மௌனம் – 20.3

ஜீவா தேவாவைப் பார்த்தாள். அவனிடம் அவள் பேச வேண்டும் என்ற செய்தி அதில் புதைந்திருந்தது. அவனுக்கும் அவளிடம் பேசி விளக்கம் தரும் எண்ணம்தான்.

“ஆன்ட்டி… வித் யுவர் பெர்மிஷன், நான் ஜீவாவோட ஒரு டென் மினிட்ஸ் மாடியில போய் பேசிட்டு வரேன்!” என அவன் எழ, கிரிஜா மகளைப் பார்த்தார். அவர் அனுமதித்தால் செல்லுவேன் என அவள் பார்வை கூறிற்று. மற்றபடி அசையாமல் நின்றாள் அவள்.

“போய்ட்டு வரட்டும் கிரிஜா. நம்ம அதுக்குள்ளே பேசி முடிப்போம்!” தேவாவின் பெரியம்மா கூற, கிரிஜா வேலுவை ஜீவாவோடு செல்லுமாறு கண் காண்பித்தார்.

அவனுக்கும் அது புரிய, “வாங்க அங்கிள்… நானே உங்களுக்கு ஸ்டெப்ஸ் காட்டுறேன்…” என அவன் தேவாவை அழைத்துச் செல்ல, ஜீவாவும் அவன் பின்னே சென்றாள். அவளிடம் என்ன பேசுவது, அவள் கோபம் கொண்டால் எப்படி சமாதானம் செய்வது என அவன் ஒருவாறு தன்னிலை விளக்கம் கொடுக்கத் தயாரானான்.

“வேலு… நீ கீழ போய் நில்லு. நான் அவரோட பேசிட்டு வரேன்!” எனச் சின்னவனை அனுப்பிய ஜீவா, கையைக் கட்டிக்கொண்டு தேவாவைப் பார்த்தாள். என்ன பேச வேண்டுமோ பேசு என்பது போலிருந்தது அவள் முகம்.

எப்போதும் அவளிடம் தென்படும் இயல்பான அணுக்கம் தொலைந்து என்னவோ ஒரு உணர்வில் அவள் உதடுகள் சிரிக்க மறந்தன. தேவா அவள் ஏதாவது கேட்பாள், சண்டையிடுவாள், அதன் மூலம் தன் வாதத்தைத் தொடங்கலாம் என எண்ணியிருக்க, அவள் எப்போதும் போல இன்றும் அவன் கணிப்பிற்கு அப்பாற்பட்டு வெகுநிதானமாக அவனைக் கையாண்டாள். அவனுக்கு என்ன விளக்கம் கொடுக்க எனத் தெரியாமல் மனம் தடுமாறிற்று.

கைகள் இரண்டையும் மேலே தூக்கியவன், “சாரி… ஐ டோன்ட் வாண்ட் டூ லூஸ் யூ!” என ஒரே வார்த்தையில் தன்னுணர்வுகளைப் பகிர்ந்தான். ஜீவா கேலிச் சிரிப்புடன் சுவர் பக்கமாகத் திரும்பி மெல்ல பார்வையை உயர்த்தி கீழே இறங்கிய சூரியனை மெல்ல பார்வையாலே அளந்தாள். அவளுக்கு சிரிப்பதா? கோபம் கொள்வதா எனக் கூடத் தெரியாத நிலை.

சில பல நிமிடங்கள் கடந்தும் அவள் பதிலுரைக்காததில் துணுக்குற்றவன், “ஜீவா…” என்றான் சின்ன குரலில்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள், “எனக்கு உங்க மேல செம்ம கோபம் தேவா சார்!” என்றாள் அவள் சன்னக் குரலில்.

“நான் செஞ்சது தப்புதான். பட், ஐ டோண்ட் ஹேவ் எனி அதர் சாய்ஸ் ஜீவா. உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகாம இருந்திருந்தா, எனக்கு ஸ்பேஸ் கிடைச்சிருக்கும். உன்கிட்டே என்னைப் புரிய வச்சு வீட்ல பேசியிருப்பேன். ஆனால், இப்போ எனக்கு டைமில்ல. எப்படியாவது உன்னை என் உடமையாக்கிடணும்னு மனசு சொல்லுது. என்னை என்ன பண்ண சொல்ற?” அவன் தன்னுடைய நிலையை எடுத்தியம்ப, ஜீவா அதற்கு முறுவலித்தாள்.

