நாளை கண்டிப்பாக நேரில் செல்ல வேண்டும் என முடிவெடுத்தான். அவன் இயக்கிய முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று பேரும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்ததால், கே.கே.நகரில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி குடும்பத்தை மொத்தமாக இங்கே புலம்பெயர வைத்தவன், தானும் அவர்களுடனே தங்கினான்.
கடந்த நான்கைந்து வருடங்களில் அவன் தாம்பரம் செல்ல நேர்ந்தாலும் உணவகம் இருக்கும் பகுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனும் பெரிதாக அங்கிருந்த மேன்சன், உணவகம், ஜீவா என அனைத்தையும் மறந்து போயிருந்தான். இப்போது கூட ரேணுகா கூறவும்தான் அவனுக்கு அவள் நினைவு வந்தது.
காசைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அவள் என்ன செய்கிறாள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமேயன்றி வேறு ஒன்றும் இல்லை. அவனுக்கு விபரம் தெரிந்து அவனைப் பார்த்த, ம்கூம் காதல், அது இதுவென முதன்முதலில் இணைத்துப் பேசியது ஜீவாவுடன்தான். அதனாலே அவள் நினைவு நெஞ்சில் தங்கிப் போயிருந்தது.
வேலை முடிந்து தாமதமாக வீடு சென்றவன், காலையில் பத்து மணிக்கு மேல்தான் எழுந்தான். பொறுமையாக குளித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒலிப்பதிவகத்தை நோக்கிச் சென்றான். வந்தனா கதாநாயகி பாத்திரத்திற்கு குரல் கொடுக்க வந்திருந்தாள். அவளோடு சற்று நேரம் பேசியவன், மதிய உணவு நேரம் வரவும் ஜீவாவைப் பார்க்க கிளம்பினான்.
இவனது மகிழ்வுந்து அந்த கிழக்குத் தாம்பரத்திலிருந்த அந்த தெருவிற்குள் நுழைந்தது. இவன் நீண்ட வருடங்கள் கழித்துப் பார்ப்பதால் மெதுவாக விழிகளை கழற்றினான். புதிதாக இரண்டு மளிகை கடை, நகலெடுக்கும் கடை என ஆங்காங்கே முளைத்திருந்தன. மேன்சன் இன்னும் அப்படியேதான் இருந்தது. எந்த மாற்றமும் இல்லை. சுவர் பூச்சு மட்டும் மாற்றியிருக்கிறார்கள் என யோசித்துவிட்டு முககவசத்தோடு இறங்கினான்.
சஷ்டிகா உணவகம் கூட அவன் கடைசியாகப் பார்த்தது போல எவ்வித மாற்றமும் இல்லாமல் மங்கிய நிலையிலே காட்சியளித்தது. ஒருவேளை உணவிற்கு கூட பணமில்லாமல் இந்த தெருவில் நடந்து சென்றிருக்கிறோம் என்ற எண்ணத்துடன் அந்த உணவகத்தை நோக்கி நடந்தான்.
“ஏம்மா…பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குன்னு சாப்பிட வந்தா இப்படித்தான் சாப்பாடு போடுவீங்களா. சாம்பாரா? இது ரசமா? ஒன்னுமே கண்டு பிடிக்க முடியலை!” வாடிக்கையாளர் ஒருவர் கத்த,
“அண்ணே… சாம்பாரைக் கலக்கிவிட்டு ஊத்துனதான் காய்கறி, பருப்பு எல்லாம் வரும். நீங்க மேலாப்புல ஊத்திருக்கீங்க போல!” என ஜீவா அவரை சமாதானம் செய்து கரண்டியால் நன்கு கிளறி சாம்பாரை அவருக்கு ஊற்றினாள்.
“ஏங்க… ஒரு நாள் சாப்பிட வந்த இடத்துல என்னங்க சண்டை வேண்டி கிடக்கு? அமைதியா சாப்பிடுங்க. ட்ரெயினுக்கு டைமாச்சு!” அவரின் மனைவி கண்டிக்கவும், அந்த மனிதர் அமைதியாக சாப்பிட, ஜீவா நிம்மதி பெருமூச்சுவிட்டு நிமிர, தேவா உள்ளே வந்தான்.
