“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்”என்று மற்ற இரண்டுப் பெண்களிடமும் அறிவித்தாள் மதுபாலா.
அதைக் கேட்டதும்,”என்ன விஷயம்?”என்று அவளிடம் வினவினார்கள் சுதாவும், பிரேமாவும்.
“ஆஃபீஸில் எங்கிட்ட சில வடிவமைப்புகளை வரைஞ்சிக் கொடுக்கிற வேலைக் கொடுத்து இருந்தாங்க. அதில் நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன்”என்றவளைக் குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்து,
“நீ விஷயம் என்னன்னுத் தெளிவாகச் சொல்லுடி? என்னத் தப்புப் பண்ணின?”என்றிருந்தாள் பிரேமா.
“ம்ஹ்ம். சொல்றேன்”எனும் போதே அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகள் வந்து விடவும் அவற்றை உண்ணத் தொடங்கினார்கள் மூவரும்.
“இப்போதாவது விஷயத்தைச் சொல்லுக்கா”எனத் தமக்கையை அவசரப்படுத்தினாள் சுதா.
உடனே அவளிடமும், தனது தோழியிடமும், தான் செய்த தவறைப் பற்றித் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து முடித்திருந்தாள் மதுபாலா.
அதைக் கேட்டு விட்டு அவள் மீது பரிதாபம் அடைந்தனர் மற்ற இருவரும்.
“நீ இதைப் பத்தி எங்கிட்டே முன்னாடியே கலந்து பேசிட்டுச் செஞ்சி இருக்கலாம் தானே டி? நான் இதுக்கு உனக்கு ஐடியா சொல்லி இருப்பேன்ல?”எனத் தோழியிடம் குறைபட்டுக் கொண்டாள் பிரேமா.
“சாரி டி. நான் இந்த வேலையில் எதுவாக இருந்தாலும் என்னோட முயற்சியில் மேலே வரனும்னுச் சொல்லி இருக்கேன் தானே? அதனால் தான் உங்கிட்ட இதைப் பத்திப் பேசவே இல்லை!”என அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் மதுபாலா.
“சரி. நான் உனக்கு இப்போ ஒரு அறிவுரை சொல்லவா?”என்றதுமே,
“சொல்லு டி”என்றவளிடம்,
“பொதுவாக நம்ம ஆஃபீஸில் இது வரைக்கும் யாருமே இந்த மாதிரியான செயலைச் செஞ்சதே இல்லை! அப்படி செய்றதுக்கும் யாருக்கும் அனுமதியும் கிடையாது! ஏன்னா, உனக்கே தெரியும் நம்ம முதலாளி பெரிய, பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமில்லாமல் சினிமா ஹீரோக்களுக்கும் டிரெஸ் டிசைன் செஞ்சிக் கொடுப்பவர்! அப்படி இருக்கும் போது அவருக்கும் ஒரு பிரைவசி இருக்கும் தானே? அதே மாதிரி, அவரோட உருவத்தை நாம அவ்வளவு எளிதாக உபயோகிக்க முடியாது! அதுவும் இல்லாமல் நீ அவர்கிட்ட அனுமதிக் கேட்காமல் இந்த விஷயத்தைப் பண்ணி இருக்கிறது ரொம்பவே தப்பான விஷயம் தானே?”என்றவளின் வார்த்தைகளில் இருந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு,
“தப்புத் தான் டி. அதனால் தான் எம். டி சார் சொன்னவுடனேயே அந்த டிசைனோட சாஃப்ட் காப்பியை டெலீட் பண்ணிட்டேன்! அதே மாதிரி நான் வரைஞ்சதையும் அவர்கிட்ட தந்துட்டேன். ஆனால்…”என்றவளைக் கூர்மையாகப் பார்த்து,
“ஆனால் என்னக்கா?”என்றிருந்தாள் சுதா.
“அவரோட உருவத்தை நான் யூஸ் பண்ணிக்கலாமான்னு அவர்கிட்டயே வேண்டுகோள் விடுத்தேன்”என்றதுமே,
அவளை வியப்புடன் நோக்கி,”என்னடி சொல்ற? அவர்கிட்டேயே இதைக் கேட்டுட்டியா?”என்றாள் பிரேமா.
