“அண்ணா… நான் கிளறக் கிளற கொஞ்சம் கொஞ்சமா முந்திரியைத் தூவிவிடுங்க!” அருகிலிருந்தவரிடம் அறிவுறுத்திய ஜீவா, அந்தப் பெரிய பாத்திரத்தில் கேசரியை அடியொட்டிக் கிண்டிக் கொண்டிருந்தாள். ஆரஞ்சு வண்ணத்தில் நெய்யில் மிதந்தது கேசரி.
அவளுக்கு பக்கவாட்டில் நின்றிருந்த நபர் முந்திரியை மெதுவாக அவள் கூறியது போலவே கேசரியில் தூவினார். அனைத்துப் பக்கங்களுக்கும் சரிசமமாக முந்திரியை கிளறியவள், கேசரியை அடுப்பிலிருந்து இறக்கினாள். அவர் மறுபுறம் பிடித்துக் கொண்டார். கீழே விழாமல் பெரிய பாத்திரத்தை கீழே இறக்கி வைப்பதற்குள் அனல் முகத்தில் பட்டு அவளது முகம் சிவந்தது. கை வேறு சூடு தாங்காது நடுங்கியது. இரண்டு கைகளையும் ஊதினாள்.
“ம்மா… பார்த்தும்மா. கை சுட்டுருச்சா. மெதுவா பார்க்கலாம்?” அவர் இவளிடம் கரிசனமாகக் கேட்டார்.
“இல்லண்ணா… ஆவியடிச்சுடுச்சு, அவ்ளோதான். நீங்க சட்னிக்கு தாளிப்பு ரெடி பண்ணுங்க. உப்பு சரியா இருக்கானு பார்த்து வேணும்னா போட்டுக் கலக்கி விடுங்க” என்றவள், இட்லியைச் சுட்டு இறக்கினாள். அதிகாலைப் பனியும் இருட்டும் வெளியே தெரியாதபடி அந்தத் திருமண மண்டபம் ஜெகஜோதியாக காட்சியளித்தது. நேற்றைக்கு வரவேற்பு முடிந்து, அதிகாலை ஆறு மணிக்குத் திருமணம் என உறவினர்கள் மண்டபத்தை மொய்த்திருந்தனர்.
ஜீவாவின் சித்தப்பா சுப்பையா வீட்டுத் திருமணம்தான். கிரிஜா போக வேண்டாம் என்று மறுத்தாலும் சுப்பையா விடவில்லை. இரண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார். முகூர்த்த நாள் என்பதால் அவருக்கு அத்தனை எளிதில் ஆட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஜீவாவின் கைமணத்தில் ஒரு திருமணத்தில் சாப்பிட்டிருந்தவருக்கு, அந்தச் சுவை அப்படியே நினைவிருந்தது. அதனாலேயே அவளை அழுத்தி அழைத்தார். வேறு யாராவது புதிதாக வந்து உணவு சரியில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என அவருக்கு எண்ணம். ஜீவாவால் ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.
“ம்மா… ஒருநாள் தானே? நீங்க ஹோட்டலைப் பார்த்துக்கோங்க. நான் என்ன சும்மாவா வேலை பார்க்கப் போறேன். ரெண்டு நாளைக்கு சம்பளம் பத்தாயிரம் கேட்பேன். அவர் சரின்னு கொடுக்குறதா சொன்னா போய் செஞ்சுக் கொடுத்துட்டு வரேன்மா. ஒத்தாளா மொத்த வேலையும் செய்றது கஷ்டம். அங்கதான் ஏற்கனவே ஆள் இருப்பாங்கல்ல?” என இவள்தான் கிரிஜாவிடம் பேசி மெல்ல அவர் மனத்தைக் கரைத்தாள்.
கவிமலருக்காக மட்டும்தான் இதைச் செய்தாள். பார்த்துப் பல வருடங்களாகியிருந்த போதும், இவள் வந்ததும் அணைத்து நலம் விசாரித்து அன்பைப் பகிர்ந்திருந்தாள் சின்னவள். அதிலே ஜீவாவிற்கு மனம் நிறைந்தது. அவளுக்குச் சொந்தப் பந்தங்களோடு வாழ்வதுதான் விருப்பம். ஆனால் அவர்களது சூழ்நிலை தனியே நிறுத்திவிட்டது.
நேற்று மாலை வந்தவள், வரவேற்பிற்குச் சமைத்தாள். உடன் நான்கைந்து நபர்கள் ஆண்களும் பெண்களுமாக இருக்க, வேலைப்பளு தெரியவில்லை. பதினோரு மணிக்கு கடைசிப் பந்தி முடிந்து, இவளும் உண்டுவிட்டுப் படுத்தாள். அதிகாலை மூன்று மணிக்கு முன்னரே எழுந்து குளித்து வேலையைத் தொடங்கினர். ஆறு மணிக்குத் திருமணம் முடிந்ததும், ஏழரைக்கே காலை பந்தி தயாரானது.
