இதயம் 24.1

இதயம் 24:

மறுநாள் காலை ரிஷி எழுந்து முகம் கழுவி வர, அழைப்பு மணி ஓசை கேட்டது.

மலர்தான் வந்து விட்டாள் என்று எண்ணியபடி வந்து, ரிஷி கதவைத் திறக்க, “ஹாய் மாம்ஸ்!” என்று சிரிப்புடன் நின்றிருந்தாள் சாகித்யா.

திடீரென ஒரு பெண் தன்னை மாமா என்று அழைப்பதைக் கண்டு, ரிஷி சற்று திகைத்து அவளைக் காண, “என்ன மாம்ஸ், ஏதோ பேய் பார்த்த மாதிரி இப்படி முழிக்கிறீங்க?” என்று சிரிப்புடன் வம்பிழுத்தாள் சாகித்யா.

“நீங்க?” என்று ரிஷி அவளை கேள்வியாய்க் காண, “என்ன மாம்ஸ், எங்க வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணப் போறீங்க, வீட்ல முக்கியமான ஆளுங்க எங்களைத் தெரியலையா?” என்று சிரிப்புடன் புருவம் உயர்த்தினாள்.

சாகித்யாவின் பேச்சில் ரிஷியின் திகைப்பு நீங்க, இதழில் ஒரு கீற்றுப் புன்னகை வந்தமர்ந்தது.

“சாகித்யா?” என்று ரிஷி கேள்வியுடன் அவளை நோக்க, “எஸ், நான்தான் சாகித்யாவே தான். இப்படித்தான் வெளியே நிக்க வச்சுப் பேசிட்டு இருப்பீங்களா? உங்களுக்கு எங்க அக்காவைக் கட்டிக் கொடுக்கிறதைப் பத்தி நான் இன்னொரு டைம் கன்சிடர்பண்ணலாமோ?” என்று குறும்புச் சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கண்சிமிட்டினாள் சாகித்யா.

ரிஷி பதில் அளிப்பதற்குள், அங்கே மறைவாக நின்றிருந்த மலர், “சாகி, போதும், அவரை ரொம்ப வம்பிழுக்காத,” என்றபடி வர, ரிஷியின் பார்வை புன்னகையுடன் அவள் மீது படிந்தது.

“போதும், போதும். என் அக்காவை சைட் அடிச்சது வழிய விடுங்க மாம்ஸ்,” என்று அவனை விலக்கிவிட்டு சாகித்யா உள்ளே நுழைய, “ஹாய் மாம்ஸ்!” என்றபடி அடுத்ததாக வந்து நின்றாள் வித்யா.

ரிஷியின் பார்வை மலர் மீது படிந்து மீள, “இது வித்யா, எங்க வீட்டு கடைக்குட்டி,” என்று மலர் அறிமுகம் செய்து வைத்தாள்.

“ஹாய் வித்யா,” என்று அழகாய்ப்புன்னகைத்தவன் அவளுக்கு வழியை விட, “அண்ணாவும் எங்க கூட வந்திருக்காங்க மாம்ஸ். உங்கள பாக்க பயந்துகிட்டு வராம இருக்கான்,” என்ற வித்யா, மறைந்திருந்த முரளியைக் கைப்பிடித்து அழைத்து வந்தாள்.

ரிஷியைக் கண்டதும் முரளி தயக்கத்துடன் புன்னகைக்க, அவனது தோளில் கை போட்ட ரிஷி, “என்ன பாத்து மச்சானுக்கு என்ன பயம்?” என்று சிரிப்புடன் புருவம் உயர்த்தினான்.

பயம்லாம் இல்ல,” என்று மெலிதான குரலில் முரளி தயங்கி மொழிய, “பார்த்தா அப்படி தெரியலையே,” என்று புன்னகையுடன் வினவினான் ரிஷி.

“அது மரியாதை,” என்று முரளி மென் குரலில் கூற, “உங்க வீட்ல இவன்தான் ரொம்ப சைலன்ட் போல,” என்று மலரிடம் வினா தொடுத்தான் ரிஷி.

“ஆமா, அவன் அப்பா மாதிரி. நாங்க மூணு பேர் அம்மா மாதிரி கொஞ்சம் நல்லா பேசுவோம்,” என்றபடி மலர் உள்ளே நுழைய, ரிஷியும் முரளியுடன் வீட்டிற்குள் சென்றான்.

“என்ன மாம்ஸ், மச்சானோட பேசி முடிச்சாச்சா. நாம இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று ஒற்றைப் புருவத்தைத் தூக்கி இறக்கினாள் சாகித்யா.

