இவள் என்னவென்றால் என்னையே கேலி செய்வாளா என ஆணின் தற்பெருமை மேலெழுந்தது. அவளிடம் நானாக ஏன் சென்று வலியப் பேச வேண்டுமென மிடுக்குடன் தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்தான் தேவா. பால்கனி வழியே சாலையை வேடிக்கைப் பார்த்தவனின் கண்கள், அவனையும் மீறி கீழே பார்க்க, ஜீவா அங்குதான் அமர்ந்திருந்தாள். அப்போதும் அலைபேசி அவள் கையிலிருந்தது. முன்பு அவன் பார்த்த தேநீர்க் குவளை கூட இடம் மாறவில்லை. விளிம்பு நிறையத் ததும்பி நின்றது. மீண்டும் அவள் இரும, இவனுக்குக் கடுப்பானது. அப்படி என்னதான் இந்தப் பெண் அலைபேசியில் பார்க்கிறாள் என்ற எண்ணத்துடன் விறுவிறுவெனப் பின்பக்கப் படிகளில் இறங்கி வந்தான்.
“இருமிட்டே இருக்கீயே. அதுக்கு ஏதாவது பண்றீயா? அப்படி என்ன அந்த ஃபோன்ல பார்க்குற?” திடுமெனக் கேட்ட ஆண் குரலில் ஜீவா பயந்து நிமிர்ந்தாள். தேவா நின்றிருந்தான். அவனை அந்நேரம் அவள் எதிர்பார்க்கவில்லை போல. ஒரே ஊர் என்பதால் இந்த திருமணத்திற்கு வந்திருக்கக்கூடுமென எண்ணி அவனைப் பார்த்து சம்பிரதாயமாகப் புன்னகைத்தாள். மீண்டும் தும்மலும் இருமலும் வந்தது.
“உன்னைத்தான் கேட்குறேன். அப்படியென்ன பார்க்குற ஃபோன்ல?” அவன் அதட்டல் வேலை செய்தது. அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தவள், சின்னச் சிரிப்புடன் அலைபேசியை அவன் முன்பு நீட்டினாள்.
அவன் யோசனையுடன் வாங்கிப் பார்த்தான். அவள் அப்போது தேவாவைப் பற்றிப் பார்த்த காணொளிதான். ஒவ்வொரு அலைவரிசையிலும் ஒவ்வொரு விதமாக அதைத் திரித்துக் கூறினர். தேவா கைபேசியை உற்றுப் பார்த்தவன், செய்தி என்னவென்பதை உணர்ந்து நிமிர்ந்து அவளை முறைத்தான்.
“இப்போ இது முக்கியமா?” மீண்டும் அவன் அதட்டலிட்டான்.
“சோஷியல் மீடியால நீங்கதான் இப்போ ட்ரெண்ட். சும்மா ஒரு ரீல்ஸ் பார்த்தேன். அதே மாதிரியே அடுத்தடுத்து வந்துதா? அப்படியே பார்த்துட்டே உக்கார்ந்துட்டேன்!” என முறுவலித்தவள், மீண்டும் ஒருமுறை இருமினாள். தேவா அவளைக் கண்டனத்துடன் பார்த்தான்.
“ம்மா தங்கச்சி… வேலையெல்லாம் முடிஞ்சதும்மா. பாத்திரத்தை எல்லாத்தையும் கழுவி வேன்ல ஏத்திட்டோம்!” உள்ளிருந்து ஒருவர் வந்து குரல் கொடுக்க,
“ஒரு நிமிஷம் வந்துடுறேன்…” என இவனிடம் கூறிவிட்டு அங்கே சென்று அனைத்தையும் சரிபார்த்து, அவர்களை அனுப்பிவிட்டு இவனிடம் வந்தாள்.
அதற்குள்ளேயே தேவாவிற்கு ஏதோ வேலையென அழைப்பு வந்துவிட்டது. இன்னும் அவன் கடைசியாக எடுத்த படப்பிடிப்பிற்கான வேலை முழுமை பெறவில்லை. ஆங்காங்கே சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. அதையெல்லாம் முடித்தால்தான் தணிக்கைக் குழுவிற்குச் சமர்ப்பிக்க முடியும் என்பதால் தயாரிப்பாளர் இவனை ஒலிப்பதிவகத்திற்கு வரும்படி அழைத்தார். நேரத்தைப் பார்த்தவன், வருகிறேன் என்று மீண்டும் மாடியேறப் போனான்.
