மௌனம் – 5.2

“சாரி… சாரி சாரி ஜீவா. நான் வாட்ச்மேன்கிட்டே ஜீவான்னு ஒரு ப்ரெண்ட் வருவாங்கன்னு சொல்லி வச்சேன். அவர் பாய்னு நினைச்சு நீ வந்ததும் உன்னை உள்ளே விடலை. இட்ஸ் ப்யூர்லி அன்எக்ஸ்பெக்டட். நீ தப்பா நினைக்காதே!” என்றான் தடுமாறிய குரலில்.

முதன்முதலாக அவளை வீட்டிற்கு அழைத்து இப்படி உள்ளே விடாமல் தொரத்தியதை எண்ணி அவனுக்கு மனம் கசந்தது. அவள் செய்த உதவிக்கு நன்றியுரைக்க எண்ணி அழைத்து, சொதப்பிவிட்டான். அன்றைக்கு அவள் இல்லாவிட்டால் மூன்று வேளை உணவிற்கு என்ன செய்திருப்போம் என எத்தனையோ நாட்கள் எண்ணியிருக்கிறான். இன்றைய நிலைக்கு அது வெகு சாதாரண விடயம். ஆனால் அப்போதைய நிலைக்கு அது பெரும் உதவியாகிற்றே.

“பரவாயில்லை சார். தெரியாம தானே நடந்தது. நான் ஒன்னும் நினைச்சுக்கலை!” அவள் ஒட்டாதக் குரலில் பேசினாள். அவளுக்கு கோபம்தான். என்ன அதை அவனிடம் காண்பிக்கும் அளவிற்கு அவனுக்கும் தனக்குமிடையே என்ன இருக்கிறது என எண்ணி உதட்டைக் கடித்து கோபத்தை விழுங்கினாள். அவன் தன்னையே நொந்து கொண்டான்.

“நிஜமா சாரிம்மா. நானும் கொஞ்சம் கேர் ஃபுல்லா இருந்திருக்கணும். நீ வந்து உன்னை உள்ளே விடாம அனுப்புனது ரொம்ப ரொம்ப தப்பு. ஐ’யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. இனிமே இப்படி நடக்காது!” அவன் இறங்கிய குரலில் மன்னிப்பை வேண்டினான். கண்டிப்பாக நடந்தது பெரும் தவறு. வரமாட்டேன் என்றவளை அவன்தான் வற்புறுத்தி அழைத்தான். அப்போது முறையாக அவளை வரவேற்பது அவனது பொறுப்புதானே.

“விடுங்க சார், நான் அப்பவே கிளம்பி கோவிலுக்கு வந்துட்டேன். இதோ வீட்டுக்கு கூட கிளம்பப் போறேன். நீங்க அதையே நினைக்காதீங்க!” உண்மையில் தெரியாமல் நடந்த தவறு என அவன் குரல் உணர்த்தியதும், அவளுக்கு மனம் சமன்பட, அவனைத் தேற்றினாள்.

“நோ… நோ. எந்தக் கோவில்னு நீ சொல்லு. நானே உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன்…” என்றவாறே அவன் மகிழ்வுந்து திறப்பைக் கையிலெடுத்தான்.

“இல்ல… இல்ல. இன்னொரு நாள் கண்டிப்பா நம்ம மீட் பண்ணலாம் சார். இன்னைக்கு வேணாம். எனக்கு டையர்டா இருக்கு. சாரி, நான் வீட்டுக்குக் கிளம்புறேன். தப்பா எடுத்துக்காதீங்க!” அவள் தன்மையாக மறுத்தாள். மீண்டும் அங்கே செல்ல விருப்பமில்லை. என்னவோ ஒரு காரணம். கடவுள் அவர்களின் சந்திப்பைத் தடுத்துவிட்டார். ஏன் அதை மீற வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் அவனுக்கு அவளைச் சந்தித்து பேச வேண்டும் என்ற அவா.