“என்ன இன்டர்வியூ?” என்ற ரிஷி மலரைக் காண, “இங்க பாருங்க மாம்ஸ், உங்கள இன்டர்வியூ பண்ணப் போறது நான் தான்,” என்று வம்பிழுத்த சாகித்யா, “என் அக்காவை உங்களுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறோம்ல, அதான் உங்க குவாலிபிகேஷன் தெரிஞ்சுக்க இன்டர்வியூ,” என்றாள்.

“ஓஹோ…” என்று சிரிப்புடன் இழுத்த ரிஷி, “அதுதான் என் அத்தை இன்டர்வியூ பண்ணாமலே என்ன செலக்ட் பண்ணிட்டாங்களே,” எனத் தானும் அவளை வம்பிழுக்க, “அது உங்க மாமியார் மருமகனுக்கு இடையில் இருக்கிறது. நான் உள்ள வரமாட்டேன். இப்போ நான் மலரோட தங்கச்சியா உங்களை இன்டர்வியூ பண்ண வந்து இருக்கேன்,” என்று விடாது பதில் கூறினாள் சாகித்யா.

மலர் இடைநுழைந்து, “சாகி, அவர ரொம்ப வம்பிழுக்காத,” என்று தங்கையை அதட்ட, “இங்க பாருடா, அதுக்குள்ள சப்போர்ட்டா? இப்பதான் அம்மா நாங்க எல்லாம் சம்மதம் சொல்லி இருக்கோம். கல்யாணம் முடிஞ்ச பிறகு சப்போர்ட் பண்ற வேலையெல்லாம் வச்சுக்கோங்க,” என்று தமக்கையை சமாளித்தாள் சாகித்யா.

“ஆமா, நாங்க இண்டர்வியூ பண்ணுவோம்,” என்று வித்யாவும் இணைந்து கூற, ரிஷி மலரிடம், “நீ போய் குடிக்க ஏதாவது போட்டுக் கொண்டு வா. நான் பேசுறேன்,” என்று அவளை அனுப்பி வைத்தான்.

முரளி இவை அனைத்தையும் பார்த்தபடி அமைதியாக நின்றிருக்க, “நீ ஏன் அங்க தனியா நிக்கிற? வாடா,” என்று அவனது கையைப் பிடித்த ரிஷி தன்னுடன் அமர வைத்தான்.

பின் சாகித்யாவிடம், “ஹ்ம்ம்… ஸ்டார்ட் பண்ணு. உன்னுடைய இன்டர்வியூவ நான் ரெடியா இருக்கேன்,” என்று நகைப்புடன் மொழிய, “ஹ்ம்ம்… ஸ்டார்ட் பண்றேன் மாம்ஸ்,” என்றவள் அவனிடம் பேசுவதற்கு ஏதுவாக அவனைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.

“சொல்லுங்க மாம், உங்களுக்கு என் அக்கா மேல எப்போ, எந்த செகண்ட்ல லவ் ஃபீல் வந்தது?” என்று முகத்தில் தாங்கிய அவாவுடன் கேட்டிட, அவளது வினாவில் சமையலறையில் இருந்த மலரும் திகைப்புடன் எட்டிப் பார்த்தாள்.

மலரின் பார்வையைக் கண்ட ரிஷி முகம் நிறைந்த சிரிப்புடன், “அது டாப் சீக்ரெட். நான் இன்னும் உன் அக்காகிட்டயே சொல்லல,” என்றுவிட்டு மலரைப் பார்க்க, மலரின் முகத்தில் மெலிதான ஏமாற்றம் பரவியது.

“ஓஹோ…” என்று இழுத்த சாகித்யா, “பரவால்ல, அவளுக்கு முன்னாடி எங்க கிட்ட சொல்லுங்க. நாங்க தெரிஞ்சுக்கிறோம்,” என்றிட, “நோ,” என்று சிரிப்புடன் மறுத்தான் ரிஷி.

“என்ன மாம்ஸ், நீங்க?” என்று செல்லமாய் அழுத்துக்கொண்ட சாகித்யா, “சரி, செகண்ட் கொஸ்டின். உங்களுக்கு அக்கா மேல வந்த ஃபீலிங் லவ் தான். அவ தான் உங்க லைப்னு எந்த செகண்ட் டிசைட்பண்ணிங்க?” என்று கேள்வி எழுப்ப, “கொஸ்டின் எல்லாம் ரொம்ப டிபிகல்டாகவே வருதே,” என்று சிரிப்புடன் ரிஷி வினவினான்.

