குட்டி குட்டி என நாளுக்கு நூறு முறையாவது அழைத்திடும் தாயின் நினைவில் மனம் கனத்துப் போனது. தாய்ப் பறவைக் குஞ்சை அடைகாப்பது போல எங்கு சென்றாலும் தன்னை அழைத்துச் செல்லும் பெண்மணி இப்போது உடனில்லை என்பது மனதிற்கு அத்தனை கஷ்டம்தான். இருந்தும் கடந்து வந்துவிட்டாள். ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல. கிட்டதட்ட ஆறேழு வருடங்கள் அவரில்லாது வாழ்க்கையை நகர்த்தியிருந்தாள். தாய் இறந்தப் போதுதான், யார் உடனில்லை என்றாலும் நமக்கான வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்றொரு நிதர்சனத்தை உணர்ந்திருந்தாள்.
“ம்மா… நிஜம்மா என்னைத் திட்டமாட்டீயா நீ?” காவேரியின் குரலில் நிகழ் காலத்திற்கு வந்தாள் சந்தனா.
“நான் எதுக்கு என் தங்கத்தைத் திட்டப் போறேன் டி?” எனக் கேட்டவரின் குரலில் மகள் மீதான பாசம் கொட்டிக் கிடந்தது.
“பார்த்தியா காவேரி. நான் சொன்னதுதான் உண்மை. இனிமே எந்த ப்ராப்ளம்னாலும் யார்கிட்டே ஷேர் பண்ணுவ நீ?”
“அம்மாகிட்ட தான் கா!” துள்ளலாய்க் கூறினாள் சின்னவள்.
“குட் கேர்ள். இனிமே இந்த மாதிரி எதுவும் பண்ண கூடாது!” எனப் பேசிக்கொண்டே தேவா கொடுத்த இன்னெட்டை அவளிடம் நீட்டியவள், “சமத்தா இந்த டெய்ரிமில்கை சாப்ட்டுட்டு இருக்கணும். நான் அம்மாகிட்ட பேசணும்!” என அவளை வெளிய அனுப்பிய சந்தனா அந்தப் பெண்மணியிடம் உரையாடத் துவங்கினாள்.
“ஏன் கா காவேரியை பசங்க கூடப் பேச வேணாம்னு சொன்னீங்க?”
“காலம் ரொம்ப கெட்டுக்கிடக்கு மா. இப்ப இருக்க பசங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு. பொட்டைப் புள்ளைக்கு எதுக்கு ஆம்பள பசங்க சகவாசம்?” அவர் தன்னிலையை விளக்கினார்.
“நம்ம பார்க்குற பத்துல ரெண்டு ஆண்கள் தப்பா இருக்காங்கன்றதுக்காக எல்லாருமே தப்பானவங்கன்னு சொல்வீங்களா கா? ஏன் உங்க வீட்ல ஆண்கள் இல்லையா? உங்க அப்பா, உங்க ஹஸ்பண்ட்னு எல்லாரோட வாழ்க்கைலயும் ஆண்கள் கலந்திருக்காங்க கா. உங்கப் பொண்ணுக்கு ஒதுங்கிப் போக சொல்லிக் கொடுக்காதீங்க. எது வந்தாலும் அதை ஃபேஸ் பண்ண சொல்லிக் கொடுங்க. பசங்ககிட்டே பேச வேணாம்னு சொல்லாதீங்க. நாளைக்கே உங்கப் பொண்ணுக்கு எதாவது ஒன்னுன்னா, கண்டிப்பா ப்ரெண்டா அவங்க முன்னாடி நிப்பாங்க. ஆம்பளைங்களே இல்லாத உலகத்துல நம்ப வாழலையே கா. நல்லவங்க கெட்டவங்களைப் பிரிச்சுப் பார்த்துப் பழகுன்னு சொல்லிக் கொடுங்க. அதுதான் வாழ்க்கைக்கு சரியா இருக்கும்!” என்றாள். அவர் அமைதியாய் இருந்தார்.
“எல்லாத்தையும் விட எல்லா சிட்சுவேஷன்லயும் அம்மா, அப்பா பொஷிஸன்லயே இருக்காதீங்க. கொஞ்சம் புள்ளைங்களோட மனசைப் புரிஞ்சுக்கோங்க. நீங்க வாழ்ந்த சூழ்நிலை வேற. இப்போ அவங்க வாழ்ற சூழ்நிலை வேற.”
“எதா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லு டா, நான் பார்த்துக்கிறேன்னு அவகிட்டே சொல்லி இருந்தீங்கன்னா, உங்கப் பொண்ணு இவ்வளோ தூரம் வந்திருக்க மாட்டா. அது வெறும் வார்த்தை இல்ல. உங்கப் பொண்ணுக்கு நீங்க கொடுக்குற தன்னம்பிக்கை, தைரியம் கா!” என இவள் பேச, அவர் தலையை மட்டும் அசைத்தார். அவர் முகம் ஆழ்ந்த சிந்தனையிலிருக்க, கண்டிப்பாக தான் பேசியதை அவர் சீர்தூக்கிப் பார்ப்பார் என்ற நம்பிக்கையில் ஆசுவாச மூச்சை வெளிவிட்டாள். மேலும் சில பல நிமிடங்கள் பேசிவிட்டு அவரை அனுப்பி வைத்தாள்.
“ம்மா… மனோ வந்துட்டான்!” என்ற குரலுடன் பள்ளிப் பையும் சீரூடையுமாய் உள்ளே நுழைந்தான் பத்து வயது மனோகர். சந்தனாவிற்கு ஐந்து மணி வரை மருத்துவமனை பணி நேரம். அதனால் மனோ பள்ளி முடிந்ததும் பள்ளி வாகன ஓட்டுநர் அவனை இங்கே அழைத்து வந்துவிடுவார். சில நாட்களில் வீட்டில் அவனைவிடச் சொல்லுவாள்.
