“ஜீவா… மணி என்னன்னு பார்த்தீயா? சாப்பிட யாரும் வந்தா கடையை அடைக்கப் போறோம்னு சொல்லு!” கிரிஜா மகளை அதட்டினார்.
“ம்மா… மேன்சன்லருந்து ரெண்டு பேர் சாப்பிட வரலை. பத்து நிமிஷத்துல வர்றோம்னு சொன்னாங்க. அடைச்சிட்டுப் போய்ட்டா அவங்க பட்டினியா கிடக்கணும். நீங்க போங்க… அதான் அசார் அண்ணா இருக்காரே. நான் கடையை அடைச்சிட்டு வரேன்!” எனத் தாயை அனுப்பியவள், உணவு மேஜையில் அமர்ந்துவிட்டாள். அன்றைக்கு தேவாவிற்கு இரண்டு தயாரிப்பாளர்களைச் சந்திக்க வேண்டியிருந்ததால் தாமதமாகத்தான் அறைக்கு வந்தான்.
எப்படியும் உணவகத்தை அடைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் வெறும் தண்ணீரைக் குடித்துப் படுக்கும் யோசனையுடன் வந்தான். ஏதோ ஜீவா புண்ணியத்தில் இப்போதெல்லாம் அவன் வயிறு நிரம்பிக் கொண்டிருக்கிறது. அங்கு தவிர வேறெங்கு உண்டாலும் பணம் செலுத்த வேண்டும். அதனாலேயே வேறு எந்த இடத்திலும் உண்ணாமல், முடிந்தளவு நேரத்திற்கு வரப் பழகியிருந்தான். ஆனால், இன்றைக்குத் தாமதமாகிப் போக, தன்னையே நொந்தபடி வந்தான்.
ஆனால், உணவகத்தில் பளிச்சென மின்விளக்கெரிய இவன் முகமும் மலர்ந்தது. ஒரு சில நாட்கள் வாடிக்கையாளர் தாமதமாக வந்தால் உணவகம் திறந்திருக்கும். அப்படித்தான் போல என எண்ணியபடியே விரைந்து அங்கு சென்றான். அவன் உள்ளே செல்ல, அதற்காகவே காத்திருந்தது போல ஜீவா எழுந்து ஒரு தட்டில் இலையை வைக்க, அசார் தோசையைக் கல்லில் ஊற்றினார். அவன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.
தன்னைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. தனக்காகத்தான் இந்தப் பெண் காத்திருந்திருக்கிறாளா எனச் சங்கடத்துடன் உண்ண அமர்ந்தான் தேவா. அவள் செயலில் அவனுக்கு ஒரு மாதிரியானது. இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது எனத் தெரியாமல் அவளையே பார்த்தான்.
ஜீவா அவன் தட்டில் தேங்காய் சட்னியை வைக்க, “சாரி… இன்னைக்கு வொர்க். அதான் லேட்டாகிடுச்சு!” என்றான் சின்ன குரலில். அவள் தலையசைத்துவிட்டு அகன்று சாம்பாரை எடுத்து வந்து ஊற்றினாள்.
“தேங்க்ஸ் எனக்காக வெயிட் பண்ணதுக்கு!” அவன் கூறியதை மீண்டும் தலையசைப்பில் ஏற்றவள், சூடாக தோசையை அவன் தட்டில் வைத்தாள்.
அவள் முகத்தையே பார்த்த தேவா, “எனக்காக இனிமே இப்படி அன்டைம் வரை வெயிட் பண்ண வேணாம். அது சேஃப் இல்ல. எப்பவும் க்ளோசிங் டைமுக்கே அடைச்சிடுங்க. லேட்டாகிடுசுன்னா நான் என் ரூம்மேட்கிட்டே சொல்லி பார்சல் வாங்கி வைக்கச் சொல்றேன்!” அவன் குற்றவுணர்வோடு கூற, சின்னவள் முறுவலித்தாள்.
“தோசை ஆறிடப் போகுது. ரெண்டு போதுமா? இல்ல இன்னொன்னு சுட சொல்லவா?” எனக் கேட்டதும், சட்டென இவனுக்குத் தாயின் நினைவு வந்து போக, மனம் பிசைந்தது.
“இல்ல ரெண்டே போதும்…” என உண்டு முடித்தவன், அசாரிடமும் நன்றியை நவில்ந்து, ஜீவாவைப் பார்த்து தலையசைத்துவிட்டுப் போனான். அதன் பின்பு அவன் எப்போது வரத் தாமதமானாலும், அவனது அறைத் தோழனிடம் உணவைக் கொடுத்துவிடுவாள் ஜீவா. அதிலிருந்து தான் அவர்கள் இவளையும் அவனையும் இணைத்து அதிகமாகக் கேலி பேசி சிரித்தனர்.
