மௌனம் – 19

மௌனம் – 19

சட்டையின் முதலிரு பொத்தானைக் கழட்டிவிட்டு உடையைத் தளர்த்தியபடியே வீட்டிற்குள் நுழைந்த தேவாவின் முகத்தில் கொஞ்சமல்ல, நிறையவே கடுப்புதான். ஜீவாவின் எதிர்வினை அவன் எதிர்பார்த்ததுதான் என்றாலும் கூட, அவனால் சட்டென அதை ஏற்க முடியவில்லை. எல்லா வகையிலும் நான் சரியாக இருக்கிறேன். இந்தப் பெண் என்னை வேண்டாம் என்கிறாள் என்ற கடுப்புதான் அது.

“வாடா… என்ன அதிசயம் இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட?” நாற்காலியில் அமர்ந்து இரவு சமையலுக்குக் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த ரேணுகா மகன் இவ்வளவு சீக்கிரம் வரப் பார்த்ததும் கேட்டார்.

“ஏன்… நான் சீக்கிரம் வந்ததுல உங்களுக்கு என்ன பிரச்சனை? வேணா போய் ரோட்டை நாலு ரவுண்ட் அடிச்சிட்டு வரவாம்மா?” எரிச்சலாகக் கேட்டான் தேவா. அந்தக் குரலில் நீள்விருக்கையில் ஆறடி உடலைக் குறுக்கிப் படுத்து அலைபேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்த விக்ராந்த் தலையை உயர்த்திப் பார்த்தான்.

‘என்ன ரொம்ப சூடா இருக்கான். என்ன மேட்டர்?’ விளையாட்டில் கவனம் இருந்தாலும் செவியை இங்கே ஈந்தான் விக்ராந்த். தேவா வேலையின் கோபத்தையெல்லாம் வீடுவரை ஒருநாளும் எடுத்து வந்தது இல்லையே என அவனுக்கு யோசனை சென்றது.

“ஏன்டா… ஏன் ஒரு மாதிரி பேசுற? வேலையில எதுவும் சொதப்பிடுச்சா?” என தேவாவைக் கேள்வியாகப் பார்த்தார் பெரியவர்.

‘வாழ்க்கையே சொதப்புது. வேலையாமா முக்கியம்?’ அவன் மனம் கேலி செய்தது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… சரி, எனக்குப் பொண்ணுப் பார்க்குறேன்னு அம்மாவும் மகனும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணிங்களே, அந்த விஷயம் என்னாச்சு? சும்மா அன்னைக்கு ரெண்டு ஃபோட்டோ காட்டுனதோட சரி. அதை விட்டுட்டீங்க? அப்படித்தானே?” சற்றே உரத்துக் குரலில் கோபம் போல கேட்டான்.

‘எலி ஏன் இப்போ அம்மணமா ஓடுது?’ விக்ராந்த் மனம் கேள்வி கேட்டது. படக்கென சாய்ந்தமர்ந்தவன், லேசாய் உடலை உயர்த்தி உட்கார்ந்தான்.

தேவாவின் பேச்சில் ரேணுகாவின் முகத்தில் குழப்பம். “டேய்… அடுத்து ரெண்டு பொண்ணுங்க அம்சமா அழகா காட்டுனேனே… என்ன சொன்ன நீ?” என அவர் அதட்டல் போலக் கேட்டார்.

“எப்போ காட்டுனீங்க? என்ன சொன்னேன் நான்?” கையிலிருந்த கடிகாரத்தைக் கழட்டி வைக்கும்போது தேவாவின் விரல்கள் மெல்ல அதை வருடின. ஜீவா அவனுக்காக வாங்கிக் கொடுத்தது. மனம் அவளின் சிரித்த முகத்தைக் கண்முன்னே கொண்டு வர, அவன் மனம் மெல்ல சமன்பட்டது. அவன் அசட்டையாகக் கேட்டதில் ரேணுகாவிடம் சிடுசிடுப்பு.

