அன்பு 6.2

“ஹம்ம்…” எனத் தலையை உருட்டியவள் வெங்காயத்தையும் தக்காளியையும் எடுத்து வைக்க, இவன் தன்புறம் நகர்த்தி வெட்டத் தொடங்கினான்.

“நான் பார்த்துக்குறேன். நீங்க இப்போதானே வந்தீங்க. கழுத்து வேற வலிக்கப் போகுது!” என அவன் கையிலிருந்து கத்தியை பிடுங்க முயன்றாள். ஆனால் அவன் விடாது வேலையைத் தொடரவும், இவளும் விட்டுவிட்டாள்.

பன்னீர் குருமாவை வாசம் பிடித்து வந்த மகனை இருவரும் சிரிப்புடன் பார்த்தனர். ஏனோ அஷ்வினுக்கு பன்னீர் மீது தனிப்பிரியம். சூடாய் ஷோபனா சப்பாத்தியை சுட, ரஞ்சன் மகனுக்கு உணவை ஊட்டினான். உண்டு முடித்து தந்தையிடம் கெஞ்சி கொஞ்சி அரைமணி நேரம் மட்டும்தான் எனக் கேட்டு அவனது அலைபேசியை எடுத்துக்கொண்டு சின்னவன் அறைக்குள் நுழைந்தான்.

“போனைக் கொடுத்துப் பழகாதீங்கன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” ஷோபனா முறைக்கவும்,

“நான் என்னடி பண்ண‌. கெஞ்சி வாங்கிட்டுப் போய்ட்டான்…” என்றவனை மேலும் முறைத்துவிட்டு இருவருக்கும் சப்பாத்தியை சுட்டு முடித்தாள்.

“குருமால உப்பு உறைப்புன்னு எல்லாமே கரெக்டா இருக்கு. டேஸ்டா இருக்கு…” என்றவனை முறைக்க முயன்று தோற்றவளின் முகம் மலர்ந்தது.

“பேசாம சாப்டுயா…” என்றாள் அதட்டலாய்.

“மரியாதை தேயுதே…” என அவன் கேட்க, சிரிப்புடன் இருவரும் உண்டு எழுந்தனர். ரஞ்சன் அறைக்குள் நுழைய, கைபேசியில் விளையாடியவாறே அஷ்வின் உறங்கியிருந்தான். அதை எடுத்து தூரம் வைத்தவன், போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திவிட்டான்.

ஷோபனா மீதமானவற்றை குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தினாள். ரஞ்சன் நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்து செய்தி பார்த்துக் கொண்டிருந்தான்.

அறைக்குச் சென்று எண்ணெய் எடுத்து வந்தவள் ரஞ்சனின் கழுத்தில் மென்மையாய் தேய்த்தாள். குனிந்தே வேலை பார்ப்பதால் சில சமயம் அவனுக்கு கழுத்துவலி வருவதுண்டு. இன்றும் வலி இருப்பதாய் அவன் செய்கையை உணர்ந்து மனைவி தேய்த்துவிடவும், அவனுக்கு முறுவல் பிறந்தது.

“சுகமா இருக்கு டி…” எனக் கழுத்தை அவளுக்கு வாகாக வளைத்தான்.

“உன் கைல மேஜிக் எதுவும் வச்சிருக்கியா ஷோபி? பெய்ன் பறந்து போய்டுச்சு…” என்றவனிடம் சிரித்து வைத்தாள் பெண்.

“போதும்… வா, வந்து உட்காரு…” என அவளை அருகே அமர்த்த, அவன் மடிமீது படுத்துக் கொண்டவள், தொலைவியைக்கியை எட்டி எடுத்து பாடலை ஒலிக்கவிட்டாள். அலைபாயுதே படத்தில் காதல் சடுகுடு பாடல் ஓடிக் கொண்டிருக்க, இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து சிரித்தனர்.

ரஞ்சனின் சிரிப்பு சில நிமிடங்கள் நீள, “போதும்… போதும். சிரிக்காதீங்க…” என சிணுங்கியவளின் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டான் கணவன்.

அவளுக்கும் அவனுக்குமான படம் அலைபாயுதே. திருமணமான புதிதில் ஷோபனா இந்த படத்தின் நாயகன் கார்த்திக் போல ரஞ்சன் தன்னை சுற்றி வந்து காதலிக்க வேண்டும் என கனவு கண்டதாகவும், நிஜத்தில் அதற்கு எதிர்மாறாய் நடந்ததாகவும் கூற, ரஞ்சனுக்கு அப்படியொரு சிரிப்பு. அன்றிலிருந்து இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் அவனது முகத்தில் புன்னகையைத் தோற்றுவிப்பன.

