மௌனம் – 4
“ஜீவா… இந்த தம்பி காசு அனுப்பிட்டேன்னு சொல்றாரு. ஆனால் எனக்கு மெசேஜ் எதுவும் வரலை. ஸ்பீக்கர்லயும் சவுண்ட் கேட்கலை. என்னென்னுப் பாரு!” கிரிஜா அழைத்ததும், துப்பட்டாவில் ஈரமாக இருந்த கையைத் துடைத்த ஜீவா, பணம் செலுத்துமிடம் சென்று அந்த முதியவரின் அலைபேசியை வாங்கிப் பார்த்தாள். அந்த வாடிக்கையாளர் பணம் செலுத்த முயன்றிருக்கிறார். ஆனால், பணம் இவர்களுக்கு வராமல் இடையில் நின்று தோல்வி எனக் காண்பித்தது. அவரது கணக்கிலும் காசு இல்லை.
சில நிமிடங்கள் யோசித்தவள், “சார்… நீங்க அனுப்புன பேமெண்ட் எங்களுக்கு ரிசீவ் ஆகலை. பேங்க்ல மாட்டிருக்கு. எப்படியும் ஒரு நாள்ல உங்க அக்கவுண்டுக்கே திரும்பி வந்துடும். சோ, நீங்க கைல காசிருந்தா கொடுத்துட்டுப் போங்க!” என்றாள், அவருக்குப் புரிய வைத்திடும் நோக்கோடு. அவர் முகம் மாறியது.
“ஏம்மா… காசு அனுப்பிட்டேன்னு சொல்றேன் நான். நீ என்னடான்னா பேங்க்ல மாட்டிக்கிச்சுன்னு சொல்ற? நான் நாலு வருஷமா ஆன்லைன் ட்ரான்சாக்ஷன் பண்ணிட்டு இருக்கேன். ஏமாத்த பார்க்காதீங்க!” என அவர் சண்டைக்குத் தயாரானார்.
“சார்… உங்களை ஏமாத்தணும்னு எங்களுக்கு எந்த எண்ணமும் இல்ல. சரி, நீங்க எங்களுக்கு பணம் அனுப்புன டீடெயில்ஸ் காட்டுங்க. அதுல பணம் சென்டாகி இருக்கான்னு செக் பண்ணி சொல்லுங்க!” என அவர் கையில் அலைபேசியைக் கொடுத்தாள். இதுபோல பல வாடிக்கையாளர்களை அவள் பார்த்திருக்கிறாள். அதனாலேயே கோபம் கொள்ளாமல் பொறுமையாகப் பேச முயன்றாள். அவர் அலைபேசியை ஒருமுறை துழாவிவிட்டு நிமிர்ந்தார். பணம் உணவகத்திற்குச் செல்லவில்லை என்றால் எங்கே போனது என அவர் முகத்தில் பெரும் குழப்பம்.
“சார்… நீங்க எந்த ஏரியா?” என ஜீவா கேட்டதும், அவர் இரண்டு தெரு தள்ளிதான் தன் வீடு என முகவரியை அடையாளத்தோடு கூறினார்.
“சரி… இந்த ஏரியா தானே நீங்க? இப்போ காசு கொடுத்துட்டுப் போங்க. ஒருநாள்ல உங்க அக்கவுண்டுக்கு பணம் திரும்பி வந்துடும். அதிகபட்சம் ரெண்டு நாளாகலாம். அப்படியும் வரலைன்னா இங்கேயே வாங்க. நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்திடுறேன். உங்களை ஏமாத்தி சம்பாரிக்கிற பணம் எங்களுக்கும் உடம்புல ஒட்டாது. ஹோட்டல் எப்பவும் காலைல எட்டு மணிலருந்து நைட்டு பத்து மணி வரை இருக்கும் சார்!” ஜீவா கூறவும், அவர் அரைகுறை மனதோடு பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
“ப்பா… இதுக்குத்தான் கைல காசு வாங்கிக்கணும்னு சொல்றது. தினமும் யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ரோதனை பண்றாங்க!” கிரிஜா சடைக்க, ஜீவா தன் வேலையைப் பார்க்க அகன்றாள்.
