ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரத்தில்தான் அன்றைக்கு அந்தப் பாடலின் காட்சிப் படமாக்கல் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு நீர்வீழ்ச்சியின் கீழே நாயகனும் நாயகியும் முத்தமிடுவதைச் சரியான கோணத்தில் எடுக்க வேண்டும் என்று படக்கருவியை தேவா இரண்டு புறமும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார்… இன்னும் டென் மினிட்ஸ்ல சன் செட் வந்துடும் சார். சோ, இப்போ இந்த சீன் எடுத்தாதான் கரெக்டா இருக்கும்!” உதவி இயக்குநர் ஒருவன் வந்து இவனிடம் தயங்கியபடியே கூற,
“ஓகே… ஓகே, சனந்த். சீனை கரெக்டா அவர்கிட்டே எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டீங்கல்ல?” அவனிடம் கேட்ட தேவா, நாயகனைப் பார்க்க, அவன் தலையசைத்தான். அவர்கள் நடிக்கத் தொடங்கியதும் இவன் திரையை மெல்ல உற்றுப் பார்த்தான். நாயகன் கண்களில் காதல் மயக்கம் தெரிந்தாலும், அவன் நாயகியின் கன்னத்தைத் தொட்டதும் அவள் தயங்கினாள். அவன் முத்தமிடும் நேரத்தில் அவளிடம் அசௌகரியம் தோன்றியிருக்கக்கூடும். அவள் முகமே அதை எடுத்துக் கூறிற்று. சட்டென உதற முடியாமல் பல்லைக் கடித்து முறுவலிக்க முயன்றாள். சட்டென இவன் கண்ணில் ஜீவா வந்து மறைய, திடுக்கிட்டு தலையை உலுக்கினான்.
“கட்… கட்…” எனக் கத்திவிட்டு, “பிரகாஷ் சார்…” என நாயகனை அழைத்தவன், “நான் ரைட் சைட்லருந்து எடுக்குறேன். கொஞ்சம் பேக் ஷாட்தான். சன் செட் வரும் ஷேடோ மாதிரி. சோ, நீங்க ரொம்ப கிட்டப் போகாம லைட்டா கிஸ் பண்ற மாதிரி ஆக்ட் பண்ணா போதும். பேக்ரவுண்டுக்கு அது பெர்ஃபெக்டா செட்டாகும்!” என்றுவிட்டு நாயகியை அழைத்தான்.
“நிகிதா, கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க. நான் அவர்கிட்டே சொல்லிட்டேன். உங்க முகத்துல அவர் கிஸ் பண்ண வரப்போ வெட்கம் வரணும். முதல் கிஸ்னு ஒரு ஆர்வம், ஆசை தெரியணும். அவர் உங்ககிட்டே வந்ததும் உங்களோட கண்ணு தானா மூடணும். லைக் அது… அது ஒரு ஸ்பார்க், லவ் வரணும். பார்க்குறவங்களுக்கு ப்ளசன்ட் ஃபீல் தரணும். ஒரு டைம் ரிகர்சல் பார்த்துக்கோங்க. ஃபைவ் மினிட்ஸ்ல சன் செட் ஆகிடும். சோ, க்விக்…” என்றான் பொறுமையாய். அவளும் தலையசைத்துவிட்டுப் போனாள். இவனுக்கு மீண்டும் ஜீவா நினைவிற்கு வந்தாள். அவளும் சென்ற முறை வந்தப்போது இப்படித்தான் முறுவலித்தாள். ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரிலிருந்ததோ அந்தப் புன்னகை என மனம் மெதுவாக அதை அசைப்போட்டது.
நாயகன் நாயகி ஒருமுறை நடித்துப் பார்த்தவர்கள், பின்னர் தேவாவைப் பார்த்ததும், “லைட், கேமரா… ஆக்ஷன்!” என ஒலிவாங்கியில் இவன் கத்தியதும், பிரகாஷ் முத்தமிட வந்த கணத்தில் நிகிதாவின் கன்னங்கள் மெல்ல சிவந்து சூடேறின. அவன் அவளை நோக்கிக் குனிய, பின்னே சூரியன் அழகாக மறைந்தான். இருவரும் மஞ்சள் வெயில் மெல்ல மறைந்து தரும் நிழலில் வரிவடிவமாகத் தெரிய, அக்காட்சி வெகுநேர்த்தியாக வந்திருந்தது.