“இருக்காதா பின்ன, சாகித்யானா சும்மாவா?” என்று இல்லாத காலரைத்தூக்கிவிட்டுக் கொண்டவள், “சொல்லுங்க மாம்ஸ். இப்படி நாலு பேர் சொல்லித் தெரிஞ்சுக்கிட்டாதான் லவ் எப்படி வருதுன்னு எனக்கும் தெரியும். நானும் ஒரு நல்ல பையனா பார்த்து கமிட் ஆக முடியும்,” என்றிட, “சாகித்யா!” என்று அதட்டலுடன் வந்து நின்றாள் மலர்.

சாகித்யா பேசுவதற்குள் ரிஷி முந்திக்கொண்டு, “மலர், அவ ஜஸ்ட் விளையாட்டுக்குப்பேசுறா. அது எதுக்கு இவ்வளவு சீரியஸா எடுக்குற?” என்று மலரை அதட்டினான் ரிஷி.

அவளுக்குப் பதில் கூறாதவள், மெலிதான இதழ் சுழிப்புடன் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொதித்த தேநீரை வடிகட்டத் துவங்கினாள்.

“அவ எப்பவுமே அப்படித்தான் மாம்ஸ். சின்ன வயசுல பொறுப்பெல்லாம்ஏத்துக்கிட்டனால ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கா. இப்பவும் நீங்களா வந்து லவ்வ் சொல்லி இருக்கலைனா கண்டிப்பா அவ உங்கள புடிச்சு இருந்தாலும் சொல்லி இருக்க மாட்டா,” என்று தமக்கையை பற்றி மென்குரலில் கூற, ரிஷியும் அதனை ஆமோதித்தான்.

“இப்பவும் ஜஸ்ட் விளையாட்டுக்குத்தான் சொன்னேன். அதை சீரியஸா எடுத்துட்டு எப்படி அதட்டுறா பாத்தீங்களா?” என்று சிறிதாய் சலித்துக் கொண்டவள், பிறகு மலருக்குக் கேட்காத குரலில், “நாள பின்ன, எனக்கு யாரையாவது புடிச்சிருந்தா உங்க கிட்ட தான் மாம்ஸ் வந்து சொல்லுவேன். நீங்கதான் என் கல்யாணத்தை நடத்தி வைக்கணும்,” என்று கட்டளையிட, “படிக்கிற வயசுல படிப்பு மட்டும் பாரு சாகித்யா,” என்று ரிஷி அறிவுரை வழங்கினான்.

“ஐயையோ, அவளுக்கு மேல நீங்க ஸ்ட்ரிக்ட் போலயே,” என்ற சாகித்யா தலையில் கையை வைக்க, ரிஷியின் புன்னகை இமை நீண்டது.

“படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போன பின்னாடி, உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா, லைக் பார்ட்னரா வந்தா நல்லா‌ இருக்கும்னு தோணுச்சுன்னா என்கிட்ட வந்து சொல்லு. கண்டிப்பா வீட்ல பேசி நானே முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்,” என்று ரிஷி கூற, “வாவ், சூப்பர் மாம்ஸ் நீங்க. சீக்கிரமா படிச்சு முடிக்கிறேன், என் ஆள தேடி பிடிக்கிறேன்,” என்று சாகித்யா ஆர்ப்பரிக்க, மற்றவர்களது முகத்திலும் புன்னகை ஜனித்தது.

அப்போதுதான் வித்யாவின் இருப்பை உணர்ந்தவன், அவள் புறம் திரும்பி, “வித்யா, இதை எல்லாம் நீ காதுல வாங்கி இருக்கக் கூடாது. நல்லபடியா படிச்சு நல்ல காலேஜ்ல ஜாயின் பண்ணனும். புரியுதா?” என்று புருவம் உயர்த்த, “ஹ்ம்ம், நல்லா புரியுது மாம்ஸ்,” என்று சிரிப்புடன் வித்யா தலையை நான்கு பக்கமும் உருட்டியவள், பிறகு, “நானும் உங்கள இன்டர்வியூ பண்ணுவேன்,” என்று பெரிய மனித தோரணையில் கூறினாள்.

“ஏய், இன்னும் நானே முடிக்கல. அதுக்குள்ள நீ வந்துட்ட! உனக்கு இன்டர்வியூ பண்ற வயசு வரல. போயிட்டு அப்புறம் வா,” என்று சாகித்யா தங்கையை வம்பிழுக்க, “அவளுக்கும் ஒரு சான்ஸ் கொடுப்போம். என்ன சொல்றான்னு கேட்கலாம்,” என்று வித்யாவிற்காகப் பரிந்து வந்தான் ரிஷி.

error: Content is protected !!
Scroll to Top