மௌனம் – 5.3

“ஆமாம்மா… பார்த்திருக்க வாய்ப்பிருக்கு. நாங்க முதல்ல மருதங்குடிலதான் இருந்தோம்!” ஜீவா கூற,

“அதானம்மா பார்த்தேன். என்னடா நம்மூர்காரப் புள்ளை மாதிரி தெரியுதுன்னு. மருதங்குடில எந்த ஏரியாம்மா? நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் அங்கதான். இவுக அப்பா ஊரும் அதான். இப்போ புள்ளைங்க வேலைக்காக இங்க வந்துட்டோம்!” என்றார் அவர். தேவா அவளை ஊன்றிப் பார்த்தான். அவனுக்கு அவளை ஊர் பக்கம் பார்த்ததாகக் கூட நினைவில்லை.

“மாரியம்மன் கோவில் தெருல கடைசி வீட்டுல இருந்தோம்மா நாங்க!” ஜீவா கூற, அவர் முகம் பளிச்சென்றானது.

“ம்மா… நீ வனஜா பொண்ணுதானே? அதான் உன் முக ஜாடை அப்படியே இருக்கு. எப்படி ஆத்தா இருக்க? கிரிஜாவுக்கு ரெண்டு புள்ளைங்கன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப வருஷம் முன்ன பார்த்தது. உங்கப்பா இன்னும் அதே மாதிரித்தான் இருக்காரா? பாவம், ஊர் முழுக்க கடன் வாங்கி உங்கம்மாவைக் கொன்னுட்டாரு அந்த மனுஷன்…” என அவர் வருத்தத்துடன் கூறவும், இவள் முகம் மெல்ல மாறிற்று.

தேவா அவளை இவ்வளவு நேரம் ஆராய்ச்சியாகப் பார்த்தான். ஒரே தெருவில் குடியிருந்தும் இந்தப் பெண்ணைத் தனக்கு அடையாளம் தெரியவில்லையே என யோசித்திருந்தவன், தாயின் பேச்சில் அவளது முக மாற்றத்தை உணர்ந்தான்.

“ம்மா… எதுக்கு இப்போ நடந்ததெல்லாம் பேசுற? அவங்க அந்த ஊர்லயே இல்ல இப்போ. நம்ம கூட மாறி வந்துட்டோம். பாஸ்டை பேசாத!” விக்ராந்த் அண்ணனுக்கு முன்பாகத் தாயை அடக்கினான். அடுத்தவர் சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதை அவன் பெரும்பாலும் விரும்ப மாட்டான்.

“டேய்… நான் நம்மூர்காரப் புள்ளையைப் பார்க்கவும் டக்குன்னு பேசிட்டேன். நீ எதுவும் மனசுல வச்சுக்காத ஆத்தா!” என இவளது கையைப் பிடித்தார் பெரியவர்.

“அதெல்லாம் நான் எதுவும் நினைக்கலைம்மா!” என அவள் முயன்று சிரித்தாள்.

“சரிம்மா… வா, சாப்பிட்டுட்டே பேசலாம்!” என்றவர், மூவருக்கும் உணவு பரிமாறி தானும் உண்டார். இடையிடையே அவளது குடும்பத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டார். இங்கே எப்போது உணவகம் ஆரம்பித்தீர்கள் என வினவினார்.

“இங்க வந்ததும் ஒரு ஹோட்டல் ஒரு வருஷம் வேலை பார்த்தேன்மா. அப்புறம் நாங்க குடியிருந்த தெருல முன்ன ஒருத்தர் ஹோட்டல் வச்சிருந்தார். அவர் மகன் வெளிநாடு போய்ட்டு, அவரையும் கூட அழைச்சுட்டுப் போய்ட்டாரு. அந்தக் கடை காலியாகவும், வாடகைக்கு எடுத்து நானும் அம்மாவும் ஒரு ஹோட்டல் வச்சோம். இப்போ அதுதான் எங்களுக்கு கைக்கொடுக்குது!” என இவள் விளக்கினாள்.

“ரொம்ப சந்தோஷம்மா. உங்கப்பா சரியில்லன்னா கூட நொடிஞ்சு போகாம பொம்பளைங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஹோட்டல் நடத்திக் குடும்பத்தைப் பார்த்துக்குறீங்க. இந்தக் காலத்து புள்ளைங்க எல்லாம் ரொம்ப கெட்டிக்காரங்க!” என அவர் பெருமையாகப் பேசியதும், இவள் சங்கடத்துடன் அதை ஏற்றாள். பேச்சினூடே உணவு முடிந்தது. விக்ராந்த் நண்பர்களைக் காணச் சென்றுவிட்டான்.