அத்தோடு அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும், தேவா தான் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியை நோக்கிப் புறப்பட்டான். இன்னும் இரண்டு நாள்களுக்கு இங்கே படப்பிடிப்பு இருந்தது. அதை முடித்துவிட்டால் மீதமிருக்கும் காட்சிகளை மும்பை, தவான், குல்தாரா மற்றும் சென்னையை மையப்படுத்திப் படமாக்கத் திட்டமிட்டிருந்தான். அவன் அறைக்குள் நுழைந்து உடை மாற்றிப் படுக்க விழைய, ரேணுகா அழைத்துவிட்டார்.
“என்னம்மா… எதுக்கு இவ்ளோ சீக்கிரம் எழுந்தீங்க?” அவரைக் கடிந்தான் மகன்.
“தேவா… அதுவாடா முக்கியம்? சஷ்டிடா இன்னைக்கு. எழுந்திரிச்சு சாமி கும்பிட்டேன். அதைவிடு, எப்போ வர்ற நீ?” எனக் கேட்டார் பெரியவர்.
“அதான் சொன்னேனேம்மா… வீக் எண்ட் ஆகிடும்னு!” அவன் சலித்தான்.
“டேய்… பிரமியோட கொழுந்தனுக்கு கல்யாணம்னு அவளோட சின்ன மாமனார் பத்திரிகை வச்சுட்டுப் போனாரே. உனக்கு ஞாபகம் இருக்கா? அந்தக் கல்யாணம் வர்ற ஞாயித்துக்கிழமைதான்டா. ஒழுங்கா சனிக்கிழமையே வரப் பாரு!” அவர் அதட்டினார்.
“ரொம்ப கஷ்டம்மா… சாட்டர்டேதான் ஃப்ளைட். சோ, சண்டே மார்னிங்தான் சென்னை வருவேன். ஷூட்டிங் முடிக்காம வர முடியாது!” அவன் மறுத்தான்.
“என்னமோ பண்ணு… ஒரு கல்யாணம், காட்சி எதுக்கும் வர மாட்டுறடா. அப்புறம் உன் கல்யாணத்துக்கு எந்த சொந்தக்காரங்க வருவாங்க சொல்லு?” அவர் கேட்டதும்,
“ப்ச்… வர ட்ரை பண்றேன். ஏற்கனவே க்ளைமேட் ஒத்துக்காம கோல்ட், தலைவலி எனக்கு. கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்மா நான். எழுந்ததும் நானே கால் பண்றேன்!” தேவா குப்புறப் படுத்துத் தலையணையில் முகத்தை அழுத்தினான்.
“அம்புட்டு குளிராவா இருக்கு அங்க? போகும்போதே சொட்டரை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானேடா? ஸ்கார்ஃப் கட்டிக்க, காதுல பனி போக விடாம பார்த்துக்க. இங்க வீட்டுக்கு வந்ததும் நான் மிளகு ரசமும், கசாயமும் வச்சுத் தரேன்!” அவர் அடுக்கினார். அனைத்திற்கும் உம் கொட்டியவன், அழைப்பைத் துண்டித்துவிட்டு ஏதோ செய்தி வரவும் புலனத்திற்குள்ளே நுழைந்தான்.
பதிலளிக்காமல் வைத்திருந்த ஒவ்வொரு செய்தியாகப் படித்துப் பார்த்துப் பதில் அனுப்பியவன், கடைசியாக ஜீவாவின் செய்திக்கு வந்தான். பத்து நாட்களுக்கு முன்னே அவள் அனுப்பிய நன்றிக்கு இப்போது கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கும் பொம்மையை அனுப்பிவிட்டான். சில நிமிடங்களிலேயே அவள் பார்த்துவிட்டாள். அளவாய் சிரிக்கும் பொம்மை ஒன்று வந்து விழுந்தது. இவன் அவளது முகப்புப் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தான். பதினாறு வயதில் எடுத்திருப்பாள் போல. அப்போது வேலு கைக்குழந்தையாக இருந்தான். அவளே குழந்தை போலத்தான் இருந்தாள். கழுத்தில் ஒரு கருகமணி, கண்ணிற்கே தெரியாது தோடு என சிறுபெண்ணாகத் தோன்றினாள். அவளை சில நொடிகள் உற்றுப் பார்த்து தலையை உலுக்கியவன், சொக்கிய கண்களுக்கு ஆதரவு கொடுக்கும் பொருட்டு உறங்கிப் போனான்.
“க்கா… உன் ஃபோன் அடிச்சுட்டே இருக்கு பாரு!” பாலு அலைபேசியை எடுத்து வந்து ஜீவாவின் காதிற்கும் தோளிற்கும் இடையே வைத்துவிட்டுப் போனான்.