அப்பளம் தீர்ந்துவிட்டதென கொதிக்கும் எண்ணெயில் ஒவ்வொரு அப்பளமாக அவள் பொரித்தெடுக்க, இடுப்பில் சொருகியிருந்த அலைபேசி இரண்டு முறை அதிர்ந்து அடங்கிற்று. சமையல் செய்யும்போது பெரும்பாலும் அவள் அழைப்புகளை ஏற்க மாட்டாள். அப்படி நிரம்ப அவசியம் என்றால் தள்ளி நின்று பேசுவாள். பேச்சு மும்முரத்தில் கவனக் குறைவாக அடுப்பிலிருக்கும் பதார்த்தம் மேலே சிந்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் அவளுக்கு உண்டு.
“அசார் அண்ணா… அப்பளத்தை எடுத்துட்டுப் போய் வைங்கண்ணா. ரெண்டு பேர் கேட்டுட்டே இருக்காங்க!” என அசாரை அழைத்து பொரித்த அப்பளங்களைக் கொடுத்தவள், எண்ணெயால் பிசுபிசுத்த கையைக் கரித்துணியில் துடைத்து அலைபேசியை எடுத்து அந்த இலக்கத்திற்குத் திருப்பி அழைத்தாள். அழைப்பு முடியும் தருவாயில் ஏற்கப்பட்டது.
“ஹலோ… சஷ்டிகா ஹோட்டல். யார் பேசுறது?” புது நம்பராக இருக்கவும், ஏதேனும் வாடிக்கையாளராகத்தான் இருப்பார்கள் என எண்ணிப் பேச்சைத் துவங்கினாள்.
“ஜீவா…” என தேவா ஆரம்பித்ததும், சட்டென அசட்டையாக நின்றிருந்தவளின் இடையிலிருந்த கரங்கள் தளர்ந்தன.
“சொல்லுங்க சார்? எதுக்கு ஃபோன் பண்ணிங்க?” எனத் தன்னை இயல்பாகக் காண்பிக்க முயன்றபடி பேசினாள்.
“என் கடன் எவ்ளோ இருக்குன்னு கேட்டிருந்தேனே ஜீவா? நீயும் பார்த்து சொல்றேன்னு சொல்லி இரண்டு மூனு நாளாகிடுச்சே. அதான் மறந்துட்டீயோன்னு ஞாபகப்படுத்த கால் பண்ணேன்!” என்றவன், முன்னிருந்த திரையில் தெரிந்த கதாநாயகியின் உடையின் நிறத்தைச் சூழலுக்கு ஏற்ப மாற்றினான்.
“ஆ… ஆமா சார். நோட்டு தேடியெடுத்து வச்சேன். சாரி, வொர்க் அதிகமா இருக்கவும் மறந்துட்டேன். இன்னைக்கு நைட் எவ்ளோ காசுன்னு கணக்குப் பார்த்து உங்களுக்கு மெசேஜ் போட்றேன்…” தடுமாறாமல் சரளமாக அவள் பேச, இவனிடம் மௌனம்.
