அன்பு 6.3

“சரி அத்தை…” என அவன் கூற, “ம்மா… அவளையும் வர சொல்லுங்க. மூனு பேரும் சேர்ந்து விளையாட்றோம்…” மனோ சந்தனாவைக் கைக் காட்டினான். அவளை உள்ளே அழைக்க சதாவிற்கு விருப்பமில்லை. நீண்ட நாட்கள் கழித்து மகன் இயல்பிற்கு மீண்டிருக்க, வேறு வழியின்றி அவளையும் அழைத்தார்.

“நீயும் அவங்களோட சேர்ந்து விளையாடு… வா!” என அவர் கூற, தீனா, “குட்டி… வா!” என துள்ளலாய் அவளது கையைப் பிடித்தான்.

அவனது கையை தன்னிடமிருந்து பிரித்தவள், “இல்ல மேடம்… நான் வரலை!” என்றாள். கொஞ்சம் ரோஷமும் அவர் தன்னைத் திட்டிய தினமும் நினைவு வந்தது அவளுக்கு. சின்னப் பிள்ளை எனினும் அவரது கோபமுகம் மனதிலே தங்கிவிட்டது. எல்லாவற்றிற்கும் முதல் அவர்களே அழைத்தால் கூட உள்ளே வரக்கூடாது என பூரணி மகளிடம் பலமுறை அறிவுறுத்தியிருந்தார்.

‘திமிரைப் பாரேன் இந்த சின்னதுக்கு…’ என நினைத்த சதா, “அவ வரமாட்டேன்னு சொல்றா இல்ல. நீங்க ரெண்டு பேரும் விளையாடுங்க…” என்றார் மகனிடம்.

“இல்ல மா… குட்டியும் வரட்டும். அப்போதான் விளையாடுவோம்…” எனப் பிடிவாதமாய் மனோ நிற்க, மகனை அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

“பூரணி…” இவர் குரல் கொடுக்க, செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்தார் அன்னப்பூரணி. மகள் அனைவருடனும் நிற்கவும், அவள் ஏதும் செய்துவிட்டாளோ என்ற பதைபதைப்புடன் அவர்கள் அருகே விரைந்தார்.

“சொல்லுங்க மா…” என்ற பூரணியின் பார்வை மகளை ஒரு முறை தொட்டு மீண்டது.

“மனோவும் தீனாவும் உன் மகளை விளையாடக் கூப்பிட்றாங்க. நான் அன்னைக்கு ஏதோ ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு அவ உள்ள வர மாட்றா. நீ அவளை உள்ளே கூப்பிடு…” என்றார்.

சில நொடிகள் யோசித்த பூரணி, “இல்ல மா, அவ வெளியே விளையாடட்டும். உள்ள வர வேணாம். சின்ன புள்ளை எதையும் உடைச்சுட்டான்னா போச்சு…” என்றார். அன்று சதாம்பிகா கூறிய வார்த்தைகள்தான். அவருக்குப் புரிந்ததும் எரிச்சல் படர்ந்தது.

‘ஒன்னுமே இல்லைனாலும் ஆத்தாளுக்கும் மகளுக்கும் ரோஷம் மட்டும் வரும்…’ என நினைத்தவர், “மனோ, தீனாவோட விளையாடு நீ…” என விறுவிறுவென உள்ளே நுழைந்துவிட்டார்.

மனோ எதுவும் பேசாது உள்ளே சென்றுவிட, தீனா சந்தனாவைப் பார்த்தான். “குட்டி… நாளைக்கும் வருவீயா நீ?” எனக் கேட்டான்.

“ஆமா, டெய்லி வருவேன்!” என அவள் கூற, “சரி, அப்போ நாளைக்கு நம்ப விளையாடலாம். இப்போ நான் மனோவோட கொஞ்ச நேரம் விளையாட்றேன். அவன் பாவம் இல்ல, தனியா இருக்கான்…” என்க, இவள் தலையை அசைத்தாள். பூரணி முன்பே உள்ளே சென்றுவிட்டார்.

அனைவரும் அகன்றதும் சந்தனா பூந்தொட்டிகள் பக்கம் சென்றாள். அப்போதுதான் அவற்றிற்கு தண்ணீர் விடாதது நினைவு வர, டப்பாவில் நீரைப் பிடித்து செடிகளுக்கு ஊற்றத் தொடங்கினாள். வெள்ளை நிற ரோஜா அழகாய்ப் பூத்திருந்தது. சிவப்பு வண்ண ரோஜா மட்டுமே அவள் பார்த்திருக்கிறாள். வெள்ளையைக் கண்டதும் தாயிடம் ஆர்வமாய் என்னவென விசாரித்துவிட்டாள்.

