மௌனம் – 20.2

அதில் அவளுக்கு வருத்தமில்லை. மாறாக நிம்மதிதான் பிறந்தது. எப்போதோ அவள் அவனைக் கடந்து தனக்கான பாதையில் நடக்கத் தொடங்கியிருக்க, மீண்டும் எங்கிருந்தோ முளைத்து வந்து மடையை மாற்றப் பார்க்கிறான் என அவன் காதல் சொன்ன தினத்தில் அதை உணர முடியாமல் திகைத்துப் போயிருந்தாள்.

ஆனால் இப்போது கூட நான்கைந்து வருடங்களுக்கு முன்னே அவளுக்குத் தோன்றிய ஈர்ப்பை எண்ணிப் பகடியாகச் சிரிப்பது போல, எதிர்காலத்தில் அவனும் தன்னிடம் விருப்பத்தைக் கூறியதை நினைத்துச் சிரிப்பான். இது வெறும் ஈர்ப்புத்தான் அன்றி காதல் அல்ல.

அவளைப் பொறுத்தவரை ஒரு ஆணும் பெண்ணும் உணர்வு ரீதியான, உடல் ரீதியான தேவைக்காக ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றனர். என்ன அதில் யார் யாரைத் திருமணம் செய்வார்கள் என்பதைப் பணம், புகழ், வெளித்தோற்றம் போன்ற புறக் காரணிகள் தீர்மானிக்கின்றன.

மற்றபடி அதற்குக் காதல், கத்தரிக்காய் என்றெல்லாம் பேர் வைக்க விரும்பாதவள். வாழ்க்கையின் எதார்த்தம் இதுதான் என அவளுக்கு அவளே புரிய வைத்து நீண்ட காலமாகிறது. அவள் ஏதோ சிந்தனையில் உணவை வாயிலிட, வெளியே யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

“வேலு… யார்னு பாரு!” அவன் மும்முரமாக அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

“போக்கா… நீ போய் பாரு!” அவன் கூற, “வேலு… நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். இப்போ போய் நீ கதவைத் திறக்கலைன்னா உனக்கு ஃபோன் தர மாட்டேன்!” என அவள் கண்டிப்புடன் கூற, அவன் குனிந்து தலை நிமிராமல் இரண்டு கையால் அலைபேசியைத் தாங்கியபடியே சென்று கதவைத் திறந்தான். தேவா வாயிலின் முன்னே நின்றிருக்க, அவனைப் பார்த்ததும் படக்கென இவனிடம் ஒரு சுறுசுறுப்பு ஒட்டிக் கொண்டது.

“தேவா அங்கிள்?” என இனிமையாக அதிர்ந்தான். தேவா சிரிப்புடன் அவன் தலையைக் கலைத்தான்.

“அக்கா, தேவா அங்கிள் வந்திருக்காரு!” அவன் உற்சாகத்துடன் கத்த, இவளுக்குத் தொலைக்காட்சி சத்தத்தில் அது காதில் விழவில்லை.

“யாருடா வந்திருக்கா, உள்ள கூப்பிட வேண்டியதுதானே. வெளிய நிக்க வச்சுப் பேசுவீயா?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்து வந்தவள், தேவாவை அங்கே எதிர்பாராமல் சட்டென அதிர்ந்து நின்றுவிட்டாள். அவன் சின்ன புன்னகையுடன், அவளைப் பார்வையால் அளந்தான். பழைய நைட்டி, விரித்துவிட்ட கூந்தல், காதிலும் கழுத்திலும் எந்த ஆபரணமும் இல்லை. முகம் கழுவித் துடைத்தது போலிருந்தது. கண்களில் மெல்லிய அதிர்ச்சி, கண்டிப்பு, கோபம். அதைவிட அவன் முன்னே தான் நிற்கும் கோலத்தின் நொடியில் சங்கடம் பரவிற்று.

அப்போதுதான் அவன் பின்னால் மெதுவாக ஆக்கிரமித்த கூட்டத்தைப் பார்த்தாள். அவளுள்ளம் மலைத்துப் போனது. என்ன செய்கிறான் இவன்? வெறும் பேச்சோடு முடிந்துவிடும் என அவள் அறுதியிட்டிருந்ததை, இப்படி ஊரைக் கூட்டி உரக்கச் சொல்கிறானே என சட்டென மூண்ட கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.