“சரிதான்… உங்களுக்கு உங்க பீலிங்க்ஸ் முக்கியம். அப்போ நான்… என்னோட விருப்பம்? இதுல எங்கேயுமே என்னை நீங்க கன்சிடர் பண்ணாம உங்க உணர்வை மட்டும் பிரையாரிடைஸ் பண்ணிருக்கீங்க தேவா சார்!” அவள் கோபமில்லாமல் மெல்லிய குரலில் கேட்டாள்.

“டோன்ட் லை… ஐ’ம் ஷூர், உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்!” அவன் உறுதியாகக் கூற, இவளிடம் சின்ன சிரிப்பு.

“வாழ்க்கை ரொம்ப விசித்திரமானதுல்ல தேவா சார். நான் தேடினப்போ நீங்க வரலை. ஆனால் அதையெல்லாம் நான் மூவ் ஆன் பண்ணி எனக்குன்னு ஒரு லைஃப் தேர்ந்தெடுத்து அதுக்குள்ளே நான் வாழும்போது ஏன் என்னைக் கஷ்டப்படுத்துறீங்க?” இயலாமைதான்… அவன் மீது அவளால் கோபம் கூட கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் கேட்டவளை, தேவா சின்ன அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“உங்ககிட்ட கோபமா பேசக் கூட வர மாட்டுது தேவா சார். ஏன்னா நீங்கதான் என்னோட ஃபர்ஸ்ட் க்ரஷ்‌. அப்படித்தானே எல்லாரும் சொல்வாங்க. யெஸ் அப்கோர்ஸ் எனக்கு உங்களைப் பிடிச்சிருந்துச்சு. பட், அது ஏதோ அந்த வயசுல ஹார்மோன்ஸ் பண்ண வேலை தேவா சார். அதுக்கு காதல், கத்தரிக்கான்னு பேர் வைக்க மாட்டேன். அப்பவே அந்த பீலிங்க்ஸ் வந்த வேகத்தோட நீங்க மேன்சன் காலி பண்ண கொஞ்ச நாள்லயே போயே போச்சு!” காற்றில் கையை அலையவிட்டவாறே சின்ன சிரிப்புடன் கூறினாள் ஜீவா. தேவா எதுவுமே பதிலுரைக்காமல் அவளைப் பார்த்தான்.

“ப்ம்ச்… ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு அட்லீஸ்ட் என்னை ஞாபகம் வச்சுத் தேடி வருவீங்கன்னு நினைச்சேன்!” என்றவள் கூற்றில் அவன் முகம் மாறிற்று.

“வெயிட் வெயிட் தேவா சார். நீங்க நினைச்சு ஃபீல் பண்ற அளவுக்கு இது ட்ராஜிடிக் ஸ்டோரி எல்லாம் இல்ல. ஸ்கூல்ல கெத்து சீனியர் மேல வர்ற க்ரஷ் மாதிரித்தான் உங்க மேல எனக்கு அப்போ ஃபீலிங்க்ஸ். என்ன நான் கொஞ்சம் உஷாரு. சோ, அதையெல்லாம் தூசியா தட்டிட்டேன்!” அவன் முகம் கசங்கியதும் படக்கென அவள் தொனி முழுதாகக் கேலிக்கு மாறியது. என்னவோ அவன் முகத்தில் சின்னதாகக் கவலைத் தெரிந்தாலும் இவளுக்கு என்னவோ போலாகித் தொலைக்கிறது.

“நீங்க அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பெரிய உயரத்துக்குப் போய்ட்டீங்க. இதுல என்னை எங்கப்பா ஞாபகம் வச்சுக்க முடியும்னு அதை அப்படியே க்ராஷாவே க்ராஸ் பண்ணிட்டேன். பட், நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் டைரக்டரா இருக்காரேன்னு உங்கப் படத்தையெல்லாம் ஒன்னு விடாம பார்த்துடுவேன்‌. சோஷியல் மீடியால அப்பப்போ என்ன பண்றீங்கனு பார்த்து தெரிஞ்சுப்பேன். அந்த நடிகையோட நிறைய கிசுகிசு, ஆனாலும் உங்களுக்கு அவங்க ஃப்ரெண்ட் தான்னு தெரிஞ்சது.
அப்புறம் அப்படியே லைஃப் மூவ் ஆகிடுச்சு. சாரி… நான் உங்களை நினைச்சு ஃபீல் பண்ணேன், வெயிட் பண்ணேன்னு கிரிஞ்சா எல்லாம் எனக்குப் பேச வராது தேவா சார். இதான் என் பேக் ஸ்டோரி…”

