• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,172
Points
113
நெஞ்சம் – 4💖

சிவப்பு விளக்கு மஞ்சளுக்கு மாறிப் பின் பச்சையைத் தொடவும் அந்தப் போக்குவரத்து கூட்டம் மெதுவாக கலையத் தொடங்க, ஆதிரை ஒருமுறை உயிர்ப்பித்தும் இயங்காத வாகனத்தை யோசனையுடன் பார்த்து பின்னர் இன்னொரு முறை இயக்கவும் அது உறுமியது.

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சாலையில் கலந்தவள் செல்லும் வழியிலே எரிபொருளை நிரப்பிக் கொண்டாள். கண்கள் சாலையில் இருந்தாலும் கவனம் என்னவோ தேவாவின் பேச்சிலே நின்றுவிட்டது. விளம்பர படத்தில் நடிக்கவில்லை என்றால் வேலை இல்லை என்று உரைப்பானா? என கோபம் மூளை வரை உயர, சூடாகிப் போயிருந்தாள்.

இவர்களிடம் வேலை பார்த்தால் சொல்வது அனைத்திற்கும் தலையை ஆட்ட வேண்டும் என்றொரு கட்டாயமா என்ன? முனுக்கென கோபம் வந்துவிட, எதையும் யோசிக்காது வேலையை வேண்டாம் என உதறிவிட்டிருந்தாள். பெண்ணுக்கு கொஞ்சமே கொஞ்சம் சுயமரியாதை எட்டிப் பார்த்து தொலைக்க, தைரியமாக பேசிவிட்டாள். ஆனால் அடுத்து இதுபோலொரு பாதுகாப்பான வேலை எங்கே கிடைக்கும் என நிதான மனம் கேள்வி கேட்க, சட்டென ஒரு சோர்வு வந்து ஒட்டிக் கொண்டது.

மகனை வெளியே அழைத்துச் செல்லப் போகிறோம் என காலையிலிருந்து துளிர்விட்டிருந்த உற்சாகம் மொத்தமாய் வடிந்திருக்க, சொல்ல முடியாத வெறுமை ஆட் கொண்டது.

‘ஏன்...இதுதான் வேலையா? இதே போல வேறு வேலைத் தேடிக் கொள்ளலாம்!’ என சுய சமாதானம் செய்தாலும் இந்தப் பண்ணை வேலையில் பளு அதிகமே தவிர, மற்றபடி எவ்வித பிரச்சினையும் இல்லையே. யாரும் அவளைத் தவறாகப் பார்த்தோ, அணுகியதோ இல்லை. அதற்கு தேவாவும் ஒரு காரணம். தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அவன் அளித்திருந்தான். வேறு வேலை கிடைப்பது எளிதுதான். ஆனாலும் இது போல வராதே என யோசனை சென்றது.

‘இது என்ன கவர்மெண்ட் வேலையா என்ன? எப்போது இருந்தாலும் இங்கிருந்து விலகத்தானே வேண்டும். வேறு எதாவது தேடிக் கொள்ளலாம்!’ என தற்போதைக்கு அதைக் கிடப்பிலிட்டவள் முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டாள்.

“ம்மா... ராக்கி எனக்கு கிஃப்ட் வாங்கி கொடுத்தான். லிசா எனக்கு வாட்ச் கிஃப்ட் பண்ணா மா. மிஸ் எனக்கு பென் கொடுத்தாங்க!” என பின்னே அமர்ந்து தாயைக் கட்டிக்கொண்டு அபி வெகு உற்சாகத்துடன் அன்றைய நாளைப் பகிர்ந்து கொள்ள, ஆதிரைக்கு மற்றதெல்லாம் மறைந்து போனது. சின்ன சிரிப்புடன் அவனிடம் பேசியபடியே இருவரும் குழந்தைகள் விளையாடும் ஸ்னோ வேர்ல் எனப்பட்டும் பனித் திடலுக்குள் நுழைந்தனர்.

அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு இவர்கள் உள்ளே நுழைய, “ம்மா... ஸ்னோ வேர்ல்டா மா?” என மகன் ஆர்பரித்தான். சுற்றிலும் கண்ணாடிக் கதவுகள் அமைக்கப்பட்டிருக்க, வெள்ளைப் புகை போல அந்த இடமே காட்சியளித்தது. உள்ளே சிறுவர் சிறுமியர் தாய் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்க, இவர்கள் பாதுகாப்பு உடையும், கையுறை, காலுறை என அனைத்தையும் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அன்றைக்கு வார நாட்கள் என்பதால் பெரிதாய் கூட்டம் இல்லை. வெகு சிலரே இருந்தனர்.

ஆங்காங்கே நன்கு பயிற்சி செய்யப்பட்ட ஆட்கள் நின்று உதவினர். இவர்களும் உள்ளே நுழைய, குட்டி குட்டி துகளாய் பனிக்கட்டி மேலே விழுந்து உடல் சூட்டில் கரைந்து போக, அபியின் விழிகள் ஆர்வத்தில் விரிந்தன.