“வந்தவங்களை வான்னு உள்ளே கூப்பிடணும் ஜீவா. என்னை அப்புறம் முறைச்சுக்கலாம்!” அவன் மெல்லிய முனகலில், சட்டென உண்ட கையை முதுகிற்குப் பின்னே கொண்டு சென்றவள், “வாங்க தேவா சார், உள்ளே வாங்க. உள்ள வாங்கம்மா… எல்லாரும் வாங்க!” முயன்று முறுவலித்து அவர்களை வரவேற்றவள், விறுவிறுவென தான் சாப்பிட்டிருந்த தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். வேலு கிரிஜாவிடம் கடகடவென ஒப்பிப்பது இவளது காதிலும் விழ, சுவரோடு சாய்ந்து கண் மூடினாள்.

கோபம், அதிர்ச்சி எல்லாவற்றையும் தாண்டி ஒருவித ஆதங்கம் அவளிடம் நிரம்பியிருந்தது. கிரிஜா அவர்களை வரவேற்று உபசரித்து உட்கார வைப்பதும், கூட்டத்தில் ஒருவர், தேவாவிற்கு இவளைப் பிடித்திருக்கிறது எனப் படக்கென விஷயத்தைப் போட்டுடைப்பது வரை செவியில் துல்லியமாக விழ, உதட்டைக் கடித்தாள். மேலும் அவர்கள் பேச்சு கேட்காத தூரத்திற்குச் செல்ல அவள் மனம் விரும்பிற்று.

“அண்ணி…” குரலோடு சேர்த்து ஏதோ ஒரு வாசனைத் திரவியம் நாசியை நிறைத்ததும், ஜீவா புரியாமல் கண்ணைத் திறந்தாள். விலை உயர்ந்த வெள்ளை சுடிதார், கண்ணை உறுத்தாத அணிகலன் என நவநாகரிகமாக பிரமிளா இவளைப் பார்த்துப் புன்னகைக்க, ஜீவாவிற்கு அவளை நன்கு அடையாளம் தெரிந்தது போல.

“வாங்க…” அவள் குரலே எழும்பவில்லை. எல்லாம் இந்த தேவாவால் என அவளுக்குக் கோபம் வேறு வந்து தொலைத்தது.

“இந்த சேலையை மாத்திட்டு வர்றீங்களா? எல்லாரும் உங்களைப் பார்க்க வெய்டிங்!” அவள் நீட்டிய புடவையை வாங்க ஜீவாவின் கரங்கள் உயரவில்லை. மாறாக சங்கடத்துடன் அவளைப் பார்த்தாள். கண்களில் மறுப்பு தெரிந்தது.

“ஏத்தா… தேவா பையன் நாங்க வர்றதை உன்கிட்டே சொல்லலையா? அதான் இப்படி கிளம்பாம இருக்கீயா? சின்ன புள்ளைல பார்த்தது. அப்படியே உங்க ஆத்தா மாதிரியே இருக்க. சொந்தத்துலயே முடியுறதை நினைச்சு எங்களுக்கும் சந்தோஷம்தான். போ… போய் இந்தச் சேலையை உடுத்தி வா!” மூத்த பெண்மணி ஒருவர், அவர் மறுக்க வழியில்லாமல் அறைக்குள்ளே தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றார்.

“இல்ல… நானே கட்டிடுவேன்…” என இவள் வாயிலிருந்து வார்த்தையை வாங்கியதும் அவர் அகல, ஜீவா கடுப்புடன் அந்தப் புடவையை மடிப்பெடுத்து இடுப்பில் சொருகினாள். ஏனோ தானோவென்று புடவையை உடுத்தியவள், தலையையும் பின்னலிட்டு, காது, கை, கால் என அணிகலன்களைப் பூட்டிவிட்டு பெருமூச்சுடன் மன உணர்வுகளை வெளியே காண்பிக்காமல் சென்று நின்றாள்.

