ஆசைகள் ஈடேறக் கூடுமோ?- 14

தங்களது வீட்டில் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள் வெண்பாவும், அவளது மாமனார் மற்றும் மாமியாரும். 

அப்போது தனது செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதுமே அதில் தனது கவனத்தைப் பதித்தவளோ, 

“புகழ் தான் கால் பண்றான்த்தை, மாமா”என்றுரைத்து அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் வெண்பா. 

அப்போது மறுமுனையில் இருந்து,”அக்கா! நான் இங்கே வீட்டு வாசலில் தான் நிற்கிறேன். கதவைத் திறக்கிறீங்களா?”என அவளிடம் கேட்டிருந்தான் புகழேந்தி. 

உடனே,”இதோ இப்போவே கதவைத் திறக்கிறேன்டா”என்று கூறி அந்த அழைப்பை வைத்து விட்டு,

“புகழ் வாசலில் தான் நிற்கிறானாம்”என்று மற்ற இருவரிடமும் தெரிவித்து விட்டுத் தங்களது வீட்டுக் கதவை அண்மித்து அதை திறந்து வெளியே நின்றிருந்த தனது தம்பியைக் கண்டதுமே, 

“புகழ்! உள்ளே வாடா”என்று அவனைக் குதூகலமாக வரவேற்றாள் வெண்பா. 

தானும் அவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்து தமக்கையின் மாமனார், மாமியாரை நோக்கி, 

“வணக்கம்த்தை, மாமா. நல்லா இருக்கீங்களா?”எனக் கேட்டு விட்டு, 

அவர்களிடம் சென்று அவர்கள் இருவரின் பாதங்களை ஸ்பரிசித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டான் புகழேந்தி. 

உடனே தாங்களும்,”சந்தோஷமாக இருப்பா!”என்று அவனை ஆசீர்வதித்து விட்டு, 

“நீ எப்படி இருக்கிறப்பா?”என அவனுடைய நலனையும் விசாரித்தனர் கபிலனும், ஜோதியும். 

“நானும் நல்லா இருக்கேன்த்தை, மாமா’”என்று அவர்களுக்குப் பதிலளித்தான் புகழேந்தி. 

“உட்காருப்பா”என்று அவனை அமரச் செய்து விட்டு அவனுக்குக் காஃபியும், சிற்றுண்டியும் கொடுத்து உபசரித்து விட்டு, 

“உன்னை எவ்வளவு நாளாக இங்கே வரச் சொல்லிக் கூப்பிட்டுட்டு இருந்தோம். இப்போ தான் இங்கே வர்றதுக்கு உனக்கு வழித் தெரிஞ்சுதா?”என அவனிடம் உரிமையாக கோபித்துக் கொண்டார்கள் வெண்பாவின் மாமனாரும், மாமியாரும். 

அதில் அவர்களைப் பார்த்துக் குறுநகையை உதிர்த்து விட்டு,

“சாரி அத்தை! மாமா! நான் கொஞ்சம் வேலையில் பிஸியாக இருந்தேன். அதான் என்னால் வர முடியலை! இனிமேல் இங்கே அடிக்கடி வரப் பார்க்கிறேன்”என அவர்களுக்கு வாக்களித்தான் புகழேந்தி. 

“நீ இந்த வாக்கைக் காப்பாத்துனா சரி தான் ப்பா”என்றிருந்தார் ஜோதி. 

“பிஸினஸ் எல்லாம் எப்படி போகுதுப் புகழ்? உன்னோட கம்பெனியில் இருந்து தான் நம்ம ஜவுளிக்கடைக்குத் தேவையானத் துணிகளை எடுத்துட்டு வந்ததாகச் சொன்னான் மித்ரன். அதுக்குண்டான காசைப் போட்டு விட்டுட்டானா?”என்று வினவினார் கபிலன். 

அதற்கு,”ஆமாம் மாமா. மித்ரன் மாமா எப்பவும் அந்த விஷயத்தில் நாணயமாக நடந்துக்குவார்!”என அவரிடம் உரைத்தான் புகழேந்தி. 

அதைக் கேட்டதும் மித்ரனின் பெற்றோரும், அவனது மனைவியான வெண்பாவும் அவனை எண்ணி மிகவும் பெருமிதம் அடைந்தார்கள்! 

“நீயும், அவனும் இந்த விஷயத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லைப்பா”என அவனையும் உயர்த்திப் பேசினார் ஜோதி. 

