
அதைத் தானும் புரிந்து கொண்டு,”உங்களேட மனநிலை இப்போ எப்படி இருக்குன்னு எனக்கு ரொம்பவே நல்லா புரியுதும்மா. உடனே நீங்க இதுக்குப் பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை! நல்லா யோசிச்சு முடிவெடுங்க! அதே மாதிரி, இதையும், உங்க வேலையையும் சம்பந்தப்படுத்திக்காதீங்க! உங்களோட இன்னைக்கு ஆன வேலையை நல்லபடியாகப் பார்த்து முடிங்க! ஆல் தி பெஸ்ட்!”என்றவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத்,
“தாங்க்ஸ் மேம்”என்றிருந்தாள் மதுபாலா.
“நீங்க உங்க வேலையைத் தொடருங்க”எனக் கூறி அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுத் தனது தமையனிடம் வந்து சேர்ந்து விட்டிருந்தாள் வெண்பா.
அவளைக் கண்டவுடனேயே தனது ஆர்வத்தை அடக்க இயலாமல்,”என்னாச்சுக்கா? மது கிட்டே எல்லாத்தையும் பேசிட்டியா? அவ என்னச் சொன்னாள்?”என்று கேள்விகளை அடுக்கினான் புகழேந்தி.
“ம்ஹ்ம். நான் அவ கிட்டே எல்லாத்தையும் பேசிட்டேன்டா. அதைக் கேட்டு அவளுக்கு ரொம்பவே ஷாக் ஆக இருந்துச்சு! அதனால் அவ கொஞ்ச நேரம் எங்கிட்ட எதுவுமே பேசலை! அதுக்கப்புறம் அதைப் பத்தி அவளோட தங்கச்சிக் கிட்டேயும், பிரேமா கிட்டேயும் கலந்து பேசிட்டு முடிவைச் சொல்றேன்னுச் சொல்லி இருக்காள். நாம அதுவரைக்கும் காத்திருந்து தான் ஆகனும்டா. அவளோட உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்கனும்ல? அதான்”என்று தன்னுடைய தம்பியிடம் எடுத்துரைக்க,
“சரிக்கா. அப்போ வெயிட் பண்ணலாம்”என்றவனோ,
“இப்போ கொஞ்ச நேரத்தில் நம்ம ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸ் டிசைன்ஸ்ஸைக் கொண்டு வருவாங்க. நாம அதில் கவனத்தைச் செலுத்துவோம்க்கா”என அவளிடம் மொழிந்து விட்டான் புகழேந்தி.
அதே வேளையில் தானும் தன் அறையில் இருந்து கொண்டு மிகவும் சிரத்தையுடன் தன்னுடைய மனதில் தோன்றிய வடிவமைப்புகளைத் தாளில் வரையத் தொடங்கி விட்டிருந்தாள் மதுபாலா.
அவளைப் போலவே தானும் தன் அறையிலிருந்து கொண்டு அதே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரேமா.
அதற்கிடையில் தனது தோழியிடம் அவளுக்கும், புகழேந்திக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைப் பற்றிய பேச்சைத் தன் முதலாளியின் தமக்கை அவளிடம் இந்நேரத்தில் பேசி விட்டிருப்பார் என்ற எண்ணமும் தோன்றி இருந்தது அவளுக்கு.
அதேபோல் வெண்பாவின் அந்த வேண்டுகோளிற்குத் தன்னுடைய தோழி நிச்சயமாக உடனே சம்மதம் அளித்து விட்டிருக்க மாட்டாள் என்பதும் பிரேமாவிற்கு நன்றாகவே தெரியும்!
அதனாலேயே தனது வேலைகளைத் துரிதமாக முடித்து விட்டு அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு வடிவமைப்புகளை வரைவதை தொடர்ந்தாள்.
இதே சமயத்தில் அந்த ஊரிலிருந்து சற்றுத் தள்ளி இருந்த தங்களது வீட்டின் உட்புற அமைப்புகளை ஆராய்ந்து விட்டு,
“என்னங்க! நாமப் பேசாமல் உங்கத் தங்கச்சிங்க கூடவே உங்கச் சொந்த வீட்டிலேயே இருந்து இருக்கலாமோ? ஏன்னா, இந்த வீட்டோட நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கு!”எனத் தன்னுடைய கணவனிடம் பொருமலுடன் பகிர்ந்து கொண்டாள் கோமதி.