பனிக்கரடி பொம்மை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க, “ம்மா... பனிக்கரடி மா...” என ஓடிச் சென்று அதைச் சுற்றிப் பார்த்து கைகளால் தடவினான். அவனது ஆர்ப்பரிப்பில் ஆதிரையின் முகம் கனிந்தது. அவளுக்குமே அடிக்கடி மகனை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வேலை நேரம் ஒத்துழைப்பது இல்லை.

அலைபேசியை எடுத்தவள் அவன் செய்யும் சேட்டைகளை புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்தாள். அங்கிருந்த சிறுவர்களுடன் இவனும் சேர்ந்து விளையாட, அவனைத் தன் கண் பார்வையிலே வைத்திருந்தவள் செயற்கை மரத்தின் கீழே போட்டப்படிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

ஆடி விளையாடி களைத்துப் போய் அவளிடம் வந்த அபினவ், “ம்மா... வாட்டர்!” என்றான் மூச்சு வாங்க.

“அபி... உக்காரு!” என அவனை அமர வைத்து ஆசுவாசம் செய்து நீரைப் புகட்டினாள். பின்னர் தாயும் மகனும் சேர்ந்து சுயமி புகைப்படங்களை எடுத்து தள்ளினர்.

நேரமானதை உணர்ந்தவள், “அபி, கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.

“அதுக்குள்ளேயுமா மா?” அவன் முகம் வாட, “ப்ம்ச்... இதே ஸ்னோ வோர்ல்ட்க்கு நெக்ஸ்ட் வீக் எண்ட் வரலாம் அபிமா. இப்போ நைட் ஆகிடுச்சு. சாப்ட்டு வீட்டுக்குப் போகணும்ல?” என அவன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு குனிந்து கேட்டாள்.

தாயின் குரலிலே புரிந்து கொண்ட அபி, “வீகெண்ட் வரலாம். நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்மா!” என்றான். ஆதிரைக்கு மகன் புரிதலில் முகம் மலர்ந்தது.

“சரி டா... போகலாம் வா!” என இருவரும் வெளியேறி ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

ஆதிரை முன்பதிவு செய்திருந்த அணிச்சல் வீட்டின் கதவு முன்பிருக்க, “ம்மா... கேக்கா மா?” என ஓடிச் சென்று அதைத் தூக்கினான் சிறியவன். இவள் சின்ன புன்னகையுடன் தலையை அசைக்க, உள்ளே நுழைந்ததும் பையை ஒருபுறம் தூக்கிப் போட்டவன் அந்த அணிச்சலை பிரித்தான்.

“வெளியே போய்ட்டு வந்துட்டு அப்படியே கேக் வெட்டலாமா டா? ஓடு... ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெப்ரெஷ்ஷாகிட்டு வா!” மென்மையாய் முறைத்த தாயிடம் நாக்கை நீட்டி துருத்திக் காண்பித்துவிட்டு குடுகுடுவென உள்ளே ஓடினான் அபினவ்.

இவளும் முகம் கை கால் கழுவி உடை மாற்றிவிட்டு அணிச்சலை நடுவீட்டில் வைத்து மெழுகு திரியை பற்ற வைக்க, “ம்மா... ப்ரெஷ் ஆகிட்டேன் மா!” என அவன் வரவும் சரியாய் இருந்தது.

“ஹேப்பி பெர்த் டே டூ அபிமா, ஹேப்பி பெர்த் டே டூ என் தங்கம்!” என அவள் பாட, அணிச்சலை வெட்டி தாய்க்கு ஊட்டினான் சின்னவன். இவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள். பின்னர் சிறிய டப்பாவில் ருக்குவிற்கும் அவரது கணவருக்கும் எடுத்துக் கொடுத்துவிட, இவன் அவர்களிடம் கொடுக்க சென்றான்.

அதற்குள்ளே ஆதிரை கூடத்தை கூட்டி முடித்து அறைக்குள் நுழைந்து படுக்கையை சரிசெய்தாள். நேரம் இரவு பத்தை தொட்டிருந்தது. இன்னும் சிறிது நேரம் விழித்திருந்தால் காலையில் மகன் அத்தனை சீக்கிரத்தில் எழ மாட்டான் என அவளுக்குத் தெரியும். அதனாலே அவன் வந்தவுடன் அதட்டி உருட்டி தூங்க வைத்திருந்தாள்.

இவளுக்கு உறக்கம் வராது போக அலைபேசியை எடுத்து அதில் விழிகளை ஓட்டியவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. நேரமாகிவிட்ட போதிலும் எழுந்து கணினியை உயிர்ப்பித்து ராஜினாமா கடிதத்தை தேவாவிற்கு மின்னஞ்சல் செய்ததும்தான் அவளுக்குத் திருப்தியாய் இருந்தது.