ரேணுகா அவளிடம் தொடர்ந்து பேசியபடியே இருக்க, தேவாவிற்குக் கடுப்பானது. அவன் அவளிடம் பேச வேண்டும் என்றுதான் வீட்டிற்கு அழைத்தது.

“ம்மா… ஜீவாகிட்டே எனக்குப் பேசணும். அவங்க ஹோட்டலை ஃபேஸ் பண்ணித்தான் நெக்ஸ்ட் ப்லிம் எடுக்கப் போறோம். அதான் கூப்பிட்டேன்னு சொன்னேன்ல?” என அவன் பெரியவருக்கு நினைவுபடுத்தினான்.

“சரி… சரிடா. நான் மறந்து போய்ட்டேன். நீ ஆஃபிஸ் ரூம்ல வச்சுப் பேசு. நான் ஏதாவது இனிப்பா செஞ்சு எடுத்துட்டு வரேன். முதமுதல்ல புள்ளை நம்ம வீட்டுக்கு வந்திருக்கு…” என அவர் அகல, ஜீவா இதென்ன புதுக்கதை என்பது போல அவனைப் பார்த்தாள்.

“ஆஃபிஸ் ரூம் போய் பேசலாம் ஜீவா…” என அவளை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான்.

“சாரி… நான் சும்மா அம்மாவைச் சமாளிக்க அப்படி சொன்னேன். சான்ஸ் தேடிட்டு இருந்தப்போ நான் காசில்லாம கஷ்டப்பட்டு கடன் வச்சு சாப்பிட்டேன்னு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க. தட் இஸ் பாஸ்ட். சோ, எதுக்கு இப்போ சொல்லிட்டுன்னு மறைச்சுட்டேன்…” என அவன் கூற,

“கரெக்ட்தான் சார். அம்மான்னா அப்படித்தானே. நமக்கு ஒன்னுன்னா அவங்களுக்கு வந்த மாதிரி துடிச்சுப் போய்டுவாங்க!” என்றாள் சின்ன புன்னகையுடன்.

“சாரி… உங்கம்மா இறந்தது எனக்குத் தெரியாது. நான்… இப்போ கூட இருக்கவங்கதான் உன் அம்மான்னு நினைச்சேன்!” அவன் தயங்கிக் கூறினான்.

“கிரிஜாம்மாவும் என் அம்மாதான் சார். ரெண்டு பேருமே என்னோட அம்மாதான். ஒருத்தவங்க என்னைப் பெத்தாங்க. இன்னொருத்தவங்க வளர்த்தாங்க. நான் ரெண்டு பேரையும் வேற வேறயா பார்க்கலை. அவங்களும் என்னைப் பிரிச்சுப் பார்த்தது இல்ல!” இவள் இலகுவாக முடித்தாள்.

“ஓகே… ஓகே. குட்…” என்றவன், “என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா? ஏன் சொல்லலை?” என முக்கியமான சந்தேகத்தை முன்வைத்தான். அவன் மனத்தைப் போட்டு இந்தக் கேள்வி அரித்தது.

“தோணலை சார் எனக்கு… தெரியும்னு சொன்னா அப்புறம் நாங்க கடனுக்குப் பயந்து ஊரைவிட்டு வந்ததையும் சேர்த்துச் சொல்லணும். அப்போ அதை நினைச்சாலே எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும். குடிக்கு அடிமையாகி அப்பா கடன் வாங்காத ஆளே இல்ல. ஏன், உங்கப்பாகிட்டே கூட கடன் வாங்கியிருக்காரு. இப்படிப்பட்ட ப்ளாஷ் பேக்கை எந்த மூஞ்சியை வச்சுட்டு சொல்றதுன்னு ஊர்க்காரங்க யாரையும் நான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன்!” அவள் கேலியாகக் கூற, அவனிடம் பதில் இல்லை.

“உங்களை எனக்கு நல்லா தெரியும். உங்க தம்பி, தங்கச்சி, அம்மான்னு எல்லாரையும் ஞாபகம் இருக்கு. பர்ஸ்ட் டைம் நீங்க ஹோட்டலுக்கு வந்தப்போவே கண்டுபிடிச்சுட்டேன். அம்மாவுக்குத்தான் அடையாளம் தெரியலை. சரி, நம்ம ஊர்க்காரரு, தெரிஞ்சவராச்சேன்னு ஹெல்ப் பண்ணேன். அப்படியொன்னும் ஏமாத்திட்டுப் போய்ட மாட்டீங்கன்னுதான் நான் உதவி செஞ்சேன்!” என்றாள் சின்ன முறுவலுடன்.