“வாங்க சார்… என்ன சாப்பிட்றீங்க? உள்ளே வாங்க?” அவன் முக கவசம் அணிந்திருந்ததால் யாரெனத் தெரியாது அழைத்துவிட்டு இலையெடுக்கத் திரும்பினாள். பாபு இலையை எடுத்து வந்து கொடுக்க, தேவா சில நொடிகள் அவள் தோற்றத்தைத்தான் ஆராய்ந்தான். அவன் கடைசியாகப் பார்த்த அதே ஜீவாதான் இவள்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாளோ அப்படித்தான் இப்போதும் தெரிந்தாள் அவன் கண்களுக்கு. துப்பட்டாவை ஒருபக்கமாக கட்டியிருந்தாள். முன்பு கறுப்பு கயிறு ஒன்று கழுத்தில் தொங்கும். இப்போது மெல்லிய தங்கச் சங்கிலி, வட்டப் பொட்டு, மெலிந்த உடல் வாகு என எதிலுமே பெரிதாக மாற்றமில்லை. முகம் மட்டும் வயதிற்கேற்ப முதிர்ந்திருந்தது. கண்களில் முன்பைவிட ஜாக்கிரதை கொஞ்சம் உணர்வு தூக்கலாகத் தெரிந்தது. அப்போதிருந்த அப்பாவித்தனம் மெல்ல மறைந்து கண்டிப்பான பெண்ணாகத் தெரிந்தாள்.
“உக்காருங்க சார்…” அவள் அவனை அழைத்ததும், தொண்டையைச் செருமியவன், “ஜீவா…” என்றான் சின்ன குரலில். இதுவரை அவன் அவளைப் பேர் சொல்லி அழைத்தது இல்லை. அழைக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பதே உண்மை. அவளும் அவனை வாங்க, போங்க அல்லது சார் என விளித்துப் பழகியிருந்தாள்.
அவள் யோசனையுடன் இவனைப் பார்த்தாள். தன் பெயரை உரிமையுடன் சொல்லி அழைக்கும் ஆடவன் யாரென அவள் கண்கள் அவனது விழிகளை உற்று நோக்கின. நொடியில் கண்டு கொண்டவளிடம் சின்னதாகத் திகைப்பு. பின்னர் மெல்லிய அதிர்வு. இரண்டையும் நொடியில் மறைத்து முயன்று முறுவலித்து தலையசைத்தாள். அவனை அவள் இந்நேரம் எதிர்பார்க்கவில்லை.
தேவாவிற்கு ஆச்சர்யம்தான். முககவசத்தை அகற்றாமலே இந்தப் பெண் தன்னை இனம் கண்டறிந்துவிட்டாளே என அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான். அவள் முதற்கட்ட அதிர்விலிருந்து மீண்டிருந்தாள்.
அவளுக்கு அவனை அங்கே சாப்பிட சொல்வதா? வேண்டாமா எனப் பெரும் தயக்கம். தற்போதைய அவன் நிலைக்கு இங்கு சாப்பிடுவானா? என யோசனை சென்றது. அவளையும் அறியாமல் மனம் அவன் தோற்றத்தை அளந்தது. முன்பை விட இன்னும் வசீகரம் கூடிப் போயிருந்தான். வயது குறைந்தது போலொரு தோற்றம். ஏசியின் குளிர் அவனது நிறத்தை உயர்த்தியிருந்தது. நான்கடி தூரத்திலிருந்தாலும் அவன் மேலே வந்த வாசனை திரவியம் மொத்த உணவகத்தையும் மணக்க செய்தது. உடை, கைக்கடிகாரம், கால்சராய் என அவனின் தற்போதைய மதிப்பைக் காண்பித்தன. இவள் மனம் தானாக அவனிடமிருந்து தள்ளி நின்று தன் எல்லையை வரைந்து கொண்டது.
பார்வையை அவன் தோற்றத்திலிருந்து அகற்றியவள், எதற்கு வந்திருக்கிறான் எனக் கேட்கவும் முடியாது, என்ன பேசுவது எனத் தெரியாது அமைதியாக நின்றாள். அவனை அமர வைத்துப் பேசும் நிலையிலும் அவள் இல்லை. அடுத்தடுத்து உணவுண்ண ஆட்கள் வந்து கொண்டே இருக்க, இவனிடம் அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது.