“அம்மா… நம்மளும் ரோஜா செடி வளர்க்கலாமா? வெள்ளை ரோஜா மா.. அழகா இருக்குல்ல?” என இவள் அடிக்கடி தாயிடம் கேட்டுக்கொண்டே இருக்க, பூரணி வாங்கித் தருவதாக உரைத்திருந்தார். ஆனால், அது என்றைக்கென அவர் கூறிப்பிட்டிருக்கவில்லை.

செடிக்கு தண்ணீர் ஊற்றி முடித்ததும் அவளது சிந்தனை தீனா கூறிச் சென்ற ‘வீடியோ கேம்’ என்ற வார்த்தையில் தேங்கி நின்றது.

‘என்ன கேமா இருக்கும்? அதை இங்கேயே விளையாடலாம் இல்ல. தீனா வரட்டும், நம்ப மண்லயே அந்த கேமை விளையாடலாம்’ என எண்ணிக் கொண்டாள். பூரணி வேலை முடித்து வர, செல்லும் வழியில் கோழிக்கறி வாங்கிச் சென்றவர், அவள் கேட்ட கறிச்சோறை சமைத்துக் கொடுத்தார்.

“குட்டி… வா, வந்து சாப்பிடு. நீ கேட்ட கறிசோறு செஞ்சிருக்கேன்…” என மகளுக்குப் பூரணி ஆசையாய் பரிமாற, அவளுக்கு உணவுண்ணும் ஆசை போயிருந்தது. தீனா சொன்ன விளையாட்டைப் பற்றி யோசித்தவாறு அமர்ந்திருக்க,

“குட்டி… என்னடி அப்படியொரு யோசனை. சாப்பிடு…” என அவர் அதட்டவும், இவள் உண்ணத் தொடங்கினாள். காலையில் தீனா கொடுத்த உணவு சுவையாய் இருந்தது.

இது அத்தனை சுவையாய் இல்லயெனத் தோன்ற, “அம்மா..‌. தீனா கொடுத்த கறிசோறு இதைவிட நல்லா இருந்துச்சு மா…” என்றாள்.

மகளைப் பார்த்த பூரணி, “தீனாகிட்டே சாப்பாடு வாங்கி சாப்டீயா நீ?” என்றவர் குரல் உயர்ந்ததும்தான் சந்தனாவிற்கு உறைத்தது. தாய்க்கு தான் உண்டது தெரியாது எனப் புரிந்தவள், என்ன சொல்வதென்று அறியாது பயத்துடன் பார்த்தாள்.

“சொல்லு குட்டி, அவன்கிட்ட கறிசோறு கேட்டீயா?” என மகள் முதுகிலே பளீரென அடித்தார். சுள்ளென வலிக்கவும், இவள் எழுந்து சுவரோடு ஒன்றிவிட்டாள்.

“அம்மா… இல்ல மா, நான் அவன்கிட்ட கேக்கலை மா. அவன்தான் கொடுத்தான் மா. நான் வேணாம்னுதான் சொன்னேன். அவன்தான் கொடுத்தான் மா…” என்றாள் தேம்பியபடி.

“அவன் கொடுத்தா நீ வாங்கி சாப்டுவீயா? நான் என்ன சொல்லிருக்கேன் உன்கிட்ட. அவங்க எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” எனக் கேட்டு அவளது கன்னத்திலே அறைந்தார். பூரணிக்கு சதாம்பிகா வீட்டில் எதையும் வாங்கி உண்பதில் சுத்தமாய் விருப்பமில்லை. வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில் சதா மீதமிருந்த உணவை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து இவரிடம் கொடுத்தார்.

அந்த பாத்திரத்தை அவர் வேலையாட்களுக்காக மட்டுமே உபயோகிப்பதை உணர்ந்த பூரணிக்கு மனம் கனத்தது. அதுவும் உணவை ஒரு ஓரமாய் எடுத்து தீண்ட தகாதப் பொருளைப் போல வைத்திருப்பதைக் கண்டவர், “இல்ல மா… யார்கிட்டேயும் எதையும் வாங்கி சாப்ட்டு பழக்கமில்ல. வீட்ல சமைக்கிறதே எங்களுக்குப் போதும்…” எனக் கூறிவிட்டிருந்தார்.