“பொண்ணு நல்லாருக்கு, குடும்பமும் நல்ல குடும்பம். நேர்ல பார்த்துப் பேசுறீயாடான்னு நான் கேட்டதுக்கு, அமெரிக்கா போய் உக்கார்ந்துட்டு அதெல்லாம் வேணாம்… உன் வேலையைப் பாரும்மான்னு சிடுசிடுத்தது யாருடா மகனே?” எனக் கேலியாகக் கேட்டார் அவர்.

அதில் தாடையைத் தடவிய தேவா, “அப்படியா சொன்னேன்? சரியா ஞாபகம் இல்லம்மா. அப்போ ஏதோ வொர்க் டென்ஷன்ல சொல்லிருப்பேன். இப்போ எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க!” என்றான் அழுத்தமாக.

“ம்ப்ச்… தேவா… இப்பவே கல்யாணம் பண்ணி வைங்கன்னா பொண்ணை என்ன ஆர்டர் போட்டாடா வாங்க முடியும்? நீ சொல்லிட்டல்ல. நான் நல்ல பொண்ணா இந்த மாசத்துலயே தேடி பிடிச்சு அடுத்த மாசம் கல்யாணத்தை வச்சிடுறேன்…” என ரேணுகா கொஞ்சம் நிம்மதியான குரலில் கூறினார். மகன் முன்பு திருமணப் பேச்சைத் தட்டிவிட்டதில் அவருக்கு ஏக வருத்தம். இப்போது அவனே வந்து கேட்கவும் அவருக்குச் சந்தோஷமாக இருந்தது.

“பொண்ணெல்லாம் நீங்க பார்க்க வேணாம்மா. நானே பார்த்துட்டேன். நீங்க போய்ப் பேசி முடிங்க, போதும்!” அவன் சின்ன குரலில் முயன்று வரவழைத்துப் பேச,

“வாரே வா… அதானே பார்த்தேன், என்னடா அண்ணே சவுண்ட் விடுறானேன்னு. அண்ணிகிட்டே டோஸா? யார் ப்ரோ நம்ப வீட்டு மூத்த மருமக. நான் ரொம்ப க்யூரியஸா இருக்கேன் ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க?” விக்ராந்த் உற்சாகமாகத் துள்ளி எழுந்தபடியே கேட்டான்.
ரேணுகாவிற்கு நொடியில் முகம் மலர்ந்து போனது.

விதவிதமாக காதலை ரசித்து திரையில் காண்பித்தவனுக்கு காதல் வராவிட்டால்தான் அதிசயம். ரசனை மிகுந்தவன் தேவா. கண்டிப்பாக அவன் தேர்வு சரியாக இருக்குமென மற்ற இருவருக்கும் ஒரு சேர தோன்றிற்று.

“டேய் தேவா… இதைச் சொல்லத்தான் சுத்தி வளைச்சுப் பேசுனீயாடா? உனக்குப் பிடிச்சா நான் ஏன்டா வேணாம்னு சொல்லப் போறேன். பொண்ணு முதல்ல யாருன்னு சொல்லு. நான் நம்ப வீட்டாளுங்களோட போய்ப் பேசி முடிக்கிறேன். ஜாம்ஜாம்னு கல்யாணத்தை!” ரெணுகா பரபரத்தார். தன் மகனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால், அதில் அவருக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஜாதி, மத பேதமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே கிடையாது. மகனின் விருப்பமே அவருக்குப் பிரதானம்.

தாயின் முகம் பார்க்க சற்றுத் தயங்கினான் தேவா‌. பெரும் கூச்சமொன்று அவனை ஆட்கொள்ள அவஸ்தையை விழுங்கி, “நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேனே ஜீவா. நம்ம ஊருக்காரப் பொண்ணு. அவதான்மா…” என்றான் பெருமூச்சுடன். ரேணுகா யாரெனப் புரியாமல் யோசித்தார். அவருக்கு ஜீவாவை நினைவில் இல்லை. அவள் இங்கே வந்து சில பல மாதங்கள் கடந்திருந்தது.

