“அப்போ நீ அண்ணனுக்குப் பொண்ணு பார்க்கலை. அப்படித்தானே?” அவன் இழுக்க,
“குரு… தேவா உன்னை மாதிரி படிச்சிட்டு ஏதாவது ஒரு கம்பெனியில வேலை பார்த்தா நம்மூர் பொண்ணுங்க சரிபட்டு வரும். ஆனால் அவன் இப்போ பெரிய டைரக்டராகிட்டான். அதுக்கு ஏத்த மாதிரி படிச்ச, வசதியான பொண்ணைத்தான் பார்க்கணும். அவனே யாரையும் பிடிச்சிருக்குன்னு சொன்னா கூட எனக்கு சரித்தான்!” அவர் கூற, தேவா அமைதியாக சாப்பிட்டு எழுந்தான். அவர்கள் உரையாடலைக் கேட்டாலும் அவன் எதிலும் பங்கு கொள்ளவில்லை.
“ஓஹோ… அப்போ சினிமால நடிக்கிற பொண்ணை அண்ணன் பிடிச்சிருக்குன்னு சொன்னா கூட நீ சம்மதிப்ப. அப்படித்தானே?” அவன் தாயை சந்தேகத்துடன் பார்த்தான்.
“ஏன்டா… சினிமால நடிக்கிற புள்ளைங்கனா என்ன தப்பு. அவனுக்குப் பிடிச்சிருந்தா அதுவே எனக்குத் திருப்திதான். கல்யாணத்துக்குப் பின்னாடி அரைகுறை ட்ரெஸ் போட்டு நடிக்காம சேலை கட்டிட்டு நடிம்மான்னு சொல்லிட வேண்டியதுதான். இல்லைன்னா என் மகன் சம்பாத்தியமே இன்னும் நாலு தலைமுறைக்கு காணும். நீ வீட்டுக்கு மருமகளா பேரப் புள்ளைங்களை பெத்துக் கொடு. வளர்ப்போம்னு சொல்லிடுவேன்…” ரேணுகா வந்தனாவை மனத்தில் வைத்துப் பேசினார். சமீபகாலமாக வந்தனாவிற்கும் தேவாவிற்கும் இடையேயான நட்பு பேசு பொருளாகியிருந்தது. மெல்ல அவர்களுக்குள்ளே வேறு ஏதோ என கிசுகிசுக்கள் கூட எழுந்தன. தேவா தாயைத் திரும்பி ஒரு நொடி பார்த்துவிட்டு அலைபேசியில் எதையோ துழாவினான்.
“கிழிஞ்சது போ ரேணு… நீ சொன்னியே ஊர்க்கார பொண்ணுங்க. அவங்க கூட நீ சொல்ற கண்டிஷனுக்கு ஓகே சொல்ல மாட்டாங்க. இப்போலாம் பொண்ணுக்கு ரொம்ப கிராக்கியாகிப் போச்சு. நீயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வை. அப்போதான் வரிசைல நிக்கிறவங்க ரூட் க்ளியராகும். இங்க ஒருத்தி தொல்லை பெருந்தொல்லையா இருக்கு!” எனக் கடைசி வரியை மெல்ல முணுமுணுத்தான். ரேணுகா அவன் தலையில் வலிக்காமல் கொட்டினார்.
“அதெல்லாம் எனக்குத் தெரியும்டா. நீ என்ன முணுமுணுக்குறன்னு கேட்டுருச்சு. அவனுக்கு மட்டும்தான் லவ் மேரேஜ் பண்ண அனுமதி. உனக்கெல்லாம் நான் பார்த்து சொல்ற பொண்ணுதான்!” என்றார் கண்டிப்புடன்.
அவரைப் பார்த்து அதிர்ந்தவன், “இதென்னமா போங்கா இருக்கு. அவனுக்கொரு நியாயம். எனக்கொன்னா? கண்டிப்பா ப்ரொடெஸ்ட் பண்ணுவேன் நான்!” என அவன் சிலிர்க்க, அதற்கு பெரியவர் என்ன பதிலளித்தார் எனக் காதில் வாங்காமலே தேவா தன்னறைக்குச் சென்று மெத்தையில் விழுந்தான். நினைவு மெல்ல நான்கைந்து வருடங்களுக்கு முன்னே சமீபித்தது.
