அன்பு 8.3


சந்தனா மாலை பள்ளி முடிந்து வந்ததும் அவளுடன் விளையாடலாம் என தீனா காத்திருந்தான். காலையிலிருந்து மனோவுடன் நிகழ்பட ஆட்டம் (வீடியோ கேம்)
விளையாடினான். பின்னர் மதிய உணவை உண்டுவிட்டு சீட்டு கட்டைப் பிரித்துப் போட்டு விளையாடினர். தீனாவிற்கு ஒரே இடத்தில் அமர்ந்து விளையாட விருப்பமில்லை.

அதனாலே சந்தனா வந்ததும் அவளுடன் வேறு எதாவது விளையாடலாம் என ஆர்வமாய்க் காத்திருந்தான். அவள் பள்ளி முடிந்து வந்ததை அறையிலிருந்து பார்த்து உறுதி செய்தவன், “மனோ… நான் குட்டி கூட விளையாடப் போறேன். வரீயா?” எனக் கேட்டான்.

“அவ என் கூட விளையாட வர மாட்றா…” மனோ சோர்வாய்க் கூற, “இல்ல… நீ வா மனோ. நம்ப மூனு பேரும் சேர்ந்து விளையாடலாம்…” என அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.

“குட்டி… ஸ்கூல் முடிஞ்சிடுச்சா? உனக்குத்தான் வெயிட் பண்ணேன். ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா?” எனக் கேட்டான் தீனா. மனோ அப்படியே மெதுவாய் அங்கிருந்த வரண்டாவில் அமர்ந்து காலை நீட்டினான். அவனுடைய காலுக்கு நேரே பெரிய கல் ஒன்று இருக்க, அவனால் சரியாய் அமர முடியவில்லை. சந்தனா அந்தக் கல்லை அகற்றி வைத்தாள்.

“அது என்ன கேம் தீனா… எப்படி விளையாடணும்?” இவள் யோசிக்க, “நீ விளையாண்டது இல்லையா? நான் கண்ணை மூடி ஹண்ட்ரட் கவுண்ட் பண்ணுவேன். நீ போய் ஒளிஞ்சுக்கணும். அப்புறம் நான் உன்னைக் கண்டு பிடிப்பேன்…” என்றான்.

“ஓ… ஒளிஞ்சு பிடிச்சு விளையாட்டா? எனக்கு நல்லா தெரியுமே…” என்றாள் உற்சாகமாய்.

“நான் கவுண்ட் பண்றேன். நீ போய் ஒளிஞ்சுக்கோ…” என்று தீனா சுவரின் புறம் திரும்பிக் கண்ணை மூடி எண்ணத் துவங்க, இவள் எங்கே ஒளியலாம் எனத் தேடினாள்.

“குட்டி… அங்க…” என மனோ குரலைத் தழைத்துக் கூற, அவன் சொன்ன இடத்தைக் கண்டுகொள்ளாது இவளாய் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டாள். தீனா எண்ணி முடித்ததும் அவளைத் தேடத் துவங்க, அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

சந்தனா அடிக்கடி எட்டி எட்டிப் பார்க்க, அதை கண்டு கொண்டவன், “குட்டி… அவுட்!” என அவளருகே ஓடிச் சென்றான்.

அவள் மாட்டிக் கொண்டதில் விழித்து நிற்க, “சரி… நீ போய் எண்ணு. நான் ஒளிஞ்சுக்கிறேன்…” என்றான்.

இவள் சென்று நூறு வரை எண்ணிவிட்டு சுற்றி முற்றி அவனைத் தேட, மனோ தீனா ஒளிந்திருக்கும் இடத்தைக் கைக்காட்ட இவள் ஓடிச்சென்று அவனைக் கண்டு பிடித்தாள்.

“மனோ… தீனா, ரெண்டு பேரும் வாங்க…” என சதா குரல் கொடுக்க, தீனா உள்ளே ஓடினான். மனோ அப்படியே அமர்ந்திருந்தான். சந்தனா காலில் சேறையும் சகதியையும் மிதித்துவிட்டதால் காலைக் கழுவச் சென்றாள்.

“இந்தா… இந்த ஜூஸைக் குடிச்சிட்டு விளையாடப் போ. மனோவுக்கும் குடு…” என அவர் இரண்டு குவளைகளை அவனிடம் கொடுத்தார்.

“சரித்த…” என்றவன் பழச்சாற்றை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். மனோவிடம் ஒன்றைக் கொடுத்தவன், தானும் பருகினான். சந்தனா காலைக் கழுவிவிட்டு வேண்டுமென்றே தாமதமாய் வந்தாள். இருந்தும் தீனா அவளிடம் பழச்சாற்றை நீட்டினான்.

“குட்டி ஜூஸ் குடி… ஸ்வீட்டா இருக்கு!” என அவளிடம் குவளையை நீட்டினான்.

“வேணாம் தீனா… எனக்கு பல்லு வலிக்கும். இனிப்பு சாப்டக் கூடாது…” என மறுத்தாள் சின்னவள்.

