“சின்னப் புள்ளை. அவளுக்கென்ன தெரியும், ஏதோ ஆசைப்பட்டு கேட்டிருக்கா. அதுக்குன்னு புள்ளையை கை நீட்டுவீயா?” என அதட்டியவர், “நீ வாடி, பெரியம்மா கறிச்சோறு தர்றேன்!” என அவளை அழைத்தார்.
“ஐயோ, அதெல்லாம் வேணாம் கா. வீட்ல என்ன இருக்கோ, அதை சாப்பிட்டு பழகட்டும். ஒரு தடவை பழக்கப்படுத்திட்டீங்கன்னா, ஓயாம அடம்பிடிச்சு அழுவா கா” பூரணி கூற,
“அப்படிலாம் இல்ல பூரணி. ஒருநாள் அங்க சாப்டட்டும்” மரிக்கொழுந்து அவளை அழைத்துச் செல்ல, பூரணி மகளை முடிந்தளவு முறைத்தார்.
வீட்டிற்குச் சென்றதும் தாய் அடிப்பாள் என்ற பயத்திலே சந்தனாவுக்கு உணவு உள்ளிறங்கவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது. அரைகுறையாய் உண்டுவிட்டு வீட்டிற்குள் நுழைய, பூரணி கோபத்துடன் அவளைப் பார்த்தார்.
“கதவை மூடிட்டு உள்ள வா குட்டி!” என அழைக்கையிலே அவரது கோபம் புரிந்தவளுக்கு கண்களில் குளம் கட்டின.
“அம்மா, என்னை அடிக்காதம்மா. இனிமே கறிசோறு கேக்க மாட்டேன். நீ என்ன கொடுத்தாலும் சாப்பிட்றேன் மா. அடிக்க மட்டும் செய்யாத மா. வலிக்குது மா!” சந்தனா தேம்பியழ, பூரணிக்கும் விழிகள் பளபளத்தன.
“குட்டி, இனிமே வீட்ல என்ன இருக்கோ, அதான் சாப்பிடணும். யார் வீட்லயும் போய் சாப்பிடக் கூடாது. புரியுதா!” கண்டிப்பாய்க் கூறினாலும், மகளை இழுத்து மடியில் படுக்க வைத்தார் பூரணி. தேம்பிக் கொண்டே, “சரிம்மா…” என்றாள் சின்னவள்.
“அடுத்த வாரம் அம்மா கறிசோறு செஞ்சு தரேன்!” என அவளது முகத்தை முந்தானையால் துடைத்தார்.
“நிஜமாவா மா?” இவள் ஆர்வமாய்க் கேட்க, “நிஜமா செஞ்சுத் தரேன் குட்டி…” என அவர் கூற, சந்தனா இப்போதே அடுத்த வார ஞாயிற்றுக் கிழமைக்குக் காத்திருக்கத் துவங்கினாள்.
தன்னை சோதிக்கவென்றே கடவுள் அந்த வாரத்தை மெதுவாய் செல்ல வைப்பதாக அவளுக்கொரு எண்ணம். அதோ இதோவென ஞாயிற்றுக் கிழமையும் விடிந்தது.
எழுந்ததும் தன் முகம் பார்த்த மகளிடம், “வேலையை முடிச்சிட்டு மதியம் வரும்போது கறியெடுத்துட்டு வருவோம் குட்டி. வந்ததும் அம்மா உனக்கு அரைமணி நேரத்துல கறிசோறு செஞ்சுத் தரேன்!” எனப் பூரணி கூறவும், சந்தனா உற்சாகத்துடன் கிளம்பினாள். நேற்று பள்ளியில் அவளும் அவளது நண்பர்களும் சேர்ந்து பட்டம் செய்திருக்க, அதை கையில் ஆட்டியபடியே நடந்தாள்.
பூரணி உள்ளே வேலை பார்க்க, இவள் கீழே பட்டத்தை வைத்து விளையாடினாள். கும்மியாய் இருந்த மணல் இப்போது தரையோடு அமிழ்ந்து குறைந்திருக்க, இவளுக்கு அதில் ஏக வருத்தம்.
“ஓய்…” மேலிருந்து யாரோ கத்துவதை உணர்ந்து சந்தனா நிமிர்ந்து பார்க்க, புதிதாய் ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
“உன் நேம் என்ன?” அவன் கேட்க, இவள் பதிலளிக்காது குனிந்து கொண்டாள்.
“ஏய், உன்னைத்தான் கூப்பிட்றேன். காது கேட்கலையா? உன் நேம் என்ன? எந்த ஸ்டாண்டர்ட் படிக்கிற?” அவன் கத்த, இவள் அசையவே இல்லை. ஏற்கனவே மனோவிற்கு உதவி செய்ய சென்று அடிவாங்கிய ஞாபகம் மட்டுமல்ல, அந்த தழும்பும் நெற்றியிலிருக்க, தாய் கூறியது போல் எதையும் கண்டு கொள்ளாது அமைதியாய் இருந்துவிட்டாள்.
