அன்பு 8.1

ஞாயிற்றுக் கிழமைக்கே உரிய சோம்பலில் புரண்டு படுத்தாள் சந்தனா. ஏனோ வாரத்தின் ஆறுநாட்கள் உடனிருக்கும் சுறுசுறுப்பு எங்கே சென்று ஒளிந்து கொள்கிறதோ என எண்ணியதும் அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் மீது கையைப் போட்டு அணைத்தவாறே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் மனோ.

கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். எட்டைத் தொட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. எக்கிக் கீழே கண்களை சுழலவிட, லட்சுமி அம்மாவும் தூங்கிக் கொண்டிருந்தார்.

இவள் மெதுவாய் மனோவின் தூக்கம் கலையாது எழுந்தமர்ந்தாள். இன்னும் உறக்கம் கண்களில் மிச்சமிருந்தது. கண்ணை சிமிட்டிவிட்டு கழிவறை சென்றுவந்தாள். அறை இருட்டாய் இருக்க ஜன்னலைத் திறந்துவிட, மெதுவாய் வெளிச்சம் படர்ந்தது.

சூடாய் ஒரு குளம்பியைத் தயாரித்து ஒரு கோப்பையில் ஊற்றிவிட்டு ஜன்னலருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவளின் மறுகையில் கைபேசி இருந்தது. ஒரு மிடறு குளம்பியைப் பருகிவிட்டு கைபேசியை உயிர்ப்பித்து இணையத்தை இணைத்ததும் கடகடவென செய்திகள் வந்து விழுந்தன. அனைத்திலும் குகா என்ற பெயரே பிரதானமாய் இருக்க, இவளுக்கு முறுவல் பூத்தது.

விரல்களால் செய்தியைச் சொடுக்கி உள்ளே சென்றாள். குகனும் பப்பியும் எங்கோ வெளியே சென்றுவிட்டு புகைப்படங்களை அனுப்பி இருந்தனர். இருவரது முகமும் சிரிப்பில் மலர்ந்திருக்க, இவளது கண்ணே பட்டுவிடும் என எண்ணிக் கொண்டாள். இதய வடிவ பொம்மையை அனுப்பி வைத்தாள். பப்பி ஏதோ குரல் வழிச் செய்தி அனுப்பியிருந்தாள்.

“மம்மி… நாங்க அவுட்டிங் வந்தோம்…” எங்கு சென்றார்கள் என உற்சாகத்துடன் அவள் விவரித்திருக்க, இவளது உதடுகளில் புன்னகை ஏறின.

“யூ போத் ஆர் சோ க்யூட். என்ஜாய் யுவர் டேய்ஸ். வி மிஸ் யூ டூ” என இவளது விரல்கள் விசைப்பலகையைத் தட்டி அனுப்ப, மனோ எழுந்துவிட்டான்.

“ப்ரஷ் பண்ணீட்டு வா மனோ…” என இவள் கூற, நேராய் வந்து கீழே அமர்ந்து அவளது மடியில் முகம் புதைத்தான். சந்தனாவின் முகம் புன்னகைத்தது.

“மனோ, பெட்ல போய் தூங்கு டா… ஏன் கீழே உக்காந்து இருக்க?” என வாஞ்சையாய் கேட்டாள்.

“தூக்கம் போய்டுச்சு மா!” என மங்கலாய் ஒலித்தது அவன் குரல்‌.

“சரி, ப்ரஷ் பண்ணீட்டு வா. அம்மா காஃபி தரேன்…” என்றாள் அவனது தலையைக் கலைத்து‌.

“கொஞ்ச நேரம்மா…” என அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“பப்பியும் குகாவும் போட்டோ அனுப்பி இருக்காங்க. பார்க்குறியா நீ?” சந்தனா கேட்டதும், நொடியில் நிமிர்ந்தான் சின்னவன்.

“காட்டுங்க மா…” என அவனே அவளது கைபேசியை எடுத்து புகைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினான். இவள் எழுந்து சென்று அவனுக்கு குளம்பியை எடுத்து வர, பல்லை விளக்கிவிட்டு வந்து சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவாறு அதைப் பருகலானான்.

“இன்னைக்கு என்ன குக் பண்ணலாம்? மனோவுக்கு என்ன வேணும்?” எனக் கேட்டுக்கொண்டே குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தாள் சந்தனா.

“ம்மா… மார்னிங் முட்டை சப்பாத்தி. அஷூ கூடக் கேட்டான் இல்ல. அவனுக்கும் எனக்கும் செஞ்சு கொடுங்க மா…” என்றான். அவளுக்குமே அப்போதுதான் அவனிடம் தான் சமைத்து தருவதாய் உரைத்தது நினைவிற்கு வந்தது. சென்ற முறை கடைக்குச் செல்லும் போதே பன்னீர் வாங்கி வந்தாள். ஆனால், வேலை பளுவில் மறந்துவிட்டாள்.

“ஆமா மனோ… அம்மா மறந்தே போய்ட்டேன். ஓகே, மார்னிங் முட்டை சப்பாத்தி வித் பன்னீர் க்ரேவி. லஞ்ச்க்கு பிரியாணி. ஓகே வா?” எனக் கேட்டாள்.

“ம்மா… பிரியாணி இஸ் போரிங் மா. அடிக்கடி செய்றீங்களே!” சின்னவன் சலித்துக் கொள்ள,

“போடா… போ, எனக்குப் பிரியாணி ஃபேவரைட். அதான் செய்வேன். அடிக்கடி இல்லை. டூ வீக்ஸ் ஆச்சு பிரியாணி சாப்ட்டு…” என இவள் சிறுபிள்ளை போல முகத்தைக் கோணினாள். ஏனோ பிரியாணி மீதிருக்கும் பிரியத்தை மட்டும் அவளால் விட்டுவிட முடியவில்லை. சிறு வயதில் கறிசோறு வேண்டும் எனக் கேட்டு தாயிடம் அடம்பிடித்த நாட்கள் எல்லாம் பசுமையாய் மனதை நிறைத்தன.

