மௌனம் – 5.1

நிலைபேழையைத் திறந்து வைத்து, எந்த உடையை உடுத்துவது எனச் சலிப்புடன் பார்த்தாள் ஜீவா. இந்த வருடத்தில் புதிதாக உடை எடுத்ததாய் நினைவில் இல்லை. அன்றாடம் பயன்படுத்தும் உடையெல்லாம் சாம்பார், சட்னி, எண்ணெய் கறை எனப் பார்க்கவே பழைய துணி போலக் காட்சியளித்தது.

கிரிஜா அவ்வப்போது புத்தாடைகள் எடுத்துத் தருவார். பொங்கல், தீபாவளி என எடுக்கும்போது நான்கைந்து சேர்த்து எடுத்துவிடுவார். இந்த ஆண்டு பொங்கலுக்கு அவர் மகளுக்குச் சேலைகளை எடுத்துக் கொடுத்துவிட, சுடிதார் எண்ணிக்கை குறைந்து போயிருந்தது. தேவா ஒரு பெரிய இயக்குநர். அவனது வீடும் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் இடத்தில்தான் இருந்தது.

செல்லும் இடத்திற்கு ஏற்ப உடைகளை உடுத்தி நாகரீகமாகச் செல்ல வேண்டுமென்று அறிவு எடுத்துக் கொடுக்க, கையிலிருந்த கடல் வண்ண சுடிதாரை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்தாள். சேலை மட்டும்தான் உடுத்தாமல் புதிதாகப் பளபளவென்றிருந்தது. கோவிலுக்குச் சென்றால் மட்டும்தான் சேலை உடுத்துவாள் ஜீவா. மற்றபடி சுடிதார்தான் அவளுக்கு எப்போதும் வசதிபடும்.

ஆனால் இன்றைக்கு சேலையே சரிவரும் என
எண்ணி மெல்லிய இடலை நிறச் புடவையை எடுத்தவள், அதற்கேற்ப ரவிக்கையை உருவிக் குளித்து முடித்து, தலையைத் தளரப் பின்னலிட்டு, முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்து கைப்பையோடு கிளம்பினாள்.

இன்றைக்கு வெளியே செல்வதால் உணவகத்தில் அவள் பெரிதாக வேலை எதுவும் செய்யவில்லை. மற்றவர்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு கிளம்பியவள், “ம்மா… போய்ட்டு வரேன்…” என்றாள் கிரிஜாவிடம்.

“பத்திரம் ஜீவா… போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணிச் சொல்லு…” என்றவரிடம் அவள் தலையசைத்துக் கிளம்ப, சின்னத்தம்பி தள்ளாட்டத்துடன் எழுந்தார்.

“ஜீவா… அப்பா பஸ் ஸ்டாண்ட் வரை வந்து விட்டுட்டு வரேன்!” என அவர் இவளருகே வந்தார்.

“யோவ்… விழுந்து கிழுந்து தொலைஞ்சிடாத. அவ கூட நீ போனா உன்னைத்தான் அவ காபந்து பண்ற மாதிரி இருக்கும். சும்மா உக்காரு…” கிரிஜா அதட்டவும், அந்த மனிதர் உட்கார்ந்த இடத்திலேயே மீண்டும் அமர்ந்தார். ஜீவா அவரைச் சலிப்புடன் பார்த்துவிட்டுப் பேருந்து நிலையம் சென்றாள். கே.கே. நகர் செல்ல நேரடிப் பேருந்து இல்லாததால், தாம்பரம் பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்தில் கே.கே. நகரை அடையச் சுமார் ஒரு மணி நேரமாகியிருந்தது.

நேற்றே இவள் வருகையை உறுதி செய்த தேவா, அவன் வீட்டு முகவரியைப் பகிர்ந்திருந்தான். கூகுள் உதவியுடன் பத்து நிமிட நடைப்பயணத்தில் அந்தத் தெருவை அடைந்தாள் ஜீவா. பெரிதாக அந்தத் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மகிழ்வுந்தில் மக்கள் சென்று கொண்டிருந்தனர்.

இவள் சாலையோரம் நிழலாக இருந்த பகுதியில் மெல்ல நடந்து சென்று அந்தப் பெரிய இரும்புக் கதவின் முன்னே நின்றாள். கதவே முழு வீட்டையும் அடைந்திருந்தது. கதவில் சின்னதாக ஓர் துளை மூடும் வசதியோடு காட்சியளிக்க, அதன் வழியே இவளைப் பார்த்துவிட்டார் வாயிற்காவலாளி.

“என்னம்மா… யார் நீங்க? எதுக்கு வந்துருக்கீங்க?” அவர் இவளைப் பற்றி விசாரித்தார்.