அவன் பேசிவிட்டு வருவான் எனக் காத்திருந்த ஜீவா, அவன் நகரவும், “தேவா சார்…” என அழைக்க, இவளின் குரலில் நின்று திரும்பினான்.
“என் ஃபோனை தராம போறீங்க!” ஜீவா கூறவும், வலது கையில் மறந்துபோன கைபேசியை அவளிடம் கொடுத்தவன், “வேலை முடிஞ்சுதா?” எனக் கேட்டான்.
“ஆமா சார்… முடிஞ்சது. குளிச்சிட்டு கிளம்பணும்!” அவள் பதிலளிக்க,
“கூட யாரும் வந்தாங்களா? இல்ல தனியா வந்தீயா?” என அவள் முகம் பார்த்தான்.
“பக்கத்துல தானே சார். யாரையும் அழைச்சிட்டு வரலை. ரெண்டு பஸ் மாறுனா போதும். வீட்டுக்குப் போய்டுவேன்…” இலகுவாக அவள் முடித்தாள்.
“ஹம்ம்… ஹாஃப் அன் அவர்ல ரெடியாகிடுவீயா? நானும் கிளம்புறேன். நீ என் கூட வர்றதுனா வா. கார்லயே ட்ராப் பண்றேன்…” யோசனையுடன் அவளை அழைத்தான்.
“இல்ல… வேணாம் சார். நீங்க ஏன் தாம்பரம் வரைக்கும் வரணும்? பெருங்களத்தூர் பைபாஸ்ல போனா உங்களுக்கு வீட்டுக்குப் போக ஈஸி. நான் பஸ்ல தானே வந்தேன். போய்டுவேன் அதெல்லாம் தனியா…” ஜீவா சின்ன சிரிப்புடன் மறுத்தாள்.
“நான் பைபாஸ் வழியா போகலை. தாம்பரம் வந்துதான் போவேன்…” தேவா கூற,
“ஏன்? பைபாஸ் ஈஸி தானே உங்களுக்கு?” அவள் புரியாது பார்த்தாள்.
“அங்க எனக்கு ஒரு வேலை இருக்கு, அதான். ரொம்ப கேள்வி கேட்காத ஜீவா. பஸ்ல போகப் போற. சொகுசா உன்னை ஏசி கார்ல ஃப்ரியா கூட்டிட்டு போய் வீட்டு வாசல்ல இறக்கி விடுறேன்னு சொல்றேன். ஆனால் நீ வர மாட்டேன்னு சொல்ற?” உன்னை நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன் என தாராள மனத்துடன் அழைக்கிறேன். ஆனால் நீ என்னையே கேள்வி கேட்கிறாய் என்பது போலத்தான் பணக்காரத் தோரணையில் இருந்தது அவன் குரலும் பாவனையும். இவள் மூச்சை இழுத்துவிட்டாள்.
“தேங்க் யூ தேவா சார். நான் கேட்காம நீங்களே ஹெல்ப் பண்றீங்க. பட், சாரி. என்னால சீக்கிரம் கிளம்ப முடியாது. இன்னும் எனக்கான பேமெண்ட் வரலை. கிளம்பிட்டுப் போய் காசை வாங்கிட்டுத்தான் அம்மா வரச் சொல்லிருக்காங்க. சோ, டைம் முன்ன பின்ன ஆகும். உங்களுக்கு வேலை இருக்குன்னு சொன்னீங்களே. நீங்க போங்க!” கண்களை எட்டாத புன்னகையுடன் தள்ளி நின்றாள் இவள்.
“தென் யூவர் விஷ்…” நீ வரவில்லை என்பதால் எந்த வகையிலும் அது எனக்கு நஷ்டமில்லை என்பது போலத் தோளைக் குலுக்கிவிட்டு அவன் படியேறினான். நான் உதவி செய்ய முன் வந்தும் நீ ஏற்கவில்லை என அவன் மனம் முணுமுணுத்தது.
