மௌனம் – 7.2

சுப்பையா பேச, அனைத்தையும் சரியெனக் கேட்டுக் கொண்ட கிரிஜா, “சரிங்க மாமா… நான் என்னென்னுப் பார்த்துட்டு சொல்றேன். ஹோட்டல் நடத்துறதால சட்டுன்னு எங்கேயும் வாக்கு கொடுக்க முடியுறது இல்ல. நம்ம வீட்டு விசேஷம். நான் பார்த்துட்டு சொல்றேன்…” என அழைப்பைத் துண்டித்தார். ஜீவா அவர் முகம் பார்த்தாள். அவர் பேசியதிலேயே தன்னை அனுப்பும் எண்ணத்தில் இருக்கிறார் என இவளாக ஊகித்தாள்.

“ரெண்டு மணி நேரம்தானேம்மா. சனிக்கிழமை நைட்டுப் போய்ட்டு ஞாயித்துக்கிழமை கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வந்துடவாம்மா?” எனக் கேட்டாள் இவள். அவர் மகளைக் கண்டனமாகப் பார்த்தார்.

“அவர் ஃபோன் பண்ணிக் கூப்பிட்டதும் உடனே உங்கப்பா மாதிரி வரிஞ்சு கட்டிட்டுப் போகணும்னு நினைக்காத ஜீவா. ஏன் வேலைக்கு ஆளு வேணும்னா மட்டும்தான் அந்த மனுஷனுக்கு நம்ம நினைப்பு வருமா? கல்யாணத்துக்கு ஒரு வார்த்தைக் கூப்பிட்டாரா? அந்தாளு இன்னும் ஐஞ்சுக்கும் பத்துக்கும் நம்ம கஷ்டப்படுறோம்னு நினைச்சுத்தான் வேலைக்கு கூப்பிட்டு இருக்காரு. நீ முடியாதுன்னு சொல்லி போனைக் கட் பண்ணாம என்கிட்டே எடுத்துட்டு வந்து கொடுக்குற? கூறு கெட்டவளே!” என இவள் தலையில் வலிக்காமல் கொட்டினார்.

ஜீவா என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக நின்றாள். அவளுக்கும் அவர் திருமணத்திற்கு, முன்பே அழைக்கவில்லையே என மனம் உறுத்தியதுதான். ஆனால், இந்தளவிற்கு யோசிக்கவில்லை.

“அப்போ நான் வரலைன்னு சொல்லிடவாம்மா?” சின்ன குரலில் கேட்டாள்.

“இப்பவே சொன்னா அந்தாளு நொய் நொய்னு ஏதாவது சொல்வாரு. அவனுங்களுக்கெல்லாம் நம்ம எப்பவுமே இளக்காரமாத்தான் தெரிவோம் போல. முறையா வீட்டுக்கு வந்து பத்திரிகை வச்சுட்டுப் போறதுக்கு என்ன? ஏன், ரெண்டு மணி நேரம் தூரத்துலதானே இருக்கோம்? எல்லாம் உங்கப்பன் செஞ்ச வேலை. அவராலதான் சொந்தக்காரன் ஒருத்தனும் நம்மளை மதிக்கிறதில்லை!” அவர் ஆற்றாமையில் பொருமினார்.

என்னதான் அவர்கள் இப்போது வசதியாக இருந்தாலும், சொந்த ஊர் பக்கம் இன்னுமே சின்னதம்பி செய்ததுதான் பெயராகப் போய்விட்டது. ஓரளவிற்குச் சம்பாதித்ததும் ஜீவா, தந்தை கடன் வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டாள். ஆனாலும், அவர்களுக்கு சின்னதம்பியின் மீதான அதிருப்தி குறையவில்லை. அதனாலேயே இவர்களுக்குண்டான மரியாதையைக் கொடுப்பதில்லை. அதில் கிரிஜாவுக்குக் கோபமும் மனவருத்தமும் உண்டு.

“ரெண்டு நாள் கழிச்சு அந்தாளு ஃபோன் பண்ணுவாரு. உனக்கு உடம்புக்கு முடியலைன்னு சொல்லிரு. ஊர்ல வேற ஆளுங்களே இல்லையா என்ன?” என இவர் சடைக்க, அவள் சரியெனத் தலையாட்டிவிட்டு அவரது காலடியில் விச்ராந்தியாக அமர்ந்தாள்.

“தலை வாரி விட்றீங்களா? கிரைண்டர்ல கை லேசா இடிச்சுடுச்சும்மா?” என அவரிடம் சீப்பைக் கொடுத்தாள்.

“பார்த்து வேலை செய்யக் கூடாதா ஜீவா?” என அவளைக் கடிந்தவர், எண்ணெய் வைத்து தலையை இறுக்கிப் பின்னலிட்டார். இவள் அவர் மடியிலே தலை சாய்த்தாள்.