நான்கைந்து வருடங்களுக்கு முன்னே நடந்த நிகழ்வுதான். இப்போது நடந்தது போல மெல்ல நினைவை ஆக்கிரமித்தது.
“நான் யாருக்கும் கடன்காரனா இருக்க விரும்பலை!” மீண்டும் தேவாவின் வார்த்தைகளே மனத்தைப் போட்டுக் குடைந்தன. மேலும் அந்த எண்ணத்தை வளரவிடாமல் செய்தவள், முயன்று தூங்கிப் போனாள்.
மறுநாளும் சரியாக அவள் வேலை நேரத்தில் அழைத்தான் தேவா. ஜீவா அழைப்பை ஏற்காமல், மூன்று மணிக்கு மேல் பேசலாம். தற்போதைக்குப் வேலையிருக்கிறது என அனுப்பிவிட்டு உணவகத்தைக் கவனித்தாள். கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் கிடைத்ததும் அவனுக்கு அழைப்பை விடுத்தாள்.
“ரொம்ப பிஸி போல ஓனரம்மா?” நான் அழைத்து நீ ஏற்கவில்லை என்ற கோபத்தைக் கேலியாகக் காண்பித்தான் தேவா.
“பின்ன என்ன பண்றது சார்? ஹோட்டல்னு இருந்தா நாலு பேர் சாப்பிட வருவாங்கதானே? கஸ்டமர்ஸை ஒழுங்கா கவனிச்சாதான் எங்களுக்குப் பொழப்பு ஓடும். ஏனோ தானோன்னு இருந்தா அப்புறம் யாரும் கடை பக்கம் வர மாட்டாங்களே. எங்களுக்கு எங்க வேலை முக்கியம் சார்!” அவன் பேச்சின் அர்த்தம் புரிந்ததும், அழுத்தமாகப் பதிலளித்தாள் இவள்.
“சாரி… ஐ டிடின்ட் மீன். நான் சும்மா கேட்டேன்!” அவன் சட்டென இறங்கி வர,
“பரவாயில்லை சார். நான் நேத்தே அனுப்பிட்டேனே எவ்ளோ அமௌண்ட்னு. நீங்க அதே நம்பருக்கு ஜி.பே பண்ணிடுங்க!” இவள் பேச்சைக் கத்தரிக்க முயன்றாள்.
“யெஸ்… யெஸ், பார்த்தேன் நான். அதென்ன ஆயிரம் ரூபா வட்டி?” அவன் நெற்றியைச் சொரிந்தபடியே கேட்டான். அவனுக்கு அவளிடம் பேச்சை வளர்க்க வேண்டியிருந்தது போல.
“ஹம்ம்… உடனே கொடுத்திருந்தா வட்டி கேட்டிருக்க மாட்டேன் சார். நீங்க ரொம்ப வருஷம் கழிச்சுக் கொடுக்குறீங்க. சோ, மினிமம் வட்டிப் போட்டுக் கேட்டேன். கடனை அடைக்கிறதுன்னு முடிவாகிடுச்சு. அதான் மொத்தமா அடைச்சிட்டா எல்லாமே முடிச்சுக்கலாம்னு.
சப்போஸ் உங்களால வட்டி தர முடியலைன்னா பரவாயில்லை. இருப்பதஞ்சாயிரம் மட்டும் அனுப்புங்க, போதும்!” அவள் சாதாரணமாகப் பேசினாள். ஆனால் அவனுக்கு அதில் வேறு எதுவோ ஒளிந்திருப்பதாகத் தோன்றியது.
“நோ… நோ. நான் தேர்டி தௌசண்ட் தரேன். அது ஒன்னும் பிரச்சனை இல்ல. என்னோட யுபிஐ-ல ஏதோ இஷ்ஷூ. மணி ட்ரான்ஸ்பராக மாட்டுது!” அவன் கூறியதும்,
“பரவாயில்லை சார்… அது என்னென்னுப் பார்த்துட்டுப் பொறுமையாவே அனுப்புங்க. அர்ஜெண்ட் எதுவும் இல்ல!”
“ஹம்ம்… இல்ல. ஆல்ரெடி ரொம்ப நாளா நான் கொடுக்காம இருந்துட்டேன். இதுக்கும் மேல டிலே பண்ணா நல்லாருக்காது. நீ நேர்ல வந்து வாங்கிக்கோ ஜீவா. என் வீட்டுக்கு வர்றீயா?” அவன் வீட்டிற்கு அழைத்தான்.