ஒரு வாரம் நன்றாய் ஓய்வெடுக்க வேண்டும். வாரத்தின் ஒரு நாள் விடுமுறை சர்வ நிச்சயமாக அவளுக்குப் போதவில்லை. அன்றைக்கும் மகனை அழைத்துக்கொண்டு நீச்சல் வகுப்பு, வணிக வளாகம் என சுற்றுவதால் சுத்தமாய் ஓய்வெடுக்க முடிவதில்லை. ஓடிக் கொண்டே இருப்பது போலொரு எண்ணத்தில் பெரு மூச்சுவிட்டவள் ஒரு வாரம் என்ன ஒரு மாதம் கூட நன்றாய் விடுமுறை எடுத்து உடலை தேற்றிக்கொண்டு வேறு வேலைத் தேட வேண்டும் என எண்ணினாள்.

தற்போதைக்கு பணத்திற்கு குறைவில்லை. இவள் சம்பளத்தில் சேமித்த பணம் இருந்தது. அதுவும் இல்லாது ஊரில் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்திலிருந்து மாத மாதம் வரும் பணத்தை மகனின் படிப்பு செலவிற்காக என அவன் பெயரில் வங்கியில் சேமித்து வைத்திருந்தாள். எட்டு வருடங்களில் அது வெகு கணிசமான தொகையாக உருப்பெற்றிருந்தது. அதுவும் இல்லாது அவசரத் தேவையிருந்தால் எடுத்துக் கொள்ளலாம் என அவளது பாட்டியின் நகைகளையும் வங்கியில் வைத்திருந்தாள். அதனால் இப்போதைக்கு பணத்தை பற்றிய கவலை இல்லை. நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே செல்லும் உடலை கொஞ்சம் கவனிக்கலாம் என எண்ணம் தோன்றிற்று.

நேரம் பன்னிரண்டைத் தொடப் போகும் சமயத்தில் கணினியில் வேலை பார்த்து முடித்த தேவா அதை அணைக்க செல்ல, டொங் என்று முன்னே வந்து விழுந்த மின்னஞ்சலில் முகம் சுருக்கியவன் அதை திறக்க, ஆதிரையின் பெயரோடு ராஜினாமா கடிதம் வந்து விழ, “திமிரு பிடிச்சவ!” என்ற முணுமுணுப்போடு உடனே அதை ஏற்றுக் கொண்டதாய் பதில் போட்டுவிட்டான்.‌

அவளை விட்டுவிட்டால் வேறு யாரும் கிடைக்க மாட்டார்களா என்ன? இவளை விட திறமையான ஊழியரை பணியமர்த்த வேண்டும் என மனதில் சூளுரைத்தவன் படக்கென மடிக்கணினியை மூடிவிட்டு படுக்கையில் விழுந்தான்.

ஆதிரை அவன் பதிலைக் கவனித்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. மகனை அணைத்துக்கொண்டு உறங்கிப் போனாள்.

மறுநாள் காலையில் எவ்வித அவசரமும் காட்டாது பொறுமையாய் எழுந்து குளம்பி கோப்பையோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தாள். சில பல நிமிடங்கள் செய்தியை உள்வாங்கிவிட்டு மெதுவாய் மேலெழுந்த சேம்பேறித் தனத்துடன் சமைத்து முடித்திருந்தாள்.

அபி தூங்கிக் கொண்டிருக்க அவனை எழுப்பி இவளே பள்ளிக்கு தயார் செய்தாள். உணவை ஊட்டி விட்டவள், “அபி... கெட் ரெடி!” என்றாள் தூக்கிப் போட்ட கொண்டையுடன்.

அவள் அணிந்திருந்த இரவு உடைக்கு மேலே துப்பட்டாவை சுற்றியவள், “நாட் பேட்!” என முகத்தை மட்டும் கழுவிவிட்டு வர, மகன் காலணியை அணிந்து நிமிர்ந்தான்.

“ம்மா... டூடே உங்களுக்கு லீவா?” அவன் தாயின் நடவடிக்கையைக் கவனித்து கேட்க, “ஆமா அபி... இன்னும் ஒன் மந்த் அம்மாவுக்கு லீவ்!” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.

“ஆஹ்... அம்மா! ட்ரூலி? அப்போ இந்த மந்த் என்னோட பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங் வருவீங்க தானே?” என ஆர்வமாய்க் கேட்டான். இதுவரை அவள் ஓரிரு முறை மட்டுமே ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடலுக்குச் சென்றிருக்கிறாள். எல்லா குழந்தைகளும் தாய், தந்தையுடன் வர, இவன் மட்டும் தனித்து அமர்ந்திருப்பான். ஆதிரைக்கு வருத்தமாய்தான் இருந்தது. வெகு அரிதாக ருக்கு பாட்டி அவனுக்காகப் பார்த்து உடன் வருவார். இவளுக்கு வார நாட்களில் நகரவே முடியாத அளவிற்கு வேலை நெட்டித் தள்ளும். அதனாலே பெரும்பாலும் கலந்துரையாடலுக்கு சென்றது இல்லை.