அந்த சிறுவன் மேலிருந்து எதையோ கீழே எறிய, இவள்மேலே பட்டது அது. அதை எடுத்துப் பார்த்தவள், அவனை முறைத்துவிட்டு திரும்பினாள். இதனிடையே பட்டத்தில் ஒரு பக்கக் குச்சி காகிதத்திலிருந்து அறுந்துவிழ, யாரும் பார்க்கிறார்களா என சுற்றி முற்றி கண்களை சுழற்றிவிட்டு, எச்சியைத் தொட்டு அதை ஒட்ட வைத்தாள்.
மேல இருக்கும் சிறுவன் அதைப் பார்த்துவிட்டான். “சீ கருமம்… பேட் கேர்ள்!” அவன் கத்தவும், இவளுக்கு ரோஷம் வந்துவிட்டது.
நிமிர்ந்து அவனை முறைத்தவள், “போடா மொட்டை…” என்றாள். ஆம், மேலிருந்த சிறுவன் மொட்டையடித்திருக்க, இவள் அதைத் குறிப்பிட்டதும் அவனுக்கு மூக்கு மேல கோபம் பொங்கியது.
விறுவிறுவென கீழே இறங்கி வந்தவன், “யாரைப் பார்த்து மொட்டைன்னு சொல்ற?” என்று கேட்டு இவளது பட்டத்தைப் பிடிங்கிக்கொண்டு ஓடினான்.
“ஏய்… ம்மா, என் பட்டம்!” என இவளும் அவன் பின்னே ஓடத் துவங்கினாள்.
“முடிஞ்சா என்கிட்ட இருந்து வாங்கிப் பாரு நீ…” என்றவன் வீட்டிற்குள்ளே சென்று மாடியேற, இவளும் ஓடும் வேகத்தில் கவனிக்காது சென்றுவிட்டாள்.
அந்த சிறுவன் மனோ அறைக்குள் செல்ல, இவளும் உள்ளே நுழைந்து அவனைத் துரத்தினாள். மனோ கட்டிலில் அமர்ந்து இருவரையும் முறைத்துப் பார்த்தான்.
“தீனா, என்ன டா சத்தம்?” என சதாவின் குரல் கேட்டதும், சந்தனா அப்படியே நின்றுவிட்டாள். ஓடியதில் வேகமாகத் துடித்த இதயம் இன்னும் தன் இயக்கத்தைக் கூட்ட, சரசரவென அவளது கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது. தீனா எனப்பட்டவன் அவள் தன்னைத் துரத்தவில்லை என்றுணர்ந்து நின்று பார்க்க, அவள் அழுது கொண்டிருந்தாள்.
“ஏய்… எதுக்கு அழற. பட்டத்தைக் கொடுத்துட்றேன்!” அவன் அவளருகே வந்தான்.
“தீனா…” சதாவின் குரல் அருகே கேட்கவும், அவள் கதவுக்குப் பின்னால் மறைந்தாள்.
“ப்ளீஸ்… ப்ளீஸ், மேடம்கிட்டே சொல்லிடாத!” எனக் கெஞ்சியவளுக்கு தாய் அடிப்பாளே, சதாம்பிகா திட்டுவாரே என நினைத்ததும் குபுக்கென கண்ணீர் முட்டியது.
உள்ளே வரக்கூடாது என பூரணி கூறியது சில நிமிடங்கள் முன்னே மறந்திருந்தாள். என்ன செய்வதென அவளுக்குத் தெரியவில்லை. அந்நேரத்தில் கடவுள் எதாவது மாயா ஜாலம் செய்து தன்னை மறைய வைக்கக் கூடாதா? என சிறுமியின் மனது அழுதது.
‘கறிசோறு கூட வேணாம் சாமி. என்னை மாட்டி விட்றாத!’ எனப் பயத்தில் கடவுளிடம் கோரிக்கை வைத்தாள்.
தீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. யார் மேடம், எதற்கு அழுகிறாள் எனப் பார்த்தான். அவனுக்கும் சந்தனாவிற்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். புரிந்து கொள்ள முடியாது விழித்து நின்றான்.
“தீனா…” திறந்திருந்த கதவுக்கு வெளியே சதா வந்துவிட்டார். உள்ளே நுழையாது இவர்களைப் பார்த்தார்.
“ஒன்னுமில்ல அத்த. பட்டம் விட்றேன்!” அவன் கூற, மனோ சந்தனாவை முறைத்துப் பார்த்தான்.
அவள் விழிகளில் நீருடன் அவனைப் பார்த்து, ‘மாட்டி விட்டுவிடாதே!’ என இறைஞ்ச, “மாம்…” என இவன் கத்தியதில் இரண்டெட்டு நகர்ந்த சதாம்பிகா மீண்டும் கதவருகே வந்து நின்றார். சந்தனாவின் இதயம் துடித்தடங்கியது.
தொடரும்…