அதில் தன்னை மீறி வரவிருந்த இருமலை அடக்கிக் கொண்டு,”ம்ஹ்ம். நானும் அதை தான் யோசிச்சேன்டி! அதுவும் இல்லாமல் மது இப்போ வேலைக்கு வேறப் போயிட்டு இருக்காளாம். என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன் அவளை அந்தக் கிளாமர் கேலக்ஸி ஆஃபீஸூக்குள்ளே நுழையுறதைப் பார்த்தானாம்! நேத்துச் சொல்லிட்டு இருந்தான். அதைத் தெளிவாக கேட்கிறதுக்குள்ளே தான் எனக்குக் காய்ச்சல் வந்து இன்னைக்கு லீவ் போட்றா மாதிரி ஆயிடுச்சு!”என்று அவளிடம் தெரிவித்தான் பாஸ்கர்.
அதைக் கேட்டு விட்டுத் தனது விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு,”அப்படியா ங்க? அந்தக் கம்பெனியைப் பத்தி நானும் கேள்விப்பட்டு இருக்கேன்! உங்கத் தங்கச்சித் தான் படிப்பைப் பாதியிலேயே விட்டவளாச்சே! அப்பறம் எப்படி அவளுக்கு அங்கே வேலைக் கிடைச்சது? உங்களோட நண்பன் அவளைத் தான் அங்கே பார்த்தாரா? இல்லைன்னா, அவளோட ஜாடையிலே வேற யாரையாவது பார்த்துட்டு உளறினாரா?”எனச் சந்தேகத்துடன் வினவினாள் அவனது மனைவி.
“இல்ல டி! அவன் நல்லா பார்த்துட்டுத் தான் எங்கிட்டே சொன்னான். அவ அங்கே தான் வேலைக்குப் போயிட்டு இருக்காள்ன்னுச் சத்தியம் பண்ணிச் சொன்னான்”என்று அவளுக்கு உறுதி அளித்தான் பாஸ்கர்.
உடனே,”அவளுக்கு எப்படி அவ்வளவு பெரிய கம்பெனியில் வேலைக் கிடைச்சதுங்க? என்னால் இப்பவும் நீங்கச் சொல்வதை நம்ப முடியலை! உங்களுக்குக் காய்ச்சல் சரி ஆனதும் நாம ரெண்டு பேரும் நேரில் போய்ப் பார்த்துட்டு வந்துடுவோமா?”எனக் கேட்டிருந்தாள் கோமதி.
“சரி டி. ராத்திரிக் காய்ச்சல் மாத்திரையைப் போட்டுட்டுத் தூங்கிட்றேன்! நாளைக்கு எழுந்து கிளம்பி முதல் வேலையாக அங்கே போய்ப் பார்த்துட்டு வந்துடுவோம்”என்றக் கணவனிடம்,
“இது நல்ல யோசனை தான் ங்க. அப்படி அவ அங்கே வேலைப் பார்க்கிறது உறுதி ஆகிட்டால் நம்மளோட அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்ங்க?”என்றிருந்தாள் கோமதி.
“அடுத்து என்ன அவளோட வேலை விவரம், சம்பள விவரத்தைப் பத்தி எல்லாம் விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டு அவங்க கிட்ட மறுபடியும் எப்படி போய்ச் சேர்ந்துக்கிறதுன்னுத் திட்டம் போட வேண்டியது தான்!”எனத் தன்னுடைய தோள்களைக் குலுக்கி விட்டுச் சாதாரணமாக கூறினான் பாஸ்கர்.