தன் முகத்தையே ஆர்வமாய் பார்க்கும் மகனின்‌ கன்னத்தில் முத்தமிட்டவள், “கண்டிப்பா இந்த டைம் அம்மா பேரண்ட்ஸ்-டீச்சர் மீட்டிங்க்கு வருவேன். அப்புறம் வீக்கெண்ட் ஸ்விம்மிங் க்ளாஸ், ஷாப்பிங் அப்புறம் சர்டடே வெளிய சுத்தலாம்!” என்றாள் வீட்டைப் பூட்டி சாவியை மேலிருந்த ஆணியில் தொங்க விட்டபடியே.

“ம்மா... நிஜமா சொல்றீயா மா? பொய்யில்ல தானே?” என அவள் முகம் பார்ப்பதும் ஒரு படி கீழே இறங்குவதுமாய் இருந்தவனைப் பார்த்து முறுவலித்தவள், “ப்ராமிஸா டா கண்ணா!” என்றாள்.

“சூப்பர் மா... நீதான் பெஸ்ட் அம்மா!” என அவன் கடகடவென இறங்க, அவனை மென்மையாய் முறைத்தவள், பள்ளியில் இறக்கிவிட்டாள்.

“ம்மா... உள்ள வரீயா? என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே இன்ட்ரோ பண்றேன்!” தன் கையைப் பிடித்த அபியிடமிருந்து கரத்தை லாவகமாக உருவியவள், “நைட் ட்ரெஸோட வந்தா நல்லா இருக்காது டா. இன்னொரு நாள் அவங்களை மீட் பண்றேன். நீ இப்போ உள்ள போ!” என அவனை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. அலைபேசியை எடுத்து ஸ்பாட்டிஃபை செயலியில் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டு அரைமணி நேரத்தில் பாத்திரங்களை விளக்கி அடுப்படியை சுத்தம் செய்தாள். வீட்டையும் கூட்டி முடிய, பெரிதாய் எந்த வேலையும் இல்லை. துணியை இயந்திரத்தில் போட்டு எடுத்து மாடிக்குச் சென்று காயப்போட்டாள். மதிய உணவு நேரம் வந்துவிட, சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

மதியம் உறங்கி பழக்கம் இல்லை எனினும் புரண்டு படுத்து சிறிது நேரத்திலே உறங்கிப் போனாள்.‌ மாலை நான்கு மணிக்கு அலறி தன் வேலையை செய்ய, இமைகளை முயன்று பிரித்தாள். மகன் காத்திருப்பான் என்பது மெது மெதுவாக புத்திக்கு உறைக்க எழுந்து முகம் கழுவிவிட்டு அவனை அழைத்து வந்தாள்.

“இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் வேணும் அபிக்கு?” எனக் கேட்டுக் கொண்டே ஆதிரை குளம்பியைத் தயாரிக்க, சமையல் மேடையில் ஏறி குதித்து அமர்ந்தவன், “ம்மா... புட்டு செஞ்சு தாங்க மா!” என்றான்.

“ஓகே... ராகி புட்டு செய்யலாம்!” என கொஞ்சமாய் மாவைப் பிசைந்து அவனுக்கும் தனக்கும் புட்டை செய்தாள். இருவரும் பேசி சிரித்துக் கொண்டே உண்டு முடிய, அபி வீட்டுப்பாடம் செய்ய அமர்ந்துவிட்டான்.

அவனுடனே அமர்ந்த ஆதிரை அவனது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாள். இரவிற்கு தோசை ஊற்றி மதியம் வைத்த சாம்பாரோடு உணவை முடித்துக் கொண்டனர்.

“ம்மா...ஹாரி பாட்டர் சீரீஸ் செவன் பார்ப்போம்மா. இன்னும் பார்க்கலை!” என அபினவ் தாயை இழுத்துக்கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தான். நீள்விருக்கையில் அமர்ந்து இருவரும் படத்தைக் காண, சின்னவன் சிறிது நேரத்திலே தாயின் மடியில் தூங்கி வழிய, அவள் முகத்தில் முறுவல் பூத்தது. தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அப்படியே நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக் காலையிலிருந்து நடந்த அனைத்தையும் அசை போட்டாள்.

நெடிய நீண்ட வருடங்கள் கழித்து இப்படி செய்வதற்கு எந்த வேலையும் அற்று விசிராந்ததையாக மகனுடன் அமர்ந்து பேசி சிரித்து உண்டது இன்றைக்குத்தான் என மூளை கூற, இவள் அவனது தலையை பரிவாகத் தடவிக் கொடுத்தாள்.

காலையிலிருந்து அபினவ் உற்சாகத்திற்கான காரணம் தன்னுடைய அண்மைதான் என அவளுக்கும் புரிந்தே இருந்தது. ஆனாலும் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க இயலவில்லை. வேலை இழுத்துக் கொண்டது. இனிமேல் வேலை இருந்தாலும் கூட அவனுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற சிந்தனை மேலெழுந்தது.

மகனைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவள் தானும் அருகே விழ, அழையா விருந்தாளியாக பால் பண்ணை சிந்தையை நிறைத்தது‌. நினைக்க வேண்டாம் என காலையிலிருந்து இரண்டு முறை தட்டி விட்டாலும் ஐந்து வருட பழக்கமாகிற்றே. கோமதியும் தர்ஷினியும் சரியாய் வேலையை முடித்திருப்பார்களா? நாளைக்கு பாலை சரியான நேரத்தில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடியுமா என எண்ணம் அங்கே சுழல, ‘ச்சை... அதான் வேலையை விட்டுவிட்டு வந்தாச்சு. அப்புறம் என்ன அதைப் பத்தியே நினைக்கிறது? லீவ் இட் ஆதி!’ என தனக்குள்ளே முணுமுணுத்தவள் உறங்கிப் போனாள்.
 
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,172
Points
113
அந்த வாரம் அப்படியே கடந்திருந்தது‌. ஆதிரைக்கு பெரிதாய் வீட்டில் வேலை இல்லை. முழு வீட்டையும் சுத்தம் செய்து முடித்துவிட்டாள். பல பொருட்களை இடம் மாற்றியும் விட்டாள். இதற்கு அடுத்து எந்த வேலையும் இல்லை எனத் தோன்றவும் கொஞ்சம் சலிப்புத் தட்டியது.

மடிக்கணினியை எடுத்து அமர்ந்தவள் வேறு எந்த பால் பண்ணையிலும் வேலை இருக்கிறதா? ஆய்வகங்களில் வேலை இருக்கிறதா என இணையத்தில் தேடினாள். மூன்று இடங்களில் வேலைக்கான அறிவிப்பு வந்திருக்க, முறையான அறிமுக உரை ஒன்றைத் தயாரித்து அனைத்திற்கும் விண்ணப்பித்து முடித்தாள். மூன்றில் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் கூட சரியென்று நினைத்துக் கொண்டாள்.

நேரம் மாலையைத் தொட, மகனை பள்ளியிலிருந்து அழைத்து வந்தாள். “ம்மா... நேத்து வாங்குன அகர் அகர் வச்சு ஜெல்லி செய்யலாம் மா!” என வந்ததும் வராததுமாய் அவன் கேட்க, “அதானே பார்த்தேன். எங்கடா மறந்துட்டீயோன்னு!” மகனை செல்லமாய் முறைத்தவள் அவன் கேட்ட ஜெல்லியை செய்ய, இவன் உடன் அங்குமிங்கும் நடந்து சர்க்கரை டப்பாவை எடுத்துக் கொடுக்கிறேன் என்ற பெயரில் தன் வாயிலும் அப்பிக் கொண்டு தாயிடம் மாட்டாது ஓடி‌ விட்டான்.

***

அலுவலக அறையில் அமர்ந்திருந்த தேவா தலையில் கையைத் தாங்கி இருந்தான். ஆதிரை வேலையைவிட்டு சென்றதும் அவளது இடத்தை நிரப்ப அனுபவமுள்ளவர்களுக்கு அவனே நேர்காணல் வைத்து தேர்ந்தெடுத்திருந்தான். இரண்டு பேரை இம்முறை அவன் வேலைக்கு அமர்த்தியும் அவனது இருப்பு அங்கே இருபத்து நான்கு மணி நேரமும் தேவைப்பட்டது.

ஆம், ஒருவருடைய வேலையும் திருப்தியாய் இல்லை. பாலை சோதனை செய்வதில் தொடங்கி அதை பொத்தலில் அடைப்பது வரை தினமும் ஏதோவொரு தவறு நடந்து கொண்டே இருந்தது. ஆதிரை ஒருத்தியே அத்தனையும் இத்தனை நாட்கள் பார்த்திருக்கிறாள் என இப்போதுதான் புத்திக்கு உறைத்தது. அவனே வராத சமயங்களில் கூட அவள் அனைவரையும் மேற்பார்வை பார்த்து வேலையை முடித்து சரியாய் மறுநாள் பாலை விநியோகத்திற்கு ஏற்றி விட்டிருக்கிறாள். அதனாலே தேவாவிற்கு பணிச்சுமை குறைந்திருந்தது. அதனால் அவளது இருப்பில்லாது இப்போது இரண்டு மடங்கு வேலை.

“லாக் புக்கை கூட ஒழுங்கா மெய்ண்டெய்ன் பண்ண மாட்றாங்க!” என முணுமுணுப்புடன் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தவன், அன்றைக்கு எத்தனை ட்ரம் பால் வந்துள்ளது என சோசித்தான். இன்னும் எதையுமே அவர்கள் கணினியில் ஏற்றவில்லை. பக்கத்து அறையிலிருந்து ஏதோ சப்தம் வேறு கேட்டது.

இவன் வெளியே சென்று பார்க்க, புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த மத்திம வயதுப் பெண் ப்ரியா பால் ஊற்றும் கிராமத்து மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தாள். இவன் என்னவென புரியாது அவர்களுக்கு அருகே விரைந்தான்.

