“தயிர் பச்சடி வைக்கவா தம்பி?” எனக் கேட்டு தேவாவின் தட்டில் இல்லாதவற்றைப் பார்த்து பார்த்து கிரிஜா பரிமாறினார்.
“ம்மா… நீங்க சாப்பிடுங்க. நான் அவரைப் பார்த்துக்கிறேன்…” எனத் தாயை அதட்டி அடக்கிய ஜீவா, அவரை உண்ண வைத்தாள். புதுமணமக்கள் மறுவீட்டு விருந்திற்காக தாய்வீடு வந்திருந்தனர். கிரிஜாதான் மகளுக்கும் மருமகனுக்கும் தன் கையாலே விருந்து சமைத்துப் பரிமாறி மகிழ்ந்தார். ஜீவாவை ஒரு நல்லவனுக்குத் திருமணம் செய்து வைத்த திருப்தி அவரிடம் அடர்ந்து கிடந்தது. அவளைப் பற்றிய கவலைகள் அகன்றவராக வலம் வந்தார். மகளுக்கும் அது புரிய சிரித்துக் கொண்டாள்.
சட்டென முத்துக்குமார் நினைவிற்கு வந்தான். அவனிடம் இவள் எப்படி பேசுவது, விளக்குவது எனத் தெரியாமல் தடுமாறி நின்ற கணத்தில் தேவாதான் இடை புகுந்து அவனை சமாதானம் செய்தது. அவனுக்கு நிரம்ப கோபம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாள் என அவன் சண்டையிடத் தொடங்க, இரு வீட்டு பெரியவர்களும் பேசி பிரச்சனையைத் தீர்த்தனர்.
முத்துக்குமாரின் தாயிற்கு ஜீவாவை விடுவதில் விருப்பமே இல்லை. தனக்கு உடல்நலக்
கோளாறு ஏற்பட்ட போது எவ்வித முகச்சுணக்கமும் அற்று மருத்துவமனை அழைத்துச் சென்று பார்த்துக் கொண்டதே அவருக்கு கண்ணில் நின்றது.
அமைதியான, அருமையான பெண் ஜீவா. அவளை மருமகளாக்கிக் கொள்வதில் மகனைவிட அவரே அதி-ஆர்வம் காண்பித்தார். கடைசியில் அது இல்லையென்றான பின்னர் அவருக்கு வருத்தம்தான்.
அவளது கையை இறுக்கிப் பிடித்தவர், “எங்க இருந்தாலும் உன் மனசு போல இருத்தா. எனக்குத்தான் உன்னை மருமகளாக்கிக்க குடுத்து வைக்கலை!” என மனதே இல்லாமல் அவர் கூறியதில் ஜீவாவிற்கு சங்கடம் வந்தது. வெறுமனே சிரித்து சமாளித்தவள், தேவாவிற்கு அழைத்து காய்ந்துவிட்டாள். அவன் இரண்டு நாட்களாக குட்டிக்கரணம் அடித்து அவளை சமாதானம் செய்ததும் நினைவு வர, முறுவலித்தாள்.
அன்றைய நினைவில் உணவில் கவனமாக இருந்தாலும் கூட, கணவன் எதை விரும்பி உண்கிறான், எதை ஒதுக்கி வைக்கிறான் எனக் கவனித்தாள். அவள் கைகள் அனிச்சை செயலாக வேலு கேட்ட கேள்விக்குப் பதிலளித்தாலும் கூட, அவன் தட்டில் கேசரியை நிரப்பியது. தேவா அவளைச் சின்ன முறுவலுடன் பார்த்தான்.
புதிதாய் கழுத்தில் முளைத்த தாலி, நெற்றி வகிட்டில் சின்னதாக குங்கும், கை நிறைய வளையல் என இன்றைக்கு அவள் பரிபூரணமாகத் தெரிந்தாள். இது போலத்தான் ஐந்தாண்டுகளுக்கு முன்னே அவளுக்கு அவன் உணவு பரிமாறியது நினைவிற்கு வந்தது.
அப்போது அவள் கண்களில் ஒரு ஆர்வம் பின்னோடு தொற்றிக் கொள்ளும். முகம் முதிர்ச்சியற்றிருந்தாலும் கூட வேலை செய்வதில் பெரிய மனிதரையே மிஞ்சி விடுவாள். அவன் வரும் நேரத்தை சரியாக கணக்கிட்டு யாருடைய கருத்தையும் கவராமல் காத்திருந்து தன் வயிற்றை நிரப்புவாள் என எண்ணி அவளை ஆதுரமாகப் பார்த்தான். அப்போதும் அதும் வெறும் உதவி. ஆனால் இன்றைக்கு நின்று நிதானமாக யோசித்துப் பார்க்கையில் தன் மீதான அவளின் எதிர்பார்ப்பில்லாத பிரியம் மட்டுமே முன்னின்றது.