“ஹம்ம்… ஓகே. மறக்காம நைட் அனுப்பு. நான் வெயிட் பண்ணுவேன். என்னைக் கடன்காரனாவே வச்சிருக்கணும்னு நினைக்காத. எனக்கு அது பிடிக்கலை!” தேவா கூறியதும்,
“சே… சே. ஒரு படம் ஹிட் கொடுத்ததும் வந்து காசு தரேன்னு சொன்னிங்க. அப்போ மறந்துட்டீங்க போல. இருந்தாலும் இத்தனை வருஷம் கழிச்சு ஞாபகம் வச்சு நீங்களே வந்து கொடுக்கும்போது நான் ஏன் சார் வேணாம்னு சொல்லப் போறேன்? நான் என்ன சத்திரமா வச்சு நடத்துறேன் எல்லாருக்கும் ஃப்ரியா சாப்பாடு போட? ஒவ்வொரு ரூபாயும் எங்களோட உழைப்பு சார். கண்டிப்பா நைட் நான் எவ்ளோன்னு சொல்லிடுறேன். நீங்க காசு அனுப்பிடுங்க. உங்களுக்கும் கடன் இல்லாம போய்டும்!” அவள் குரலில் என்ன இருந்ததென தேவாவால் கண்டறிய முடியவில்லை போல. ஆனாலும், என்னவோ உறுத்திற்று. படபடவெனப் பேசிவிட்டாள் ஜீவா. யாரிடமும் அவள் யோசிக்காமல் பேச மாட்டாள். ஆனால் தேவாவின் பேச்சு அவளை உந்திற்று. அவன் பதிலேதும் பேசாமல் அமைதிக் காத்தான்.
“நான் ஃபோனை வச்சிடவா சார்? உங்களுக்கும் வேலை நிறையா இருக்கும். எனக்கு இது ரஷ்ஷான டைம்!” உதட்டைக் கடித்து, சின்ன குரலில் கேட்டாள். அவனது மௌனம் இவளை நிதானிக்கச் செய்தது.
“ஓகே… பைன். நானும் சும்மா இல்ல. நெக்ஸ்ட் மூவி எடிட்டிங் செம்ம டைட். இடையில சட்டுன்னு ஞாபகம் வரவும் கால் பண்ணேன். நத்திங் மோர் தன் தட்!” எனப் படக்கென அவன் அழைப்பைத் துண்டித்தான். ஜீவா ஒரு பெருமூச்சுடன் அலைபேசியைச் சில நொடிகள் இமையசையாமல் பார்த்தாள்.
அவன் எண்ணைச் சேமிக்கத் தோன்றாமல் மீண்டும் அலைபேசியை இடையில் சொருகிவிட்டு கல்லாவில் சென்றமர்ந்தாள். கிரிஜா உண்ணச் சென்றார். இவள் வாடிக்கையாளரிடம் பணத்தை வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டிருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு முன்னே உணவுப் பட்டியல் என்னவென யோசித்து, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எவ்வளவு காசு எனக் கணக்கிட்டாள். பின்னர், அதையே முப்பது நாட்கள், ஐந்து மாதங்கள் எனக் கணிப்பானில் கணக்கிட்டு கையில் எழுதி வைத்துக் கொண்டாள்.
அன்றிரவு குளிக்கும்போது வழலைக் கட்டியில் சிவப்பு நிறம் தோன்ற, கையிலென்ன எனப் பார்த்தாள். மதியம் அவள் எழுதி வைத்திருந்த கணக்குதான் என்பது புரிய, குளித்து முடித்து வெளியே வந்ததும் முதல் வேலையாக தேவாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள்.
ஐந்து மாதங்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும், ஒவ்வொரு வருடத்திற்கும் வட்டி ஆயிரம் ரூபாய் எனச் சேர்த்து முப்பதாயிரம் கணக்குப் போட்டு, அதை விளக்கத்துடன் அவனுக்கும் அனுப்பினாள். சில நிமிடங்களிலேயே தேவா அதைப் பார்த்துவிட்டான்.
‘ஓகே…’ எனக் கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கும் பொம்மையோடு உரையாடலை அவன் முடித்திருக்க, இவள் அலைபேசியை அணைத்து தலைக்கு மேலே வைத்துவிட்டு, போர்வையை கழுத்துவரை போர்த்திப் படுத்தாள். கண்கள் மெல்ல அதன் இமையோடு சேர்ந்தன. ஆனால் உறக்கம் வரவில்லை. மெல்ல நினைவு தேவா என்ற மனிதனை அசைபோட்டது.