“ஏன், உங்களை விட்டா யாரும் பால் ஊத்த வர மாட்டங்களா என்ன? பாலா இல்லை தண்ணியான்னு தெரியாத அளவுக்கு இருக்க பாலுக்கு நீங்க போட்ற சண்டை ரொம்ப அதிகம். பால் நல்லா இருந்தாதான் வாங்க முடியும்!” என அவள் கண்டிப்புடன் பேச,

“ஏம்மா... நாங்க தேவா தம்பிகிட்டே எத்தனை வருஷமா பால் ஊத்தீட்டு இருக்கோம். நேத்து வந்த நீ சொல்றதை எல்லாம் கேக்க முடியாது. ரொம்ப திமிரா பேசுறீயேமா. இதுக்கு முன்ன வேலை பார்த்த பொண்ணு இப்படிலாம் இல்ல!” அந்த பெரியவர் குரலை உயர்த்திப் பேச, “ஐயா, என்ன பிரச்சினை இங்க?” என தேவா விரைந்திருந்தான்.

“தம்பி, வாங்க... உங்களைத்தான் எதிர்பார்த்தேன். ஏன் தம்பி, இத்தனை வருஷமா உங்ககிட்டே தானே பால் கொடுக்குறோம். நீங்க செக் பண்ணித்தானே வாங்குறீங்க? என் பால்ல எத்தனை நாள் நான் தண்ணி கலந்து குடுத்துருக்கேன். சொல்லுங்க!” அவர் நியாயம் கேட்டு நிற்க, “ஐயா, நீங்க இதுவரைக்கும் பால்ல தண்ணி கலக்காம நல்லாதான் கொடுத்துருக்கீங்க. எந்த கம்ப்ளைண்டும் இல்லயா!” தேவா பதிலளித்தான்.

“அது உங்களுக்குத் தெரியுது. ஆனால் புதுசா வேலைக்கு சேர்ந்த புள்ளைக்கு தெரியலை. நான் பால்ல தண்ணி கலக்குறேன். அதனால இனிமே என்கிட்ட பால் வாங்க மாட்டேன்னு சொல்லிடுச்சு. எனக்கென்ன வேற யார்கிட்டேயும் பால் கொடுக்கத் தெரியாமலா இங்க கொடுக்குறேன். நீங்க கரெக்டா காசு கொடுக்குறீங்க. எந்த பிரச்சனையும் இல்லைன்னுதான் இங்கே வர்றோம். ஆனால் இதுக்கும் மேல ஒத்து வராது போலப்பா... நானும் எம் பங்காளிகளும் வேற இடம் பார்த்துக்குறோம்!” என அவர் முடிவாய்க் கூற,

“ஐயா... புதுசா வேலைக்கு வந்தவங்க. தெரியாம பேசி இருப்பாங்கய்யா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. மிஷின் தப்பா காட்டாது. அவங்க அதை வச்சு சொல்லி இருப்பாங்க. அதுக்காக கோபப்படாதீங்க!” என அவரை சமாதானம் செய்தவன் மாடு நன்றாய் இருக்கிறதா இல்லை சுணங்கிப் படுக்கிறதா? நோய்வாய்ப்பட்ட அறிகுறிகள் ஏதும் தென்படுகிறதா எனக் கேட்டு அவரது மாடை மருத்துவரிடம் காண்பிக்க கூறி அனுப்பி வைப்பதற்குள் தேவா காலையில் உண்ட உணவு செரித்திருந்தது.

பெருமூச்சுடன் ப்ரியாவின் புறம் திரும்பியவன், “வாட் தி ஹெல் ப்ரியா? இப்படித்தான் ரூடா பிஹேவ் பண்ணுவீங்களா? ஹம்ம்... அவங்க எல்லாம் வில்லேஜ் பீப்பிள்ஸ். பொறுமையா எடுத்து சொன்னாதான் புரியும்!” என்றான் பல்லைக் கடித்து.

“சார், என் மேல எந்த தப்பும் இல்ல. அவர் கொடுத்த பால்ல நிறைய தண்ணி கலந்து இருந்துச்சு. லாக்டோ மீட்டர்ல செக் பண்ணினப் பிறகுதான் வாங்க மாட்டேன்னு சொன்னேன்!” ப்ரியா ரோஷத்துடன் கூறினாள்.

“ப்ம்ச்... அவங்க எல்லாம் டெய்லி பால் சப்ளை பண்றவங்க. கண்டிப்பா திடீர்னு தண்ணி எல்லாம் கலக்க மாட்டாங்க. மாட்டுக்கு எதாவது பிரச்சனை இருக்கலாம். நீங்கதான் என்ன ஏதுன்னு கேட்டு டாக்டரைப் பாருங்கன்னு சொல்லணும். எடுத்தோம் கவிழ்த்தோம்னு பால் வேணாம்னு சொன்னா இங்க பொழப்பு ஓட முடியாது. ஒருத்தரைப் பகைச்சுக்கிட்டா அப்புறம் அத்தனை பேரும் பால் தர மாட்டாங்க!” என்றான் எரிச்சலாய்.