“அதுக்கு உங்கத் தங்கச்சிங்க ரெண்டு பேரும் ஒத்துக்குவாங்களா? அதுவும் இவ்வளவு நாளாக அவங்களை நாமக் கண்டுக்கவே இல்லை! இப்போ போய் நின்னா உடனே நம்மளை ஏத்துப்பாங்கன்னு நீங்க நம்புறீங்களா?”என்க,
அதற்கு,”கண்டிப்பாக எனக்கு அந்த நம்பிக்கை இல்லை டி! ஆனாலும் ஒரு தடவை முயற்சிச் செஞ்சிப் பார்க்கலாம்னு தான்! நானுமே அவங்களைப் பார்க்கப் போக நினைச்சு இருக்கேன்! அதுவும் இப்போ அவங்க ரெண்டு பேரும் நம்ம மேலே செம்மக் கடுப்புல இருப்பாங்க! அதையெல்லாம் பார்த்துப், பதமாகப் பேசித் தான் அவங்களைக் கொஞ்சம், கொஞ்சமாக மனசை மாத்தி நம்மளை ஏத்துக்க வைக்கனும்!”என்று அவளிடம் தன்னுடைய திட்டத்தை பகிர்ந்து கொள்ளவும்,
“ம்ஹ்ம். அப்போ நம்ம வேலை அவ்வளவு சுலபமாக முடியப் போவதில்லை! அப்படித் தானேங்க?”என்று சலித்துக் கொண்டாள் கோமதி.
“ஆமாம்! அவங்க அப்போவே நான் கல்யாணம் கட்டிக்கிறேன்னுச் சொன்னதுக்கு எதுவுமே சொல்லாமல் வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க! அப்படி இருக்கும் போது இப்போ காசு வர ஆரம்பிச்சிருச்சு வேற! எப்படியும் நம்மளை அவங்க அவ்வளவு சீக்கிரத்தில் ஏத்துக்க மாட்டாங்க”என உறுதியாக மொழிந்தான் பாஸ்கர்.
“அது உண்மை தான்ங்க. ஆனால் அவச்க நம்மளை அப்படி நம்பி, ஏத்துக்கிற மாதிரி நல்லா நடிச்சுப், பாசத்தைப் பிழிஞ்சுப் பேசுங்க! அதில் அவங்க நம்ம கிட்டே எந்தக் கேள்வியும் கேட்காமல் அவங்க கூடச் சேர்த்துக்கனும்!”என்றவளோ,
திடீரென்று தனது பேச்சை நிறுத்தி விட்டு எதையோ யோசித்து, தன்னுடைய நெற்றியை நீவிக் கொணடு,
“எனக்கு ஒரு விஷயத்துக்கு உத்தரவாதம் கொடுங்க”என்ற மனைவியை ஆராய்ச்சியாகப் பார்த்து,
“என்ன உத்தரவாதம் கொடுக்கனும்?”எனக் கேட்டிருந்தான் பாஸ்கர்.
“அவங்க இருக்கிற வீடு உங்கப் பரம்பரை வீடுத் தானே?”என்றதுமே,
“ஆமாம் டி. அது எங்களோட பரம்பரை வீடுத் தான். அதுக்கு என்ன இப்போ?”என்று குழப்பத்துடன் வினவ,
“அப்படின்னா அதில் உங்களுக்கும் பங்கு இருக்குத் தானே? அப்பறம் எப்படி அவங்க நம்மளை அங்கே தங்க விடாமல் பண்ண முடியும்? அவங்க ரெண்டு பேரும் நம்மளை ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்காமல் போனாலும் நமக்கு அங்கே தங்குறதுக்கு எல்லா உரிமையும் இருக்கே! அதை வச்சே அங்கே தங்கிடலாமே!”எனக் கணவனுக்கு யோசனையைக் கூறினாள் கோமதி.
அதைக் கேட்டதுமே தனது முகம் முழுவதும் பிரகாசிக்க,”அட ஆமால்ல! இந்த யோசனை எனக்குத் தோனாமல் போச்சே! நான் இவ்வளவு நாளாக இதை யோசிச்சுப் பார்க்காமல் இருந்துட்டேனே! ச்சே!”எனத் தாமதமாகத் தோன்றிய ஞானோதயத்தை எண்ணி நொந்து போனான் பாஸ்கர்.