‘சே… லட்சியம், படைப்பு என சினிமே பின்னால் ஓடியதில் அந்த அழகான நாட்களை தேவா தவறவிட்டிருந்தான். இல்லையென்றால் மறைமுகமாக அவள் அவனுக்கு உறுதுணையாக இருந்ததை காட்டிலும் ரைட் அண்ட் லாயலாக அவளைத் தன்னுடமை போல பாவித்து அவன் பழகியிருக்கலாம். அப்போது ஏன் இவளைத் தான் கவனிக்காமல் சென்றோம் என தனக்குள்ளே இருந்த சின்சியர் சிகாமணியை பலமுறைத் திட்டிக் கொண்டான். அவன் பார்வைத் தன்னையே துளைத்தில் ஜீவா கணவனைத் திரும்பி பார்த்தாள்.
“என்னங்க… வேற எதுவும் வேண்டுமா?” அவன் விழிகளின் குறுகுறுப்பில் அவள் புரியாது கேட்க, இல்லையெனத் தலையசைத்தவன், மெல்ல உதட்டை மட்டும் அசைத்து, ‘ஐ லவ் யூ ஜீவா!’ என்றான் காற்றைத் தூதனுப்பி. ஜீவா திருதிருவென விழித்து, அவன் காலில் நறுக்கென மிதித்தாள்.
‘சின்ன பிள்ளைகள் இருக்கும் வீட்டில் என்ன செய்கிறான் இவன்?’ பார்வையால் அவனை மிரட்டியபடியே சாப்பிட்டாள். தேவா அதையெல்லாம் ஒரு சின்ன தோள் குலுக்கலில் புறந்தள்ளினான். உண்டு முடித்து அவர்கள் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, திருமணத்திற்கு வர முடியாத உறவினர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு, மொய் செய்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
சிலர் தேவா சினிமா துறையில் இருப்பதால் புகழ்ந்து பேச, ஒரு சிலர் அதையே தாழ்வாக எண்ணிக் கூறினர். தேவா இரண்டு சாரார் உறவினர்களையும் சிரிப்பு மாறாமல் எதிர்கொண்டான்.
அவன் இந்தத் துறையில் நுழைந்தபோது பேரும் புகழோடும் இதுபோல ஏச்சுப் பேச்சுகளும் எழத்தான் செய்தன. உண்மையில் அவர்களைச் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. எல்லாத் துறையிலும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்கிறது. என்ன, ஒவ்வொருவரிடமும் அவனால் அதை விளக்க முடியாதே. உங்கள் கருத்து உங்கள் வரையில் நலம் என இருந்துகொள்வான்.
ஜீவாதான் அவன் சௌகரியமாக இருக்கிறானா என அவ்வப்போது தயங்கித் தயங்கி அவன் முகம் பார்த்துக் கொண்டே இருந்தாள். அதில் தேவாவிற்குச் சிரிப்பு வந்தது. அவள் என்னவோ அவனை அவர்களிடமிருந்து காப்பாற்றுவது போல இடைச் சொருகலாய் நுழைந்து பேச்சை மாற்ற முயன்றாள். அவன் சுவாரஸ்யமான பார்வையுடன் அத்தனையும் பார்த்திருந்தான். அவளுக்குத் தன் மீதான அன்பை எண்ணி இவனுக்கு மனம் கனிந்தது.
என்ன எதையும் வாயைத் திறந்து சொல்ல மாட்டாள். கேட்டாள் அரை பக்கத்தில் ஏதாவது அறிவுரை என்ற பெயரில் உளருவாள் என எண்ணி முறுக்கினான்.
“சரிக்கா… இன்னொரு நாள் சாவகாசமா பேசலாம். நேத்து தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு. புள்ளைங்க ரொம்ப டையர்டா இருப்பாங்க. அவங்க போய் செத்த தூங்கி எழட்டும்!” என கிரிஜா இவர்களை அங்கிருந்து எழுப்பிவிட்டார்.
“சொந்தக்காரங்க முன்ன பின்ன இருக்கத்தான் செய்வாங்க. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க!” அறைக்குள் வந்ததும் ஜீவா படபடவெனக் கூற, இவன் சிரிப்புடன் அவளது கையைப் பற்றித் தன்னருகே அமர்த்தினான்.
“கூல்… நான் இதெல்லாம் ஃபேஸ் பண்ணித்தான் வந்திருக்கேன் ஜீவா. நீ டென்ஷனாகாத. இட்ஸ் நேச்சுரல். அவங்க பாயிண்ட் ஆஃப் வியூல பேசிட்டுப் போறாங்க. அதைப் பெருசா கன்சிடர் பண்ணக் கூடாது!” அவன் அவளது கையை அழுத்திப் பிடித்ததும், ஜீவா ஒருமாதிரி அடைத்து வைத்திருந்த மூச்சை வெளிவிட்டு, அவனை முறுவலுடன் பார்த்தாள்.
