“அஷூ… சந்தனா ஆன்ட்டி வந்திருக்காங்க பாரு…” ஷோபி குரலில் அஷ்வினும் ரஞ்சனும் ஒரு சேரத் திரும்பினர்.
“ஆன்ட்டி…” என சின்னவன் ஓடி வர, ரஞ்சன் ஒரு பக்க கையை வலதுபுறமும் மற்றொரு கையை இடதுபுறமும் வைத்திருந்தவன், பட்டென இரு கரங்களையும் கீழே இறக்கினான். அவன் முகத்தில் லேசான வெட்கம் வந்தது போல. காதெல்லாம் சிவந்து போக, அவளைப் பார்த்து அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான். சந்தனா அவனை மேலும் சங்கடப்படுத்தக் கூடாதென மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
“அஷூ… அம்மாவும் நானும் உனக்கு முட்டை சப்பாத்தி எடுத்துட்டு வந்திருக்கோம்!” என மனோ உற்சாகமாய்க் கூற, அஷ்வினின் முகம் மலர்ந்து போனது.
“தேங்க் யூ ஆன்ட்டி…” என அவன் சந்தனாவை ஓடி வந்து கட்டிக்கொண்டான். அவள் சிரிப்புடன் அவனை அணைத்தாள்.
“சந்தனா… எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம்?” ஷோபி சங்கடமாய்க் கேட்டாள்.
“இதுல என்ன கஷ்டம் ஷோபி? எங்களுக்கு சமைக்கும் போது சேர்த்து உங்க மூனு பேருக்கும் செஞ்சுக் கொடுத்தேன். அவ்வளோ தான். டெய்லியா செஞ்சுத் தரப் போறேன்?” கேள்வி கேட்ட சந்தனாவிடம் ஷோபனா புன்னகைத்தாள்.
ரஞ்சன் உடை மாற்றி வெளியே வந்தான். “வாங்க டாக்டர்…” என அவன் அழைக்க, இவள் தலையை அசைத்தாள்.
“இன்னைக்கு நமக்கு குக் பண்ற வேலையை மிச்சம் பண்ணிட்டாங்க சந்தனா. முட்டை சப்பாத்தி செஞ்சு எடுத்துட்டு வந்திருக்காங்க…” என ஷோபனா கூற,
“ஹம்ம்… அப்போ இன்னைக்கு ஷோபி குக்கிங்க்ல இருந்து தப்பிச்சுட்டேன் போல…” என்ற ரஞ்சன் மனைவியைப் போல அலட்டிக் கொள்ளாமல் இருக்கையில் அமர்ந்து சந்தனா கொண்டுவந்த உணவை எடுத்து ஒரு வாய் சுவைத்தான். அவனது முகத்தில் ஆச்சர்யம் வழிந்தது. ஷோபனா அவனை மென்மையாய் முறைத்தாள்.
“இட்ஸ் யம்மி… இந்த டிஷ்ஷை ஏற்கனவே நான் டேஸ்ட் பண்ணி இருக்கேன். பட், எங்கேன்னு ஞாபகம் இல்லை. மே பீ அம்மா செஞ்சு கொடுத்திருப்பாங்க போல. உங்களுக்கு அப்படியே என் அம்மா கைப்பக்குவம் இருக்கு…” என்றான் மனதில் உள்ளதை மறைக்காது. சந்தனா அமைதியாய் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். ஆனாலும் இந்த பாராட்டுதலில் அவளுக்கொரு நிறைவு.
“டாடி… எனக்கு…” என அஷ்வினும் அவன் மடிமீது அமர்ந்து உண்டான். மனோகர் ரஞ்சனையும் சின்னவனையும் பார்த்திருந்தான். குகேஷ் நினைவு வந்தது அவனுக்கு. அவன் முகத்தைப் பார்த்தே அகத்தைக் கணித்த ரஞ்சன் தன்னியல்பாய் மற்றவனுக்கும் ஊட்டிவிட்டான்.
