மெல்லிய இசையைக் கசியவிட்டபடி இரவு நேரத்தில் பளிச்சென மின்னியது அந்த நவீன மதுக்கூடம். தேவா எதிரிலிருந்த நபரிடம் ஏதோ பேசிக்கொண்டே கையில் மதுபானத்தை வைத்து, மெதுவாகப் பனிக்கட்டியை அதிலிட்டுக் குலுக்கினான்.
அவனுக்கு மது அருந்தும் பழக்கம் பொதுவாகக் கிடையாது. ஆனால், இப்படி முக்கியமான நண்பர்கள், தயாரிப்பாளர் படம் வெற்றி பெற்ற பின்னர் அழைத்து விருந்து கொடுக்கும்போது மறுப்பது நாகரிகமாக இருக்காது எனக் கொஞ்சமாகக் குடிப்பான். இப்போதும் அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக மதுவை வாயில் சரித்தான்.
ரேணுகாவிற்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. அதனாலேயே அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வான் மகன். அதுவும் இல்லாமல் தன்னைப் பார்த்து விக்ராந்த் இந்தப் பழக்கத்தைப் பழகிவிட்டால் என்ன செய்வது என சம்பிரதாயத்திற்காக மதுவை அருந்துவான். அது தன் உடலைக் கட்டுப்படுத்த விட மாட்டான். தெளிவாக பேசுவான். அருகில் வந்து வாசனையை நுகர்ந்தால் அன்றி அவன் குடித்திருப்பதை ஒருவரும் அறியார்.
“கண்டிப்பா நெக்ஸ்ட் இயர் நம்ம இன்னொரு படம் பண்றோம் தேவா சார்!” தயாரிப்பாளர் முழுப் போதையில் இவனை வெகுவாகப் பாராட்டினார். தேவா சின்ன தலையசைப்புடன் அதை ஏற்று, பார்வையைச் சுற்றிலும் படரவிட்டான். ஆண், பெண் பேதமில்லாமல் நவநாகரிகத் தோற்றத்தில் இளைஞர் பட்டாளம் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒரு பெண் மட்டும் சுடிதார் அணிந்து உள்ளே வரத் தயங்கியபடியே ஓரமாய் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் இவனுக்கு ஜீவாவின் நினைவு மனதை நிறைத்தது.
அவள் இவனுக்கு ஒரு புரியாத புதிர் போலத் தோன்றினாள். அவளைப் பற்றிய எந்தக் கணிப்பிற்கும் அவனால் வர முடியவில்லை. அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கு விடையில்லை. ஆனால், அவளுக்குத் தன்னைப் பிடித்திருந்தது உண்மைதானே? அவளுடைய அக்கறையும் அன்பும் அதை உணர்த்த முயன்ற காலத்தில், இவன் அதற்கு மதிப்புக் கொடுக்கும் நிலையில் இல்லை.
ஆனால், இப்போது அவளைப் பார்த்துப் பேசி நட்பைப் பெற வேண்டும் என்ற அவா. அவள் பார்வைக்கும் அன்பிற்கும் காரணம் கேட்டறிய வேண்டும் என்ற ஆவல். அவனொரு தனிப்பிறவி. பிறந்ததிலிருந்தே அதிகம் பேசாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று வளர்ந்தவன்.
அப்படியிருக்கையில், ஒரு பெண்ணிடம் சென்று தயக்கத்தை உதறி, உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா எனக் கேட்பது அத்தனை சுலபமாகத் தோன்றவில்லை. அவள் நட்பின் நிமித்தம் உதவி செய்தேன் எனக் காலையிலேயே கூறிவிட்டாள். ஆனால், இவன் மனம் அதை நம்ப மறுத்தது. எப்போதும் இவன் கண் பார்த்துப் பேசும் பெண், இதைச் சொல்லும்போது முகத்தைப் பார்க்கவில்லை. அவளுக்குத் தன் மீதான பிரியம் உண்மைதான். ஆனால் அதை அவள் வெளிப்படையாக கூற மறுக்கிறாள்.