“வாவ்… அதான் முன்னாடியே அண்ணியை வீட்ல இன்ட்ரோ பண்ண கூட்டிட்டு வந்தியா ப்ரோ. எனக்கு ஓகே. அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு!” விக்ராந்த் கூற, ரேணுகாவிற்கு ஜீவா யாரென யோசித்து இனம் கண்டறிந்ததும் முகம் மாறிற்று.

“தேவா… அந்தப் பொண்ணு மட்டும் வேணாம்டா. நம்ம குடும்பத்துக்கு சரி வரும்னு எனக்குத் தோணலை!” யோசிக்காமல் அவர் உடனடியாக மறுக்க, தேவா அவரைப் புரியாமல் பார்த்தான்.

“ஏன்… ஜீவாகிட்டே என்ன குறையைக் கண்டீங்க நீங்க? எனக்கு அவளைத்தான் பிடிச்சிருக்கு!” இவன் படக்கென இடை புகுந்தான். அவள் வேண்டுமென அவர் கூறியதும் அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை என்னவோ ஒரு ஒவ்வாமை. அவளை விட யார் எனக்குச் சரியாக இருப்பார்கள் என காதல் கொண்ட மனம் முந்திற்று.

“அவங்களைப் பத்தி நல்லவிதமாக யாரும் சொல்லலைடா. ஊரே கடன் வாங்கிக் குடிச்சிட்டு காசைத் திருப்பிக் கொடுக்க முடியாமத்தான் அந்தப் பொண்ணு, கிரிஜா எல்லாரும் ஊரைவிட்டு ஓடி இங்க வந்தாங்க. என் பையனுக்குப் பொண்ணெடுக்குற குடும்பம் நாலு பேர் மெச்சுற மாதிரித்தான் இருக்கணும். இப்படியொரு இடத்துல பொண்ணெடுக்க எந்த வகைலயும் நம்ம குறைஞ்சு போகலைடா. நல்ல குடும்பமா பார்க்கலாம்!” அவர் குரலை உயர்த்தினார்.

“ப்ம்ச்…” என உச்சுக் கொட்டிப் பிடரியைக் கோதியவன், “ம்மா… அதெல்லாம் பழைய கதை. இப்போ ஜீவா அந்தக் கடனை எல்லாத்தையும் அடைச்சுட்டா. சொந்தமா ஹோட்டல் ரன் பண்ணி நல்லா இருக்காங்க. நீங்க ஏன் பழசைக் கிளறுறீங்க?” என்றான் சலிப்பாக.

“தேவா… சொன்னா புரிஞ்சுக்கணும். பழசோ, புதுசோ… நீ நான்னு உனக்குப் பொண்ணு கொடுக்க நம்மூர்லயே எத்தனையோ பேர் ரெடியா இருக்காங்க. அப்படி இருக்கப்போ அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்றதுல எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்ல. குடிகாரக் குடும்பம் நமக்கு வேணாம். நீ கொஞ்சம் பொறுமையா இரு. நானே நல்ல பொண்ணா பார்த்து உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…” அவர் கண்டிப்புடன் பேச, இவன் முடியாது என நிர்தாட்சண்யத்துடன் மறுத்தான். அவள் வேண்டுமென அவளை இவனால் மனமுவந்து விட்டுக் கொடுக்க முடியாது. என்னவோ காதல் பித்துதான். இந்த சில தினங்களில் இன்னுமே அது கூடிப் போய் அவன் அவஸ்தையைக் கூட்டிற்று. அவளை மனைவியாகத் தன் கைவளைவில் நிறுத்தும் வரை அவன் மனம் ஓயாது.