அரவை இயந்திரத்தில் மாவை அள்ளிக் கொண்டிருந்தாள் அவள்.
“ஹலோ… ஜீவா, நல்லா இருக்கியா?” மறுபுறம் பரிச்சயமான குரல் கேட்டது.
இவள் யாரெனத் தெரியாது விழித்துவிட்டு, “நான் நல்லா இருக்கேன். நீங்க யாரு?” எனக் கேட்டுவிட்டுக் கையைக் கழுவி, அலைபேசியைக் கரத்தில் தாங்கினாள்.
“நான்தான் சுப்பு பேசுறேன்மா!” என அவர் கூற,
“ஆங்… சொல்லுங்க சித்தப்பா. புது நம்பர் மாத்திட்டிங்களா? அதான் எனக்கு அடையாளம் தெரியலை!” என இவள் சங்கடத்துடன் கூறினாள்.
“பரவாயில்லைம்மா… உன் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கோம்மா. நேர்ல வந்து கூப்பிடலைன்னு தப்பா எடுத்துக்காத. நீ, உன் அப்பா, சித்தி, தம்பி தங்கச்சிங்களை கூட்டிட்டு வந்துடும்மா. வர்ற ஞாயித்துக்கிழமை நம்ம ஊர்லதான் கல்யாணம்!” என அவர் கூற,
“பரவாயில்லை சித்தப்பா… நீங்க ஃபோன்ல கூப்பிட்டதே ரொம்ப சந்தோஷம். நான் அம்மாகிட்டே சொல்றேன். வர முயற்சி பண்றேன்!” இவள் தன்மையாகப் பதிலளித்தாள்.
“அப்புறம்மா… சித்தப்பா கல்யாணத்துக்குப் பேசிருந்த சமையல் காண்ட்ராக்டருக்கு திடீர்னு அடிபட்டிருச்சும்மா. அவரால வந்து சமைக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆனால், சமையலுக்கு ஆளுங்களை அனுப்புறேன்னு சொல்லிட்டாரு. எல்லாம் தெரிஞ்ச இன்னொரு ஆளு கூடமாட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான் உனக்கு ஃபோன் பண்ணேன்மா. ரெண்டு நாள் வந்து இருந்துட்டுப் போறீயா ஜீவா?” அவர் தான் அழைத்த விஷயத்திற்கு வந்தார்.
உணவகம் ஆரம்பித்த காலத்தில் ஆட்களின் வருகை குறைவு என்பதால் ஜீவா திருமணம், வீட்டு விசேஷங்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கச் சென்றிருக்கிறாள். மெல்ல மெல்ல உணவகம் பிரசித்தி பெற்று தினமும் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கவும், உணவகத்தைப் பார்க்கவே அவளுக்கு நேரம் சரியாகப் போயிற்று. அதுவும் இல்லாமல், உணவகத்திலேயே நல்ல கணிசமான வருமானம் வரவும், விசேஷங்களுக்கு சமைத்துக் கொடுப்பதைத் தவிர்த்துவிட்டாள்.
அதில் ஒரு சில சிரமங்களும், சங்கடங்களும் உண்டு. உணவகம் வீட்டின் அருகேயே உள்ளது. கிரிஜாவும் இருப்பதால் பாதுகாப்பிற்குப் பஞ்சமில்லை. ஆனால், விசேஷம் என்று வருகையில் இரவு தெரியாத இடத்திற்குச் சென்று தங்க வேண்டும். அங்கே பாதுகாப்பு எப்படியோ என முன்னர் சந்தேகத்துடன்தான் செல்வாள். அதெல்லாம் முன்னொரு காலம் என எண்ணுமளவிற்கு உணவகத்தோடு இப்போது ஒன்றிப் போய்விட்டாள்.
சுப்பையா அழைத்ததும் இவளால் சட்டென வருகிறேன் என்றோ, மாட்டேன் என்றோ மறுக்க முடியவில்லை. “அது… அம்மாகிட்டே கேட்கணும் சித்தப்பா. நம்ம ஹோட்டலைப் பார்க்கணும்னுதான் இப்போலாம் வெளிய பங்க்ஷனுக்கு எதுவும் எடுத்து செய்றது இல்ல சித்தப்பா!” எனத் தயங்கினாள் இவள்.
“நீ கிரிஜாகிட்டே ஃபோனைக் கொடுத்தா. நான் பேசிக்கிறேன்…” என அவர் கூற, இவள் தாயிடம் அலைபேசியை நீட்டினாள்.