அதைக் கண்டு கொள்ளவில்லை பிரேமா.
ஆனால், தனது முதலாளியின் அந்தப் பாராமுகத்தைக் கவனித்து விட்டு மதுபாலாவின் முகம் பொலிவிழந்து போயிற்று.
“என்னடி அவர் நம்மளோட முகத்தைக் கூடப் பார்க்காமல் குட் மார்னிங் சொல்லிட்டுப் போயிட்டாரு?”என்று தோழியிடம் வருத்தமாகப் பகிர்ந்து கொள்ளவும்,
அதற்கு அவளோ,”அவர் கிட்டே அதுக்கு மேலே வேறென்ன எதிர்பார்க்க முடியும் டி? நமக்கே தலைக்கு மேலே வேலை இருக்கு! நீ வேற இதையெல்லாம் போட்டு யோசிக்காதே!”என அவளுக்கு அறிவுறுத்தினாள் பிரேமா.
அவளது வார்த்தைகளுக்கு இணங்கித் அன்றைய நாள் தனக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்த தன்னுடைய வேலையைச் செய்யத் தொடங்கினாள் மதுபாலா.
அதே நேரத்தில் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தப் புகழேந்தியின் கண்களில் பட்டது முந்தைய நாள் மதுபாலா வரைந்திருந்த வரைபடங்கள்!
அவற்றைப் பார்த்ததுமே தனது உதட்டைக் குவித்து,”உஃப்!”என்று சலித்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வரைபடத்தை மட்டும் எடுத்து அதை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு,
“இந்த டிசைனை நான் எப்படி துணியில் பிரிண்ட் செஞ்சித் தைக்கச் சொல்ல முடியும்? அவங்களை வரவழைச்சு இந்த டிசைனை வேற ஒரு கற்பனை ஆண் உருவத்தை வச்சு வரையச் சொல்லிடலாமா?”என்று தன்னிடம் தானே கேட்டுக் கொண்டான் புகழேந்தி.
அதைச் செயல்படுத்தும் விதமாகத் தனது காரியதரிசியை அழைத்து,”மிஸ். மதுபாலாவை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்க”என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு அவளது வருகைக்காக காத்திருக்க,
தனது முதலாளியின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் மதுபாலாவிடம் சென்று,
“உங்களை நம்ம எம். டி அவரைப் பார்க்க வரச் சொன்னார்”என அவளிடம் அறிவித்தான் வெற்றிச்செல்வன்.
அதைக் கேட்டதுமே,’தான் எதுவும் தவறு செய்து விட்டோமோ?’என்று தான் பெண்ணவளுக்குத் தோன்றி விட்டிருந்தது.
அவளது யோசனையை அனுமானித்து விட்டு,”இப்படியே உட்கார்ந்து என்ன விஷயம்ன்னு யோசிக்காமல் நேரடியாகப் போய் எம். டி யைப் பார்த்து அவர் கிட்டேயே கேட்டுத் தெரிஞ்சிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்”என்று அவளுக்குப் புன்னகையுடன் அறிவுறுத்தினான் வெற்றிச்செல்வன்.
அதில் தானும் அவனைப் பார்த்துக் குறுநகையை உதிர்த்து விட்டு,”ஓகே சார். நான் போய் எம். டி – யைப் பார்க்கிறேன். தேங்க்ஸ்”என அவனுக்கு நன்றித் தெரிவித்து விட்டுத் தனது வழிகாட்டிப் பெண்ணான வினோதினியிடம் இந்த தகவலைக் கூறவும்,
அதற்கு அவளும்,”சரிம்மா. சாரைப் பார்த்துட்டு வந்துட்டு உங்களோட வேலையைத் தொடருங்க”எனச் சொல்லி அவளை அனுப்பி வைத்து விட,
உடனே அங்கேயிருந்து அகன்று தன்னுடைய முதலாளியின் அறையைத் தேடிச் சென்று அதன் வெளியே நின்று அந்த அறையின் கதவைத் தட்டி விட்டு அனுமதிக்காக காத்திருந்தாள் மதுபாலா.
