மௌனம் – 2.1

நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த அந்த இடம் கசகசவென காட்சியளித்தது. அப்போதைய மக்களின் கனவு கண்ணனாக வலம் வரும் நடிகர் பார்த்திபன், பிரபல நாயகி ஒருவருடன் உணர்ச்சி பூர்வமாக மன்னிப்பு கேட்கும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சுற்றியிருந்தோர் ஆவென அக்காட்சியை வேடிக்கைப் பார்க்க, திரைப்பட ஊழியர்கள் தங்களது பணியை சரவர செய்து திரையில் துல்லியம் காண்பிக்க முயன்றனர். சிலரது முகத்தில் சலிப்பு, மற்ற சிலர் நேரமாகிவிட்டதே என கைக்கடிகாரத்தைப் பார்த்தனர்.

“கட் பண்ணுங்க… சீனோட டெப்த் சரியா வரலை. எமோஷ்ன்ஸ் பெர்பெக்டா இருக்கணும்!” தேவ்பிரசாத் நாயகன் , நாயகியை நிறுத்திவிட்டு, தன் உதவியாளரை அழைத்தான்.

“பேக் ரவுண்ட் நான் முன்னாடி சொன்னதே செட் பண்ணுங்க. அது பெட்டரா இருக்கும்!” என அவரைப் பணித்தான். அந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
இரண்டு நாட்களாக ஒரே காட்சியை மூன்று விதமாக வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்க முயன்றான் தேவா. ஆனால் அவனுக்கு எதிலுமே திருப்தி வரவில்லை. வேறு மாற்று யோசனை ஏதாவது கிடைக்குமா என சிந்திக்கலானான்.

உச்சி வெயிலில் நாயகன் பார்த்திபனுக்கு மண்டைக் காய்ந்தது. இயக்குநராக தேவாவும் நடிகராக இவனும் இன்றைக்கு சினிமா துறையின் உச்சியில் இருந்தனர். கண்டிப்பாக இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெரும் என இருவருக்குமே தெரிந்தது. ஆனால், பார்த்திபனுக்கு தேவாவின் செயலில் எரிச்சல்தான்‌. மற்ற இயக்குநர்கள் எல்லாம் ஒன்றிரண்டு முக்கியயான காட்சிகளை மட்டுமே வெகுநேர்த்தியாக எடுக்க மெனக்கெடுவார்கள். மற்றபடி படத்தின் கதையோடு மக்களை ஒன்ற வைக்கவே எண்ணுவார்கள்.

ஆனால் தேவா அப்படியல்ல. யாரையும் பாரபட்சம் பார்க்காமல் பிழிந்து தனக்குத் திருப்தி வரும்வரை ஒவ்வொரு காட்சியையும் எடுத்தான். அவனைக் கண்டு மற்ற ஊழியர்களும் அரண்டு ஓடினர். நாயகன், நாயகி அதற்கு விதிவிலக்கல்ல.

“என்ன தேவா சார்?” முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்த பார்த்திபன், உதவியாளரை முறைத்து மின்விசிறியை தனக்கு நேரே திருப்பிவிட்டு குளிர்ந்த பானத்தை உள்ளிறக்கினான்.

“க்ளைமேக்ஸ் ரொம்ப முக்கியம் பார்த்திபன். படம் முடியும் போது எல்லாருக்கும் ஒரு ஃபுல் ஃபில்னெஸ் வரணும். அதான் கொஞ்சம் டேக்ஸ் போக வேண்டியதா இருக்கு. ஆல்மோஸ்ட் ஓகே. நெக்ஸ்ட் பெர்ஃபெக்டா வந்துடும்!” என்ற தேவா, நேரே காட்சியை படமாக்கும் இடத்திற்கு சென்று மற்றவர்களுக்கான வசனத்தில் சில சில திருத்தங்கள் செய்தான். நாயகியை அவன் பார்த்ததும், அவள் எவ்வித சலிப்பும் அல்லாமல் எழுந்து சின்ன சிரிப்போடு அவனை நோக்கி வந்தாள்.‌

“என்ன மிஸ்டர் பெர்பெஃக்ட். சொல்லுங்க!” அவள் புன்னகையுடன் கேட்க, இவன் சின்னதாக அவளை முறைத்துவிட்டு காட்சியில் என்னென்ன உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டுமென சிரத்தையுடன் விளக்கினான். அவளும் சரியென தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள். தேவா இதற்கு முன்னர் எடுத்த படத்தின் நாயகி வந்தனா தான் இதற்கும் கதாநாயகி. ஆறு மாதங்களுக்கு மேல் ஒன்றாகப் பணி புரிந்ததால் அவர்களுக்கிடையே நல்ல நட்பு பாலம் துளிர்விட்டது. ஆனால் பார்ப்பவர் கண்களை அது உறுத்தவும் தவறவில்லை.

