நீங்க என்ன சொன்னாலும், இது ஒத்து வரும்னு எனக்குத் தோணல சார். உங்க முதல் மகனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னீங்கலே? எப்படியும் அவங்களுக்கு ஒரு பெரிய இடத்துல தான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கீங்க. இப்ப என் பொண்ணை உங்க பையனுக்குக் கொடுத்தாலும், அவங்க அளவுக்கு என்னால சீர் செய்ய முடியாது. கண்டிப்பா அது பிரச்சனையாகும். என் பொண்ணு வாழ்க்கைய அது பாதிக்கும்” என்றவர், “நான் காதலுக்கு எதிரி எல்லாம் கிடையாது சார். நானும் என் வீட்டுக்காரரும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால் எல்லாத்துக்குமே ஒரு அளவு இருக்குல்ல. நானும் அவரும் பொருளாதாரத்தில் ஒரே நிலைமையில் இருந்தோம். ஆனா இங்க நிலைமை அப்படி இல்லையே சார். நாங்க தொழிலாளி, நீங்க முதலாளின்ற இடத்துல இருக்கீங்க. பணத்தை வைச்சு கண்டிப்பாக ஏதாவது ஒரு இடத்துல பிரச்சனை வரும் சார்” என்று மாதவி தனது எண்ணவோட்டத்தைத் தெரிவித்தார்.
அண்ணாமலை பதில் பேசும் முன், “அப்பா, நான் பேசுறேன்” என்றவன் எழுந்து மாதவியின் அருகில் வந்தான்.
மலர் தடதடக்கும் இதயத்துடன் அவனைக் காண, ரிஷி, “ஆன்ட்டி, நீங்க இந்த வரதட்சணை பணம் எதைப் பற்றியும் பயப்பட, கவலைப்படவும் தேவையில்லை. இதெல்லாம் விட பெரிய விஷயம் உங்க பொண்ண எனக்கு கொடுக்கப் போறீங்க. அவளைத் தவிர எனக்கு எதுவும் பெருசு கிடையாது. கண்டிப்பா நான் மலரை நல்லா பாத்துக்குவேன். எந்த இடத்திலும் அவளுக்கு மரியாதை குறைவு ஏற்படாது. அவளை மட்டும் இல்ல, உங்களையும், முரளி, வித்யா, சாகித்யா எல்லாரையும் நான் நல்லா பாத்துக்குவேன். முரளியை, வித்யாவையும் படிக்க வைக்கிறது என்னோட பொறுப்பு. அவங்க என்ன படிக்க ஆசைப்பட்டாலும் நான் படிக்க வைக்கிறேன். அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய நான் அமைச்சுக் கொடுக்கிறேன். மலரோட தம்பி, தங்கச்சிங்க எனக்கும் கூடப்பிறந்தவங்கதான். ஷாலினி மாதிரி தான் அவங்களையும் பார்த்துக்குவேன். என்னை நம்பி உங்க பொண்ண குடுங்க ஆன்ட்டி. நீங்க பார்த்து சந்தோஷப்படுற அளவுக்கு ஒரு வாழ்க்கையை நாங்க வாழ்வோம்” என்று மாதவி முகத்தைப் பார்த்து தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறினான்.
அவனது பேச்சில் மாதவி ஒரு கணம் திகைத்து தான் நின்றுவிட்டார். அந்தக் குரலில் இருந்த உறுதி, மலர் மீது அவன் கொண்ட நேசத்தை மாதவிக்கு உணர்த்தியது. அவரும் ஒரு காதலை உணர்ந்து திருமணம் செய்து வாழ்ந்தவர் தானே.
இருந்தும், இருவரது குடும்பப் பொருளாதார நிலையில் மாதவிக்கு பூதாகரமாகத் தெரிய, அது அவரது முகத்திலும் பிரதிபலித்தது.
அதனை உணர்ந்த ரிஷி, “ யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க ஆன்ட்டி. உங்க வீட்டுக்கு மூத்த மருமகனா மட்டுமில்ல, ஒரு மகனாகவும் இருந்து எல்லா கடமையையும் நானே பார்த்துக்குவேன். எனக்கு மலர் ரொம்ப பிடிக்கும். மலருக்கும் என்னைப் பிடிக்கும். அது எனக்குத் தெரியும். ஆனா, அவ அதை எப்பவுமே வெளிக்காட்னதில்லை. காரணம், நம்ம ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல இருக்க பொருளாதார நிலைதான் எனக்குத் தெரியும். எனக்காக மட்டும் இல்லாமல், மலருக்காகவும் யோசிச்சு நல்ல முடிவு சொல்லுங்க ஆன்ட்டி” என்று முடித்துவிட, மாதவி சரி என்பதைப் போல தலையசைத்தார்.
