மௌனம் – 9.2

“உன்னோட ஆன்சர் ரொம்ப ரோபோட்டிக்கா இருக்கு, ஜீவா. சீரியஸ்லி, என்னால இதை அக்செப்ட் பண்ண முடியாது. எவ்ரி ஒன் டிசர்வ் டூ பீ லவ்டு!” அவன் சலித்தான்.

“நீங்க என் ஒபினியனை ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல, தேவா சார். மோர் ஓவர், நீங்க படத்துல காதலை விதம் விதமாகக் காட்டுறவரு. அப்புறம் எப்படி காதல் இல்லைன்னு உங்களால சொல்ல முடியும்? உங்களோட ஒபீனியன் உங்களோட. என்னோடது என்னைப் பொறுத்தவரை சரி!” அவள் புன்னகைத்தாள்.

“யூ ஆர் இன்க்ரீடிபிள், ஜீவா. நான் உன்னை இப்படி யோசிக்கலை. எதுக்கெடுத்தாலும் அம்மாகிட்டே சொல்லணும், அம்மா திட்டுவாங்கன்ற மாதிரி பேசவும் வேற மாதிரி யோசிச்சு வச்சிருந்தேன்!” ஜீவா உண்மையை மறைக்காமல் ஒப்புக்கொண்டான்.

“உங்களைத் தெரிஞ்ச இத்தனை வருஷத்துல நம்ம அதிகமா பேசிக்கிட்டது இன்னைக்குத்தானே? பெத்த அம்மா அப்பாவாலே புள்ளைங்களை சரியா புரிஞ்சுக்க முடியாது, தேவா சார். அப்புறம் எப்படி நீங்க என்னை சரியா கெஸ் பண்ண முடியும்?”

“இன்ஃபேக்ட், இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் இந்த மாதிரி பேசுனது இல்ல. ஹம்ம்… யாரும் என்கிட்டே கேட்டது இல்லை. நான் அதிகமா யூஸ் பண்ண நாலு வார்த்தை ‘உள்ளே வாங்க சார், என்ன சாப்பிட்றீங்க? கேஷ் கவுண்டர் அங்க இருக்கு. சாம்பார் வேணுமா? வடை வைக்கவா?’ன்னு இதுவாத்தான் இருக்கும். மத்தபடி ஆற அமர உக்கார்ந்து பேச எனக்கு டைமும் இல்ல. என் வயசுல ஆளும் கூட இல்ல. நீங்க ஏதோ கேட்கப் போய் நான் ஏதோ உளறிட்டிருக்கேன். எதையும் சீரியஸா எடுத்துக்காதீங்க!” சங்கடத்துடன் முறுவலித்தாள். அப்படியே மனத்திற்குள் தனக்கு ஒரு குட்டும் வைத்துக் கொண்டாள். இவனிடம் ஏன் மடை திறந்த வெள்ளமென பேசுகிறோம் எனச் சங்கடம் வேறு வந்தது.

“நோ… நோ. நீ இன்னைக்குப் பேசவும்தான் உன்னைப் பத்தின அபிப்ராயம் எனக்கு மாறிடுச்சும்மா. இனிமே யாரையும் நான் ஒரு கன்க்ளூஷனுக்குள்ளே கொண்டு வர மாட்டேன்!” அவன் இயல்பாகக் கூற, ஜீவா புன்னகைத்தாள்.

“உங்களுக்கு எப்போ கல்யாணம், தேவா சார்? பொதுவா சினி இண்டஸ்ட்ரீல இருக்கவங்க ரொம்ப லேட்டாதான் மேரேஜ் பண்ணுவாங்க. உங்களுக்கு என்ன ஐடியா? எதிர்பார்ப்பு?” அவள் கேட்டதும், தேவா படக்கென எதுவுமில்லை எனத் தலையசைத்தான்.

சற்று முன்னர் அவள் பேசிய பேச்சில் இவன் எதிர்பார்ப்பைப் பகிர்ந்தால் ஏதாவது எதிர்வாதம் புரிவாள், இல்லை குழந்தைத்தனமாக இருக்குமோ என எண்ணி உதட்டிற்குப் பூட்டுப் போட்டான். ஜீவா சிரித்துவிட்டாள்.