“எல்லாருக்கும் வயசுல யாராவது ஒருத்தரைப் பிடிக்கும். ஆப்போசிட் ஜெண்டர் அட்ராக்ஷன் இஸ் நேச்சுரல், அவ்ளோதான். இதை நான் உங்ககிட்டே ஷேர் பண்றது கூட நீங்க பிரஷர் பண்ணிக் கேட்டீங்கன்னுதான். இல்லைன்னா நானே நிறைய நாள் நினைச்சு சிரிச்சிருக்கேன். அதெல்லாம் ஒரு அழகான மெமரீஸ். அதுக்கு நீங்க இப்போ உயிர்கொடுக்க நினைக்கிறதுதான் இம்பாசிபிள் தேவா சார். ஆனாலும் நீங்க இவ்ளோ தூரம் ஒரு ஊரையே கூட்டிட்டு வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல. பெரிய ஆளுதான் போங்க!” கேலியாக சிரிப்புடன் கூறி முடித்தவளைப் பார்த்தான் தேவா. ஒரு காலத்தில் அவன் வரவில்லை என வலித்தது, ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். ஆனால் இப்போது அதை நினைத்தால் உண்மையில் சிரிப்புத்தான் வந்தது. பக்குவமில்லாத வயதில் அவளுக்கு வந்த முதல் பிடித்தம் தேவாவின் மீதுதான். அதனாலே அவளுக்கு அவன் மீது அன்பு, அக்கறை அதிகம்.

ஜீவாவிற்குப் பின்னே முழுதாகச் சூரியன் மறைந்து இரவு கவிழத் துவங்கியிருந்தது. அதில் இவள் முகம் மட்டும் அவனுக்கு சௌஜன்யமாகத் தெரிந்து தொலைத்தது.

‘ஆனாலும் எமகாதகி. பிடிச்சிருக்குன்றதைக் கூட இப்படி ரோபோட்டிக்கா சொல்ல முடியும்னு எனக்கு இப்போத்தான் தெரியும். என் படத்துல வர்ற ஹீரோயின்ஸ் எவ்ளவோ தேவலை!’ மனதிற்குள் நொந்தவன், “ஜீவா…” என்றான் அதட்டலுடன்.

“என்ன அதட்டுறீங்க? உங்க கூட்டத்தைக் கூட்டிட்டு வீடு போய் சேருங்க. எங்கம்மா இதுக்கு சம்மதிக்க வாய்ப்பே இல்ல. அவங்களை மீறி நீங்கதான் வேணும்னு நான் ஒருநாளும் வர மாட்டேன் தேவா சார். அம்மா பார்த்து யாரைக் கல்யாணம் பண்ண சொல்றாங்களோ, அவரைத்தான் நான் என் லைஃப் பாட்னரா அக்செப்ட் பண்ணுவேன். சோ!” அவள் கேலியுடன் என்றாலும் அழுத்தமாக உரைக்க,

“அப்போ என்னோட எஃபர்ட் எல்லாம் வேஸ்டா ஜீவா?” என அவன் அப்பாவியாகக் கேட்டு விழித்ததில்,

“ஐயோ… தேவா சார்… தேவா சார்!” அவள் கோபம் கொள்ள முடியாமல் சன்னச் சிரிப்புடன் மென்மையாகச் சலித்து அவன் பேரை இருமுறை உரிமையுடன் உச்சரித்ததில் என்னவோ அவர்கள் இருவருக்குமிடையே இருந்த திரை விலகியதைப் போல உணர்ந்தவன், எட்டி அவள் கையைப் பிடிக்க முயன்றான்.

ஜீவா வெடுக்கென நகர்ந்தவள், “இதுதானே வேணாம்னு சொல்றது தேவா சார்?” சிரிப்பை விடுத்துக் கண்டிப்புடன் பார்த்தாள்.

பிடரியைக் கோதியவன், “தப்பா எதுவும் இல்லம்மா… ஜஸ்ட் ப்ரெண்ட்லியா கையைப் பிடிக்க வந்தேன். நீ அதுக்கெல்லாம் இப்படி பார்க்காத!” என அவன் கூற,

“அது சரி… நடந்ததுலயே ஒரு நல்ல விஷயம் என்னத் தெரியுமா தேவா சார்? தெரிஞ்சோ தெரியாமலோ எங்கப்பா இல்லாத நேரத்துல வந்திருக்கீங்க. அதுவரைக்கும் சந்தோஷம்!” என அவள் கூற, அவன் புருவங்கள் இடுங்கின.