“ஆமாம். அவர் தானே என் பர்மிஷன் இல்லாமல் இதைப் பண்ணாதீங்கன்னுச் சொன்னாரு? அப்போ இதைப் பண்ணனும்னா அவரோட பர்மிஷன் வேண்டும் தானே? அதனால் தான் அவர்கிட்டேயே நேரடியாக கேட்டேன்!”எனப் பதிலளித்தாள் மதுபாலா.
அதைக் கேட்டதுமே திகைத்துப் போய்த் தங்களது வாயிலிருந்த உணவை விழுங்கி விட்டுத் தாங்கள் இருவரும் தங்களை ஒருவரையொருவர் பார்த்து விட்டு மறு கணமே கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினார்கள் அவளது தங்கையும், தோழியும்.
உடனே அவர்களை முறைத்து,”எதுக்குடி இப்போ சிரிக்கிறீங்க?”என்றவளிடம்,
“நீ ஏன் டி இப்படி இருக்கிற?”என்று பதில் கேள்வியைக் கேட்டிருந்தாள் பிரேமா.
“ஏன் டி? நான் அவர்கிட்ட அப்படி கேட்டது தப்பா?”எனப் பாவமாக வினவினாள் மதுபாலா.
“அக்கா! நீ ஏற்கனவே பண்ணதை தான் அவர் பிடிக்காமல் உன்னைக் கண்டிச்சு அனுப்பி வச்சார். அதுக்கு அப்பறமும் நீ எப்படி அவர்கிட்ட இந்த அளவுக்குத் தைரியமாக கேட்டு வச்சிருக்கிற?”என்று தமக்கையிடம் கேட்டு விட்டுத் தனது தட்டிலிருந்த பிரியாணியை ஒரு வாய்ச் சுவைத்தாள் சுதா.
“நீ சொல்வதைப் பார்த்தால் நான் அவரை இன்னும் கோபப்படுத்திட்டேனா?”என்றாள் சோகமாக.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டி. ஆனால் உனக்கு ஐடி கார்ட்டும், சம்பளத்தோட விவரமும் தெரியிற வரைக்கும் நீ அங்கே கொஞ்சம் அடக்கி வாசி!”என்று அவளுக்கு அறிவுரை வழங்கினாள் பிரேமா.
அதற்குச்,“சரிடி. நீ சொன்ன மாதிரியே நான் நடந்துக்கிறேன்”என்றுரைத்து விட்டாள் மதுபாலா.
உடனே,”ஹப்பாடா! ஒருவழியாக இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுக் கிடைச்சிருச்சுல்ல? இப்போ எதைப் பத்தியும் கவலைப்படாமல் பிரியாணியைச் சாப்பிடுக்கா”என அவளுக்கு அறிவுறுத்தினாள் சுதா.
அதைச் சமர்த்தாக கேட்டுக் கொண்டு உணவை உண்ணுவதில் கவனத்தைச் செலுத்தினாள்.
சில நிமிடங்கள் கழிந்ததும் தங்களது மதிய உணவை முடித்து விட்டு அதற்கானப் பணத்தை அந்த உணவகத்தில் செலுத்திய பின்னர் வீட்டிற்குக் கிளம்பத் தயாராகினர் மூவரும்.
“நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன் மது! சுதா”என்று அக்கா, தங்கை இருவரிடமும் மொழிந்தாள் பிரேமா.
“ம்ஹ்ம். சரி டி. நீ பார்த்துப் போயிட்டு வா”என்று மதுபாலாவும்,
“ஓகேக்கா. இன்னொரு நாள் பார்க்கலாம்”என்று சுதாவும் அவளிடம் தெரிவிக்க,
அதற்குக்,”நாமக் கண்டிப்பாக கூடிய சீக்கிரமே திரும்ப ஒரு ட்ரீட்டுக்கு இதே ஹோட்டலுக்கு வருவோம் தானே? அப்போ மூனு பேரும் கண்டிப்பாக மீட் பண்ணலாம்மா”எனக் கூறிக் கண்ணடித்தாள் பிரேமா.
அதைப் புரிந்து கொண்டு,”ஓஹோ! அப்படியா விஷயம்? அதுக்கென்ன நானும் உங்களுக்கு ட்ரீட் தந்துட்டால் போச்சு”என்று கூறிப் புன்னகைத்தாள் மதுபாலா.
