.
அங்கே இல்லை. வெள்ளை நிறப் பளிங்குத் தரை என்பதால் எது கீழே கிடந்தாலும் சட்டெனக் கண்ணுக்குத் தெரிந்துவிடுமே என எண்ணியபடியே அலுவலக அறைக் கதவைத் திறக்க, மேஜைக்கு அடியில் வெள்ளி மோதிரம் பளிச்சிட்டது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அதை எடுத்துப் பத்திரப்படுத்தியவன், நேரத்தைப் பார்த்தான். இருந்தும், காலையில் எழுந்ததும் அவள் இதைப் பற்றியே யோசிக்கக் கூடாது என்றெண்ணி ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டே உறங்கச் சென்றான்.
ஜீவா காலையில் எழுந்ததும் மோதிரம் நினைவிற்கு வந்தது. வெறும் கையைத் தடவிப் பார்த்தாள். அங்கே, அவன் வீட்டில் இல்லையென்றால் வரும் வழியில் தொலைந்திருக்கக் கூடும். அப்படியென்றால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு வெகு சொற்பம். மனத்தில் கவலைப் பிறந்தது. அதே எண்ணத்தோடு வேலைகளைப் பார்த்தாள். காலையில் மாவைக் கரைக்கும்போது மீண்டும் மோதிரம் நினைவிற்கு வந்தது.
“க்கா… தண்ணி காஞ்சிடுச்சு. இட்லி தட்டை வைக்கா!” கோபியின் குரலில் நடப்புக்குத் திரும்பியவள், அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு காலைச் சமையலைக் கவனித்தாள். ஆட்கள் வர, உண்ண, பேச என அடுத்தடுத்து வேலை இழுத்துக் கொண்டதால் தற்காலிகமாக அதை மறந்துபோயிருந்தாள்.
தேவா தலைவலியோடு எழுந்தான். சூடாகத் தேநீரோடு பாரசிட்டமால் மாத்திரையை விழுங்கிவிட்டு வெளியே வர, பிரமிளா வந்திருந்தாள். யுகன் தாயிடம் சிணுங்கிக்கொண்டே இருந்தான்.
“வா பிரமி!” என்றவன் சின்னவனைத் தூக்கப் பார்க்க, அவன் பெரும் கத்தலுடன் தாயின் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.
“என்னாச்சு பிரமி இவனுக்கு?” எனக் கேட்ட தேவா, குழந்தையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
“தெரியலைண்ணா… இவனுக்கு என்ன பண்ணுதுன்னு தெரியாம தலை வலிக்குது எனக்கு. டாக்டர்ட்ட கூட்டிட்டு போய் காட்டிட்டு வந்துட்டேன். அப்படியும் அழுகையை நிறுத்த மாட்டுறான். சரி, கை வைத்தியம் எதுவும் பார்க்கலாம்னு இங்கே கிளம்பி வந்தேன். அவரு எங்களை விட்டுட்டு இப்போதான் கிளம்பிப் போனாரு…” என்றாள் சோர்ந்த குரலில். இரண்டு நாட்களாக அவள் சரியாக உறங்கவில்லை. மகனைக் கையிலே வைத்துக்கொண்டு சுற்றினாள்.
“கை வைத்தியம் எல்லாம் சரிபட்டு வராது பிரமி. நீ கிளம்பு… இங்க பக்கத்துல இருக்க பீடியாட்ரிஷியனைப் பார்க்கலாம்!” அவன் தங்கையைத் துரிதப்படுத்த,
“தேவா… அதெல்லாம் வேணாம்டா. அஜீரணக் கோளாறா இருக்கும். இதோ கட்டிப் பெருங்காயத்தையும் பேர் சொல்லாததையும் கரைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன். ஊத்திவிட்டா கொஞ்ச நேரத்துல சரியாகிடுவான்!” என ரேணுகா கூற, தேவா தாயை முறைத்தான்.
“ம்மா… நீங்க இன்னும் காம்ப்ளிகேட் பண்ணாதீங்க. டாக்டரைப் பார்த்தா அவங்க என்னென்னு செக் பண்ணி டேப்லெட்ஸ் கொடுப்பாங்க!” என இவன் அதட்டினான்.
“எதுக்கெடுத்தாலும் டாக்டராடா? உங்களையெல்லாம் நான் ஆஸ்பத்திரி வாசலைக்கூட மிதிக்க விட்டதில்லை. வீட்லயேதான் வைத்தியம் பார்த்தேன். நீ கொஞ்சம் அமைதியா இரு…” என யுகன் அழுது திமிற, திமிற, சங்கில் அந்தக் கரைசலை வைத்து அவன் வாயில் ஊற்றினார். இவனுக்குக் குழந்தை அழுகையைப் பொறுக்க முடியவில்லை.