“சாப்பிட்றீங்களா சார்? உள்ளே தனியா டேபிள் இருக்கு? இல்ல வேணாம்… ஜூஸ் ஏதாவது குடிக்குறீங்களா? நான் வாங்கிட்டு வர சொல்றேன்?” எனத் தயங்கிக் கேட்டாள். சாப்பிட சொல்லி அவன் மறுத்துவிட்டால் இவளுக்கும் கஷ்டம். அவனுக்கும் மனசங்கடம் என நொடியில் பழச்சாறு வாங்கி வரவா எனக் கேட்டாள்.
“ஏன்… இத்தனை பேருக்கு சாப்பாடு இருக்கும்போது என் ஒருத்தனுக்கு மட்டும் உங்க ஹோட்டல்ல சாப்பாடு தீர்ந்து போச்சா என்ன?” அவன் கேலியாக கேட்டான். அவளுடைய தயக்கத்தை முகம் பார்த்தே அறிந்திருந்தான். அவன் அப்படிக் கேட்டதும் அவளிடம் ஒரு ஆசுவாசம். அவளைப் போல அவனிடம் எந்த தயக்கமும் இல்லை. மூன்றரை வருட காலம் அவனது வயிற்றுக்கு உணவு ஈந்த இடத்தை அவன் ஒருபோதும் குறைவாக எண்ண மாட்டான். அவனுடைய குணமும் அதுவன்று.
“அப்படியெல்லாம் இல்ல… நீங்க உள்ளே வாங்க. அங்க உட்கார்ந்து சாப்பிடுங்க!” என ஊழியர்கள் உட்கார்ந்து உண்ணும் மேஜைக்கு அழைத்துச் சென்றாள். நல்லவேளை அது இன்றைக்கு வெகு சுத்தமாக இருந்தது. கூட்டம் அதிகமாகி விட்டால் வாடிக்கையாளர்களை இங்கே அமர வைத்து உணவுண்ண வைப்பது வழக்கம் என்பதால் அது யாருக்கும் தவறாகத் தெரியவில்லை.
அவனுக்கு இலையைப் போட்டு சாப்பாடு, சாம்பார், கூட்டு, பொரியல் என பரிமாறியவள், “டேஸ்ட் முன்ன பின்ன இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க. நீங்க வருவீங்கன்னு தெரியாது. இல்லைன்னா நான் ஏதாவது ஸ்பெஷலா செய்ய சொல்லிருப்பேன்!” அவன் முகம் பார்த்தபடியே உரைத்தாள் ஜீவா. அவனிடம் மெல்லிய புன்னகை.
“மூன்றரை வருஷமா என்னைப் பசியில வாட விடாம எனக்கு டைமுக்கு சாப்பாடு போட்டது இந்த ஹோட்டல்தான். அப்போலாம் இந்த சாப்பாடுதான் எனக்கு அமிர்தமா இருந்துச்சு. இப்போ மட்டும் இதுல என்ன குறை வந்துடப் போகுது. பீ நார்மல் ஜீவா. இன்னும் நான் அதே தேவாதான்?” எனக் கேட்டவன் சோற்றைப் பிசைந்து சாப்பிட ஆரம்பிக்க, ஜீவா அவனையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தாள். அவள் பார்வை உணர்ந்து அவன் நிமிர்ந்தான்.
“அது… வெளிய கஸ்டமர்ஸ் நிறைய இருக்காங்க. நான் போனாதான் சரி வரும். உங்களுக்கு எல்லாமே எடுத்து முன்னாடியே வச்சுட்டேன். வேற எதுவும் வேணும்னா என்னைத் திரும்பிப் பாருங்க. நான் வரேன்!” என்றவள் அவன் பார்வையை சந்திக்காமல் நகர்ந்திருந்தாள். தேவா அவளையேதான் பார்த்திருந்தான்.