“நான் சும்மா தான் சொன்னேன். அதெல்லாம் வேண்டாம். பை!”என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுத் தனது இருசக்கர வாகனத்தில் ஏறிப் பயணமானாள் பிரேமா.
உடனே தாங்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டே, மெல்ல நடை பயின்று தங்களது இல்லத்தை அடைந்து விட்டிருந்தார்கள் மதுபாலா மற்றும் சுதா.
உள்ளே சென்றதுமே உடைகளை மாற்றி விட்டு,
“இன்னைக்கு ரொம்ப நிறைய, நிறைவாகச் சாப்பிட்டாச்சுல்ல?”எனத் தங்களுக்குள் மகிழ்வாகப் பேசிக் கொண்டனர் அவ்விருவரும்.
“உங்கிட்ட எவ்வளவு பணம் இன்னும் இருக்குடி. சாப்பாட்டுக்கான முழுச் செலவையும் நீ தானே பார்த்த? அதான் கேட்கிறேன்”என்றத் தமக்கையிடம்,
“எங்கிட்டே என்னோட செலவுக்குப் பணம் இருக்கு க்கா”என்றுரைத்து விட்டுத், தற்போது தன்னிடம் மீதமிருக்கும் பணத்தின் மதிப்பை அவளுக்குத் தெரிவித்தாள் சுதா.
“அப்படின்னா சரி”எனக் கூறி விட்டாள் மதுபாலா.
மறுநாள் தத்தமது வேலைகளுக்குக் கிளம்பிச் செல்ல வேண்டும் என்பதால் இரவு உணவை இலகுவாகச் சமைத்து உண்டு விட்டு விரைவாகவே உறக்கத்தை தழுவினர் அவர்கள் இருவரும்.
அதேபோல் தனது தனிமையை முழுவதுமாக ஆக்கிரமிப்புச் செய்திருந்த மதுபாலாவை அடுத்த நாள் சந்திக்கப் போகும் உற்சாகத்துடன் தானும் நித்திரையில் ஆழ்ந்து போனான் புகழேந்தி.
அடுத்த நாள் வழக்கமான நேரத்தில் எழுந்து தயாராகி விட்டு,“நானும், பிரேமா அக்காவும் நேத்து சொன்னது உங்கிட்ட சொன்னது ஞாபகம் இருக்குல்ல?”என்று தன்னிடம் வினவிய தங்கையிடம்,
“நல்லா ஞாபகம் இருக்கு டி! நீயும் நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோ”என்று சொல்லி விட்டு அவளுடன் சேர்ந்து வீட்டிலிருந்து வெளியேறினாள் மதுபாலா.
தான் தினமும் பயணம் செய்யும் பேருந்து வந்து விட்டிருப்பதை அறிந்ததும்,
“அக்கா! பஸ் வந்துடுச்சு. நான் போயிட்டு வர்றேன். பை”எனத் தமக்கையிடம் விடைபெற்று விட்டு அதில் ஏறிக் கொண்டாள் சுதா.
தானும் அவளுக்குக் கையசைத்து விட்டுத் தன்னுடைய அலுவலகத்தை அடைந்து இருந்தாள் மதுபாலா.
அப்போது எதிர்பாராத விதமாக அவளது முதலாளியானப் புகழேந்தியும் அவளுக்குக் காட்சி அளித்து விடவும்,
உடனே தனது தோழியின் அறிவுரை நினைவுக்கு வந்ததால்,
தன்னுடைய முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டுக்,“குட் மார்னிங் சார்”என அவனுக்குக் காலை வணக்கத்தை வைத்தாள் மதுபாலா.
அதற்கு அவனோ அவளை ஆராய்ச்சியாகப் பார்த்து விட்டு,
“குட் மார்னிங் மிஸ். மதுபாலா!”என்றவனின் இதழ்களில் புன்னகைத் தவழ்ந்ததைக் கண்டுப் பெண்ணவளுக்கு மயக்கம் வராத குறையாகிப் போய் விட்டிருந்தது!
அதனாலேயே அவனுக்குத் தானும் பதில் புன்னகை உதிர்க்காமல் அப்படியே உறைந்து போய் நின்றாள் மதுபாலா.
அதில் அவளைக் குறும்பாக நோக்கி,”இன்னும் எவ்வளவு நேரமாக எனக்கு வழி விடாமல் இப்படியே நிற்கிறதா உத்தேசம்?”என்றிருந்தான் புகழேந்தி.
