இதயம் 22
பார்த்து போயிட்டு வாங்கப்பா என்று ரிஷி கூற, சரிப்பா, நீ எதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத. அவங்க கண்டிப்பா சம்மதம் சொல்லுவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு என்று அண்ணாமலை மகனுக்கு அறிவுரை கூறினார்.
சரிங்கப்பா என்று தலையசைத்து கேட்டுக் கொண்டவன், நீங்க ரீச் ஆகிட்டு எனக்கு ஒரு மெசேஜ் போடுங்க என்றான்.
ஹான், நான் கால் பண்றேன் அண்ணா என்ற ஷாலினி, கைய கவனமா பார்த்துக்கோங்க. தண்ணி படாம இருக்கட்டும், ஒரு டென் டேஸ்க்கு என்று தமையனுக்கு அறிவுரை கூற, நான் பாத்துக்குறேன் என்று மொழிந்தான் ரிஷி.
ஆமாப்பா, கொஞ்சம் கவனமா இரு. செப்டிக் ஆகிட போகுது, தண்ணிப்பட்டா என்று அண்ணாமலை தன் பங்கிற்கு கூற, நான் கேர்ஃபுல்லா பாத்துக்குறேன் பா என்றவன், அம்மா தான் என் மேல கொஞ்சம் கோவமா இருப்பாங்க. நீங்க கொஞ்சம் பேசுங்க என்றான்.
அவ கோவம் எல்லாம் எவ்வளவு நாளைக்கு இருக்கும்? நாளைக்கே உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்தா, அவ தான் முத ஆளா தூக்கிட்டு சுத்துவான். நீ அவ கோபத்தைப் பத்திலாம் கவலைப்பட்டுட்டு இருக்காத, சரியா? என்று அண்ணாமலை இயம்ப, இருந்தாலும் என் கல்யாணத்துல அம்மா சந்தோஷமா வந்து நிக்கணும் பா என்று ரிஷி யோசனையுடன் கூறினான்.
அதெல்லாம் கண்டிப்பா வருவா. மூன்று பிள்ளைகள்ளயும் உன்ன தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். உன் கல்யாணத்துல அவ இல்லாமலா? அவளுக்கு விருப்பம் இல்லதான். முழு மனசோட சம்மதிக்கல தான். இருந்தாலும் கல்யாணத்துக்கு வராம இருக்கமாட்டா. கண்டிப்பா வருவா ரிஷி. என்ன, உங்க அம்மா கொஞ்சம் ஸ்டேட்டஸ் பார்ப்பா. அத மட்டும் மாத்திக்கிட்டா நல்லா இருக்கும். அது ஒன்னு தான் அவகிட்ட இருக்க நெகட்டிவ் என்ற அண்ணாமலை மனைவியைப் பற்றி கூற, ரிஷியும் அதை ஆமோதித்தான்.
அண்ணா, நீங்க கவலைப்படாதீங்க. அம்மா கிட்ட நான் பேசுறேன். கண்டிப்பா கல்யாணத்துக்கு எல்லா வேலையும் அவங்க தான் பார்த்துப்பாங்க. ஹரி அண்ணாவையும் பேச சொல்லுவோம். எல்லாமே நல்லபடியா நடக்கும் என்று ஷாலினி கூற, சரிங்க, பெரிய மனுஷி என்று ரிஷி புன்னகையுடன் மொழிந்தான்.
பின் நேரமாகிவிட்டதை உணர்ந்த ரிஷி, சரிங்கப்பா, டைம் ஆயிடுச்சு. இதுக்கு மேல லேட்டா போன இருட்டிடும். பார்த்துப் போங்க என்று முடித்துக் கொள்ள, இருவரும் விடைபெற்று கிளம்பினர்.
அவர்கள் அகன்றதும் வீட்டிற்குள் வந்து நீள்விருக்கையில் அமர்ந்தவன், விழி மூடி சாய்ந்து கொண்டான்.
மூடிய இமைகளுக்கும் வந்து நின்றாள் கருணை மலர். அவளது நினைவு வந்ததும் இதழ்களில் அழையா விருந்தாளியாய் ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.
மனம் மெல்ல பின்னோக்கி நகர, மெல்ல நினைவுகளை மீட்டி பார்த்தது.
அன்றொரு நாள் ரிஷிக்கு காய்ச்சல் வந்ததே. அப்போதுதான் அவனுக்கு மலர் மீது ஏதோ ஒன்று பூத்து நேசமாய் மாறியது.
அந்த கணம் இப்போதும் உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, மனது அங்கேயே தேங்கி விட்டது.
காய்ச்சல் வந்த மறுநாள் காலை உறங்கி எழுந்து வெளியே வந்த ரிஷி கண்டது, கூடத்தில் ஒரு ஓரமாய் போர்வையை விரித்து படுத்திருந்த மலரையும் முரளியையும் தான்.