“அதென்னடா நமக்கெல்லாம் ஒரு மாசம் காசு கட்டலைன்னா கூட ஓனரம்மா முறைச்சே ஓட்டலுக்கு வர விடாம பண்ணிடுது. இவனுக்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்?” மற்றொருவன் முணுமுணுக்க,
“மச்சான்..மச்சான்.. உன் ஆளுகிட்டே சொல்லி இன்னைக்கு எனக்கு ஒரு வடை எக்ஸ்ட்ரா வைக்க சொல்லுடா!” தேவாவின் தோளை அருகிலிருந்தவன் சுரண்ட, அவன் நண்பனைத் தீயாய் முறைத்தான்.
“எத்தனை தடவை சொல்லிருக்கேன். அவளை என் ஆளுன்னு சொல்லக் கூடாதுன்னு. அவங்கம்மா காதுல கேட்டா பிரச்சனையாகிடப் போகுது!” என தேவா கடிந்தபடியே உணவுண்ண அமர, ஜீவா அனைவருக்கும் உணவைப் பரிமாறினாள்.
தேவா தட்டில் மட்டும் கேட்காமலே வடை, கேசரி இடம் பெற்றிருந்தது. இவன் பிடரியைக் கோதியபடியே ஜீவாவைப் பார்க்க, அவள் வேலை மும்முரத்தில் இருந்தாள். இவன் முகத்தைக் கூட அவன் சரியாகப் பார்க்கவில்லை. ஆனாலும் அவன் தட்டில் என்னென்ன காலியாகிறது என கவனித்து வைத்துக்கொண்டே இருந்தாள். காலை எப்போதும் அந்த நேரம் உணவகத்தில் நிற்க நேரமில்லாமல் நகரும்.
தேவா அப்போது இளங்கலை வணிகவியல் முடித்துவிட்டு இயக்குநராக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலம் அது. அத்தனை எளிதாக அவனுக்கு எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. நிறைய போராட வேண்டியிருந்தது.
தாம்பரத்திலிருந்த மேன்சன் ஒன்றில் தங்கியபடியே வாய்ப்பு தேடினான். ஒவ்வொரு தயாரிப்பாளரிடம் சென்று கதை சொன்னான். ஆனால் யாருமே எளிதில் புதியவனுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை.
காலையில் எழுந்து செய்தித்தாள் போடுவது, பால் போத்தல் விநியோகம் செய்வது, பகுதி நேரமாக ஜவுளி கடையில் கணக்காளராக வேலை பார்ப்பது எனக் கிடைத்த வேலையை செய்து சொற்ப சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பினான். அதில் கொஞ்சம் எடுத்து தன் தேவைக்கு வைத்துக் கொண்டான். பிரமிளா கல்லூரி இறுதியாண்டு படிக்க, அவளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டி இவனுக்கு அப்போதைக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது.
தன் செலவை முடிந்தளவிற்கு குறைத்து வீட்டிற்கு சம்பளத்தை அனுப்பினான். மூன்று வேளை உணவை இரு வேளையாக குறைத்தான். இருந்தும் அவனால் மாதமாதம் உணவுக்கான பணத்தை செலுத்த முடியவில்லை. இரண்டு மாதங்கள் பணம் செலுத்தாமல் நிலுவையில் நின்றுவிட, இவனால் சஷ்டிகா உணவகத்திற்கு சாப்பிட செல்ல முடியவில்லை.
கிரிஜா காசு விஷயத்தில் கறார்.
அதனால் இவன் உணவகம் செல்லாமல் கையிலிருந்த ஐம்பது ரூபாயை வைத்து ஒருவேளை உணவோடு இரண்டு நாட்களை கடத்திவிட்டான். மூன்றாவது நாள் அவனால் முடியவில்லை. ஒரு தயாரிப்பாளரை சந்திக்க சென்று நீண்ட நேரம் அமர்ந்து அவரை சந்திக்க முடியாமல் சோர்ந்து இருப்பிடம் திரும்பினான். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.
மானரோஷம் முன்பு பசி வென்றுவிட, பணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாத திக்கற்ற நிலை அவனுடையது. தன் லட்சியத்தை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்றுதான் மூன்று வருடமாகப் போராடுகிறான். ஆனால் ஒரு சின்ன கல்லைக் கூட அவனால் நகர்த்த முடியவில்லை. பேசாமல் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு ஏதாவது நிறுவனத்தில் கணக்காளராக சேர்ந்து விடலாமா என்றொரு யோசனை கூட அவனுக்கு சமீபகாலமாக தோன்றிற்று. நிறைய கசப்பான அனுபவம், அவமானம், விரக்தி என எங்கு சென்றாலும் சுவரில் அடித்த பந்தாக திரும்பி வந்தான். யாரும் அவனை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை. இத்தனை தூரம் வந்துவிட்டு, தோற்றுவிட்டோம் என வீட்டிற்குச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. முடிந்தவரை முயற்சி செய்வோம் என்ற வைராக்கியத்துடன் நாட்களை கடத்தினான். ஆனால் அத்தியாவசிய தேவைக்கு பணம்தான் பெரிய தலையிடியாக இருந்து தொலைத்து.