மாதவியிடம் பேசி முடித்த பிறகு, ரிஷியின் பார்வை மலரிடம் செல்ல, மலரும் தடதடக்கும் இதயத்துடன் அவனைத்தான் கண்டாள். அவளுக்கு விழிகளால் ஆறுதல் கூறினான் ரிஷி.
பிறகு அண்ணாமலை எழுந்தவர், “சரிம்மா, தங்கச்சி. நாங்க போயிட்டு வரோம். யோசிச்சு ஒரு நல்ல முடிவை சொல்லுங்க” என்று கூற, “சரிங்க சார்” என்று தலையசைத்து வழியனுப்பினார்.
அண்ணாமலையும் ரிஷியும் வெளியேற, ஷாலினி வந்து மாதவியிடம், “ஆன்ட்டி, யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க ஆன்ட்டி. எங்க அண்ணா கண்டிப்பா மலரை நல்லா பாத்துப்பாங்க. எனக்கு மலரை ரொம்ப பிடிக்கும். மலர் எனக்கு அண்ணியா வந்தா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று அவரது கையைப் பிடித்து பாசமாகப் பேச, மாதவியும், “சரிம்மா” என்று மெலிதாகப் புன்னகைத்தார்.
மலர் தாயிடம், “அவங்களை அனுப்பி வச்சிட்டு வர்றேன் ம்மா” என்று விட்டுவிட்டு வெளியே வர,
“மலர், அண்ணாக்கு ஹோட்டல் சாப்பாடு டெய்லி சாப்பிட்டா ஒத்துக்காது. குக்கிங் மட்டும் நீ பார்த்துக்கிறியா? கிளீனிங்கு வேற ஆள் பாத்துக்கலாம். கல்யாணம் முடியற வரைக்கும் வேற குக் பார்க்கலாம்னு சொன்னேன். ஆனா அண்ணா தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அவருக்கு நீ சமைச்சாதான் புடிச்சிருக்கு போல” என்று லேசான சிரிப்புடன் வேண்டுதல் வைக்க,
இன்னும் தன் தாய் திருமணத்திற்குச் சம்மதமே கூறவில்லை. அதற்குள் திருமணம் நடக்கும் வரையில் வேறு சமையல்காரரைப் பார்க்கலாமா என்று வரை யோசிக்கிறார்களா இவர்கள் என்று வியப்புதான் மலருக்குத் தோன்றியது.
மலரின் முகத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்த ஷாலினி, “என்ன மலர்? இன்னும் அம்மா கல்யாணத்துக்கு ஓகேவே சொல்லல. அதுக்குள்ளேயும் இவங்க கல்யாணம் வரைக்கும் யோசிக்கிறாங்கன்னு நினைக்கிறியா?” என்று சிரிப்புடன் கேட்க, மலர் தலை சம்மதமாய் அசைந்தது.
“அதெல்லாம் என் அண்ணன் பாத்துக்குவாரு. கண்டிப்பா உங்க அம்மா ஒத்துப்பாங்க மலர்” என்றிட,
“உங்க அம்மா எப்படி ஓகே சொன்னாங்க, ஷாலினி மேடம்?” என்று மலர் வினவினாள்.
“அதெல்லாம் அண்ணாவோட சாமர்த்தியம். அம்மாக்கு அண்ணனா ரொம்ப பிடிக்கும். எங்க ரெண்டு பேரைவிடவும் கொஞ்சம் பொசசிவ்னஸ் அவ்வளவுதான். ஆனா உன்னோட விஷயத்துல அவங்க அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கலை மலர்” என்று ஷாலினி கூற,
“அப்புறம் எப்படி?” என்று மலர் கேள்வியை நோக்கினாள்.
“அண்ணா கைல இருந்த கட்டு பாத்தியா மலர்?” என்று ஷாலினி கேட்க,
“என்ன?” என்று திகைத்தவள் திரும்பி தூரத்தில் நின்றுகொண்டிருந்த ரிஷியைக் காண, அவனது கையில் ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. இவ்வளவு நேரம் இருந்த பதட்டத்தில் மலர் அதனைக் கவனிக்கவில்லை.