“தேவா சார்… எல்லாருக்கும் தன்னோட துணை எப்படி வரணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது ரொம்ப இயல்பு. நான் என்னோட எக்ஸ்பெக்டேஷனைச் சொன்னேன். மத்தபடி உங்களோட பெர்சனல் லைஃப்ல நான் எப்பவும் ஒப்பீனியன் சொல்ல மாட்டேன். எனக்கு அது பிடிக்காது சார்!” அவள் முறுவலித்தாள். இருப்பினும் தேவா எதுவும் பேசவில்லை.

“அங்கங்க ஒழுங்கா படிக்காம வேலைக்குப் போகாம பெத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு இருக்கவனே எனக்கு ரதி மாதிரி பொண்ணு வேணும், குத்து விளக்கு மாதிரி வேணும்னு கேட்குறாங்க. நீங்க ஒரு ஆளா அப்பா இல்லாம தம்பி, தங்கச்சியைப் படிக்க வச்சு அவங்க லைஃபை செட்டில் பண்ணி, இவ்ளோ பெரிய பொஷிஷன்ல இருக்கீங்க. இன்னைக்கு தமிழ் நாட்டுல உங்களைத் தெரியாதவங்க ரொம்ப கம்மி பேர்தான். அப்படி இருக்கப்போ நீங்க எதிர்பார்த்தா அதுல தப்பில்லை, தேவா சார். யூ டிசர்வ்ட்!” அவள் சின்ன குரலில் சங்கடத்துடன் கூற, தேவா திரும்பி அவள் முகத்தைச் சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு, தலையை ஆட்டிப் புன்னகைத்துவிட்டு, பார்வையைச் சாலையில் பதித்தான்.

“அப்போ என்னைப் பத்தின உன்னோட ஒப்பீனியன் இதுதானா?” அவன் கேட்டதும், இவள் மெல்லத் தலையசைத்தாள்.

“பரவாயில்லை… உன்னோட குட் புக்லதான் இருக்கேன் போல” எனத் தோளைக் குலுக்கியவன், “எனக்கும் சில எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கும்மா!” என்றான் மெல்லிய குரலில். அவள் அவன் முகத்தைச் சின்ன சிரிப்புடன் பார்த்தாள். அந்த சிரிப்பு அவனை மேலும் பேசத் தூண்டிற்று.

“கண்டிப்பா பொண்ணு படிச்சிருக்கணும். வாழ்க்கைக்கு படிப்பு ரொம்ப முக்கியம். இன்னைக்கு நான் பெரிய டைரக்டரா இருக்கலாம். சப்போஸ் நாளைக்கே நான் எடுத்த மூவீஸ் வரிசையா ப்ளாப் ஆயிட்டா, ஃபீல் அவுட்னு ஈஸியா இந்த மீடியாக்காரங்க என்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போய்டுவாங்க. சோ, எனக்கு வரப்போற பொண்ணு நல்லா படிச்சு இன்டிபெண்டன்டா இருக்கணும். யாரையும் டிபன்ட் பண்ணியிருக்கக் கூடாது!” என்றான். அவள் சிரிப்பு மாறாது தலையசைத்துக் கேட்டாள்.

“தென், ஒரு டீசண்ட் ஃபேமிலி பேக்ரவுண்ட் இருக்கணும். என்னோட ஸ்டேட்டஸுக்கு சூட்டாகுற மாதிரியான ஃபேமிலிதான் வேணும். சிட்டி கேர்ளா இருக்கணும். அப்போதான் சினிமால என்னைப் பத்தி கண்டமேனிக்கு எவன் என்ன எழுதுனாலும் அதைக் கேர் பண்ணாம இருப்பாங்க. வில்லேஜ் கேர்ள் ரொம்ப சென்டி. ஆவூன்னா சண்டை, அழுகையெல்லாம் போடுவாங்க. சோ, நம்ம ஊர் பக்கம் எந்தப் பொண்ணையும் பார்க்கக் கூடாதுன்னு அம்மாட்ட சொல்லணும். என்னோட கேரியர் என் பெர்சனல் லைஃபை அஃபெக்ட் பண்ணக் கூடாது. ஐ நீட் அ பீஸ் புல் லைஃப்!” என்றான். ஜீவா மெல்லிய தலையசைப்புடன் கேட்டாள்.