சந்தனா அறையின் பக்கவாட்டில் சிறிய தடுப்பு போல் அமைத்து, அதில் சின்னதாய் நீள்விருக்கை ஒன்றை போட்டிருந்தனர். சந்தனா மகனுக்காகவென இவற்றை செய்திருந்தாள்.
“ம்மா… ராகுல் இன்னைக்கு ஃபேமிலி ட்ரீ வரைஞ்சானா, நானும் வரைஞ்சேன்!” என ஒரு காகிதத்தை எடுத்து சின்னவன் நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவளின் விழிகள் மெலிதாய் கலங்கின. தாய் தந்தை என்றிருக்கும் இரண்டு இடங்களிலும் ஒரு பெண் பொம்மையை வரைந்து அம்மா, அப்பாவென இவள் பெயரைக் கூறிப்பிட்டிருந்தான்.
“ரொம்ப அழகா இருக்கு மனோ!” என மகன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனும் பதிலுக்கு தாயின் முகம் முழுவதும் ஆசை தீர எச்சில் செய்தான்.
கைகள் தன் போல ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்து கொண்டிருக்க, பூரணி ஏதோ சிந்தனையிலிருந்தார். திடீரென கேட்ட மகளின் சத்தத்தில் பட்டென கையிலிருந்த விளக்குமாறைக் கீழே போட்டவர், “குட்டி, குட்டி… எங்க இருக்க நீ?” என பதறிப் போய் கத்தினார்.
அழுதுகொண்டே எழுந்தமர்ந்த சந்தனா நெற்றியில் கையை வைக்கவும், அவளது கை முழுவதும் குருதியில் நனைந்து போனது. லேசான அடி என்றாலும் இவளுக்கு ரத்தம் வெகுவாய் சிந்தியது.
“என்னாச்சு?” என சதாம்பிகா மகனின் அறையை நோக்கி வர, பூரணியும் மேலிருந்துதான் சத்தம் வந்ததோ என அவருடன் படியேறினார்.
தாயைக் கண்டதும் விம்மித் துடித்த அழுகையைக் கட்டுப்படுத்திய சந்தனா, “ம்மா…” என ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள். அவளிடமிருந்து தேம்பல் வெளிப்பட, “ஐயோ, குட்டி… குட்டி என்னாச்சு டி? எப்படி முகத்துல ரத்தம் வருது?” எனப் பதறியவர், சேலையை எடுத்து அவளது நெற்றியில் வைத்து அழுத்தினார்.
“ம்மா… ம்மா அவன்தான் பொம்மையை தூக்கி என் மேல எறிஞ்சான் மா!” என இவள் தேம்ப, “உன்னை யாரு இங்க வர சொன்னது?” என்ற சதாம்பிகாவின் அதட்டல் குரலில் சின்னவளின் அழுகை நின்றிருந்தது. பயந்த விழிகளுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.
“ஏன் மா அன்னப்பூரணி, நான் என்ன சொன்னேன் உங்ககிட்டே? உங்கப் பொண்ணு உள்ள வர வேணாம்னுதானே சொன்னேன்? ஹம்ம்… உங்களையே இந்த ரூம்க்குள்ள வரக் கூடாதுன்னுருக்கேன். உங்க மக எதுக்கு வந்தா?” எனக் கோபமாய்க் கேட்டார் சதாம்பிகா. மேலும் சந்தனாவை ஏகத்துக்கும் அவர் முறைத்த வண்ணமிருந்தார்.
“இல்ல மா, சின்ன புள்ளை தெரியாம வந்துட்டா!” என்ற பூரணிக்கு விழிகள் எல்லாம் கலங்கிப் போயின. இது போல சுடுசொற்கள் எல்லாம் இதற்கு முன்பு கேட்டுப் பழக்கம் இல்லை அந்த பெண்மணிக்கு.
கணவர் இருந்தவரை எங்கேயும் வெளியே வேலைக்கு அவரை செல்ல அனுமதித்தது இல்லை. இப்போது இப்படியொரு சூழ்நிலையில் அவருக்கு அழுகை வரும் போலானது. அமைதியாய் நின்றார். மகளுக்கு வேறு அடிபட்டுவிட்டதே என இன்னும் அதிகமாய் அழுகை வரப் பார்த்தது.
“மாம்… தட் நீயூ கேர்ள் ஸ்டோல் மை டாய்!” இத்தனை நேரம் அமைதியாய் இவற்றை வேடிக்கைப் பார்த்த அச்சிறுவன் இடைபுகுந்தான்.
“அவனோட பொம்மையை எடுத்தீயா நீ? அதான் அவன் உன்னை அடிச்சானா?” மகன் மீது தவறில்லை என்று தெரிந்ததும் அவரது குரலில் காரம் கூடியது.
“இல்ல… இல்லை… ஏதோ சத்தம் கேட்டுச்சு. அதான் மேல வந்தேன். பொம்மையை எடுக்க கஷ்டப்பட்டான்… அதான் நான் எடுத்துக் கொடுக்கலாம்னு அதை தொட்டேன். உடனே கையில இருந்த பொம்மையை எடுத்து என் மேல எறிஞ்சுட்டான். நான் எதையும் எடுக்கலை மா!” என சின்னவள் தேம்பியழத் தொடங்க, “பொய் சொல்றீயா நீ? என் பையன் பொய் சொல்ல மாட்டான்!” என மகன் பக்கமிருந்து மட்டுமே பேசினார் சதாம்பிகா.
“ம்மா… என் பொண்ணு அப்படியெல்லாம் பண்ண மாட்டா மா!” பூரணி ரோஷக் குரலில் கூறினார்.