“சரி விடுங்க. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை! நமக்கு இன்னும் நிறையவே நேரமும், காலமும் இருக்கு! ஆனால் இனிமேலும் நாமச் சும்மா இருக்கக் கூடாது! நாளைக்கே களத்தில் இறங்கி விட வேண்டியது தான்”என்று தனது கணவனிடம் உறுதியாக மொழிந்து விடவும்,
அதற்கு அவனும் சம்மதித்து விட அன்று மாலையில் தங்களுக்கானத் தேநீரைத் தயாரித்துப் பருகத் தொடங்கி விட்டார்கள் அந்தக் கணவனும், மனைவியும்.
அப்பொழுது தனது வடிவமைப்புகளைத் தாள்களில் வரைந்து அவற்றை ரு கோப்பில் நன்றாக அடுக்கி வைத்துக் கொண்டுத் தனது வழிகாட்டிப் பெண்ணிடம் சென்று,
“மேம்! நான் என்னோட டிசைன்ஸ்ஸை வரைஞ்சு முடிச்சிட்டேன்! இதை நம்ம எம். டி கிட்டே கொண்டுப் போய்க் காட்டி அப்ரூவல் வாங்கிக்கவா?”என அவளிடம் கேட்டுக் கொண்டாள் மதுபாலா.
“அதுக்குள்ளே முடிச்சிட்டீங்களா? சூப்பர்ம்மா! நீங்கப் போய் எம். டி – யைப் பார்த்துட்டுப் பொறுமையாக வாங்க. நான் இன்னைக்குள்ளே முடிப்பேனான்னுத் தெரியலை! என்னால் முடிஞ்சா நாளைக்குக் காலையில் முடிக்கனும்!”என்ற வினோதினியிடம்,
“அதெல்லாம் நீங்க இன்னைக்கே முடிச்சுடுவீங்க மேம்! நம்பிக்கையோடப் பண்ணுங்க!”என்று உற்சாகமூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவளை ஊக்குவித்தாள் மதுபாலா.
“ஓகே மேம்! உங்க வார்த்தைப் பலிக்கட்டும். நீங்க முதல்ல போய் உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க”என்று அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கவும்,
உடனே தனது முதலாளியின் காரியதரிசியான வெற்றிச்செல்வனிடம் போய் விஷயத்தை உரைக்க,
“அப்படியா மேம்? இதோ நான் உடனே போய் நம்ம எம். டி கிட்டே இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துட்றேன்”என்றுரைத்து விட்டுத் தன் முதலாளியிடம் சென்று விவரத்தை தெரிவித்தான்.
அதில் அந்த அக்காவும், தம்பியும் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்து விட்டு,
“அவங்களை உடனே உள்ளே வரச் சொல்லுங்க வெற்றி”என அவனுக்கு உத்தரவிட்டு அனுப்பினான் புகழேந்தி.
“எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு உள்ளே வந்து நம்ம கிட்டே இயல்பாகத் தான் பேசுவாள் – ன்னுத் தோணுது”என்றிருந்தாள் வெண்பா.
“எப்படி சொல்றீங்க அக்கா?”எனக் கேட்டான் இளையவன்.
“அவளுக்கு இந்தக் கல்யாணப் பேச்சு இரண்டாவது முக்கியமான விஷயம் தான்! ஆனால் இந்த வேலைத் தான் அவளுக்கு முதன்மையான, முக்கியமான விஷயமாக இருக்கும்! அதனால் தான் நான் அப்படி யோசிச்சுச் சொல்றேன்”என்று அவனுக்கு விளக்கம் அளிக்கவும்,
அதைக் கேட்டதுமே ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுக் கொண்டு,
“நீங்க சொல்றது உண்மைத் தான்க்கா! அவ அப்படித் தான் யோசிப்பாள்ன்னு எனக்கும் தோணுது!”என்று தானும் அதை ஆமோதித்தான் புகழேந்தி.
அதே நேரத்தில் அவ்வறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த மதுபாலாவிடம் தங்களது முதலாளிக் கூறியதை தெரிவித்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டிருந்தான் வெற்றிச்செல்வன்.
அதில் உடனே தாமதிக்காமல் தனது கோப்புடன் முதலாளியின் அறைக் கதவைத் தட்டி அவனிடம் அனுமதிப் பெற்றவுடன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து இருந்தாள் மதுபாலா.
- தொடரும்