“சார், பாலை டெஸ்ட் பண்றது மட்டும்தான் என் வேலை. மாட்டுக்கு என்னாச்சுன்னு கேட்டு அட்வைஸ் எல்லாம் கொடுக்க முடியாது. அதுவும் இல்லாம அந்தாளு ரொம்ப வாய்ஸ் ரெய்ஸ் பண்றாரு. அதானலே பாலை ப்ரொக்யூர் பண்ற வேலையை வேற யார்கிட்டேயும் கொடுங்க. நான் சாம்பிள் டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் பண்றேன்!” என அவள் வெடுக்கென்று சொல்லிவிட்டு செல்ல, இவனுக்கு எரிச்சல் மண்டியது.

‘இங்க நான் பாஸா? இவங்க பாஸா?’ என எண்ணி கடியானவன், “மிஸஸ் கோமதி, தர்ஷினி, ரெண்டு பேரும் இவங்க சண்டை போடும்போது என்ன பண்ணீங்க. உங்களுக்குத் தெரியாதா எதுவும்? புதுசா வந்தவர்களுக்கு சொல்லிக் கொடுத்து ட்ரெய்ன் பண்ண சொன்னேனா இல்லையா?” அவர்கள் இருவரையும் அறைக்கு அழைத்துக் காய்ச்சி எடுத்தான்.

“சார், நான் முன்னாடியே சொல்லிட்டேன்‌. ஆதிரை அக்கா இருந்தப்போ இந்த மாதிரி பிரச்சனை வந்தா எப்படி ஹேண்டில் பண்ணுவாங்கன்னு நான் சொல்லப் போனதுக்கு, ‘நீ எனக்கு கீழேதான் வேலை பார்க்குற. எனக்கு அட்வைஸ் பண்ற வேலை வேணாம். என்ன பண்ணணுமோ, அதை நானே பார்த்துக்கறேன்’ ன்னு அந்தக்கா சொல்லிட்டாங்க. இப்படி பேசுறவங்ககிட்டே என்ன சொல்ல சொல்றீங்க சார்? எல்லாத்தையும் அவங்க இஷ்டத்துக்குத்தான் பண்றாங்க. அவங்க வேலை எல்லாத்தையும் எங்க தலைல கட்டீட்டு ஃபோன் பார்க்குறாங்க!” என தர்ஷினி மடை திறந்த வெள்ளமென ஒப்பித்தவள், “ஆதிரை அக்கா மாதிரி எல்லாரும் பொறுப்பா இருக்க மாட்டாங்க சார்!” என்றாள் அவனுக்கு கொட்டும் விதமாக.

ஏன் ஆதிரை வேலையைவிட்டு
சென்றால் எனத் தெரிய வந்ததிலிருந்து தர்ஷினிக்குமே தேவாவின் மீது கோபம். அதைவிட அவளுடைய இடத்திற்கு வந்த இரண்டு பெண்களும் ஆதிரையைப் போல அல்ல. ப்ரியா, தான் உயர் அதிகாரி என்ற மிடுக்குடன் இவர்களை வேலை வாங்கி வாட்டி வதைக்க, மற்றொரு பெண்ணோ இவர்களை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை. அதிலே இந்த இரண்டு பெண்களுக்கும் கோபம் கடலளவு பெருகிவிட்டது.

அவள் வார்த்தைகளில் தேவாவின் கண்களில் அனல் பறந்தது. “மிஸ் தர்ஷினி, மைண்ட் யுவர் வேர்ட்ஸ். இங்க யாரு வேலை பார்க்கணும், பார்க்க கூடாதுன்னு நான்தான் முடிவு பண்ணணும்!” என்றான் அழுத்தமாக.

அவள் முகத்தைக் கோணியவள், “நான் போய் வேலையைப் பார்க்குறேன் சார். இல்லைன்னா நேத்து மாதிரி எட்டு மணிக்குத்தான் அப்புறம் வீட்டுக்குப் போக முடியும்!” என அவள் அகல, “சார், தப்பா எடுத்துக்காதீங்க. நாங்க வேலையை மெதுவா செஞ்சா கூட ஆதிரை பொண்ணு எல்லாத்தையும் எடுத்து போட்டு செஞ்சுடுவா. ஆனால் வந்த ரெண்டு பேரும் அப்படி இல்ல. அவங்களுக்கு நிறைய எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கு, ஹையர் பொஷிஷன்னு ரொம்ப டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றாங்க. வயசுக்கு மூத்தவ, நான் எதாவது சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்றாங்க. ஒரு இடத்துல வேலை பார்க்குற நாலு பேரும் அனுசரிச்சுப் போனாதானே சார் வேலை நல்லா நடக்கும். நாங்க ரெண்டு பேர் தனி தீவு மாதிரியும் அவங்க ரெண்டு பேர் தனி தீவுல இருக்க மாதிரியும் இருக்கு சார். நீங்க தான் அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும்!” கோமதி மனதில் உள்ளதை உரைத்துவிட்டு அகல, இவனுக்கு மூளை சூடாகியிருந்தது.

