இதயம் 21.1

இதயம் 21

“அம்மா, எனக்கு ஒரு டீ போட்டுக்குடுமா?” என்றபடி கூந்தலை கொண்டையிட்டவாறு வந்த மலர், வாசலில் வந்திருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டாள்.

இமைகள் மூடித் திறந்து பார்க்க, எதிரில் இருந்தவர்கள் அப்படியேதான் நின்றிருக்க, இது கனவல்ல, நிஜமென்று மலருக்கு உரைத்தது.

“ஏண்டி, காலையில பதினொரு மணிக்கு எழுந்துட்டு டீ கேக்குற? சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிடு!” என்றபடி சமையலறையில் இருந்து வெளியே வந்த மாதவியும், வாசலில் நின்றிருந்தவர்களைக் கண்டு பேச்சை நிறுத்திவிட்டார்.

பார்வை ஒரு கணம் மகள் மீது படிந்து மீள, இவ்வளவு நேரம் அவர்களை உள்ளே அழைக்காத தனது மடத்தனத்தை எண்ணி நொந்தவள், “வாங்க சார், வாங்க சார்… வாங்க, ஷாலினி மேடம்!” என்று உள்ளே வரவேற்றவள், அறைக்குள் இருந்து இரண்டு நாற்காலிகளை எடுத்து வந்து போட்டாள்.

மாதவிக்கு யார் அவர்கள் எனத் தெரியாவிடினும், மகளுக்குத் தெரிந்தவர்களாக இருக்கக்கூடும் என்று எண்ணி, “வாங்க சார், வாங்க!” என்று வரவேற்க, மலர், “ம்மா, இவங்க ரிஷி சார். நான் வேலை பார்க்கிறேன்ல, அந்த கம்பெனி ஓனர். அப்புறம், இவங்க சாரோட அப்பா… இவங்க சாரோட தங்கச்சி” என்று தாயிடம் அறிமுகம் செய்து வைத்தவள், அவர்களிடம் திரும்பி, “இது என்னோட அம்மா” என்று தாயை அறிமுகம் செய்தாள்.

ரிஷியின் தந்தை அண்ணாமலை, “வணக்கம் மா!” என்று மாதவியிடம் மொழிய, “வணக்கம் சார்!” என்று மாதவியும் பதில் மொழிந்தார். மகளின் முதலாளி, அவரது குடும்பத்தோடு எதற்காக வந்திருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை.

இருந்தும், விருந்தோம்பல் செய்யும் நோக்கத்தில், “என்ன குடிக்கிறீங்க சார்? டீ, காபி?” என்று வினவினார். மனதிற்குள் இவர்கள் தங்கள் வீட்டில் எதுவும் சாப்பிடுவார்களா என்று வேறு எண்ணம் தோன்றியது.

மலருக்கும் அதே எண்ணம்தான். முகத்தில் வினாவைத் தேக்கியபடி ரிஷியைக் காண, “காபி கொண்டு வாங்க ஆன்ட்டி!” என்று அவன் இலகுவாக முடித்துவிட்டான்.

ரிஷியும் அண்ணாமலையும் நாற்காலியில் அமர்ந்திருக்க, ஷாலினி நின்றிருந்தாள்.

மலர் வீட்டில் இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருந்தன. அதனையும் எடுத்து வந்து போட்டுவிட்டாள். அடுப்பில் பாலை வைத்து, தேயிலைத் தூளைப் போட்டு கொதிக்கவிட்ட மாதவி வெளியே வந்து, மலரிடம், “மலரு, அந்தப் பொண்ணு உட்கார்றதுக்கு பக்கத்து வீட்டுல போய் சேர் வாங்கிட்டு வாடி. எவ்வளவு நேரம் நின்னுகிட்டே இருப்பாங்க?” என்றார்.

மலருக்கும் அப்போதுதான் அது உரைக்க, “இந்தா, போய் வாங்கிட்டு வரேன்!” என்றவள் அங்கிருந்து நகரப் போக, “மலர், வேண்டாம் அதெல்லாம். நான் கீழே உட்கார்ந்துக்குவேன்” என ஷாலினி மறுத்தாள்.

