தன் அறையில் அமர்ந்து மருத்துவம் சம்பந்தமான புத்தகம் ஒன்றில் கவனத்தை செலுத்தியிருந்தாள் சந்தனா. மனம் கொஞ்சமும் அதில் லயிக்கவில்லை. காலையிலிருந்தே ஏதோ தவறாக நடக்கப் போவதாக உள்மனம் இரைச்சலாய் இரைந்து கொண்டிருக்க, அதைப் புறந்தள்ள முயன்றாலும் அவளால் முடியவில்லை.
தலைவேறு லேசாய் வலிப்பது போலிருந்தது. ஒரு தேநீரை வரவைத்து உதட்டுக்குக் கொடுத்தாள். மென்சூடாய் இருந்த தேநீர் தொண்டையில் இறங்கவும், கொஞ்சம் மந்தமான மூளையும் மனதும் தெளிந்ததை போல உணர்ந்தவளின் கைகள் அலைபேசியை எடுத்து மனோ படிக்கும் பள்ளியின் ஆசிரியர் இலக்கத்தைத் தட்டின.
அவன் என்ன செய்கிறான் எனக் கேட்டறிந்தாள். அவன் சமத்தாய் இருக்கிறான் என்பதை அறிந்ததும் இவளது உதடுகளில் நிம்மதி புன்னகை விரவின. முன்பு போல அல்லாது மனோவின் நடவடிக்கைகளில் அத்தனை மாற்றம். இப்போதெல்லாம் எதற்கும் அடம்பிடிப்பதில்லை. அமைதியாய் சொல்பவற்றைக் கேட்டுக் கொள்கிறான். எப்போதாவது தன்னிடம் செல்ல சிணுங்கல்கள் உண்டு என அவனது சிந்தனையில் மூழ்கியிருந்தவளின் முகம் கனிந்து போயிருந்தது.
அனுமதி இல்லாது பட்டென கதவு திறக்கவும் ஒரு நொடி வேகவேகமாய் இதயம் துடித்தடங்க, உள்ளே நுழைந்தவரைக் கண்டதும் அவளது உடல் தளர்ந்தது.
“வாங்க அக்கா... எப்படி இருக்கீங்க?” என உள்ளே நுழைந்தப் பெண்மணியைப் பார்த்ததும் வினவினாள். அவள் வசிக்கும் அடிக்குமாடி கட்டிடத்தில் சமையல் செய்கிறார் இவர். எப்போதும் பார்க்கும் போதும் பரஸ்பர புன்னகையை பரிமாறிவிட்டு இரண்டொரு வார்த்தைகள் அவளது நலத்தைப் பற்றி விசாரித்துவிட்டுதான் செல்வார். அந்த வகையில் அவர் இவளுக்கு வெகு பரிட்சயம்.
“நான் நல்லாக்கிறேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க?” முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தவாறு கேட்டார் அப்பெண்மணி.
“எனக்கென்ன, ரொம்ப நல்லா இருக்கேன் கா. ஹம்ம், நீங்க என்ன இந்தப் பக்கம்?” அவளது நெற்றி யோசனையாய் சுருங்கியது.
“அதும்மா…” என சில நொடிகள் தயங்கியவர், “போனமுறை காய்ச்சல்னு உங்ககிட்டே மாத்திரை வாங்கீட்டுப் போனேனில்ல மா. அதை என் மவ நாலஞ்சு மாத்திரையை ஒன்னா முழுங்கிட்டா மா. நான் பயந்து போய் இங்க கூட்டீட்டு வந்தேன். டாக்டர் பார்த்துட்டு ஒரு ஊசி போட்டாங்க. பயப்பட்ற மாதிரி ஒன்னும் இல்ல. இனிமே இப்படி பண்ணாதன்னு திட்டுனாங்க மா!” பேசிக் கொண்டே கடல் நீல வண்ணத்திலிருந்த மாத்திரையை அவள் முன்னே வைத்தார் பெண்மணி. அதை எடுத்துப் பார்த்தாள் சந்தனா.
அவள் காய்ச்சலுக்காக கொடுத்த பாராசிட்டமால் மாத்திரை அது.
“அக்கா… இந்த மாத்திரையை எல்லாம் ஒரே நேரத்துல போட்டா என்னாகும் கா?” ஆர்வமாய்க் கேட்ட சின்னவளைப் பார்த்துப் புன்னகைத்தவள், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம். அப்படி இருக்கும்போது எல்லா டேப்லெட்டையும் ஒரே நேரத்துல சாப்ட்டா என்னாகும்னு நீயே சொல்லு காவேரி!” என இவள் வினவியது நினைவில் நிழலாடியது. அவள் விளையாட்டிற்கு கேட்டிருப்பாள் என நினைத்து அதை கவனிக்காத தன் அறியாமையை எண்ணி தன்னை மனதிற்குள் நிந்தித்துக்கொண்டாள்.
