“இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல, முதல்ல ரெண்டு பேரும் ஹாலுக்குப் போங்க. நான் வரேன்!” என அவர்களை அனுப்பியவர், “மனோ… திஸ் இஸ் நாட் அ குட் ஹேபிட். அந்தப் பொண்ணை ஏன் ஹேர்ட் பண்ண நீ?” என அவர் கேட்கவும், சின்னவன் முறைத்துக்கொண்டு மற்றையபுறம் திரும்பினான்.
“ம்மா… மிஸ்டேக் என்னோடது இல்ல. அவதான் என் டாய்ஸை எடுத்தா!” என்றான் கோபமாய். இடதுபுறம் தலையில் ஒரு கட்டும் காலில் பெரிதாய் ஒரு கட்டுமிட்டிருந்தனர் அச்சிறுவனுக்கு.
நடந்த விபத்தில் அவனுக்கு முன்மூளையில் அடிபட்டிருந்தது. காலில் பலத்த அடி. எழுந்து நடக்கவே ஒரு வருடங்களாகலாம் என மருத்துவர் கூறியிருந்தார். மேலும்
(post-Traumatic stress Disorder) பிடிஎஸ்டி-யினால் பாதிக்கப்பட்டிருந்தான். இத்தனை நாட்கள் கூடவே இருந்த தாத்தாவை விபத்தில் பறிகொடுத்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தூக்கத்தில் எழுந்து உளறுவது, அவ்வப்போது கத்துவது, நொடிக்கு நொடி மனநிலை மாறுவது என அவன் உடலும் மனதும் சமநிலை தவறியிருந்தது. சில வாரங்கள் மருத்துவமனை வாசம் முடிந்து இப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தான்.
ஓடியாடி விளையாண்ட கால்களும் அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காது விபத்தினால் ஓய்வில் இருந்துவிட, அதுவும் அவ்வப்போது கோபமாய் வெளிப்பட்டுத் தொலைத்தது. மகனின் இந்நிலை பெற்றவர்களைக் கவலைக் கொள்ள செய்திருந்தது.
மருத்துவர் அவன் சீக்கிரம் குணமடைந்துவிடுவான் என்றும் மருந்து மாத்திரைகளை சரியாய் உட்கொள்ளுமாறு கூறியிருந்தார். அவனது மனநிலை சரியாகும்வரை அவனை அக்கறையாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தியிருந்தார்.
அதனாலே அவனது அறைக்குள் தாயும் தந்தையும் மட்டுமே நுழைவார்கள். யாரென்று தெரியாத வேற்று ஆட்கள் வந்துவிட்டால் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதாவது ஒரு வகையில் அவர்களைக் காயப்படுத்திவிடுகிறான் என்று அவனது அறைக் கதவைப் பூட்டியே வைத்திருந்தார் சதாம்பிகா.
எதுவும் பேசாது மகனருகில் வந்தவருக்கு மனம் வலித்தது. அவனது தலையை இடது கையால் மெல்லத் தடவினார். அவரது கையைத் வேகமாய் தட்டிவிட்டவன், “டோன்ட் டச் மீ மாம்!” என்றான் சீறலாய். தாயிடம் கூட அவ்வப்போது கோபமுகம்தான் காண்பித்தான். அவன் அடங்கிப் போகும் ஒரேயொரு மனிதர் அவனது தந்தை உமாகாந்தன் மட்டும்தான். தந்தை மகனுக்கு இடையே அப்படியொரு பிணைப்பு இருந்தது.
உமாகாந்தன் அரசு அலுவலகம் ஒன்றில் உயர்பதவியில் இருப்பவர். அலுவல் காரணமாக மகனை உடனிருந்து அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. வேலை முடிந்து வந்ததும் மகனுடன் பொழுதைக் கழிப்பார். தாய் தந்தை இருவரது வேண்டுதலிலும் தங்களது மகன் விரைவில் குணமடைய வேண்டும் என்பதுதான் பிரதானம். கடவுள் சீக்கிரம் தங்களுக்கு செவி சாய்க்க வேண்டுமென தினமும் அவரிடம்தான் சரணடைந்திருந்தனர்.
முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த சதா கூடத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“இங்க வா பொண்ணே!” என சந்தனாவை அழைக்க, அவள் தாயின் முகம் பார்த்தாள். அவர் தலையை அசைக்க, சதா அருகே சென்றாள்.
சின்னவளுக்கு முதலுதவி செய்து முடித்தவர், “பூரணி, என் பையனுக்கு உடம்புக்கு முடியலேன்னு ஏற்கனவே நான் சொல்லிட்டேன். இன்னைக்கு சின்ன காயத்தோட போச்சு. அவனை நம்மால எதுவும் சொல்ல முடியாது. அவனோட நிலைமை அப்படி. உங்களுக்கு வேலை வேணும்னா உங்கப் பொண்ணை கூட்டீட்டு வராதீங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது. இப்போ கிளம்புங்க. நாளைக்கு காலைல சீக்கிரம் வந்துருங்க!” எனப் பொறுமையாய் கூறினார்.