“நீங்க போய் எப்படி கீழே உட்காருவீங்க? நான் போய் சேர் வாங்கிட்டு வந்துடறேன். இங்க இதெல்லாம் பழக்கம்தான். பக்கத்து வீட்ல விருந்தாளி வந்தால், அவங்க வந்து இங்க வாங்கிட்டுப் போவாங்க” என்று மலர் விளக்க,

“இட்ஸ் ஓகே, மலர். ஒரு பாய் இருந்தா எடுத்துட்டு வா. கீழ விரிச்சு நம்ம ரெண்டு பேரும் உட்கார்ந்துக்கலாம்” என்று ஷாலினி கூறிவிட்டாள்.

சரியென்று தலையசைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தவள், சுவற்றில் சாய்ந்து விழி மூடி திறந்து ஊஃப் என்று ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்.

இவ்வளவு நேரம் உள்ளுக்குள் இருந்த பதட்டத்தை வெளியே காண்பிக்காது மறைத்து இருந்தவளுக்கு, அறைக்குள் வந்ததும் மீண்டும் அச்சம் தொற்றிக்கொண்டது.

‘தான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியவன், இப்படி இரண்டு நாளில் தந்தை, தமக்கையுடன் வந்து நிற்பான் என்று மலர் கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.

அதுவும் தான் இருந்த கோலம் என்று நினைக்கவே அவளுக்குக் கூச்சமாகிவிட, கண்ணாடியில் தன்னை அளந்தாள்.

அன்று சுதந்திர தினம் என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் மீனை விற்றுவிட்டு வந்து உறங்கிவிட்டாள்.

இரவு அணிந்த நைட்டியில்தான் இன்னமும் இருந்தாள். தூங்கி எழுந்து முகம் மட்டும்தான் கழுவி இருந்தாள். தூக்கிப் போட்ட கொண்டை, அழுக்கு நைட்டி என்று தன்னுடைய தோற்றத்தைத் தானே காண முடியாதவள், ‘இவ்வளவு நேரம் இதே நைட்டியோடதான் அங்கே இருந்திருக்கேனே! அறிவே இல்ல, மலர். உள்ள வந்து மாத்தி இருக்க வேண்டியது தானே?’ என்று தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டவள், படபடவென ஒரு சுடிதாருக்கு மாறினாள்.

கொண்டையிட்டு இருந்த முடியை லேசாகப் பின்னி, ஒரு கிளிப்பைக் குத்தியவள், நெற்றியில் ஒரு பொட்டை வைத்துவிட்டு, பாயை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

உள்ளே சென்று ஐந்து நிமிடங்களுக்குள் இத்தனை வேலையையும் முடித்துவிட்டு வெளியே வந்திருந்தாள் மலர்.

“அதுக்குள்ள டிரஸ் சேஞ்ச் பண்ணி, தலை வாரிட்டு வந்துட்டியா மலர்?” என்று ஷாலினி ஆச்சரியமாகக் கேட்க,

“அது… இன்னைக்கு லீவுன்னு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். இல்லாட்டினா தூங்க மாட்டேன். நீங்க வர்றது தெரிஞ்சிருந்தா, நான் குளிச்சு ரெடியா இருந்திருப்பேன்” என்றவள் சங்கடமாய் புன்னகைத்தாள்.

“இதுல என்ன இருக்கு, மலர்? நம்ம வீட்லதான் நம்ம சுதந்திரமா இருக்க முடியும்” என்றவள், “நான் உன்கிட்ட சொல்லலாம்னு சொன்னேன். அண்ணன்தான் சர்ப்ரைஸா கூட்டிட்டு வந்தாரு” என்று புன்னகையுடன் கூற, மலரின் பார்வை ரிஷியின் மீது படிந்து மீண்டது.

“கவலைப்படாத மலர். எல்லாம் ஓகே ஆயிட்டா, ப்ராப்பரா ஒரு பொண்ணு பாக்குற சீனைக் காண்டக்ட் பண்ணலாம். நானே உனக்கு மேக்கப் போட்டுவிடுறேன்” என்று ஷாலினி கண்ணடித்துப் புன்னகையுடன் கூற,

“மேடம்!” என்று போலியாக முறைத்தாள் மலர்.

