அந்த வாரக் கடைசியில் தங்களுக்குக் கிடைத்த விடுமுறை நாளிற்கு முந்தைய நாள் தன்னுடைய தோழியான பிரேமாவிற்குச் செல்பேசி அழைப்பு விடுத்து,
“நாளைக்கு நமக்கு லீவ் தானே? எனக்கு வேலைக் கிடைச்சதுக்காக நம்ம ரெண்டு பேருக்கும் சுதா ட்ரீட் வைக்கப் போறாளாம். அதுக்கு நீயும் வந்தால் நல்லா இருக்கும்னு எங்களுக்குத் தோணுச்சு. அதனால் தான் உனக்குக் கால் செஞ்சேன். நீ என்னச் சொல்ற?”என்று அவளிடம் பதிலைக் கேட்டுக் காத்திருந்தாள் மதுபாலா.
“ஹேய்! நான் எதுக்குடி? நீங்க ரெண்டு பேரும் போய் நல்லா சாப்பிட்டு, என்ஜாய் பண்ணிட்டு வாங்க!”என்று மறுத்து விட்டிருந்தாள் பிரேமா.
“நீ இப்படித் தான் சொல்லுவ – ன்னு நினைச்சேன்! நாளைக்கு மதியம் நாங்கச் சொல்ற ஹோட்டலுக்கு ஒழுங்காக வந்து சேரு!”எனக் கட்டளையிடவும்,
“ஏய் என்னடி?”என்றவளிடம்,
“நீ எங்களுக்குக் காசு செலவாகும்ன்றதால் தானே இப்படி சொல்ற? நீ அதைப் பத்திக் கவலைப்படாதே! அதை நாங்கப் பார்த்துக்கிறோம்”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் மதுபாலா.
“இருந்தாலும்…”என்றவளை இடைமறித்து,
“நீ வந்தால் மட்டும் போதும்! மத்த எதுவும் பேசாதே!”என்று ஒரே போடாகப் போட்டு விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டுத் தனது தங்கையிடம் அந்த உரையாடலைப் பற்றித் தெரிவிக்கவும்,
அதற்கு,”அப்படின்னா அவங்களும் நம்மக் கூடக் கண்டிப்பாக வருவாங்க தானேக்கா?”எனக் கேட்டிருந்தாள் சுதா.
“ஆமாம் டி. அவ வரலைன்னு நாம விட்ருவோமா?”என்று கூறிச் சிரித்தாள் மதுபாலா.
“அதானே! இன்னும் ரொம்ப மறுத்துப் பேசி இருந்தாங்கன்னா நானும் அவங்க கிட்ட பேசி இருப்பேன்க்கா”என்றுரைத்து விடவும்,
அன்றிரவுச் சமையலை முடித்து விட்டு மறுநாள் உணவகத்திற்குச் சென்று என்னவெல்லாம் சாப்பிடலாம்? என்பதைப் பற்றிய சிறு கலந்துரையாடலை மேற்கொண்டு விட்டு உறங்கிப் போயினர் அவ்விருவரும்.
அடுத்த நாள் காலையில் உற்சாகமாக எழுந்து தங்களது அன்றாட நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு,
“காலையில் கொஞ்சம் இலகுவாகச் சமைச்சிக்கலாம்டி”என்ற மதுபாலாவிடம்,
“ஆமாம் க்கா. அப்போ நைட்டு மீந்துப் போன இட்லியை வச்சு உப்புமா செஞ்சிக்கலாமா?”என்றாள் சுதா.
“ம்ஹ்ம். இது நல்ல யோசனை தான். நான் உப்புமா செய்றேன்”
“இல்லக்கா. நானே சமைக்கிறேன். நீங்க தானே தினமும் சமையல் செய்றீங்க? இன்னைக்குக் காலையிலும், நைட்டும் நான் பார்த்துக்கிறேன்”என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி விட்டத் தங்கையைப் புன்னகையுடன் பார்த்து விட்டு,
அதற்கிடையில், தாங்கள் இருவரும் உணவகத்திற்கு அணிந்து கொள்ளப் போகும் உடைகளையும், அதற்கு ஏற்றவாறான அணிகலன்களையும் எடுத்து வைத்து விட்டிருந்தாள் மதுபாலா.
