சரியாக காலில் நுழையாத காலணியை மனதிற்குள் திட்டியபடியே அதை அணிந்த தேவா, நிமிர்ந்து தாயைப் பார்த்தான். அவர் அவனைத்தான் முறைத்துக் கொண்டிருந்தார்.
“ஷார்ப் ஃபைவ் ஓ க்ளாக்மா. பிரமிகிட்டே சொல்லிட்டேன். அவளும் வந்துடுவா. நீங்களும் ரெடியா இருங்க!” இவன் கெஞ்சலும் அழுத்தமுமாகக் கூற, அவரது பார்வையில் கண்டனம் கூடிற்று. முடியாது என்பது போலத்தான் பார்த்தார்.
“ப்ரோ… யூ டோண்ட் வொர்ரீ. நான் எதுக்கு இருக்கேன். அண்ணி கழுத்துல நீ தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற வரை எனக்குத் தூக்கம் வராது. நான் உனக்காக ஹார்ட் வொர்க் பண்ணுவேன்!” விக்ராந்த் குதூகலமாகப் பேச, தேவா அவனைச் சந்தேகத்துடன் பார்த்தான்.
“இந்த வீட்ல ஒன்னும் சரியில்ல. சப்போர்ட் பண்ண வேண்டிய மம்மி முறைக்கிறாங்க. இவன் ஓவர் பெர்ஃபார்மென்ஸ் பண்றான்…” என மெல்ல முணுமுணுத்தவாறே மகிழுந்தை எடுத்துக்கொண்டு, இன்றைக்கு எடுக்க வேண்டிய காட்சியை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவாறே சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையை நோக்கி ஆரோகணித்தான் அவன்.
தேவா ரேணுகாவிடம் பேசி, அவன் அவருக்குக் கொடுத்த மூன்று நாட்கள் கெடு இன்றோடு முடிகிறது. ஞாயிறு அவனுக்கு வேலை இருப்பதால், மாலை நேரம் ஜீவா வீட்டிற்குச் சென்று பெண் கேட்கலாம் என எழுந்ததும் தேநீர்க் கோப்பையோடு தாயின் முன் நின்றான் அவன்.
அவருக்கு மகன் செய்கையில் சற்றும் விருப்பமில்லை. ஆனாலும் மூன்று நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அண்ணன், தம்பி இருவரும் அவரது மனத்தைக் கரைத்துப் போட்டிருந்தனர். மகனுக்கு அந்தப் பெண் மீது என்ன பிடித்தமோ என இவருக்குச் சலிக்கும் அளவிற்கு தேவாவின் செய்கை இருந்து தொலைத்தது. தான் ஆசைப்பட்ட பெண் கைநழுவிச் சென்றுவிடுவாளோ என்ற பாதுகாப்பின்மைதான் அவன் குணத்திலிருந்து அவனை இறக்கி, தாயிடம் கெஞ்ச சொல்லி உந்திற்று. அவரைச் சம்மதிக்க வைத்தது.
ஆம்… வயது வந்த பின்னே பொறுப்பு, குடும்பம் என அதன் பின்னே ஓடியவனுக்கு இயல்பாகவே தாயிடம் ஒதுக்கம் பிறந்தது. அவர்தான் மகனை அதட்டி உருட்டி அந்த வெற்றிடத்தை, ஒதுக்கத்தை முறித்தார். ஆனாலும் தேவா விக்ராந்த் போல அவரிடம் கேலி பேசவோ, வம்பு வளர்க்கவோ மாட்டான். அவர் என்ன சொன்னாலும் சரியெனக் கேட்டுக் கொள்வான்.
ஜீவா விஷயத்தில் எல்லாம் தவறிப் போயிருந்தது. ஒருவேளை அவளுக்கு முத்துக்குமாரோடு நிச்சயம் நடக்காமல் இருந்தால், அவன் முதலில் அவளிடம் பேசி தன்னை அவளுக்குப் புரிய வைத்திருக்கக் கூடும். மெல்ல அவள் மனத்தில் நுழைந்து, இன்னுமே சுமூகமாக இதைத் தாயிடம் எடுத்தியம்பியிருப்பான். ஆனால் இப்போது ஒவ்வொரு நாள் கடக்கும் போதும் என்னவோ ஒரு தவிப்பு.
ஏன் இந்தப் பெண் இல்லையென்றால் வேறு யாருமே உலகத்தில் இல்லையா என அவன் மனமே கேள்வி கேட்டுத் தொலைத்தது. ஆம்… ஆயிரம் பெண்கள் உண்டுதான். ஆனால் அவன் உணரும் சௌஜன்யமும் பூரணத்துவமும் இவளது அண்மையன்றி யார் கொடுத்துவிடுவார்கள் என மெல்ல மனம் அவளின் மீதான பிரேமையை முன்னெடுத்தது. அவளை முதல் நாள் சந்தித்தது முதல் இன்று நடந்தது வரை மெல்ல அவளது குணத்தை ஆராய்ந்தான்.