பரிமாறுவதற்குத் தனியாக ஆளில்லை என்பதால் இவர்களே பரிமாறினர். முன்பு இதே வேலையைச் செய்ய ஜீவா கூச்சப்பட்டதில்லை. ஆனால் இன்றைக்கு என்னவோ சங்கடமாக இருந்தது. ஊரில் பாதிப் பேர் இங்குதான் இருந்தனர். அதில் அரைவாசிப் பேர் தாயின் வழிச் சொந்தம் என்றால், மற்றவர்கள் தந்தை வழிச் சொந்தம். இவள் பரிமாறி, இலையை எடுப்பதைப் பார்த்தால் தாழ்வாக எண்ணுவார்கள். அதற்காகத்தான் கிரிஜா இங்கு செல்ல வேண்டாம் என்றார். இவள் நாசூக்காக அந்த இரண்டு வேலைகயை மட்டும் தவிர்த்துவிட்டாள்.
காலை பந்தி முடிந்து, மதிய உணவும் சமைத்து உண்டு முடித்த கையோடு உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெறத் தொடங்கினர். கடைசிப் பந்தியில் ஓரிருவர் உண்ண அமர, ஜீவாவிற்குக் கால் வலித்தது.
“அண்ணா… நீங்க பார்த்துக்குறீங்களா? நான் கொஞ்சம் உக்கார்றேன்…” எனப் பணியாள் ஒருவரிடம் கூறிவிட்டு, சூடான தேநீர் ஒன்றை எடுத்துக்கொண்டு மண்டபத்தின் பின்பக்கப் படிகளில் அமர்ந்தாள் இவள். கால்வலி பின்னியது. முதுகும் வலித்தது. காலையிலிருந்து அடுப்பின் முன்பே நின்றதால் கண் சிவந்து நீர் வடிந்தது. உணவகத்தில் ஒருநாளில் இதைவிட அதிகமாகவே லாபம் கிடைக்கும். பணத்திற்காக அவள் இங்கு வர எண்ணவில்லை. என்னவோ வர வேண்டும் என்ற உந்துதலில் கிளம்பிவிட்டாள்.
காலை எழுந்ததும் உணவகம், இரவு படுக்கையில் விழும்வரை வேலை, மீண்டும் மறுநாள் அதே போல என அவளுக்கு வாழ்க்கை இப்போதெல்லாம் நிரம்பச் சலித்தது. பொறுப்புகள் கூடிவிட்டன. இவளாகத் துணிந்து கையிலெடுத்ததுதான். இன்றைக்கு வெற்றிகரமாகத் தொழிலை நடத்தினாலும் கூட, என்னவோ ஒரு வெறுமை முகத்தில் அறைந்தது.
என்னவென அவளால் விளக்க முடியவில்லை. கிரிஜா எப்போதும் போல இவளிடம் பாசமாகத்தான் நடந்து கொள்கிறார். பாலு அக்கா அக்காவென இவள் பின்னேதான் சுற்றுவான். சஷ்டி இவளிடம் பெரிதாக ஒட்டமாட்டாள். சின்னத்தம்பியை இவள்தான் ஒதுக்கி வைத்திருக்கிறாள். இப்படி அனைவரும் சுற்றிலும் இருந்தும் கூட ஏதோ குறைந்தது. தாயின் மடி தேடுகிறோமோ என எண்ணம் வந்ததால்தான் கிரிஜாவிடம் அதிகம் ஒன்றினாள். ஆனால், அதிலும் திருப்தியில்லை. எதைத் தன் மனம் ஆழமாகத் தேடுகிறது என அவளால் கண்டறிய முடியவில்லை.
கண்ணோரம் வழிந்த நீரைத் துடைத்தாள். மூக்கிலும் நீர் வடிந்தது. புகையிலே நின்றதுதான் காரணம் எனப் புரிந்தது. இளங்காலைப் பனி வேறு காதிற்குள் சென்றதால் தொடர்ந்து இருமல் வந்தது. அலைபேசி இசைக்க, எடுத்துப் பேசினாள். கிரிஜா அழைத்திருந்தார்.
“ஹம்ம்… பந்தி முடிஞ்சது. இதோ… குளிச்சிட்டு கிளம்பிடுவேன்ம்மா!” என இவள் பதிலளிக்க, “மறக்காம காசைக் கையிலயே வாங்கிட்டு வந்துடு ஜீவா. அந்தாளுகிட்டே காசை அவ்ளோ லேசுல வாங்க முடியாது!” என அறிவுறுத்தி அவர் அழைப்பைத் துண்டித்தார்.
இவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். சமைத்த பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முடித்ததும் எழுந்து சென்று குளித்து வீட்டிற்குக் கிளம்பலாம் என எண்ணியபடியே முகநூலைச் சொடுக்கினாள்.
“டைரக்டர் தேவாவிற்கும் நடிகை வந்தனாவிற்கும் இடையில் காதலா? கல்மிஷமா? ஸ்வீடன் நாட்டில் ஒரே அறையில் தங்கினரா? இருவருக்கும் இடையே நடந்தது என்ன?” பெரிய எழுத்துக்களில் செய்தி வாசிப்பாளர் தன் குரலில் ஏற்ற இறக்கத்துடன் சுவாரஸ்யமாக வாசித்தார். இவளுக்கு இருமல் நிற்காமல் தொடர்ந்து வர, இருந்தும் அந்தக் காணொளியைப் பார்த்தாள்.
வந்தனாவும் தேவாவும் அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரே அறைக்குள் இருப்பது, ஒன்றாக உணவுண்பது எனத் தொடர்ந்து காட்சிகள் தெரிந்தன. இவள் அமைதியாக அதைப் பார்த்தாள். இடையிடையே இருமினாள்.
அவளுக்கு நேர் எதிரே மாடியில் நின்றிருந்தான் தேவா. இந்தத் திருமணத்திற்குத்தான் ரேணுகா அவனைக் கட்டாயப்படுத்தி அழைத்தார். காலையில்தான் இந்தியாவிற்கு வந்திறங்கினான். வந்ததும் குளித்துக் கிளம்பி மண்டபத்திற்கு வந்துவிட்டான். யாரிடமோ அலைபேசியில் பேசியவனுக்கு இருமல் சத்தம் பெரும் தொந்தரவாகப் போயிற்று.
எரிச்சலாகக் கீழே பார்த்தான். ஜீவா அமர்ந்திருந்தாள். அவள் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் அவனுக்கு அவள் முகம் மிகத் தெளிவாகத் தெரிந்து தொலைத்தது. சில நொடிகள் அவளைப் பார்த்துவிட்டு, தோளை அசட்டையுடன் குலுக்கிவிட்டு அறைக்குள் நுழைந்தான். இவள் இங்கு என்ன செய்கிறாள் என மனம் கேட்டாலும், அவளது உடை, அமர்ந்திருந்த விதம் எல்லாம் சமையலுக்காக வந்திருக்கலாம் என மூளை உணர்த்திற்று.
காலையில் தேவா வந்ததிலிருந்து பெண் வீட்டினர் முதல் மாப்பிள்ளை வீட்டார் வரை அத்தனைப் பேரும் வந்து வரவேற்றனர். மரியாதை நிமித்தமாகப் பேசினர். உணவு அறைக்கே வந்தது. நிறைய பேர் அவனை ஆச்சரியம் கலந்த பார்வையுடன் பார்த்துச் செல்ஃபி எடுத்தனர். ஒரு சிலர் வாய்ப்பு கேட்டு வர, நாசூக்காக மறுத்தான். தினமும் இது போல நிறைய ஆட்களை கடந்திருக்கிறான். அதனாலே வெளியே செல்லும்போது முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொள்வான்.
“டேய்… இங்க ஒரு பொண்ணைப் பார்த்தேன். ரொம்ப நல்ல லட்சணமா இருக்காடா. அவங்கப்பா சென்னைல பெரிய ஹாஸ்பிடல் வச்சிருக்காராம். அந்தப் பொண்ணும் அங்க எலும்பு டாக்டரா இருக்காம். நீ என்ன சொல்ற? நான் கேட்டுப் பார்க்கவா?” ரேணுகாவிற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. பணக்காரத் தோரணையற்று, எளிமையாகப் பருத்திப் புடவை உடுத்தி, கண்ணுக்கு லட்சணமாக அவள் வளைய வந்தாள்.
அதனாலேயே மகன் வந்ததும் அவளைக் கைகாண்பித்துக் கேட்டார். வந்தனாவை அவன் விரும்பவில்லை என விக்ராந்த் மூலம் அறிந்திருந்தார். இவனும் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அழகாகத்தான் இருந்தாள் அவள். ஆனால், இவனுக்கு எந்த ஆர்வமும் தோன்றவில்லை. வேண்டாம் என்று தீர்க்கமாக மறுத்துவிட்டான் தேவா. இப்படி பார்க்கும் இடங்களில் எல்லாம் அவனுக்கு ஏகபோக மரியாதை கிடைத்தது. அவனுக்குப் பெண் கொடுக்க நிறைய பேர் தயாராக இருந்தனர்.