பூரணியையும் நினைத்துப் பார்த்தாள். தனக்கென அவரின் மெனக்கெடல்கள் எல்லாம் இப்போது நினைத்தாலும் மனதை நிறைக்கும். வேறெதுவுமே வேண்டாம். அவர் மட்டும் அருகிலிருந்தால் போதும். அவர் மடியில் படுத்து நிம்மதியாக உறங்க வேண்டும் என்ற பேராசை அவ்வப்போது முகிழ்க்கும். ஆனாலும் திரும்ப பெற முடியாத பொக்கிஷமான தருணங்கள் அல்லவா அவை.

இப்போது பூரணி உயிரோடு இருந்திருந்தால் தன்னை நிச்சயமாய் இப்படியிருக்க அனுமதித்திருக்க மாட்டார். குகாவையும் ஒரு பாடுபடுத்தி எடுத்திருப்பார் என நினைக்கும் போது மனம் கனத்துப் போனது.

‘ஏன் மா சீக்கிரம் போனீங்க?’ என எத்தனையோ நாட்கள் விழிகளில் ஈரம் கோர்க்கும். ஆனால் யார் முன்பும் அதை காண்பித்துக் கொள்ள மாட்டாள்.

லட்சுமியம்மா எழுந்து வந்துவிட்டார். இருவரது உரையாடலையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

“அட… ரெண்டு பேரும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வாங்கப்பா. அப்ப தானே சமைக்க முடியும்…” என்றார்.

“உங்கப் பேரன்கிட்டே நீங்களே சொல்லுங்க லட்சுமிமா…” சந்தனா சப்பாத்திக்கு மாவை எடுத்துப் பிசைந்தாள்.

“எதுக்கு சந்தனா இவ்வளோ மாவு? மூனு பேருக்கு பிசைய சொன்னா, ஆறு பேர் சாப்பிட்ற அளவுக்கு மாவு போட்டிருக்க நீ?” என லட்சுமி வினவ,

“ஆமா லட்சுமி மா… ஆறு பேருக்குத்தான். அன்னைக்கு நம்ப வீட்டுக்கு வந்தாங்க இல்ல, அந்தக் குட்டிப் பையனுக்கும் அவங்க அம்மா அப்பாவுக்கும் சேர்த்து செய்றேன்…” என்றாள்.

“சரி, நீ குடு… நான் தேய்க்கிறேன்…” என அவர் கூற,

“இல்லமா… நானே பார்த்துக்கிறேன். எப்பவும் போல சண்டே உங்களுக்கு ரெஸ்ட். போங்க, போய் டீவி பாருங்க…” என அவரை அனுப்பியவள், சப்பாத்தியை தேய்த்து கல்லில் போட்டவாறே மறுபக்கம் பன்னீர் குருமாவை வைத்து முடித்திருந்தாள். நேரம் ஒன்பதாக பதினைந்து நிமிடங்கள் இருந்தன. இவர்கள் மூவரும் உண்டு முடிக்க, சந்தனா உடையை மட்டும் மாற்றிவிட்டு வந்தாள்.

“ம்மா… நானும் மனோவும் போய் அவங்க வீட்ல கொடுத்துட்டு வர்றோம்…” என சந்தனா சமைத்தவற்றை எடுத்துக்கொண்டு ரஞ்சனின் வீட்டுக்குச் சென்றாள்.

ஷோபனா அப்போதுதான் எழுந்து தேநீரைப் பருகிவிட்டு வாரத்தில் ஏழு நாட்களும் சமைக்க வேண்டுமா என்ற அலுப்புடன் வெளியே ஏதாவது வாங்கி உண்ணலாமா? என்ற யோசனையில் அமர்ந்திருந்தாள். அழைப்புமணி ஒலித்ததும், இவள் கதவைத் திறக்க, சந்தனாவும் மனோவும் நின்றிருந்தனர்.

அவர்களை எதிர்பாராது திகைத்தவள், “வாங்க டாக்டர்…” என்றுவிட்டு மற்றவளின் முறைப்பில், “வாங்க சந்தனா… வா மனோ!” என இருவரையும் அழைத்து அமர வைத்தாள்.

சந்தனா கையிலிருந்த உணவை மேஜை மீது வைத்தவள், “அஷூ இல்லையா?” எனக் கேட்டாள்.

“இதோ, ரூம்ல இருக்கான்…” என ஷோபனா கை அறை நோக்கி நீள, அங்கே அஷ்வினும் ரஞ்சனும் நின்றிருந்தனர்.

“அலெக்ஸா ப்ளே ஆலுமா டோலுமா…” என சின்னவன் மெலிதாய்க் கத்த, “நோ அலெக்ஸா… ப்ளே அப்படி போடு போடு சாங்க்…” என ரஞ்சன் கத்தினான். அலெக்ஸா குழப்பத்தில் இரண்டு பாடல்களையும் விடுத்து புதிதாய் ஒரு பாடலை ஒலிக்க விட, “டாடி… போங்க…” என அவன் முகத்தை திருப்பினான்.

ரஞ்சன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அலெக்ஸா கொடுத்தப் பாடலுக்கு கையையும் காலையும் அசைத்து நடனமாட, அதைப் பார்த்திருந்த சந்தனா முகம் முழுவதும் புன்னகை.

error: Content is protected !!
Scroll to Top