அதை அவதானித்து விட்டு,”நம்ம ரெண்டு பேராட டிரெஸ்ஸூம் ஒரே கலரில் இருக்கு அக்கா. ஆனால் டிசைன்ஸ் மட்டும் தான் வேற”எனக் கூறவும்,
அதில் தானும்,“ஆமாம்டி. நாம ரெண்டு பேரும் ஒரே கலரில் டிரெஸ் போடனும்னு ஆசையாக இருந்துச்சு. அதனால் தான் இந்த இரண்டையும் எடுத்து வச்சேன்”என்று குதூகலமாக உரைத்தாள் அவளது தமக்கை.
“அப்போ நாம இனிமேல் ஒரே நிறத்தில் துணியை எடுப்போம். சரியா?”என்றவளிடம்,
“சரி டி. சாப்பிடலாமா?”என்று வினவினாள் மதுபாலா.
“ம்ஹ்ம். சாப்பிடலாம்க்கா”என்றவுடன்,
அவர்கள் இருவரும் தங்களது காலை உணவை உண்டு முடித்த நேரத்தில் பிரேமாவிடம் இருந்து மதுபாலாவிற்கு அழைப்பு வந்தது.
அதை ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ என்ன டி?”என அவளிடம் விசாரிக்க,
“ஹாங்! மது! நீங்க ரெண்டு பேரும் என்னக் கலர் டிரெஸ்ஸைப் போட்டுட்டு வரப் போறீங்க? நான் பீரோவில் இருக்கிற எல்லாத்தையும் களைச்சுப் போட்டு வச்சிருக்கேன்! எதைப் போட்றதுன்னே தெரியலை!”என்றாள் குழப்பத்துடன்.
“நான் வேணும்னா ஃபோட்டோ எடுத்து அனுப்பவா?”என்றத் தோழியிடம்,
“அதை முதல்லச் செய் டி”என்றுரைத்தாள் பிரேமா.
உடனே,”அப்போ ஃபோன் காலைக் கட் பண்ணிட்டு ஃபோட்டோ எடுத்து அனுப்புறேன் இரு”என்று அவளுக்குத் தெரிவித்து விட்டு அந்த அழைப்பைத் துண்டித்தவளோ,
தான் சொன்னதைப் போலவே, இரு உடைகளையும் புகைப்படம் எடுத்து அவளுக்குப் புலனத்தில் அனுப்பி வைத்தாள் மதுபாலா.
அதைப் பார்த்ததுமே மீண்டும் அவளுக்குச் செல்பேசி அழைப்பு விடுத்து,
“நானும் இதே நிறத்தில் டிரெஸ் வச்சிருக்கேன். அதையே போட்டுட்டு வர்றேன்”என்றதுமே,
“ஓகே டி. நீ போய் முதல்லக் கிளம்பு. இதனால் நமக்கு லேட் ஆச்சு. உன்னைப் பிச்சுப் போடுவேன்!”என்று அவளைப் பொய்யாக மிரட்டினாள் மதுபாலா.
“அதெல்லாம் கரெக்ட் டைமுக்கு வந்துடுவேன். நான் இப்போ போய்க் கிளம்புறேன்”என அவளுக்கு வாக்களித்து விட்டு அந்த அழைப்பை வைத்து விட்டாள் பிரேமா.
“ஒரு நேரம் சாப்பாடு சாப்பிட்றதுக்கு வெளியே போறதுக்கு எவ்வளவு அலப்பறைப் பண்றாள் பாரு!”என்று அவளைப் பற்றித் தன்னுடைய தங்கையிடம் குறைபட்டுக் கொள்ளவும்,
“இனிமேல் நாம இப்படி வெளியே போவதாக இருந்தால் நாம அவங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடலாம்க்கா. அப்போ தான் அவங்களோட இந்தச் சந்தேகங்களை எல்லாம் நம்மால் தீர்த்து வைக்க முடியும்!”என்று கூறிப் புன்னகைத்தாள் சுதா.
அதைக் கேட்டு விட்டுத் தானும் அவளுக்குப் பதில் புன்னகையை உதிர்த்தாள் மதுபாலா.
அதற்குப் பிறகுத் தாங்கள் இருவரும் மதியம் வெளியே செல்வதற்காகத் தயாராக ஆரம்பித்து விட்டார்கள்.
இங்குத் தனது அலுவலகம் விடுமுறை நாள் என்பதால் காலையில் வெகு தாமதமாகத் தான் எழுந்து தயாராகத் தொடங்கி இருந்தான் புகழேந்தி.
அவனுக்கு விடுமுறை நாட்கள் என்பது ஓய்வு எடுக்க இன்றியமையாத நாட்களாகும்.