திருமணமானதற்கான எந்த அடையாளமும் அவளிடம் தென்படவில்லை. இவன் ஒரு பெருமூச்சுடன் உண்ண, இரண்டே நிமிடத்தில் ஒரு குவளையில் பழச்சாறை வைத்துவிட்டுப் போனாள் ஜீவா. தேவா பொறுமையாக ரசித்து ருசித்து உண்டான். அவன் சாப்பிடும் வரை அவள் தூரத்தே இருந்து பார்த்திருந்தாள்.
சாப்பிட்டு கையைக் கழுவினான் தேவா.
“பாபு…சார் எனக்குத் தெரிஞ்சவர். ஐஞ்சு நிமிஷம் பேசிட்டு வரேன். நீ ஃபோன் பார்க்காம கஸ்டமரைக் கவனி. இல்ல உதை விழும்!” என சின்னவனை அதட்டியவள், கோமதியையும் பார்த்துக் கொள்ள சொல்லவிட்டு அவனிடம் சென்றாள்.
அவன் எதற்காக வந்திருக்க கூடுமென இவளுக்குத் தெரிந்தாக வேண்டியிருந்தது. கண்டிப்பாகத் தேடிப் பிடித்து தங்கள் உணவகத்திற்கு உண்ண வந்திருக்க மாட்டான். அருகிலே பெரிய மூன்று, ஐந்து நட்சத்திர உணவகங்களும் உண்டு என எண்ணியவாறே அவனருகே சென்றாள்.
“இன்னும் அந்தக் கணக்கு நோட்டை அப்படியே வச்சிருக்கீயா ஜீவா?” ஒருமை விளிப்பு ஏன் வந்தது என அவனுக்குத் தெரியவில்லை. அவன் கேள்வியில் அவள் நெற்றி சுருங்கியது.
“எந்த நோட்டு?” அவள் யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
“நான் ஒரு ஃபைவ் மந்த்ஸ் காசு கொடுக்காம சாப்பிட்டேனே. அப்போ நோட்டு போட்டு எழுதுறேன்னு சொன்னல்ல. அந்த நோட்டு எங்கன்னு கேட்டேன்…” அவன் விளக்க,
“ஓ… அதைக் கேட்டீங்களா சார்? ஹம்ம்… ஆமா. இருக்கும். ஆனால் ரொம்ப வருஷம் ஆகிடுச்சுல்ல. எங்க இருக்குன்னு தேடணும். இப்போ எதுக்கு அது? கணக்கை முடிக்கலாம்னு வந்தீங்களா?” என சின்ன முறுவலுடன் அவனிடம் கேட்டாள். அன்றைக்கு அவன் சங்கடப்பட்டு உண்ணாமல் செல்லக் கூடாது என்றுதான் பொய்யுரைத்திருந்தாள். மற்றபடி அவன் சாப்பிட்ட எதற்கும் அவள் கணக்கு எழுதி வைக்கவில்லை. அதை சொல்ல மனம் வராமல் பொய்யுரைத்தாள். ஆனால் தேவாவிற்கு அவள் கூற்றின் உண்மைத்தன்மை புரிந்தே இருந்தது.
“குட்… குட். அந்த நோட்டை எடுத்து எவ்ளோன்னு சொன்னா நான் காசைக் கொடுத்துடுவேன். எனக்கும் கடன் இல்லாம போய்டும்!” அவன் கூறியதும்,
சில நொடிகள் யோசித்தவள், “இப்போ எடுக்க முடியாதே சார்? வேலை நிறையா கிடக்கு. நான் நைட்டு இல்லன்னா ரெண்டு நாள்ல தேடியெடுத்து அனுப்பறேன். நீங்க வரணும்னு அவசியம் இல்ல. யு.பி.ஐல ட்ரான்ஸ்பர் பண்ணி விடுங்க போதும்!” அவளும் இலகுவான குரலில் கூறி சம்பிரதாயமாகப் புன்னகைத்தாள்.
“ஷ்யூர்… ஷ்யூர். நான் மணி ட்ரான்ஸ்பர் பண்றேன். உன் ஃபோன் நம்பர் சொல்லு. அதுக்கே அனுப்பி விடுறேன்!” என்றான் தன் அலைபேசியைக் கையிலெடுத்து.
