அன்பு – 5.1

“ஷூ லேஸ் ஒழுங்கா கட்டலை மனோ. கீழே விழுந்துடாத” சந்தனா அதட்டியபடியே மகனைப் பின் தொடர, அவன் அதை அசட்டை செய்தான். வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தவன், எதிரில் வரும் நபர் மீது இடித்துவிட, அவன் தடுமாறி சுவரைப் பிடித்து நின்றான்.

“சாரி சார், சாரி சார்!” சந்தனா அவன் தோளைத் தொட்டுப் பிடித்துப் பின் பதறிப் போய் விலக, “இட்ஸ் ஓகே…” என சிந்தனையிலிருந்த ரஞ்சன் அவளைப் பார்த்ததும் புன்னகைத்தான். அவளும் சங்கடமாய் உதடுகளை விரித்தாள்.

அவளுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லை என்றுணர்ந்தவன், “டாக்டர், நான் ரஞ்சன், நேத்து என் பையனுக்கு ஃபீவர்னு உங்களைப் பார்க்க வந்தோம்” என்றான் நினைவுப்படுத்தும் விதமாக.

“யெஸ், ஞாபகம் வந்துடுச்சு சார், பையன் இப்போ எப்படி இருக்கான்?” எனக் கேட்டவளின் முகத்தில் சிநேக பாவம் படர்ந்தது.

“நல்லா இருக்கான் டாக்டர் . பீவர் குறைஞ்சுடுச்சு!”

“நல்லது சார்…” என்றுவிட்டு குனிந்து மனோவின் காலணியின் கோப்பிழையை(ஷூ லேஸை) சரி செய்துவிட்டாள்.

முன்னே இருந்த மின்தூக்கியின் தானியங்கி கதவு திறந்து கொள்ளவும், மூவரும் அதில் நுழைந்தனர். தரைதளப் பொத்தானை ரஞ்சன் அழுத்திவிட்டு கீழே செல்லக் காத்திருந்தான்.

அசாத்திய அமைதி நிலவ, “உங்கப் பையனா டாக்டர்?” என அவளைப் பார்த்துக் கேட்டவனுக்கு அவள் தலையசைப்பைக் கொடுக்க, எட்டி மனோகரின் கன்னத்தைக் கிள்ளினான்.

சின்னவன் வெடுக்கென இவன் கையைத் தட்டிவிட, “மனோ… என்ன பழக்கம் இது?” என மகனை முறைத்தவள், “சாரி சார்…” என சங்கடமாய் ரஞ்சனைப் பார்த்தாள்.

“இட்ஸ் ஓகே டாக்டர், சின்னப் பையன் தானே?” ரஞ்சன் ஒரு தோள் குலுக்கலில் அதைப் புறந்தள்ளினான்.

“குகேஷ் காலிங்!” சந்தனா கைபேசி இசைக்க, திரையை அழுத்திக் காதில் கொடுத்தவளின் முகம் கனிந்து போயிருந்தது.

“மம்மி… ஐ மிஸ் யூ!” மழலைக் குரலில் இன்னுமே இவளது முகம் முழுவதும் புன்னகைதான். ரஞ்சன் செவியையும் அது தவறாமல் எட்டியது போல. ஆனாலும் அசையாது கவனத்தை மட்டும் இங்கே வைத்தான்.

“என் செல்லத்தை நானும் ரொம்ப மிஸ் பண்றேன் டா!” இவள் கூற,

“ம்மா… நானும் பப்பி, டாடியை மிஸ் பண்றேன். கொடுங்க நான் பேசணும்…” மனோ அலைபேசியை எட்டி அவளிடமிருந்து பறித்தான்.

“பப்பி… எப்போ என்னைப் பார்க்க வர்ற நீ? டாடி மேல நான் கோபமா இருக்கேன்…” இவன் பாவனையாய்க் கூற, சந்தனா மகனை வாஞ்சை மிகப் பார்த்திருந்தாள்.

குகேஷ் எனப்பட்டவனின் கைக்கு அலைபேசி இடம் பெயர, “டாடி, ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ, ஐ ஹேட் யூ டூ…” என்றான். இவளது உதடுகளில் முறுவல் பிறந்தது.