“என்னாச்சு? ஏன் அவர் கைல கட்டு போட்டு இருக்காரு?” என்று பதட்டத்துடன் கேட்க,
“எல்லாம் உங்கக் கல்யாண விஷயம் தான் மலர்” என்று ஷாலினி பதில் அளித்தாள்.
“என்ன?” என்று மலர் அதிர்ந்து நோக்க,
“நீ அண்ணா கிட்டயே மத்ததை கேட்டுக்கோ மலர்” என்றுவிட்டு ஷாலினி மகிழுந்தை நோக்கி நடந்தாள்.
மலர் அவளுக்கு முன்னால் விரைந்து ரிஷியின் அருகே செல்ல, அவள் தன்னிடம் தான் பேச வருகிறாள் என்பதை உணர்ந்தவன் மகிழுந்திலிருந்து சற்று தள்ளி நடந்து வந்தான்.
“கைக்கு என்னாச்சு? என்ன பிரச்சனை?” என்றவள் பதட்டத்துடன் அவனது கையைப் பிடித்துப் பார்த்துக் கேட்க,
“அது ஒன்னும் இல்ல. சின்ன அடிதான்” என்று பதில் அளித்தான்.
“நான் வீட்டுக்குள்ள பதட்டத்தில கையை கவனிக்கல. இப்ப ஷாலினி மேடம் சொல்லவும் தான் பார்த்தேன்” என்றவள், “இவ்வளவு பெரிய கட்டு போட்டுட்டு சின்ன அடிதான்னு சொல்றீங்க? என்னாச்சு சொல்லுங்க” என்று வருத்தத்துடன் வினவினாள்.
“சில் மலர். இது சின்ன அடிதான். டென் டேஸ்ல சரியாயிடும். நம்பலைனா ஷாலினிகிட்ட கேளு” என்று ரிஷி ஆறுதல் கூற,
“என்னால தானே இதெல்லாம்?” என்றவளது விழிகள் கலங்கியது.
“மலர், உன்னால எதுவும் இல்ல. எனக்கு கோவம் வந்துருச்சு. அதுதான் கிளாஸை ஒடைச்சிட்டேன்” என்று ரிஷி கூற,
“எனக்காகவா?” என்று அவனது முகம் பார்த்தவளது விழிகள் நீரைத் தேக்கி இருந்தது.
“நமக்காக மலர்” என்றவன், “உன் அம்மா கண்டிப்பா சம்மதம் சொல்லுவாங்க. நீ எதையும் நினைச்சு குழம்பிட்டு இருக்காத” என்று அறிவுரை கூறினான்.
“இப்படி அடியெல்லாம் பட்டு, நீங்க என்னைக் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று துவங்கிய இடத்திற்கு மீண்டும் மலர் வந்து நிற்க,
“திரும்பவும் ஆரம்பிக்காதடி” என்று லேசாய் சலித்தவன், பின் ஒரு குறும்புச்சிரிப்புடன், “சுடிதார் விட உனக்கு நைட்டி தான் நல்லா இருக்கு. நமக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நீ வீட்டுக்குள்ள நைட்டியோட இரு” என்றான்.
இவ்வளவு நேரம் வருத்தத்தில் இருந்த மலரது முகம் திகைப்பிற்கு மாற, என்ன என்று அவனது முகம் கண்டாள்.
“நிஜமா தூங்கி எழுந்து, முகத்தோட, கலைஞ்ச தலை முடியோட, முகத்தை மட்டும் கழுவிட்டு, அப்படியே அங்கங்க சொட்டு சொட்டா நீர்த்துளியோட, அப்படியே அள்ளுற மலர்” என்று ரசனையுடன் கூற, மலருக்கு சடுதியில் முகம் சிவந்துவிட்டது.
அவனை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டவள், “நடுரோட்டில வைச்சு என்ன பேசுறீங்க? பார்த்து போங்க” என்று லேசான மிரட்டல் குரலில் கூறியவள், நிமிர்ந்து பாராமலே அவனிடமிருந்து விலகிச் செல்ல, சடுதியில் அவளது மனநிலையை மாற்றியவனுக்கும் புன்னகை அரும்பியது.
இங்கு ஷாலினி வேறு மலரிடம் வந்து, “போயிட்டு வரேன் அண்ணி” என்று சிரிப்புடன் கூற, மலருக்கும் புன்னகை மலர்ந்தது.
“பார்த்து போயிட்டு வாங்க” என்று வழியனுப்பியவள், இதழில் உறைந்த புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.