அந்தக் கேள்வியில் அவளுக்குச் சுற்றுப்புறம் உறைக்க, உடனே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,
“சாரி சார்”என அவனிடம் மன்னிப்புக் கோரி விட்டு அங்கேயிருந்து தன்னுடைய வழிகாட்டிப் பெண்ணான வினோதினியிடம் தனது வருகையை அறிவித்து விட்டுத் தன் அறைக்குள் புகுந்து அன்றைய வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள் மதுபாலா.
ஆனால் தன்னுடைய அறைக்குள் வந்து,”மிஸ்டர். வெற்றி. மிஸ். மதுபாலாவோட ஐடி கார்ட் தயாராகிடுச்சா?”என்று தன் காரியதரிசியிடம் விசாரித்தான் புகழேந்தி.
“இன்னைக்குச் சாயந்தரம் தயாராகிடும் சார். நீங்க ஓகே சொன்னால் இன்னைக்கே அவங்களுக்கு அதைக் கொடுத்துடலாம்”என்று அவனுக்குப் பதிலளித்தான் வெற்றிச்செல்வன்.
“இன்னைக்குச் சாயந்தரம் வேண்டாம். அவங்க கிட்ட இதைப் பத்தி இன்ஃபார்ம் பண்ணுங்க. நாளைக்குக் காலையில் கொடுத்திடலாம்”என அவனுக்கு அறிவுறுத்தவும்,
“ஓகே சார். நான் அவங்க கிட்ட இப்போவே போய் இதைச் சொல்லிட்டு வந்துடவா?”என்றவனிடம்,
“ம்ஹ்ம். முதல்ல அதைப் பண்ணிட்டு வந்து மத்த வேலைகளைப் பாருங்க”என்றுரைத்து அவனை அனுப்பி வைத்தான் புகழேந்தி.
உடனே அந்த அறையை விட்டு வெளியேறி, மதுபாலாவைத் தான் தேடிச் சென்று,
“உங்களோட ஐடி கார்ட் இன்னைக்குச் சாயந்தரம் தயாராகிடும்”என அவனிடம் பகிர்ந்து கொண்டான் வெற்றிச்செல்வன்.
அதைக் கேட்டதுமே தன்னுடைய விழிகளில் மகிழ்ச்சி மின்ன,
“அப்படின்னா இன்னைக்குச் சாயந்தரமே எனக்கு அதைக் கொடுப்பீங்களா சார்?”என்று வினவினாள் மதுபாலா.
“இல்ல மேம். அதை நாளைக்குக் காலையில் உங்களுக்குக் கொடுக்கப் போறதாக எம். டி சார் உங்ககிட்ட இன்ஃபார்ம் செய்யச் சொல்லி அனுப்பினார்!”என்றவனிடம்,
“ஓஹ்! அப்படியா சார்? தாங்க்யூ”எனத் தானும் அவனிடம் கூறி அனுப்பி வைத்து விட,
அதை அப்படியே தனது முதலாளியிடம் தெரிவித்து விட்டான் வெற்றிச்செல்வன்.
“ஓகே சார். எனக்கு இன்னைக்கு ஒரு ஹீரோ சார் கூட மீட்டிங் இருக்கு! அதனால் நான் போயிட்டு வர்றதுக்கு ஈவ்னிங் ஆகிடும்! அங்கேயே லன்ச் முடிச்சிட்டு வந்துடுவேன்! அது வரைக்கும் நீங்க இங்கே பார்த்துக்கோங்க”என்றவனுக்கு,
“ஷூயர் சார். ஆல் தி பெஸ்ட்”என அவனுக்கு வாழ்த்துக் கூறவும்,
“தாங்க்ஸ் வெற்றி”என்று அவனிடம் நன்றிக் கூறி விட்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சென்று விட்டிருந்தான் புகழேந்தி.
அவன் அங்கிருந்து புறப்பட்டதை உறுதி செய்து கொண்டுத் தன்னை மதிய உணவு இடைவேளையின் போது தன்னைச் சிற்றுண்டிச் சாலையில் வந்து சந்திக்குமாறு பிரேமாவிற்குப் புலனத்தில் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் மதுபாலா.
- தொடரும்