“ரொம்ப நன்றித்தை”என்று அவருக்கு நன்றிக் கூறியச் சமயத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த மித்ரனோ, 

“ஹாய் புகழ்! ஒரு வழியாக இங்கே வர்றதுக்கு மனசு வந்துருச்சா உனக்கு?”என்று தான் தன் மனைவியின் தம்பியிடம் எடுத்தவுடனேயே வினவினான். 

அதில்,”மாமா! நீங்களுமா? நம்ம ஆஃபீஸில் இருக்கிற வேலைப் பளுவைப் பத்தி தான் உங்களுக்கே தெரியுமே? அப்பறமும் இப்படி எல்லாரும் சேர்ந்து என்னைக் கிண்டல் பண்றீங்களே?”என அவனிடம் பொய்யாக கோபித்துக் கொண்டான் புகழேந்தி. 

“ஹேய்! அப்படியெல்லாம் இல்லைடா. அவர் சும்மா ஜாலிக்குச் சொன்னார். நீ எவ்வளவு பிஸின்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்டா”என்று அவனைச் சமாதானப்படுத்தினாள் வெண்பா. 

“நானும் ஜாலியாகத் தான் பேசினேன்க்கா. நீங்க யாரும் அதில் ஹர்ட் ஆகிடாதீங்க ப்ளீஸ்”என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டவனிடம்,

“அதெல்லாம் நாங்க எதுவும் ஹர்ட் ஆகலை”என்றுரைத்து அத்துடன் அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான் மித்ரன்.

“நைட் சாப்பாடு சாப்பிட்டுத் தான் கிளம்பனும். சரியா?”என்று புகழேந்திக்கு அறிவுறுத்தினார் ஜோதி. 

“சரிங்க அத்தை. நான் கண்டிப்பாக இங்கே சாப்பிட்டுட்டுத் தான் வீட்டுக்குக் கிளம்பிப் போவேன்!”எனத் தானும் அவருக்கு உறுதி அளித்து விடவும், 

அதற்கான வேலையில் இறங்கி விட்டார் மித்ரனின் அன்னை. 

“நாம ரூமுக்குப் போய்ப் பேசலாமா?”எனத் தன்னுடைய கணவன் மற்றும் தம்பியிடம் கேட்டிருந்தாள் வெண்பா. 

அதற்கு அவர்களும் சம்மதம் அளித்து விடக் கபிலனிடமும், ஜோதியிடமும் தெரிவித்து விட்டு அறைக்குச் சென்றார்கள் இளையவர்கள் மூவரும். 

அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு,”இப்போ எதைப் பத்திப் பேசனும்னுச் சொல்லுடா”எனத் தம்பியிடம் விசாரித்தாள் வெண்பா. 

அதற்கு அவனோ,”நம்ம ஆஃபீஸில் வேலைச் செய்ற மதுபாலான்றப் பொண்ணைப் பத்தி உங்கிட்ட சொல்லி இருக்கேன் தானேக்கா?”என்றிருந்தான்.

அதைக் கேட்டதுமே தாங்கள் இருவரும் நொடி நேரப் பார்வைப் பரிமாற்றத்தை மேற்கொண்டு விட்டு, 

“ஆமாம்டா. எங்கிட்ட சொன்ன. அந்தப் பொண்ணுக்கு இப்போ என்ன ஆச்சு?”என்றாள் சாதாரணமாக. 

அதேபோல்,”நீங்க எந்தப் பொண்ணைப் பத்திப் பேசுறீங்க?”என்று விஷயத்தை அறியாதவனைப் போல் அவர்கள் இருவரிடமும் வினவினான் மித்ரன். 

உடனே,”இவனோட கம்பெனிக்கு நீங்கத் துணி வாங்கப் போன அப்போ இவனோட ஆஃபீஸில் புதுசாக வேலைக்குச் சேர்ந்தவங்களை எல்லாம் மீட் பண்ணேன்லங்க? அதில் ஒருத்தவங்க தான் அந்தப் பொண்ணு”எனக் கணவனுக்கு விளக்கம் அளித்தாள் வெண்பா. 

“ஓஹோ! ஆமாம். அந்தப் பொண்ணுக்கு என்னவாம்?”

“அதைப் பத்தி தான் இப்போ உங்ககிட்ட பேசப் போறேன்”என்றவனோ, 

அந்த மதுபாலா தங்களது அலுவலகத்திற்கு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து இப்பொழுது வரைக்கும் நடந்தவற்றையும், அதனால் தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெளிவாக விவரித்து முடித்து விட்டிருந்தான் புகழேந்தி.

