அன்பு 4.2

மறுநாள் காலை பூரணி வெகுவிரைவாக எழுந்து சமைத்து முடித்திருந்தார். மகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்தார். அவள் குளித்து முடித்து புதிய சீருடையை அணிந்து வர, அவளுக்கு ரெட்டை ஜடைப் போட்டு பின்னலிட்டார்.


அவளது பள்ளிப் பையை எடுத்து வைத்து, மதிய உணவை டப்பாவில் அடைத்தார். காலை உணவை இருவரும் உண்டு முடிய வேலை செய்யும் வீட்டிற்கு கிளம்பினர்‌.

சந்தனாவை வெளியே அமர வைத்தவர், “மண்ல விளையாடி ட்ரெஸ்ஸை அழுகாக்கிடாத குட்டி.  இங்கேயே உட்காந்துருக்கணும்!” என்ற அதட்டலுடன் பூரணி செல்ல, அவரிடம் தலையை அசைத்தவள் பள்ளிப் பையை ஆசையாய் தொட்டுப் பார்த்தாள்.

அவளுக்குப் பிடித்த பென்டென்-இருந்தப் பையை அடம்பிடித்து வாங்கியிருந்தாள். உள்ளே திறந்து பார்க்க, புது எழுதுகோல், அழிப்பான், குறிப்பேடு என எல்லாம் இருந்தன. அதையெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்தவளின் பார்வை தாயை வருட, அவர் எப்போது வருவார், புதுப்பள்ளியில் எப்போது சேரலாம் என்ற சிந்தனைதான் மனம் முழுவதும்.

இடையே மேலிருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டாலும்,  அதை அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. உமாநாதன் அலுவலகம் கிளம்பியவர், இவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனார்.

சதாம்பிகாவிடம் நேற்றே பூரணி அனுமதி வாங்கி இருந்தார். ஒருவாரம் மட்டும் மகளைப் பள்ளிக்குத் தான் அழைத்துச் செல்வதாகவும்,  பின் வழி அவளுக்குப் பழகிவிடும் எனக் கேட்டிருக்க, அவரும் சரி என்றுவிட்டார்.

இரண்டு தெரு தள்ளிதான் அரசுப் பள்ளி இருந்தது. நடந்து சென்றவாறே வழியை மகளுக்கு காண்பித்துவிட்டு, அவளது வகுப்பறைக்குச் சென்று ஆசிரியரிடம் கூறி விட்டுவிட்டு வந்தார். 

“குட்டி, ஸ்கூல் முடிஞ்சதும் எங்கேயும் போக கூடாது.  அம்மா வர்ற வரைக்கும் கேட் பக்கத்துல உக்காந்திருக்கணும்!” என அறிவுறுத்திவிட்டு சென்றார்.

பனிரெண்டு மணிக்கு சதாம்பிகா வீட்டில் வேலையை முடித்தவர், நேரே பேருந்து நிலையம் அருகே இருக்கும் உணவகத்திற்குள் நுழைந்தார். மதிய வேளையில் காய்கறி நறுக்கிக் கொடுக்க ஆள் வேண்டுமென அவர்கள் கேட்டிருக்க,  நேற்று விசாரித்த பூரணி இன்றிலிருந்து வேலைக்கு சேர்ந்திருந்தார்.

பனிரெண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை காய்கறி நறுக்குவது, பாத்திரம் துலக்குவது, இலையெடுப்பது என எந்த வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும்.  மூன்று மணிக்கு மேல் வேலை பார்ப்பவர்களுக்கு உணவு அங்கே வழங்கினர்.

பூரணி உணவை ஒருவாய் எடுத்து வைத்ததும் மகளின் நினைவுதான். கொஞ்சம்தான் துவரம் பருப்பு வீட்டிலிருக்க, அதை வைத்து சாம்பார் சாதம் செய்து அவளுக்குக் கொடுத்து விட்டிருந்தார். தொட்டுக் கொள்ள ஊறுகாய்தான் வைத்திருந்தார்.

இப்போது அவர் சாப்பிடும் உணவு ருசியாய் இருக்க, அவளுக்குக் கொடுக்க முடியவில்லை என்ற எண்ணத்தில் உணவு கஷ்டப்பட்டு உள்ளிறங்கியது. உண்டு முடித்தவர் அங்கு கூறிவிட்டு மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு மீண்டும் சதா வீட்டிற்கு சென்று வேலைகளை முடித்ததும், இருவரும் இருப்பிடம் வந்தடைந்தனர்.

