மௌனம் – 9.1

மெல்ல இருள் படரத் தொடங்கியிருக்க, தேவா மிதமான வேகத்தில் மகிழுந்தை இயக்கினான். அவனுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஜீவா வெளியே சாலையைப் பார்த்திருந்தாள். ஆனால் சிந்தனை இங்கில்லை. வீட்டிற்குச் சென்றதும் கிரிஜா, சுப்பையா பணம் கொடுத்துவிட்டாரா என்றுதான் முதலில் கேட்பார். அவர் தரவில்லை என்று தெரிந்தால் வசவு பெற நேருமே என மனதோரம் கவலை அரித்தது.

அவளைத் திரும்பிப் பார்த்த தேவா, தொண்டையைச் செருமிவிட்டு, “உன் கைல ரிங் இல்லையே ஜீவா?” எனக் கேட்டான். அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

“இல்ல… உன் எங்கேஜ்மெண்ட் ரிங்னு சொன்ன. இப்போ கழட்டி வச்சுட்டீயா?” என ஒற்றை விரலை ஆட்டிக் காண்பித்தான்.

“மோதிரம் லூசா இருந்துச்சு சார். அன்னைக்கு மாதிரி எங்கேயும் கழண்டு விழுந்தா என்ன பண்றதுன்னு பத்திரமா வச்சுட்டேன். நூல் சுத்திதான் போடணும்!” அவள் யோசித்து பதிலளித்தாள்.

“குட்… குட். உன்னோட பியான்சி என்ன பண்றாரு? எங்க இருக்காரு?” அவன் அவளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிக் கேட்டான்.

“அவர் துபாய்ல இருக்காரு. இரண்டு வருஷம் காண்ட்ராக்ட். இந்த வருஷத்தோட முடிஞ்சதும் இங்கேயே வந்து வேலை பார்க்குற ஐடியா. சோ, ரெண்டு வீட்டு பெரியவங்களை வச்சு மோதிரம் மட்டும் மாத்திக்கிட்டோம், தேவா சார்…” இவளும் சின்ன குரலில் பதிலிறுத்தாள்.

“ஹம்ம்… அப்போ அவர் பெரிய இடம் போல?” போலி ஆச்சரியத்துடன் கேட்டான். இவளிடம் சின்ன புன்னகை.

“அப்படியெல்லாம் இல்ல சார். எங்களை மாதிரியே அவங்களும் மிடில் க்ளாஸ்தான். அவருக்கு அப்பா இல்ல. அம்மா, தங்கச்சி மட்டும்தான். குடும்பத்தைப் பார்த்துக்கிறதுக்காக துபாய் போனாரு. போய் நாலஞ்சு வருஷம் ஆச்சு. இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்காங்களாம். சோ, திரும்பி வந்து இங்கேயே வேலை பார்க்குறேன்னு சொன்னாரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். எனக்கும் குடும்பத்தைவிட்டு எங்கேயும் போக இஷ்டம் இல்ல!” அவள் மெதுவாக விளக்கினாள்.

“எங்கேஜ்மெண்ட் போட்டோ இருந்தா கொடு, ஜீவா. நான் உன் பியான்சியைப் பார்க்குறேன்…” அவன் கையை நீட்டினான்.

“நீங்க நினைக்கிற அளவுக்கு பெருசா எல்லாம் நிச்சயம் வைக்கலை, தேவா சார். சும்மா வீட்டுலதான் பண்ணோம். ஃபோன்லதான் போட்டோ எடுத்தோம்!” அவள் தயங்கினாள்.

“பரவாயில்லை… ஜஸ்ட் அவரை நான் பார்க்கலாம்னு கேட்டேன்மா!” அவன் விடாமல் கேட்க, ஜீவா அலைபேசியை எடுத்து ஒரு புகைப்படத்தைக் காண்பித்தாள். அவளருகே ஒரு . ஏறியிருக்க, அது இவன் கண்ணை உறுத்தியது. மற்றபடி அவன் நன்றாக இருந்தான். ஜீவா தலையை நிமிர்த்தாமல் குனிந்து நின்றாள். மற்றொரு புகைப்படத்தில் அளவாகச் சிரித்தாள். அந்த சிரிப்பையே இவன் சில நொடிகள் பார்த்திருந்தான்.

“கிராமத்து ஆள் மாதிரி தெரியுறாரு? உங்க பேர் நல்லாருக்கு!” வாய் வார்த்தையாகப் பாராட்டினான்.