அதை முழுமையாக கேட்டு முடித்த அந்தக் கணவன், மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனலாம்! 

ஆனால் அதைப் புகழேந்தியிடம் காட்டிக் கொள்ளாமல், 

“அப்படின்னா உனக்கு அந்தப் பொண்ணு மேலே ஈர்ப்பு வந்துடுச்சா?”என்று சந்தேகத்துடன் வினவினான் மித்ரன்.

அவன் வேண்டுமென்றே காதல் என்ற வார்த்தையைக் கவனமாகத் தவிர்த்து விட்டிருந்ததை, தான் கண்டு கொண்டாலும் அதைப் பற்றிக் கணவனிடம் வினவவில்லை வெண்பா. 

அதற்கு மாறாக, அவனது கேள்விக்குத் தன்னுடைய தம்பியின் பதில் என்னவாக இருக்கும் என்பதைக் கேட்க ஆவல் எழுந்ததால் அவனைக் கூர்மையானப் பார்வையால் ஆராயவும், 

தன் மாமாவின் கேள்வியில் ஸ்தம்பித்துப் போய் விட்டப் புகழேந்தியோ,

“என்ன மாமா என்னைப் பார்த்து இப்படி கேட்கிறீங்க? அப்படி ஏதோ ஒரு பொண்ணு மேலே ஈர்ப்பு வர்ற வயசா எனக்கு?”என்று தனது தமக்கைக் கணவனிடம் ஆதங்கத்துடன் கேட்க,

அதற்கு,”ஏன் உனக்கு அப்படி என்ன ரொம்ப வயசாகிடுச்சுன்னு நீ இப்படி பேசிட்டு இருக்கிற?”என்றான் அதட்டலாக.

“ப்ச்! மாமா!”எனச் சலித்துக் கொண்டவனிடம், 

“அவர் கேட்கிறதில் என்னத் தப்பிருக்குடா? உனக்கு என்ன ரொம்ப அதிகமாக வயசு ஆயிடுச்சா?”என்று அவனிடம் கடிந்து கொண்டாள் வெண்பா.

அதில்,”நீயும் என்னக்கா புரியாமல் பேசிட்டு இருக்கிற?”என்று தமக்கையிடம் ஆற்றாமையாக கேட்டிருந்தான் புகழேந்தி. 

“நீ தான் எதையும் புரிஞ்சிக்கத் தயாராக இல்லைடா! அது தான் இப்போ பிரச்சினையே!”என அவனுக்கு அறிவுறுத்தினான் மித்ரன். 

“நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை மாமா! கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்க”என்றான்  குழப்பம் நிறைந்த குரலில். 

“இங்கே பாரு புகழ்! ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் காதலும், ஈர்ப்பும் வர்றதுக்கு வயசுத் தேவையே இல்லை! அதுவும் இல்லாமல் உனக்கு ஒன்னும் அதிக வயசும் ஆகலை! நீ இப்போ நினைச்சாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்! அதுக்கு உனக்கு ஏற்றத் துணைக் கிடைச்சா மட்டும் போதும்! அதுக்கு வேற எதுவும் தேவையில்லை!”எனத் தன்னுடைய தம்பிக்குப் பொறுமையாக விளக்கம் அளித்தாள் வெண்பா. 

அதைக் கேட்டாலும் கூடத் தனக்கு உண்டான குழப்பம் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதை தன் முகத்தில் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டு, 

“சரி. நீங்க ரெண்டு பேரும் என்னமோ சொல்றீங்க! நான் அதை ஏத்துக்கிறேன். ஆனால் இதுக்கப்புறம் நான் என்னச் செய்யனும்னுச் சொல்லுங்க. எனக்கு இந்த விஷயத்தில் ரொம்பவே குழப்பமாக இருக்கு”என்று அவர்கள் இருவரிடமும் பரிதாபமாக கூறினான் புகழேந்தி. 

உடனே அவனைக் கனிவுடன் நோக்கி,”நீ ஆஃபீஸில் அந்தப் பொண்ணுக் கிட்டே எப்பவும் போல் பழகு! அவங்களை எல்லாரையும் போலவே நடத்து! அப்படியும் உனக்கு அவங்க மேலே ஒரு தனிப்பட்ட விருப்பம், ஈர்ப்பு உணர்வுகள் வந்தால் மட்டும் எங்க கிட்டே வந்து சொல்லு! சரியா?”என்றார்கள் வெண்பா மற்றும் மித்ரன். 