“ஓகே டன்… நான் கரெக்டா பண்ணிடுறேன். நீங்க ஹீரோட்டயும் ஒன் டைம் எக்ஸ்ப்ளைன் பண்ணிடுங்க. ரெண்டு பேரும் எஃபர்ட்ஸ் போட்டாதான் சரி வரும்!” என அவள் அகல, இவன் பார்த்திபனிடமும் பேசி மீண்டும் அந்தக் காட்சியை படமாக்கினான். சின்ன சின்ன திருத்தங்கள் செய்து மக்களை உணர்வுபூர்வமாகப் படத்தோடு ஒன்ற வைக்க அவன் எடுத்த முயற்சி அத்தனை அழகாக வந்திருந்தது. வந்தனா தரக்குரிய வசனத்தைப் பேசி‌ கரகரத்த தொண்டையை சரிசெய்து நாயகனை கட்டியணைத்து அழ, காட்சி அழகாய் முடிந்தது. படபடவென சுற்றியிருந்தவர்கள் கைத்தட்ட, நாயகன், நாயகி சிரிப்புடன் அதை என்றனர். தேவா நிம்மதி பெருமூச்சுவிட்டான். ரசிகர்கள் ஒருசிலர் வேலி தாண்டி வந்து நடிகர், நடிகையிடம் பேசி புகைப்படம் எடுக்க ஆர்வம் காண்பிக்க, அவர்களும் புன்னகை முகமாக மக்களை எதிர்க்கொண்டனர்.

“பேக்கப்…” தேவா வாயிலிருந்து இந்த வார்த்தையைக் கேட்பதற்காகவே காத்திருந்தது போல ஊழியர்கள் அனைவரும் விறுவிறுவென தங்கள் உடைமைகளை சரிபார்த்து அகல, இவன் சற்று நேரம் ஆசுவாசத்தோடு அமர்ந்தான்.

“டெய்ரிமில்க் சாப்பிடுங்க டைரக்டர். ஒரு வழியா படத்தை முடிச்சிட்டோம்!” என வந்தனா இனிப்பை அவனிடம் நீட்டினாள். மற்றவர்களும் கூட திரைப்படம் முடிந்ததை இனிப்பு சாப்பிட்டுக் கொண்டாடினர். பார்த்திபன் இவனை அணைத்துவிட்டு விடை பெற, வந்தனாவும் அகன்றாள்.

“சார்… அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க!” தேவாவின் உதவியாளர் கீதன் வந்து நிற்க, தன் தலையிலே தட்டிக் கொண்டவன், அலைபேசியை செவிக்கு ஈந்தான்.

“தேவா… என்னடா நீ இன்னும் வரக் காணோம்‌. உன் தங்கச்சி மாமனாரு, வீட்டு ஆளுங்க எல்லாம் வருவாங்க. இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னேன் உன்னை. சரின்னு தலையாட்டிட்டுப் போனடா நீ!” ரேணுகா அலைபேசியை தனியே எடுத்து வந்து மகனைக் கடிந்தார்.

“டென்மினிட்ஸ்ல அங்க இருக்கேன்மா. நீங்க சமாளிங்க!” என அவர் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை படக்கென துண்டித்தவன், “கீதன், நான் அர்ஜென்டா போகணும். எல்லாத்தையும் பார்த்துக்கோ!” என்றான் தன் மகிழ்வுந்தை நோக்கி நடந்தபடி.

“ஓகே சார்… எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு மறக்காம உங்களுக்கு இன்பார்ம் பண்றேன். நீங்க இதைப் பத்தியே யோசிக்காம ரெண்டு நாள் ரெஸ்ட் எடுங்க. நானும் ரெண்டு நாள் பொண்டாட்டி வீட்டுக்குப் போய்ட்டு வரேன் சார்!” என அவன் கடைசி வரியை சின்ன குரலில் கூற, தேவாவிற்கு சிரிப்பு வந்தது.

“சரி மேன்… நீ என்ஜாய் பண்ணு. பட், மண்டே ஸ்டூடியோவுக்கு கரெக்ட் டைமுக்கு வரணும்!” அவன் இலகுவான குரலில் கூறியதும், கீதனின் முகம் மலர்ந்தது.

“ஷ்யூர் சார்… பாய் சார்!” என அவனை உற்சாகத்துடன் அனுப்பி வைத்தான். அரைமணி நேர பயணத்தைப் பத்து நிமிடங்கள் எனத் தாயை சமாளிக்கத்தான் தேவா கூறினான். அவன் சென்று மகிழ்வுந்தை நிறுத்தியதும், ரேணுகா மீண்டும் அழைத்துவிட்டார். அதை ஏற்காமல் வீட்டிற்குள்ளே நுழைந்தான்.

பத்து பதினைந்து பேர் கூடத்தின் நீள்விருக்கை, நாற்காலியை ஆக்கிரமித்திருந்தனர். இவன் அவர்களைப் பார்த்து முயன்று சிரித்து, “வாங்க அத்தை… வாங்க மாமா!” என்றான் சம்பிரதாயக் குரலில்.

“தம்பி… ரொம்ப வேலையோ. முன்ன பார்த்ததைவிட ரொம்ப இளைச்சுப் போய்ட்டாப்புல?” கூட்டத்தில் ஒருவர் கேட்க, ரேணுகா அதற்கு பதிலளித்தார். இவன் சென்று உடைமாற்றி முகம் கழுவி வந்தான்.