“ஜீவா ப்ளீஸ்… நீ இப்போ வரலைன்னா ஐ ஃபீல் கில்ட். நான் தானே உன்னை கம்பல் பண்ணிக் கூப்பிட்டேன். டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுமா. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். டோன்ட் சே நோ.” எனச் சாலையில் இறங்கினான். அந்த உயர்ரக மகிழ்வுந்து மெல்ல ஊர்ந்து பின்னர் வேகமெடுத்தது.

அவள் சில நொடிகள் அமைதியாக யோசித்துவிட்டு, “கபாலீஸ்வரர் கோவிலுக்கு வாங்க. அங்கதான் இருக்கேன் நான்…” என்றாள். அவன் நிம்மதிப் பெருமூச்சுடன் சரியென அழைப்பைத் துண்டித்துவிட்டுப் பத்தே நிமிடத்தில் கோவிலை அடைந்தான்.

இவன் உள்ளே நுழைய, அவள் எழுந்து நின்று சம்பிரதாயமாக சிரித்தாள். சேலையில் பெரிய பெண்ணாகத் தெரிகிறாளே என்ற எண்ணத்துடன் அவளை நெருங்கினான் தேவா. நெற்றியில் சின்ன கீற்றாக சந்தனம், குங்குமம் தீற்றியிருந்தாள். காய்ந்து போயிருந்த முன்னெற்றி முடிகள் சில முகத்தின் முன்னே வந்து நடனமாடின. அதை நாசூக்காக ஒதுக்கினாள் ஜீவா.

“சாரி ஜீவா…” அவன் சங்கடத்துடன் கூற, அவள் தலையசைத்தாள்.

“வீட்டுக்குப் போகலாம்…” அவன் முன்னே நடக்க, “சாமி கும்பிடலையா நீங்க?” அவளிடமிருந்து கேள்வி வந்து விழுந்தது.

“கடவுள் நம்பிக்கை இல்லம்மா!” என அவன் பதிலளித்ததும், அவன் முன்னே கரத்தை நீட்டி, குங்குமத்தை விரித்த ஜீவா, அந்தப் பதிலில் கரத்தைப் பின்னிழுத்தாள்.

“நம்பிக்கை இல்லதான். பட், குங்குமம் வச்சுப்பேன்!” எனச் சின்ன புன்னகையுடன் அவளிடமிருந்து கொஞ்சமாகக் குங்குமத்தை எடுத்து நெற்றியில் தீற்றிக் கொண்டான். இவளிடம் மென்னகை. அமைதியான பயணத்தை முடித்துக்கொண்டு அந்தப் பெரிய வீட்டிற்குள் மெல்லிய சத்தத்தோடு நுழைந்தது தேவாவின் மகிழ்வுந்து. இவள் கீழே இறங்கியதும் காவலாளி ஓடி வந்தார்.

“சாரி மேடம்… ஏதோ தெரியாம நடந்து போச்சு!” எனச் சங்கடத்துடன் தலையைச் சொரிந்தார்.

“பரவாயில்லைண்ணா… அது உங்க வேலை தானே? பட், வாய்ப்பு கேட்டு வர்றவங்களா இருந்தாலும் ஹார்ஷா பேசாதீங்க. சாரோட ஆஃபிஸ் அட்ரஸ் கொடுத்து அங்க மீட் பண்ணச் சொல்லிடுங்க. அது பெட்டரா இருக்கும்!” என்றாள் அமைதியான குரலில். அவரும் பலமாகத் தலையசைத்து அகன்றார்.

“உன்னை ஹார்ஷா பேசிட்டாரா ஜீவா? சாரிமா. நான்… நான்தான் ஆபிஸ் விஷயம்னு சொல்லி யாரும் வந்தா என்னைக் கேட்காம அலோவ் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்கேன். அம்மா தனியா இருக்காங்க வீட்ல. சோ, அவங்க சேஃப்டி முக்கியம் எனக்கு!” என அவன் தன்னிலையை விளக்கினான்.