“ம்மா… சித்தப்பாவுக்காக இல்லைன்னாலும் கவிக்காக செய்யலாம்ல? பாவம்மா. அவ எப்பவும் என் மேல அக்கா, அக்கான்னு பாசமா இருப்பா?” எனத் தலையைத் திருப்பி அவரைப் பார்த்தாள். அவளுக்கும் சுப்பையா மீது நிறைய அதிருப்தி உண்டு. ஆனால், கவிமலரைச் சின்ன வயதிலிருந்தே அவளுக்குத் தெரியும். ஒரே பள்ளி என்பதால் சின்னவள் இவள் மீது பாசமாக இருப்பாள். அவள் முகத்திற்காகத் தாயிடம் கேட்டாள் ஜீவா.

“வேணாம்னா அதோட விட்டுடணும் ஜீவா. மறுபடியும் கேட்கக் கூடாது. நம்மளை மதிக்கிற இடத்துல உதவி செய்யலாம், தப்பில்ல. வேலைக்காரங்களை மாதிரி பார்க்குறவங்களுக்கு ஓடிப் போய் உதவணும்னு அவசியம் இல்ல. கொஞ்சமாச்சும் புத்தியோட பொழச்சுக்கப் பாரு!” அவர் கண்டிப்பான குரலில் கூற, இவள் மறுத்துப் பேசவில்லை; சரியென்றும் தலையசைக்கவில்லை; அமைதியாக இருந்து கொண்டாள்.

வெளியே ஏதோ சத்தம் கேட்க, பெண்கள் இருவரும் எழுந்து சென்றனர். யாரோ ஒருவர் இவர்கள் வீட்டு வாயிலில் கத்திச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“ஏம்மா… உன் புருஷன் தள்ளாத காலத்துல ஏன்மா வயசு பசங்களோட சண்டை போடுறாரு. அவனுங்க அவரை அடிச்சுப் போட்டுட்டானுங்க. டாஸ்மாக்ல கிடக்காரு உன் புருஷன். ஒழுங்கா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க. இல்ல ரத்தம் போய் செத்துகித்துப் போய்டப் போறாரு!” என அவர் கடித்துக் குதறாத குறையாகப் பேசிவிட்டு அகன்றார். கிரிஜாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

“சே… ஒருநாள் ஹோட்டலுக்கு லீவு விட்டுட்டு வீட்ல நிம்மதியா இருக்க முடியுதா? குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து அட்டூழியம் பண்றது பத்தாதுன்னு ஊர் வம்பை வேற இந்தாளு இழுத்துட்டு வர ஆரம்பிச்சுட்டாரா? வயசான காலத்துல இதெல்லாம் இவருக்குத் தேவையா?” என அவர் சினந்தார். ஜீவாவிற்கு அடிநெஞ்சில் மெல்லிய பயம் உண்டானது.

தாயைக் கலவரத்தோடு பார்த்தவள், “ம்மா… நான் போய் அவரைக் கூட்டிட்டு வரேன்” என்றாள்.

சின்னதம்பி என்னதான் குடித்துக் கடன் வாங்கி, ஊதாரியாகச் சுற்றினாலும், ஜீவாவின் மீது நிறைய பாசம் வைத்திருந்தார். உணவகம் இரவு நேரத்தில் மூடத் தாமதமானால் அங்கேயே சற்று நேரம் படுத்து அவளுக்குப் பாதுகாப்பாக இருப்பார். வேண்டாம் என இவள் சொல்லச் சொல்லக் கேட்காமல், எங்கு சென்றாலும் பேருந்து நிலையம் வரை வந்துவிட்டுத்தான் செல்வார் பெரியவர்.

அவளுக்கு விவரம் தெரிந்த வயதில் சின்னதம்பி நன்றாகத்தான் இருந்தார். வனஜாவிற்கு உடல்நிலை மோசமானபோது சோகத்தில் குடிக்கத் தொடங்கி, ஊரே கடன் வாங்கி, மனைவியைப் பறிகொடுத்து முழுநேரக் குடிகாரராக மாறிப் போய்விட்டார்.

“வயசுக்கு வந்த பிள்ளை இந்நேரத்துல டாஸ்மாக் போவீயா? அந்தாளுக்கு வீடு வரத் தெரியும். நீ உள்ளே போ!” என அவர் அதட்ட, இவள் முடியாது என அழுத்தமாக மறுத்தாள்.

வீட்டின் உள் இரும்புக் கதவின் வழியே வேடிக்கை பார்த்திருந்த வேலு, “ம்மா… நான் அக்காவோட போறேன்…” என வந்து ஜீவாவின் அருகே நின்றான்.

