இதயம் 24.2

“அவ என்ன இன்டர்வியூ மாம்ஸ் பண்ண போறா நீங்க பன் பரோட்டாவும் ஒரு சிக்கன் நூடுல்ஸும் வாங்கித் தந்தா உங்கள செலக்ட் பண்ணிடுவா,” என்று சாகித்யா சிரிப்புடன் கூற, “சின்ன  மச்சினிச்சிய கரெக்ட் பண்றது இவ்ளோ ஈசியா?” என்று குறும்புச் சிரிப்புடன் அவளைப் பார்த்த ரிஷி, “இப்போவே வாங்கி கொடுத்துடறேன்,” என்றான்.

“மாம்ஸ்…” என்று கூச்சத்துடன் வித்யா சிணுங்க, “என்ன சின்னவளைப் போட்டு எல்லாரும் வம்பிழுத்துட்டு இருக்கீங்களா?” என்றபடி தேநீர் கோப்பையுடன் வந்தாள் மலர்.

“வாக்கா வந்து நீயே நியாயத்தை கேளு. ஒரு பன் பரோட்டாவும் சிக்கனுடன் வாங்கிக் கொடுத்தா நான் மாம்ஸ செலக்ட் பண்ணிடுவேன்னு சாகித்யா சொல்றா,” என்று வித்யா புகார் வாசிக்க, “அவ சரியாத்தானே சொல்லி இருக்கா?” என்ற மலர் மொத்தமாய் வித்யாவை வாரினாள்.

“அக்கா, நீயுமா?” என்று முகத்தைச் சுருக்கி வித்யா சிணுங்க, ரிஷிக்கு ஷாலினியின் சிறுவயது நினைவு வந்தது.

“விளையாட்டுக்கு சொன்னேன்டி,” என்ற சாகித்யா தங்கையை அணைத்துக் கொள்ள, மலர் தேநீரை மற்ற நால்வருக்கும் கொடுத்தாள்.

தேநீரை அருந்திய ரிஷி மலரிடம், “இவங்க மூணு பேரும் நான்வெஜ் சாப்பிடுவாங்க தானே? நான் போய் சிக்கன், மட்டன் வாங்கிட்டு வரேன்,” என்று இயம்ப, “மாம்ஸ், அதெல்லாம் வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்கலாம். நாங்க இப்ப கிளம்பனும்,” என்று சாகித்யா மறுத்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் வந்துட்டு சாப்பிடாம போவீங்களா? இருந்து சாப்பிட்டு போங்க,” என்று ரிஷி கூற, “எங்கம்மா கொஞ்ச நேரம் தான் பர்மிஷன் கொடுத்திருக்கு மாம்ஸ். லேட்டா போனா திட்டு விழும்,” என்று சாகித்ய கூறும் போது, அவளது அலைபேசி அழைத்தது.

“எங்கம்மா தான் கூப்பிடுது. பாருங்க, இன்னும் கிளம்பலையா, நேரமாச்சுன்னு கேக்குறதுக்கு,” என்று ரிஷியிடம் கூறிய சாகித்யா, அலைபேசி எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

மறுமுனையில் மாதவி, “என்ன சாகித்யா? போய் ரொம்ப நேரமாச்சு. இன்னும் கிளம்பலையா?” என்று சரியாக வினவிட, “இதோ கிளம்பணும்மா. மாமாக்கு கைல ட்ரெஸ்ஸிங் மட்டும் பண்ணிட்டு கிளம்பிடுவேன்,” என்று தாயிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

பின் வந்த வேலையை கவனிக்க எண்ணி, தான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்து, கட்டுப் போட வேண்டிய இத்யாதிகளை வெளியே எடுத்தாள்.

“இதுக்குத்தான் வந்தீங்களா மூணு பேரும்?” என்று ரிஷி நகைப்புடன் கேட்க, “இதை ரீசனா சொல்லித்தான் வந்தோம் மாம்ஸ். இல்லன்னா அம்மா இங்க வரவிடாது. கல்யாணத்துக்கு அப்புறம் தான் போகணும்னு சொல்லியிருக்கு,” என்று அவனுக்கு பதிலளித்தவள், அவனது கை காயத்தை ஆராய்ந்து சுத்தம் செய்து, மருந்து வைத்து கட்டுப் போடத் துவங்கினாள்.