“டைரக்டர் தேவ்பிரசாத் சாரைப் பார்க்க வந்தேன். அவர் வரச் சொல்லிருந்தாரு!” இவள் கூற, அவர் யோசித்தார்.

“வாட்ச்மேன், என் ப்ரெண்ட் ஜீவான்னு ஒருத்தவங்க வருவாங்க. உள்ளே விடுங்க!” என அவன் அவரிடம் கூறிவிட்டு, குளிக்கச் சென்றிருந்தான்.

‘சார்… ஜீவான்னு பேர் சொன்னாரே. அப்போ பையனாதானே இருக்கும். இந்தப் பொண்ணு பொய் சொல்லுதோ!’ என எண்ணியவர், “ம்மா… அவர் பொண்ணு யாரும் வர்றதா சொல்லவே இல்லையேம்மா?” என யோசனையுடன் வினவினார். அவரது பார்வை இவள் பொய்யுரைக்கிறாள் என்பது போல ஆராய்ந்தது. அதில் ஜீவாவிற்கு பொறுமை மெல்ல கரைந்திற்று.

“இல்லண்ணா… அவர்தான் வரச் சொன்னாரு. நீங்க அவர்கிட்டயே கேளுங்க. அவர் இல்லைன்னு சொன்னா நான் கிளம்பிடுறேன்!” இவளுக்கு விளக்கம் கொடுக்கச் சங்கடமும் கோபமும் வந்தது. காவலாளி மூன்று முறை தேவாவிற்கு முயன்று பார்த்தார். அவன் குளித்துக் கொண்டிருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை.

“ம்மா… சார் ஃபோனை எடுக்கலை. பிஸியா இருக்காரு போல. அவரோட அனுமதி இல்லாம யாரையும் உள்ளே விடக் கூடாதுன்னு சொல்லிருக்காரு. தினமும் நாலு பேர் இப்படி அவரைப் பார்க்க, வாய்ப்பு கேட்டு வருவாங்க. ஒரு சிலர் சொந்தக்காரங்கன்னு பொய் சொல்லி உள்ளே போய் எனக்குத் திட்டு வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனாலே உங்களை உள்ளே விட முடியாது!” அவர் அழுத்தமாக மூஞ்சியில் அடித்தாற் போல கடினக் குரலில் கூற, இவள் முகம் மாறாதிருக்கச் சிரமப்பட்டாள். அவளுக்கு பொய்யுரைத்து அவனைப் பார்க்க வேண்டி எந்த அவசியமும் கிடையாது. அவன் அழைத்ததன் பெயரில்தானே வந்தாள். மீண்டும் இவரிடம் அதை கூறி உள்ளே செல்ல விரும்பவில்லை ஜீவா.

அவர் மீது அவளுக்கு எவ்வித கோபமும் இல்லை. அவர் அவருடைய பணியைச் சரியாகச் செய்கிறார். வீட்டிற்கு யாரையும் அழைத்தால் காவலாளியிடம் அதைக் கூற வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூடவா அவனுக்கு இருக்காது? ஒருவேளை அவன் வாய் வார்த்தையாக வெறுமனே அழைத்து, தான்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் மடத்தனமாக வந்து விட்டோமோ என மனம் கேள்வி எழுப்பிற்று. அவள் சில நொடிகள் அசையாமல் அங்கேயே நின்றாள்.

“ம்மா… ரொம்ப நேரம் இங்க நிக்காதீங்கம்மா. யாரும் பார்த்தா என்னைத்தான் திட்டுவாங்க. உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கேட்கணும்னா சாரோட ஆபிஸ் அசோக் நகர்ல இருக்கு. அங்கப் போங்க. இனிமே இங்க வராதீங்க!” அவர் கொஞ்சம் கடுமையைக் கூட்டிப் பேசியதும், சட்டென இவளுக்கு கோபம் வந்தது. இவரிடம் ஏச்சுப் பேச்சுகளை வாங்கி அவனைப் பார்க்கும் அவசியம் என்ன என்ற எண்ணத்தோடு, எதுவும் பேசாமல் வந்த வழியே நடந்தாள்.
பகல் பன்னிரெண்டு மணிக்கு எல்நினோ வெயில் உச்சியைப் பிளந்தது. மீண்டும் நடந்து பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றாள். கால்கள் வெகுவாக வலித்தது. தினமும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உணவகத்தை மூடும் வரை நின்றே வேலை செய்வதால் கால் வலி நிரந்தரமாகத் தங்கிப் போயிருந்தது.