“ஷோபி, ஜாப் எதுவும் ட்ரை பண்றீயா?” அவள் முடியைக் கோதியவாறே ரஞ்சன் வினவ, “ஹம்ம்… வேணாம்ங்க. இன்ட்ரெஸ்ட் இல்ல…” என்றாள்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் வேலைக்குத்தான் சென்று கொண்டிருந்தாள். அஷ்வின் இரண்டாம் மாதம் வயிற்றில் உதித்துவிட, கர்ப்பக் காலத்திற்கே உரிய வாந்தி, மயக்கம் அவளை பாடாய்படுத்தியது. அதனாலே வேலையை விட்டுவிட்டாள். அதன் பிறகு அஷ்வின் பிறந்து, அவனை கவனிக்க என நாட்கள் உருண்டோட, ஷோபனாவிற்கு வேலைக்குச் செல்லும் எண்ணம் அற்றுப் போயிருந்தது.

“சரி, அப்போ வேற எதாவது கிளாஸ் ஜாய்ன் பண்றீயா?” எனக் கேட்டான்‌. மகன் பள்ளிக்குச் சென்றுவிட, தானும் அலுவலகம் செல்வதால், மனைவி வீட்டில் தனிமையை உணர்கிறாள் என அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“ஹம்ம்… நானும் யோசிச்சு இருக்கேன் ரஞ்சன். என்ன பண்றதுன்னு இன்னும் டிசைட் பண்ணலை…”

“யெஸ், என்னென்னு முடிவு பண்ணு. பார்த்துக்கலாம்…” என்றான். ஷோபனாவிற்கு உறக்கம் விழிகளைத் தழுவ, எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டே அறைக்குள் நுழைய, “பார்த்துப் போடி…” என்றவன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு வந்து மனைவியையும் இறுக அணைத்துப் படுத்துக் கொண்டான். ஷோபனாவும் அவன்புறம் திரும்பி படுத்தாள். சுகமான நித்திரையை தழுவினர்.


சந்தனா கண்களில் சரசரவென கண்ணீர் வடிய உண்டு கொண்டிருந்த உணவு டப்பாவை தீனாவின் கையில் கொடுத்தாள். மனோவை முறைத்துப் பார்க்கத்தான் நினைத்தாள். ஆனாலும் அழுகை வந்து தொலைத்தது.

“குட்டி, நீ அழாத. மனோ சும்மாதான் சொல்றான். அவன் அத்தைகிட்டே சொல்லிக் கொடுக்க மாட்டான்!” தீனா அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

சந்தனா அப்படியா என்பது போல மனோவைப் பார்க்க, “பொய் எல்லாம் இல்ல‌. உண்மையைத்தான் சொல்றேன்…” என அவன் திரும்ப, இவள் எட்டி அவனது கையைப் பிடித்தாள்.

“மேடம்கிட்ட சொல்லிடாத. தெரிஞ்சா திட்டுவாங்க. ப்ராமிஸா இனிமே உங்க வீட்ல எதுவும் சாப்பிட மாட்டேன்!” என்றவளின் விழிகள் தளும்பி நின்றன.

“அம்மாகிட்ட சொல்லக் கூடாதுன்னா, நீங்க ரெண்டு பேரும் என் கூட விளையாட வரணும். என் ரூம்ல விளையாடலாம்!” என்றான்.

சந்தனா அவன் கையைவிட்டவள், “வீட்டுக்குள்ள வந்தா மேடம் திட்டுவாங்க. அம்மா வைவாங்க. நம்ப இங்கயே விளையாடலாம்…” என்றாள் அவனை சமாதானம் செய்யும் நோக்கில்.

“என்னால இங்க விளையாட முடியாது…” என மனோ கூற,

“குட்டி… மனோ வீடியோ கேம் வச்சிருக்கான். நம்ப மூனு பேரும் விளையாடலாமா? ஜாலியா இருக்கும்…” என தீனா இடை புகுந்தான்.

“இல்ல தீனா… வீட்டுக்குள்ள வேணாம், ப்ளீஸ், இங்கேயே விளையாடலாம். மேடம்க்கு தெரிஞ்சா அம்மாவை வேலையை விட்டு அனுப்பிடுவாங்க. அம்மா அழுவாங்க…” என்றாள் தேம்பலாய்.

“நான் அம்மாகிட்ட சொல்றேன்…” என மனோ நடக்க, இருவருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை.

தீனாவுக்கு வேறு தன்னால் குட்டி திட்டுவாங்கப் போகிறாளோ என எண்ணம் முகிழ்க்க, “குட்டி… நீ போய் கையைக் கழுவு. நான் டிபன் பாக்ஸை ஒளிச்சு வைக்கிறேன். அத்தை வந்தா நம்ப பொய் சொல்லிடலாம்…” என்றான். சந்தனாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கையை மட்டும் கழுவி வந்தாள்.

தீனா மணலில் சிறு குழி தோண்டி அதில் டப்பாவை போட்டு மூடிவிட்டான். இனி அத்தையால் இதைக் கண்டு பிடிக்க முடியாது என எண்ணியவன், சந்தனா அருகில் சென்று நின்று கொண்டான்.

சதாம்பிகா மனோவுடன் வந்தார். சந்தனா அவரைப் பயத்துடன் பார்க்க, “தீனா, மனோ கூட விளையாட வேண்டியது தானே? ரூம்ல போய் வீடியோ கேம்ஸ் விளையாடுங்க. மாமா நிறைய வாங்கிக் கொடுத்துருக்காரு…” என்றார்.

error: Content is protected !!
Scroll to Top