“வெளியதான் உக்கார வச்சிருக்கேன் மா. நான் உள்ளாற வந்தா அவ எதுவும் பேச மாட்டா. நான் போய்ட்டு அவளை அனுப்பிவிட்றேன். என்னென்னு கேட்டு சொல்லுங்க மா. ஒத்தைப் புள்ளையைப் பெத்து கஷ்டப்பட்டு படிக்க வச்சா, இவ இப்படியொரு காரியம் பண்ணி வச்சிருக்கா. எனக்கு மனசே ஆறலை. அவ அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைத்தான் திட்டுவாரு…” கவலை அரித்திருந்தது அவரது குரலை.
“அக்கா… பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இருக்காது. சின்ன புள்ளை ஏதோ விளையாட்டுதனமா செஞ்சிருப்பா. நீங்க அவளை வர சொல்லுங்க. நான் என்னென்னு கேட்குறேன்!” என அவரை சமாதானம் செய்தாள்.
“சரிங்கம்மா… நான் அவளை அனுப்பிவிட்றேன்!” என்றவர் வெளியே சென்று மகளை உள்ளே அனுப்ப, முகமெல்லாம் அழுத தடயங்களோடு உள்ளே நுழைந்தாள் பதின்ம வயது சிறுமி. பள்ளி சீருடையைக் கூட அவள் மாற்றவில்லை. சந்தனாவின் முகத்தைக் கூடப் பார்க்காது வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
“காவேரி… என் முகத்தைப் பாரு முதல்ல!” அதட்டலாய் ஒலித்தக் குரலுக்கு செவி சாய்த்தவள், இவளது முகத்தைப் பார்த்தாள். இன்னுமின்னும் அவளுக்கு அழுகைப் பொங்கியது.
“எதுக்கெடுத்தாலும் அழக்கூடாது, அழுகை எதுக்கும் சொல்யூஷன் இல்லன்னு சொல்லியிருக்கேன் இல்ல? போய் ஃபேஸ் வாஷ் பண்ணீட்டு வா!” என அவளைப் பணித்தாள். தலையை அசைத்த காவேரி முகம் கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள்.
“இந்த தண்ணியைக் குடிச்சு ரிலாக்ஸாகு!” என எதிரிலிருப்பவளை ஆசுவாசம் செய்தவள், “இப்போ சொல்லு, எதுக்காக அத்தனை டேப்லெட்டை ஒரே நேரத்துல சாப்ட்ட. என்ன பிரச்சனை உனக்கு? எதுவா இருந்தாலும் அம்மா, அப்பாகிட்ட சொல்லணும் தானே? நீயா இப்படி முடிவெடுப்பீயா?” அக்கறையும் அதட்டலுமாய் இவளது குரல் ஒலித்தது. நன்றாய் படிக்கும் பெண், துறுதுறுவென இருப்பவள், இப்போது ஒடுங்கி அமர்ந்திருந்தவிதம் கண்டு மனது துணுக்குற்றது.
“பயமா இருக்கு கா…” தேம்பலுடன் தெளிவில்லாது குரல் இவளது செவியை அடைந்தது.
“என்ன பயம், யாரும் உன்னை மிரட்டுறாங்களா?” சந்தனா இருக்கையை முன்னகர்த்தி வினவ, தலையை அசைத்த காவேரி, “என் க்ளாஸ் பையன் சாம். நல்ல ப்ரெண்டா இருந்தோம். திடீர்னு ஒருநாள் லவ் பண்றேன்னு சொன்னான். அதுல இருந்து நான் அவன்கிட்ட பேசுறது இல்ல.”
“பட், அவன் என் பின்னாடியே வர்றது, நான் போகும் போது, வரும்போது அவன் பேரை ப்ரெண்ட்ஸைவிட்டு கத்த வைக்கிறதுன்னு ஒரு மாதிரி பண்ணிட்டே இருக்கான் கா. என்னால மிஸ்கிட்ட சொல்ல முடியலை. அவனோட அம்மாவும் எங்க ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. சொன்னா யாரும் நம்புவாங்களான்னு தெரியலை.”
“இப்போ லவ் பண்ணலைன்னா, தப்பு தப்பா உன்னைப் பத்தி ஸ்கூல் சுவத்துல எழுதி வைப்பேன்னு மிரட்டுறான் கா. அம்மா, அப்பாகிட்ட சொன்னா என்னைத்தான் திட்டுவாங்க. பசங்க கூடப் பேசக்கூடாதுன்னு சொல்லிதான் ஸ்கூல் அனுப்புவாங்க!” என அவள் தேம்பவும், பெரிதாய் ஏதோ வரப்போகிறது எனப் பயந்த சந்தனாவிடம் இப்போது சின்ன ஆசுவாசம்.
“உன் மேல தப்பு இருக்கோ காவேரி?” இவள் வினவ, “ஐயோ அக்கா… நான்… நான் எந்தத் தப்பும் பண்ணலையே கா!” என்றாள் படபடவென.