“ம்மா… அவங்க அப்பாவோட நான் வாழப் போறதில்ல. ஜீவாதான் இந்த வீட்டுக்கு வரப் போறா. அவ குடும்பத்தை என்ன இங்க கூட்டிட்டு வந்து வச்சுக்கப் போறோமா என்ன? சோ, அதெல்லாம் காரணமா காட்டி வேணாம்னு சொல்லாதீங்க. எனக்கு அவதான் வேணும்!” இவன் உறுதியாக உரைத்தான்.

“ஆமாடா… அந்தப் பொண்ணுதான் இங்க வாழப் போறா. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால், நாளை பின்ன கடனை வாங்கிட்டு கொடுக்க வக்கில்லாதவன் வீட்ல பொண்ணெடுத்துருக்கோம்னு நாலு பேர் பேசுவாங்கடா. நான் காதல் கல்யாணத்தை எதிர்க்கலை. இந்தப் பொண்ணு வேணாம்னு சொல்றேன். நீ வேற நல்ல குடும்பமா பாரு. நான் எந்த மறுப்பும் சொல்லாம உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…” அவர் கூற,

“ஆமாண்ணா… லவ் பண்ணும்போது நல்ல குடும்பம், அழுகுன குடும்பம்னு பார்த்துதான் இனிமே நீ லவ் பண்ணணும். இல்லைன்னா அம்மாவுக்குப் பிடிக்காது. நீ பேசாம அம்மாகிட்டே எந்தக் ஃபேமிலி நல்லதுன்னு கேட்டு கன்பார்ம் பண்ணிட்டுப் போய் லவ் பண்ணு. அப்போ அம்மாவுக்கு நல்ல வசதியா இருக்கும்!” விக்ராந்த் தாயை நக்கலடித்தான்.

“விக்கி…” அவர் மகனைக் கண்டனமாகப் பார்த்தார்.

“பின்ன என்னம்மா… எப்பவோ நடந்ததைத் தூக்கிட்டு வந்து நாலு பேர் பேசுவானுங்க, எட்டு பேர் பேசுவானுங்கன்னு உருட்டிட்டு கிடக்க? ரெண்டு பேர் சேர்ந்து வாழ அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சா போதும். பின்னாடி பேசுறவங்க பேசிட்டேதான் இருப்பாங்க. நீ அதையெல்லாம் கை காட்டாத. எனக்கு நீ சொல்ற எதையும் கன்சிடர் பண்ண விருப்பம் இல்ல. பொண்ணு குணம் சரியில்ல, அது இதுன்னு நீ சொன்னா கூட அக்செப்ட் பண்ணிப்பேன். அவங்கப்பா ஊர்ல கடன் வாங்குனார்னா அவங்க என்ன பண்ணுவாங்க? இன்ஃபேக்ட் சொந்தமா ஹோட்டல் ரன் பண்ணி மொத்தக் கடனையும் திருப்பிக் கொடுத்துருக்காங்க. ஒரு பொண்ணா அவங்க திறமையா இருக்காங்க. இதுக்கும் மேல என்ன எதிர்பார்க்குற நீ?” அவன் மூச்சு வாங்கப் பேச, தேவா தண்ணீரை எடுத்து வந்து தம்பியிடம் கொடுத்து, அவன் முதுகை நீவிவிட்டான்.

“போதும்டா… இதெல்லாம் என் டையலாக். நீ ஏன் எமோஷ்னலாகுற? நான் அம்மாவைப் பார்த்துக்கிறேன்…” அவன் கூற, விக்ராந்த் அண்ணனை முறைத்தான்.

“ம்யூச்சுவல் ஹெல்ப் ப்ரோ. இன்னைக்கு நான் உனக்குப் பண்றேன். அதை மறக்காம சரியான டைம்ல திருப்பிச் செஞ்சிடு!” என்றான் மெல்லிய குரலில். தேவா அவன் முதுகிலே அடித்துவிட்டு தாயைப் பார்த்தான். அவர் முடியாது என்பது போலத்தான் நின்றிருந்தார்.