“இல்ல, நீங்க சாப்பிடுங்க. இப்போதான் நாங்க ப்ரேக்-பாஸ்ட் முடிச்சிட்டு வந்தோம்…” சந்தனா இடை புகுந்தாள்.
“இட்ஸ் ஓகே டாக்டர், நாங்க மூனு பேரும் சாப்பிட்றோம்…” என மனோவையும் அருகே அமர்த்திக் கொண்டான்.
“சந்தனா… என்ன சாப்பிட்றீங்க? டீ ஆர் காஃபி? சாரி, உங்களுக்கு எதுவுமே கொடுக்காம பேசிட்டு இருக்கேன்…” என்றாள் ஷோபனா.
“இப்போதானே சொன்னேன் ஷோபனா. வரும்போதுதான் வயிறு ஃபுல்லா சாப்பிட்டு வந்தேன். வயித்துல கொஞ்சம் கூட இடமில்லங்க!” என்றாள்.
“சரி, கொஞ்சம் ஜூஸ் குடிங்க…” என்ற ஷோபி குளிர் சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பொத்தலை வெளியே எடுத்தாள்.
“நோ ஷோபி, நான் பேக்ட் ஜூஸ் குடிக்கிறதில்ல…” அவசரமாய் இவள் மறுக்க, “டாக்டரா இருக்கது ரொம்ப கஷ்டம் போல. அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முன்னே நம்ப ஃபாலோ பண்ணணும் இல்ல?” எனக் குறும்பாய்க் கேட்டான் ரஞ்சன்.
“பின்ன இல்லையா சார்? நம்ம கரெக்டா இருந்தாதானே பேஷண்ட்ஸ்க்கு அட்வைஸ் பண்ண முடியும்?” என அவளும் புன்னகைத்தாள்.
“அப்போ எதுவுமே சாப்பிட்ற ஐடியால இல்ல நீங்க?” ஷோபனா மென்மையாய் சந்தனாவை முறைத்தாள். அதற்குள்ளே லட்சுமியம்மா அழைத்துவிட்டார்.
யாரோ நோயாளி ஒருவர் அவசரமாய் அவளைப் பார்க்க வந்திருப்பதாக அவர் உரைக்க, சந்தனா அவர்களிடம் கூறிவிட்டு மகனை அழைக்க, “அம்மா… நான் அஷூவோட இருக்கேன்!” என அவன் அடம்பிடித்தான்.
“மனோ… இன்னொரு நாள் வரலாம். இப்போ கிளம்பு…” அவள் அதட்டலிட, சின்னவன் முகம் வாடிப்போனது.
“சந்தனா, அவனை ஏன் மிரட்டுறீங்க? இங்கே இருக்கட்டுமே. நாங்க பார்த்துக்குறோம்…” ஷோபனா இடைபுக, அவள் சங்கடமாய் பார்த்தாள்.
“இல்லங்க, அவன் கொஞ்சம் சேட்டை அதிகமா பண்ணுவான்!” தயங்கியபடியே கூற,
“ப்ம்ச்… இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிற எனக்கு உங்கப் பையனை சமாளிக்க முடியாதா? நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன்…” என அவளைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டாள் ஷோபனா.
சந்தனா கூறியது போல மனோகர் கொஞ்சமல்ல, நிறையவே சேட்டை செய்தான். முதலில் புது இடமென்பதால் அமைதியாக இருந்தான். நேரம் செல்ல செல்ல அவனது சேட்டைகள் அளவில்லாமல் போனது. கூடவே அஷ்வினும் சேர்ந்து கொள்ள, வீட்டையே மொத்தமாய் கலைத்துப் போட்டனர். சிறிது நேரம் கழித்து தாய் நினைவு வந்ததும், வீட்டிற்குப் போகிறேன் என அவன் கூற, ரஞ்சன் வீடுவரை சென்று விட்டுவிட்டு வந்தான்.
பிறகு கணவனும் மனைவியும் சேர்ந்து வீட்டை ஒழுங்குப்படுத்தினர். அன்றைய நாள் இப்படியாக சிரிப்பும் முறைப்புமாய் கடந்திருந்தது.