ஏனென்றால் அந்த நாட்களில் தான், தனது அலுவலக அழுத்தங்கள் அனைத்தையும் மறந்து தன்னுடைய தனிமையில் இனிமைக் காண்பான் எனலாம்!
அதனாலேயே விடுமுறை நாட்களைத் தவற விடவே மாட்டான் புகழேந்தி.
என்ன தான் அவனது வீட்டில் வேலையாட்கள் இருந்தாலும் கூட, இந்த விடுமுறை நாட்களில் எல்லாம், தனக்குத் தேவையான கொட்டை வடிநீரைத் தயாரிப்பதில் இருந்து, இரவு உணவைச் சமைப்பது வரையிலும், தானே தனக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொள்வான்.
இப்பொழுதும் கூடக் கொட்டை வடிநீரைத் தயார் செய்து அதை தனக்குப் பிடித்தமானக் காப்பிக் கோப்பையில் ஊற்றிக் கொஞ்சம், கொஞ்சமாகப் பருகலானான் புகழேந்தி.
அவனது அந்த இனிமையான தருணத்தை இன்னும் சுகந்தத்தைச் சேர்க்கும் விதமாக மதுபாலாவின் நினைவுகள் அவனைத் தட்டி எழுப்பி விட்டிருந்தது.
அதை உணர்ந்து கொண்டவனோ,”இன்னைக்கு ஆஃபீஸூக்கு லீவ் விட்டாலும் உன்னைப் பத்தின நினைவுகளுக்கு லீவே இல்லையா?”என்று அவள் தனக்கு முன்பாக நின்று கொண்டு இருப்பதைப் போன்று உருவகப்படுத்திக் கொண்டு அவளிடம் குறைபட்டுக் கொண்டான்.
அதில் அவனது இதழ்களில் குறுநகையும் முளைத்தது!
“ஆஃபீஸில் ஒருத்தரை ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறதால் தான் உன்னைப் பத்தின நினைவுகள் வருதுன்னு நினைச்சா, இப்போ நாம ரெண்டு பேரும் சந்திச்சுக்காத போதும் கூட உன்னைப் பத்தின நினைவுகளில் இருந்து என்னால் தப்பிக்கவே முடியலையே! அப்போ என் அக்காவும், மாமாவும் சொன்னது தான் சரியா? இது வெறும் ஈர்ப்பு மட்டும் இல்லையா? நான் எனக்கே தெரியாமல் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனா?”என்றவனோ,
தான் யோசனையின் பிடியில் இருந்ததால் தன்னுடைய பானம் குளிர்ந்து போய் விட்டதை அறிந்து கொண்டுத் தன் கையிலிருந்த கோப்பையை உதட்டில் வைத்து அதிலிருந்த பானத்தை முழுவதுமாக குடித்து முடித்து விட்டிருந்தான் புகழேந்தி.
அவனுக்கு இந்தச் சுழலில் இருந்து எவ்வாறு வெளியே வருவது என்பது தெரியவில்லை!
இதைப் பற்றித் தனது அக்கா, மாமாவிடமும் பேசி விட்டாயிற்று!
இதற்கு மேலும் இதில் குழப்பம் அடைவது முட்டாள் தனமான ஒன்று என்பதைப் புரிந்து கொண்டான் புகழேந்தி.
மதுபாலாவின் மீது தனக்குக் காதல் உணர்வுகள் எழுந்து விட்டதைப் போன்று அவளுக்கும் தன் மீது பிடித்தம் ஏற்படுமா என்பது சந்தேகம் தான்!
ஏனெனில் அவள் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும், அலுவலகத்தில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டவும், இங்குப் பயிற்சிப் பெறவும் தான் வந்துள்ளதை தன்னிடம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டிருந்தாள்!
அப்படி இருக்கும் போது தன்னுடைய காதல் உணர்வுகளை அவளுக்குச் சொல்லிப் புரிய வைத்தாலும் அதைப் புரிந்து கொள்ளும் இடத்திலும், சூழ்நிலையிலும், மனநிலையிலும் அந்தப் பெண்ணவள் தயாராக இல்லை என்ற நிதர்சனத்தை அறிந்து கொண்டு அவளுக்கும் தன் மீது காதல் துளிர்க்கும் வரையிலும் காத்திருக்க அவனது ஒரு மனம் எடுத்துரைத்தது.
ஆனால் அவனது மற்றொரு மனமோ இன்னும் எவ்வளவு வருடங்களுக்குத் தான் காத்திருப்பது? உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி மற்றொரு மனம் அவனை உந்தியது!
