங்கதானே அமௌண்டை நினைச்சு கஷ்டப்படணும். மோர் ஓவர் எனக்கும் சேம் ரூல்தான். அதைப் புரிஞ்சுக்கோ!”

“ஹம்ம்... ஒருவேளை ரெண்டு பேராலும் சேர்ந்திருக்க முடியாதுன்னு ம்யூட்சுவலா பிரிஞ்சா அமௌண்ட் பே பண்ண தேவையில்லை தானே?” என சந்தேகம் கேட்டான். ஏற்கனவே இருக்கும் கடனோடு இதையும் சேர்த்து தன் தலையில் ஏறிவிடுவாளோ என அவன் கவலை அவனுக்கு.

“யா... அப்ஃகோர்ஸ். ரெண்டு பேருமே டூ இயர்ஸ் கம்ப்ளீட் ஆகுறதுக்கு முன்னாடி பிரியிற முடிவை எடுத்தா பணம் இடையில வராது!” வாணியின் பதிலில் திருப்தியானவன் கையை நீட்ட, அவள் எழுதுகோலைக் கொடுத்தாள். கையெழுத்திடச் சென்றவனின் கரத்தில் மெல்லிய நடுக்கம் பிறந்தது. ஒருமுறை மீண்டும் முதலிலிருந்து வாசித்தவன், வெற்றுக் காகிதம் ஏதும் இருக்கிறதா என ஆராய்ந்தான்.

“எத்தனை தடவை திருப்பி திருப்பி பார்ப்ப பரிதி. டூ பேஜஸ்தான்!” அவள் அலுத்தாள். கையெழுத்துப் போடுமிடத்தில் எம் என ஆங்கிலத்தில் எழுதி புள்ளி வைத்தவன், அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“என்னை ஏமாத்திட மாட்டல்ல இசைவாணி. நம்ப மீட் பண்ணி சிக்ஸ் மந்த் கூட ஆகலை!” என்றவன் ஏதோ யோசித்துவிட்டு, “ஏய்... இந்த டீவில காட்ற மாதிரி பணம், சொத்து எதுவும் பறிக்கிற கும்பலா நீங்க?” என அதிர்ந்து கேட்டான். அவன் கேட்ட விதத்தில் இசைவாணிக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகப் போயிற்று. ஆள் வளர்ந்த அளவிற்கு இவனுக்கு அறிவு வளரவில்லை என முழுதாய் அவள் உணர்ந்த தருணம் என நினைத்ததும் சிரிப்பு பொங்கிற்று அவளுக்கு.

“என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு? ஹம்ம்... உண்மையை சொல்லு. நீ ஏமாத்துக்காரி தானே?” அவன் முறைப்புடன் கேட்டான்.

“எந்த சீட்டர் தன்னை சீட்டர்னு ஒத்துக்குவா? பச்சப் புள்ளைத்தனமா கேள்வி கேட்குற?” என்றவள்,

“லாஜிக்கா திங்க் பண்ணு. உங்ககிட்டே இருக்கது அந்த வீடு மட்டும்தான். அதுவும் கடன்ல இருக்குன்னு சொல்லிட்ட. இதுக்கும் மேல உன்கிட்ட என்ன சொத்திருக்குன்னு நான் உன்னை ஏமாத்த போறேன்?” சிரிப்புடன் வினவினாள்.

அவள் கேள்வியின் நியாயம் புரிந்தவன், “ஹம்ம்... கரெக்ட் தான். பட், பார்த்து பழகுன கொஞ்ச நாள்லயே என்னை எதுக்காக இந்த அக்ரீமெண்ட்க்கு சூஸ் பண்ண? எந்த நம்பிக்கையில இந்த பேப்பர்ஸை ரெடி பண்ண?” என ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தான்.

அவன் கேள்வி அவளுக்குள்ளும் இறங்கிற்று. அவளுக்குமே அதற்கு விடை தெரியாதே. என்னவோ இவன் தன்னைக் காயப்படுத்த மாட்டான் என ஆழ்மனம் அபரிமிதமான நம்பிக்கையை அவன் மீது வைத்து தொலைத்ததன் எதிரொலியே இந்த ஒப்பந்த திருமணம். வெடுக்வெடுக்கென பேசிவிட்டாலும் கூட பரிதி கெட்டவன் என்ற வரையறைக்குள் வர மாட்டான். அப்படி அவன் எண்ணங்களில் தவறிருந்தால் அவன் தன்னை நல்லவன் போர்வையில் போர்த்தியிருக்க கூடும். ஆனால் இவன் அப்படியில்லையே. நான் இப்படித்தான் என்ற எவ்வித பூச்சும் இல்லாது பழகுகிறான். அதில்தான் இவளுக்கு நம்பிக்கை துளிர்த்தது.

அதை வாய்விட்டுக் கூறினால் சலங்கை இல்லாமல் பரிதி ஆடுவான் என எண்ணித் தொண்டையைக் கனைத்தவள், “அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும் பரிதி. அது உன்கிட்டதான் இருந்துச்சு. சோ, சூஸ் பண்ணேன்!” இயல்பான கேலி குரலில் கூறினாள்.