சரி, அவள் ஒப்புக்கொண்டால் நீ அவளை ஏற்கத் தயாரா என மனம் கேள்வியெழுப்ப, பதிலில்லாமல் தடுமாறினான் தேவா. யாருமற்ற காலத்தில் உடனிருந்த பெண் என்ற வகையில் அவள் மீது மரியாதையும் மதிப்பும் உண்டு. ஆனால், காதல் என்ற வார்த்தையில் அவளைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை.
அவனின் எதிர்பார்ப்புகள் மெல்ல மேலெழுந்து நின்றன. தனக்கு மனைவியாக வரப் போகிற பெண் எப்படி இருக்க வேண்டுமென்று அவனுக்கு சில கற்பனைகள் உண்டு. என்ன ஜீவா அந்தக் கற்பனைக்கு ஏற்ப இல்லை.
தோற்றத்தை வைத்து அவளை இவன் குறைவாக எண்ணவில்லை. ஜீவா வெகு அமைதி. அவனுக்கு கலகலவேன பேசும் பெண்தான் துணையாக வேண்டும். அதிலும் முற்போக்கு சிந்தனை நிறைய இருக்க வேண்டும். எப்போதும் அழுது, அடம் பிடிக்காமல் சூழ்நிலையை ஏற்று அதைக் கடந்து செல்லும் பக்குவமான பெண்ணாகத் தேடினான். அவன் பணியின் காரணமாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் அதையெல்லாம் நம்பி இவனிடம் சண்டையிட கூடாது. கண்டிப்பாக கல்லூரி முடித்து, இக்காலத்திற்கேற்ப நவநாகரிக யுவதியாக இருக்க வேண்டும்.
ஜீவாவை இந்த வட்டத்திற்குள் அவனால் பொருத்த முடியவில்லை. அவள் இப்போதும் அம்மாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன் என்ற வார்த்தையிலே இவன் மனம் தேங்கிற்று. அவள் உலகம் அறியாத சிறு பெண்ணாக இவனுக்குத் தோன்றினாள்.
கிராமத்து வாசம் அவளிடம் இன்னும் வீசிற்று.
அதனாலே அவளை ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறியது. அவள் உதவி செய்தாள் என்பதை இவன் ஒருபோதும் மறக்க மாட்டான். ஆனால் உதவி செய்ததற்காக அவளைத் திருமணம் செய்ய முடியுமா என்ன? இதே ஐம்பது வயது பெண் உதவியிருந்தால் அவரை தாய் ஸ்தானத்தில் பார்த்திருப்பான். ஜீவா வயது பெண் என்பதுதான் இவனை உறுத்திற்று. அவள் செய்த உதவிக்குப் பிரதியுபகாரம் செய்து உறுத்தலை நிறுத்த வேண்டும் என எண்ணினான்.
அவள் காதல் என்று சொல்லாதது கூட ஒரு வகையில் நல்லது என இப்போது ஆசுவாசம் பிறந்தது. இவன் தோண்டித் துருவிக் கேட்கச் சென்று அவள் ஆமாம் என்றுவிட்டால், அதற்கு இவன் எதிர்வினையாற்ற வேண்டும். ஒரு பெண்ணின் மனத்தை உடைக்க தேவாவிற்கு விருப்பமில்லை. ஆனால், அவள் நட்பு வேண்டும் அவனுக்கு. அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
முன்பு ஜீவா செய்த உதவிதான் அவனுக்குப் பெரிதாகத் தோன்றிற்று. ஆனால், இன்றைக்கு அவள் குடும்பத்தைப் பற்றி உரைத்து, அவள்தான் பார்த்துக்கொள்கிறாள் என்றபோது, அவள் மீதான மதிப்பு உயர்ந்துபோனது. தனி ஒரு பெண்ணாக இத்தனையும் பார்த்துக் கொள்கிறாள் என்ற கரிசனை உதிர்ந்தது.