“இன்னும் என்ன, ‘மேடம் ஷாலினி’ன்னு கூப்பிட வேண்டியதுதானே? நீங்க வேற எனக்கு அண்ணியாகப் போறீங்க. உரிமையா கூப்பிடலாம்ல?” என்று ஷாலினி மொழிய, மலர் பதில் இல்லாது சிரித்து வைத்தாள்.

“என்ன மலர், ஆன்சர் பண்ணாம சிரிக்கிற? என்ன நடந்தாலும் உங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும். எங்க அண்ணா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காரு” என்று குரலில் பெருமையுடன் கூற, மலரின் பார்வை மீண்டும் ரிஷியிடம் பதிந்து மீண்டது.

மலர் பதில் மொழிவதற்குள் மாதவி தேநீரோடு வர, எழுந்து அதனை வாங்கியவள் மூவருக்கும் தானே கொடுத்தாள்.

அருகில் நின்றிருந்த மகளிடம் மாதவி, “என்ன மலரு, எதுக்கு உன்னோட முதலாளி திடீர்னு வந்திருக்காங்க?” என்று முணுமுணுப்பான குரலில் வினவிட, மலர் தவிப்பான பார்வையுடன் தாயைக் கண்டாள்.

அவளுக்கு மாதவியிடம் நிஜமாய் என்ன கூறுவது என்று தெரியவில்லை. முதலிலே ரிஷி ஏதாவது கூறி இருந்தால், தாயிடம் தானும் இரண்டொரு வார்த்தை பேசி வைத்திருக்கலாம். இப்போது இப்படி திடீரென வந்து நிற்பான் என்று மலர் எதிர்பார்க்கவில்லை.

அதுவும் தந்தையுடன் எப்படி அவரைச் சம்மதிக்க வைத்தான் என்று மலருக்கு அந்த நொடியும் வினா உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

தான் இப்போது கூறி, தாய் ஏதாவது தவறாக எடுத்துக்கொள்வாரோ என்று பயம் தொற்றிக்கொண்டது. மாதவியும் மலருக்குத் திருமணம் செய்யும் எண்ணத்தில் தான் இருந்தார். இந்த வருட இறுதியில். ஆனால் இப்போது ரிஷி வந்து கேட்கும்போது, அவர் என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று மலருக்குத் தெரியவில்லை.

அதுவும் தனக்கும் விருப்பம் என்று தெரிந்தால் கோபப்படுவாரோ என்று உள்ளுக்குள் கிலி பிடித்தது.

என்னதான் தாய், தந்தையர் காதல் திருமணம் செய்து இருந்தாலும், தனக்கும் ரிஷிக்கும் உள்ள வேறுபாட்டை நிச்சயமாக மாதவி யோசிப்பார் என்றே தோன்றியது.

அதற்கும் மேல் ரிஷியின் தாயை எண்ணி மலருக்கு அப்போது வரை பயம் இருந்தது. அவர் பேசிய பேச்சுக்கள் அப்படி.

தேநீரை இரண்டு மிடறு அருந்திய அண்ணாமலை பேச்சைத் துவங்கினார்.

“உங்களுக்கு ரிஷியை தெரிஞ்சிருக்கும். ரெண்டு வருஷமா இந்த ஊர்ல தான் இருக்கான் எங்க ஷோரூமைப் பார்த்துக்கிட்டு. எங்களோட சொந்த ஊரு சிவகாசி மா. நான் சொந்தமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்று அண்ணாமலை துவங்க, மாதவி கேட்டுக்கொண்டாலும் முகத்தில் புரியாத பாவனைதான்.