அந்தச் சத்தத்தைக் கேட்டதுமே அறைக்கு வெளியே இருப்பது அவள் தான் என்பதை அறிந்து கொண்டவனோ,
“எஸ் கமின்”எனக் குரல் கொடுத்தான் புகழேந்தி.
உடனே அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து,
“குட்மார்னிங் சார்”என்றவளின் விழிகளை நேருக்கு, நேராகச் சந்தித்து,
“குட் மார்னிங் மிஸ். மதுபாலா. உட்காருங்க”என்று அவளை அமரச் செய்து விட்டுத் தன் மேசையில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து அவளிடம் காண்பித்து,
“இது என்னோட உருவம் தானே?”என அவளிடம் வினவினான் புகழேந்தி.
உடனே தானும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு,
“ஆமாம் சார். இது உங்களோட உருவம் தான்”என்று அவனுக்கு இயல்பான பாவனையில் பதிலளித்தாள் மதுபாலா.
“ம்ஹ்ம். உங்க டிசைனுக்கு என் உருவத்தை எதுக்கு உபயோகிச்சீங்க? அதைச் செய்றதுக்கு முன்னாடி எங்கிட்ட அனுமதி கேட்டீங்களா?”என்றான் குற்றம் சாட்டும் குரலில்.
அதில் பெண்ணவளின் முகம் சுருங்கி, வெளிறிப் போயிற்று எனலாம்!
“சார்…!”என்று அவனைத் தயக்கத்துடனும், குற்ற உணர்வுடனும் பார்த்தாள் மதுபாலா.
“பதில் சொல்லுங்க”என்றிருந்தான் புகழேந்தி.
உடனே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,”என்னோட இந்த டிசைனுக்கு உங்களோட உருவம் தான் சரியாக இருந்துச்சு. அதனால் தான் இந்த வரைபடத்தை வரைஞ்சேன் சார்”என்று அவனுக்குப் பதிலளிக்க,
“அப்படியா? அதுக்குத் தான் நீங்க எங்கிட்ட அனுமதி கேட்டீங்களான்று உங்ககிட்ட விசாரிக்கிறேன்”என அவளிடம் அழுத்தம், திருத்தமாக கேட்டிருந்தான்.
“நான் இந்த வரைபடத்தை வரையுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட அனுமதிக் கேட்கலை சார். நான் சம்பந்தப்பட்டவர்கிட்டே முறையாக அனுமதிக் கேட்டுட்டு வரைஞ்சி இருக்கனும்! இது முழுக்க, முழுக்க என்னோட தப்புத் தான். என்னை மன்னிச்சிருங்க சார்”என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் மதுபாலா.
“சரி. இப்போ என்னப் பண்ணலாம்?”என்றவனிடம்,
“அதை நீங்களே சொல்லுங்க சார். நான் இப்போ என்னப் பண்ணனும்?”என்றவளை அழுத்தமாக நோக்கி,
“இந்த ஃபோட்டோவோட சாஃப்ட் காப்பி உங்க சிஸ்டமில் இருக்கா? இல்லைன்னா, வினோதினி மேடம் கிட்டே இருக்கா?”என்று விசாரித்தான் புகழேந்தி.
“எங்கிட்ட இருக்கு சார். மேடம் கிட்டே இல்லை”என்றிருந்தாள் அலமலந்த பார்வையுடன்.
“சரி. அப்போ அதை டெலீட் பண்ணிடுங்க. நான் இந்த ஃபோட்டோவைக் கிழிச்சுப் போட்டுட்றேன்! அப்பறம், இது உங்களுக்குக் கடைசி வார்னிங்! இனிமேல் என்னோட அனுமதி இல்லாமல் என்னோட உருவத்தை எந்த டிசைனுக்கும் நீங்கப் பயன்படுத்தக் கூடாது!”என்று அவளுக்கு எச்சரிக்கை விடுத்தான்.