“போதும் டா… போனை கொடு!” என அவனிடமிருந்து கைபேசியைப் பறித்தவள், “ஒரு வழியா சார்க்கு என் நம்பருக்குப் போன் பண்ண மனசு வந்துடுச்சு போல?” என் புன்னகையுடன் கேட்டாள். மறுபுறம் பேச்சில்லை. அவன் முகத்தை உர்ரென்று வைத்திருப்பான் என நினைத்தவளின் வதனம் மெதுவாய் மலர்ந்தது.

“அதான் போன் பண்ணிட்டீயே. அப்புறம் என்ன மௌன விரதம்? பேசலாம்ல?” இவள் பேசும் போதே மின்தூக்கியின் கதவுகள் திறந்தன. மகனின் கையைப் பிடித்தவாறு அவள் வெளியேறிவிட, ரஞ்சன் அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு நகர்ந்தான்.

பேசுவது அவள் கணவன் என்றதும் அவளது முகம் மலர்ந்திருக்க கூடும் எனத் தலையை அசைத்தவாறு அவன் நகர்ந்திருக்க, சந்தனா பள்ளி வாகனம் வந்து நிற்கும் இடத்திற்கு வந்தாள்.

நேற்று வாகனத்தில் ஏதோ பழுதென ஓட்டுநர் புலனக் குழுவில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கவே, இவள் தெரிந்த ஒருவரை அழைத்து மகனை பள்ளியில் விடச் சொல்லிப் பணித்திருந்தாள். இன்று பழுது நீக்கப்பட்டதென காலையிலே வரிசையாய் செய்தி கைபேசித் திரையை நிறைத்தன.

“பாப்பா எப்படி இருக்கா?” இவள் கேட்க, “ஹம்ம்… நல்லா இருக்கா” என்றது மறுபுறம்.

“நீ எப்படி இருக்க?”

“இருக்கேன், இருக்கேன்!” சலிப்பாய் வந்தது அவனது குரல்.

“ஏன் இவ்வளோ சலிச்சுக்கிற குகா?” எனக் கேட்டவளின் குரலில் அவன் மீதான அன்பு கொட்டிக் கிடந்தது.

அதை அமைதியாய் உள்வாங்கியவன், “தெரியலை சந்து, உங்களை ரொம்ப தேட்றேன். பார்க்கணும் போல இருக்கு!” என்றான் சோர்வாய்.

“என்னாச்சு, ஏன் வாய்ஸ் டல்லாகிடுச்சு. அங்க எதுவும் பிரச்சனையா?”

“இல்ல, இல்ல. பிரச்சனை எதுவுமில்லை. உங்க ஞாபகம் வந்துடுச்சு!” என்றதும் இவளிடம் மென்னகை விரவியது.

“கிளம்பி வர வேண்டியது தானே? அதான் வீக் ஆஃப் எல்லாத்தையும் பொக்கிஷமா சேர்த்து வச்சிருப்பீயே” கிண்டலாய் உரைத்தாள்.

“வரவா?”

“என்ன டா கேள்வி, முதல்ல கிளம்பி வா. பப்பியையும் கூட்டீட்டு வா. பெத்தவளைப் பார்க்காம அவ ஏங்கிப் போய்ருப்பா. தாயையும் பிள்ளையும் பிரிச்ச பாவம் உனக்கு வர வேணாம்…” என்றாள்.

“நிஜமா வரவா?”

“டிக்கெட்டைப் புக் பண்ணிட்டு கால் பண்ணு குகா!” இவள் அழைப்பைத் துண்டித்து, எதிரே வந்த பள்ளி வாகனத்தில் மகனை ஏற்றி அனுப்பிவிட்டு மகிழுந்தை உயிர்ப்பித்து மருத்துவமனையை அடைந்தாள்.

பத்து மணிக்கு மேல்தான் அவளுக்கு முன்பதிவுகள் இருந்தன. அதனால் தளர்வாக அமர்ந்து கோப்புகளைப் புரட்ட, “மேடம், அப்பாய்ன்மெண்ட் இல்லாம ஒருத்தவங்க உங்களைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க…” என செவிலியர் கூற,

“யெஸ் வர சொல்லுங்க…” எனத் தலையை இவள் அசைத்ததும், ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டதும் இவளுக்குப் பளிச்சிட்டது. நேற்றைக்கு வந்தவர்தான்.