அதனால், மதுபாலாவிற்கு அடையாள அட்டைக் கொடுத்து, அவளது சம்பளத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் சமயத்திலும் தனக்கு இம்மாதிரியான உணர்வுகள் எழுந்தால் அவளிடம் அதைப் பற்றி நேரடியாகப் பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு அன்றைய வேலைகளில் மூழ்கி விட்டான் புகழேந்தி.
மதிய நேரத்தில் தாங்கள் இருவரும் குறிப்பிட்ட ஒரு உணவகத்திற்குச் சென்று அங்கிருந்த மேசையில் அமர்ந்து கொண்டுப் பிரேமாவிற்காக காத்திருந்தார்கள் மதுபாலாவும், சுதாவும்.
அதுவரையில் தனக்குள் இருந்த உற்சாகம் மறைந்து போய்த் தனக்கும், தனது முதலாளிக்கும் இடையில் நிகழ்ந்த அந்த வரைபட விஷயத்தைப் பற்றிய உரையாடலைத் தோழியிடமும், தங்கையிடமும் தெரிவிக்கலாமா? வேண்டாமா? என்றக் குழப்பமும், பதட்டமும் தோன்றுவதை உணர்ந்து,
அதைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்து போய் விட்டாள் மதுபாலா.
அப்போது உணவகத்திற்குள் நுழைந்து தோழியும், அவளது தங்கையும் அமர்ந்திருந்த மேசையைக் கண்டு கொண்டு அங்கே சென்று,
“ஹாய் மது! ஹாய் சுதா!”என்று அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் வணக்கம் வைத்தாள் பிரேமா.
அவளைக் கண்டதுமே தனது யோசனைகளை ஒதுக்கி வைத்து விட்டுத் தானும் மலர்ச்சியான வதனத்துடன்,”ஹாய் டி! ரொம்ப சீக்கிரமாகவே வந்துட்டியே”என அவளைக் கிண்டல் செய்தாள் மதுபாலா.
“ஏய்! ஒரு பத்து நிமிஷம் லேட் ஆனதுக்கு இப்படி காலை வாரி விடாதேடி!”என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொள்ள,
“ஹாய்க்கா! டிரெஸ் சூப்பராக இருக்கு! அதே சமயம் எங்களோடது கூடவும் மேட்ச் ஆக இருக்கு!”என்று அவளைப் பாராட்டினாள் சுதா.
“அப்படி சொல்லுடா என் செல்லக்குட்டி! இவளும் இருக்காளே! எப்போ பார்த்தாலும் என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டுக், காலை வாரி விட்டுட்டு அப்பறம் ஒன்னும் தெரியாதவ மாதிரிப் பாவமாக மூஞ்சியை வச்சுக்குவா”எனச் சுதாவைப் பாராட்டிப் பேசி விட்டு மதுபாலாவைப் பற்றிக் குற்றப் பத்திரிக்கையை வாசித்தாள் பிரேமா.
“அப்படித் தான் டி பேசுவேன்! அதுக்கு என்ன இப்போ?”எனத் தானும் அவளுடன்இணையாகச் சண்டையிட்டாள் மதுபாலா.
“என்னை விட வயசில் மூத்தவங்களாக இருந்துக்கிட்டு இப்படி சின்னப்பிள்ளைத் தனமாகச் சண்டைப் போட்றீங்களே! நான் தான் உங்களுக்குச் சாப்பாட்டுக்குப் பணம் செலுத்தனும் அது ஞாபகம் இருந்தால் சீக்கிரம் உங்களுக்குப் பிடிச்சதை ஆர்டர் செய்ங்க!”என அவ்விருவருக்கும் அறிவுறுத்தினாள் சுதா.
அதில் தாங்கள் இருவரும் தங்களது சண்டையை நிறுத்தி விட்டுத் தாங்கள் மூவருக்கும் பிடித்தமான உணவு வகைகளைக் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பி வைத்து விட்டு அதற்காக காத்திருந்தனர்.
அந்தச் சமயத்தில் தனக்கும், புகழேந்திக்கும் இடையில் நிகழ்ந்த அந்த முக்கியமான உரையாடலைப் பற்றி மற்ற இருவரிடமும் சொல்வதே சாலச் சிறந்தது என்ற எண்ணம் மேலோங்கியதால் தன்னுடைய குரலைச் செருமிக் கொண்டுப் பேச ஆயத்தம் ஆனாள் மதுபாலா.
- தொடரும்