“ஹம்ம்… ஜீவா… ஹனிமூன் எங்கப் போகலாம்?” அவன் அலைபேசியை எடுத்து எங்கே செல்லலாம் எனப் பார்க்க, இவள் இயல்பாக அவனருகே ஒட்டி அமர்ந்தாலும் பதிலுரைக்கவில்லை.
“உன்னைத்தான் டீ கேட்குறேன். எங்கப் போகலாம்?” அவன் மீண்டும் கேட்க,
“கண்டிப்பா போகணுமாங்க? நீங்க பார்க்குறதெல்லாம் பாரினா இருக்கே!” அவள் இழுத்தாள்.
அவளை மென்மையாக முறைத்தவன், “பாரிஸ் போகலாம். நான் பேசும்போது நீதானே சொன்ன, எங்கேயும் போக சான்ஸ் கிடைக்கலைன்னு. வீ வில் என்ஜாய் தேர்!” அவன் அதட்டலுடன் கூற, அவள் யோசனையுடன் தலையசைத்தாள்.
“ஏன்… வர்றதுல என்ன பிரச்சனை?” அவன் அவள் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தான்.
“சொன்னா திட்டுவீங்க!” என்றாள் சின்ன குரலில்.
“பரவாயில்லை… நீ என்னென்னு சொல்லு…” கண்டிப்பான குரலில் தேவா கேட்க,
சற்றே யோசித்தவள், “ஹோட்டலை யாரு பார்த்துப்பா? நான் இல்லைன்னா ரொம்ப கஷ்டம். அம்மா ஒரே ஆளா சமாளிக்க முடியாது. இன்னும் ரெண்டு பேரை வேலைக்கு எடுத்தாலும் அவங்க நம்ம ஹோட்டல்னு அக்கறையா வேலை பார்ப்பாங்களா? எங்ககிட்டே இருக்க ஒரே சோர்ஸ் ஆஃப் இன்கம் இது மட்டும்தான். இன்னும் சஷ்டியும், வேலுவும் ஸ்கூல் கூட க்ராஸ் பண்ணலை. அதை நினைச்சுத்தான் ரொம்ப கவலையா இருக்கு!” அவள் சின்ன குரலில் தன் வருத்தத்தைப் பகிர்ந்தாள்.
“சீ ஜீவா… பிஸ்னஸ் பண்றது தப்பில்ல. பட், எப்பவுமே நம்ம பிரசன்ஸ் இருந்தாதான் வொர்க் நடக்கும்னு இருக்கக் கூடாது. நீ இல்லைன்னா கூட வேலை சரியா நடக்கணும். தட்ஸ் கால்ட் அ குட் பிஸ்னஸ் விமன். ரெண்டு பேரை ஹயர் பண்ணு. நல்லா ட்ரெயின் பண்ணிட்டு நீ ஹோட்டலை சூப்பர்வைஸ் பண்ற வொர்க்கைப் பாரு. இனிமே நீயே எல்லாத்தையும் எடுத்து செய்யாத ஜீவா…” அவன் தீவிரக் குரலில் அறிவுரை கூற, அவனைச் சில நொடிகள் குறுகுறுவெனப் பார்த்தாள் ஜீவா.
“ஓனர் இல்லாதப்போ வேலை நடக்கணுமாங்க? அப்போ நீங்க இல்லாதப்போ ஷூட்டிங் நடந்தா கூட சரிதானே?” என அவள் கேலியும் குறும்புமாகக் கேட்க, அவன் சின்ன முறைப்புடன் அவள் கையைச் சுண்டியிழுத்ததும், படக்கென அவன் மேலே போய் விழுந்தாள் மனைவி. அவளைத் தோளோடு அவன் அணைத்துப் பிடிக்க, சிரித்த வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது போல.
“சிரி… நல்லா சிரி. இப்போ சிரி ஜீவா!” அவள் முகத்தருகே நெருங்கி தேவா கேலியாகக் கேட்டதும், அவள் விறைப்புடன் இயல்பாகத் தன்னைக் காண்பிக்க முயன்றாலும் உதட்டின் மேலே சின்ன சின்னதாக வியர்வைத் துளிகள் பூத்தன.
உதட்டைக் கடித்தபடியே தயக்கத்துடன் தன்னைக் காணும் விழிகளில் தேவாவிற்குத் தொலைந்து போகத் தோன்றிற்று. ஆர்வத்துடன் அவள் இதழ்களை அவன் நெருங்க, படபடவெனக் கதவு தட்டும் சத்தம் இருவரையும் நிஜ உலகிற்கு அழைத்து வந்தது.
சலிப்புடன் தேவா அவளிடமிருந்து விலக, ஜீவா முகத்தில் குறும்புச் சிரிப்பு.