“ஹம்ம்… பார்க்க அழகாகவும் இருக்கணும். நான் இப்போ பார்க்க நல்லாதானே இருக்கேன்?” அவளிடம் திரும்பிச் சந்தேகம் கேட்டான் தேவா.

சின்ன சிரிப்புடன் தலையசைத்து ஆமோதித்தவள், “ஆமா, தேவா சார்… நீங்க கெஸ்ட் ரோல் பண்ணீங்களே உங்களோட ரெண்டாவது படத்துல. அப்போ ஹீரோவுக்கு ஈக்வலா இருந்தீங்க. முன்னைவிட உங்களோட தோற்றம், லைஃப் ஸ்டைல் எல்லாமே மாறிடுச்சு. சோ, நீங்க எதிர்பார்க்குற மாதிரி அழகான பொண்ணு சீக்கிரமா கிடைக்கும். சந்தோஷமா கல்யாணம் பண்ணி புள்ளை குட்டின்னு செட்டிலாகிடுங்க. வயசு போனா வராதுல்ல?” மலர்ந்த முகத்துடன் வாழ்த்தினாள் ஜீவா.

“தேங்க்ஸ், ஜீவா. நெக்ஸ்ட் இயர்தான் மேரேஜ் ப்ளான். உன்னை இன்வைட் பண்ணுவேன். உன்னோட ப்யூச்சர் ஹஸ்பண்டோட வரணும் நீ!” அவன் அழைத்ததும்,

“இப்பவே வர்றேன்னு என்னால வாக்கு கொடுக்க முடியாதே, தேவா சார். அப்போ என்னோட சிட்சுவேஷன் என்னென்னுப் பார்க்கணும். வர முயற்சி பண்றேன்!” இவள் முறுவலுடன் பதிலளித்தாள்.

“ஹம்ம்… என்னோட மூவிஸ் எல்லாம் பார்த்திருக்கீயா, ஜீவா?” தேவா ஆர்வமாகக் கேட்டான்.

“ஆமா… எல்லாமே பார்த்துட்டேன். லாஸ்ட்டா வந்த படம் மட்டும் பாதிதான் பார்த்தேன். அது… நைட் ரொம்ப லேட்டாகிடும் எனக்கு வேலை முடிஞ்சு படுக்க. காலைல ஐஞ்சு மணிக்கு எழணும். இதுல எங்கேயும் கேப் கிடைக்காது, தேவா சார். சண்டே ஈவ்னிங்தான் ஃப்ரீயா உக்கார முடியும். ஆனால் அதுவும் சட்டுன்னு ஓடிப் போய்டும். அதனால தியேட்டர் போய்ப் பார்க்க சான்ஸ் கிடைக்கலை. கண்டிப்பா ஒரு நாள் தியேட்டர் போய்ப் பார்த்துட்டு என்னோட எக்ஸ்பீரியன்ஸை ஷேர் பண்றேன்…” அவள் சங்கடத்துடன் கூறினாள்.

“அதனால ஒன்னும் இல்ல, ஜீவா. நீ பார்த்ததே சந்தோஷம்தான். ஆமா, ஹோட்டலாம் வச்சிருந்தா ரொம்ப கஷ்டம்தானே? டெய்லி முழு நாளும் அங்கேயே இருக்கணும்ல?” அவன் கரிசனத்துடன் கேட்டான்.

“எல்லாமே கஷ்டம்தான், தேவா சார். முன்னாடி எல்லாம் நானும் அம்மாவும் தினக்கூலியா போவோம். அப்போ காசு ரொம்ப கம்மி. பட், காலைல போய்ட்டு சாயங்காலம் வந்துடலாம். இப்போ நம்ம ஹோட்டல். யாரோ எவரோன்னு இருக்க முடியாதே. வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கிறதா இருக்கு…”

“கல்யாணம் முடிஞ்சதும் புருஷன், புள்ளைன்னு வீட்லயே இருக்கணும் எனக்கு. வேலை பார்த்துப் பார்த்து உடம்பே அலண்டு போச்சு. தொழிலையும் விட முடியாது. இப்போதான் கடனில்லாம கொஞ்சமா சேவிங்ஸ் போட ஸ்டார்ட் பண்ணிருக்கோம். எனக்கு அடுத்து ரெண்டு பேர் வேற இருக்காங்க. பொறுப்பான ஆளுங்களை வேலைக்கு எடுத்து ட்ரெயின் பண்ணணும்” பெருமூச்சுவிட்டாள் ஜீவா.