“சாரி சார்… நான் இல்லாம இங்க வொர்க் சரியா நடக்காது. உங்ககிட்டே காசு வாங்குறதுக்காக ஒருநாள் மெனக்கெட்டு நான் வர முடியாது. நீங்க எப்போ முடியுமோ அப்போவே கொடுங்க. நான் வர்றது கஷ்டம்!” உண்மையாகவே ஜீவாவால் விடுமுறை எடுத்து அவன் வீட்டிற்குச் செல்ல முடியாது. தீபாவளி, பொங்கல் எனப் பண்டிகை தினங்களைத் தவிர்த்து பெரும்பாலான நாட்களில் உணவகம் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். அதை நம்பி நூற்றுக்கணக்கானோர் உணவுண்ண வருவார்கள். அவர்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கொடுக்க வேண்டுமென இவள் விடுமுறை எடுப்பதைத் தவிர்ப்பாள்.
“சண்டே கூட வரலாம். நானும் அப்போ ஃப்ரியா இருப்பேன். அம்மாவும் வீட்ல இருப்பாங்க. லஞ்ச் சாப்பிட்டுட்டுப் போகலாம். ஜஸ்ட் ஒரு தேங்க்ஸ் கிவ்விங்தான். ரொம்ப லேட்டா பண்றேன். பட், பண்ணணும்னு தோணுச்சு. அதான் கூப்பிட்றேன்!” அவன் உண்மையாக நன்றியுரைக்க வேண்டுமென அழைக்க, ஜீவாவால் சட்டென எடுத்தெறிந்து பேச முடியவில்லை. மறுக்கத் தயக்கம் வந்தாலும், இதை வளரவிடக் கூடாது என அறிவு கூறியது. மனத்திற்கும் அறிவிற்கும் இடையே அல்லாடினாள்.
“சாரி தேவா சார்… நீங்க இவ்ளோ தூரம் கூப்பிட்டும் என்னால வர முடியாத சிட்சுவேஷன். எனக்கு லஞ்ச் கொடுத்துதான் தேங்க்ஸ் சொல்லணும்னு அவசியம் இல்ல. நீங்க என்ன உயரத்துக்குப் போனாலும் இவ்ளோ நாள் கழிச்சு எங்க ஹோட்டல் தேடி வந்து சாப்பிட்டதுலயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதுவே உங்க தேங்க்ஸை சொல்லிடுச்சு!” மனத்தைப் போட்டு ஏதோ அழுத்தினாலும், தன்மையாக மறுத்துவிட்டாள்.
“நெக்ஸ்ட் சண்டே கூட ஓகேதான். அம்மாகிட்டே உன்னைப் பத்தி சொன்னேன். ஷீ வான்ட்ஸ் டூ மீட் யூ. சோ, கண்டிப்பா நீ வரணும் ஜீவா!” அவன் விடாமல் அழுத்தி அழைத்தான். இவளுக்கு இதற்கு மேலும் மறுத்தால் நன்றாக இராது எனத் தோன்றிற்று.
அவனின் இன்றைய நிலைக்கு தன்னிடம் இப்படி பேச வேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கப் போகிறது? காசைக் கொடுத்துக் கணக்கை முடித்துவிட்டுப் போகலாம். ஆனால், தன்னை மதித்து அழைக்கிறான் என உள்ளுணர்வு உந்த, “ஓகே சார், இந்த ஞாயித்துக் கிழமையே நான் வரேன். பட், அம்மாகிட்டே சொல்லி கன்பார்ம் பண்ணிட்டு உங்களுக்கு மெசேஜ் போடுறேன்!” என்றாள்.
“குட்… கண்டிப்பா வர்ற. நான் எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்…” என அவன் அழைப்பைத் துண்டித்தான். வருகிறேன் எனச் சொல்லிவிட்டாலும் கூட, இவளுக்குச் செல்ல மனத்தில்லை. காசை வாங்கியதும் மொத்தமா இந்த உறவை முறித்துக் கொள்ளவே அவள் விரும்பினாள்.
ஞாயிறுக்கும் வெள்ளிக்கும் இடப்பட்டு இந்த சனிக்கிழமை நாளை இருப்பதால், பிறகு யோசித்துக் கொள்ளலாம் என்று அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்தாள்.
வருகிறேன் என்றுவிட்ட பின்னர் செல்லாமல் இருப்பது நாகரீகம் அல்ல எனத் தன்னையே சுய சமாதானம் செய்தவள், கிரிஜாவிடம் தன் தோழியைப் பார்க்கப் போவதாகக் கூறினாள்.
“எந்தப் ப்ரெண்ட்? இங்க எங்க இருக்கா? திடீர்னு பார்க்க போறேன்னு சொல்லுற ஜீவா? தம்பியைக் கூட்டிட்டுப் போறீயா? தனியா போக வேணாம்?” என அவர் மகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறைய கேள்விகளாகக் கேட்டார். இவள் அனைத்தையும் சமாளித்து அவரிடம் அனுமதி பெற்றாள்.
தொடரும்…