அப்போது ரோஷத்துடன் உரைத்திருந்தாலும் அவர் அதை நினைத்து மனம் வருந்தியது உண்மை. அதனாலே சதாம்பிகா வீட்டில் தண்ணீர் கூட அருந்துவது இல்லை. தானே தண்ணீர் பொத்தலையும் எடுத்துச் சென்றுவிடுவார். அப்படியிருக்கையில் மகள் அங்கே உணவுண்ணதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சதாம்பிகாவிற்கு இது தெரிந்தால், ‘எத்தனை நாட்களாய் இப்படி சாப்பிடுகிறீர்கள்?’ எனக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

பூரணி அடித்த அடியில் சந்தனாவின் கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்துவிட்டன. “ம்மா… இனிமே யார் எதுக்கொடுத்தாலும் வாங்க மாட்டேன் மா. அடிக்காத மா, ரொம்ப வலிக்குது மா…” என சுவரோரத்தில் அமர்ந்துவிட்டாள். சில நொடிகள் அவர் அமைதியாய் இருந்தார்.

“நீயா அவன்கிட்ட கேட்டியா?” என வினவ, “இல்ல மா… நான் கேக்கலை. அவனா… அவனாதான் மா கொடுத்தான்…” என்று பயத்துடன் அழுதாள்.

மகள் கேட்டிருக்க மாட்டாள் என நம்பிக்கை இருந்தாலும், இப்போதைய தங்களது சூழ்நிலையில் அவரால் சந்தனா ஆசைப்பட்டதை செய்ய முடியாத காரணத்தால் அவள் கேட்டிருக்க கூடுமோ என எண்ணம் பிறந்தது.

“இனிமே அவனா கொடுத்தாலும் வாங்க மாட்டேன் மா. எனக்கு கறிசோறு வேணாம்மா!” என்றாள் தேம்பலாய்.

மகளைப் பார்த்து, “சரி, இங்க வா…” என பூரணி அழைக்க, அவள் பயத்துடன் மாட்டேன் என தலையை அசைத்தாள்.

“அடிக்க மாட்டேன் குட்டி…” என அவளை அழைத்து அமர வைத்து கண்ணீரை துடைத்துவிட்டார்.

“சாப்பிடு.‌..” என அவரே ஊட்டிவிட, சந்தனா அமைதியாய் உண்டாள். என்ன உண்கிறோம் என்ற உணர்வு கூட அவளிடம் இல்லை.

“குட்டி… அவங்க வீட்ல மட்டும் இல்ல, இனிமே யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது. யாராவது வந்து, ‘உங்கம்மா இதை கொடுக்க சொன்னாங்க’ன்னு எதாவது சாப்பிட கொடுத்தா வாங்க கூடாது. அப்படி நீ அதை சாப்பிட்டேன்னா, அதுல மயக்க மருந்து கலந்து உன்னைக் கடத்திட்டுப் போய் வித்திடுவாங்க டி…” எனக் கூறவும், அவள் அதிர்ந்து தாயைப் பார்த்தாள்.

“ஆமா குட்டி… அம்மாவைத் தவிர யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாது. என்கிட்ட வந்து சொல்லணும். கையைத் தவிர இங்க, அப்புறம் அங்கன்னு யாராவது தொட்டுப் பேசுனா, என்கிட்ட உடனே வந்து சொல்லணும்…” எனக் கூற, அவள் தலையை அசைத்தாள். ஏற்கனவே பூரணி கூறியிருந்தாலும் அதை அசட்டை செய்திருந்தாள். ஆனால், இப்போது அவர் கூறுவது எல்லாம் தன்னுடைய நன்மைக்கே என்று புரிந்தது.

தேங்காய் எண்ணெயை எடுத்து வந்து சந்தனாவின் கன்னத்திலும் முதுகிலும் தேய்த்துவிட்டார் பூரணி. கோபத்தில் அடித்ததில் அடி பலமாய்பட்டிருக்க, அவரது விரல் அச்சு பதிந்திருந்தது.

“வலிக்கிதா குட்டி…” எனப் பூரணி வருத்தத்துடன் கேட்க, தாயைப் பார்த்துப் புன்னகைத்தவள், “இல்ல மா… அடிக்கும்போதுதான் வலிச்சுது. இப்போ வலியே இல்ல மா…” எனக் கூறியவள், அவரது கையை இழுத்துப் பிடித்து, “ப்ராமிஸா நான் அவங்க வீட்ல எதுவும் வாங்கி சாப்பிட மாட்டேன் மா!” என்றாள்.

“அவங்க வீட்ல மட்டும் இல்ல குட்டி… யார் கொடுத்தாலும் சரி!” என அறிவுறுத்த, தலையை அசைத்துக் கொண்டாள்.

“சாயங்காலம் அம்மா உனக்குப் புடிச்ச க்ரீம் ரொட்டி வாங்கிக் தரேன் குட்டி…” என்று மகளது கன்னத்தைப் பூரணி தடவ, அவள் தலையை அசைத்து பற்கள் தெரியப் புன்னகைத்தாள்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top