“பொண்ணு நல்லா லட்சணமாத்தான் இருக்கா. அவங்க ஆத்தாவைப் போல நல்லா அழகான முகம்!” கூட்டத்தில் யாரோ ஒருவர் கூற, இவள் கிரிஜாவைப் பார்த்தாள். அவர் பார்வை மகளிடம்தான். ஏனோ அவரின் சில நொடி உறுத்தும் பார்வையிலேயே இவளுக்கு மனத்தில் பாரமேறியது.

குற்றம் செய்த உணர்வில் தலை தாழ்ந்தது. தன் விருப்பத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவனது காதலை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இத்தனை தூரம் வந்திருக்கும் தேவாவின் மீதான அவள் கோபம் மெல்ல உயர்ந்தது.

ஆனாலும் அதை முகத்தில் காண்பிக்காமல் சாதாரணமாகத்தான் நின்றாள். அவள் பார்வையைச் சந்திக்க விரும்பாமல் அவன் முகத்தைத் திருப்பி சங்கடத்துடன் தலையைக் கோதினான். பின்னர் மெல்ல அவன் முகம் உயர்த்த, ஜீவா அவனை அமைதியாகப் பார்த்தாள். பேசவில்லை, ஆனாலும் அவள் உணர்வை அவனுக்குக் கடத்தினாள்.

‘சே… புடிச்சிருக்குன்னு பொண்ணுக் கேட்டு வந்தேன். அதுக்கு கொலைக் குத்தம் பண்ண மாதிரி பார்த்து வைக்கிறா. கில்ட் ஆகித் தொலையுது!’ அவன் மனத்துக்குள் முணுமுணுத்தான்.

“என்ன கிரிஜா… நாங்க இவ்ளோ தூரம் கேட்டும் நீ ஒன்னும் பதில் சொல்லாம இருக்க. நல்ல குடும்பம், இப்போ தேவா சினிமா படமெல்லாம் எடுத்து பெரியாளா இருக்கான். நம்ம பார்க்க வளர்ந்த பையன்தான். நீ என்ன யோசிக்கிற?” மூத்தவர் கேட்டார்.

“இல்ல அத்தை… ரெண்டு மாசத்துல கல்யாணம் வச்சிருக்க பொண்ணை திடுதிப்புன்னு கேட்டு வந்து நிக்குறீங்க. ஏற்கனவே ரெண்டு குடும்பமும் நிச்சயம் பண்ணிட்டோம். பத்திரிகை அடிக்கிறது ஒன்னுதான் பாக்கி!” கிரிஜா முடியாது என்பது போலத்தான் பேசினார்.

அவருக்கு தேவாவின் தற்போதைய உயரம், அவன் வகிக்கும் பதவி, அவற்றைவிட அவன் சினிமா துறையில் இருக்கிறான் என்பதிலே பெரிதாக உடன்பாடில்லை. அவரது மகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் அவருக்கு எண்ணம். பணம், புகழை விட காலம் முழுதும் மகளும் வரப்போகும் மருமகனும் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுக்காமல் வாழ்வதே முக்கியமாகப்பட்டது.

“என்ன கிரிஜா நீ, மணமேடை வரைக்கும் வந்தே பொண்ணு மாப்பிள்ளை மாறியிருக்கு. சின்னஞ்சிறுசுக ஆசைப்பட்டுட்டாங்க. பெரியவங்க நம்மதானே பார்த்து செய்யணும்?” என்ற குரலில் ஜீவா திடுக்கிட்டு தேவாவைப் பார்த்தாள்.

‘யாரைக் கேட்டு இவன் இதில் தனக்கு விருப்பம் என சொல்லியிருக்கிறான்?’ அவளிடம் மெல்லிய அதிர்ச்சியும் கோபமும் தெரிந்தது.

‘போச்சு… பெரியம்மா ஓவர் பெர்ஃபாமென்ஸ் பண்றாங்களே? இவளை எப்படி மலையிறக்குறது?’ அவனுக்கு அவன் கவலை. மேலும் அவன் வீட்டு பெரியவர்கள் பேசி எப்படியாவது இந்தத் திருமணத்தை உறுதி செய்யும் முனைப்பில் இருந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top