“டீயைக் குடிண்ணா!” பிரமிளா வெகுசூடான குரலில் சுடசுட தேநீர் தர, அவளிடம் பார்வையாலே மன்னிப்பை வேண்டியபடியே இவன் குவளையை வாங்கினான்.

“அண்ணா… என்ன நீ வர மாட்டேன்னு நினைச்சேன். இப்படி சொன்ன வார்த்தையை காப்பத்துற மாதிரி வந்து நிக்கிற?” குரு அண்ணனின் காதைக் கடித்தான்.

“ப்ம்ச்…” இவன் திரும்பி தம்பியை முறைக்க,

“என்ன முறைப்பு… எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். கூட்டத்துல ஒரு பெருசு சும்மால்லாம அங்க பொண்ணு இருக்கு, இங்க நல்ல இடம் அமையும்னு ஆரம்பிக்க, அம்மாவும் ஜாதகத்தை கொடுங்க, ராசி என்ன, நட்சத்திரம் என்னென்னு ஆரம்பிச்சுட்டாங்க!” என அவன் இழுக்க, தேவா எதுவும் பேசாமல் தேநீரைக் குடித்து முடித்தான்.

“அப்புறம் நம்பி… நம்ப தூயவனுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். கண்டிப்பா நீங்க குடும்பத்தோட வரணும்!” பிரமிளாவின் மாமனார் ரேணுகா கையில் பத்திரிகையை பூ, பழம் சகிதம் கொடுத்தவர், இவனையும் அழைத்தார். கட்டாயம் வருவதாக தேவா கூறிய பின்னரே அவர்கள் அகன்றார்கள்.

“அண்ணே… நைட்டுக்கு சாப்பிட்டு கிளம்புங்க. இந்நேரத்துல போய் எங்க சமைச்சு சாப்பிடுவீங்க?” என ரேணுகா அனைவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தே அனுப்பினார்.

“ம்மா… ஞாயித்துக் கிழமை வரேன். போதும் உன் பேரனைக் கொஞ்சுனது. நல்லா கட்டிக் கொடுத்திருக்க மாமியார் இல்லாத வீடா. நான் ஒருநாள் இல்லைன்னா என் புருஷனுக்கு சாப்பாடு போட ஆள் இல்ல!” என பிரமிளா குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அண்ணன்களிடமும் விடை பெற்றாள். தேவா அனைவருக்கும் மகிழ்வுந்து ஏற்பாடு செய்து, பேருந்து நிறுத்தம் வரை அவர்களை அழைத்துச் சென்று பேருந்திலேற்றிவிட தம்பியைப் பணித்தான்.

“தேவா… ரொம்ப களைப்பா தெரியுற? வா.. வந்து சாப்பிட்டு படு!” தாய் வாஞ்சையுடன் அழைத்ததும், இவனும் உணவுண்ண அமர்ந்தான். சற்று நேரத்திலே குரு வந்துவிட்டான்.

“ம்மா… எனக்கு ரெண்டு இடியாப்பம் வச்சிருக்கீயா? இல்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டியா. சாப்பிடுங்கன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு மொத்த சட்டியையும் காலி பண்ணிட்டாங்க திஸ் வில்லேஜ் ரிலேட்டீவ்ஸ்!” என அவன் சிலிர்க்க, ரேணுகா மகனை முறைத்தார்.

“டேய்… அவங்க எல்லாம் யாரோ இல்ல. உன் தங்கச்சி புருஷன் வீட்டு சொந்தக்காரங்க. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீயும் அந்த கிராமத்துலதான் இருந்தேன்றதை மறக்காத. இப்போ வேணா டிப்டாப்பா ட்ரெஸ் போட்டு கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கலாம். ஆனால் ஓட்டை டவுசரோட அங்கனத்தான் பொறந்து வளர்ந்த. ஞாபகம் வச்சுக்கோ!” என அவர் கண்டிப்பும் கேலியுமாக உரைத்தார்.

“சரி… சரி. விடும்மா. சொந்தக்காரங்களை சொன்னதும் அட்வைஸ் பண்ணிக் கொல்லாத!” என சலிப்புடன் இடியாப்பத்தை பிய்த்து வாயிலிட்டவன், “ஆமா… ஜாதகம் எல்லாம் வாங்கி வச்சியே. என்ன மேட்டர்?” என அவரை வம்பிழுத்தான்.

“ரெண்டு வயசு பசங்க வீட்டுல இருந்தா, சொந்தத்துல பொண்ணு இருக்குன்னு சொல்லத்தான் செய்வாங்க. முதமுதல்ல நல்ல காரியம் பத்திப் பேசும்போது வேணாம்னு சொல்லக் கூடாதுன்னு ஜாதகத்தை வாங்கி வச்சேன்டா!” என அவன் தட்டில் தேங்காய் பாலை ஊற்றினார்.

error: Content is protected !!
Scroll to Top