மலர் எழுந்து சமையலறைக்குச் செல்ல, சாகித்யா, “மாம்ஸ் இந்தக் கேள்விக்காவது ஒழுங்கா பதில் சொல்லுங்க. அக்காதான் உங்க லைஃப். அவள விட்டுட்டு வேற யாரையும் இந்த ஜென்மத்துல பார்க்க முடியாதுன்னு எப்பவாவது தோணுச்சா உங்களுக்கு?” என்று ஆர்வம் தாங்கிய முகத்துடன் அவனைக் கண்டாள்.

ரிஷி இதழில் தோன்றிய கீற்றுப் புன்னகையுடன், ‘ஆம்’ எனும் விதமாகத் தலையசைக்க, “எப்போ?” என்று அடுத்த நொடி கேள்வி விழுந்தது.

“கண்டிப்பா சொல்லணுமா?” என்று குறும்புச் சிரிப்புடன் ரிஷி வினா தொடுக்க, “மாம்ஸ், ப்ளீஸ்,” என்று விழி சுருக்கிக் கெஞ்சினாள் சாகித்யா.

“லாஸ்ட் மந்த் ஒரு பொண்ணைப் பார்க்கப் போயிருந்தேன். அப்பதான் அவளைப் பார்த்ததும் எனக்கு உன் அக்கா முகம் தான் வந்துச்சு. அந்தப் பொண்ணு எப்படி இருந்தா, என்ன பேசுனா, எதுவும் எனக்கு ஏறல. அந்த செகண்ட் தோணுச்சு, இந்த ஜென்மத்துல என்னால இவளை விட முடியாது,” என்றவனது பார்வை, சமையலறை வாசலில் நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மலர் மீது படிந்தது.

“வாவ், செம சீன் மாம்ஸ்,” என்று சிலாகித்த சாகித்யா, அவனைச் சற்று நெருங்கி, “இந்த லவ் எப்பவும் இருக்கணும். என் அக்காவை எப்பவும் சந்தோசமா வச்சுக்கோங்க. அவ எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டா,” என்றவளது குரலில் தமக்கை மீதான பாசம் தெரிந்தது.

அதை உணர்ந்த ரிஷி புன்னகையுடன், “கண்டிப்பா, அவ என் கூட சந்தோஷமா வாழ்வா,” என்று உறுதி அளிக்க, சாகித்யாவின் முகமும் மலர்ந்து புன்னகைத்தது.

தனக்குக் கேட்காத குரலில் பேசுபவர்களைக் கண்டு, “என்ன, ரெண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க?” என்று வினவிட, “அது சீக்ரெட். நாங்க சொல்ல மாட்டோம். அப்படித்தானே மாம்ஸ்?” என்று சாகித்யா ரிஷியையும் இழுத்தாள்.

“ஆமா. எனக்கும் என் மச்சினிச்சிக்கும் இடையில ஆயிரம் சீக்ரெட் இருக்கும்,” என்ற ரிஷி குறும்புச் சிரிப்புடன் மலரை வம்பிழுக்க, “ரொம்பத்தான்,” என்று இதழைச் சுழித்தவள் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

பேசியபடியே சாகித்யா அவனது காயத்திற்குக் கட்டுப் போட்டு முடிக்க, மூவரும் அங்கிருந்து கிளம்பத் தயாரானர்.

“ரிஷி, நான் வேணா அத்தை கிட்ட பேசவா? இருந்து சாப்பிட்டு போங்க,” என்று அவர்களிடம் கூற, “இது நம்ம வீடு மாம்ஸ். எதுக்கு இந்த பார்மாலிட்டி எல்லாம்? நெக்ஸ்ட் டைம் வரும்போது சாப்டுகிறோம்,” என்று சாகித்யா மறுத்துவிட்டாள்.

“வித்யா, போய்ட்டு வரேன் மாம்ஸ்,” என்று கூற, “நீ இன்டர்வியூ பண்ணலையா?” என்று ரிஷி சிரிப்புடன் புருவம் உயர்த்தினான்.

“அதான் இவன் எனக்கு வாய்ப்பே கொடுக்கலையே,” என்று வித்யா சோகத்துடன் கூற, “நான் தரேன் உனக்கு சான்ஸ். இருந்து இன்டர்வியூ பண்ணிட்டு மலர்கூட போ,” என்று ரிஷி மொழிந்தான்.

“லேட்டா போனா அம்மா திட்டும் மாம்ஸ். அடுத்த தடவை கேக்கிறேன்,” என்று அழகாய்த் தலையசைத்துக் கூற, இவனுக்குப் புன்னகை செவிவரை நீண்டது.