“எங்களுக்கு சொந்தமா நாலு பிசினஸ், கார் ஷோரூம். அப்புறம் ஊர்ல நிறைய நிலம் புலம் எல்லாம் இருக்கு. விவசாயமும் பார்த்துட்டு இருக்கோம். எனக்கு மூணு பசங்க. முதல் பையன் ஹரி, அவனுக்குக் கல்யாணம் ஆயிருச்சு. ரெண்டாவது தான் ரிஷி. மூணாவது என்னோட பொண்ணு ஷாலினி” என்று விளக்கம் கொடுத்தவர், “என் மகன் ரிஷிக்கு உங்க பொண்ணு மலரைப் புடிச்சிருக்கு” என்றதும், மாதவியின் பார்வை அதிர்வுடன் மகள் மீது படிந்தது.

தாயின் பார்வை தந்த குற்ற உணர்வில் மலர் தலையைக் குனிந்துகொள்ள, மாதவியின் பார்வையை உணர்ந்த அண்ணாமலை தொடர்ந்தார்.

“இதுல உங்க பொண்ணு மேல எந்தத் தப்பும் இல்லம்மா. என் மகனுக்குத்தான் உங்க பொண்ணைப் புடிச்சிருக்கு. மலர் ‘வேண்டாம், இதெல்லாம் ஒத்து வராது’ன்னு சொன்னதா சொன்னா. இருந்தும் நாங்க தான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தோம். என்னோட பையன்றதுக்காக சொல்லல, ரிஷிகிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ரொம்ப பொறுப்பானவன். இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் திரும்பிப் பாக்கல. உங்க பொண்ணுதான் புடிச்சிருக்குன்னு வந்து என்கிட்ட மொத மொத சொன்னா. அதனாலதான் பேசலாம்னு வந்தோம். நீங்க யோசிச்சு ஒரு நல்ல முடிவு சொல்லுங்கம்மா” என்று அண்ணாமலை முடித்துவிட்டார்.

“சார், இது எப்படி சார் ஒத்து வரும்? நீங்க வேற, நாங்க வேற. உங்க அளவுக்கு எங்களால எதுவுமே பண்ண முடியாது” என்று மாதவி நிதர்சனத்தை எடுத்துக் கூற, மலருக்கு உண்மை நிலை உணர்ந்து முகம் சுருங்கியது.

“நாங்க எந்த வரதட்சணையும் எதிர்பார்க்கல. நீங்க உங்க பொண்ண மட்டும் கொடுத்தா போதும். என் பையன் தங்கமா பாத்துப்பான். அவனுக்குன்னு சொந்தமா ஒரு ஷோரூம் வைத்து கொடுத்து இருக்கேன். அதை வச்சு அவன் வாழ்க்கையை அவன் பார்த்துப்பான். கல்யாண செலவு எல்லாம் நாங்களே ஏத்துக்குறோம். நீங்க ஒரு பைசா கூட செலவு பண்ண தேவையில்லை” என்றவர், “பணத்தில் என்னம்மா இருக்கு? பணம் இன்னைக்கு, ஒரு நாளைக்கு போகும். பணத்தை வைத்து மனுஷங்களை எடை போட்டு ஆளு நாங்க இல்ல. எங்களுக்கு மனுஷங்க தான் முக்கியம். எல்லாத்தையும் விட எனக்கு என் மகனோட விருப்பம் தான் முக்கியம். என் மகன் உங்க பொண்ண தன்னோட வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து இருக்கான்னா, கண்டிப்பா உங்க பொண்ணு தங்கமான பொண்ணா தான் இருக்கணும். ரிஷி மேல அவனோட தேர்வு மேல எனக்கு நம்பிக்கை நிறைய இருக்கு” என்று அண்ணாமலை கூற, மாதவியின் முகம் தெளியவில்லை.

இப்போது எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு, பிறகு தன் மகளுக்கு வரதட்சணையால் எதுவும் பிரச்சனை வருமோ? எப்படி பார்த்தாலும் அவர்களுக்கும் தங்களுக்கும் ஒத்து வராதே. தங்களிடம் சொல்லிக்கொள்ளும்படி எந்தச் சொத்தும் இல்லை, பின்புலமும் இல்லை என்று மாதவிக்கு அச்சம் தொற்றிக்கொண்டது.

error: Content is protected !!
Scroll to Top