அவனை வருத்தத்துடன் பார்த்து,”சாரி சார். நீங்கச் சொன்னதை அப்படியே செய்றேன்”என்றவளோ,
தானே மேலும் தொடர்ந்து,”நான் உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் விடுக்கலாமா சார்?”எனக் கேட்கவும்,
“ம்ஹ்ம். ஓகே”என்று அவளுக்கு அனுமதி தந்து விட,
“அது தான் இப்போ உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சே சார்! அதனால் இப்போ உங்களோட உருவத்தை என்னோட டிசைனுக்கு நான் உபயோகிச்சுக்கலாமா?”என்றவளை மலைப்புடன் நோக்கி விட்டு,
“நான் இந்தளவுக்கு உங்களுக்கு எச்சரிக்கைக் கொடுத்தும், நீங்க இதுக்கப்புறமும் இப்படி கேட்கிறீங்களே! உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?”என்று உரத்தக் குரலில் வினவினான் புகழேந்தி.
“எனக்கு உங்க மேலே நிறைய மரியாதை இருக்கு சார். அதே மாதிரி, நான் இன்னும் அடுத்தடுத்து வரையனும்னு யோசிச்சு வச்சிருக்கிற டிசைன்ஸூக்கு உங்களோட உருவம் தான் கரெக்டா இருக்கும்! அதனால் தான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்டுட்டால் உங்க உருவத்தை வச்சே அதையெல்லாம் வரைஞ்சிடலாமே? அதுக்குத் தான் உங்க கிட்ட அனுமதிக் கேட்கிறேன்”என்றவளின் மீதிருந்த கோபப் பார்வை ரசனையாக மாறி விட்டிருந்தது அவனுக்கு.
ஆனாலும்,”நான் இதை யோசிச்சுப் பார்த்துட்டு உங்க கிட்ட சொல்றேன். அது வரைக்கும் நீங்க என்னோட ஃபோட்டோவை யூஸ் பண்ணக் கூடாது! ஓகேவா?”என அவளுக்கு அறிவுறுத்த,
“ஓகே சார். இன்னொரு தடவை இதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன் சார்”என்றிருந்தாள் மதுபாலா.
“பரவாயில்லை. இனிமேல் இப்படி எதையும் கேட்காமல் பண்ணிடாதீங்க”என அவளுக்கு வலியுறுத்தி விட்டு,
“இப்போ போய் உங்க வேலையைப் பாருங்க”என்றத் தன்னுடைய முதலாளியிடம்,
“சரிங்க சார்”எனச் சொல்லி அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அறையிலிருந்து வெளியேறி விட்டாள் மதுபாலா.
அவள் சென்றதுமே தனது தமக்கைக்குச் செல்பேசி அழைப்பு விடுத்து,
“அக்கா! நீ வேலையாக இருக்கியா?”என்று அவளிடம் விசாரித்தான் புகழேந்தி.
“இல்லைடா. ஏன்? என்னாச்சு?”என்றாள் அக்கறையுடன்.
“உங்கிட்டேயும், மாமா கிட்டேயும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும்”எனத் தயக்கமாக கூறவும்,
“எதைப் பத்திப் பேசனும்டா?”என்றிருந்தாள் வெண்பா.
“அதை ஃபோனில் பேச முடியாதுக்கா. உங்க கிட்ட நேரில் தான் பேசனும். அப்போ தான் எனக்கு ஒரு தெளிவுக் கிடைக்கும்”என்றதுமே,
“அப்படின்னா சாயந்தரம் ஆஃபீஸ் முடிஞ்சதும் அங்கேயிருந்து கிளம்பி நேராக இங்கே வீட்டுக்கு வந்துரு. எதுவாக இருந்தாலும் இங்கே வச்சுப் பேசலாம்! என் அத்தையும், மாமாவும் கூட உன்னைப் பார்க்கனும்னுச் சொன்னாங்க. அதான்”என அவனிடம் தெரிவித்தாள் தமக்கை.