பசியோடு அன்றிரவு தேவா உணவகத்தைக் கடக்க, “சாப்பிட வரலையா நீங்க?” என்ற சன்னமானக் குரல் அவனைத் தடுத்து நிறுத்திற்று. படக்கெனத் திரும்பி பார்த்தான். ஜீவாதான் நின்றிருந்தாள். துப்பட்டாவை தோளில் வழியவிட்டு மறுபுறம் முடிச்சிட்டிருந்தாள். வேலை செய்து களைத்துப் போயிருந்தாள். உடையில் ஆங்காங்கே குழம்பு, சட்னி என பல வண்ணம் அப்பயிருந்தது. அவனைத்தான் பார்த்திருந்தாள். தினமும் உண்ண வரும் தேவா இரண்டு நாட்களாக வரவில்லை. அவன் கடந்த மாதம் பணம் செலுத்தவிட்டானா என கணக்கு நோட்டை எடுத்துப் பார்த்தாள். இன்னும் செலுத்தவில்லை என சிவப்பு மையினால் குறிப்பிட்டிருந்தார் கிரிஜா. அதனால் உணவுண்ண வரவில்லை போல என எண்ணினாலும் அவனின் தளர்ந்த நடையும், பசித்த முகமும் சோர்ந்த உடலும் இவளைப் படக்கென கேட்க வைத்திருந்தன. ஜீவா யாரிடமும் இப்படி வழிய சென்று அழைக்க மாட்டாள். ஆனால், தேவா விதிவிலக்காகிப் போனான்.
அவன் சங்கடத்துடன் பதில் சொல்ல முடியாமல் தயங்கினான். கையில் பணமில்லாமல் உண்ண வரவில்லை என வயது பெண்ணிடம் கூற அவனுக்கு ரோஷம் தடுத்துவிட்டது.
ஆனால் அவன் முகம் பார்த்து ஜீவா அகத்தை அறிந்தாள்.
இரண்டு மாதம் பணம் செலுத்தவில்லை என்பதை அவன் சின்ன குரலில் கூற வர, “டைம் இப்பவே பத்தாகப் போகுது. நீங்க ரூம் போய் ப்ரெஷாகிட்டு வந்து சாப்பிட்டா ரொம்ப லேட்டாகும். வந்து சாப்பிட்டுட்டுப் போய்டுங்க. நாங்களும் நேரத்துக்கு ஓட்டலை அடைச்சிட்டுப் போய் படுக்கணும்!” அவனைப் பேச விடாமல் கடகடவென ஒப்பித்தவள், அவனை உண்ண அழைத்தாள். கிரிஜா உள்ளே பார்வையை பதித்திருந்தாலும் இங்கும் கவனித்தார். அவன் பணம் செலுத்தாதது அவர் கருத்திற்கு கொண்டு செல்லாமல் தடுத்தாள்.
தேவா மறுப்பாகப் பார்த்தான்.
“சாப்பிட்டு போங்க!” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் தட்டில் இலை வைத்து உணவைப் பரிமாற, தேவா தயக்கத்துடன் சென்றமர்ந்தான்.
“ஜீவா… தம்பி ரெண்டு மாசம் காசு கொடுத்துட்டாரா?” சரியாக தேவா உணவில் கை வைக்கச் செல்லும் நேரம் கிரிஜா வினவினார். அவனால் உணவில் கை வைக்க முடியவில்லை. நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“ஆமாம்மா… ரெண்டு நாளைக்கு முன்னாடியே காசு கொடுத்துட்டாரு. நான்தான் நோட்டுல எழுதி வைக்காம விட்டுட்டேன்!” என்றவள், அவனின் அதிர்ந்த பார்வையைக் கண்டு கொள்ளாமல், “ஆம்லேட் ஒன்னு எடுத்துட்டு வரவா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
அவன் நான்கு புறமும் தலையை ஆட்டிவிட்டு உணவில் கை வைத்ததுதான் தெரியும். கடகடவென தட்டைக் காலி செய்தான். அவன் சாப்பிட சாப்பிட ஜீவா இலையை நிரப்பினாள். அவன் நன்கு உண்டு முடித்து அவளை நன்றியோடு பார்த்தான். அவள் சின்னதாக முறுவலித்தாள். அன்றிலிருந்து அவனுக்கு மூன்று வேளை உணவும் அங்குதான். நான்கைந்து மாதங்கள் பணம் செலுத்தாமல் சாப்பிட்டான். முதலில் அவனிடம் வெகு தயக்கம்.