அடுத்த கணம், “இவங்க ரெண்டு பேர் ஏன் இங்க தூங்குறாங்க?” என்று நினைத்தபடி ரிஷி அவர்களை காண, உறக்கமின்றி விழிகளை மூடி படுத்திருந்த மலர், ரிஷியின் அரவத்தில் எழுந்துகொண்டாள்.
“எழுந்துட்டீங்களா, ரிஷி சார்?” என்றபடி தனது கூந்தலை கொண்டையிட்டவள், “உங்களுக்கு நைட் காய்ச்சல் ரொம்ப அதிகமா இருந்துச்சு. அதான் தனியா விட்டுப் போக வேணாம்னு தம்பியை வர சொல்லி இங்கே தங்கிட்டேன் சார்,” என்று விளக்கம் அளிக்க, ரிஷி அமைதியாய் கேட்டுக்கொண்டான்.
“உங்களுக்கு காபி போட்டு தரவா சார்?” என்று மலர் வினவ, எதிரில் இருந்தவன் சம்மதமாய் தலையசைத்தான்.
“அஞ்சு நிமிஷத்துல காபியோட வர்றேன் சார்,” என்று நகர்ந்தவள், “கேக்க மறந்துட்டேன்… காய்ச்சல் சரி ஆயிடுச்சா?” என்றபடி அவனருகே வந்து கன்னத்தில் கை வைத்து பார்த்திருந்தாள்.
அவளது குளிர்ந்த கரம் கன்னத்தில் பட்டதும், அதன் குளிர்ச்சியில் உள்ளுக்குள் புதிதாய் ஒரு பூகம்பம் பிறந்திட, விழிகள் அவளது முகத்தில் நிலைத்தது.
சரியாக உறங்காததில் சிவந்திருந்த விழிகள், அதனை அடுத்து ஒற்றைக்கல் மூக்குத்தியுடன் மின்னிய குட்டி நாசி, அதற்கு கீழே மொத்தமாய் உலர்ந்து போயிருந்த சிவந்த இதழ்கள், படுத்து இருந்ததில் ஆங்காங்கே கலைந்து முகத்தில் உறவாடிய கூந்தலிழைகள் என அத்தனையும் அவ்வளவு நெருக்கத்தில் கண்டவனது உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவியது.
மீன் வாசனையும் தாண்டி அவளது வாசனை நாசிக்குள் நிறைந்து உயிரைத் தீண்டிட, உள்ளுக்குள் நழுகிய ஒன்று அவளது காலடியில் சரணடைந்தது.
அதனை உணர்ந்தும் உணராதவன் நொடியில் அவளிடம் இருந்து விலகிட, அதனைக் கண்டு சட்டென்று முகம் வெளுத்து, வார்த்தைகளின்றி திணறியவளது குரல் அவனுக்குள் மெது மெதுவாய் இறங்கியது.
ரிஷியிடம் ஏதோ ஒன்றை கூறிவிட்டு மலர் அங்கிருந்து சமையலறைக்கு விரைந்திட, ரிஷி தான் அவளது உறங்காத விழிகள், உலர்ந்த இதழ்கள் தந்த ஏதோ ஒரு உணர்வில் அப்படியே நின்றுவிட்டான்.
தனக்குள் நிகழும் மாற்றத்தை ஏற்க விழையாதவன் மீண்டும் அவளைத் தேடிச் செல்ல, அங்கு கண்டது தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தவளை தான்.
“என்ன காரியம் பண்ணிட்ட மலர்? உனக்கு அறிவே இல்லையாடி! ரிஷி சார் உன்னோட முதலாளி. அவர் கன்னத்தில போய் கையை வச்சு பார்த்திருக்க. உன் கைப்பட்டுச்சுனு அந்த டிரஸ்ஸே வேணாம்னு போடாம தூக்கிப் போட்டவர், கன்னத்துல போய் கை வச்சிருக்கியே! உன்னைப் பற்றி என்ன நினைப்பாரு அவரு?” என்று புலம்பியபடி திரும்பியவள், தன்னைக் கண்டு மலங்க மலங்க விழித்திட, இவனது விழிகள் அந்த ஒற்றைக்கல் மூக்குத்தியில் பதிந்து மீண்டது.
தனது பார்வையின் போக்கை உணர்ந்து நொடியில் சமாளித்தவன், தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வந்தவன், நீள்விருக்கையில் விழி மூடி அமர்ந்து விட்டான்.
மூடிய விழிகளில், இமைகளுக்கிடையில் அந்த உறங்காத விழிகளும் உலர்ந்த இதழ்களும் வந்து போக, படக்கென இமைத்திறந்தான்.
இதயத்தின் ஓசை அதிகரிப்பது போல எண்ணம் பிறக்க, அனிச்சையாக இடது கரம் அங்கே பதிந்தது. இமை மூட, முதல் முறையாக ஒரு அச்சம் ஜனித்தது.