“நீ சொல்றதும் சரிதான். அப்போ ஆப்ஃடர் மேரேஜ் ஹவுஸ் வொய்ஃபா எந்த வேலையும் செய்யாம ஜாலியா இருக்கப் போற? கொடுத்து வச்சவங்க பொண்ணுங்க!” அவன் மெல்லிய குரலில் முணுமுணுக்க, அவனை கேலியாகப் பார்த்தாள் ஜீவா.

“ரொம்ப சரியா சொன்னீங்க, தேவா சார். காலைல எழுந்து வாசல் கூட்டி, தண்ணி தெளிச்சுக் கோலம் போடத் தேவையில்ல. அவதி அவதியா காபி போட்டு புள்ளையும் புருஷனையும் எழுப்ப தேவையில்ல. காலைல என்ன டிபன் செய்ய, மதியத்துக்கு டேஸ்டா செய்யணும், சூடு ஆறிப் போச்சுன்னு ரெண்டு பேரும் சாப்பிட மாட்டாங்களேன்னு விதவிதமா சமைக்கணும்னு அவசியம் இல்ல. புள்ளையைக் குளிப்பாட்டி ஸ்கூல் வேனை டைமுக்குப் பிடிக்க அவசியம் இல்ல. மாமியார் நொய் நொய்னு ஏதாவது சொன்னாலும் சிரிச்சுட்டே வீட்டு வேலையைப் பார்க்க என்ன அவசியம் இருக்கு? ஈவ்னிங் ஸ்னாக்ஸ், பையனோட ஹோம் வொர்க், நைட் டிபன், இடையில துணி துவைச்சு மடிச்சு வைக்கிறது, வீட்டை சுத்தம் பண்றது, பாத்ரூம் க்ளீன் பண்றது, பாத்திரம் விளக்குறது, மார்க்கெட் போறதுன்னு எந்த வேலையும் இல்லாம வீட்ல நிம்மதியா ஹவுஸ் வொய்ஃபா இருக்கலாம்ல, தேவா சார்?” என அவள் நக்கலாகக் கேட்க, அவன் சில நொடிகள் வாயடைத்துப் போனான். பின்னர் கையைச் சரணடைவது போலத் தூக்கினான்.

“சாரி, ஜீவா… ஐ டிடின்ட் மீன் இட்!” என்றான் சிரிப்புடன்.

“பரவாயில்லை, தேவா சார். உங்க மேல தப்பில்ல. சொசைட்டியைச் சொல்லணும். ஹவுஸ் வொய்ஃப்னாலே வீட்ல சும்மா இருப்பாங்க, ஷாப்பிங், ப்யூட்டி பார்லர் போறது, பணத்தை வேஸ்டா செலவழிப்பாங்கன்னு பொதுவா ஒரு கருத்தைக் காமெடின்ற பேர்ல சொல்லி எல்லார் மனசுலயும் பதிய வச்சுட்டாங்க…”

“ஆக்சுவலி, வீட்ல இருக்க வேலையைப் பார்க்கவே பொம்பளைங்களுக்கு நேரம் பத்தாது. இதுல எங்க சார் பார்லர் போறது? எண்பது சதவீதம் பெண்கள் பார்லர் பக்கம் எட்டிக்கூடப் பார்க்குறதில்ல. மீதி இருக்கிற இருபது சதவீத எலைட் பீப்பிள்தான் அவங்க கண்ணுக்குத் தெரியுறாங்க போல!” அவள் கடுப்பை மறைத்த குரலில் பேச, தேவா அன்றைக்கு இரண்டாவது முறையாக அவளை அதிசயித்துப் பார்த்தான். அவன் எண்ணியிருந்த ஜீவா ஒரு பூஞ்சை, வீட்டுப் பூச்சி. ஆனால் இவள் வேறொரு பரிமாணத்தில் நிற்கிறாள்.