ஆதிரையை இந்த அளவிற்கு சார்ந்திருந்தா தன்னுடைய நிறுவனம் எனத் தன்மீதே அவனுக்கு கோபம் வந்தது. சரியாய் தூங்காத ஒரு வாரத்தின் பலன் விழிகள் சிவந்திருந்தன. இவர்கள் இருவரும் வருவதற்கு முன்னே இவனும் கோமதி தர்ஷினியுடன் சேர்ந்து ஆதிரை இடத்தை நிரப்பினான். இரண்டு நாட்கள் முன்புதான் இந்த இருவரையும் அனுபவம் அதிகம் உள்ளவர்கள் என்ற எண்ணத்தில் வேலைக்கு எடுத்திருக்க, இரண்டு நாட்களில் இது மூன்றாவது சண்டை.

தினமும் அவன் உள்ளே நுழைந்ததும் சிறு சத்தம் கூட இடாது காலையிலிருந்து அனைத்தையும் சரியாய் செய்து கோமதியையும் தர்ஷினியையும் அதட்டி வேலை வாங்கி, உள்ளே எல்லாம் வேலை நடக்கிறதா எனப் பார்த்து, தான் என்ன முகத்தை சுளித்தாலும் எதையும் அலட்டிக்காது கொடுக்கும் சம்பளத்திற்கு அதிகமாகவே வேலை பார்க்கும் ஒரு நல்ல ஊழியரை இழந்துவிட்டோம் என மனம் கூறினாலும், தேவா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவனின் ஆண்‌‌ என்ற அகந்தையோ தன்முனைப்போ தடுத்துவிட்டிருக்க, செய்த தப்பை ஒத்துக்கொள்ளவில்லை.

இரவு தாமதமாக வீடு சென்று காலையில் ஐந்து மணிக்கே எழுந்து வந்து பால் பொத்தல்களை வண்டியிலேற்றி அனைத்தும் சரியாக விநியோகித்துவிட்டதா எனப் பார்த்து மீண்டும் பத்து மணிக்கு பண்ணைக்கு வந்து என ஓரிரு வாரங்களிலே அவனது உடல் அலண்டு போயிருந்தது. ஆனாலும் வீம்புகென்றே அனைத்தையும் செய்தான். ஆதிரை என்ற பெண்ணை நம்பி இந்தப் பண்ணை இயங்கவில்லை எனத் தன்னை நம்ப வைக்கப் போராடினான். அவள் இல்லையென்றால் தன் தொழில் நடக்காதா என்ன? என்ற அகந்தையும் இறுமாப்பும் வந்து அமர்ந்து கொண்டது.
வெற்றிக்கனியை சுவைக்கவில்லை எனினும் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த ப்ரியாவையும் ஆதிலாவையும் ஓரளவிற்கு பண்ணைக்கு ஏற்ப மாற்றியிருந்தான். அவர்களும் முன்பு‌ போல அல்லாது விரைவாய் வேலையை முடித்துக் கொடுக்கப் பழகி இருந்தனர். ஆனாலும் நான்கு பெண்களை ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அவ்வப்போது கண்காணது குறைகளை ஒப்புவிப்பதை மட்டும் அவனால் நிறுத்தவே முடியவில்லை.

கோமதியும் தர்ஷினியும் வந்து ப்ரியாவையும் ஆதிலாவைப் பற்றியும் குறைக் கூற, அவர்கள் இவர்களைப் பற்றி வந்து புகார் ஒப்பு வித்தனர். நான்கு பேரையும் ஒற்றுமையாய் வேலை பார்க்த வைக்க வேண்டும் என அவன் எண்ணியதை இந்த ஜென்மத்தில் நிறைவேற்ற முடியாது என்றுணர்ந்து அந்த முடிவை கைவிட்டவன், முடிந்தளவு சுமுகமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டான். ஆனாலும் ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு பிணக்குகள் எழாமல் இல்லை.

தேவாவிற்கு பழையபடி கொஞ்சே கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட நேரம் கிடைத்திருக்க, அன்றைக்கு இலகுவாக அமர்ந்திருந்தான். அடுத்த பிரச்சனை உழவர் துணை செயலி மூலம் வரக் காத்திருக்க, இவனே சென்று ஆதிரையை வேலைக்கு அ
ழைக்கும் நாளும் வந்திருந்தது.

தொடரும்...

நாளைல இருந்து டெய்லி அப்டேட் வரும் மக்களே. கெட் ரெடி... மறக்காம பூஸ்ட் பண்ணுங்க.ஐ நீட் எனர்ஜி 🫶💖 அப்புறம் ஏதாவது கெஸ் பண்ணி இருக்கீங்களா? சொல்லீட்டுப் போங்க









 
Well-known member
Messages
377
Reaction score
262
Points
63
Deva ithuku over ah panna koodathu po po aval ah convince panni kootitu va nalla venum.unnaku .

Deva kum yazhu kum oruthar ah innorthuar ku ithuku munnadi yae theriyum nu nenaikiren
 
New member
Messages
1
Reaction score
0
Points
1
Superb, Deva thaan Athirai paiyanuku appa va :unsure:
 
Top