பூரணிக்கு என்ன பதிலுரைப்பது எனத் தெரியவில்லை. ஒரு வாரமாய் அலைந்து திரிந்தும் எங்கேயும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த வேலை மரிக்கொழுந்து இவருக்காக சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதை விட்டுவிட்டால் கண்டிப்பாக அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றக் கூடக் கையிருப்பில் பணமிருக்காது.
வேலை இல்லையென்றால் கண்டிப்பாக தன் பிறந்த வீட்டில் சென்று நிற்க வேண்டி வரும். அதை அறவே வெறுத்தார் பெண்மணி. கணவர் இறந்து மூன்று நாட்கள் கூட கடக்காத நிலையில் மகளை சுமையாக எண்ணிய பெற்றவர்களை நினைக்கும்போது மனம் ஆறவேயில்லை. அவர்கள் வெளியேறு என்று உரைப்பதற்கு முன்னே தனியாய் வந்துவிட்டார். இனி எதற்காகவும் அங்கே சென்று நிற்க விருப்பமில்லை.
“சரிங்க மா…” எனத் தலையை அசைத்துவிட்டு மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற பூரணிக்கு மகளை எங்கே அனுப்புவதென தெரியவில்லை.
ஆண்பிள்ளையாய் இருந்தால் கூட தனியே விட்டுவிட்டு சென்றிருப்பார். பெண்ணாய் போய்விட எங்கே சென்று யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியவில்லை. மரிக்கொழுந்து வீட்டில் அவரைத் தவிர யாருமில்லை. மகளைத் திருமணம் செய்து கொடுத்து இரண்டு தெரு தள்ளிதான் குடி வைத்திருந்தார். அங்கே உதவிக் கேட்க மனம் வரவில்லை. நாதியற்று நின்றுவிட்டோமே என அவரது தலையணை கண்ணீரில் நனைந்தது.
அவருக்கு அருகே படுத்திருந்த சந்தனா நிமிர்ந்து தாயைப் பார்த்தாள். ஒன்பது வயது முடிந்து பத்தைத் தொடக் காத்திருந்த சிறுமிக்கு என்னப் புரிந்ததோ? தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள், “ம்மா… நீ அழாதம்மா. நான் இனிமே அந்த பெரிய வீட்டுக்குள்ள வரமாட்டேன் மா. வெளிய தான் இருப்பேன். அப்பா ப்ராமிஸா மா!” என்றாள் தவறிழைத்த பாவத்துடன்.
மகளைப் பார்த்தப் பூரணி அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். மனப் பாரத்தை இறக்கி வைக்கக் கூட ஒரு தோள் இல்லையே என நெஞ்சம் விம்மித் துடித்தது.
“நான் தனியா இருந்துப்பேன் மா. அப்பாதான் சாமியா இருக்காரு இல்ல. அவர் என்னைப் பார்த்துப்பாரு மா. நீ வேலைக்குப் போய்ட்டு வா!” என்றாள் தந்தை புகைப்படத்தை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு.
தந்தை இறந்துவிட்டாரென புரிந்து கொள்ளவே அவளுக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. தங்கத் தட்டில் வைத்துத் தாங்கிய தகப்பன் திடீரென விட்டுச் சென்றதை அந்தப் பிஞ்சு மனது ஏற்றுக் கொள்ளவில்லை. அழுது அடம்பிடித்தாள்.
பூரணி மகளை சமாதானம் செய்ய முடியாது தானும் அழுது கரைய, தாயின் கண்ணீரைக் கண்டதும் சின்னவளுக்கு மெல்லப் புரியத் தொடங்கியது. தந்தை இனிமேல் வர மாட்டார் என்ற உண்மையை வலிக்க வலிக்க தாயும் மகளும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
“அதெல்லாம் வேணாம் குட்டி. உன்னை தனியா விட முடியாது. ஒனரம்மாகிட்டே நான் பேசிக்கிறேன்!” என மகளைத் தட்டித் தூங்க வைத்தவர், தானும் உறங்கிப் போனார்.
மறுநாள் மகளுடன் வந்த பூரணியைக் கண்டனமாகப் பார்த்த சதாம்பிகா, “உங்களுக்கு வேலையில்லை பூரணி. ஒருநாள் செஞ்ச வேலைக்கு சம்பளத்தை வாங்கீட்டுப் போகலாம் நீங்க!” என்றுவிட்டார்.
தொடரும்…