ஜீவா நிறைகுடம் என தேவாவின் உதடுகள் முணுமுணுத்தன. அவன் தடுமாறும் சமயத்தில் தூக்கி நிறுத்தியது முதல், குழம்பிய நேரத்தில் அவன் தன்னகங்காரத்தைக் காலில் போட்டுத் மிதித்தது வரை தான் வகுத்திருந்த வரையறைகளைத் தகர்த்திருக்கிறாள். அவள் இப்படித்தான் என அவன் எண்ணிய உருவத்திலிருந்து தள்ளி நிற்கிறாள். என்னவோ அவளோடு வாழ்ந்தால் அவன் அவளுக்குத் தன்னைப் புரிய வைக்க மெனக்கெடத் தேவையிருக்காது.
தன் முகம் காணாமல் வெறும் குரலிலேயே அவளால் தன் சோர்வை உணர முடிகிறது என்றதில் இவனுக்கு முறுவல் பூத்தது. இது காதல், ஈர்ப்பு, தோற்ற மயக்கம் என என்னவோ இருந்து விட்டுப் போகட்டும். அதோடு ஜீவாவும் அவனோடு இருந்தால் நலம்.
இப்போதெல்லாம் அவளிடம் ஒரு உரிமைக் கோரல் தன்னியல்பாக எழுந்து தொலைக்கிறது. அவளைத் தன்னுடமையாக்கிக் கொள்ளும் எண்ணம் உயர்ந்தோங்கி நிற்கிறது. அதை அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவளைத் திருமணம் செய்தால் அன்றி அவனுடைய உள்ளத்தின் அலைபுறுதல் அடங்காது.
ரேணுகா குறுக்கும் நெடுக்குமாக நடக்க, விக்ராந்த் மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்து அவர் மனநிலை என்னவென ஆராய முயன்றான். அவருக்கும் தேவா இந்தளவிற்குத் தீவிரமாக அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முனையும் போது, இவராக அவன் ஆசையை நிராகரிக்கக் கூடாது என எண்ணம்தான். ஆனாலும் வேறொருவருக்கு நிச்சயமான பெண்ணை என் மகனுக்குத் திருமணம் செய்து தாருங்கள் எனக் கேட்பது அபத்தமாகத் தோன்றுமே என்ற சிந்தனைதான் அவருக்கு. அதை விக்ராந்திடம் வாய்வழியாகவே அவர் உரைத்திருந்தார்.
“ம்மா… அண்ணனுக்குப் பிடிச்சிருக்கு. ஐ திங்க் அவங்களுக்கும் தேவாவைப் பிடிச்சிருக்கும் போல. இல்லன்னா அண்ணன் இவ்ளோ தூரம் அர்ஜ் பண்ண மாட்டான். அதுவும் இல்லாம அவன் ரொம்ப ஆசையா இருக்கான். நீ முட்டுக்கட்டை போடாத…”
“அப்புறம் அவங்களுக்கு வேற யாரோடும் கல்யாணம் முடிஞ்சு போச்சுன்னா உன் மகன் சன்னியாசியாகிடுவான். அதுக்கு நீ காரணமாகிடாத. நிச்சயம் பண்ண பொண்ணைக் கேட்குறோம்னு ஏன் நினைக்கிற? உன் மகனுக்குப் பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு நினைச்சு ஸ்டெப் எடும்மா.”
“முதல்ல அவங்க வீட்ல பேசிட்டு அடுத்து என்னென்னுப் பார்ப்போம். போகும்போதே வேணாம்ன்ற மைண்ட்செட்ல போகாத. தேவாவை மனசுல வச்சுக்கிட்டு எதுனாலும் செய்!” என விக்ராந்த் அவரிடம் அழுத்தமாகக் கூற, அவர் பெருமூச்செறிந்தார். ஒரு தாயாக மகனின் விருப்பமே முன்னிற்க, அனைத்து தளைகளையும் பின்னே தள்ளினார்.
தேவா ஐந்து மணிக்கு அரைமணி நேரம் முன்பாகவே வீட்டிற்கு வந்துவிட்டான். ரேணுகா இன்னும் காலையில் மறுத்ததைப் போலத் தன் முடிவில் மாறாமல் அடத்துடன் இருந்தால் அவரை எப்படி சம்மதிக்க வைக்கவென இவன் பெரும் குழப்பத்துடன் வர, வாயிலில் நிறைய காலணிகள் கிடந்தன.