“ஏன்… உங்கப்பா என்ன பண்ணிடுவாரு என்னை? நான் ஃபைட் தெரிஞ்ச ஆளும்மா!” அவன் சட்டையின் கையை மடித்து சண்டைக்குத் தயாரான விதத்தில் இவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“சண்டையா… ஹாஹா?” எனக் கேட்டு அவள் கலகலவெனச் சிரிக்க, இவனுக்கு சட்டென பேச்சு மறந்தது. ஜீவா இப்படி சிரித்தெல்லாம் அவன் பார்த்ததே இல்லை. எப்போதும் அளவான புன்னகை, பேச்சு என ஒரு கட்டுக்குள்ளே முடங்கிக் கொள்ளும் பெண்.

ஆனால் இன்றைக்கு என்னவோ அவள் மனம் திறந்த வெளியாக அவனிடம் காட்சிக்கு வந்தது. அவளுக்குமே கோபத்திற்கு பதில் அவன் செய்கையும் கடந்த காலமும் நினைவிற்கு வந்ததில் புன்னகைக்கத்தான் தோன்றிற்று.

“ஊருல ஆல்ரெடி எங்கப்பா பெரிய குடிகாரன்னு நாறிப் போயிருக்கு. இவ்ளோ தூரம் வந்தும் அவரால எங்க குடும்பத்தோட பேர் கெட்டுத்தான் கிடக்கு. என்ன, அதெல்லாம் உங்க முன்னாடி மறுபடியும் ரீ-டெலிகாஸ்டானா வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது உங்க சொந்தக்காரங்களுக்கு கன்டென்ட் கிடைச்சிருக்கும் தேவா சார்.”

“எப்படியும் வரும்போது ஒருத்தராவது குடிகாரன், ஊரை சுத்தி கடன் வாங்கி ஏமாத்துனவன் பொண்ணைப் போய் ஏன் கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்னு கேட்டிருக்க மாட்டாங்களா என்ன? அதை யோசிச்சுத்தான் நான் சொன்னேன் தேவா சார்.”

“நீங்க சண்டை போட்டாலும் எங்கப்பா தள்ளாடிப் போய் கீழேதான் விழுவார். அந்தளவுக்கு எல்லாம் இங்க சீன் கிடையாது. அந்த மனுஷன் வர்றதுக்குள்ளே பட்டுப் புட்டுன்னு கிளம்பி என் மானத்தைக் காப்பாத்திடுங்க நீங்க!” என அவள் சிரிப்பு மறந்து சின்ன முறுவலுடன் உரைத்தாலும் கூட அவள் வலி அவனுக்குத் தெரிந்தது.

அதில் தேவா அவளை ஆதுரமாக வாஞ்சையுடன் பார்த்தான். என்னவோ அந்தப் பார்வையை இவளால் சந்திக்க முடியாமல் மனம் தடுமாறிற்று.

“கீழே போகலாம்… வாங்க!” தப்பித்து ஓட முயன்றவளின் அருகே வந்து அவள் தோளில் கையைப் போட்டு தன்னோடு இழுத்தான் தேவா. ஜீவா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் உரிமையுணர்வு அடர்ந்து கிடந்தது.

“யார் என்ன சொன்னாலும் நான் வாழப் போறது உன்னோடதான் ஜீவா. ட்ரஸ்ட் மீ… ஐ வோன்ட் ஹர்ட் யூ!” என அவள் மேவாயை நிமிர்த்தியவன், “எனக்கு நீ வேணும் அட் எனி காஸ்ட். மை ஹார்ட் ஆல்ரெடி சூஸ் யூ ஜீவா. என்னால மாற முடியாது!” என்றான் அழகான விரிந்த இதழ்களும் குறும்புச் சிரிப்புமாக. ஜீவா இமைக்காமல் அவனைச் சில நொடிகள் பார்த்தாள். மலர்ந்த முகம், சிரித்த உதடுகள் என அவள் மனம் அவனிடம் மீண்டும் தடுமாறித் தொலைத்தது.

படக்கென அவன் கையைத் தட்டிவிட்டு விறுவிறுவெனப் படிகளில் இறங்கினாள். ஐந்து வருடங்கள் கடந்தப் பின்னரும் கூட இவனருகில் தன் இதயம் இன்னுமே படபடத்துப் போகிறதே என அவள் மனம் அலுத்துக் கொண்டது.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top