அவன் தன் போக்கில் சிந்தனையில் இருக்க, அலைபேசி இசைத்தது. ரேணுகாதான் அழைத்திருப்பார் என எண்ணி இவன் பார்க்க, ஜீவா எனத் திரையில் பெயர் மின்னியது. நேரத்தைப் பார்த்தான். மணி பத்தரை. இந்நேரத்திற்கு இந்தப் பெண் ஏன் அழைக்கிறாள் என்ற யோசனையுடன் ஏற்றான்.
“சாரி தேவா சார்… சாரி. உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” வெகுவாக அவள் குரல் தயங்கிற்று.
“நோ… அதெல்லாம் இல்ல ஜீவா. என்னாச்சு, இந்த டைம்ல கால் பண்ணிருக்க. எனி எமர்ஜென்சி?” எனக் கேட்டான் இவன்.
“அது… அது என்னோட மோதிரம் மிஸ் ஆகிடுச்சு. காலைல உங்க வீட்டுக்குள்ளே வரும்போது கைல பார்த்த ஞாபகம். இப்போ தோசை மாவைக் கரைக்கும்போது பார்த்தா காணோம். அங்கதான் தொலைஞ்சு போய்ருக்கும்னு தோணுது. ப்ளீஸ், எனக்காக ஒரு டைம் உங்க வீட்ல தேடிப் பார்க்குறீங்களா?” எனச் சின்ன குரலில் கேட்டாள். ஆனால், அதில் தவிப்புக் கொட்டிக் கிடந்தது.
“நோ வொர்ரீஸ் ஜீவா. கண்டிப்பா வீட்ல மிஸ் பண்ணிருந்தா அம்மா எடுத்து வச்சிருப்பாங்க. நான் அவங்களைத் தேடச் சொல்றேன். கிடைச்சா உனக்கு இன்பார்ம் பண்றேன்மா!” அவள் பதற்றதைக் குறைக்கும் வகையில் பேசினான்.
“தேங்க் யூ சார்… அந்த மோதிரம் ரொம்ப இம்பார்டென்ட் எனக்கு. அது தொலைஞ்சா அம்மா திட்டுவாங்க!” அவள் பயந்தக் குரலில் கூறியதும், அவன் மனத்தில் அவள் ஒரு பூஞ்சையாகத் தோன்றி தொலைந்தாள்.
“கண்டிப்பா கிடைச்சிடும்மா. இல்லன்னா வேற வாங்கிக்கலாம். நீ அதையே நினைக்காத!” தேவா ஆதரவாகப் பேசினான். குழந்தைக்கு சமாதானம் செய்வது போலிருந்தது இவன் குரல்.
“இல்ல தேவா சார்… அது என்னோட எங்கேஜ்மெண்ட் ரிங். அது தொலைஞ்சு போச்சுன்னா அபசகுணமா நினைப்பாங்க!” அவள் தயங்கிக்கொண்டே கூறிவிட, இவன் மனம் திடுக்கிட்டது. தன்னை சமாளித்து உதட்டைக் கடித்துப் பிடரியைக் கோதினான்.
அவன் மனத்தில் உள்ள குழப்பம் அனைத்திற்கும் விடை தெரிந்துபோனது. அவளுக்குத் தன் மீது எந்த எண்ணமும் கிடையாது. ஒரே ஊர்க்காரர் என்ற பெயரில் உதவி செய்திருக்கிறாள் என மனம் உணர்ந்தது போல. இதையறிந்து நிம்மதியாக இருந்தபோதும், அவனையும் அறியாமல் ஒரு நொடி அலைபுறுதல் வந்து போனது.
“ஓகே… ஓகே. நான் மார்னிங் கால் பண்றேன். நீ இப்போ போய் நிம்மதியா தூங்கு. ரிங் கிடைச்சிட்டதா நினைச்சுக்கோ…” என அவளைச் சமாதானம் செய்தவன், தயாரிப்பாளரிடம் கூறிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றான். அவளது மோதிரம் எங்கே விழுந்திருக்கும் என யோசித்தவாறே உள்ளே நுழைந்தவன், கூடத்தைப் பார்த்தான். பின்னர் உணவு மேஜையருகே துழாவினான்