அவர் ஊற்றி முடித்ததும், அவரிடமிருந்து சின்னவனை வெடுக்கெனத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று வேடிக்கை காண்பித்தான். அவன் இருமடங்கு பலத்தோடு அழத் தொடங்க, தேவா ஏதேதோ சொல்லிச் சமாதானம் செய்தான். அவன் உதட்டைப் பிதுக்கிக் காண்பிக்க, ரேணுகா சங்கை அழுத்தியதில் உள் உதட்டில் லேசாக ரத்தம் கசிந்தது. அவரை மனதிற்குள் திட்டியபடியே, சின்னவனின் முதுகைத் தட்டிக் கொடுத்து மெல்ல அழுகையை நிறுத்தினான்.
“மாமா… ச்ச்சி மிட்டாய்!” என அவன் தேம்ப, “எல்லா மிட்டாயும் வாங்கித் தரேன்டா. நீ அழாம இருக்கணும்!” என்றான் இவன்.
“ஆமா… ஆமா. உங்க பெரிய மாமா உன்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போய்ட்டாலும். நான்தானேடா உனக்கு குச்சி மிட்டாய், குருவி ரொட்டியெல்லாம் வாங்கித் கொடுத்தேன். இப்போ என்னமோ அவன்கிட்டே ஒட்டிட்டு இருக்க?” என விக்ராந்த், யுகன் போட்ட சத்தத்தில் எழுந்து வந்து சின்னவனைத் தூக்கினான். தேவா தம்பியை முறைத்தான்.
“முறைக்காதண்ணா… இந்நேரம் ஸ்டுடியோ கிளம்பிப் போயிருப்பியே. லீவா இன்னைக்கு?” அவன் கேட்டான்.
“இல்ல… இல்ல. ஹாஃப் அன் அவர்ல கிளம்பிடுவேன்…” என்றவன், நேரத்தைப் பார்த்துவிட்டு குளிக்கச் சென்றான்.
“நீ ஏன்டி சோபாவுல தூங்குற? போ… போய் ரூம்ல படு!” ரேணுகா நீள்விருக்கையில் உறங்கிய மகளை அதட்டினார்.
“ம்மா… நான் தூங்குனா என் மகனுக்குப் பிடிக்காது. வீடே அலறுற மாதிரி அழுவான்மா!” அவள் சலித்தாள்.
“சின்ன பையன்னா அப்படித்தான் இருப்பான். வாயைத் தொறந்து வலிக்குதுன்னு சொல்றவரை கஷ்டமாதான் இருக்கும். இப்போ நீ போய் தூங்கு. அவனை நான் சமாளிச்சுக்கிறேன்…” என அவளை அனுப்பினார் பெரியவர். தேவா குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான்.
யுகமகிழனைத் தரையில் அமர்த்தி, விளையாட்டுப் பொருட்களைக் கலைத்துப் போட்டிருந்தார் அவர். அவன் சற்று முன்னர் அழுத தடயமே இல்லாமல், “அம்மாச்சி… ட்ரெயினு… பஸ்ஸூ…” என அவர் மீது பொம்மைப் பேருந்தை ஏற்றினான். அவர் அதைத் தட்டிவிட்டு பயந்தது போல நடிக்க, அவன் கலகலவெனச் சிரித்தான். தேவா அவர்களைச் சிரிப்புடன் பார்த்துவிட்டு சாப்பிட்டு முடித்துக் கிளம்பினான். வாயில்வரை சென்றவன், பின்னர் யோசனை வந்தவனாகச் சென்று ஜீவாவின் மோதிரத்தை எடுத்துக் கொண்டான்.
மகிழுந்தில் செல்லும்போது அலைபேசியை எடுத்து புலனத்தைச் சொடுக்கினான். ஜீவா இன்னும் இணையத்தை இணைக்காததால் இவனது குறுஞ்செய்தி அவளை அடையவில்லை. சில நொடிகள் யோசித்தவன், பின்னர் அவளுக்கு அழைப்பை விடுத்தான்.
இரண்டே நொடியில் அழைப்பை ஏற்றவள், “மோதிரம் கிடைச்சுடுச்சா தேவா சார்?” என முகமன் ஏதுமின்றிக் கேட்டாள். இவனது அழைப்பிற்காகக் காத்திருக்கிறாள் என்பது நன்கு விளங்கிற்று.
“யெஸ்… நைட்டே கிடைச்சிடுச்சு ஜீவா. நான் உனக்கு மெசேஜ் பண்ணியிருந்தேன். பட், நீ பார்க்கலை!” இவன் இலகுவாகக் கூற,
“தேங்க் யூ தேவா சார். தேங்க் யூ சோ மச். காலைல எழுந்திரிச்சதும் வேலை நிறைய கிடக்கும். ஃபோனை கைல எடுத்தா எதுவுமே ஓடாதே. அதான் எடுக்கலை!” அவள் நிம்மதியுடன் பதிலளித்தாள்.
“ஓகே… ஓகே. நான் இப்போ தாம்பரத்துக்குத்தான் ஒரு வேலையா வரேன். அப்படியே ரிங்கைக் கொடுத்துடுறேன்!” இவன் கூற, அவள் படக்கென மறுத்தாள்.
“வேணாம் சார்… நீங்க வந்து கொடுத்தா அம்மா என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க. நான் உங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லலை. ஃப்ரெண்ட்னு சொல்லியிருந்தேன். சோ, நானே… நானே டைம் இருக்கப்போ வாங்கிக்கிறேன்!” ஜீவா பதறிப் போய் கூற,
“ஏன்… நான் உன் ப்ரெண்ட் இல்லையா ஜீவா?” அவன் புரியாமல் கேட்டான்.