முகம் சோர்ந்து எங்கேனும் தனக்கான ஒரு வெளிச்சம் சிறு புள்ளியாய்த் தென்பட்டு விடாதா என்ற ஆசை அவரது கண்களில் கொட்டிக் கிடந்தது. “உட்காருங்க…” என இழுத்தவள் நினைவடுக்கைத் தட்டி அவரது பெயரை நினைவு கூர்ந்தாள்.

“உட்காருங்க செல்வி, எப்படி இருக்கீங்க?” எனப் புன்னகையுடன் கேட்டாள். அந்தப் பெண்மணி பதிலளிக்கவில்லை. அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். கன்னத்தில் கைத்தடம் இருந்தது.

“உங்க ஹஸ்பண்ட் அடிச்சாரா உங்களை?” இவளுக்கு கோபம் வந்தது. என்ன மனிதன் இவனென மனம் வெதும்பியது. அவர் பதிலுரைக்காது வெறிக்கவும், பெருமூச்சை வெளிவிட்டவள் தனக்கென வீட்டிலிருந்து எடுத்து வந்த குளம்பியைக் குவளையில் நீட்டி அவர்புறம் நகர்த்தி வைத்தாள்‌.

“செல்வி, இதை முதல்ல குடிங்க‌‌. காலைல எதுவும் சாப்டலையா நீங்க?” எனக் கேட்க, அவர் குவளையைத் தொடவில்லை. அவரது கண்ணில் உவர்நீர் வடிந்தது.

“அழறது எல்லாத்துக்கும் தீர்வாகிடுமா சொல்லுங்க? நம்ம நினைச்சா உலகத்தையே மாத்தலாம். உங்களோட வாழ்க்கையை உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாத்த முடியாதா என்ன? எல்லாத்தையும் பேசிக்கலாம். முதல்ல எனக்காக இந்த டீயைக் குடிங்க…” என அவரது கையில அழுத்தம் கொடுத்தாள் சந்தனா.

அந்தப் பெண்மணி கண்ணீரைத் துடைத்துவிட்டு தேநீரைப் பருகினார். அவர் ஆசுவாசம் செய்ய நேரம் கொடுத்தவள், “உங்களுக்கு என்னென்ன ஷேர் பண்ணணும்னு தோணுதோ, எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுங்க. ட்ரஸ்ட் மீ, என்னையும் உங்களையும் தவிர யார்கிட்டேயும் விஷயம் போகாது. அப்படி ஷேர் பண்ண இஷ்டம் இல்லைன்னா இட்ஸ் ஓகே, உங்களுக்குப் பிடிச்ச விஷயத்தைப் பத்தி பேசலாம்” எனப் புன்னகைத்தாள் சந்தனா.

முதலில் தயங்கியவர் பின்னர் மெதுவாகப் பேச்சைத் துவங்கினார். நேற்று இவருக்குப் பேய் பிடித்திருக்கலாம் என்று உறவினர் ஒருவர் பேச்சைக் கேட்டு சாமியார் ஒருவரிடம் அழைத்துப் போக, அவர்தான் பேய் ஓட்டுவதாகக் கூறி அடித்திருக்கிறார் என செல்வி கூறியதும் சந்தனாவுக்கு கோபம் வந்ததுதான்.

இந்த நவீன யுகத்தில் இன்னுமே இப்படி மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்களே என ஆற்றாமை பொங்கியது. பெண்கள் எத்தனை துறைகளில் முன்னேறி சாதித்தாலும் இன்னும் இது போல குடும்ப வன்முறைகளில் சிக்கி வெளிவர முடியாது தவிக்கின்றனர்.