“ப்ம்ச்... லாஸ்டா ஒன்னு சொல்லணும். டூ இயர்ஸ் முடிஞ்சதும் என்னையோ, என் கேரக்டரையோ பிடிச்சு போய் என்கூடவே வாழணும், அது இதுன்னு பினாத்தக் கூடாது. நோ எமோஷனல் அட்டாச்மெண்ட்ஸ். ஏன்னா எனக்குன்னு வரப் போற பொண்ணுகிட்டே சில எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கு. லைக் அவ என்னை மாதிரியே வொய்ட்டா அழகா, லாங் ஹேர் வச்சு, மூக்குத்தி குத்தி, ரொம்ப ஒல்லியாவும் இல்லாம குண்டாவும் இல்லாம சப்பியா இருக்கணும். ஷார்ப் நோஸ், பெரிய கண்ணு, கரெக்டா சொன்னா சினிமா ஹீரோயின்ஸ் மாதிரி எனக்கு பெர்ஃபெக்ட் ஜோடியா இருக்கணும். எல்லாரும் எங்க பேர் சூப்பரா இருக்குன்னு பாராட்டணும்!” என்றான் இப்போதே கற்பனைகளில் மிதந்து.

அவனைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியாமல் தலையை அசைத்த இசைவாணி, “அது சரி... நீ சொல்ற மெஷர்மெண்ட்க்கு பிரம்மன்கிட்டே ஆர்டர் கொடுத்து வாங்கிக்கோ...” என நகைத்தவளுக்கு அவனுடைய எண்ணத்தைப் பற்றி மேலும் விவரிக்க விருப்பமில்லை.

அவன் வரைவில் அவனது விருப்பமிருந்துவிட்டுப் போகட்டும் என நினைத்தவள்,
“நீன்னு இல்ல பரிதி, எவ்வளோ பெரிய ஆணழகனா இருந்தாலும் இந்த ஆம்பளைங்களே எனக்கு வேணாம். சோ, நான் உன்னைக் கொத்திட்டுப் போய்டுவேன்ற பயமே வேணாம். ஜஸ்ட் குட் ஃப்ரெண்ட்ஸா இருப்போம்!” என்றாள்.

“ஹம்ம்... ஓகே, ஆமா ஏன் ஆம்பளைங்களே வேணாம்னு சொல்ற? எனி சேட் ஸ்டோரி?” ஆர்வமாய் அருகே வந்தவனை முறைத்தவள்,

“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்!” என்றுவிட்டு, “ரெண்டு காபிலயும் சைன் பண்ணு. ஒன்னு உனக்கு. இன்னொன்னு எனக்கு. முக்கியமா உங்க வீட்ல யார் கண்லயும் படாம இதை வச்சுக்கோ. யாரும் பார்த்தா பிராப்ளமாகிடும்!” என அவள் கூற்றிற்கு, அவன் தலையசைத்து குலதெய்வத்தை துணைக்கு அழைத்து கையெழுத்திட்டான்.

தானும் அதில் கையெழுத்துப் போட்டவள், “நீ சொன்னதுதான் உனக்கும். டூ இயர்ஸ் ஆப்டர் என்னைப் பிடிச்சிருக்குன்னு நீயும் பினாத்த கூடாது!” என்றாள் கண்டிப்பான குரலில்.

“ஏய்... நீயெல்லாம் என்னோட எக்ஸ்பெக்டேஷன்ல ஏ-கிட்டே கூட வர மாட்ட. நீ எனக்கு பெர்ஃபெக்ட் வொய்ப் மெட்டிரியல் இல்ல!” என்றான். ஏதோ ஹாஸ்யம் சொல்லிவிட்டது போல அவன் சிரிக்க,

“ஏன்... என் கூட வந்து குடும்ப நடத்திப் பார்த்தியா? நான் வொய்ப் மெட்டிரியல் இல்லைன்னு பட்டம் கொடுக்குற?” அவள் சூடாய்க் கேட்டதும், பரிதியின் சிரிப்பு மெல்ல மெல்ல தேய்ந்தது.

“சாரி இசைவாணி... நான் ஜஸ்ட் ஃபன்க்கு சொன்னேன். நீ அதை சீரியஸா எடுத்துக்காதே!” அவள் வருத்தப்படக் கூடுமென எண்ணிப் பரிதி தன் செயலுக்கு விளக்கம் கொடுக்க முயன்றான்.

அவன் முன்னே கை நீட்டியவள், “நான் உன்னவே சீரியஸா எடுத்துக்கலை. அப்படியிருக்கப்போ நீ பேசுனது எந்த வகையலயும் என்னை அபெக்ட் பண்ணாது. சோ, நவ் லீவ் மை கார்!” என்றாள் முகத்தை சரிசெய்து.

ஆனால் அவள் குரலே காயப்பட்டுவிட்டாள் என உணர்த்த, “சாரி...” என்ற முணுமுணுப்போடு இறங்கியவனை அலட்சி
யம் செய்து சென்றவளைத்தான் பரிதி இமைக்காமல் பார்த்திருந்தான்.

பரிதி வீசிய ஒவ்வொரு சொற்களும் அவனையே பதம் பார்க்கப் போவதை யாரும் அவனிடம் உரைக்கவில்லை.

தொடரும்…
 
Well-known member
Messages
504
Reaction score
362
Points
63
Parithi unnaku villan engaiyum illa unnoda vai than ne first pesunathu ku yae imposition ezhutha aarambichita ah ippo ne pesunathuku ellam serthu mutti poda solla ma irundha seri
 
Top