“ஓகே, கூல் ஜீவா!” என அவன் கூறவும், இவள் எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள். தேவா ஒரு ஏடிஎம் முன்பு மகிழுந்தை நிறுத்திவிட்டுச் சென்று பணம் எடுத்து வந்தான். அவர்கள் தாம்பரத்திற்குள் நுழைந்து ஐந்து நிமிடமாகியிருந்தது. பேசிக்கொண்டே வந்ததில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.

“சாரி, ஜீவா… பைவ் தௌசண்ட் தான் வித்ட்ரா பண்ண முடிஞ்சது. ஏடிஎம் இஷ்யூ. மீதம் டூ தௌசண்டை அப்புறம் தர்றேன்!” என்றான் ஐந்தாயிரத்தை அவளிடம் நீட்டியபடியே.

“பரவாயில்லை, தேவா சார். அந்த ரெண்டாயிரத்தை நீங்களே வச்சுக்கோங்க. ரெண்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி ஏசி கார்ல என்னை வீட்டு வாசல்ல இறக்கி விடுறீங்க. நான் டாக்ஸில வந்தா இதை விட அதிகமா கேட்பாங்க!” அவள் இயல்பாகத் தன்னைக் காண்பிக்க முயன்றபடி கூற, பட்டென அவளைத் திரும்பிப் பார்த்த தேவாவிடம் உஷ்ணப் பார்வை.

“நான் ஒன்னும் உனக்கு ட்ரைவர் இல்ல, ஜீவா. தெரிஞ்ச பொண்ணுன்னு ஹெல்ப் பண்ணேன். மத்தபடி என்னோட பொசிஷனுக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல. மைண்ட் இட்!” அவன் குரலில் காரம் தெறித்தது.

“நான் அப்படியெல்லாம் நினைச்சுச் சொல்லலை, தேவா சார். பைபாஸ்ல கட் பண்ணிப் போகாம எனக்காக இவ்ளோ தூரம் வர்றீங்க. உங்க கார் என்ன தண்ணிலயா ஓடுது? பெட்ரோல் தானே? ஒவ்வொரு ரூபாயும் உங்களோட உழைப்பு சார். நான் அதை இலவசமாக யூஸ் பண்ண விரும்பலை. அதனாலதான் அந்தக் காசைத் திருப்பித் தர வேணாம்னு சொன்னேன்!” அவன் கோபத்திற்கு இவள் வெகு நிதானமாகப் பதில் கொடுத்தாள். தேவாவிடம் சிடுசிடுப்பு குறையவில்லை.

“சாரி… கேட்க மறந்துட்டேன், தேவா சார். உங்க தம்பி, அம்மாலாம் எங்க? அவங்களை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்களா?” சற்று முன்னர் பேசியதை மறந்தவளாக ஜீவா கேட்க, அவன் முறைத்துவிட்டு பதிலளிக்காமல் முகத்தைத் திருப்பினான். இவள் சில நொடிகள் அவனைப் பார்த்தாள். அதற்குள்ளேயே வீடு வந்திருந்தது.

“தேங்க் யூ சோ மச், தேவா சார். நானா ரெண்டு பஸ் மாறி வந்திருந்தா இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க முடியாது. அண்ட் சாரி, வீட்டுக்குள்ளே கூப்பிடலைன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களை நான் கூப்பிட்டு அதை யாரும் வீடியோ எடுத்து போட்டுட்டா உங்களுக்குத்தான் பிரச்சனை, எங்களுக்கும் அது கஷ்டம்!” மகிழுந்து கண்ணாடி வழியே குனிந்து அவள் பேச,

“வெல்… நீ சொல்றதும் சரிதான், ஜீவா. எனக்குன்னு ஒரு ரெபுடேஷன் இருக்கு, இமேஜ் இருக்கே. அது டேமேஜாகிடக் கூடாது. நான் கிளம்புறேன்!” என அவன் இயல்பாகத் தோளைக் குலுக்கிவிட்டு சடாரென்று அகன்றான்.

ஜீவா வீட்டிற்குள்ளே நுழைந்தாள். அவள் வந்ததும் கிரிஜா பணத்தைப் பற்றி விசாரிப்பார் என எண்ண, அவரோ இவள் சோர்வாக இருப்பாள் என எண்ணி உணவுண்ண வைத்துப் படுக்கச் சொல்லிவிட்டார். ஜீவாவிற்கும் உடல் அசதியில் ஓய்வெடுக்கத்தான் தோன்றிற்று.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top