ஒருநாள் ஜீவா அவனுக்கு உணவு பரிமாறும் போது, “நான் ஒரு படம் டைரக்ட் பண்ணி சக்ஸஸானதும் கணக்கை க்ளியர் பண்ணிடுறேன்!” என்றான் சின்ன குரலில். அவளிடம் மென்புன்னகை.
“நானும் உங்களுக்கு ஃப்ரியா சாப்பாடு கொடுக்கலை. எல்லாத்தையும் கணக்குப் போட்டு எழுதி வச்சிருக்கேன். சோ, உங்ககிட்ட காசு வந்ததும் திருப்பிக் கொடுத்துடுங்க!” என அவனின் சங்கடம் போக்கினாள் ஜீவா. அவனுக்கு அதற்குப் பின்பே சரியாக சாப்பிட முடிந்தது. எவ்வித சங்கடமும் அற்று பசிக்கும்போது வந்து உண்டான்.
ஜீவா மற்றவர்களை விட எப்போதும் தேவாவிற்கு கூடுதலாகக் கவனம் எடுத்துப் பரிமாறுவாள். அதைக் கொண்டே அவன் நண்பர்கள் அவனைக் கேலி செய்தனர். தேவா அவர்களை அதட்டுவான். ஆனால் ஜீவாவின் செயலுக்கு அவனால் எந்த அர்த்தமும் கற்பிக்க முடியவில்லை. அர்த்தம் தேடும் நிலையிலும் அவன் இல்லை. தங்கை, தம்பி படிப்பு, திருமணம், குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற கடமை முன்னின்றது. அதனாலே அவள் பார்வையை தவிர்த்தான்.
ஆனால், இவர்கள் சொல்வது போல அவளிடம் எவ்வித கல்மிஷமும் இவனால் கண்டறிய முடியவில்லை. அவள் இவனைப் பார்த்ததும் சின்னதாக முறுவலிப்பாள். மற்றபடி ஒரு வார்த்தைக் கூட அதிகம் பேச மாட்டாள். அவனுக்கும் அந்த நேரத்தில் அவள் உதவி மிகத் தேவையான இருந்தது. அதனாலே அந்த சலுகையை மறுக்காமல் ஏற்றுக் கொண்டான். கண்டிப்பாக ஒரு படம் இயக்கியதும் அவளிடம் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று மனத்தில் உருப்போட்டுக் கொண்டான்.
நீண்ட நாட்கள் கழித்து ஜீவாவின் நினைவு வந்தது அவனுக்கு. படம் இயக்கி நல்ல நிலைக்கு வந்தப் பின்னர் கூட அவளுடைய கடனை இவன் அடைக்கவில்லை. அவ்வப்போது அவளது நினைவு வந்தாலும் நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான். இன்றைக்கு தாய் திருமணம் எனப் பேச்சை எடுத்ததும் அனிச்சையாக அவள் நினைவுதான் வந்தது. மனம் திடுக்கிட்டுப் போனது. இந்நேரம் அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளே பிறந்திருக்கும் என மனத்தை தட்டி அடக்கியவன், அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் எண்ணத்தோடு படக்கென எழுந்து கீதனுக்கு அழைத்துவிட்டான்.
“சார்? என்ன இந்த டைம்?” கீதன் கொட்டாவி விட்டபடியே கேட்டான்.
“சாரி… சாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா கீதன். எனக்கொரு இன்பர்மேஷன் வேணும். தாம்பரத்துல சஷ்டிகான்னு ஒரு ஹோட்டல் இருந்துச்சு. நான் அங்க மேன்சன்ல தங்கியிருக்கும் போது சாப்பிட போவேன். இப்போ அந்த ஹோட்டல் என்னாச்சு, அப்படியே இருக்கா. ஓனர் யாருன்னு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணணும்” என்றான்.
“சார்… ரெண்டு நாள் நான் லீவு!” அவன் அவசரமாகக் கூற,
“கீதன்… இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு!” என இவன் அழுத்திக் கேட்டான்.
“சரி… உங்களுக்காக மட்டும்தான் பண்றேன். ஒரு டூ டேய்ஸ் டைம் கொடுங்க. என்னென்னு விசாரிச்சு சொல்றேன்!” என கீதன் அழைப்பைத் துண்டிக்க, தேவா யோசனையுடன் தூங்கிப் போனான்.
தொடரும்…