“கேஷ் கவுண்டர்ல க்யூ.ஆர் கோடு இருக்கும். அதைப் போட்டோ எடுத்துக்கோங்க. அதுக்கே பே பண்ணிடுங்க சார்!” அவள் வெளியே கைக் காண்பித்தாள். என்னவோ அலைபேசி எண்ணை இவனிடம் கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை.
“எனக்கு உன் நம்பர் வேணும் ஜீவா!” அவன் அழுத்தமாகக் கேட்டான். அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
தொண்டையைச் செருமியவன், “இல்ல… எங்க வீட்ல ஏதாவது பங்க்ஷன் வச்சா இங்க இருந்து சாப்பாடு ஆர்டர் பண்ணலாம்னு கேட்டேன்!” என்றான் பொய்யை புனைந்து.
“உங்க வீட்டு விசேஷத்துக்கு ஆர்டர் போட்டு சாப்பிட்ற அளவுக்கு எங்க ஹோட்டல் சாப்பாடு இருக்காதே சார். இது பட்ஜெட் பார்த்து பசிக்காக வந்து சாப்பிட்ற இடம். ருசிக்காக எல்லாம் ஆர்டர் போட்டா அப்புறம் உங்களுக்குத்தான் கஷ்டம். பக்கத்துல நல்ல நல்ல ஹோட்டல் இருக்கு. நீங்க அங்க ஆர்டர் போட்டுக்கோங்க!” முகம் மாறாது வாடிக்கையாளரிடம் பேசும் தொனியிலே உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன் கூறினாள்.
“சரி… ஸ்விக்கி சொமேட்டோல நானாவது ஆர்டர் போட்டு சாப்பிட்டுக்கிறேன். நானெல்லாம் பசிக்கு சாப்பிட்றவன்தான் மா. உன் ஃபோன் நம்பர் கொடு. மெனு என்னென்னு கேட்டுக்க ஈஸியா இருக்கும்!” அவள் அலைபேசி இலக்கத்தைப் பெறுவதிலே குறியாக இருந்தான் தேவா.
“தாம்பரத்துலருந்து கே.கே நகருக்கு ஆர்டர் போட்டா சாப்பாடு ஆறி அவலா போய்டும் சார். பக்கத்துலயே ஏதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா பார்த்து ஆர்டர் போட்டு சாப்பிடுங்க. அங்கதான் உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் சாப்பிடுவாங்க” என அவள் முகம் மாறாமல் கூற, தேவா அவளை அழுத்தமாகப் பாரத்தான்.
“எனக்கு உன் நம்பர் வேணும் ஜீவா!” எந்தப் பூச்சும் இல்லாமல் அவன் கேட்டதும், இவள் சில நொடிகள் யோசித்தாள். வேண்டாமென மூளை கூற, மனம் தாராளமாக வழங்க முன் வந்தது. உதட்டைக் கடித்தவள், பின்னர் சின்ன குரலில் தன் இலக்கத்தைப் பகிர்ந்தாள்.
“தேங்க்ஸ் நோட்டட்… நீ எவ்ளோன்னு கணக்குப் பார்த்து எனக்கு வாட்சப் பண்ணு. நான் பே பண்ணிடுறேன். கணக்கை முடிச்சுக்கலாம்!” என அவன் கூற, இவள் சரியென்று தலையசைத்தாள்.
“இப்போ சாப்பிட்டதுக்கு எவ்ளோ ஆச்சு?” அவன் கேட்டதும்,
“எய்ட்டி ரூபீஸ். கேஷ் கவுண்டர்ல ஒரு மீல்ஸ்னு சொல்லி பே பண்ணிடுங்க சார்!” என்றவள், மீண்டும் வருக என்ற வார்த்தையை மட்டும்தான் உபயோகிக்கவில்லை. மற்றபடி ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் மறுமுறை வரும்படி புன்னகையுடன் பேசுவது போலத்தான் இவனிடமும் கூறினாள். தேவா தலையசைத்து அகல, அவன் பின்னே பார்வையைத் தொடர விடாமல் அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கப் போனாள்.
தொடரும்…