“எதே! நீங்க…”என்றவனை அதற்கு மேலும் பேச விடாமல் அவனை எப்படியோ இந்த விஷயத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்து விட்டனர் அவ்விருவரும். 

அதற்குப் பிறகு இரவு ஆகி விட்டதால் புகழேந்தியை அங்கேயே உணவுண்ண வைத்து அவனது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் வெண்பாவும், அவளது கணவன் மற்றும் அவனது பெற்றோர். 

தன்னுடைய வீட்டை அடைந்ததும் உடையைக் களைந்து விட்டு இரவு ஆடையை அணிந்து கொண்டவனோ, 

சிறிது நேரத்திற்கு முன்புத் தனது தமக்கையிடமும், அவளது கணவனிடமும் பேசி விட்டு வந்த பின்னர், தன்னுடைய மனதில் இருந்த பாரம் குறைந்ததைப் போல் உணர்ந்தவனுக்கு உறக்கமும் எளிதாக வந்ததால் படுக்கையில் படுத்துக் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்தான் புகழேந்தி. 

அதற்கடுத்த நாளிலிருந்தே தனது தமக்கை மற்றும் அவளின் கணவன் வலியுறுத்தியதைப் போலவே மதுபாலாவிடம் எப்பொழுதும் போலவே இயல்பாக நடந்து கொள்ள முடிவெடுத்து அலுவலகத்திற்குப் போய்த் தன் அறைக்குள் சென்ற போது, 

“சார்! மிஸ். மதுபாலா தன்னோட ஒரு டிசைனை மட்டும் அவங்களுக்குப் பிடிக்கலைன்னு முழுசாக மாத்தி வரைஞ்சிக் கொடுத்து இருக்காங்க. இதைப் பார்த்துட்டு இது ஓகேவா? இல்லைன்னா, அதுவே இருக்கட்டுமான்னுச் சொன்னீங்கன்னா அதை துணியில் பிரிண்ட் செஞ்சித் தைக்க அனுப்பி வச்சிடலாம்”என்றத் தகவலை அவனுக்குத் தெரிவித்தாள் மதுபாலாவின் வழிகாட்டிப் பெண்ணான வினோதினி. 

அதைக் கேட்டவுடனேயே அவனுக்குள் முனுக்கென்று கோபம் எழுந்து விட்டிருந்தது. 

ஆனாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு,”சரி மேம். அதை மேசையில் வச்சிட்டுப் போங்க”என்றுரைத்து விடவும்,

அவனது அந்த உத்தரவை நிறைவேற்றி விட்டுச் சென்றிருந்தாள் வினோதினி. 

உடனே மேசையில் இருந்த அந்த வரைபடம் இருந்த தாளை எடுத்து வேண்டா வெறுப்பாகப் பார்த்தான் புகழேந்தி. 

அதில் தனது உருவத்திற்குப் பதிலாக வேறொரு ஆடவனின் உருவம் இருந்ததையும், அந்த உருவத்தில் தன்னுடைய கலை நயத்தை மதுபாலா வரைந்து இருந்ததையும் கண்டுப் பொறாமையில் பொசுங்கிப் போய், 

“நான் சொன்னவுடனேயே மாத்தி வரைஞ்சிக் கொடுத்துட்டுப் போகனுமா என்ன?”என அவளை மனதிற்குள்ளேயே வறுத்து எடுத்து விட்டுத் தன் காரியதரிசியை அழைத்து இந்த வடிவமைப்பைத், தான் சொல்லும் வரையிலும் எந்தத் துணியிலும் அச்சு வைத்து தைக்கக் கூடாது என்பதை வினோதினியிடம் அறிவுறுத்துமாறு கூறி அனுப்பி வைத்தான் புகழேந்தி. 

சில நிமிடங்களிலேயே தன் முதலாளியின் கட்டளையைக் கர்மச் சிரத்தையுடன் செய்து முடித்து விட்டு மீண்டும் அவனிடம் வந்து தகவலைத் தெரிவித்து விட்டவனை மற்ற வேலைகளைப் பார்க்குமாறு சொல்லி அனுப்பியவனோ, 

அந்த வரைபடம் இருக்கும் தாளைத் தனது மேசையின் இழுப்பறைக்குள் பத்திரப்படுத்தி வைத்து விட்டுத் தானும் வேலையில் மூழ்கிப் போனான் புகழேந்தி. 

  •  தொடரும்
error: Content is protected !!
Scroll to Top