ஜீவா அவனைச் சில நொடிகள் பார்த்துவிட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து குளித்து உடை மாற்றினாள். உடலெங்கும் வலி; எங்கே வலிக்கிறது என இனம் காண முடியாத அளவிற்கு உடல் அசதியுற்றது. நீண்ட நாட்கள் கழித்து இப்படிச் சரியாகத் தூங்காமல் எழுந்து வேலை செய்ததாக இருக்கும் என எண்ணியபடியே சற்று நேரம் அமர்ந்துவிட்டு, ஈரமான தலையை வெறுமனே சின்னக் கவ்வியில் அடக்கிவிட்டு நேரத்தைப் பார்த்தாள். ஐந்தரை எனக் கடிகாரம் காண்பித்தது. இப்போது கிளம்பினால்தான் இருட்டுவதற்குள் வீடு செல்ல முடியும் என இல்லாத ஆற்றலைத் திரட்டி, துப்பட்டாவை எடுத்துப் போட்டுக்கொண்டு, கைப்பையை மாட்டியபடியே சுப்பையாவை நோக்கிச் சென்றாள்.
மாப்பிள்ளையும் பெண்ணையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க, இவர் ஒரு சில உறவினர்களோடு நின்றிருந்தார். இவள் வரவும், “வா ஜீவா… சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சும்மா. நீ வந்ததால சமாளிக்க முடிஞ்சது!” என அவர் பாராட்ட, இவள் சின்னப் புன்னகையுடன் பெற்றுக்கொண்டாள். அருகே ஆட்கள் இருக்கும்போது காசை எப்படிக் கேட்பது என இவள் தயங்கியபடியே நின்றாள்.
“சரி ஜீவா… நீ கிளம்பு. உங்கம்மா அப்புறம் கால் பண்ணிடுவா. இன்னொரு நாள் குடும்பத்தோட வீட்டுக்கு வந்துட்டுப் போம்மா!” அவர் கூற,
“சரிங்க சித்தப்பா… நீங்க காசு கொடுத்தா நான் கிளம்பிடுவேன்…” ஒருவாறு தயக்கத்தை உதறிக் கேட்டுவிட்டாள். இல்லையென்றால் கிரிஜா சொன்னது போல இவரிடமிருந்து காசைப் பெறுவது சிரமமான விஷயம்.
“அட… ஆமாம்மா… அதை மறந்துட்டேன் பாரு. சித்தப்பா கைல இப்போ காசு இல்ல. உன் தங்கச்சியை ஃபோன்ல போட்டு விடச் சொல்றேன் ஆத்தா. நீ கிளம்பு!” அவர் சிரித்துக்கொண்டே கூற, இவளால் எதுவும் செய்ய முடியவில்லை. வெறுமனே தலையசைத்துக் கடுப்பை மறைத்துக்கொண்டு வாயிலை நோக்கி நடந்தாள். வேலை செய்ததற்கான ஊதியத்தைக்கூட நினைவில் வைத்து இவரால் கொடுக்க முடியாதா? தன் தாய் இவர்களைப் பற்றி கணித்தது நூறு சதவீதம் உண்மை என மனதிற்குள் முணுமுணுத்தபடியே பேருந்து நிறுத்தத்தை நோக்கி மெதுவாக நடந்தாள்.
சட்டென அவளருகே கறுப்பு நிற சீமா டாட்டா மகிழுந்து வந்து நின்றது. இவள் யாரெனப் பார்க்க, தேவாதான் உள்ளே அமர்ந்திருந்தான்.
“கெட் இன் ஜீவா…” கதவைத் திறந்து அழைத்தான். அவள் யோசனையுடன் பார்த்தாள். அவனோடு செல்வதற்கு அவளுக்கு துளியும் விருப்பமில்லை. அதைச் சொல்லத் தயங்கினாள்.
“இல்ல சார்… நீங்க போங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்!” அவள் அவன் முகம் காண,
“ம்ப்ச்… ரொம்ப பண்ணாதம்மா. நான் உன்னைக் கடத்திட்டு எல்லாம் போக மாட்டேன். பத்திரமா வீட்டுல விட்டுடுவேன். அதுவும் இல்லாம உனக்கு பேலன்ஸ் அமௌண்ட் கொடுக்கணும் நான். போற வழியில ஏடி.எம். இருந்தா எடுத்துக் கொடுத்துடுவேன். சோ, எனக்கும் வேலை முடியும்!” இத்தனை தூரம் அவன் அழுத்தி அழைக்க, மறுக்க முடியாது உள்ளே ஏறியமர்ந்தாள்.
தொடரும்…