“ஓ… ஓகே, ஓகே!” அவன் மனத்தில் என்னென்னவோ நினைத்து வைத்திருந்தது எல்லாம் அவள் பேச்சில் மெல்லச் சரியத் தொடங்கியது.

“அப்போ தெரியாத ஆளுனா ஹெல்ப் பண்ணிருக்க மாட்டீயா என்ன?” என அவளை ஊன்றிப் பார்த்தான். அவனுக்கு அந்தப் பதில் மிகத் தேவையாக இருந்தது.

“ஆமா… தெரியாத ஆளுக்கு எப்படிங்க ஐஞ்சாறு மாசம் சும்மா சாப்பாடு போட முடியும்? எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலருந்தே உங்களைத் தெரியும். சோ, ஹெல்ப் பண்ணேன்!” வேறு எதுவும் இல்லையென அவள் குரல் உணர்த்த முயன்றது. ஆனால் தேவாவால் அதை நம்ப முடியவில்லை. வெறுமனே தலையசைத்துக் கேட்டுக் கொண்டான். ஜீவாவின் அலைபேசி இசைத்தது.

“டூ மினிட்ஸ்…” என்றவள், ஐந்து நிமிடம் பேசினாள்.

“இல்ல… வெளிய வந்திருக்கேன் நான்…”

“ஆமாங்க… அம்மாட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன். அப்படியா… பார்த்து வேலை பார்க்க வேண்டியதுதானே? சரி, ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்து வொர்க்கைப் பாருங்க. உடம்பு ரொம்ப முக்கியம்…”

“ஓகே… கண்டிப்பா மெசேஜ் போடுறேன்!” என அவள் பேசி முடித்து இவனிடம் வந்தாள்.

“சார்… டைமாச்சு. நீங்க காசு கொடுத்தீங்கன்னா நான் கிளம்புவேன். லேட்டாச்சுன்னா அம்மா கால் பண்ணிடுவாங்க!” எனத் தயங்கி அவன் முகம் பார்த்தாள்.

“யெஸ்… யெஸ். ஒரு டூ மினிட்ஸ்ல வரேன்…” என்றவன், மீண்டும் அலுவலக அறைக்குள் நுழைந்தபோது கையில் கொஞ்சம் பணமிருந்தது.

“சாரி ஜீவா… ட்வென்டி டூ தௌசண்ட் தான் இருக்கு. ஏடி.எம். போக நினைச்சு மறந்துட்டேன்!” என்றான் சின்ன குரலில்.

“பரவாயில்லை சார்…” என அவன் கொடுத்த காசை வாங்கி எண்ணினாள்.

“சரியாதான் கொடுத்திருக்கேன் நான்!” அவள் எண்ணியதில் அவன் படக்கெனக் கூறினான்.

“நீங்க கரெக்டாதான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும் சார். பட், கல்லாவுல உக்கார்ந்து எண்ணிப் பழகிப் போச்சு. என்ன இருந்தாலும் காசும் உறவும் வேற வேறல்ல. நான் வீட்டுக்குப் போய்ட்டு கம்மியா இருக்குன்னு சொன்னா உங்களுக்கு சங்கடம், எனக்கும் கஷ்டம். அதான் எண்ணிப் பார்த்தேன். சரியா கணக்கை முடிச்சிடணும் சார்!” எனப் பணத்தைக் கைப்பையில் வைத்தாள். அவன் தலையைக் கோதியபடியே அவளைப் பார்த்தான். இந்தப் பேச்சிற்கு என்ன அர்த்தம் என அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ புதிர் போலிருந்தது அவளது வார்த்தைகள் யாவும்.

“ஓகே சார்… நான் கிளம்புறேன்…” என்றவள், ரேணுகாவிடமும் கூறிவிட்டு விடைபெற்றாள். அவர் இனிப்பை ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தார்.

“நான் உன்னை பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்றேன் ஜீவா. தனியா நடந்து போக வேணாம்!” என அவனே கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டான். அவள் ஒரு நன்றியுடன் விடைபெற, இவன் இந்தப் பெண்ணை எந்த வகையில் சேர்ப்பது எனப் புரியாது குழம்பிப் போனான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top