“ஆமால்ல… நான் மறந்துட்டேன் குட்டி…” என அவன் அனைத்தையும் குடித்து முடித்திருந்தான். அடுத்ததாய் இவள் ஒளிந்து கொள்ள அவன் கண்டுபிடிக்க என நேரம் சென்றது. மனோவை இருவருமே கண்டு கொள்ளவில்லை. விளையாட்டிற்கும் சேர்த்துக் கொள்ளவில்லை.

தீனா விளையாடும் மும்முரத்தில் அவனை கவனிக்கத் தவறிவிட, சந்தனா வேண்டுமென்ற அவனைத் தவிர்த்தாள். பூரணியிடம் கேட்டுவிட்டு அவனுடன் விளையாடலாம் என நினைத்தாள். ஆனாலும் அவனைப் பார்க்க பாவமாய் இருந்தது.

இவர்கள் விளையாடி முடித்து களைத்து மனோவின் அருகே சென்று அமர்ந்தனர். தீனா வியர்க்கிறது என்று மின்விசிறியை சுழலவிட்டான்.

“தீனா… எதுக்கு ஃபேன் போட்ட? மேடம் பார்த்தா திட்டுவாங்க!” என்றாள் பதட்டமாய்.

“குட்டி… ஃபேன் போட்டா எல்லாம் அத்தை திட்டமாட்டாங்க…” எனக் கூற, இவளுக்குப் பயமாய் இருந்தது. பின்னர் அவர்கள் இருவரும் உடனிருப்பது அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.

“தீனா… நான் வீட்டுப் பாடம் செய்யப் போறேன். நாளைக்கு டீச்சர் கேப்பாங்க…” எனப் பையைத் திறந்து வீட்டுப்பாடம் செய்யத் தொடங்கினாள் சந்தனா. ஆங்கிலத்தில் எதையோ அவள் தவறாக எழுத, மனோ அதைக் குறிப்பிட்டான். அவளுக்குப் புரியவில்லை. அவனே வாங்கி திருத்திக் கொடுத்தான்.

தீனா சற்று நேரம்தான் அங்கே அமர்ந்திருந்தான். அதற்கு மேல் அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. வீட்டிற்குள்ளே ஓடிவிட்டான். மனோ அங்கேயே அமர்ந்திருந்தான். சந்தனா கணித வீட்டுப் பாடத்தை கடகடவென முடித்துவிட்டாள்.

“குட்டி… உனக்கு மேத்ஸ் நல்லா வருமா? எனக்கு வரவே வராது. புடிக்காது…” என்றான் பாவனையாய்‌.

“எனக்கு கணக்குப் பாடம்தான் ரொம்ப புடிக்கும். அதுல நிறைய மார்க் வாங்கிடுவேன். டீச்சர் எனக்கு பேனா வாங்கிக் கொடுப்பாங்க…” என ஆர்வமாய் பதிலளித்தாள்.

“அப்போ எனக்கு மேத்ஸ் சொல்லி தரீயா?” எனக் கேட்டான் அவன். அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு தலையை அசைத்தாள்.

“நீ ஸ்கூலுக்குப் போகலையா?” அவள் கேட்க, “போகணும்… எனக்கு உடம்பு சரியில்லைல. அதனால லீவ்ல இருக்கேன். சீக்கிரம் போய்டுவேன்…” என்றான். அவளும் தலையை அசைத்தாள்.

பூரணி வேலையை முடித்துவிட்டு வர, “பாய் குட்டி…” என மனோ கையை அசைக்க, “டாடா…” என்றுவிட்டு அவளும் தாயுடன் நகர்ந்தாள்‌.

“ம்மா… நானும் தீனாவும் விளையாட்றோம்ல மா. மனோவும் எங்க கூட விளையாட வர்றேன்னு சொன்னான். அவனையும் சேர்த்துக்கவாமா?” என இவள் தாயின் முகம் பார்க்க, அவர் அமைதியாய் இருந்தார்.

“ம்மா… ப்ளீஸ் மா. மனோ பாவம். அவன் தனியா இருக்கான். உடம்பு சரியில்லையாம் அவனுக்கு. அந்த சார் கூட வந்து அவனை விளையாட்டுக்கு சேர்த்துக்க சொன்னாரு மா…” என்றாள் கெஞ்சலாய். ஏற்கனவே அவளை அடித்ததில் மனவருத்தத்திலிருந்த பூரணி மகளுக்காக சரியென்றுவிட்டார்.

“குட்டி… விளையாட்றதெல்லாம் சரி. அவனோட விளையாட்டுப் பொருளை எதுவும் நீ எடுக்க கூடாது. வெளியே விளையாடுங்க. சண்டை போடாம இருக்கணும்…” என சில பல அறிவுரைகளுடன் அவர் ஒப்புக் கொள்ள, இவளுக்கு மகிழ்ச்சிதான்.

இன்றைக்கு தாங்கள் விளையாடும்போது அவன் தனியாய் அமர்ந்திருந்தது இவளுக்கு வருத்தமாகிப் போயிற்று. அவனது காலில் வேறு அடிபட்டிருப்பது பாவமாக இருக்க, அவனையும் நாளைக்கு விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளலாம் என அவன் செய்த தவறிற்கு பாவமன்னிப்பை பரந்த மனதுடன் வழங்கிவிட்டாள்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top