“ம்மா… நான் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு அவதான் வேணும். வேற பொண்ணை நீங்க கை காட்டினாலும் நான் மேரேஜ் பண்ற ஐடியால இல்ல. ஒன்னு அவளைக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லன்னா நான் சந்நியாசம் போறேன். அடுத்து விக்கிக்குப் பார்த்துக்கலாம்!” அவன் குரலின் தீவிரம் உணர்த்திற்று அவன் கொண்ட காதலை, பிரியத்தை. ரேணுகா அதிர்ந்து போனாலும் தன் முடிவை மறுபரிசீலனை செய்யும் எண்ணத்திற்கு வந்தார். அன்றைக்கு வந்த ஜீவாவை நன்றாக நினைவில் கொண்டு வர முயல, தேவா அவர் எண்ணம் புரிந்தவனாக தன் அலைபேசியை எடுத்து அவரிடம் காண்பித்தான்.

“ரொம்ப யோசிக்காதீங்க… இதுதான் அந்தப் பொண்ணு!” வேலு அவளை எடுத்திருந்த புகைப்படத்தை இவனும் சேமித்திருந்தான். அமைதியான புன்னகை, நளினமாக, நாகரிகமாகப் புடவை உடுத்தி, கண்ணுக்கு நிறைவாகத்தான் இருந்தாள். அவரால் அவள் தோற்றத்தைக் குறை கூற முடியவில்லை. குணமும் அவர் கேள்விபட்டவரை நல்லதாகத்தான் தோன்றிற்று. ஆனாலும் குடும்ப பின்னணி அவரை தயங்கச் செய்தது‌.

“ம்மா… ஜீவா ரொம்ப நல்ல பொண்ணும்மா!” தேவா தாயின் தோளில் கை போட்டுச் சலுகையாக அவரிடம் கேட்டான். மகன் கேட்டதை அவர் மறுத்ததாகச் சரித்திரம் இல்லை. ரேணுகாவிற்குப் பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம். கணவன் சென்ற பிறகு அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என எத்தனையோ முறை எண்ணி வேதனையுற்றிருக்கிறார். அதனாலே ஓரளவிற்கு நல்ல வசதி வாய்ப்புகள் வந்ததும் அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தார். மகன் காதல் திருமணம் செய்கிறான் என்பதில் அவருக்கு முழு சம்மதம்.

என்ன, தங்களது சொந்த ஊரிலேயே கடன் வாங்கி ஊரார் வாயில் விழுந்தெழுந்த குடும்பத்தில் பெண்ணெடுக்க வேண்டுமா என அவருக்கு மனம் நெருடியது. நல்ல குடும்பத்தில் தன் மகனுக்கு ஏற்ற பெண்ணாகப் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் மகன் விருப்பமே முன்னிற்க, என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறினார்.

“ம்மா… ரொம்ப யோசிக்காத. அண்ணன் எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு நீயே சொல்லுவ. அப்படி இருக்கும்போது லைஃப் மேட்டர்ல அண்ணன் அசால்டா முடிவெடுக்குமா? அண்ணியைப் பத்தி நல்லா புரிஞ்சுகிட்ட பின்னாடிதான் நம்மட்ட வந்து பேசுவான். நீ அவங்க குடும்பத்தை விட்டுட்டு, அண்ணியைத் தனி மனுஷியா பாரு. அன்னைக்கு வந்தப்போவே அவங்களோட அமைதி எனக்குப் பிடிச்சிருந்துச்சு. உன்னை மாதிரி லொடலொடன்னு பேசுற மாமியாருக்கு ஏத்த மருமக அவங்கதான்!” விக்ராந்த் தாயின் மறுபுறம் அமர்ந்து அவர் தோளில் கை போட்டான். ரேணுகா இரண்டு மகன்களையும் முறைத்தார்.

“ம்மா… ப்ளீஸ்மா… எனக்காக ஓகே சொல்லு!” தேவா அவர் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்ச, விக்ராந்தும் அதையே செய்தான்.