நாட்கள் அதன் போக்கில் நகர, இதுவே அவர்களுக்கு வழக்கமாகிப் போனது. பூரணி கஷ்டப்பட்டு தன்னை இந்த வாழ்க்கைக்குப் பொருத்தியிருந்தார். யாரிடமும் கையேந்தாமல் உழைத்து சாப்பிடுவது எவ்வளவோ மேல் என்ற எண்ணமும், பெற்றவர்களிடம் செல்லக் கூடாதென்ற வைராக்கியமும் வலு பெற்றிருந்தது. அதனாலே ஓடத் துவங்கியிருந்தார். வாங்கும் சம்பளத்தில் முடிந்தளவு செலவை குறுக்கியவர், மீதத்தை மகளுடைய படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும் சேமித்தார்.

பூரணி வேலைக்கு சேர்ந்து சில பல மாதங்களை நேரமுட்கள் விழுங்கியிருந்தன. சந்தனாவிற்கும் வார நாட்களில் பள்ளி, வாரயிறுதிகளில் விடுமுறை என நாளும் கிழமையும் நகர்ந்தன. பூரணி வேலை செய்யும் நேரத்தில் வெளியே அமர்ந்திருக்கும் சந்தனா வீட்டுப் பாடங்களை எழுதி முடித்துவிடுவாள். பல நேரம் அவள் தூங்கி வழிய, சில சமயம் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறேன் என அதன் பின்னே சுற்றுவாள். அதுதான் அவளது பிரதான வாடிக்கை.

அன்றைக்கு வாரயிறுதி. சதாம்பிகா வீட்டில் காலையில் வேலையை முடித்திருந்தார் பூரணி. சதாம்பிகா கணவருடன் வெளியே செல்வதால் மாலை வரவேண்டாம் என்று கூறியிருக்க, இவர் மகளை அழைத்துக்கொண்டு வீடுவந்தார். உணவகம் ஞாயிறு விடுமுறை என்பதால் எங்கும் செல்லத் தேவையில்லை.  ஓடி களைத்த உடல் கொஞ்சம் ஓய்வுக்கு கெஞ்சியதுதான். சாப்பிட்டுவிட்டு உறங்கலாம் என அவர் எண்ணியபடி உணவை எடுத்து வைக்க, மகள் முகத்தைத் தூக்கினாள்.

“அம்மா, டெய்லி சாம்பாரு இல்லன்னா புளிக்குழம்பு. எனக்குப் பிடிக்கலை!” என்றாள் தட்டை தள்ளியபடி.

“குட்டி, வேற என்ன வைக்க சொல்ற?” என்று உதடுகள் கேட்டாலும் கைகள் தனக்கும் மகளுக்கும் உணவை தட்டிலிட்டன.

“எனக்கு கறிசோறு வேணும்மா. அப்பா இருக்கும்போது அடிக்கடி செஞ்சுத் தருவ. இப்போலாம் செஞ்சே தர்றது இல்ல!” குறைபடித்தாள் சின்னவள்.

“அடுத்த வாரம் கறிசோறு செஞ்சுத் தரேன். இப்போ இதை சாப்பிடு குட்டி!”

“போம்மா‌‌… எனக்கு சாப்பாடே வேணாம்!” தட்டை ஒரே தள்ளாக அவள் தட்டிவிட, சாப்பாடு தரையில் சிந்தியது.

எழுந்து அவளருகே வந்தவர், “இதென்ன டி புதுசா அடம்புடிக்கிற பழக்கம். இருக்கத சாப்பிடணும்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” எனக் கோபமாய்க் கேட்டு அவளது முதுகில் அடித்திருந்தார்.

இந்த சாப்பாட்டிற்குத்தான் அவர் ஓடிக் கொண்டிருக்க, இவள் அதைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என சினம் பரவியது அவருக்கு.

தாய் அடித்த அடியின் வீரியம் தாங்காது சந்தனா கத்தியழத் தொடங்க, மரிக்கொழுந்து பதறி வந்துவிட்டார்.

“என்ன அன்னபூரணி, எதுக்குப் புள்ளை அழுறா?” அவர் கேட்க, பூரணி அமைதியாய் இருந்தார்.

“என்ன டி, நீதான் அவளை அடிச்சியாக்கும். புள்ளை மேல கை நீட்டுறது என்னப் பழக்கம்?” என அதட்டியவாறே சந்தனாவை அணைத்துக் கொண்டார். அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

“ம்ப்ச்… இருக்கத சாப்டாம, கறிசோறு வேணும்னு கேக்குறா கா. நான், சரி அடுத்த வாரம் கறியெடுத்து சோறாக்குறேன்னு சொன்னாலும் கேக்காம, சாப்பாட்டை கீழே சிந்தி வச்சிருக்கா பாருங்க!” பூரணி கோபத்துடன் மொழிந்தார்.

error: Content is protected !!
Scroll to Top