“பிச்சுப் புடுவேன், டாஸ்மாக்ல காலடி எடுத்து வச்சேன்னா நான்‌ மனுஷியா இருக்க மாட்டேன்டா?” என அவனை அதட்டியவர், “நீயும் சஷ்டியும் கேட்டைப் பூட்டிட்டு உள்ளே இருங்க. எங்களைத் தவிர யார் வந்தாலும் கதவைத் தொறக்கக் கூடாது!” என்றவர், கடுப்புடன் காலணியை அணிந்தார். ஜீவாவும் அவரோடு விரைய, பத்து நிமிடத்தில் அவர்கள் மதுக்கூடத்திற்குச் சென்றுவிட்டனர். குடிபோதையில் ரத்தம் வருவது கூடத் தெரியாமல் தரையில் விழுந்து கிடந்தார் சின்னதம்பி.

பெண்கள் இருவரும் அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கி தானியிலேற்றி வீட்டிற்கு அழைத்து வர, ஜீவா அவரது உடையை அவிழ்த்து ரத்தத்தைச் சுத்தம் செய்து நெற்றிக் காயத்திற்கு மருந்திட, வேலு தந்தையின் கன்னத்தை வலிக்கும்படி தட்டினான்.

“ப்பா… ஏன்பா இப்படி பண்ற? எப்போதான் குடிக்கிறதை நிறுத்துவ?” அவன் கோபத்தோடு கேட்க, மெதுவாகக் கண்ணைத் திறந்தவர், போதையில் சிரிப்புடன் அவன் கன்னத்தை கை வைத்து தடவினார்.

“வேலு… என் ராசா!” என அவர் கூற, இவன் வெடுக்கென அவர் கையைத் தட்டிவிட்டு அகன்றான். சஷ்டி அப்போதே இவரைப் பார்க்க விருப்பமற்று அறைக்குள் அடைந்திருந்தாள்.

மகள் காயத்தைச் சுத்தம் செய்வதைப் பார்த்த சின்னதம்பி, “என் ராஜாத்தி… உங்கம்மா மாதிரியே நீ. அவளுக்கும் நான்னா ரொம்ப பிடிக்கும். என்னை விட்டுக் கொடுக்க மாட்டா…” என இவளின் கன்னத்தைத் தடவினார். ஜீவா அவரைக் கோபம், ஆதங்கம் என எதையும் காண்பிக்க முடியாமல் வெற்றுப் பார்வை பார்த்தாள். அவளுக்கு கண்கள் கரித்தன. குடிபோதையில் வலி தெரியவில்லை. காலையில் எழுந்து அனத்துவார் என மனம் வருந்திற்று. எழுந்து சென்று குளித்து வந்தாள். அவரது ரத்தம் இவளது உடையை முழுவதுமாக நனைத்திருந்தது.

“அம்மா… வந்து சாப்பிடுங்க!” கிரிஜா கோபத்தோடு அமர்ந்திருந்தார். தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என அவர் முகத்தில் ஆதங்கம் தெரிந்தது. உணவு வேண்டாம் என்றவரைக் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தாள். சின்னவர்களையும் சாப்பிட வைத்த பின்னரே உறங்கச் சென்றாள்.


தேவா ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, கதவு படபடவெனத் தட்டப்பட்டது. யாரது என எரிச்சலுடன் அவன் எழுந்து சென்று கதவைத் திறக்க, வந்தனா நின்றிருந்தாள். அவளைப் பார்த்து இவன் திகைக்க, கண்ணைச் சிமிட்டியவள் பக்கத்தில் கை காண்பிக்க, ஆடவன் ஒருவன் நின்றிருந்தான்.

“ஹாய் ப்ரோ… எப்படி இருக்கீங்க?” அவன் கேட்டதும், தேவா தன் கலைந்த தலையைச் சங்கடத்துடன் சரிசெய்தபடி, சற்று தள்ளி நின்று அவர்களுக்கு உள்ளே வழிவிட்டான்.

“சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க ரெண்டு பேரும்?” எனக் கேட்டவன் முகம் கழுவி வந்தான்.

“சும்மாதான் டைரக்டர் சார். நாங்க யூரோப்பியன் கண்ட்ரிக்கு ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணோம். பார்த்தா நீங்களும் இங்க இருக்கீங்கன்னு நியூஸ் வந்தது. சரி, அப்படியே பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்!” வந்தனா இழுவையுடன் குறும்பு சிரிப்பாமகக் கூற, தேவா அவளை முறைத்தான். அருகிலிருந்த ஆடவன் பிரணவ் இவனிடம் ஏதோ கேட்க, பதிலளித்தான். வந்தனா இடையில் இவனை வம்பிழுத்தாள்.

“அது சரி…” என அவள் கூற்றிற்று கேலியாகத் தலையசைத்த தேவா அவர்களைப் பற்றி விசாரிக்க, பின்னர் படத்தைப் பற்றி சிறிது நேரம் பேசி, இரவு உணவை உண்டுவிட்டு இருவரும் விடைபெற்றனர். தேவாவும் இரண்டு நாள்கள் காட்சியைப் படம் பிடித்து முடிந்ததும் மொத்தக் குழுவுடன் இந்தியா வந்திறங்கியிருந்தான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top