“சரி… ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. எனக்கு யோசிக்க டைம் வேணும். நான் பொறுமையா யோசிச்சு பதில் சொல்றேன்…” என அவர் இறங்கி வந்ததும் தேவாவின் முகம் மலர்ந்தது.

“ஓகேம்மா… நல்லா யோசி. வீக் எண்ட் வரை டைம் எடுத்துக்கோ. சண்டே போய் அவங்க வீட்ல பேசலாம்!” என்றான் உற்சாகமான குரலில். ரேணுகா மகனை முறைத்தார்.

“தேவா… மூனு நாள் போதுமாடா அவங்க குடும்பத்தைப் பத்தி விசாரிக்க? ஒரே ஊருனாலும் நாலு பேர்கிட்டே விசாரிச்சு சொந்தக்காரங்ககிட்டே பேசித்தான்டா முடிவெடுக்க முடியும். இந்த மாசம் போகட்டும். அடுத்த மாசம் அவங்க வீட்ல பேசலாம்!” என அவர் கூற, மகன் பலமாக மறுத்தான்.

“ம்மா… ஒரு மாசம் எல்லாம் டைம் கிடையாது. நம்ம தள்ளிப் போடத் தள்ளிப் போட எனக்குக் கத்தி மேல நிக்கிற மாதிரி ஃபீல். சட்டுபுட்டுன்னு பேசி கல்யாணத்தை முடிச்சு வைம்மா!” என்றான் இவன் அவசரமாக.

“அண்ணா… அதான் அம்மா பச்சைக் கொடி காட்டுடுச்சே. அப்புறம் ஏன் நீ பதறுற? அண்ணி வீட்ல ஒத்துக்க மாட்றாங்களா? மேரேஜுக்கு அர்ஜ் பண்றாங்களா?” விக்ராந்த் கேட்க,

“உங்கண்ணி தான்டா ஒத்துக்க மாட்டுறா…” என்றான் அவன் சின்ன குரலில்.

“புரியலையேண்ணா…” சின்னவன் மூக்கைச் சுருக்க, தேவா நடந்ததைச் சின்ன குரலில் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி முடித்தான். ரேணுகா படக்கென இருக்கையிலிருந்து எழுந்தார்.

“ஏற்கனவே கல்யாணத்துக்குப் பேசி முடிச்ச பொண்ணைப் பத்திதான் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தீயா தேவா? உனக்கென்ன பொண்ணா கிடைக்காது? இது ரொம்ப தப்புடா. நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன். அந்தப் பொண்ணு வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க. நீ உன் மனசை மாத்திக்கப் பாரு. அவளுக்கே விருப்பம் இல்லாம நீ ஒன்னும் பின்னாடி போகணும்னு அவசியம் இல்ல. என் மகன் இருக்க பவுசுக்கு நான் அவனுக்கு ராஜாத்தி மாதிரி பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீ ஒன்னும் அவளைத் தொங்கணும்னு அவசியம் இல்ல!” என அவர் கோபத்துடன் அகன்றார்.

“போண்ணா… சொதப்பிட்ட நீ. இதான் மேட்டர்னு என்கிட்டே சொல்லியிருந்தா சென்சார் போட்டு அம்மாட்ட பேசிருக்கலாம். போ… இனி அண்ணி… ம்கூம்… ஜீவா உனக்கில்லை. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு கம்முன்னு கிட. உன் தலையெழுத்து அப்படி!” விக்ராந்த் நெற்றியிலே அறைந்துகொண்டு அகன்றான். தேவா தலையை அழுந்தக் கோதினான்.

“பவுசு… ரொம்ப பவுசு எங்கம்மாவுக்கு. நீ என்ன வேணா இருந்துட்டுப் போ… வேணாம்னு சொல்லி என்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டா ஒருத்தி. இருந்தாலும் அம்மாவுக்கு இவ்ளோ பெருமை ஆகாது. உன் மகன் வொர்த் என்னென்னு அவகிட்டே நீ கேளு. அப்புறம் தெரியும்” இவன் சலித்தான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top