அவன் அழைத்ததும் வந்தது தன் தவறு. தேவையில்லாமல் வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் விடுமுறையை வீணாக்கிவிட்டோம். ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பயணம் செய்து வந்தாள். அதில் உடல் வேறு அசதியாக இருந்தது.

‘இதெல்லாம் உனக்குத் தேவையா? அவன் கூப்பிட்டா வருவீயா? ஏதோ வாய் வார்த்தைக்குக் கூப்பிட்டிருப்பான். உடனே சீவி சிங்காரிச்சு வந்துட்ட. பணம் காசு வந்தா மனுஷங்க மாறிடுவாங்க. அதுக்கு இவன் மட்டும் என்ன விதிவிலக்காக?’ எனக் கலங்கிய மனத்தைச் சமாதானம் செய்தபடியே காலார நடந்தாள். அந்த தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. நகரத்தின் மையத்தில் கேட்கும் இரைச்சல் எதுவும் இல்லாது தூய்மையாக இருந்தது. அதை மெதுவாக உள்வாங்கினாள். அவர்கள் வசிக்கும் பகுதியில் இரவு தூங்கும்போது கூட வாகன சத்தம் காதைப் பிளக்கும். பணமிருந்தால் இப்படி சுகவாசியாக வாழலாம் என எண்ணி உதட்டை வளைத்துச் சிரித்தாள்.

மீண்டும் வீட்டிற்குச் சென்றால் கிரிஜா என்ன ஏதெனத் தோண்டித் துருவி விசாரிப்பார் என்பதால், வேறு எங்காவது செல்ல வேண்டும் என்ற கட்டாயம். ஆனால் உடல் வீட்டிற்குச் சென்று படு என அனத்தியது. மனம் சரியில்லாதது போலத் தோன்ற, சில நொடிகள் யோசித்தவள், வரும் வழியில் பார்த்த கபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்லலாம் என முடிவெடுத்தாள்.

அந்தப் பகுதியில் பெரும்பாலும் பேருந்து வருகை இல்லை என்பதை உணர்ந்தவள், ஒரு தானியிலேறிக் கோவிலை அடைந்தாள். அவளது நல்ல நேரம், கோவில் திறந்திருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளே சென்று சாமியைத் தரிசித்தவள், பிரகாரத்தில் அமர்ந்து சுற்றி நடப்போரை விச்ராந்தையாக வேடிக்கைப் பார்த்தாள்.

தேவா குளித்துவிட்டு வந்தவன், காவலாளி இத்தனை முறை ஏன் அழைத்திருக்கிறார் என யோசனையுடன் அவரது இலக்கத்தைச் சொடுக்கினான்.

“சார்… ஒன்னும் இல்ல. ஒரு பொண்ணு உங்களைப் பார்க்கணும்னு வந்தாங்க. நான், வாய்ப்பு கேட்டு வர்றதுன்னா ஆஃபிஸ் போங்கம்மா. வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டேன்!” என அவர் வெகுசாதாரணமாகக் கூற, சுள்ளென இவனுக்குக் கோபம் வந்தது.

“நான் என்ன சொன்னேன் வாட்ச்மேன் உங்ககிட்ட? என் ப்ரெண்ட் ஜீவான்னு ஒருத்தவங்க வருவாங்கன்னு சொன்னேன்ல. அந்தப் பொண்ணுதான் வந்திருப்பாங்க. என்ன சொல்லி அவங்களை அனுப்பி வச்சீங்க?” எனச் சூடாகக் கேட்டான். அதில் அந்த மனிதர் பயந்து போனார்.

“சார்… நீங்க ஜீவான்னு சொல்லவும் நான் பையன்னு நினைச்சுட்டேன். பொண்ணுக்கு ஜீவான்னு பேரெல்லாம் வப்பாங்கன்னு எனக்குத் தெரியாது. அதான் உள்ளே விடலை. மன்னிச்சுக்கோங்க சார்!” என அவர் உடனே மன்னிப்பை யாசித்தார்.

“ப்ம்ச்… நீங்க சாரி கேட்டா ஆச்சா? எப்போ வந்தாங்க அவங்க? எப்போ கிளம்புனாங்க?” என விசாரித்தவன், “சொன்ன வேலையைச் சரியா செய்யலைன்னா வேற வேலை பார்த்துக்கோங்க, வாட்ச்மேன். என்னை டென்ஷன் பண்ணிட்டீங்க நீங்க?” எனக் காய்ந்துவிட்டு ஜீவாவின் எண்ணுக்கு அழைத்தான். இரண்டு, மூன்று, நான்கு எனக் கடந்ததும், தேவா விடமாட்டான் என உணர்ந்து அழைப்பை ஏற்றாள் ஜீவா.

error: Content is protected !!
Scroll to Top