இருபத்தியெட்டு வருட வாழ்வில் உணர்ந்திடாத புது உணர்வு என்று உள்ளுக்குள் புகுந்து ரிஷியை திண்டாடச் செய்தது.
இத்தனை வருட வாழ்க்கையில் எத்தனை பெண்களை கடந்து வந்திருப்பான். அதில் எவ்வளவு பெண்கள் அழகிகள், பேரழகிகள், மற்றவர்கள் பார்வையில். அப்படி இருந்த பெண்களிடம் கூட ஒன்றும் தோன்றவில்லை. ஏன், பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்த போதும் எத்தனை பெண்கள் காதலை நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்தனர். அவர்களையெல்லாம் ஒரு புன்னகையுடன் கடந்துவிட்டவனுக்கு இந்த புரியாத உணர்வு புதுவித அவஸ்தையா இருந்தது.
ஒருபுறம் பிடிக்கவும் செய்தது. மறுபுறம் இம்சையாகவும் இருந்தது. இது என்னடா புது வித தலைவலி என்று எண்ணித் தலையைப் பிடிக்க, மீண்டும் அவள் வரும் அரவம் கேட்டது.
அவளுக்கு முன்னே அவளது சுகந்தம் நாசியினை நிரட, அந்த விழிகளை சந்திக்கும் திரணியற்று மீண்டும் விழி மூடிக்கொண்டான்.
“சார், காபி,” என்றவளது மெல்லிய குரல் செவிக்குள் நுழைந்து இதயத்தை தாக்கிட, விழி திறக்காமலே, “வச்சிட்டு போ மலர்,” என்றான்.
அவள் தன் முன்பிருந்த மேசையில் காபி கோப்பையை வைத்துவிட்டு அகன்றதை உணர்ந்து விழிகளை திறந்தவன், “ஊஃப்,” என்று ஒரு பெருமூச்சு வெளியிட்டான்.
பின்பு அந்த கோப்பையை எடுத்து காபியை ஒவ்வொரு மிடறாக அருந்தியவன், அவளது நினைவுகளையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தான்.
பாத்திரங்களை கழுவி வைத்தவள் வெளியே வந்து, “சார், நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு வந்து சமைக்கவா?” என்று வினவ, இப்போதும் தலையை நிமித்தாமலே சம்மதமாய் தலையசைத்தான்.
பிறகு முரளியை கெஞ்சி கொஞ்சி எழுப்பும் முயற்சியில் ஈடுபட, செய்தித்தாளில் விழிகளை பதித்திருந்தவன், அவளது குரலை உள்வாங்கியபடி இருந்தான்.
ஒருவழியாக தம்பியை எழுப்பி, அவளது கையில் இருந்த போர்வையை வாங்கி தனது பையில் வைத்தவள், “வா, போகலாம்,” என்று முரளியிடம் கூற, அவன் ரிஷியிடம் பேசுவதா, இல்லையா என்று தெரியாமல் விழித்தபடி அவனைக் கண்டான்.
அதில் ரிஷி ஒற்றைப் புருவத்தை ஏற்றி, “என்ன?” என்பதாய் அவனைக் காண, “ம்ஹூம்,” என்று தலையசைத்தவன், வேகமாய் வெளியே ஓடிப்போனான்.
இளையவனின் செய்கையில் ரிஷிக்கு லேசான புன்னகை மலர்ந்தது.
தம்பியைப் பின்பற்றி தானும் வெளியே சென்றவள், மீண்டும் உள்ளே வந்து ரிஷியிடம், “காய்ச்சல் வந்த வாய்க்கு நாட்டுக்கோழி வாங்கி குழம்பு வச்சா நல்லா இருக்கும். வாங்கிட்டு வந்து வைக்கவா, சார்?” என்று வினவ, தன்னை சலனப்படுத்தும் அவளது வதனத்தை காண விரும்பாதவன், எழுந்து சென்று பணத்தை எடுத்து வந்து மேஜை மீது வைத்தான்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மலர் அங்கிருந்து நகர்ந்த பிறகும், அவனது பார்வை அவள் சென்ற திசையிலே நிலைத்தது.
ஒரு பெண் தன்னை சலனப்படுத்துகிறாள். அதுவும், தன் மீது எந்த ஈடுபாடுமின்றி, தன்னை கவர வேண்டும் என்ற இந்த நோக்கமும் இன்றி, இயல்பாய் நடந்து தன்னை சலனம் கொள்ள செய்கிறாள் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இத்தனை வருடம் எத்தனை பெண்களை கடந்து வந்து விட்டேன். அவர்களிடம் இல்லாதது இவளிடம் என்ன அப்படி இருக்கிறது என்னை சலனப்படுத்துவதற்கு என்று அவனது ஆண் மன ஈகோ எண்ணியது.