“சரி, பார்த்துப் போயிட்டு வாங்க,” என்றவன், பிறகு, “வாங்க, நானே உங்கள டிராப் பண்றேன்,” என்று கார் சாவியை எடுத்தான்.

“உங்களுக்கு எதுக்கு மாம்ஸ் சிரமம்? பக்கத்துல தானே நாங்க நடந்து போறோம்,” என்று சாகித்யா மறுக்க, “இதுல என்ன சிரமம் இருக்கு? வாங்க,” என்று உரிமையாய் அழைத்தவன், தனது மகிழுந்தை இயக்கினான்.

மலரும் வாசல் வரை வந்து அவர்களை வழியனுப்பியவள், வந்து காலை சமையலைக் கவனிக்கத் துவங்கினாள்.

ரிஷி மலரின் வீடு வரை சென்று அவர்களை இறக்கிவிட, “சாகித்யா, உள்ள வந்துட்டு போங்க மாம்ஸ்,” என்று அழைத்தாள்.

“எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு. கிளம்பணும். இன்னொரு நாள் வர்றேன்,” என்று அவளிடம் கூறிவிட்டு, மலரைக் காண விரைந்தான்.

மாதவி சம்மதம் கூறிவிட்டார் என்பதை இளையவர்களின் செயலில் உணர்ந்தவன், உள்ளுக்குள் அப்படி ஒரு ஆசுவாசம் கொண்டான்.

வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள் அவர் சம்மதம் தெரிவிப்பாரா என்று ஒரு தவிப்பு, அழைப்புறுதல் இருந்து கொண்டே தான் இருந்தது.

இளையவர்கள் உடன் இருந்ததால், அவனால் பெரிதாய் மலரிடம் எதிர்வினை காண்பிக்க இயலவில்லை. அவர்கள் வராமல் இருந்தால், நிச்சயம் அவளை இறுக்கியணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பான்.

மகிழுந்தை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வந்து அழைப்புமணியை அழுத்த, மலர் வந்து கதவைத் திறந்தவள், “அதுக்குள்ள விட்டுட்டு வந்துட்டீங்களா?” என்று ஆச்சரியமாய் வினவிட, “ஆமா, விட்டுட்டு உன்ன பாக்கணும் தான் வேகமாக வந்தேன்,” என்று சிரிப்புடன் மொழிந்தான் ரிஷி.

“அதுசரி,” என்று போலியாய் அழுத்தவள், அவனுக்கு வழிவிட்டு உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழ்போட்டு திரும்ப, அவளுக்கு வெகு அருகில் நின்றிருந்தான் ரிஷிகேஷவ்.

அன்று தன் மனதை உணர்த்தினானே, அப்போது இருந்த அதே நெருக்கம் தான் இப்போதும்.

ரிஷியை அவ்வளவு நெருக்கத்தில் எதிர்பாராத மலர் திகைத்துப் பார்க்க, அவனது விழிகள் மெதுவாய் அவளது வதனத்தில் ஊர்ந்தது.

உள்ளுக்குள் எழுந்த படபடப்பை மறைத்தவள், “தள்ளிப் போங்க,” என்று உள்ளே சென்ற குரலில் முணுமுணுக்க, “என்ன சொன்ன? கேக்கல எனக்கு,” என்று அவளைப் போலவே பேசியவன், முகத்தை அவளுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றான்.

“தள்ளிப் போங்க, ப்ளீஸ்,” என்றவள் அவனது மார்பில் கை வைத்து தள்ள, அவளது கையைத் தன் நெஞ்சோடு பிடித்துக் கொண்ட ரிஷி, தனது இதயத்துடிப்பை அவளுக்குக் கடத்தினான்.

படபடவென அடித்துக் கொண்ட அவனது இதயத்துடிப்பைக் கரத்தின் வழியாக உணர்ந்தவள், அதிர்ந்து கையைப் படக்கென உருவிக் கொண்டாள்.

“கேன் யூ ஃபீல் மீ, மலர்?” என்று அவளது செவிக்கு அருகில் முணுமுணுத்தவனது குரல் இதயத்தினுள் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

ஒரு முறை விழி மூடி திறந்து, அவனது குரலை தனக்குள் உள்வாங்கியவள், நிமிர்ந்து அவனது முகம் கண்டாள்.

அவளது செயலில் புன்னகை பூத்தவன், “மலர்,” என்று மெல்லிய குரலில் அழைத்திட, “என்ன?” என்று அவனது முகம் நோக்கினாள்.