“ஹம்ம்… அப்படியா. பட் நீ அழுறதைப் பார்த்தா அப்படித் தெரியலையே. தப்பு செஞ்சவங்கதானே இப்படி அழுவாங்க!” சந்தனா கூறியதும் சின்னவளின் அழுகை மட்டுப்பட்டிருந்தது. முகத்தை இரண்டு கைகளாலும் அழுந்தத் துடைத்தாள். அந்த செய்கையில் இவளது உதடுகள் மலர்ந்தன.
“காவேரி, ஒன்னை மட்டும் நினைப்புல வச்சுக்கோ. நம்ம மேல தப்பு இல்லாத இடத்துல பயந்து அழணும்னோ இல்ல இந்த மாதிரி தப்பான முடிவெடுக்கணும்னோ நினைக்காத. எது வந்தாலும் அதை ஃபேஸ் பண்ற தைரியம் உன்கிட்ட இருக்கணும். இன்னைக்கு ஸ்கூல்ல ஒரு பையன் மிரட்டுறான்னு இப்படியொரு முடிவெடுத்திருக்க. நாளைக்கு காலேஜ்ல, நீ வேலை பார்க்குற இடத்துலன்னு நாலு பேரில்ல நாப்பது பேரை இந்த மாதிரி பார்க்குற சந்தர்ப்பம் வரலாம். அதுக்காக ஒவ்வொரு தடவையும் இது போல சூசைட் அட்டெண்ட் பண்ணுவீயா நீ? சாவுதான் எல்லாத்துக்கும் சொல்யூஷனா என்ன? கிடையாது டா!”
“நானும் உன் வயசைக் கடந்துதான் வந்திருக்கேன். என்னைக் கூட ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு பையன் இப்படி மிரட்டியிருக்கான்!” என இவள் கூறியதும், காவேரியின் முழுக்கவனமும் இவளிடம் குவிந்தது.
“நிஜமாவா கா? நீங்க எப்படி ரியாக்ட் பண்ணீங்க?” அவள் கேட்க,
“ஹம்ம்… நான் உன்னை மாதிரி அழலாம் இல்ல பா. ரொம்ப தைரியமான பொண்ணு. என் அம்மாகிட்ட போய் சொல்லிட்டேன். அம்மா அந்தப் பையன் கிட்ட பேசுனாங்க, ஸ்கூல் மிஸ்கிட்ட பேசி பிரச்சனையை சால்வ் பண்ணிட்டாங்க!” என்றாள்.
“ஓ…” என்ற காவேரியின் குரலில் சுருதி இறங்கியிருந்தது.
“என்னாச்சு காவேரி?”
“உங்கம்மா உங்களைத் திட்டலை. ஆனால், என் அம்மா என்னைத் திட்டுவாங்க…”
“தப்பு பண்ணாதானே திட்டுவாங்க. நீதான் எந்தத் தப்பும் பண்ணலையே!”
“ப்ம்ச்… அதான் சொன்னேனே கா. அம்மாவுக்கு பசங்களோட பேசுனா புடிக்காதுன்னு. இப்படியெதாவது பிரச்சனைன்னு நான் அவங்ககிட்ட சொன்னா, என்னைத்தான் திட்டுவாங்க…” என்றாள் ஏமாற்றமாய்.
“காவேரி, நீயா எல்லாத்தையும் ஏன் முடிவு பண்ற. ஒரு தடவை உங்க அம்மாகிட்டே பேசிப் பார்க்கலாம் இல்ல. கண்டிப்பா அவங்க உனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க!” என்றாள் உறுதியாய்.
“போங்க கா. உங்களுக்கு என்னத் தெரியும் என் அம்மாவைப் பத்தி. எனக்குத்தான் தெரியும்!” சின்னவள் முகத்தைத் திருப்ப, இவளது உதடுகளில் புன்னகை ஏறின.
“சரி, நீ சொல்றது சரியா இல்ல, நான் சொல்றது சரியான்னு பார்ப்போமா?” என இவள் சவால் விட, “ஹம்ம்…” என காவேரி தலையை அசைத்தாள்.
அவளின் அம்மாவை அழைத்து அமர வைத்த சந்தனா, “ஏன் கா, காவேரி மேல தப்பு இல்ல. அவளுக்கொரு பிரச்சனைன்னு வந்தா நீங்க அவளைத் திட்டுவீங்களா? இல்ல சப்போர்ட் பண்ணுவீங்களா?” எனக் கேட்டாள்.
“இதென்னம்மா கேள்வி, எம்புள்ளை எந்தத் தப்பும் பண்ணாம நான் எதுக்குத் திட்டப் போறேன். என் ராஜாத்தி அப்படி தப்பெல்லாம் பண்ண மாட்டா. சமத்துகுட்டி அவ!” என்றவர் மகளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவ, அந்த விரல்களைப் பார்த்த சந்தனாவிற்கு தாயின் நினைவு தொற்றிக்கொண்டது.
ஒருநாள் ஒருநொடியேனும் தாயின் பிம்பத்தை நினைவலைகளை யாரோ ஒருவரேனும் தட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதோ இன்று காவேரியின் தாயின் வடிவத்தில் நடந்திருந்தது.