இவன் யோசனையுடன் உள்ளே செல்ல, “ஏன்பா தேவா… உனக்குப் பொண்ணு பார்க்குற அன்னைக்கு கூட வேலை கிடக்குமா என்ன? அப்படியென்னதான் படம் எடுக்குறீயோ… போ… ஓடு ரெடியாகிட்டு வா. நல்ல நேரத்துலயே வீட்லருந்து கிளம்புவோம்!” ரேணுகாவின் ஒன்றுவிட்ட அக்கா ஒருவர் இவனைப் பார்த்து அங்கலாய்த்தார்.
தேவா கூடத்தில் குழுமியிருந்த பத்துக்கும் மேற்பட்டோரைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டான். ரேணுகா அவனை முறைத்துதான் பார்த்தார். நான் சொல்லி நீ கேட்கவில்லையே என்ற செல்லக் கோபம் அது. ஆனாலும் அவன் ஆசைப்பட்டதை நிறைவேற்றி வைக்கும் முனைப்பும் அவர் முகத்திலிருக்க, இவன் உஃப்பென மூச்சைக் குவித்து வெளிவிட்டான். பட்டென உற்சாகம் உடலில் ஆறாக ஓடியது.
“பத்து நிமிஷத்துல கிளம்பி வரேன் பெரிம்மா… நீங்க எல்லாரும் ரெடியா இருங்க!” என்றவன், அலைபேசியை எடுத்து பெரிய வாடகை மகிழுந்து ஒன்றை வரவழைத்தான். ஐந்தே நிமிடத்தில் உடை மாற்றி, முகம் கழுவி என்னென்னவோ முகப்பூச்சை கன்னத்தில் தடவி கண்ணாடியைப் பார்த்தான். பளிச்சென அவன் முகம் மின்னியது. இலகுவான உடை, முகத்திலும் சின்ன புன்னகை என வெளியே வந்தவன், அனைவரையும் அந்த மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு ஜீவாவின் வீட்டை நோக்கிப் பயணித்தான்.
“ஏன் தேவா… எத்தனையோ பொண்ணுங்க நம்மூர்ல அழகு பெத்த புள்ளைகளா இருக்குதுங்க. நீ என்னடான்னா இந்த சின்னதம்பி மகளைப் போய் பிடிச்சிருக்குன்னு சொல்ற? வேற புள்ளையே உனக்கு கிடைக்கலையா? அவங்கப்பன் பெரிய குடிகாரனாச்சே?” உறவினர் பெண்மணி ஒருவர் நீட்டி முழங்க, தேவா முன்பக்கக் கண்ணாடி வழியே தாயை முறைத்தான்.
“ஏன் அத்தாச்சி… கிரிஜா மகளை நீங்க பார்க்கலையே. நல்லா கண்ணுக்கு லட்சணமா இருப்பா. அவங்கப்பா முன்ன மாதிரி இல்ல. இப்போ பொறுப்பா இருக்காரு. இல்லைன்னா நான் என் மகன் கேட்டதும் சம்மதம் சொல்லிருப்பேனா?” ரேணுகா பதிலுக்கு தேவாவை முறைத்துவிட்டு, அவனை எங்கேயும் விட்டுக் கொடுக்க முடியாமல் அந்தப் பெண்மணியின் வாயை அடைத்தார்.
தலைக்குக் குளித்து அப்படியே முடியை உலர விட்டிருந்தாள் ஜீவா. மதியம் பசிக்கவில்லை என உண்டிருக்கவில்லை. இப்போது குளித்து முடித்து ஆற அமர தொலைக்காட்சியில் ஏதோ ஒரு படத்தை ஒலிக்கவிட்டு தரையில் அமர்ந்து நீள்விருக்கையில் சாய்ந்து காலாட்டியவாறே மெல்ல உணவை வாயிலிட்டு மென்றாள். அவள் பார்வை தொலைக்காட்சியில் இருந்தாலும் சிந்தனை அங்கில்லை.
மூன்று நாட்களுக்கு முன்னே தேவா பேசியவற்றை மெல்ல அசைபோட்டாள். அதற்கடுத்ததாக அவன் அழைப்பான், பேசுவான், நேரில் சந்திக்க முயல்வான் என இவளிடம் ஒரு எண்ணமிருந்தது. ஆனால் அவனிடமிருந்து ஒரு சின்ன செய்திகூட இவளைச் சமீபிக்கவில்லை.
இவளுக்கு அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் மனம் குழம்பியது. ஒருவேளை அன்றைக்கு ஏதோ உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, பிறிதொரு நேரம் நன்றாக யோசித்துப் பார்த்திருப்பான். அவனுக்கும் எனக்கும் எங்கேயும் பொருந்தியிருக்காது. முக்கியமாக அவன் அடுக்கிய எதிர்பார்ப்பில் எதுவுமே என்னிடம் இல்லை. அது அவனுக்கே புரிந்திருக்கும் என எண்ணிச் சிரித்துக் கொண்டாள்.