“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று இதழ் கடையில் துடித்த சிரிப்புடன் ரிஷி கேட்க, “எப்போ?” என்று மலரும் மலர்ந்து கேட்டாள்.

“நாளைக்கே,” என்ற ரிஷி குறும்புச் சிரிப்புடன் கூற, “நாளைக்கே வா,” என்று திகைத்துப் பார்த்தாள் மலர்.

“ஆமா, பண்ணிக்கலாம். ஆல்ரெடி ரொம்ப லேட்,” என்றவனது கரம் அவளது முகம் நோக்கி வர, இப்போதும் பட்டென்று தடுத்தாள் மலர்.

“ப்ச்… என்னடி?” என்று போலியாய் ரிஷி அழுத்துக் கொள்ள, “தொடாம பேசுங்க,” என்று அவனது முகம் பார்க்காது கூறினாள்.

“ஏன் தொடாம பேசணும்? ஐ ஹேவ் ஆல் த ரைட்ஸ்” என்றவன், அவளை உரசும் தூரத்தில் மேலும் நெருங்கி நிற்க, மலர் அதிர்ந்து விழிகளைப் பெரிதாய் விரித்தாள்.

இதயம் படபடவென அடித்துக் கொள்ள, முகத்தில் ஆங்காங்கே வியர்வைத் துளிகள் பூத்தது.

“எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை, மலர்,” என்றவன் நிறுத்திவிட்டு அவளைக் காண, “என்ன?” என்றவளது முகத்தில் அவனது நெருக்கத்தில் ஏகமாய் அவஸ்தை.

“இதோ, இந்த நோஸ்பின்னைத் தொட்டு பாக்கணும்னு. ஷால் ஐ?” என்றவன் அவளது விழி பார்க்க, “அவ்ளோதானா?” என்று உள்ளுக்குள் பெரிதாய் ஆசுவாசம் கொண்டவள், அவனை நம்பாத பார்வை பார்த்தாள்.

“நிஜமா, இந்த நோஸ்பின் என்னை ரொம்ப நாளா டிஸ்டர்ப் பண்ணது,” என்றவனது முகத்தில் அதனைத் தொட்டு பார்க்கும் அவா மிளிர்ந்தது.

ஒரு கணம் அவனை அமைதியாகப் பார்த்தவள், மெதுவாகத் தலையசைக்க, ரிஷி தனது ஒற்றை விரலை அவளது மூக்குத்தியில் பதித்தான்.

அவனது சிறு தீண்டலுக்கே, “ஷ்…” என்று மலர் கூசி சிலிர்க்க, ரிஷிக்கு அவளை மேலும் கூசி சிலிர்க்க வைக்க ஆர்வம் எழுந்தது.

அவன் விரல் அப்படியே நாசியை வருட, இவளுக்குள் பெரிதான பூகம்பம் பூத்தது. விழி மூடி தனக்குள் சுருங்கினாள்.

அவளது எதிர்வினை ரிஷியை மேலும் செய்யத் தூண்ட, தனது இதழால் எளிதாக அவளது ஒற்றைக்கல் மூக்குத்தியில் உரசினான்.

சட்டென இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது. தன்னுள் நிகழும் பூகம்பத்தைத் தாங்க இயலாத மலர், அவனது சட்டையை இறுக்கிப் பிடித்தாள்.

ரிஷிக்கு நாசிக்குள் நுழைந்த அவளது வாசம் மேலும் போதை ஏற்ற, இன்னும் அவளை நெருங்கி விழி மூடி அவளது வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான்.

நொடிகள் நிமிடங்களாகக் கரைய, அவர்களைக் கலைக்கும் விதமாக அழைத்தது ரிஷியின் அலைபேசி.

இவ்வளவு நேரம் அவனது நெருக்கத்தில் தன்னை மறந்து இருந்த மலர், அலைபேசியின் ஓசையில் தன்னிலை அடைந்து பட்டென்று அவனை விலக்கினாள்.

“ப்ச்… என்னடி?” என்றவன் அவளைத் தன்னோடு இழுத்தணைக்க, “போன் அடிக்குது. போய் எடுங்க,” என்று அவனது முகம் பார்க்காமல் முணுமுணுத்தாள்.

“இந்த நேரத்தில யாரு டிஸ்டர்ப் பண்றது?” என்று சலித்துக் கொண்ட ரிஷி, அலைபேசியை எடுக்கச் செல்ல, மலர் தப்பித்து சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

error: Content is protected !!
Scroll to Top