அவளிடம் சிகிச்சைக்கு வந்த பத்தில் எட்டு பேர் இதுபோல குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள்தான். ஒரு நச்சு உறவிலிருந்து வெளிவரவும் முடியாது அதிலே தங்கவும் முடியாது இருதலை கொள்ளி எறும்பாக தவித்தவர்கள் ஏராளம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சரிசமம்தான் இதில். தன் துணைவி சரியாய் அமையாது அல்லலுற்றோர் அநேகம். சிந்தனை அங்கிங்கு தாவினாலும், அதை இழுத்துப் பிடித்து முன்னே இருப்பவரிடம் குவித்தாள்.

செல்வி மடை திறந்த வெள்ளமென அனைத்தையும் கொட்ட, கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு மனம் கனத்துப் போனது. முதலில் அவரிடம் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும் என்ற நோக்கில் பேசியவள், அவரை வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினாள்.

இந்த உலகத்தில் தனக்கென ஒரு வேலையும் அதிலிருந்து வரும் பணம் தரும் சுதந்திரத்தை யாராலும் தந்துவிட முடியாது என்றாள். வெளியே சென்று வந்தால் மனமாற்றம் கிடைக்கும் என ஊக்கினாள்‌.

செல்விக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற முனைப்பிருந்தது. கணவனை எண்ணித் தயங்க, அவரது தயக்கத்தை உடைத்து சரியென தலையை அசைக்க வைத்தாள். எல்லா நேரமும் குடும்பத்தைச் சுற்றியே நகரும் சிந்தனையை, தன்னலத்திற்காக கொஞ்சம் செலவிடுங்கள் எனப் போதித்து அவரை அனுப்பி வைத்தவள் நேரத்தைப் பார்க்க, அது பத்து முப்பதை கடந்திருந்தது.

அடுத்ததாக முன்பதிவு செய்தவர் உள்ளே நுழைய, அவரிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பேசத் தொடங்கினாள். அறுபது வயது முதியவர் அவர். சைசோப்ரினியா என்னும் மனநோயால் பாதிக்கபட்டிருந்தார் அவர். சில மாதங்களுக்கு முன்புதான் சிகிச்சைக்கு வந்திருந்தார்.

மனைவி இறந்ததும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது அவருக்கு மனபிறழ்வு ஏற்பட்டிருந்தது. அவர் பேசும்போது மனைவி மீதான வாஞ்சைக் கொட்டிக் கிடந்தது. தான் பேச்சைக் கேட்கும் ஒரு செவிக்காகத்தான் ஏங்கிக் கிடந்தேன் என்பது போல தங்களது திருமண வாழ்வைப் பகிர்ந்தவரை இவள் அன்பாய் பார்த்தாள்.

அவரது பேச்சிலே தெரிந்தது, இருவரது உலகமும் தங்கள் இணையைச் சுற்றித்தான் நகர்ந்திருக்கின்றன என்று. திடீரென்று மனைவியின் இழப்பை ஈடுகட்ட முடியாது மனதும் உடலும் தளர்ந்து போய் அமர்ந்திருந்தார். கூறியதையே திரும்ப திரும்ப உரைப்பவரை அவதானித்தவளுக்கு அவர் நோயின் தீவிரம் புரிந்தது. அதை விட வீட்டாட்களின் ஒதுக்கலும் ஒரு காரணம் என உணர்ந்தாள்.

அதைப் பற்றி கேட்கவும், அவர் பேச்சைத் தொடர்ந்தார். மருமகள் பேரனை இவரிடம் பேசக் கூடாதெனவும், பார்க்கக் கூடாதெனவும் கூறியிருப்பதாய் சொல்லி வருத்தப்பட்டவரின் கண்கள் பளபளத்திருந்தன. அவரிடம் பேசி சமாதானம் செய்து, அவர் மகனைதான் அழைத்துப் பேசினாள்.

ஏனோ மருமகளைவிட மகனிடம் இவருக்குரிய மருந்து இருப்பதாய் ஓர் எண்ணம். மகன் தந்தையை சரியாய் கவனிக்கவில்லை என்பதாய் தோன்றிற்று. மருந்து மாத்திரை மட்டுமே ஒரு நோயின் தீவிரத்தைக் குறைப்பதில்லை. அன்பும் அரவணைப்பும் முக்கியம் என்பது அறிவியல் சித்தாந்தம்.

error: Content is protected !!
Scroll to Top