“தேங்க் யூ சார். நம்ம ஊர்தான் அவரும். இப்போ கிண்டியில இருக்காங்க…” தேவா அவனிடமிருந்த அலைபேசியை வாங்கிப் பையில் வைத்தபடி பதிலளித்தாள்.

“ஒரே ஊரா… அப்போ லவ் கம் அரேஞ்சா?” அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு சாலையைக் கவனித்தான்.

“இல்ல, இல்ல… அம்மா பார்த்து யாரைச் சொன்னாலும் எனக்கு ஓகே தான்னு அவங்ககிட்டே பொறுப்பைக் கொடுத்துட்டேன். எனக்கெல்லாம் லவ் வராது, தேவா சார்!” அவள் கேலியாக உரைத்தாள்.

“ஏன்… உனக்கு லவ் வராது?” அவன் புரியாது கேட்டான்.

“ஒரு விஷயத்துல நம்பிக்கை இருந்தாதானே நம்ம அதை செய்வோம்? எனக்குத்தான் காதல்ல எந்த நம்பிக்கையும் கிடையாதே. அப்புறம் எப்படி ஒருத்தரை லவ் பண்ணுவேன்?” என உதட்டை வளைத்தாள்.

“நிஜமாவா? உனக்கு லவ்ல நம்பிக்கை இல்லையா, ஜீவா? இப்போலாம் யாருமே அரேஞ்ச் மேரேஜ் பண்றதே இல்ல. லவ்தான் மோஸ்ட்லி. நீதான் இப்படி அதிசயமா பேசுறம்மா. ஐ’யம் ரியலி சர்ப்ரைஸ்ட்!” உண்மையான ஆச்சரியம் அவன் குரலில்.

“அது அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம் சார். எனக்குப் பெருசா ஆம்பளைங்க மேல அபிப்ராயம் இல்ல. என் அப்பா குடிச்சு குடிச்சு குடும்பத்தைப் பார்க்காம அவர் இஷ்டத்துக்கு வாழ்ந்தாரு. பொறுப்பெல்லாம் அம்மா தலையிலும், என் மேலயும்தான் விழுந்தது. சோ, எல்லா ஆம்பிளையும் இப்படித்தான்னு ஆழமா பதிஞ்சு போச்சு. இது என்னோட கருத்து. மத்தபடி குடும்பத்தைப் பொறுப்பா பார்த்துக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க!”

“நான் அம்மாகிட்ட சொன்ன ஒரே கண்டிஷன். குடிக்கக் கூடாது, கொஞ்சமாச்சும் குடும்பத்து மேல பாசம் இருக்கணும். பொறுப்பா பார்த்துக்கணும்னுதான். இவருக்கு நான் சரின்னு சொன்னதுக்கு ஒரே காரணமும் அதான்!” அவள் இலகுவாகக் கூறினாள்.

“அப்போ அப்பியரன்ஸைப் பார்க்கலை நீ. என்னதான் குணம், பொறுப்பு, அது இதுன்னு சொன்னாலும் உனக்குன்னு ஏதாவது எக்ஸ்பெக்டேஷன் இருந்திருக்குமே? உண்மையைச் சொல்லு!” அவன் சின்னதாக அதட்டினான்.

“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு? ஒருவேளை என்னோட அப்பா குடிக்காம குடும்பத்தை நல்லா பார்த்துட்டிருந்தா என்னோட எக்ஸ்பெக்டேஷன் வேற மாதிரி இருந்திருக்கலாம். அதான் பேர் ஸ்கின், வெள்ளையா, அழகா அந்த மாதிரி. என்னோட சிட்சுவேஷன்தான் என்னோட எதிர்பார்ப்பைத் தீர்மானிக்குது சார். சோ, எனக்கு வரப்போறவர் குடிக்காம குடும்பத்தை நல்லா பார்த்துக்கிட்டாலே போதும். அழகை வச்சு கால் கிலோ அரிசி கூட வாங்க முடியாதே. நான் சொல்றது ரொம்ப ஓல்டா தெரியலாம். பழைய பஞ்சாங்கமா இருக்காளே இவன்னுதானே யோசிக்குறீங்க?” அவன் முகத்தை வைத்தே எண்ணத்தைக் கணித்தவளைப் பார்த்து முதலில் இல்லையெனத் தலையசைத்தவன், பின்னர் தயங்கி ஆமாமென்றான்.