“ஆ… அதுவா சார். ஹம்ம்… ஃப்ரெண்டுதான். ஆனால், ஐஞ்சு வருஷமா காணாம போய் திடீர்னு முளைச்சு வந்துட்டீங்களா… உங்களை என்னென்னு சொல்லி வீட்ல அறிமுகப்படுத்துறது? இவ்வளோ நாள் கழிச்சு மறுபடியும் நீங்க ஏன் எங்க ஹோட்டலுக்கு சாப்பிட வந்தீங்கன்னு கேள்வி வரும். அதெல்லாம் வேணாம்னுதான் நான் சொல்லலை!” அவள் சூழ்நிலையை விளக்க, இவன் பிடரியைக் கோதினான்.
‘திடீரென முளைக்க நானென்ன காளானா?’ கோபம் எட்டிப் பார்த்தது.
‘இத்தனை வருடம் வராமல் இப்போது வந்து நின்று நண்பன் என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என மறைமுகமாக என்னைக் குத்திக் காண்பிக்கிறாளா இவள்?’ கடுப்புக் கிளம்பிற்று.
“ஃபைன்… எப்போ, எங்க வர்றதுன்னு சொல்லு. நான் டைம் பார்த்துச் சொல்றேன். இப்போ எனக்கு வொர்க் இருக்கு. அப்புறம் பேசலாம்!” என அவள் பதிலை எதிர்பார்க்காமல் படக்கென அழைப்பைத் துண்டித்தான். முகத்தில் அறைந்தார் போன்ற அவன் செய்கையில் ஜீவா திடுக்கிட்டாலும், மோதிரம் கிடைத்த நிம்மதியில் அதைப் புறக்கணித்துவிட்டாள்.
மதியம் அவள் வேலையாக இருக்கும்போது, கீதன் அந்த உணவகத்திற்குள் நுழைந்தான். தேவா சொல்லிய அடையாளங்களுடன் இருந்த பெண்ணைக் கண்களால் துழாவினான். ஜீவாவும், அவள் இடையில் கட்டிய துப்பட்டாவும் இவனுக்குத் தென்பட, நேரே அவளிடம் சென்றான்.
“வாங்க சார்… உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க?” அவள் இவனை உபசரித்தாள். அவனின் நாகரிகத் தோற்றமும் வாசனைத் திரவியமும் அந்தச் சூழ்நிலையில் அவனைத் தனித்துக் காண்பித்தன.
“தக்காளி சாதமும், வெஜிடபிள் ரைஸும் பார்சல் வேணும்!” அவன் கேட்க,
“ரெண்டு நிமிஷம் சார்…” என்றவள், கோபியிடம் அவன் கேட்ட உணவைப் பொட்டலமிட்டு எடுத்து வரக் கூறினாள்.
அவன் எடுத்து வந்ததும் கீதனிடம் கொடுத்தவள், “தொண்ணூறு ரூபா ஆச்சு சார். பில் கவுண்டர்ல கொடுத்துடுங்க!” என்றாள். அவன் அவளிடம் கையை நீட்டினான். அவன் உள்ளங்கையில் வெள்ளி மோதிரம் பளபளத்தது. இவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“தேவா சார் கொடுக்க சொன்னாரு சிஸ்டர்!” என்றான் அவன் சின்ன குரலில்.
“தேங்க் யூ சார்!” என நன்றியுடன் அதை எடுத்து விரல்களில் அணிந்தவள், மெதுவாகத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அவன் அகன்றான்.
மதியம் ஓய்வு நேரத்தில் தேவாவிற்கு அழைத்தாள் இவள். இரண்டு முறை அழைப்புச் சென்று துண்டானது. சரியென, புலனத்தில் ஒரு நன்றி என அனுப்பினாள். இரண்டு நாட்கள் கடந்தும் அவளது செய்தி படிக்கப்படாமலே தூசியடைந்தது. அவன் திரைப்படம் சம்பந்தமான வேலையில் இருப்பான் என அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை ஜீவா.
தேவா அவள் குறுஞ்செய்தியையும் அவளையும் சேர்த்தே புறக்கணித்தான். என்னவோ அவனுக்குச் சுருக்கெனக் கோபம் வந்துவிட்டது. இவன் என்னவோ திடீரென முளைத்த காளான் போல அவள் உவமைப்படுத்தியதில் தன்னகங்காரம் முன்னே வந்து நின்றது. என்னுடைய தற்போதைய உயரத்திற்கும் உழைப்பிற்கும் அத்தனைப் பேர் மரியாதை கொடுத்துப் பேச, இவள் இலகுவாகக் கேலி செய்துவிட்டாள் என்ற கடுப்பில் அவளை உதாசீனம் செய்துவிட்டு, புதிய படத்திற்கான காதல் காட்சியை எடுக்க வேண்டுமென ஸ்வீடன் நாட்டிற்குப் பறந்து போயிருந்தான்.
தொடரும்…