அதில் அவனுக்குத் தயக்கம் உண்டானாலும் இப்போதைக்கு வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டு,
“சரிக்கா. நான் சாயந்தரம் அங்கே வர்றேன்”எனக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு வேலையில் மூழ்கினான் புகழேந்தி.
இங்குத், தான் வரைந்து கொடுத்த ஒரு வடிவமைப்பை மட்டும் மீண்டுமொரு முறை வரைந்து தரலாமா? என்று வினோதினியிடம் விண்ணப்பத்தை வைத்திருந்தாள் மதுபாலா.
அதில் அவளை யோசனையாகப் பார்த்து,”ஏன்ம்மா? அந்த டிசைன் நல்லா தானே இருந்துச்சு? அதை மறுபடியும் மாத்தி வரையிறதுக்கான காரணம் என்ன?”எனக் கேட்கவும்,
“எனக்கு அந்த டிசைன் முழுமையானத் திருப்தியைக் கொடுக்கலை மேம். அதனால் தான் அதை முதலிலிருந்து வரையலாம்னு நினைக்கிறேன். அப்போ தான் எனக்கு முழுமையானத் திருப்திக் கிடைக்கும்”என அவள் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தை மொழிந்து விட்டிருந்தாள்.
“அப்படியா? ஓகேங்க. நீங்க உங்களுக்குத் தோன்றதைச் செய்யுங்க. ஆனால் எங்களுக்கு டிசைன்ஸ் வேணும். அவ்வளவு தான்”என்று அவரும் கூறி விடவும்,
உடனே வேறொரு கற்பனை ஆடவனின் உருவத்தை யோசித்து விட்டு அதை வைத்து தனது வடிவமைப்பை உருவாக்கும் பணியில் இறங்கி விட்டிருந்தாள் மதுபாலா.
அன்று மாலையில், தான் சொன்னதைப் போலவே வேறொரு ஆடவனின் உருவத்தில் தனது வரைபடத்தை வரைந்து முடித்து விட்டு அதை தனது வழிகாட்டிப் பெண்ணிடம் கொடுத்து விட்டு வேலை நேரம் முடிந்ததும் அலுவலகத்தில் இருந்து வெளியேறித் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யத் தொடங்கினாள் மதுபாலா.
அதே நேரத்தில், தானும் தனது அலுவலகத்தில் இருந்து கிளம்பித் தன்னுடைய தமக்கையின் புகுந்த வீட்டிற்குக் காரில் பயணமானான் புகழேந்தி.
ஆனால் தனது தமக்கை மற்றும் அவளது கணவனுடன் கலந்து பேசியதற்குப் பின்னர் தனது வாழ்க்கையின் முக்கியமான ஒரு நிகழ்வு, தானே எதிர்பாராத விதமாக நடக்கப் போகிறது என்பதை அவன் இப்போது அறிந்திருக்கவில்லை.
அதே சமயத்தில் தனது திருமணத்தைப் பற்றிய எந்த எதிர்காலத் திட்டங்களையும் வைத்துக் கொள்ளாமல் இருக்கும் மதுபாலாவிற்கும் அவளது வாழ்வில் கூடிய சீக்கிரத்திலேயே வசந்தம் வரப் போகிறது என்பதையும் காலம் அவளிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறது என்று கூறலாம்!
இவ்விருவரும் ஒன்றாக இணையப் போகும் அந்த தருணத்தில் ஏதாவது புயல் வீசுமா? என்பது விதி மட்டுமே அறிந்த உண்மையாகும்!
அப்படி ஏதாவது புயல் வீசினால் அதைப் புகழேந்தியும், மதுபாலாவும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கதையின் போக்கில் பார்க்கலாம்!
- தொடரும்
இந்தக் கதைக்கு மொத்தமே இருபத்தி ஐந்து அத்தியாயங்கள் தான் நண்பர்களே! அதேபோல், சின்னக் கதை தான். புரிதலுக்கு நன்றி🙏