“நீங்க நினைக்கலைன்னாதான் ஆச்சரியம். நான் தப்பாலாம் எடுத்துக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என்னோட எதிர்பார்ப்பு ரொம்ப நியாயமானது. அதனாலே அதுல தப்பு எதுவும் எனக்குத் தெரியலை!” தோளைக் குலுக்கினாள் ஜீவா.

“அப்போ மேரேஜ் ஒரு கமிட்மெண்ட் மட்டுந்தானா? காதல் இல்லாம லைஃப் மூவ் ஆனா நல்லா இருக்கும்னு நினைக்குறீயா? அப்புறம் எதுக்கு அதைப் பண்ணிக்கணும் நீ?” அவன் மனத்தில் உறுத்திய கேள்வியைக் கேட்டான்.

“காதல்னு இந்த உலகத்துல ஒன்னு இல்லவே இல்ல, தேவா சார். நம்ம உணர்வை மத்தவங்கிட்டே ஷேர் பண்ணிக்க, எமோஷனலா அடுத்தவங்களை நம்ம பிடியிலயே வச்சுக்கச் சொல்ற பொய்… சுத்த ஹம்பக்!” அவள் கருத்தில் அவனுக்கு உடன்பாடில்லை.

“நான் இதை ஏத்துக்க மாட்டேன், ஜீவா. அதெப்படி லவ்வை ஹம்பக்னு சொல்ற? உனக்கு உங்கம்மாவை, தம்பியை, தங்கச்சியைப் பிடிக்காதா? அவங்க மேல நீ அன்பு வச்சில்லையா நீ? அதுதானே லவ்?” தேவா அவள் கருத்தை ஏற்காது முரண்பட்டான்.

“ஏன் இல்ல… அவங்க மேல எனக்கு நிறைய பாசம் இருக்கு, தேவா சார். ஆனால் பாருங்க, அவங்களை எனக்குப் பிடிச்சதுக்கு காரணம் அவங்களும் என் மேல அதே அளவு அன்பைக் காட்டுறதாலதான். ஒருவேளை இந்த சினிமால எல்லாம் காட்டுற மாதிரி கிரிஜாம்மா என்னைச் சித்திக் கொடுமை பண்ணிருந்தா எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்குமா? நிச்சயமா இல்ல. சரி, என்னை விடுங்க, உங்கம்மாவை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் தானே?” என அவன் முகம் பார்த்தாள். அவன் தலையசைத்தான்.

“ஹம்ம்… உங்கம்மா கஷ்டப்பட்டு உங்களைப் படிக்க வச்சு ஆளாக்கியிருக்காங்க. இதுவே உங்கப்பா போனதும் அவங்க உங்களை நடுத்தெருவுல விட்டுட்டு சுயநலமா அவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போயிருந்தா, இப்போ இருக்க அதே அன்பை அவங்க மேல உங்களால காட்ட முடியுமா?” அவள் கேட்டதும், அவன் தலை இல்லையென அசைந்தது.

“அதான் சொல்றேன் சார். காதலெல்லாம் எதுவுமே கிடையாது. ஜஸ்ட் நமக்கு எமோஷனல் சப்போர்ட் தேவை. அதை ஃபேமிலின்ற பாண்டிங் மூலமா அனுபவிச்சுக்கிறோம். மத்தபடி இது கிவ்வன் டேக்கன் பாலிசி மாதிரித்தான். நீங்க என்ன கொடுக்குறீங்களோ, அதான் திருப்பிக் கிடைக்கும். தட்ஸ் இட், அதுக்கு நம்ம ஒவ்வொரு விதமாகப் பேர் வச்சு அழகு பார்க்குறோம்!” அவள் தோளைக் குலுக்கினாள்.

“சரி… வாட்’ஸ் த பர்பஸ் ஆஃப் மேரேஜ்?” தேவா அவளை முறைத்தபடி கேட்டான்.

“எமோஷனல் சப்போர்ட் அண்ட் பிசிக்கல் நீட்ஸ்!” இரண்டே வார்த்தையில் எவ்வித பூச்சும் அற்றுப் பதிலளித்தவளை தேவா அதிசயித்துப் பார்த்தான். ஜீவாவிடம் இப்படியொரு முரண்பாடான கருத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

error: Content is protected !!
Scroll to Top