“புரியுது சார். காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு. நீங்க ஜாக்கிரதையா இருக்கதும் நல்லதுதான். யாரையும் நம்ப முடியாதுல்ல?” அவனைப் புரிந்ததாக முறுவலித்தாள் இவள். அவனுக்குக் குற்றவுணர்வு மெல்ல விலகியது.

“வாம்மா… உள்ளே வா!” ரேணுகா இவளுக்காகக் காத்திருந்தது போல எழுந்து வந்தவர், புன்னகையுடன் வரவேற்றார். ஜீவா பதிலுக்குச் சின்னதாகச் சிரித்தாள். அந்த வீட்டின் செழுமை அவளைத் திகைக்க வைத்தது. கொஞ்சம் ஆச்சரியம், பயமுறுத்தக் கூட செய்தது என்னவோ உண்மை. ஆனால் எதையும் வெளியே காண்பிக்காமல் சாதாரணமாக நடந்துகொண்டாள்.

“வாட்ச்மேன் ஏதோ தெரியாதவங்கன்னு உள்ளே விடாம போய்ட்டாரு. நீ எதுவும் நினைச்சுக்காதம்மா. புள்ளைங்க ரெண்டு பேரும் வெளிய வேலைன்னு போய்ட்டா நான் மொட்டு மொட்டுன்னு தனியா சும்மாதேன் இருப்பேன். அதனாலே இவன் யாரையும் உள்ளே விட மாட்டான்!” அவர் பங்குக்கு விளக்கமளித்தார். நெடுநெடுவென உயரத்துடன் தேவாவின் தோற்றத்தைப் பாதி கடன் வாங்கியபடியே வந்து நின்றான் விக்ராந்த். அவனுக்கும் அன்று அலுவலக விடுமுறை. தாமதமாக எழுந்து குளித்து வந்தான். இவளைப் பார்த்ததும் அவனிடம் பளிச்சென சிரிப்பு ஒன்று உதிர்ந்தது.

“வாங்க சிஸ்டர்… அண்ணா நேத்தே சொன்னான், நீங்க வர்றீங்கன்னு…” அவளை வரவேற்றவன், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பழச்சாற்றை ஊற்றிக் கொடுத்தான்.

“டேய்… சாப்பிட்ற நேரத்துல எதுக்கு ஜூஸுன்னு நான் கொடுக்கலை. நீ டம்ப்ளர் நிறைய ஊத்திக் கொடு. அந்தப் புள்ளை சாப்பிட வேண்டாமா?” சின்னவனைக் கடிந்தார் ரேணுகா.

“ப்ம்ச்… கெஸ்டை வெல்கம் பண்ணணும்மா. உனக்கும் உன் பெரிய மகனுக்கும் தெரிய மாட்டுது. நான் செஞ்சாலும் என்னைத் திட்டு!” என அவன் சடைத்தான். தேவா தம்பியை முறைத்தான். ஜீவா விக்ராந்த் கொடுத்த பழச்சாற்றை பெயருக்குக் கொஞ்சமாகக் குடித்தாள்.

“சிஸ்டர்… நம்ம இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கோமா என்ன? உங்களை எங்கயோ பார்த்த ஃபீல்?” அவன் தாடையைத் தடவினான். அவள் முகம் அவனுக்கு நன்கு பரிட்சயமாகத் தோன்றிற்று.

“ஆமாம்மா… எனக்கு கூட உன் முகம் ரொம்ப பழகுன மாதிரி இருக்கு. யாரையோ பார்க்குற ஃபீல். சரியா தெரியலை!” ரேணுகாவும் கூற, தேவா தாயையும் தம்பியையும் மாற்றி மாற்றிப் பார்த்தான். அவனுக்கு அவளைப் பல வருடங்களாகத் தெரியும். அப்படியொன்றும் பரிட்சயமாகத் தோன்றவில்லை.

error: Content is protected !!
Scroll to Top